செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(281)

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
றகைமைக்கண் தங்கிற் றுலகு.

          -திருக்குறள் -874 (பகைத்திறம் தெரிதல்)

புதுக் கவிதையில்…

தேவையின் போது
பகைமையையும்
மாற்றித் தமக்கு
நட்பாக்கிக் கொள்கிற
நல்லியல்பு உள்ளவனின்
பெருமையினுள் அடங்கிவிடும்
இவ்வுலகே…!

குறும்பாவில்…

தேவையறிந்து பகைமையையும்
நட்பாக்கிக்கொள்ளும் நற்குணமுள்ளவனின்
பெருமையில் அடங்கிடும் உலகிதுவே…!

மரபுக் கவிதையில்…

 தேவை ஏற்படும் போதினிலே
தொல்லை தந்திடும் பகைமறந்து
நோவைத் தராத வகையிலதை
நட்பாய் மாற்றிடும் நற்குணத்தால்
சேவை செய்திடும் நல்லவனைச்
சேர்ந்திடும் அளவிலாப் பெருமையெலாம்,
காவிய நாயகன் இவன்திறத்துள்
காசினி யடங்கிடும் காண்பீரே…!

லிமரைக்கூ..

உறவழிக்கும் குணமாம் பகையை
மாற்றி நட்பாக்குவோன் பெருமையில் பாராய்,
உலகேயதில் அடங்கிடும் வகையை…!

கிராமிய பாணியில்…

வேண்டாம் வேண்டாம்
பகயது வேண்டாம்,
ஒறவக் கெடுத்திடும்
பகயே வேண்டாம்..

தேவய நல்லாத் தெரிஞ்சிக்கிட்டு
தேவயில்லாத பகயத்தான்
நன்ம தருகிற
நட்பா மாத்தி வாழுற
நல்லவனோட பெருமயிலதான்
அடங்கியிருக்கு ஒலகமே..

அதால
வேண்டாம் வேண்டாம்
பகயது வேண்டாம்,
ஒறவக் கெடுத்திடும்
பகயே வேண்டாம்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *