எண் மாற்றமும் எண்ண மாற்றமும்

சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் 

ஆண்டுக்கொருமுறை பிறக்கும் புத்தாண்டு .
ஆண்டாண்டு தோறும் வாழ்த்துக்கள் பரிமாற்றம்
ஆண்டவன் அருளால் அனைத்தும் நலமாக
வேண்டுவோம், உழைப்போம், பெறுவோம் முன்னேற்றம்.

இவ்வாண்டு வந்திட்ட இன்பங்கள் தொடரட்டும்.
இவ்வாண்டு வந்திட்ட இன்னல்கள் மறையட்டும்.
வருமாண்டு வளமாக வருமானம் சிறக்கட்டும்.
வருமானம் பெருகிட வழிகள் திறக்கட்டும்.
சபதங்கள் மேற்கொள்ள புத்தாண்டு வேண்டாமே.
சபலங்கள் இல்லாத மனஉறுதிதான் வேண்டும் .

எண் மாற்றம்தானென்று எளிதாக எண்ணாதீர்
எண்ண மாற்றம் இருந்தால் எல்லாம் நிறைவேறும் .
நன்னம்பிக்கை கொண்டு நல்லதே செய்திடுவீர் .
தன்னம்பிக்கை இருந்தால் ,தரணி நம் வசமாகும்.

இரண்டாயிரத்து இருபதில் இந்தியா வல்லரசாகுமென்று
மறைந்த மாமேதை கலாம் சொல்லிவைத்தார் .
வல்லரசாவது பெரிதன்று, மக்களுக்கு ஏற்ற
நல்லரசாள்வதே நன்மை  பயக்குமன்றோ.

விவசாயமும்  தொழிலும் , விரைந்து பெருகட்டும் .
வேலையில்லா நிலை வேகமாய்க் குறையட்டும்.
விலைவாசி குறைந்து மக்கள் மனம் மகிழட்டும்.
பொருளாதார  மந்த நிலை மாறட்டும்.
அரசியல் கட்சிகள்  அறிவோடு  நடக்கட்டும் .
மதவாதம், இனவாதம், மண்ணுக்குள் புதையட்டும் .
தீவிரவாத எண்ணம் தீக்கிரையாகட்டும் .
பாலியல் குற்றங்கள் பனிபோல் மறையட்டும்.
விஞ்ஞானமும் ,மெய்ஞானமும் விழிகளாய்த் திகழட்டும்.
அஞ்ஞானம் அகன்று  அறிவொளி படரட்டும்.
உழைப்புக்கும், உண்மைக்கும், உயர்வு கிடைக்கட்டும்.
தாய்நாட்டுப்பற்று எங்கும் தழைத்து ஓங்கட்டும்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க