83 – கபில் தேவின் வாழ்க்கைத் திரைப்படம்

சுரேஷ் ரங்கநாதன்
இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்மிக்க முன்னாள் தலைவர் கபில் தேவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு, ’83’ என்ற தலைப்பில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. கான், விஷ்ணு வர்தன் இந்தூரி, மது மந்தனா, தீபிகா படுகோனே, சஜித் நதியாத்வாலா ஆகியோரது கூட்டுத் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தைக் கபீர் கான் இயக்கியுள்ளார். கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார்.
படத்தில் தீபிகா படுகோனே, தஹிர் ராஜ் பாசின், சாகிப் சலீம், ஹார்டி சந்தூ, அம்மி விர்க், அமிர்தா பூரி, பங்கஜ் திரிபாதி, போமன் இரானி, சாஹில் கட்டர் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர்.
கபில் தேவ் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது முதல், 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது வரை உள்ளடங்கிய அவரது வாழ்க்கைப் பயணத்தை, இப்படம் விவரிக்கிறது.
படத்தின் முதல் படப்பிடிப்பு, இங்கிலாந்தில் தொடங்கியது. அக்டோபர் 2019இல் படம் முழுவதுமாக எடுத்து முடிக்கப்பட்டது. இந்நிலையில், 2020 ஏப்ரல் மாதத்தில் இத்திரைப்படம், திரைக்கு வருகிறது.
இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம், தமிழிலும் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒரே நாளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.