தொடர்கள்நெல்லைத் தமிழில் திருக்குறள்

நெல்லைத் தமிழில் திருக்குறள்- 98

நாங்குநேரி வாசஸ்ரீ

98. பெருமை

குறள் 971

ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்
கஃதிறந்து வாழ்தும் எனல்

ஒருத்தனோட வாழ்க்கைக்கு ஒளி தருதது மன உற்சாகம். அவனுக்கு தாழ்ச்சி உற்சாகம் இல்லாம வாழுவேன் னு நெனைக்கதுதான்.

குறள் 972

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்

எல்லா மக்களும் பொறப்பால சமம் தான். அவுக செய்யுத தொழிலில் காட்டுத தெறமியில இருக்க ஒசத்தி தாழ்ச்சியால மட்டுந்தான் வேறுபடுதாங்க.

குறள் 973

மேலிருந்துத் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்

கொணங்கெட்டவுக ஒசந்த பதவியில இருந்தாலும் நல்லவுகளா மதியப்பட மாட்டாக. ஆக்கங்கெட்ட காரியத்த செய்யாத நல்லவுக சின்ன பதவியில இருந்தாலும் ஒசந்தவுக தான்.

குறள் 974

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு

ஒருத்தன் தன்னயத்தானே காத்துக்கிட்டு வாழ்ந்தாம்னா கற்போட வாழுத பத்தினிக்குரிய அத்தன பெருமயும் அவனுக்கும் கெடைக்கும்.

குறள் 975

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை யுடைய செயல்

எந்த நெருக்கடியிலயும் மத்தவுகளால செய்ய ஏலாத காரியத்த அதுக்குண்டான வழிமொறையில செஞ்சு முடிக்குத தெறம இருக்கவுக பெருமயானவங்க.

குறள் 976

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு

பெருமக்களப் போற்றி ஏத்துக்கிடணும் ங்குத நெனப்பு அவுகளோட சிறப்ப புரிஞ்சிக்கிடாத சின்னவுக மனசுக்குள்ளார இருக்காது.

குறள் 977

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புதான்
சீரல் லவர்கண் படின்

தாழ்ச்சியான கொணம் இருக்கவன்கிட்ட பணம், படிப்பு, பதவி ங்குத சிறப்புநிலை சேந்துச்சின்னா அவன் அகராதி புடிச்சி வரம்புகெட்டு அலையுதது நிச்சயம்.

குறள் 978

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து

கொணமுள்ள பெரிய மனுசங்க எல்லார்கிட்டயும் பணிஞ்சு நடப்பாக. கொணங்கெட்டவுக மண்டக்கனம் புடிச்சி தன் பெருமய தம்பட்டம் அடிச்சிட்டுத் திரிவாக.

குறள் 979

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்

பெருமைங்கது மண்டக்கனம் இல்லாம அடக்கமா வாழுத கொணம். சிறுமைங்கது மண்டக்கனம் புடிச்சி அதோட எல்லைக்கே போயி திமிரா திரியுதது.

குறள் 980

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்

பொறத்தியாரப்பத்தி பாடு பேசாம கொறைய மறைக்கது பெரும. அவுகளப் பத்தி எப்பமும் கொற சொல்லி பொறளி பேசுதது சிறும.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க