திருச்சி புலவர் இராமமூர்த்தி

சுந்தரர் பெரிதும் விரும்பிக் கண்ட ஈசனின் திருப்பாதங்கள் மேலும் உயர்ந்த சிறப்புக்களைப் பெற்றுள்ளன. அப்பாதங்கள் வேதங்களாகிய யானைமேல் எழுந்தருளுவன. அவை அறிவின்றி  யான் செய்த பிழைகளையும் பொறுத்து என்னை ஆட்கொண்டன, இன்னும் யான் செய்தற்குரிய பிழைகளையும் இல்லாமல் செய்து என்னை வாழ வைப்பன, என்று கூறும் சுந்தரர் இவை உயிர்த்தொகையின்  தலைவராகிய ஈசனின் தாமரைப் பாதங்கள்  என்கிறார். இதனை, ‘’பூதநாத, நின் புண்டரீகப் பதம்‘’ என்ற ஈற்றடி குறிக்கிறது. அடியும் அடியவர்களும் இணைந்து நிற்றலின் அன்பால் நினைவார்களது உள்ளக்கமலத்தே விரைந்து சென்று நிற்கும் திருவடி என்க. அடியவர்களுக்கு ஆளாந்தன்மையை வேண்டியே திருவடியைத் துதித்தாராதலின் அவர்களது உள்ளக்கமலத்தே விரைந்து சேரும் தன்மையனவாகவே அவற்றைத் துதித்தார் என்பது குறிப்பாம். “அன்பர் சிந்தை யலர்ந்த செந்தாமரை“ என்று தொடங்கிய நம்பிகள் அதனையே மீண்டும் கூறி  முடித்தார் .  தாமரைபோன்ற பாதம் என்பதும் ஆம்.

 “பொலம்புண்டரீகப் புதுமலர் போல்வன“,

 “தூக்கமலத் தன்ன  வடிவின“ என்பன  அப்பர் பெருமான் திருவாக்குக்கள்.

‘’வேதவாரணம் மேற்கொண்டிருந்தன’’ என்ற என்ற முதலடி  வேத  வாரணம் என்றும், வேத ஆரணம் என்று பிரிந்து இருவகைப் பொருள் தந்தது. வேதங்கள் பெருமையும் விளக்கமும் கொண்டமையால்  யானை எனப்பட்டன. பொதுவாக  வேதம் ஆரணம்  எனப்படும். வேதத்தின் ஞானபாகமாகிய உபநிடதம் ஆரணமாகும்.

“ஆரணங்களே யல்ல மறுகிடை

வாரணங்களும் மாறி முழங்குமால்“

எனச் சேக்கிழாரே முன்னர்க் கூறுதலும், வேதங்கள் நிஷாதசுரத்திற் பயிலப்பெறுதலும் இங்கு வைத்துணரத் தக்கன. நிஷாதம் – யானையின் பிளிற்றோசை. “மலைக்கொளானை“ என்ற திருக்கடவூர்த் திருக்குறுந்தொகையிலே அப்பர் பெருமான் இறைவனைக் “கலைக்கை யானை கண்டீர்“ “கள்ளவானை கண்டீர்“ முதலாகப் பதிக முழுதும் யானையாகவே காட்டியதும், “வேதமாகிய வெஞ்சுடரானையார்“ என்றருளியதும் இங்கே காணத்தக்கன.

மேலும் ஆரணம், குதிரை என்ற பொருளையும் தரும். வாரணம் – குதிரை எனக்கொண்டு வேதமாகிய குதிரையின்மேல் என்றுங் கூறுப. இறைவன் மாணிக்கவாசகர் பொருட்டு வேதக் குதிரையின்மேற் குதிரைச் சேவகனாகி வந்தான் என்ற சரிதமும், “பண்ணியல், வைதிகப் புரவியும்“  என்ற  கோயில் நான்மணி  மாலைத்   திருவாக்கும்   இங்கு கருதத்   தக்கன!

‘’பேதையேன் செய்பிழை பொறுத்து ஆண்டன‘’ என்ற அடியில் செய்பிழை என்ற வினைத்தொகை  செய்த  பழைய  பிழைகளையும், இனிமேல்  செய்யத்தக்க பிழைகளையும் என்ற பொருள்பட்டுப், பிற்காலத்தில் திருவாரூர்த் தேவாசிரிய மண்டபத்து அடியார்கள், பரவையார், சங்கிலியார் ஆகியோருடன் செய்யும் பிழைகளையும் பொறுத்து ஆட்கொண்ட திறத்தையும்  கூறியதாகக்  கொள்ளலாம்.

முன் செய்த பிழை பொறுத் தாண்டது போலவே, இனி வருங்காலத்திற் செய்யக் கடவனவாகிய பிழைகளையும், அவற்றால்வரக் கடவனவாகிய ஏதங்களையும் தீர்க்க இப்போதே உடன்பட்டன என்க. “ஏதந்தீர் நெறியைப் பெற்றேன்“  என்பது சேக்கிழார்  வாக்கு.  முன்னே  திருக்கயிலையில் ஏதந்தீர்க்க இசைந்தன; ஆதலின் பேதையேன்செய் பிழைபொறுத் தாண்டன என்று கூட்டியுரைத்தலுமாம். என் பிழையைப் பொறுத்தாண்டதேயன்றி எல்லா உயிர்க்கும் ஏதம் தீர்க்க இசைந்தன  எனவும் பொருள்படும்.

ஆறாத வானந்தத் தடியார் செய்த  அனாசாரம் பொறுத்தருளி யவர்மே லென்றுஞ் சீறாத பெருமானை“  என்பது அப்பர்  திருத்தாண்டகம்..

“யான்செய்யும் துரிசுகளுக் குடனாகி“ என்ற நம்பிகள் தேவாரமும் இங்குச் சிந்திக்கத்தக்கது. இப்பாட்டில் ‘’பூத நாத!’’ என்ற தொடர்  பூதங்களின் தலைவனே  எனப் பொருள்படும்.

பூதபதயேநம: என்பது சிவாஷ்டோத்திரம். பூதங்களாற் சூழப்பட்டு நடம்புரிதல் சிவபெருமானுக்கேயுரியது. இப்பூதங்களின் இயல்பும் வலிமையும் முன்னர்க் கண்டோம்.

“பூத நாயகர் புற்றிடங் கொண்டவர்“  என முன்னர் இத்திருவாரூர்ப் பெருமானைக் குறித்ததும் எண்ணத்தக்கது..

“ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்அங்க ணன்றனை“ முதலிய எண்ணிறந்த திருவாக்குக்களும் காண்க. பூதங்கள் தாருகவனத்து இருடிகள் மாறாகச் செய்த ஆபிசார யாகத்திற் றோன்றின என்றும், அவற்றைச் தம்மைச் சேவித்துச் சூழ்ந்து நிற்க இறைவன் ஆணையிட்டான் என்றும் புராணங்கள் கூறும்.

இந்நான்கு திருப்பாட்டுக்களிலும் நின் புண்டரீகப்பதம் என்ற ஒரே எழுவாய் எதிர் நின்றன என்பது முதல் இசைந்தன என்பதுவரைப் பதினொரு தனி வினைமுற்றுக்களைக் கொண்டு முடிந்தது காண்க. பஞ்சப்பிரம சடங்கமாகிய பதினொரு மந்திரங்களாலே இறைவனைக் கொண்டு துதிக்கும் சிவாகம மரபினை இது குறித்தது. இவையே பின்னர்த் திருத்தொண்டத்தொகையின் பதினொரு பாசுரங்களாகப் போந்தன என்பர் ஆலால சுந்தரம்பிள்ளை.

பதம் எதிர் நின்றன – ஆடின – என்னாது, இறுதியில் நிற்கவேண்டிய பயனிலைகள் முன்னும், முன்னிற்கவேண்டிய எழுவாய் இறுதியிலும் வந்தன. மலையின் மேலே சகடங்களை ஏற்றும் இயந்திரம் பின்னின்று தள்ளுதல்போன்ற மரபுபற்றிப் போலும். “எழுவா யிறுவா யிலாதன“ என்று அப்பர் பெருமான் இத்திருவடிகளின் இலக்கணம் வகுத்துள்ளார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.