நெல்லைத் தமிழில் திருக்குறள்- 93

நாங்குநேரி வாசஸ்ரீ
93. கள்ளுண்ணாமை
குறள் 921
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்
கள்ளு குடிக்க பழக்கம் இருக்கவுகளப் பாத்து யாரும் பயப்படமாட்டாங்க. வாழுத காலத்துலயும் அவுகளுக்கு புகழ் இல்லாமப் போவும்.
குறள் 922
உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்
கள்ளு குடிக்கக் கூடாது.. படிச்ச பெருமக்க முன்ன மானம் மருவாதி கெட்டு அலையணும்னு நெனைக்கவன் குடிச்சிக்கிடலாம்.
குறள் 923
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி
எல்லாத்தையும் பொறுத்துப்போவுத பெத்த ஆத்தா முன்ன ஒருத்தன் கள்ளு குடிச்சிட்டு கெடந்தாம்னா அவளே சகிச்சிக்கிட மாட்டாங்குதப்போ படிச்ச பெருமக்க சகிப்பாகளா?
குறள் 924
நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு
கள்ளு குடிக்கதுங்கத ஆக்கங்கெட்ட காரியத்த செய்யுதவன் முன்ன நாணம் ங்குத நல்ல கொணம் நிக்காம ஓடிப்போவும்.
குறள் 925
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்
தன்ன மறந்து சொரணகெட்டு மயங்கிக் கெடக்கதுக்காவ ஒருத்தன் வெல கொடுத்து கள்ளு வாங்கிக் குடிக்கதுமாரி கூறுகெட்டதனம் ஒண்ணுமில்ல.
குறள் 926
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்
ஒறங்குதவருக்கும் செத்தவருக்கும் எங்ஙன பெரிய வித்தியாசமில்லயோ அங்ஙனதான் கள்ளுகுடிக்கவனுக்கும் விசம் குடிச்சவனுக்கும் இருக்கதும்..
குறள் 927
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்
கள்ளை ஒளிச்சி வச்சிக்கிட்டு குடிச்சாலும் ஊர்க்காரவுக தெரிஞ்சிக்கிட்டு எப்பமும் எளக்காரம் செஞ்சு சிரிப்பா சிரிப்பாக.
குறள் 928
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்
தொளித்ததூஉம் ஆங்கே மிகும்
கள்ளு குடிக்கவன் நான் குடிச்சதே இல்லன்னு பொய் சொல்லுதத உட்டுப்போடணும். ஏம்னா அவன் குடிச்சிருக்க நேரம் மனசுக்குள்ளார ஒளிச்சு வச்ச உண்ம வெளிய வந்துரும்.
குறள் 929
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று
குடிபோதையில மயங்கிக் கெடக்கவனுக்கு புத்தி சொல்லுதது தண்ணிக்குள்ளார முங்கினவன தீப்பந்தம் புடிச்சுக்கிட்டு தேடுதது கணக்கா ஆவும்.
குறள் 930
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு
ஒரு குடிகாரன் தான் குடிக்காம இருக்குதப்போ மத்த குடிகாரனப் பாத்து நாமளும் இப்டிதான் சீரளியுதோம்னு புரிஞ்சிக்கிடமாட்டானோ?