இயற்கையில் எழுந்த இசை – பகுதி 3

நிர்மலா ராகவன்
சடை விரிந்ததேன்
கோயம்புத்துரில் ஒரு சிற்றுண்டிசாலைக்கு வெளியே மழைக்கு ஒதுங்கியபோது, “அம்மா! சிவன் மேலே `ஏன், ஏன்’னு கேக்கறமாதிரி ஒரு பாட்டு எழுதேன். பேகட ராகத்திலே இருக்கணும்,” என்று ஷீலா ஒரு வேண்டுகோள் விடுத்தாள்.
உடனே, `சடை விரிந்ததேன் சிவனே?’ என்று பாடிக்காட்டினேன்.
“இதேதான்!” என்று ஆர்ப்பரித்தாள்.
எங்களிருவரையும் வீட்டுக்கு அழைத்துப்போக வந்த என் இளைய சகோதரியிடம், “எனக்கு ஒரு பாட்டு வந்தது,” என்று உற்சாகமாக அந்த ஒரு வரியைப் பாடிக்காட்டினேன்.
நான் எதற்கு அடிபோடுகிறேன் என்று அவளுக்குத் தெரியாதா! “எனக்குப் பாட்டெல்லாம் எழுதப் பிடிக்காது,” என்றபடி, விறைப்பாக காரை ஓட்டிப்போனாள்.
“உன்னை யார் எழுதச் சொன்னது?” என்ற நான் அந்த ஒற்றை வரியை விடாது பாடியபடி இருந்தேன்.
சில நிமிடங்களுக்குள், தன்னையுமறியாது, அடுத்த வரியைப் பாடினாள், சங்கீத வித்வான் டாக்டர் ஹேமலதா நடேசன் (1960-களில், அடையார் இசைக்கல்லூரியில் முசிறி, Dr.எஸ்.ராமநாதன், K.V. நாராயணஸ்வாமி, T.N. கிருஷ்ணன் போன்ற பல வித்வான்களிடம் பயின்றவள்).
அவள் பாடப் பாட, நான் ஸ்வரப்படுத்தினேன். நாங்களிருவரும் மாறி மாறிப் பாட, நான்கு ராகங்களில், இரண்டிரண்டு வரிகள்கொண்ட பாடல் முழுமை பெற்றது.
இப்பாடலைக் கேட்க: