தமிழ்த்தொண்டாற்றிய தவநெறிச் செல்வர் – குமரகுருபரர்

-மேகலா இராமமூர்த்தி

தாமிரபரணியாற்றின் வடகரையில் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டமென்னும் திருத்தலத்திற்கு அருகிலுள்ள ஸ்ரீகைலாசம் எனும் பகுதியைச் சார்ந்த சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாமசுந்தரி அம்மையாருக்கும் கி.பி. 1625ஆம் ஆண்டு, ஆனித் திங்கள் திருவாதிரை நன்னாளில் திருமகனாய்த் தோன்றினார் சைவமும் தமிழும் தழைக்கவந்த அருளாளரான குமரகுருபரர்.

பிறந்து ஐந்தாண்டுகள் வரைப் பேசாத மூங்கைப் பிள்ளையாக அவர் இருந்ததனால் கவலையுற்ற அவருடைய பெற்றோர், அவரைத் திருச்செந்தூருக்கு எடுத்துச்சென்று செந்திலாண்டவர் சந்நிதியில் கிடத்திவிட்டுப் பாடுகிடந்தனர். முன்னியதை முடித்துவைக்கும் முருகப்பெருமான் அருளால், பேசாத அக்குழந்தை பேசும் திறன்பெற்றது. அம்மட்டோ? பாடும் திறனும் பெற்றது என்கின்றது அவருடைய வரலாறு.

பின்னர், கல்வியில் நல்ல தேர்ச்சிபெற்ற குமரகுருபரர், கந்தர் கலிவெண்பா என்ற நூலினை முதலில் பாடினார். தாம் பிறந்த தலத்தில் எழுந்தருளியிருந்த கைலாசநாதர்மீது கைலைக் கலம்பகம் எனும் பிரபந்தம் இயற்றினார். ஞான சாத்திரங்களே அன்றித் தமிழ் இலக்கிய இலக்கணங்களிலும் நல்ல புலமைபெற்றார் குமரகுருபரர்.

அதன்பயனாய், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மதுரை மீனாட்சியம்மை குறம், மதுரைக்கலம்பகம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, பண்டார மும்மணிக்கோவை, காசிக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், சகலகலாவல்லி மாலை முதலிய அற்புதமான நூல்களை இயற்றி அன்னைத்தமிழுக்கு அணிசெய்தார்.

குமரகுருபரரருக்குச் சிவஞான உபதேசம் செய்தருளியவர் தருமபுர ஆதினத்தில் நான்காம் பட்டத்தில் குருமூர்த்தியாக விளங்கிய திருநிறை மாசிலாமணி தேசிகராவார். துறவுநிலை அருளவேண்டுமென்று தம் ஞானாசிரியரிடம் குமரகுருபரர் வேண்ட, அவ் ஆதீன மரபுப்படி துறவறம் மேற்கொள்ள விரும்புவோர் தலயாத்திரை செய்துவரல் வேண்டுமாதலால் காசி யாத்திரை செய்து திரும்புமாறு குமரகுருபரருக்குக் கட்டளையிடுகின்றார் குருமகா சந்நிதானம் தேசிகர் அவர்கள்.

காசிக்குச் சென்றுதிரும்ப நெடுங்காலம் ஆகுமே என்று கவலைப்பட்ட குமரகுருபரரைச் சிதம்பரம் வரை சென்றுவரப் பணித்தார் மாசிலாமணி தேசிகர். அவ்வாறே சிதம்பரம் சென்ற குமரகுருபரர், சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை முதலிய நூல்களை அங்கே இயற்றினார். அங்கிருந்து திரும்பியவர் பின்னர்க் காசிக்கும் சென்றார்.

காசியை அக்காலத்தில் ஆண்ட தில்லி பாதுஷாவான தாரா ஷுகோவின் மனத்தில் இடம்பெற்றுச் சிவத்தொண்டுகள் சிலவற்றைக் காசியில் புரிய விழைந்த குமரகுருபரர், பாதுஷாவோடு உரையாடுவதற்கு வசதியாக அவருடைய தாய்மொழியான இந்துஸ்தானியை விரைவில் கற்க விரும்பிக் கலைமகளைத் துதித்துச் சகலகலாவல்லி மாலை பாடி அவள் அருளால் இந்துஸ்தானி மொழியில் புலமை பெற்றார் என்று கூறப்படுகின்றது.

பிறகு பாதுஷாவிடம் இந்துஸ்தானி மொழியிலேயே பேசி அவர் மனத்தைக் கவர்ந்து, காசியில் கேதார கட்டம் (Kedar Ghat) எனுமிடத்தில் மடம்கட்ட ஓர் இடம் பெற்றார் குமரகுருபரர். அவ்வாறு கட்டப்பட்டதே குமாரசாமி மடமாகும். அங்கேயே சிவபோகம் செய்து வாழ்ந்துவந்தார் அவர். அக்காலக்கட்டத்தில்தான் காசித்துண்டி விநாயகர் பதிகமும், காசிக்கலம்பகமும் அவரால் இயற்றப்பட்டன. காசியில் தாம் வாழ்ந்த இடத்தில் தமிழிலும் இந்துஸ்தானியிலும் புராணச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தியிருக்கின்றார் அவர்.

அளவிடற்கரிய தமிழ்ப்பற்றுடையவரான குமரகுருபரர், தாம் முதலில் பாடிய கந்தர் கலிவெண்பாவிலேயே,

”ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்
பேசுமியல் பல்காப் பியத்தொகையும் – ஓசை
எழுத்துமுத லாம்ஐந் திலக்கணமும் தோய்ந்து
பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து…”
  (கந்தர் கலிவெண்பா: 118-119)

அடியேற்கு அருளவேண்டும் என்று கந்தனை வந்தனை செய்திருக்கக் காண்கின்றோம்.
சகலகலாவல்லி மாலையிலும்,

”நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள்வாய்…”
என்றும்

”பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்…”
என்றும் கலைமகளைத் துதிக்கின்றார்.

குமரகுருபரருடைய செய்யுட்களில் தனிச்சிறப்புப் பெற்று விளங்குவது அவற்றின் இன்னோசையே ஆகும். ஏனையோரின் பாட்டுக்களிலிருந்து இவருடைய செய்யுட்களை நம் செவிப்புலன்கொண்டே எளிதில் வேறுபடுத்திவிடலாம். இச்செய்யுட்களின் சொற்களும் சொற்றொடர்களும் ஒன்றினோடு ஒன்று செவிக்கினிமை தரும்வகையில் பொருந்த அமைந்துள்ள பாங்கு, தென்பாண்டிநாட்டுப் பொருநை ஆற்றின் ஓட்டத்தை நம் நினைவுக்குக் கொண்டுவருகின்றது.

குமரகுருபரர் இயற்றிய நீதிநெறிவிளக்கம் எனும் 102 வெண்பாக்களால் அமைந்த அறநூல், அரிய வாழ்வியல் கருத்துக்களை நமக்கு அறியத் தருகின்றது. இந்நூலின் கருத்தாழத்தில் ஈடுபட்ட மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணாக்கரும், குடந்தைக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவருமான,  சி. தியாகராசச் செட்டியார் ”திருக்குறள் பருவத்தே பெற்ற பிள்ளை நீதிநெறிவிளக்கம்” என்று இதனைப் போற்றியுள்ளார்.

இந்நூலிலிருந்து சில பாடல்களைச் சுவைத்தின்புறுவோம்!

கல்விகுறித்துப் பேசுகின்ற நீதிநெறிவிளக்கப் பாடலொன்று,

கற்புடைய மனைவியை ஒத்திருப்பது கல்வி; அம்மனைவியினால் கிடைக்கப்பெறும் காதற் புதல்வனே இனிய செய்யுள்; சொல்வன்மையே செல்வமாகும்; அச் செல்வத்தால் பெருமைமிகு அவையிலுள்ளோர் மனங்களை மகிழச்செய்தல் ஒருசிலராலேயே இயலும் என்கின்றது.

கல்வியே கற்புடைப் பெண்டிர் அப்பெண்டிர்க்குச்
செல்வப் புதல்வனே ஈர்ங்கவியாச் சொல்வளம்
மல்லல் வெறுங்கையாம் மாணவை மண்ணுறுத்தும்
செல்வமும் உண்டு சிலர்க்கு
.  (நீதிநெறி விளக்கம் – 3)

இளமை நிலையாமை, செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை, உயிர் நிலையாமை எனும் நால்வகை நிலையாமையைப் பாடாத அறநூல்களே அநேகமாகத் தமிழில்  இல்லை எனலாம். திருக்குறள், சிலப்பதிகாரம், நாலடியார், திருமந்திரம் என்று நீளும் இவ்வரிசையில் குமரகுருபரரின் நீதிநெறிவிளக்கத்திற்கும் இடமுண்டு.

நீரில் தோன்றிடும் குமிழி போன்றது இளமை; அந்நீரில் எழும் அலைகள் போன்றது செல்வம்; அந்நீர்மேல் எழுதிய எழுத்துப் போன்றது இம்மானுட யாக்கை; எனவே சிவபிரானை வழுத்துவதே மாந்தர்க்கு வாழ்வாக அமையவேண்டும் என்று அறிவுறுத்துகின்றது இந்நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள்.

நீரிற் குமிழி இளமை நிறைசெல்வம்
நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் – நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னே
வழுத்தாத தெம்பிரான் மன்று. 

கலைகளில் சிறந்தது இலக்கியக் கலை. நிலையில்லாமல் மாறும் அழகின்பத்தை நிலைபெறச் செய்ய இலக்கியம் பயன்படுகின்றது. மேற்கு வானத்தில் மாலையில் காணப்படும் அந்தி அழகு நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கின்றது. உள்ளம் வியந்துபோற்றும் அழகுமிக்க சிறந்த காட்சியை வானில் கண்டு மகிழ்கின்றோம். சிறிதுநேரம் கழித்து மீண்டும் அதனைக் கண்டுமகிழ விரும்பினால், அந்த அழகு, புலன்களுக்கு எட்டாத ஒன்றாக ஆகிவிடுகின்றது. ஒருநாள் ஒருவேளை உள்ளத்தில் தோன்றிய புதிய உணர்ச்சி மற்றொரு நாள் மற்றொரு வேளையில் தோன்றுதல் அரிதாகின்றது. இவ்வாறு மறைந்து மாறிப்போகும் அழகையும் உணர்ச்சியையும், படைப்பாளி தான் படைக்கும் இலக்கியத்தின்மூலம் நிலைபேறடையச் செய்துவிடுகின்றான். அத்தகைய படைப்பாளி உயிர்களைப் படைக்கும்  பிரமனைவிட உயர்ந்தவன். ஏனெனில்  பிரமன் படைக்கும் உயிர்களுக்கு அழிவுண்டு; ஆனால் படைப்பாளிகளாகிய புலவர்களின் படைப்புக்களோ காலத்தை வென்று, நின்று வாழக்கூடியவை என்கிறார் குமரகுருபரர்.

கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும்
மலரவன் வண்டமிழோர்க்கு ஒவ்வான் – மலரவன்செய்
வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு
மற்றிவர் செய்யும் உடம்பு.  
(நீதிநெறி விளக்கம் – 6)

குமரகுருபரரின் இக்கருத்தை மனத்திற்கொண்டே, ”படைப்பதனால் என் பேர் இறைவன்; நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்று பாடினாரோ கவியரசு கண்ணதாசன் என எண்ணத் தோன்றுகிறது.

பொதுவாகவே மனிதர்கள் தம்மைப் பிறர் மதிக்கவேண்டும் எனும் வேட்கையும் விருப்பமும் கொண்டவர்கள். அம்மதிப்பைப் பெற அவர்கள் செய்யவேண்டுவது என்ன என்பதை ஒரு பாடலில் விளக்குகின்றார் குமரகுருபரர்.

”பிறருடைய குறைகளையே சொல்லித் தூற்றிக்கொண்டிராமல் அவர்களின் குணங்களைப் பலரறியப் போற்றுங்கள்; அனைவரிடமும் பணிவோடு நடந்துகொள்ளுங்கள்; பெருமதிப்புப் பெறுவீர்கள்” என்பதே அப்புலவர் பெருந்தகை நமக்குச் சொல்லும் நல்லுரை.

பிறராற் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்
மறவாதே நோற்பதொன்று உண்டு – பிறர்பிறர்
சீரெல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து
யார்யார்க்குந் தாழ்ச்சி சொலல்.
(நீதிநெறி விளக்கம் – 19)

குமரகுருபரர் ஓர் அருந்தமிழர்; தமிழ்மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து நன்னிலை பெறவேண்டுமென விரும்பியவர். அதனாற்றான் தம்முடைய நூல்களில் தமிழினம் ஈடேற்றம் காண்பதற்கேற்ற உயர்ந்த அறக் கருத்துக்களைத் தவறாது வலியுறுத்தியிருக்கின்றார்.

”ஆசை ஆசை என்று அத்தனைக்கும் ஆசைப்படாதீர்! செல்வம் என்பது நம் சிந்தையின் நிறைவே ஆகும். கட்டுக்கடங்கா ஆசை வறுமையில் கொண்டுபோய் விட்டுவிடும்!” என எச்சரிக்கின்றார், தம்முடைய சிதம்பர மும்மணிக்கோவையில்.

”செல்வம் என்பது சிந்தையின் நிறைவே
அல்கா நல்குரவு அவாவெனப் படுமே.”
(சிதம்பர மும்மணிக்கோவை: 26)

தமிழில் தோன்றிய பிள்ளைத்தமிழ் நூல்களில் குமரகுருபரர் பாடியருளிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழும், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. அதிலும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தெய்வநலஞ் சான்ற தீந்தமிழ்ப் பனுவலாகும். திருமலைநாயக்கர் அவையில் இந்நூலை அரங்கேற்றம் செய்த குமரகுருபரர், ”தொடுக்கும் கடவுள்” எனத் தொடங்கும் வருகைப் பருவத்துப் பாடலைப் பாட, அன்னை மீனாட்சியே சிறுமியாக வந்து குமரகுருபரரின் கழுத்தில் ஓர் முத்தாரத்தை அணிவித்துச் சென்றாள் என்று சொல்லப்படுகின்றது.

அப்பாடல் இதுதான்!

தொடுக்கும் கடவுள் பழம்பாடல்
தொடையின் பயனே நறைபழுத்த
துறைத்தீந் தமிழின் ஒழுகுநறுஞ்
சுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து
எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு
ஏற்றும் விளக்கே வளர்சிமய
இமயப் பொருப்பில் விளையாடும்
இளமென் பிடியே எறிதரங்கம்
உடுக்கும் புவனம் கடந்துநின்ற
ஒருவன் திருவுள் ளத்தில்அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிர் ஓவியமே மதுகரம்வாய்
மடுக்கும் குழற்கா டேந்தும்இள
வஞ்சிக் கொடியே வருகவே
மலயத் துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே!
(மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் – வருகைப்பருவம்)

குருபரரின் இறைக்கொள்கையைப் பொறுத்தவரையில் அவர் சைவ சமயத்தில் பற்றுக்கொண்டிருந்த சிவநெறியாளராக இருந்தபோதிலும், பிற கடவுளர்களைப் புறக்கணிக்கவோ, பழிக்கவோ இல்லை.

ஒரு கடவுள், ஒரு மொழி, ஒரு கலை, ஒரு நாடு என்னும் வரையறையின்றிப் பல கடவுளரையும், பல மொழிக் கருத்துக்களையும், பல கலைச் செய்திகளையும் பல நாட்டு வருணனைகளையும் இவருடைய செய்யுட்களில் காண்கின்றோம். இந்நாட்டின் தென்திசையிலுள்ள செந்தூரையும், வடநாட்டிலுள்ள காசியையும் இவர் பாடுகின்றார். தாம் பிறந்த பாண்டி நாட்டையும், தம் குருவைப் பெற்ற சோழநாட்டையும், வாழ்ந்து வந்த கங்கைக் கரையையும் வருணிக்கின்றார். சிவபெருமான் முதல் கலைமகள் வரையுள்ள தெய்வங்களைப் பாராட்டுகின்றார். இவற்றால் இவர் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் உளப்பாங்கோடு விரிந்த உலகியல் அறிவும் பெற்றவர் என்பது தெற்றெனப் புலனாகின்றது.

தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்து வளர்ந்து, வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்து, காவிரியாற்றங்கரையிலும் கங்கையாற்றங்கரையிலும் மடம் அமைத்துத் தமிழையும் சைவத்தையும் தழைத்தோங்கச் செய்த பதினேழாம் நூற்றாண்டின் பெரும்புலவர் குமரகுருபரர். இல்லறவாழ்வைத் துறந்தபோதினும் தமிழைத் துறக்காத தகைசால் பெருந்தகையான அவர், இறுதியில் கங்கையாற்றங்கரையில் இறைவனடி சேர்ந்தார்.

சொற்சுவையும், பொருட்சுவையும், தெவிட்டாத அருட்சுவையும், சிந்தை மகிழும் இன்னோசையும் மிளிரும் அத்தவநெறிச் செல்வரின் அருந்தமிழ்ப் பனுவல்களைத் தமிழர்களாகிய நாம் அனைவரும் படித்துப் பயன்பெறுவோம்!

*****

கட்டுரைக்கு உதவியவை:

https://ta.wikipedia.org//wiki/குமரகுருபரர்
https://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/Blessed-in-life-and-death/article16481818.ece
http://www.tamilhindu.com/2008/09/kumaraguruparar-life-history-by-uvesa/
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/jun/09/அங்கயற்கண்ணி-அளித்த-அங்கீகாரம்-2717201.html

 

 

About மேகலா இராமமூர்த்தி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க