எனக்குரைத்தல்!
ஏறன் சிவா
உண்மை நெஞ்சம்
உடையோ ருக்கே
உயரம் தாழுக முடியே!
கண்ணின் பார்வை
கலையும் வரையும்
நூலே தேடுக விழியே!
வன்சொல் ஒழித்துன்
வழியே நல்ல
சொல்லே அனுப்புக செவியே!
என்றும் “முடியும்”
என்றே மூச்சுக்
காற்றில் எழுதுக துளையே!
அன்பு, அமைதி
அதிகம் ஓதி
இன்பம் பருகுக இதழே!
திண்மை கொண்டு
தீயோர் தன்னைத்
தீயில் அனுப்பு! தோள் திடமே!
வன்மை இருக்கும்
வரையில் எழுதும்
கோலை ஏந்துக விரலே!
நன்மை செய்யும்
நோக்கங் கொண்ட
நல்லோர்க் குதவுக கரமே!
துன்பம் கண்டு
துவண்டோர் தமையே
தூக்க விரைக! கால் தசையே!
எண்ணத் தூய்மை
எழுவோ ரிடையே
எண்ணம் செலுத்துக உணர்வே!
மண்ணில் உடலோ
மாய்ந்த பின்னும்
தமிழே தாங்குக உயிரே!
என்றும் இதனை
இதயம் வைத்தே
விலகா தொழுகுக உளமே!