Tag: புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்

  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 9

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 9

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தொல்காப்பியப் பொருளதிகார உவமங்கள் – 2

    முன்னுரை

    தொல்காப்பியம் பொருட்பகுதியின் பொருள் புலப்பாட்டுக்காகப் பொருத்தமான உவமங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் பாங்கினை ஆராயும் முந்தைய கட்டுரைப் பொருளுடன் இந்தக் கட்டுரையும் இதற்கு அடுத்து வரும் கட்டுரையும் தம்மை இணைத்துக் கொள்கின்றன. இலக்கண ஆசிரியன் ஒருவனுடைய இலக்கிய உள்ளத்தை அறிந்து கொள்வதற்கும் இவை பயன்படக்கூடும். மேலும் இலக்கணத்தை இலக்கியமாக்கும் முயற்சி தொல்காப்பியர் காலத்திலேயே காழ்கொள்ளத் தொடங்கியிருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம். கணிதம் போலச் சொற்களைக் கோத்து அதனைக் ‘கவிதை’ என்று நம்ப வைக்க முயலும் தற்காலப் படைப்பாளர்கள் இதனைச் சிந்திப்பது பயன்தரலாம். ‘தொல்காப்பியம் ஒரு காடன்று அது ஒரு பூங்கா’ எனப் பின்னுள்ள கலைஞர்கள் அதனை அழைப்பதற்கான காரணங்கள் அந்த நூலிலேயே இருந்திருக்கின்றன. அகப்பொருள் இலக்கியத்திற்கு இலக்கணம் சொல்ல வந்த தொல்காப்பியர் அகத்திணை மணம் குறையாமலும் அறச்சிந்தனை மேலோங்கும் வகையிலும் உவமங்களைப் பயன்படுத்தியுள்ளார். இது பற்றிய ஆய்வினை இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

    வெள்ளத்தைத் தடுத்த மலை

    வெள்ளம் வருமுன் அணையிடுதல் என்பது ஒரு சொலவடை. மண்ணாசை காரணமாகத் தொடுக்கின்ற போருக்கு வஞ்சித்திணை என்று பெயர். பதின்மூன்று துறைகளை உள்ளடக்கிய அத்திணையுள்,

    “வருவிசைப் புனலைக் கற்சிறை போல
    ஒருவன் தாங்கிய பெருமை யானும்” 91

    என்பதாகிய துறையும் ஒன்று. விசையொடு பெருகிவரும் கடும்புனலைக் கல்லாகிய அணை தடுத்து நிறுத்துமாறு போலத் தன்மேல் கடுகித் தொகையாக வரும் பகை மறவரைத் தான் ஒருவனே தடுத்து நிறுத்தும் பெருமிதமும் வஞ்சித்திணையாகும் என்பது கருத்து. பகைவர்களை வெள்ளமாகவும் தடுக்கின்ற வீரனைக் கல்லணையாகவும் உவமித்தது ஓர் இலக்கியப் புலவன் என்றால் இந்த ஆய்வுக்கு இங்குத் தேவையிருந்திருக்காது. தொல்காப்பியத்தின் இந்த உவமம் பின்னால் வந்த ஐயனாரிதனாரையும் கவர்ந்திருக்கிறது. அதனை அவர் சற்றொப்ப ஆசிரிய வசனமாகவே வழிமொழிந்திருக்கிறார். ஓர் இலக்கணத்தில் இடம்பெற்றதால் தனிக்கவனத்திற்கு ஆளாகிறது.

    “பொருபடையுட் கற்சிறைபோன்று
    ஒருவன் தாங்கிய நிலையுரைத்தன்று”

    என்பது வெண்பாமாலையின் தனிநிலை பற்றிய கொளுவாகும். இதற்கு இலக்கண விளக்கம் தந்திருக்கும் ஐயனாரிதனார் வினையின் நீங்கிய விளங்கிய அறிவும் எதனையும் வியந்து நோக்காத பக்குவமும் உடைய சான்றேர்களும் அத்தகைய வீரத்தையுடைய மறவனைப் பெற்ற முதியவளின் வயிற்றை வியப்புடன் நோக்குவதாக,

    “வீடுஉணர்ந் தோர்க்கும் வியப்பாம்!(ஆல்) இந்நின்ற
    வாடல் முதியாள் வயிற்றிடம் – கூடார்
    பெரும்படை வெள்ளம் நெரிதரவும் பேரா
    இரும்புலி சேர்ந்த இடம்!”

    என்னும் துறைவிளக்கப் பாடலில் குறிப்பிடுகிறார். காப்பியரும் ஐயனாரிதனாரும் பயன்படுத்திய அந்த உவமத்தை,

    “வேந்துடைத் தானே முனைகெட நெறிதர
    ஏந்துவாள் வலத்தன் ஒருவனாகி
    தன்னிறந்து வாராமை விலக்கலின் பெருங்கடற்கு
    ஆழியனையான் மாதோ என்றும்
    பாடிச்சொன்றோர்க்கன்றியும்  வாரிப்
    புரவிக் காற்றாச் சீறூர்த்
    தொன்மை சுட்டிய வண்மை யோனே!” புறம் 330

    என்னும் புறநானூற்றுப் பாடலிலும் காணமுடிகிறது. ‘நெரிதர’, ‘ஒருவனாகி,’ ‘பெருங்கடற்கு ஆழியான்’ என்னும் சொற்களை அப்படியே புறநானூற்று ஆசிரியர் பயன்படுத்தியிருக்கிறார் என்பது நோக்கத் தகுந்தது.

    உவமங்களான உணர்வுகள்

    பருப்பொருளை உவமமாக்குவது ஒன்று, நுண்பொருளை உவமமாக்குவது ஒன்று, காட்டலாகாப் பொருட்களெல்லாம் நுண்பொருள்களே. நுண்மையை உணரலாமேயன்றி ஐம்பொறிகளால் நுகர்தல் இயலாது. தொல்காப்பியம் இதனை ‘நெஞ்சு கொளின் அல்லது காட்டலாகாப் பொருள்’ என்று கூறும்.

    “ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா
    கற்பும் ஏரும் எழிலும் என்றா
    சாயலும் நாணும் மடனும் என்றா
    நோயும் வேட்கையும் நுகர்வும் என்றாங்கு
    ஆவயின் வரும் கிளவியெல்லாம்
    காட்டலாகாப் பொருள என்ப”

    என்பது நூற்பா. இந்நூற்பாவில் பயின்றுவரும்‘ ஆவயின் வரூஉம் கிளவியெல்லாம்’ என்பதனால் தாய்மை அன்பை அடக்கிக் கொள்ள இயலும். தாய் போன்றாள் என்றால் அது உருவத்திற்கான உவமமாகாது பண்பிற்கான உவமமாகும். பண்பு காட்டலாகாப் பொருள். தாய்போல் பேசி என்றால் தாய் தன் சொற்களில் காட்டும் பரிவைக் கலந்து பேசி என்பதே பொருளாகும். பெண்மையின் உச்சம் தாய்மை. பெண்மை சிறப்படைவது தாய்மையால். தாய்மையன்றிப் பெண்மையில்லை. தாய்மையடையாத பெண்மை பெருமைக்குரியதாகாது. தாய்மை பரநலத்தின் அடையாளம். இந்தப் பண்பைப் புதிய வரவான மனைவியிடத்தும் ஒருவன் எதிர்பார்க்கிறான். தலைவன் எதிர்பார்க்கும் இந்த உணர்வை நன்கு புரிந்து கொண்ட காமக்கிழத்தி என்னும் உறவுடையாள் ஊடல் காரணமாகப் புலந்து நிற்கும் தலைவியைத் தலைவனோடு சேர்த்து வைக்கும்  கடமையைச் செய்கிறாள்.

    “காதற்சோர்வில் கடப்பாட்டு ஆண்மையின்
    தாய்போல் கழறித் தழீஇய மனைவியைக்
    காய்வின்று அவன் வயின் பொருத்தற்கண்ணும்”

    என்பது தொல்காப்பிய நூற்பாவாகும். காமக்கிழத்தியின் கூற்றுச் சூழலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தாயன்பு பற்றிய இந்த உவமத்தைத்,

    “தாய்போல் கழறித் தழீஇக் கோடல்
    ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப”

    என்னும் நூற்பாவிலும் உவமமாக்கியிருக்கிறார் தொல்காப்பியர்.  உரையாசிரியப் பெருமக்கள் இந்த இரண்டு நூற்பாக்களையும் மாட்டேற்றாகக் கொள்வர். இதனால் காமக்கிழத்தியாயினும் மனைவியேயாயினும் எல்லா நேரங்களிலும் காமக்குறிப்பே வெளிப்பட நிற்பர் என்னும் கற்பனை பொய்த்தும் அவ்விருவரும் அன்பில் தலைமகனுடைய தாயன்பை வெளிப்படுத்தியே நிற்பர் என்பதும் பெறப்படும். படவே தாயன்பு உறவுநிலை மாறியும் நிற்கும் என்பதும் தலைவனுக்கும் காமக்கிழத்தி, மனைவி என்னும் உறவுகளுக்கும் இடையில் நிலவும் அன்பு தாயன்பின் கலப்பே என்பதும் அனுமானிக்கப்படும்.

    உண்மையான நட்பு உள்ளமே

    உலகியல் சார்ந்த உதவிகளை ‘ஒப்புரவறிதல்’ என்றும் அறப்பயன் நோக்கிய உதவிகளை ‘ஈகை’ என்றும் திருவள்ளுவர் ஆராய்வார். ‘பொருளெல்லாம் வேளாண்மை செய்தற்பொருட்டு’ என்பதனாலும் ‘ஒன்று ஈவதே ஈகை’ என்பதனாலும் அவ்விரண்டு அறங்களும் பொருளைக் கருவியாக உடையவை என்பது  பெறப்படும். அருவப் பொருளால் அவ்வறங்களைச் செய்ய இயலாது. தொல்காப்பியம் அருவப் பொருளால் உதவி செய்யலாம் என்று தெளிவாக்குகிறது. உதவும் இந்த அருவப்பொருளை அவர் ‘உள்ளம்’ என்று குறிப்பிடுகிறார். தொல்காப்பியரின் இந்தக் கருத்தினைத் திருவள்ளுவர் ‘ஊக்கமுடைமை’ என்று செல்வமாக்குகிறார். ‘உதவி எதுபோல அல்லது ‘யார் செய்வது போல’ என்றால் பொதுவாகப் பாரியைத்தான் சொல்வார்கள். தொல்காப்பியமோ ‘உள்ளம் போல’ உதவ வேண்டும் என்று கூறுகிறது.

    “உள்ளம் போல உற்றுழி உதவும்
    புள்ளியல் கலிமா உண்மை யான”

    என்னும் நூற்பா பொருள்வயிற் பிரிந்த தலைமகன் மீண்டுவரும் சூழலை விவரிக்கிறது. தலைவியைப் பிரிந்த தலைவன் மீள்வது நெடிய சுரமாயினும் தலைவியை வழிநடைச் சோர்வு ஆங்காங்கே தங்கி மீளுமாறு புலனெறிவழக்கம் செய்யும் வழக்கம் தமிழில் இல்லை. ஆதலின் தலைவியைக் காணச்செல்லும் அவன் உள்ளத்தின் வேகம் போலத் தாவிச்செல்லும் (பறந்து செல்லும்) பறவையை ஒத்த குதிரை இருப்பதால் அவன் எவ்விடத்தும் தங்காமல் தலைவியை வந்தடைவான் என்பது கருத்து. இந்த உவமத்தால் தலைவியை உடனே காண வேண்டுமென்றால் மனக்கண்ணில கொண்டு காணுதற்கு உதவும் உள்ளத்தைப்போலத் தலைவன் சென்று மீளும் குதிரை விரைவினையுடையது என்பது விளக்கப்பட்டது. உள்ளம் என்னும் அருவப் பொருளும் உதவும் என்பது தொல்காப்பியப் புதுமை.

    நிறைவுரை

    மேற்கூறிய சில கருத்துக்களால் பொருண்மையை விளக்குதற்கு அகத்திணை, புறத்திணை மற்றும் பொருளியல் ஆகியனவற்றில் உவமங்கள் பன்படுத்தப்பட்டுள்ள பாங்கு ஓரளவு புலனாகலாம். வினை, பயன், மெய், உரு என்னும் நான்கனுக்கும் பருப்பொருள் மட்டுமேயன்றி நுண்பொருளும் உவமமாக்கப்படலாம் என்னும் கருத்தும் பெறப்படும். இலக்கணத்தை இலக்கியமாக்கும் முயற்சி தொல்காப்பியத்திலேயே தொடங்கிவிடுகிறது என்பதை இதனால் உணரமுடியும். தொல்காப்பிய உவமத்துள் பேராண்மை சார்ந்ததொரு உவமம் அடுத்த கட்டுரையில் விளக்கப்படும்.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 8

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 8

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தொல்காப்பியப் பொருளதிகார உவமங்கள் (1)

    முன்னுரை

    தொல்காப்பியத்தில் உவமம், சங்க இலக்கியங்களில் உவமம், பிற்கால இலக்கியங்களில் உவமம் என்பன தனித்தனி ஆய்வுக்கு உட்பட்ட பொருண்மை என்பது இக்கட்டுரையாளர் கருத்து. ‘கவிதையில் உவமம்’ என்பது செய்யுளியலில் குறிப்பிடப்படாத காரணத்தால் தொல்காப்பிய உவமவியலின் உள்ளடக்கம் சாதாரண உவம ஆய்வினின்றும் வேறுபடுகிறது. தலைமக்களின் கூற்றுப் பகுதியாக இருந்த உவமக் கோட்பாடு கவிதையில் கருத்து விளக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுவதைச் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. அவ்விரண்டு காலக்கட்டத்திற்குப் பிறகுதான் ‘உவமம்’ என்பது கவிதையின் அழகுக் கூறுகளுள் ஒன்றாகக் கருதப்படத் தொடங்கியிருக்கிறது. காட்சிகளையும் பொருட்களையும் உவமத்தின் வாயிலாகச் சித்திரிக்கும் போக்கு பல்கிப் பெருகியதும் இக்காலத்தில்தான் எனக் கருதலாம். இந்தப் பின்புலத்தில் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் தலைமக்களின் கூற்றுப் பகுதிகளில் இடம்பெறும் உவமங்களைப் பற்றிய சுருக்க ஆய்வு இக்கட்டுரையில் முன்னெடுக்கப்படுகிறது.

    பச்சைப் பானையில் கசிந்த காதல்

    அகப்பொருள் இலக்கணத்தில் தலைவன் தான் கொண்டுள்ள அன்பைத் தலைவியினிடத்து ஆண்மை தோன்ற வெளிப்படுத்துவான்.  தலைமகள் அவ்வாறு பெண்மை தோன்ற வெளிப்படுத்துவது மரபன்று. அதாவது ஆண்மை முற்றும் வெளிப்பட்டும் பெண்மை குறிப்பாக வெளிப்பட்டும் நிற்பதுமே தமிழ் மரபு. அவ்வாறாயின் தலைமகள் தலைவன் மீது தான்கொண்ட உள்ளத்துக் காதலை வெளிப்படுத்தும் பாங்கு எத்தகையது என்னும் ஐயத்திற்குத் தொல்காப்பியம் ஓர் உவமத்தால் விளக்கம் தருகிறது.

    “தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல்
    எண்ணுங் காலை கிழத்திக் கில்லைப்
    பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்
    பெய்ந்நீர் போலும் உணர்விற்று என்ப”

    மேற்கண்ட நூற்பாவில் ‘தலைவன் அறிந்து கொள்ளுமாறு புதுக்கலத்துப் பெய்த நீர் புறத்தே பொசிந்து காட்டுதல் போலப் புலப்படும்’ என உவமையால் புலப்படுத்துவதைக் காணலாம். ‘பிறநீர்  மாக்கள்’ என்பது கைக்கிளை, பெருந்திணை மாந்தர்களை அவர்கள்  அகத்திணைத் தலைமை மாந்தர்களைப் போலன்றித் தம் உள்ளத்துக் காதலை ஒருவர் அறிய மற்றொருவர் வெளிப்படக் கூறிக்கொள்வர் என்பதனால் ‘பிற நீர் மாக்கள்’ எனக் குறிக்கப்பட்டனர்.

    ‘பெய்ந்நீர் போலும்’ என்றே உவமம் பயின்றிருக்க உரையாசிரியர் பலரும் உவமப்பகுதியின் பொருளுணர்ந்து ‘புதுக்கலம்’ என உவமத்தின் உண்மை கண்டு அடைபுணர்த்து உரைத்திருப்பதும், இந்தப் புதுக்கலத்து உண்மையைத் திருவள்ளுவர் ‘பசுமட்கலத்துள் நீர் பெய்திரீஇயற்று’ எனப் பொருள் தழுவி வழிமொழிந்திருப்பதும் அறிந்து சுவைத்தற்குரியன.

    நீரில் எழுதிய எழுத்தா? அந்தரத்தில் எழுதிய எழுத்தா?

    ‘செய்கின்ற நன்மையைப் பண்பறிந்து ஆற்றாதபோது அந்நன்றாற்றலுள்ளும் தவறு ஏற்பட வாய்ப்புண்டு’ என்பது வள்ளுவம். இந்த வள்ளுவம் ஔவை எழுதிய மூதுரையில்,

    “நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
    கல்மேல் எழுத்துப் போல் காணுமே அல்லாத
    ஈரமிலா நெஞ்சினார்க்கு ஈந்த உபகாரம்
    நீர் மேல் எழுத்துக்கு நேர்”

    என்றவாறு வெளிப்படுகிறது. இந்தப்பாட்டில் யாருக்கு உதவ வேண்டும் என்பதும் யாருக்கு உதவக்கூடாது என்பதோடு அவற்றின் பின்விளைவுகளையும் அறிந்து கொள்ள முடிகிறது. உதவி, செயப்பட்டார் சால்பின் வரைத்ததாதலின் நல்லார்க்குச் செய்த உதவி காலத்துக்கும் நிலைத்து நிற்கும் என்பதும் சால்பாகிய இரக்கமிலா அரக்கர்களுக்குச் செய்த உதவி நீரில் எழுதிய எழுத்தாக எழுதுங்காலே மறைந்துவரும் என்பதும் ஔவயார் வாக்கு. நிலையாமைக்கு ஔவை கூறிய இந்த உவமத்தின் மூலம் தொல்காப்பியத்தில் இருப்பதை அறிய முடிகிறது. ஔவை எழுதுவதற்கு நீரைத் தளமாக்குகிறார். தொல்காப்பியரோ அந்தரத்தைத் தளமாக்கி ‘அந்தரத்தில் எழுதிய எழுத்து’ என்கிறார்.

    பெற்றோரைவிட்டும் சுற்றத்தைவிட்டும் தலைவன் மனை அடைந்த தலைவி, பழக்கம் காரணமாகச் சில நேர்வுகளில் பிழைசெய்தல் கூடும். தன்னுடைய பெற்றோரிடத்தும் தன்னிடத்தும் தலைவி ஒழுகும் முறையில் காணும் பிழைகள் தலைவனுடைய கருத்தில் வைக்கத்தக்கன அல்ல., அவை உடன் மறக்கத்தக்கன என அறிவுறுத்தும் நிலையில் தலைவனின் கூற்றுப் பகுதியை விளக்க வரும் தொல்காப்பியம், தலைவி செய்த தவறுகளைத் தலைவன் மறக்க வேண்டிய பாங்கினை ஓர் உவமத்தின் வழி உணர்த்துவதைக் காணமுடிகிறது.

    “அந்தரத்து எழுதிய எழுத்தின் மான
    வந்த குற்றம் வழிகெட ஒழுகலும்”

    ‘களவுக்காலத்து ஒழுகிய ஒழுக்கக் குறைபாட்டால் நிகழ்ந்த குற்றம் ஆகாயத்தில் எழுதிய எழுத்துப்போல் மறைந்து போகும்’ என்பது மேற்கண்ட தொல்காப்பியத்தில் கண்ட உவமத்திற்கான பொருளாம். உலக வழக்கில் ஒரு சொலவடை உண்டு. அரிசி களைகிறபோது உண்டாகின்ற சினம் சோறு கொதிக்கிற போது மாறிவிடும்’ என்பார்கள். இல்லறம் என்பது மாறிபுக்க இதயங்களின் ஒன்றிணைந்த வினையாதலின் செய்கின்ற தவறுகள் மனத்துட் பதியவே கூடாது என்பது தொல்காப்பியம். ஒருவர் செய்த தவறினை மற்றொருவர் தன் உள்ளத்து  வைத்திருந்து மறப்பதற்கும் உள்ளத்துட் புகாமல் விடுவதற்குமான இடைவெளியே இல்லறத்தின் வெற்றிக்களமாகும். இந்த நுட்பம் அறிந்தே தொல்காப்பியர் ‘அந்தரத்து எழுதிய எழுத்து’ என்கிறார்.

    கஞ்சி அமுதமான கதை

    ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்பது தெரிந்த வழக்கு.  உண்டியால் புரக்கப்பட்ட உயிர் இறவாது நிற்பதற்குக் காரணம் அது அமிழ்தாவதே. ‘அமிழ்து’ என்பது சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. ‘உறுதொறும் உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள்’ என்பது வள்ளுவம். அமிழ்தைக் கருவியாக்கிய அது, மழலை அளாவிய கூழை அமிழ்தினும் உயர்த்திச் சொல்கிறது. ‘அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்’ என்பது திருவள்ளுவரின் ஒப்பீட்டுப் பார்வை. இதனையொத்த அமிழ்து பற்றிய கருத்துக்கள் ஆயிரம். விரித்துரைக்க இயலாது. இந்த அமிழ்தத்தைத் தன் மனைவி கையால் சமைத்த உணவோடு ஒப்பிடுகிறான் தொல்காப்பியத் தலைவன்.

    “ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது
    வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென
    அடிசிலும் பூவும் தொடுதற் கண்ணும்”’

    என்பது அவன் கூற்று. சுவைக்க ஒன்னாதவற்றைச் சுவைக்கச் செய்தது அவள் கையறி மடமையாதலின் அவள் கைபட்டதால் அமிழ்தமானது என்பது கருத்து. இது காதல் உணர்வின் வெளிப்பாடே என்பது,

    “வேம்பின் பைங்காய் என் தோழி தரினே
    தேம்பூங்கட்டி என்றனிர்’

    என்னும் குறுந்தொகை தோழி கூற்றானும் அறிந்து கொள்ளலாம். வேம்பு இனிப்பதற்கும் கூழ் அமிழ்தாவதற்கும் தலைவிமேல் தலைவன் வைத்த மாறா அன்பும் தீராக் காதலுமே காரணம். உணவுக்கு அமிழ்தத்தை உவமமாக்குவது என்பது தமிழின் மரபியல் சார்ந்த உவமக் கோட்பாடு என்பது தெளிவாகலாம்.

    நிறைவுரை

    அகத்திணை மாந்தர்களின் கூற்றுப் பகுதியில் இடம்பெற்ற உவமம் முதலியன கவிதைக்கு அணியாக வளர்நிலை பெற்றது ஒரு மொழியில்  படைப்பிலக்கிய வரலாற்றில் பரிணாம வளர்ச்சியாகவே கருதப்படலாம். அகத்திணை மாந்தர்களும் அவ்வுவமத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்குத் தொல்காப்பியம் பல வரையறைகளை வகுத்துக் காட்டுகிறது. அந்த வகையில் தலைமகன் கூற்றுப்பகுதியில் தலைமகளின் தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் இல்லற மாண்புகளைப் பாராட்டுகிற சூழலில் பயன்படுத்திய சில உவமங்களை இக்கட்டுரை விளக்கியிருக்கிறது.  பொருளதிகாரத்தில் காணப்படும் வேறு சில உவமங்களைத் தொடர்ந்து காணலாம்.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 7

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 7

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண விளக்கமும் உவமமும்

    முன்னுரை

    பொதுவாக ‘உவமம்’ என்பது இலக்கியம் சார்ந்தது. அதற்கேயுரியது. வண்ணனைச் செய்யப்படும் பொருளை அல்லது விளக்கப்படும் கருத்துகளைக் கூடுதல் கவர்ச்சியோடும் தெளிவோடும் அழகோடும் புரிந்துகொள்வதற்காகப் படைப்பாளனால் ஒப்புமை செய்து காட்டப்படுவதே உவமம். ஆனால் தமிழியல் வரலாற்றில் முற்றிலும் மாறான நிலையில் இந்த உவமத்தைப் பயன்படுத்தியிருப்பதை அறியமுடிகிறது. இலக்கண நுட்பங்களைக் கற்பித்தலுக்கான கருவிகளில் ஒன்றாக இந்த உவமமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருவகையில் பொருள் விளக்கம் எனக் கருதப்படலாம். ஆனால் பொருள் விளக்கம் என்பது ‘அகர முதல எழுத்தெல்லாம்’, ‘வெள்ளத்தனைய மலர்நீட்டம்’ என்பன போல அமையும். இலக்கண விளக்கத்திற்காக உவமத்தைப் பயன்படுத்துவது நுண்ணியது. அரியது. உலகத்தின் வேறு எந்த மொழிகளிலாவது இவ்வாறு அமைந்துள்ளதா என்பது ஆய்வுக்குரியது. இந்தப் பின்புலத்தில் இலக்கண விளக்கத்தில் உவமத்தின் பங்களிப்பை இந்தப் பகுதி சுருக்கமாக ஆராய்கிறது.

    இலக்கண நூல்களில் உவமப் பயன்பாடு

    இலக்கண நூல்களில் உவமப் பயன்பாடு இருவகையில் அமைந்திருப்பதை அறியமுடிகிறது.

    1. தொடர்புடைய இலக்கண நூலிலேயே நூற்பாவின் கருத்தை விளக்குதற்கு நூலாசிரியரே உவமையைப் பயன்படுத்துதல்.
    1. நூற்பாவின் கருத்தை விளக்க உரையாசிரியர்கள் உவமையைப் பயன்படுத்துதல்.

    தெளிவுக்குத் தொல்காப்பியம் காட்டும் உவமம்

    மகாகவி பாரதி அறிவைச் சுட்டுகிற பொழுதெல்லாம் தெளிவை முன்னிறுத்துவது இயல்பு. ‘பாரதி கவிதைகள்’பெற்ற வெற்றிக்கு இந்தத் தெளிவின் பங்கு ‘செம்பாகம் அன்று., பெரிது. பாரதியின் பெயரை முன்னிறுத்திக் கொள்ளும் கவிஞர் பலரால் எழுதப்படும் கவிதைகள் புரியாத மொழியில் அமைந்திருக்கின்றன என்பது தனி ஆய்வுக்குரியது.“தெளிவு பெற்ற மதியினாய்”  “தெள்ளிய ஞானப் பெருஞ்செல்வமே”, “தெளிவுறு அறிவினை”, “சிந்தை தெளிவாக்கு”, “தெளிந்த நல் அறிவு வேண்டும்”, “மூடச் சித்தமும் தெளிவுறச் செய்தாள்”, “சிந்தனை தெளிந்தோம்”, “நல்ல தெள்ளறிவு”, “சித்தத் தெளிவெனும் தீயின் முன்”, “சித்தந் தெளியும்”, “அறிவு தெளிந்திடும்”, “அறிவிலே தெளிவு”  என்றெல்லாம் தெளிவை முன்னிறுத்தும் பாரதியின் இலக்கியப் போக்கு, தொல்காப்பியத்திலேயே தொடங்கிவிடுகிறது. இந்தத் தெளிவுக்குத் தொல்காப்பியம் ஆடியை உவமமாக்கியிருப்பதை அறியமுடிகிறது.

    “அவற்றுள்
    ஆடி நிழலின் அறியத் தோன்றி
    நாடுதல் இன்றிப் பொருள்நனி விளங்க
    யாப்பினுட் தோன்ற யாத்தமைப் பதுவே”

    என்னும் நூற்பாவில் தெளிவுக்கு ஆடியை உவமிக்கும் தொல்காப்பியம், ஆடியின் பண்புகளாக,

    1. நாடுதல் இன்மை
    2. பொருள் நனி விளங்குதல்

    என்னும் இரண்டினைச் சுட்டி அவ்விரு பண்புகளும் சூத்திரங்களில் அமைதல் வேண்டும் என்பதை விளக்கிக் காட்டுகிறது. ஆடியின் தெளிவைத் தெய்வப் புலமைத் திருவள்ளுவர்  ‘அடுத்தது காட்டும் பளிங்குபோல்’என முகத்திற்கு உவமமாக்குவது ஈண்டு ஒப்பிடத்தகுந்தது.

    இனமான மணிகள் இணைந்து நிற்கும் ஓத்து

    சூத்திரம், ஓத்து, படலம், பிண்டம் எனத் தொல்காப்பியர் நூல்வகைகளை நான்காகப் பகுப்பர். அவற்றுள் ஓத்தின் இயல்பு கூற வந்தவர்,

    “நேரின  மணியை நிரல்பட வைத்தாங்கு
    ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது
    ஓத்தென மொழிப உயர்மொழிப் புலவர்”

    என்னும் நூற்பாவில் உவமத்தால் விளக்கிக் காட்டுவதை அறியமுடிகிறது. இந்நூற்பாவில் ‘நேர், ‘இனம்’ஆகிய இரு சொற்களும் உவமத்தின் பொருள் புலப்பாட்டுத் திறனுக்குப் பேருதவி செய்வனவாம். அளவாலும் தரத்தாலும் ஒத்திருக்கும் மணிகளைக் கோத்து ஆரம் அமைப்பதுபோல, ஒன்றற்கொன்று இயைபுடைய பொருள்களை நிரல்படக் கோத்தமைப்பதே ‘ஓத்து’என்பது இந்நூற்பாவின் உள்ளடக்கமாகும்.

    மேலெழுந்தவாரியாக நோக்குவார்க்குச் சூத்திரமும் ஓத்தும் ஒன்று போலத் தோன்றிடினும், முன்னதற்குத் தெளிவையும், பின்னதற்கு அளவு, தன்மை ஆகியவற்றையும் இயல்புகளாக்கித் தொல்காப்பியம் அவற்றிடையே அமைந்த வேறுபாடு காட்டுவது உணரத்தக்கது. தொல்காப்பியத்தை முதனூலாகக் கொண்டு வழிநூல் செய்த பவணந்தியார் இந்நூற்பாவில் (நன்னூல் 16) எத்தகைய மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் கையாளுவதற்கு மேற்கண்ட உவமத்தின் பொருள் புலப்பாட்டுத் திறனே காரணமாக இருத்தல் கூடும். நூன்மரபும் மொழிமரபும் எழுத்திலக்கணமேயானாலும், எழுத்தின் தனிப்பண்புகளை ஆராயும் நூன்மரபை ஒரு தொகுப்பாகவும், மொழியிடை நிற்கும் அதன் மற்றொரு இயல்பை ஆராயும் மொழிமரபை மற்றொரு தொகுப்பாகவும்; தனித்தனி ஓத்துக்களாகப் பிரித்தமைத்திருப்பது ‘ஓத்து’என்பதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டாகலாம்.

    நன்னூலுள் உவமங்கள்

    ‘நூல்’என்பதற்குப் பயனடிப்படையில் தாம் தரும் பொருள் வரையறையைத் தொழில் சார்ந்ததோர் உவமத்தின் துணையால் நன்னூலாசிரியர் பவணந்தியார் அளித்திருப்பதை அறியமுடிகிறது.

    “உரத்தின் வளம்பெருக்கி உள்ளிய தீமை
    புரத்தின் வளமுருக்கிப் பொல்லா – மரத்தின்
    கனக்கோட்டம் தீர்க்கும் நூல் அஃதே போல் மாந்தர்
    மனக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு”

    மரத்தின் கோணல்களை நூல் தீர்ப்பதுபோல் மனத்தின் கோணல்களை நூல் தீர்க்க வேண்டும்’என்பது மேற்கண்ட நேரிசை வெண்பாவின் கருத்து. ‘மனக்கோட்டம் தீர்ப்பதே நூல்’என்பது பொருள் வரையறை. இலக்கண நூலாசிரியர் ஒருவர் தச்சுத் தொழில் தொடர்பானதோர் உவமத்தைத் தம் கருத்து விளக்கத்திற்குப் பயன்படுத்தியிருப்பது சிந்தனைக்குரியது. இதனைப் போலவே, சூத்திரத்தின் இயல்புக்கு வரையறை கூறும் நன்னூல்,

    “சில்வகை எழுத்திற் பல்வகைப் பொருளைச்
    செவ்வன் ஆடியிற் செறித்தினிது விளக்கித்
    திட்பம் நுட்பம் சிறந்தன சூத்திரம்”

    எனத் தொல்காப்பியத்தைப் போலவே ஆடியைத் துணைக்கழைத்திருப்பதைக் காணமுடிகிறது. தொல்காப்பியம் தெளிவுக்கு ஆடியைப் பயன்படுத்திக் கொண்டிருக்க, நன்னூல் அதனோடு திட்பத்திற்கும் நுட்பத்திற்கும் பயன்படுத்திக் கொண்டிருப்பது நோக்கத்தக்கது. எனவே ‘ஆடி’என்னும் உவமம், தெளிவு, செறிவு, இனிமை, நுட்பம் முதலிய  பல்வகைப் பண்புகளுக்கும் களனாகிறது எனலாம்.

    அமிதசாகரரும் அம்போதரங்க உறுப்பும்.

    தொல்காப்பியமும் நன்னூலும் தாம் கூறவந்த கருத்துக்களை விளக்குதற்கு  நூற்பாக்களில் உவமைகளைப் பயன்படுத்தியுள்ளதைப் போலவே யாப்பருங்கலக்காரிகையுள்ளும் யாப்பு பற்றிய கருத்துக்களைத் தெளிவுறுத்த உவமத்தைப் பயன்படுத்தியுள்ளமை அறியமுடிகிறது. முன்னவற்றில் ஆங்காங்கே உவமை பயன்பட்டிருப்பதைப் போலல்லாது, காரிகையில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே இலக்கண விளக்கத்திற்கு உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது. நால்வகைப் பாக்களில் ஒன்றான கலிப்பா, ஒத்தாழிசைக்கலிப்பா, வெண்கலிப்பா, கொச்சகக்கலிப்பா என மூன்று பிரிவாகும். அவற்றுள் ஒத்தாழிசைக் கலிப்பா, நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா என மூன்று தன்மையனவாக அமைகின்றன. இவற்றுள் அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவைப் பற்றி இலக்கணம் கூறவந்த காரிகையாசிரியர் அதில் அமைந்துள்ள அம்போதரங்க உறுப்பை விளக்க எண்ணுகிறார். தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் நான்கு உறுப்புக்கள் நிரல்பட அமையும் நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவினின்று ‘அம்போதரங்கம்’ என்னும் ஓருறுப்பால் வேறுபடுவதே அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா ஆகும்.  தாழிசைக்கும் தனிச்சொற்கும் நடுவே அம்போதரங்க உறுப்பு வந்து, ‘தரவு, தாழிசை, அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம்’என்னுமாறு ஐந்து உறுப்புக்களால் அமைந்தால் அது ’அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா’எனப் பெயர் பெறும். இவ்வம்போதரங்க உறுப்பு எவ்வாறு அமையும் என்பதைக் கூற வந்த காரிகை,

    “நீர்த்திரைபோல் மரபொன்று நேரடி, முச்சீர் குறள் நடுவே மடுப்பின்
    …………………………………………..அம்போதரங்க ஒத்தாழிசையே”

    ‘அம்போதரங்க’ உறுப்பு என்பது இருசீர் அடிகளாலும், முச்சீர் அடிகளாலும், நாற்சீர் அடிகளாலும் அமையப்பெறும். இரண்டு, மூன்று, நான்கு என்னும் சீர்வரிசைகளில் அமையும் அவற்றை நோக்க, நீர்நிலையில் கல்லெறிந்தால் எழும் நீரலை, கல் விழுந்த ஒரு குறிப்பிட்ட மையப் புள்ளியிலிருந்து சிறிது சிறிதாக விரிந்து சென்று கரைந்துவிடுவதைப் போல இருப்பதாகக் காரிகை ஆசிரியர் உவமம் கூறுகிறார். இவ்வடிகளுக்குக்,

    “கரைசாரக் கரைசார ஒருகாலைக் கொருகாற்
    சுருங்கி வருகின்ற நீர்த்தரங்கம்போல”

    என உரையாசிரியர் குணசாகரர் எழுதிக்காட்டும் உரையும் ஈண்டுச் சுட்டற்பாலது.

    நிறைவுரை

    இதுகாறும் கூறியவாற்றால் உவமம் இலக்கியத்துள் அழகியல் உணர்வை மிகுவிக்கும் பகுதி என்பதும் கருத்து விளக்கத்தில் அதன் பங்களிப்பு இலக்கியம், இலக்கணம் ஆகிய இரண்டினுள்ளும் விரவியிருக்கிறது என்பதும் அதுவும் நூலாசிரியர் உரையாசிரியர் என்னும் இருவர் திறத்தன என்பதும் தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை ஆகிய இலக்கண நூல்களுள் தொடர்புடைய இலக்கண விளக்கத்திற்காக எளிய அழகிய உவமங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதும் அறியலாகும். தொல்காப்பிய இலக்கணத்துள் எழுத்து, சொல் ஆகிய இரண்டு அதிகாரங்களில் இலக்கண விளக்கத்திற்காக உவமப் பயன்பாடு இல்லாத நிலையில் பொருளதிகாரத்தில் அதன் பங்களிப்பு அடுத்த தலைப்பில் ஆராயப்படும்.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 6

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 6

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமம் பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள்

    முன்னுரை

    ஒரு கவிதையை உணர்ச்சி வழிச் சுவைக்கலாம். கருத்து வழி உணரலாம். வடிவத்தின்வழி மனத்திருத்தலாம். கற்பனை வழி இரசிக்கலாம். இவை  அனைத்திலும் வெளிப்பட்டு நிற்கும் உத்திதான் ஒரு கவிதையை வெற்றிபெறச் செய்கிறது. அதாவது கற்பார் மனத்து நிலைத்து நிற்கக் காரணமாகிறது. உவமம் பொருள்விளக்கப் பகுதியாக இருந்தாலும் கவிதையின் அழகுக் கூறாக இருந்தாலும் அதன்வழி ஒரு கவிதை சுவைக்கப்படுவதையே இக்கட்டுரைகள் முன்னெடுகின்றன. கவிதைச் சுவை என்பது அலங்காரச் சொற்கள் அல்ல. முரண்பட்ட ஒலிகள் அல்ல. புரிந்து கொளள்ள முடியாத கருத்துக்கள் அல்ல. பொருந்தாத வடிவம் அல்ல. உவமத்தின் வழியும் ஒரு கவிதை சுவைக்கப்பட வேண்டும். இதுதான் தமிழ்க்கவிதைகளின் உவமப் பயன்பாட்டின் தலையாய குறிக்கோள் ஆகும். எனவே அது பற்றிய அறிஞர்களின் கருத்துக்களை இந்தப்பகுதி முன்னெடுப்பதாக அமைகிறது.

    அணியிலக்கணத்தினால் அடைந்த பயன்

    அணிகள் செய்யுளில் அமையும் கற்பனைகளின் பல்வேறு அழகுகளாகும். அந்த அழகுகளைப் பொதுவாகப் பாகுபாடு செய்தால் போதும். தொல்காப்பியர் அந்த அளவிற்குத்தான் விளக்கம் தந்தார். உவமை, உள்ளுறை உவமை, இறைச்சி என்பவற்றை அவர் விளக்கியிருத்தல் பயனுள்ளதாகும். ஆனால் பிற்கால அணியிலக்கண ஆசிரியர்கள் அணிகளை முப்பத்தைந்தாகவும் அறுபதாகவும் நூறாகவும் அவற்றின் பல்வேறு உட்பிரிவுகளாகவும் பகுத்துப் பெருக்கியுள்ளனர். தண்டியலங்கார ஆசிரியர் முப்பத்தைந்து அணிகளைக் கூறியுள்ளார். இந்த முப்பத்தைந்துள் ஒன்றான உவமையணியை நாற்பதாக்கிக் காட்டியுள்ளார். உவமத்தின் செறிவாகிய உருவகத்தை இருபத்தொன்றாக வகுத்துள்ளார். ஓர்  அணி மற்றோர் அணியுடன் கலந்து வரும் கலப்பு வகைகளை விரிவாகக் கூறியுள்ளார். முன்னவிலக்கணி பதினேழு வகை, வேற்றுப்பொருள் வைப்பணி எட்டு வகை, வேற்றுமையணி பத்துவகை என இவ்வாறே பல அணிகளின் உட்பிரிவுகளையெல்லாம் ஓதியுள்ளார். இவ்வாறு ஓதப்பட்ட முப்பத்தைந்து அணிகள் அல்லாமல் மடக்கு என்னும் சொல்லலங்கார வகைகளையும் பல்வகைச் சித்திரக் கவிகளையும் விளக்கிக் காட்டியுள்ளார். இவ்வாறே மற்ற அணியிலக்கண ஆசிரியரும் விரித்துரைத்துள்ளனர். இவ்வளவு விரிவாக இவர்கள் ஓதியுள்ள அணியிலக்கணத்தைக் கற்பதால் பெறும் பயனோ மிகச் சிறிதாக உள்ளது.

    வடமொழியில் அமைந்த அலங்கார நூல்களைக் கண்மூடி மொழிபெயர்த்துப் போற்ற தொடங்கியதன் விளைவு இது. வடமொழி கற்ற இடைக்காலப் புலவர் சிலர் தமிழ் இலக்கிய மரபை மறந்தும் தொல்காப்பியர் தம் பண்பட்ட நெறியைப் புறக்கணித்தும் வடமொழி நூல்களை ஆய்ந்துணராமல் அப்படியே தமிழில் தர முயன்றனர். அம்முயற்சி வேகத்தால் எழுந்த அணியிலக்கண நூல்களால் பெரும்பயன் விளையவில்லை.”

    என்னும் பாலசுந்தரனார் கருத்து மிகச்சிறந்த ஆய்வுண்மையை உரைப்பதாக அமையும் பாங்கு உணரத்தக்கது.

    வேண்டாத அணிநூலர் காட்டிய விரும்பாத பாதை

    தொல்காப்பிய ‘இறைச்சி’ என்பது வடமொழியில் ‘தொனி’ என்பதனோடு ஓரளவு ஒத்துப் போகும் இயல்புடையது. வடமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்திய புலவர்கள் இத்தொனியை இறைச்சியோடு ஒப்பிட்டுச் சிந்தித்து எழுதியிருப்பின் கொஞ்சம் பயன் விளைந்திருக்கும். மேலும் வடமொழியில் ‘ரசம்’ என்பதும் தொல்காப்பியர் சுட்டும் மெய்ப்பாடுகளும் ஓரளவு ஒப்புமை உடையன. தொல்காப்பியர் மெய்ப்பாடுகளின் பல்வகைகளையும் தெளிவாக விளக்கியிருக்கிறார். இடைக்காலத்தில் தமிழில் அணியிலக்கணம் செய்த புலவர் பெருமக்கள் மேலே சுட்டியவைகளையெல்லாம் விளக்கிக் காட்ட முயலாமல், அவற்றையெல்லாம் ‘சுவையணி’ எனப் புதிதாக ஓரணியை அமைத்து அவற்றை அதற்குள் அடைத்துக் காட்ட எத்தனித்தனர். இதனால் வடமொழியில் ‘ரசமும் தொனியும்’ அறிந்து மகிழ்வதைப் போலத் தமிழில் ‘மெய்ப்பாடும் இறைச்சியும்’ அறிந்து மகிழ்வதற்குரிய வாய்ப்பில்லாமல் போயிற்று.

    இன்று தமிழிலுள்ள அணிகளாலும் அணிபற்றிக் கூறும் பகுதிகளாலும் கருதிய பயன் விளையவில்லை எனலாம். தமிழில் அணியியல் சிறப்புற வளராமை மட்டுமன்றி வேண்டாத வகையில் வளர்ந்திருப்பது மகிழ்ச்சிக்குரியதன்று”.

    என்னும் அறிஞர் ஜெயராமனின் கருத்து வலுவான ஒன்றாகவே தெரிகிறது.

    உவமம் பற்றிய  டாக்டர் மு.வ. அவர்களின் கருத்து

    தனித்தன்மை மிக்க தமிழியல் ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்க இடம்பெற்ற மூதறிஞர் மு.வ. அவர்கள் பிற்கால அணியிலக்கணம் பற்றிய தமக்கே உரிய அடக்கத்துடனும் ஆனால் தெளிவு, உறுதி ஆகியவற்றுடன் கலந்து உரைக்கும் கீழ்க்கண்ட நடுநிலையான கருத்தைப் புறந்தள்ளுதல்  ஒல்லாது.

    தண்டியலங்காரம் முப்பத்தாறு அணிகளைக் கூறுகிறது. மாறனலங்காரம் அறுபத்து நான்கு அணிகளை எடுத்துரைக்கின்றது. குவலயாநந்தம் என்ற நூல் நூறு அணிகளைக் கூறுகிறது. ஆயினும் அவற்றுட் பல வேண்டாத விரிவுகளாக உள்ளன”.

    சங்க இலக்கியத்திலிருந்து தமிழின் மறுமலர்ச்சிக்கால இலக்கியம்வரைத் தடம் பதித்துச் சென்றவர் மூதறிஞர் மு.வ. ‘வேண்டாத விரிவுகள்’ என அணியிலக்கணத்தை அவர் சுட்டுவது பிற்கால அணிகளால் தமிழ்க்கவிதைகளின் அழகு பெரிதும் சீர்குலைவிற்கு ஆளாகியிருப்பதைக் குறிப்பாகச் சுட்டுவதாகக் கொள்ளலாம்.

    கலைஞரும் உவமமும்

    உவமத்தைப் பற்றிய இதுகாறும் ஆராயப்பட்ட மரபுசார்ந்த அறிஞர்களின் கருத்துக்களோடு இருபதாம் நூற்றாண்டின் தமிழிலக்கியப் படைப்புலகத்தின் பரிமாணத்தைத் தமது எழுதுகோலால் பெருக்கிக் காட்டியவரும், தமிழறிந்தவரையெல்லாம் தமக்கு எல்லையாக்கித், தமிழிலக்கியத்தின் எல்லா வடிவங்களையும் தமது ஆளுகைக்குள் உட்படுத்தியவருமான கலைஞர் அவர்களின் கருத்தையும் ஈண்டுச் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகலாம். கலைஞர் தாம் எழுதிய ‘தொல்காப்பியப் பூங்கா’ என்னும் வரையறைக்குட்பட்ட இலக்கண உரைநூலுள் உவமத்தைப் பற்றிய தமது கருத்தைத் தொல்காப்பிய நூற்பாவின் அடிப்படையில் பதிவு செய்திருப்பதை அறியமுடிகிறது.

    “வினை பயன் மெய் உரு என்ற நான்கே
    வகைபெற வந்த உவமத் தோற்றம்”

    என்னும் நூற்பாவிற்கு விளக்கவுரை தரும் கலைஞர்,

    “நூற்பாவில் ‘வகைபெற வந்த உவமத் தோற்றம்’ என்பதற்குப் பாகுபட வந்த உவமைக்கண்’ என்று பொருள். இவற்றில் பார்வைக்குப் புலனாகும் பொருள்களும் என்று ஒரு வகையும், அவ்வாறு அல்லாமல் அந்த உவமைகள் செவியினாலும் நாவினாலும் மூக்கினாலும் மெய்யினாலும் மனத்தினாலும் அறியக் கூடியவை என்று ஒரு வகையும் உண்டு.  மொத்தத்தில் பாகுபட வருதல் என்பதாவது ‘கண் முதலிய பொறிகளுக்குப் புலப்படுபவையும்’ ‘பொறிகளுக்குப் புலனாகாது ‘மனத்திற்குப் புலனாவனவும்’ என இருவகையாகும்.”

    எனக் குறிப்பிடுகிறார். ‘உவமம் உருவத்தாலும் அமையலாம்., உணரத்தக்கதாகவும் அமையலாம்’ என்பது மேற்படி நூற்பாவிற்குக் கலைஞர் தரும் விளக்கமாகும்.  இலக்கியப் படைப்பாளர் என்ற வகையில் மட்டுமல்லாமல் ஏறத்தாழ எழுபது ஆண்டுக் காலமாக அரசியலையே தமது தலைப்பணியாகக் கொண்டியங்கும் ஒருவர் சிந்தனையில் கூட, உவமம் பெற்றிருக்கும் உயர்ந்த இடத்தைச் சுட்டிக் காட்டுதற்காகவே இங்கே அவர்தம் கருத்து சுட்டப்பட்டது. இலக்கியத்தின் வடிவங்கள் எத்தகைய மாறுபாட்டுடன் அமைந்தாலும் ‘உவமம்’ எங்கும் எதிலும் தன் முத்திரையைப் பதித்துக் காட்டும் வல்லமையுடையது என்பதும் இதனால் புலனாகும் உண்மையாகும்.

    நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் தரும் அரிய விளக்கம்

    இவ்வாறு உவமம் பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள் பல்வேறாக அமைந்திருக்கும் நிலையில் முதுபெரும் தமிழ்ச்சான்றோரும் பெரும்புலவருமான நாவலர் ந.மு.வே. நாட்டார் அவர்கள் தந்திருக்கும் விளக்கம் ஈண்டுச் சுட்டத்தகுந்தது. பிறருடைய கருத்துக்களெல்லாம் உவமத்தைப் பொருட்பகுதி, அணிப்பகுதி என்ற இரண்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்க, நாட்டார் அவர்கள் அவற்றுடன் அளவையியலையும் (LOGIC) இணைத்துக் கொண்டு தந்திருக்கும் அரியதொரு விளக்கம் இவ்வாறு அமைகிறது.

    “உவமம்’ என்பது ஒன்று. அது பொருளிலக்கணத்தில் நிலைபெறும் இடமும் அணியிலக்கணத்துள் பெறுகிற இடமும் அளவை நூல்களில் பெறுமிடமும் வெவ்வேறானவை.’ இதனால் தமிழ்நூலார் பொருளிலக்கணத்தின் ஒருபகுதியாகக் கொள்ளும் உவமத்தை அணிநூலார் உவம அணியென்று கொண்டாங்கு, அளவைநூலார் உவம அளவை என்று கொண்டனர் என அறிக.”

    நாட்டார் அவர்களின் கருத்தடிப்படையில் பொருளிலக்கணம், அணியிலக்கணம், அளவைநூல் என முப்பெரும் களங்களில் உவமம் தனித்தனி இயல்பு கொண்டு செயல்படுவதாகக் கொள்ளலாம். இதனால் தொல்காப்பியத்தின் உவமவியலுக்கும் பிற்கால அணியிலக்கணத்தார் கூறும் உவமையணிக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்பதும், தொல்காப்பியம் பொருட்பகுதியாகவே உவமத்தைக் கருதியது என்பதும், அணியிலக்கணம் கண்டார் உவமையைச் செய்யுளுக்கு அணியாகக் கொண்டார் என்பதும் இவையிரண்டினின்றும் முற்றிலும் மாறுபட்டு அளவையியலில் அதன் பங்களிப்பு “காட்சி, அனுமானம், ஆகமம், உவமை, அருத்தாபத்தி, இன்மை”  என்னும் ஆறனுள் ஒன்றாகும் என்பதும் தெளிவாகலாம்.

    நிறைவுரை

    சென்ற சில பத்திகளில் தரவுகளின் அடிப்படையிலும் சான்றோர்  கருத்துக்களின் அடிப்படையிலும் உவமம் என்பது தனித்தமிழ் நெறி என்பதும் அதன் உள்ளீடுகளான ‘இறைச்சி உள்ளுறை’ முதலியன போதிய கவனம் பெறாது போனது என்பதும் விளக்கப்பட்டன. பொருட்பகுதி, செய்யுளணி, அளவை என்னும் முப்பரிமாணங்கள் உவமத்தின் இயங்குதளங்களாகச் செயல்பட்டிருக்கின்றன என்பதும் விளக்கப்பட்டது. கவிதைப் பொருளைச் சிறக்கச் செய்வதிலும் அதன் நிலைப்பேற்றிலும் உவமத்தின் பங்களிப்பைப் பற்றிய சிந்தனைகள் தொடரும்!

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 5

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 5

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தொல்காப்பியமும் தண்டியலங்காரமும்

    முன்னுரை

    ‘உவமம்’ என்பது தமிழ் இலக்கிய மற்றும் இலக்கண மரபுப்படி அகப்பொருள் மாந்தர்களின் கூற்றுப் பகுதியில் பயன்படுவது. அது தற்காலத்தைப் போலச் செய்யுளுக்கு அல்லது கவிதைக்கு அழகு சேர்க்கும் ஓர் உறுப்பு என்பது வடமொழி மரபு. இதற்கான சான்றுகள் முந்தைய கட்டுரைகளில் சுட்டப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தில் ‘அணி’ என்னும் சொல், ‘செய்யுளணி’ என்னும் பொருளில் அந்நூலின் எந்தவிடத்தும் ஆளப்படவில்லை. உவமவியலில் செய்யுளணி பற்றிய குறிப்பு ஏதும் காணப்படவில்லை. செய்யுளுறுப்புக்களில் ஒன்றாகவும் அது கூறப்படவில்லை. இந்த மூன்று கருத்துக்களும் தொல்காப்பியத்தை உற்று நோக்கிய அளவில் காணப்படும் வெகு இயல்பான உண்மைகள். இருந்தும் தொல்காப்பியம் அணியிலக்கணச் சிந்தனைகளை வெளிப்படுத்துகிற நூலெனவும் தொல்காப்பியருக்கு அணியிலக்கணச் சிந்தனை இருந்திருக்கிறது எனவும் கருதுகிற போக்கு, தமிழியல் ஆய்வுலகில் நிலவுகிறது.  இதுபற்றிய அறிஞர் சிலருடைய கருத்துக்களின் வன்மை மென்மைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    தொல்காப்பியத்துக்கு அணியிலக்கணம் உடன்பாடா?

    தொல்காப்பியம் ‘உவமவியல்’ என்னுந் தலைப்பில் அமைந்த இயலில் செய்யுளில் அமையும் அணி பற்றியே ஆராய்ந்திருக்கிறது. அவ்வியல் பல்வேறு வகையில் இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் உவமைகளின் வகைகளைப் பற்றிக் கூறுகிறது. உவமத்தைத் தவிர மற்ற அணிகள் ஏதும் தொல்காப்பியத்தில் காணப்படவில்லை. அதற்குக் காரணம், ஏனைய அணிகளின் அடிப்படைக் கூறுகள் எல்லாம் உவமையில் நிலவியதால் அவையெல்லாம் உவமத்தின் சிதறல்களாகவே கருதப்பட்டிருக்கலாம் அல்லது உவமையணி மட்டுமே தொல்காப்பியர் காலத்தில் பயன்பாட்டில் இருந்து, மற்ற அணிகள் வளர்ச்சிடையாமல் இருந்திருக்கலாம்.” என்னும் ஊகத்தின் அடிப்படையில் எழுந்திருக்கும் இத்தகைய கருத்துக்கள் பல்வேறு ஐயங்களை எழுப்ப வல்லனவாக அமைந்திருக்கின்றன. ஆதலால் பின்வரும் விளக்கம் பதிவு செய்யப்படுகிறது.

    1. உவமவியலில் செய்யுளணி பற்றிய குறிப்பு எந்த நூற்பாவில் அமைந்திருக்கிறது என மேற்சுட்டிய ஆய்வாளர் சுட்டவில்லை.
    2. உவமவியல் அகப்பொருள் மாந்தர்தம் கூற்றுப் பகுதியில் வினை, பயன், மெய், உரு என உவமம் தோன்றும் முறையும், சிறப்பு, நலன், காதல், வலி, கிழக்கிடும் பொருள் என அதன் நிலைக்களன்கள் பற்றி ஆராய்கிறதே அல்லாமல் தண்டியலங்காரத்தைப் போலப் பல்வகை உவமைகளைப் பற்றி ஆராயவே இல்லை என உறுதியாகக் கூற முடியும்.
    3. ‘உவமைகளின் வகை’ எனத் தொல்காப்பியம் கூறுகிறது என்றால், அவ்வகைகள் எவை என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை.
    4. ஏனைய அணிகளின் கூறுகள் எல்லாம் உவமத்துள் அடங்கியதாகக் கருதப்பட்டதே உவமம் மட்டும் கூறப்பட்டதற்கான காரணம் என்றால், அக்காரணம் தொல்காப்பியத்தில் பதிவு செய்யப்படாமல் போனதற்குக் காரணம் என்ன?
    5. மற்ற அணிகள் வளர்ச்சியடையாமல் போனதும் (other kinds of figures of speech had not been developed then) உவமையின் தனித்த பயன்பாட்டுக்குக் காரணமாயின் மற்ற அணிகள் வளர்ச்சியடையாமல் போனதற்கான காரணங்கள் என்ன என்பதை மேற்கண்ட பகுதியால் அறிந்து கொள்ளவியலவில்லை.
    6. உவமத்தைச் செய்யுளணியாகவும் உவமவியலை அணியிலக்கணம் கூறும் பகுதியாகவும் முன்னரே கருதி முடிவெடுத்துக் கொண்டு அவற்றையெல்லாம் உவமவியலில் தேடியும் காணவியலவில்லை என்பதெல்லாம் ஆய்வு நெறிக்கு ஏற்றதாகுமா என்பது சிந்தனைக்குரியது.

    தொல்காப்பிய உவமம் பற்றிய பாவாணர்தம் விளக்கம்

    “தொல்காப்பியத்திலும் தொன்னூல்களிலும் உவமை அணியிலக்கண  முறையில் கூறப்படாமல் பொருளிலக்கண முறையிலேயே கூறப்பட்டுள்ளது. தோழி, தலைவன் தலைவியொடு, சிறப்பாகத் தலைவனொடு உரையாடும் போது உள்ளுறையுவமம், ஏனை யுவமம் என்னும் இருவகை உவமங்களையும் ஆளுவது மரபு. இவற்றை விளக்க எழுந்ததே உவமவியல். பிற்காலத்தில் வடநூலார் அணியிலக்கணம் வகுத்தபோது தமிழிலக்கண உவமவியலைப் பயன்படுத்திக் கொண்டதுடன் ‘உவமை’ என்னும் பெயரையும் ‘உபமா’ எனத் திரித்துக் கொண்டனர். தொல்காப்பியம் கடைக்கழகக் தொடக்கத்தெழுந்த வழிநூலாதலால் அதற்கு முந்திய அகத்தியம் முதலிய நூல்கள் வடமொழி இலக்கணங்களுக்கு முதனூல் என்பதை எவரும் மறுக்க முடியாது. மேலும் ‘ஐந்திரம்’, ‘பாணினீயம்’ முதலிய வடமொழி வியாகரணங்கள் எல்லாம் நன்னூல் போல் எழுத்தும் சொல்லும் ஆகிய இரண்டே கூறுவனவென்றும், தொல்காப்பியம் முதலிய தொன்னூல்கள் யாவும் எழுத்து, சொல், பொருள் மூன்றையும் கூறும் பிண்டங்கள் என்றும் வேறுபாடறிதல் வேண்டும். வடமொழியில் யாப்பிலக்கணம் ‘சந்தன’ அல்லது ‘சந்தோபிசிதி’ என்னும் நூல்களிலும் அணியிலக்கணம் ‘அலங்காரம்’ என்னும் நூல்களிலும் வேறாகக் கூறப்படும். தமிழிலோ யாப்பும் அணியும் பொருளிலக்கணக் கூறுகள்” என்னும் பாவாணர் அவர்களின் விளக்கம் உவமம் பற்றிய அனைத்துவகை ஐயங்களையும் களைவதாக அமைந்துள்ளது.

    நிலைக்களன் ஒன்று சிந்தனை இரண்டு

    தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் காணப்படும் உவமவியல் இருவேறு வகையான சிந்தனைகளுக்குக் களமாயிருக்கிறது. ‘உவமவியல் அடிப்படையிலேயே பிற்கால அணியிலக்கணங்கள் வளர்ந்தன என்றுரைக்கும் ஆய்வறிஞர்களும், ‘உவமவியலை அடிப்படையாக வைத்துத் தமிழின் தனித்தன்மை மிக்க துறையாக அணியிலக்கணம் வளர்ச்சி பெறவில்லை’ என்னும் ஆய்வறிஞர்களும் தமிழாய்வு உலகத்தில் உள்ளனர் என்பது ஈண்டு இன்றியாமையாக் கருத்தாகச் சுட்டப்படுகிறது.

    “அகத்திணையியல் அகப்பொருளாகவும், புறத்திணையியல் புறப்பொருளாகவும், களவியல் இறையனார் களவியலாகவும், செய்யுளியல் யாப்பருங்கலம் – காரிகை, பாட்டியல் – பிரபந்தவியல் எனப் பல்வகையாகவும் விரிந்து வளர்ந்தமை போன்று ‘உவமை’ என்ற ஒன்றே பின்பு அணிக்கும் அலங்காரத்திற்கும் இடமளித்துத் தன்னை அடியாகக் கொண்டு வளர்ந்த பல்வேறு அணிகளையும் இணைத்துக் கொண்டு தனி அணி இலக்கணமாக வளர்ந்து வந்துள்ளது என்று கருத இடமளிக்கிறது”

    எனப் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆய்வுலகில்,

    “தொல்காப்பியத்தோடு ஒட்டிய தமிழ் மரபோடு பொருந்திய
    உவம  வளர்ச்சி பற்றிய நூலொன்றும் தோன்றவில்லை”

    என்னும் சிந்தனையும் போதிய கவனத்திற்கு ஆளாகியுள்ளது என்பதும் நோக்கத்தக்கது.

    “தொல்காப்பியர் தம் நூலை எழுத்து, சொல், பொருள் என்னும் முப்பகுதி உடையதாக யாத்துள்ளார். தமக்கு முன்னிருந்த பகுப்புமுறை உண்மை கொண்டே அவர் இப்பகுப்பு முறையை ஏற்றுக் கொண்டிருத்தல் வேண்டும். எழுத்திலக்கணம் அடிப்படையாகவும், சொல்லிலக்கணம் அதன் வளர்ச்சியாகவும், சொல்லுணர்த்தும் பொருள் பற்றிய இலக்கிய இலக்கணம் முடிந்த பயனாகவும் கொள்ளப் பெற்றன. எழுத்தும் சொல்லும் கற்பது பொருள் பற்றிய இலக்கியக் கொள்கைகள் அனைத்தையும் உணர்ந்து இலக்கியங்களை விளக்கமுறக் கற்று இன்பம் நுகர்வதற்கே என்று எண்ணினர். தமிழ்ப்புலவர், பிற்கால இலக்கண ஆசிரியர் சிலர் எழுத்து, சொல்லோடு நின்று விட்டனர். பொருளைப் பற்றி எழுதியவர்கள்கூடத் தொல்காப்பியக் கருத்துக்களையே திரும்பவும் சுருங்கக் கூற முயன்றனரேயன்றிப் புதுமை படைக்கவோ முன்னதை மேலும் விளக்கவோ முயலவில்லை எனலாம். சிலர் பொருளிலக்கணத்திலிருந்து யாப்பைப் பிரித்துத் தனி இலக்கண நூல் எழுதினர். சிலர் அகம் புறம் பற்றித் தனி இலக்கண நூல்களை யாத்தனர். வேறு சிலர் பாட்டியல் நூல் என்னும் ஒரு பிரிவைக் கலப்படமாக ஆக்கினர். ஆனால் உவமவியலை அடிப்படையாகக் கொண்ட தமிழ் அணியியல் ஒன்றும் தோன்றவில்லை.”

    தொல்காப்பிய நிலைக்களத்தில் இவ்வாறு இருவேறு சிந்தனைகள் கிளைத்துள்ளன. எனினும்,

    1. தண்டியலங்காரம் என்னும் வடமொழித் தழுவல் நூலில் குறிக்கப்பட்டுள்ள உவமைகளின் பெயர்கள் ஒன்றுகூடத் தமிழில் இல்லையாதலாலும்,
    2. தனக்குப் பின்னால் செய்யுளணி பற்றிய நூல் தோன்றும் எனக்கருதி முன்கூட்டியே தொல்காப்பியர் உவமவியலைப் படைத்தார் என்பது அளவையியலுக்குப் (LOGIC) பொருந்தாமையானும்
    3. தண்டியலங்காரத்துக்கு முன்னர் எழுந்த தமிழ்க்கவிதைகளில் அணி விகற்பங்களைப் பற்றிய குறிப்புக்கள் ஏதும் இல்லாததாலும்

    அணியிலக்கணச் சிந்தனை தொல்காப்பியருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை என்னும் முடிவுக்கே வரவேண்டியுள்ளது.

    உவம நெறி பற்றிய பாவலர் பாலசுந்தரனார் கருத்து

    ‘உவமம்’ எனத் தொல்காப்பியர் பயன்படுத்தியதற்கும், ‘உவமையணி’ எனப் பிற்காலத்தார்  உருவாக்கிக் கொண்டதற்கும் உள்ள தொடர்பினை ஆய்வறிஞர் ச.பாலசுந்தரனார்  பின்வருமாறு விளக்கிக் காட்டுகிறார்.

    “உவமமானது செய்யுளொடு ஒருங்கிணைந்து, சிறப்பு நலன் முதலாகியவையேயன்றி மெய்ப்பாடுகளையும் நிலைக்களனாகக் கொண்டு தோன்றுதலான் உவமவியலை, மெய்ப்பாட்டியலின் பின்னும் செய்யுளியலின் முன்னுமாக அமைத்துக் கூறினார் ஆசிரியர்.

    “இடைக்காலத்தே இலக்கண நூல் செய்த ஆசிரியன்மார் மெய்ப்பாடுகளையும் ஆகுபெயர் முதலாய குறிப்பு மொழிகளையும் பொருள்கோளையும் முரண்தொடை முதலியவற்றையும் நோக்கு முதலாய செய்யுளுறுப்புக்களையும் வேறுபட வந்த உவமத் தோற்றங்களையும் உள்ளுறை உவமத்தினையும் செய்யுட்கு அணி செய்வனவாகக் கொண்டு வடமொழி அலங்கார நூல்களைப் பின்பற்றி அணிநூல் செய்து போந்தனர்”.

    “தொல்காப்பியத்துள் கூறப்படும் உள்ளுறை உவமம் ஏனையுவமம் என்னும் பொருளிலக்கணப்பகுதியை அணியிலக்கணம் கூறுவதாகக் கருதி உவமை என்னும் அணியிலிருந்தே பிற அணிகள் யாவும் விரிந்தனவாதலின் அவற்றையெல்லாம் அடக்கி இவ்வாசிரியர் உவமவியல் கூறுவதாக மயங்குவர் பலர்.”

    “தமிழ் இலக்கணம் யாவும் வடமொழி இலக்கணங்களை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டவை எனக் கருதுவார்க்கும் அதற்கேற்ப ஆய்வுரைகளைக் கூறுவார்க்கும் தமிழிலக்கணத்தின் தொன்மையினையும் தொல்காப்பியத்தின் நுண்மையினையும் எடுத்துக் கூறித் தமிழின் தனித்தன்மையை ஏற்கச் செய்வதென்பது ஏறா மேட்டிற்கு நீர் பாய்ச்சுதலை ஒக்கும் என்க”

    ஆய்வு என்னும் பெயரால் தமிழ் மரபைப் பிறழ உணர்ந்தார்க்கும்  உணர்ந்த  பின்பும் மரபழிக்க முயல்வாருக்கும் பாவலரின் இவ்வரிய விளக்கம் பயன்படுதல் வேண்டும்.

    நிறைவுரை

    இதுகாறும் வலிமை வாய்ந்த தரவுகள் பலகொண்டு காட்டப்பெற்ற விளக்கங்களால் உவமம் என்பது தமிழ் மரபென்றும் அது அகப்பொருளில் தலைமக்களுக்கானது என்றும், பின்னாலே வடமொழி மரபு தழுவி எழுதப்பெற்ற தண்டியலங்காரம் என்னும் நூலில் காணப்பெறும் உவமம் பற்றிய கருத்துக்களும் விளக்கங்களும் செய்யுளுக்கு அணியானவை என்றும் புரிந்து கொள்ளலாம். கலாச்சாரக் கலப்புக்கள் இலக்கிய இலக்கணங்களில் எதிரொலிக்கவும் செய்யும் என்பதற்கு இது சான்றாகலாம். தற்காலத்தில் உவமம் பற்றிய தொல்காப்பிய மரபு முற்றிலும் கைவிடப்பட்டு அது கவிதைக்கு அழகு சேர்க்கும் ஓர் உறுப்பு என்ற அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் பொருள் புலப்பாட்டுக் கருவியாகவும் செய்யுளுக்கு அணியாகவும் அமைந்திருக்கும் இவ்வுவமங்கள் கவிதைகளின் பெருமைக்கு எவ்வாறு துணைசெய்கின்றன என்பதைத் தொடர்ந்து வரும் கட்டுரைகளால் விளங்கிக் கொள்ளலாம்.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 4

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 4

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தொல்காப்பிய நோக்கில் ‘உவமம்’ 

    முன்னுரை

    தமிழிலக்கியத்திலோ இலக்கணத்திலோ இயல், படலம் என்பன போன்ற  பகுப்புக்கள் பொருள் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டவையாகும். அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் எனவும்,  புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் எனவும் அமையும் இலக்கியப் பாகுபாடானாலும், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் எனவும், உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் எனவும் அமையும் இலக்கணப் பாகுபாடானாலும் அவையெல்லாம் தொடர்புடைய நூற்பொருள் பாகுபாடே. இலக்கியத்தில் முன்னோக்கு, பின்னோக்கு உத்திகள் அமைவதும் இலக்கணத்தில் ‘மாட்டேறு’ முதலிய உத்திகள் அமைவதும் அத்தகையதே! ஆனால் உள்ளடக்கத்தால் வேறுபட்ட இயல்களில், குறிப்பிட்டதொரு பொருளை நுட்பமாகவும் தெளிவாகவும் சுட்டிச் செல்கிற மரபு தொல்காப்பியத்தில் அமைந்திருப்பதை அறியமுடிகிறது. இது பற்றிய சிந்தனையைச் சுருக்கமாக இப்பகுதி முன்னெடுக்கிறது.

    உவமம் பொருளிலக்கணத்தைச் சார்ந்ததே

    தொல்காப்பியர் பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களையும் தனித்தனி பொருள் கட்டுமானம் கொண்ட இயல்களாக அமைத்திருக்கிறார்.  உவமவியலையும் அவ்வாறே உவமம் பற்றிய செய்திகளுக்காக ஒதுக்கியிருக்கிறார். ஆனால் உவமம் பற்றிய சிந்தனைகளைப் பொருளதிகாரத்தின் ஏனைய சில இயல்களிலும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

    “உள்ளுறை உவமம் ஏனை உவமமெனத்
    தள்ளா தாகும் திணையுணர்  வகையே”

    “உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலமெனக்
    கொள்ளும் என்ப குறியறிந் தோரே”

    “உள்ளுறுத் திதனோடு ஒத்துப்பொருள் முடிகென
    உள்ளுறுத் திறுவது உள்ளுறை உவமம்”

    “ஏனை யுவமம் தானுணர் வகைத்தே”

    என்னும் நூற்பாக்கள் அகத்திணையியலில் காணக்கிடக்கின்றன. அதாவது உவமவியலில் ஆராய்ந்திருக்கும் உவமம் பற்றிய சிந்தனைகள், அகத்திணை அமைக்கிற பொழுதும் தொல்காப்பியருக்குத் தோன்றியிருக்கின்றன என்பது கருத்து. மேலும்,

    “நோயும் இன்பமும் இருவகை நிலையிற்
    காமங் கண்ணிய மரபிடை தெரிய
    ……………………………………………………….
    இருபெயர் மூன்றும் உரியவாக
    உவம வாயிற் படுத்தலும் உவமம்
    ஒன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி”

    “இறைச்சி தானே உரிப்புறத் ததுவே”

    “இறைச்சியிற் பிறக்கும் பொருளு மாருளவே
    திறத்தியல் மருங்கின் தெரியு மோர்க்கே”

    “அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும்
    வன்புறை யாகும் வருந்திய பொழுதே”

    “உடனுறை உவமம் சுட்டு நகை சிறப்பென
    கெடலரும் மரபின் உள்ளுறை ஐந்தே”

    என்னும் நூற்பாக்கள் பொருளியலில் காணக்கிடக்கின்றன. பொருளியல் என்பது சொல்லதிகாரத்துக் கண்டறியப்பட்ட சொற்கள், அகப்பொருள் மாந்தர்கள் வழியாக வெளிப்படும் போது எத்தகைய பொருளைத் தருகின்றன என்பது பற்றி ஆராயும் இயல்புடையது. மேற்கண்ட அகச்சான்றுகளால் உவமம் பற்றிய தொல்காப்பியர் கருத்துக்கள் பின்வருமாறு நிரல்படுத்தப்படலாம்.

    1. தொல்காப்பியர் உவமத்தைத் தனியானதொரு இயலில் ஆராய்ந்திருக்கிறார்.
    1. செய்யுளைப் பற்றி ஆராயும் செய்யுளியலில் உவமத்தைச் செய்யுளுறுப்பாகவோ வேறு வகையாகவோ அவர் சுட்டவில்லை.
    1. உவமவியலில் எட்டு நூற்பாக்களில் அகப்பொருள் மாந்தர்களின் உவமக் கோட்பாட்டை ஆராய்கின்றன.
    1. உவமவியல் நூற்பாக்கள் அகப்பொருள் மாந்தர்களின் கூற்றுப் பகுதியாக அமைந்து, பொருட்புலப்பாட்டையே தம் நோக்கமாகக் கொண்டிலங்குவதை அறியமுடிகிறது.
    1. உவமவியலில் மட்டும் ஆராயப்பட வேண்டிய உவமம் பற்றிய செய்திகளைத் தொல்காப்பியர் அகத்திணையியல், பொருளியல் என்னும் ஏனைய இயல்களிலும் ஆராய்ந்திருக்கிறார். .

     தொல்காப்பியமும் உள்ளுறை உவமமும்

    இதுகாறும் சுட்டிக்காட்டிய எடுத்துக்காட்டுக்களால் தொல்காப்பியர்   உவமத்தை உவமவியல் தவிர ஏனைய இயல்களிலும் ஆராய்ந்திருக்கிறார் என்பது உறுதியாகிறது. ஆகவே அவர் உவமத்தைப் பொருளதிகாரத்தின் பகுதியாகவே கருதியிருக்கிறார் எனக் கருத இடமேற்படுகிறது. தமிழில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பது பிற்கால வழக்கு.

    “எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி”

    என்பதே தொல்காப்பியப் பாயிர வழக்கு. மேலும்,

    “தள்ளாதாகும் திணையுணர் வகையே”

    என்றதனால், உள்ளுறை உவமத்தையும் வெளிப்பட நின்ற ஏனைய உவமத்தையும் திணையை உணர்வதற்குரிய கருவிகளாகவே அவர் கருதியிருக்கிறார் எனவும் எண்ண முடியும். ‘கவிதைக்கு அழகு உவமம்’ என்னும் கருத்து தொல்காப்பியருக்கு இருந்ததற்கான சான்று தொல்காப்பியத்துள் கிட்டுமாறில்லையாயினும் உவமத்தை அகப்பொருள் மாந்தர்களின் கூற்றுப் பகுதியாகவும் உள்ளுறை உவமத்தைத் திணையுணர் கருவியாகவும் சுட்டிச் செல்கிறார் என்பதை அறியமுடிகிறது.

    நிறைவுரை

    மேற்கண்ட சில பத்திகளில் தரவுகளின் அடிப்படையில் விளக்கப்பட்ட கருத்துக்களால் ‘உவமம்’ என்பது தற்காலத்தில் கருதப்படுவதுபோலக் கவிதைக்குரிய அழகியல் பகுதி அன்று என்பதும் பொருள் விளக்கத்திற்கானதே என்பதும் பெறப்படும்.  உவமத்தைப் பயன்படுத்துதற்குரியார் அகப்பொருள் மாந்தர் என்பதாலும், அவரும் குறிப்பிட்ட இடத்திலேயே சூழலிலேயே வரையறைக்கு உட்பட்டே உவமம் கூறுதல் வேண்டும் என்னும் கடப்பாடு காணப்படுவதாலும் அதனை அகப்பொருள் பகுதியென்றும் துணியலாம். இதற்கும் பிற்காலத்தில் செய்யுளணியாகக் கருதப்படும் தண்டியலங்காரத்தின் கருத்தியலுக்கும் எள்ளின் முனையளவும் தொடர்பில்லை என்பதும் ஆனால் தமிழ்க் கவிதைகளின் பெரும்பரப்பு தண்டியின் அழகியல் சார்ந்த உவமத்தாலேயே சூழப்பட்டிருக்கிறது என்பதும் பின்னர் விளக்கப்படும்.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 3

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 3

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ‘தொல்காப்பியத்தில் உவம உருபுகள்’ ஒரு பார்வை

    முன்னுரை

    பயிர்களுக்கு ‘வளர்ச்சி’ என்பது தனி. ‘காப்பு’ என்பது தனி. ஆனால் மொழிகளுக்கு வளர்ச்சியே காப்பு. வீக்கம் வளர்ச்சி ஆகாது. மரபாகிய அடிச்சட்டகம் எந்த நிலையிலும் மாறக்கூடாது. ‘மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்’. உவம மரபு என்பது தமிழின் ஆழமான மரபு. பொருள், உவமம் பொதுத்தன்மை, உவமச்சொல் என்பன பற்றிய ஆராய்ச்சி தமிழில் செழித்தோங்கிய காலம் ஒன்று இருந்திருக்கிறது. படைப்பாளனின் உள்ளக் கருத்திற்கேற்ப உவம உருபுகள் பயன்பாட்டுக்கு வர அவற்றை வகைதொகைப்படுத்தும் பணியில் அறிஞர்கள் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். அவருள் தொல்காப்பியரும் ஒருவர். இதுபற்றிய கருத்துக்கள் இந்தப் பகுதியில் சுருக்கமாக ஆராயப்படுகின்றன.

    தொல்காப்பிய அகத்தும் புறத்தும் உவம உருபுகள்

    தொல்காப்பிய உவமவியல், அகத்திணை மாந்தர்களின் கூற்றுப்பகுதியில் உவமை அமையும் திறத்தினை ஆராய்கிறது. அவ்வாராய்ச்சியில் வினை, பயன், மெய், உரு என்னும் நான்கின் அடிப்படையில் உவமங்கள் அமையலாம் என வரையறுக்கிறது. அவ்வாறு அந்நான்கு தளத்துள் அமைகின்ற உவமைகளுக்கும் அவை விளக்கும் பொருண்மைகளுக்கும் இடையில் அமைய வேண்டிய உவம உருபுகளைப் பற்றியும் தொல்காப்பியம் கருத்துரைக்கின்றது. உவம உருபுகளை ‘உவமச்சொல்’ எனவும் வழங்குவர். தொல்காப்பியத்துள் இவ்வுவம உருபுகளைத் தொகுத்துச் சுட்டுங்கால் ஓரியல்பாகவும் வகுத்துக் காட்டுங்கால் வேறொரு இயல்பாகவும் அமைந்துள்ளன என்பதை அறியமுடிகிறது.

    தொகுத்துச் சுட்டலும் வகுத்துக் காட்டலும்

    தொல்காப்பியத்துள் உவம உருபுகள் எண்ணிக்கையால் இருவகையாகக் கூறப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. வினை, பயன், மெய், உரு என்னும் நான்கு வகையாக அமையும் உவமத் தொடர்களில் பயன்படுத்தப்படும் உவம உருபுகளைத் தொகுத்தும் வகுத்தும் தொல்காப்பியர் சுட்டியுள்ளார். இவ்வாறு கூறப்படும் இருவகை நிலையிலும் மெல்லிய வேறுபாடு தென்படுகிறது.

    தொகுத்துச் சுட்டல்

    ‘அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப, என்ன, மான, ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க, வென்ற, வியப்ப, எள்ள, விழைய, இறப்ப, நிகர்ப்ப, கள்ள, கடுப்ப, காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள, மாற்ற, மறுப்ப, புல்ல, பொருவ, பொற்ப, போல, வெல்ல, வீழ, நாட, நளிய, நடுங்க, நந்த, ஓட, புரைய’ என்னும் முப்பத்தாறு உவம உருபுகள் தொகுத்துச் சுட்டும் நூற்பாவில் காணக்கிடக்கின்றன.

    வகுத்துக் காட்டல்

    தொகுத்துச் சுட்டிய உவம உருபுகளை இன்ன உவமத்திற்கு இன்ன உருபு என வகுத்துக் காட்டும் நூற்பாக்கள் பின்வருமாறு அமைந்திருக்கின்றன.

    வினையுவம உருபுகள்

    “அன்ன ஆங்க மான இறப்ப
    என்ன உறழத் தகைய நோக்கொடு
    கண்ணிய எட்டும் வினைப்பால் உவமம்”

    பயனுவம உருபுகள்

    “எள்ள, விழையப், புல்லப், பொருவக்,
    கள்ள, மதிப்ப, வெல்ல, வீழ
    என்றாங்கு எட்டே பயனிலை உவமம்”

    மெய்யுவம உருபுகள்

    “கடுப்ப, ஏய்ப்ப, மருளப், புரைய,
    ஒட்ட, ஒடுங்க, ஓட, நிகர்ப்ப என்று
    அப்பால் எட்டே மெய்ப்பால் உவமம்”

    உருவுவம உருபுகள்

    “போல, மறுப்ப, ஒப்பக், காய்ந்த,
    நேர, வியப்ப, நளிய, நந்த என்று
    ஒத்துவரு கிளவி உருவின் உவமம்”

    தொகை நூற்பாவையும் வகைநூற்பாக்களையும் உறழ்ந்து நோக்கினால் பெறக்கூடிய உண்மைகளைப் பின்வருமாறு நிரல்படுத்தலாம்.

    1. தொகை நூற்பாவில் உவம உருபுகளின் எண்ணிக்கை முப்பத்தாறு (36) எனக் குறிக்கப்பட்டுள்ளது.
    2. வகைநூற்பாக்களில் கூறப்பட்டிருக்கும் உவம உருபுகளின் எண்ணிக்கையோ முப்பத்திரண்டு மட்டுமே. (32)
    3. தொகை நூற்பாவில் கூறப்பட்ட உருபுகளில் ஆறு உருபுகள் (ஒன்ற, என்ற, மாற்ற, பொற்ப, நாட, நடுங்க) வகைநூற்பாக்களில் கூறப்படவில்லை. (36-6=30)
    4. தொகை நூற்பாவில் சொல்லப்படாத நேர, நோக்க என்னும் இரண்டு உருபுகளும் வகை நூற்பாக்களில் கூறப்பட்டுள்ளன. (36+2=38)
    5. மேற்சுட்டிய அனைத்தையும் நோக்கத் தொல்காப்பியரால் கூறப்பட்டிருக்கும் உவம உருபுகள் முப்பத்தெட்டாகும். (38)

    வினையுவம உருபுகளுள் ஒன்றாகக் குறிக்கப்பட்டிருக்கும் ‘நோக்க’ என்பதும் உருவுவம உருபுகளுள் ஒன்றாகக் குறிக்கப்பட்டிருக்கும் ‘நேர’ என்பதும் தொகை நூற்பாவில் குறிக்கப்படவில்லை. வகைநூற்பாக்களில் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ள இவற்றையும் சேர்த்துத் தொல்காப்பியம் கூறும் உவம உருபுகளின் எண்ணிக்கை முப்பத்தெட்டாகும். (36+2 =38)

    ‘இன்ன உவமத்திற்கு இன்ன உருபுதான் வருதல் வேண்டும்’ என்னும் தொல்காப்பியத்தின் கட்டுப்பாடு இலக்கிய ஆய்வில் குறிப்பிடத்தக்க ஒன்றாகக் கருதப்படலாம். இத்தகைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதற்கான காரணம் சிற்றறிவால் எளிதாகப் புரிந்து கொள்ளுமாறு அமையவில்லை.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 2

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 2

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமம் கவிதைக்கானதா?

    முன்னுரை

    ‘உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்’ என்பதனால் மணமக்கள் பொருத்தம் என்பதுபோலப் பொருளுக்கேற்ற உவமம் அமைதல் வேண்டும் என்பது பெறப்படும். அதாவது விளக்கப்படும் பொருளின் வினை, பயன், மெய், உரு என்னும் நான்கு கூறுகளில் எதற்காக உவமம் கூறப்படுகிறதோ அவற்றுள் அவை ஒத்திருக்க வேண்டும். பேராசிரியர் உரையில் இந்த நுட்பம் அமைந்துள்ளது. உவமம் தொல்காப்பியத்தில் விரிவாக ஆராயப்படினும் தற்காலத்துக் கவிதையுலகில் உவமம் பற்றி நிலவும் கருத்தினுக்கும் தொல்காப்பியம் கூறும் கருத்திற்கும் இடைவெளி நிலவுவதாகவே தெரிகிறது. அது பற்றிய விளக்கத்தை இந்தப் பகுதி தர முயல்கிறது.

    எல்லாரும் உவமம் கூற இயலுமா?

    தற்காலத்தில் கவிதைக்கு அழகு சேர்க்கும் ‘அணி’களுள் ஒன்றாக உவமையைக் கருதும் போக்கு நிலவுகிறது. இவ்வாறு உவமையைச் செய்யுளணியாகக் கொள்ளும் கருத்தியல் தொல்காப்பியருக்கு இருந்ததா என்பது பெரும் சிந்தனைக்கும் ஆய்வுக்குமுரியது. உவமம் கவிதைக்கானது என்பது தொல்காப்பியத்தின் கருத்தாக இருந்திருக்குமானால் அது பற்றிய பதிவுகளையும் ஆய்வையும் கவிதை பற்றி ஆராயும் செய்யுளியலில் ஆராய்ந்திருக்க வேண்டும். ஆனால்,

    “மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ
    ……………………………………………
    நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென
    வல்லிதின் கூறி வகுத்துரைத்தனரே” 23

    என முப்பத்திரண்டுச் செய்யுளுறுப்புக்களைத் தொகுத்துரைக்கும் தொல்காப்பிய நூற்பாவில் உவமம் பற்றிய குறிப்பு காணப்படவில்லை. யாப்பிலக்கணத்துள் இன்றியமையாத ‘தளை’ பற்றிய குறிப்பும் தென்படவில்லை. தொல்காப்பியர் செய்யுளணி பற்றிய சிந்தனை உடையவராயிருந்திருப்பின் உவமத்தைச் செய்யுளுறுப்புக்களுள் ஒன்றாகக் குறித்திருப்பார். குறிக்காதது மட்டுமன்று., உவமம் பற்றிய ஆராய்ச்சி நிகழும் தொல்காப்பிய உவமவியலில் அகப்பொருள் மாந்தர்களான தலைவன், தலைவி, தோழி, செவிலி முதலியோர் இடம்பெற்றிருப்பதையும் அறியமுடிகிறது.

    தொல்காப்பியர் உவமத்தை அகப்பொருள் மாந்தர்களின் கூற்றுப் பகுதியாகவே கருதியிருக்கிறார் என்பது பின்வரும் அவருடைய நூற்பாக்களில் இருந்து பெறப்படும் உண்மையாகும்.

    “கிழவி சொல்லின் அவளறி கிளவி”

    “தோழிக் காயின் நிலம்பெயர்ந் துறையா”

    “கிழவோர்க்காயின் உரனொடு கிளக்கும்”

    “ஏனோர்க்கெல்லாம் இடம் வரைவின்றே”

    “இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும்

    உவம மருங்கில் தோன்றும் என்ப”

    “கிழவோட்கு உவமம் ஈரிடத்துரித்தே”

    “கிழவோற் காயின் இடம் வரைவின்றே”

    “தோழியும் செவிலியும் பொருந்துவழி நோக்கிக்

    கூறுதற் குரிய  கொள்வழி யான”

    எனவரும் உவமவியல் நூற்பாக்கள் உவமத்தைப் பற்றி ஆராயாது உவமம் கூறுதற்குரியாரையும் அவர் உவமம் கூறும் சூழல்களையும் வரையறுப்பனவாகவே உள்ளன. இதனால் அகப்பொருள் மாந்தர்கள் உவமம் கூறும் பாங்கைப் புலப்படுத்துவனவாகவே அவை அமைந்துள்ளன என்பதை அறியலாம்.

    செய்யுளுக்கும் உவமத்திற்குமான தொடர்பு

    செய்யுள் பற்றிச் சிந்திக்குங்கால் தொல்காப்பியருக்கு உவமம் பற்றிய எண்ணமோ உவமம் பற்றிச் சிந்திக்குங்கால் செய்யுள் பற்றிய சிந்தனையோ அவருக்கு இருந்ததற்கான அகச்சான்றுகள் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. அவ்விரண்டையும் தனித்தன்மையுடைய இருவேறு நிலைக்களங்களிலேயே சிந்தித்து அமைத்திருப்பதாகவே தோன்றுகிறது. உவமவியலைத் தனித்ததொரு இயலாக அமைத்ததும், அதனை மெய்ப்பாட்டியலுக்கும் செய்யுளியலுக்கும் இடையில் வைத்ததும் உவமத்தை அகப்பொருள் மாந்தர்களோடு தொடர்புடைய ஒன்றாகவே தொல்காப்பியர் கருதியிருந்தாரோ என எண்ணத் தோன்றுகிறது.

    உவம வகைகளும் நிலைப்பாடும்

    தொல்காப்பிய உவமவியல், அகத்திணை மாந்தர்களின் கூற்றுப்பகுதியில் உவமை அமையும் திறத்தினை ஆராய்கிறது என்பதைக் கண்டோம். அவ்வாராய்ச்சியில் வினை, பயன், மெய், உரு என்னும் நான்கின் அடிப்படையில் உவமைகள் அமையலாம் என வரையறுக்கப்படுகிறது. அவ்வாறு அந்நான்கு தளத்துள் அமைகின்ற உவமைகளுக்கும் அவை விளக்கும் பொருண்மைகளுக்கும் இடையில் அமைய வேண்டிய உவம உருபுகளைப் பற்றியும் தொல்காப்பியம் கருத்துரைக்கின்றது. உவம உருபுகளை ‘உவமச்சொல்’ எனவும் வழங்குவர். தொல்காப்பியத்துள் இவ்வுவம உருபுகளைத் தொகுத்துச் சுட்டுங்கால் ஓர் எண்ணிக்கையிலும் வகுத்துக் காட்டுங்கால் வேறொரு எண்ணிக்கையிலும் அமைந்துள்ளன என்பதை அறியமுடிகிறது. அதாவது ‘திசைகள் நான்கு வகைப்படும்’ என்னும் தொகுத்துச் சுட்டலுக்கும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்னும் அதன் விரிவுக்குமான எண்ணிக்கையில் வேறுபாடு வரக்கூடாதல்லவா? ஆனால் தொல்காப்பியத்தில் வருகிறது. வினை, பயன், மெய், உரு என்னும் நான்கிற்கும் மொத்தமாக ‘இத்தனை உருபுகள்’ என வரையறுத்துக் கூறும் எண்ணிக்கைக்கும் அவற்றின் விரிவாக ஒவ்வொன்றுக்கும் பகுத்துரைக்கப்படும் உவம உருபுகளின் எண்ணிக்கைக்கும் வேறுபாடு நிலவுகிறது.

    (தொடரும்….)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 1

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 1

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ‘உவமம்’ – ஓர் இலக்கணப் பார்வை

    முன்னுரை

    இலக்கிய வடிவங்கள் அனைத்துக்கும் பொதுவானது உவமம். கருத்து நுண்பொருள். உவமம் பருப்பொருள். நுண்பொருளை விளக்க மற்றொரு நுண்பொருளே உவமமாவதும் உண்டு. கருத்துக்களை விளக்க மற்றொரு கருத்தே உவமமாவதும் உண்டு. இயற்கைக்குச் செயற்கையும் செயற்கைக்கு இயற்கையும் உயர்வுக்கு இழிவும் இழிவுக்கு உயர்வும் உவமமாவதும் உண்டு. எது எவ்வாறாயினும் உவமம் என்பது எந்தப் படைப்புக்கும் அழகு சேர்ப்பதோடு பொருள்விளக்கத்திற்கும் தெளிவுக்கும் பயன்பட்டாலே அது சிறக்கும். ‘உவமப் பயன்பாடு’ என்பது மொழியாளுமை, கருப்பொருள் தேர்வு, கருத்து விளக்கம் என்பன போன்றதொரு படைப்பாளனின் பேராளுமை. உவமம் சொல்லிச் சிறந்தாரை ‘உவமைக் கவிஞர்’ என்று போற்றக்கூடிய அளவுக்கு அதன் தாக்கம் இருந்திருக்கிறது. அத்தகைய உவமங்களைப் பற்றிய கோட்பாடுகளையும் அவற்றையொட்டியும் விலகியும் அமைந்த உவமச் சிறப்புக்களையும் விளக்குவதாக இக்கட்டுரைத் தொடர் அமைகிறது. தொடக்கக் கட்டுரைகள் உவமத்தைப் பற்றிய பழந்தமிழ் இலக்கணப் பார்வையை முன்னிறுத்தித் தமிழில் உவமக் கோட்பாடுகளை வரையறுக்க முயல்கின்றன.

    தொல்காப்பியமும் உவமமும்

    தமிழின் தலையிலக்கண நூலாகிய தொல்காப்பியத்தை ஆராய்ந்த அறிஞர் பலரும் உவமம் பற்றிய தொல்காப்பியக் கருத்துக்களையும் ஆராய்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தொல்காப்பியப் பொருளதிகாரம் ஏனைய அதிகாரங்களைப் போலவே ஒன்பது இயல்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது என்பதும் அவற்றுள் ஏழாவது இயலாக ‘உவமவியல்’ அமைந்துள்ளது என்பதும் அறியப்பட்ட உண்மையாகும். தொல்காப்பியர், ‘உவமவியல்’ என்றே இயலுக்குத் தலைப்பிட்டிருக்கவும் தமிழியல் ஆய்வாளர்கள் பலரும், தமிழறிஞருள் சிலரும் ’உவமையியல்’ என்றே தொல்காப்பியர் வழங்கியிருப்பதாகக் கூறி வருவது சிந்தனைச் சிக்கலாகவே தோன்றுகிறது. ‘உவமவியல்’ என அகர இடைநிலையா, ‘உவமையியல் என ஐகார இடைநிலையா என்பதன்று சிக்கல். ‘உவமமா? உவமையா?’ என்பதுதான் உண்மையான சிக்கல்.

    ‘உவமை’யில்லாத் தொல்காப்பியம்

    தொல்காப்பிய நூற்பாக்களில் ‘உவமம்’என்னும் சொல்லே பேரளவு பயன்பாட்டுக்குரியதாக விளங்குகிறது.

    “உள்ளுறை உவமம் ஏனை யுவமம்
    தள்ளாதாகும் திணையுணர் வகையே”

    “தடுமா றுவமம் கடிவரை யின்றே”

    “பொருளே உவமம் செய்தனர் மொழியினும்
    மருளறு சிறப்பின் அஃதுவமம் ஆகும்”

    “உவமப் போலி ஐந்தென மொழிப”

    என்னுமாறு தொல்காப்பியத்தில் பரவலாகவும் தெளிவாகவும் பயின்றுவரும் நூற்பாக்களால், அந்நூல் ‘உவமம்’ என்னும் சொல்லுக்குத் தரும் இன்றியமையாமையும் மதிப்பும் புலப்படக்கூடும். ‘உவமப்பொருள், உவம உருபு, உவமப்போலி, உவமத்தொகை, உவமத் தோற்றம், உடனுறை உவமம், உவம வாயில், தடுமாறுவமம்’என்றெல்லாம் வரும் வழக்குகள், ‘உவமம்’என்னும் சொல்லின் பயன்பாட்டையே உறுதி செய்கின்றன.

     ‘உவமம்’ —  ‘உவமை’ — சிறு விளக்கம்

    தொல்காப்பிய உவமவியலில் அமைந்துள்ள முப்பத்தெட்டு நூற்பாக்களில் ஒரு நூற்பாவைத் (8) தவிர எந்தவிடத்திலும் ’உவமை’என்னும் சொல் பயன்பாட்டைக் காணவியலவில்லை. அவ்வெட்டாவது நூற்பாவும்,

    “உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்”

    என அமைகிறது. இந்நூற்பாவில் தொல்காப்பியர் ‘உவமை’என்னுஞ் சொல்லை, ‘உவமத்தின் தன்மை’என்னும் பொருளிலேயே கையாள்கிறார் என்பது பேராசிரியர் எழுதியுள்ள உரையால் புலனாகும். உள்ளத்தின் தன்மை ‘உண்மை, வாயின் தன்மை ‘வாய்மை’ என்றாற்போல உவமத்தின் தன்மை உவமை. ‘மை’பண்புப்பெயர் விகுதி. எனவே உவமத்தின் தன்மை உவமை. பொருளுக்கிசைந்த உவமம் கூறப்படுகிறபொழுது ’அவ்வுவமப்பொருளின் உவமத்தன்மை’ பொருளோடு பொருந்துமாறு உரைத்தல் வேண்டும் என்பதே இந்நூற்பாவின் கருத்து. ஆசிரியர் இளம்பூரணர்  இதனை,

    “உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும்”

    எனப் பாடங்கொண்டு, ‘உவமம் இரட்டைக் கிளவியாயினும் நிரல் நிறுத்தமைந்த நிரல்நிறை சுண்ணமாயினும் பொருளும் அவ்வாறே வருதல் வேண்டும்’என உரைகூறுவார். அவர் கொண்ட பாடத்திற்கு அவ்வுரை பொருந்தும். அவ்வாறு பாடங்கொண்டால், ‘உவமத்தின் தன்மை பொருளில் புலப்படுமாறு உவமித்தல் வேண்டும்’என்னும் உவமை பற்றிய இன்றியாமையாக் குறிப்பினைத் தொல்காப்பியர் கூறாது போனார்’ என்னும் நிலை ஏற்படும்.

    (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 25

    பரிமேலழகர் உரைத்திறன் – 25

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    பரிமேலழகரின் உவமத் திறன்

    முன்னுரை

    சொல்லவரும் கருத்து, கற்பாருக்கு மயக்கமின்றிப் புலப்பட வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தப்படுவதே உவமம் ஆகும். தொல்காப்பிய எழுத்ததிகாரத்திலோ சொல்லதிகாரத்திலோ இலக்கண விளக்கத்திற்காகத் தொல்காப்பியர் உவமத்தைக் கையாளவில்லை. ஆனால் பொருளதிகாரத்தில் பதின்மூன்று இடங்களில் பதின்மூன்று உவமங்களை அவர் பயன்படுத்தியிருக்கிறார். இது தனித்த ஆய்வுக்கு உரியது. உவமத்தைச் செய்யுளுக்கு அணியாகக் கொள்வது வடமொழி வழக்கு. அது தமிழிலும் விரவியது. அதாவது உவமப்பயன்பாடு தமிழ் வழக்கு. அதனைச் செய்யுளுக்கு அணியாகக் கொள்வது வடமொழி வழக்கு. தொல்காப்பியத்தில் உவமம் என்ற சொல்லே பயன்பட்டு வந்திருக்கிறதேயன்றி ‘உவமை’ என்ற வழக்கு இல்லை. ‘உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்’ என்னும் நூற்பாவில் மட்டும் ‘உவமத்தின் தன்மை’ என்ற பொருளில் அச்சொல் பயின்று வந்திருக்கிறது. இந்தப் பின்புலத்தில் உவமத்தைப் பழந்தமிழ் வல்லார் பொருட்பகுதியாகவே கருதியிருக்கின்றனர் என்பது தெளிவாம். ‘உவம விளக்கம்’ என்னுந் தலைப்பில் உவமத்தை நுட்பமாக ஆராய்ந்திருக்கும் அறிஞர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள், மிகத் தெளிவானதொரு கருத்தினை முன்னெடுக்கிறார். “உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுதல். தருக்க நூலோர் உவமத்தை ஓர் அளவையாகக் கொள்வர். அலங்கார நூலோர் அதனை ஓர் அலங்காரமாகக் கொள்வர். தமிழிலக்கண நூலோர் அதனைப் பொருள் புலப்படுக்கும் கருவியாதல் பற்றிப் பொருளுறுப்பாகக் கொள்வர்” என்பது அவர் ஆய்வு. செய்யுளியலும் அது தொடர்பான உவமவியலும் தொல்காப்பித்துள் பொருளதிகாரப் பகுதியில் அமைந்திருப்பதும் நாட்டார் அவர்களின் கருத்துக்கு வலுசேர்க்கக் கூடும். மேலும் தொல்காப்பியர் உவமத்தை உவமவியலில் மட்டும் ஆராயாமல் அகத்திணையியல், பொருளியலிலும் ஆராய்ந்திருக்கிறார் என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது. இந்த அடிப்படையில் திருக்குறள் பரிமேலழகர் உரையில் குறட்பாக்களின் பொருள் விளக்கத்திற்காகப் பரிமேலழகர் பயன்படுத்தும் உவமங்கள் சிலவற்றைப் பற்றிய ஆய்வுத் தொகுப்பு இக்கட்டுரைத் தொடரின் இறுதிக் கட்டுரையாக அமைகிறது.

    உவமப் பயன்பாட்டில் திருக்குறள்

    திருக்குறளில் கருத்து விளக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள உவமங்களுக்கென்று ஒரு தனித்தன்மை உண்டு. அது என்ன தனித்தன்மை? திருக்குறள் கருத்துக்களைத் திருவள்ளுவரால் காட்டப்பட்டிருக்கும் உவமங்களைத் தவிர்த்துப் பிற உவமங்களைக் கொண்டு விளக்க இயலாது. அவர் காட்டியிருக்கும் உவமங்களைக் கொண்டு பிற கருத்துக்களோடு பொருத்திக் காட்ட முடியாது. நுட்பமான இப்பிணைப்பு திருக்குறளில் மட்டுமே காணக்கூடியதாகும். ‘பசுத்தோல் போர்த்திய புலி’ என்னும் உலகவழக்கை மாற்றிப் ‘பெற்றம் புலியின்தோல் போர்த்து மேய்ந்தற்று’ (273) என்றது ஒரு சான்றாகலாம். கருத்து விளக்கத்திற்காகவே திருவள்ளுவர் உவமங்களை நன்கு சிந்தித்துத் திட்டமிட்டே பயன்படுத்தியிருக்கிறார் என்பது இதனால் புலனாகக் கூடும்.

    அழகர் உரையில் உவமப் பயன்பாடு

    திருக்குறள் பொருள் விளக்கத்திற்காகப் பரிமேலழகர் பல்வகையான உவமங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். உலகவழக்கிலிருந்தும் செய்யுள் வழக்கிலிருந்தும் உவமங்களை எடுத்துக் கொள்கிறார். உரையெழுதும் திருக்குறளிலிருந்தே உவமங்களை எடுத்துக் கொள்கிறார். இலக்கியமாகிய திருக்குறளுக்கு இலக்கணத்தை உவமமாக்கி விளக்கம் தருகிறார். சங்க இலக்கிய வரலாற்று நிகழ்வுகளை உவமமாகக் கொள்கிறார். இலக்கியப் பதிவுகளையும் வரலாறாகக் கருதி உவமமாக்கிக் கொள்கிறார். தமிழ் மருத்துவத்தையும் சமுதாயத்தில் நடப்பியலில் உள்ள மருத்துவச் சிந்தனைகளையும் உவமமாக்கி விளக்கம் தருகிறார். இவ்வாறு அவர் தமது உரையில் கருத்து விளக்கத்திற்காக எடுத்தாளும் உவமங்கள் சிலவற்றை ஆராய்வதன் மூலம் இலக்கிய உரைகளிலும் உவமம் செலுத்தும் ஆளுமையைப் புரிந்து கொள்ள முடியும். பொதுவாகக் கவிதைகளில்தாம் உவமங்களைக் காண்பது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. சிறுகதை, நாவல், கட்டுரை, ஆய்வேடு என எந்தப் பதிவுகள் ஆனாலும் அவற்றில் பயன்படுத்தப்படும் உவமங்களின் ஆழத்தை அறிந்து துய்த்தல் வேண்டும் என்பதை முன்னெடுப்பதும் இக்கட்டுரையின் நோக்கங்களுள் ஒன்றாகும்.

    உவமத்தில் உலாவரும் உலகியல்

    ஒரு பொருளைக் கேட்டு வாங்கிச் சென்று திருப்பித் தந்துவிடுதல் உலகியல் நிகழ்வு. சிலர் வாங்கிப் போவதோடு சரி. திரும்பத் தரமாட்டார்கள். பொருளைக் கொடுத்தவன் அவர்களைக் காணும் பொழுதெல்லாம் அவன் நினைவில் ‘இவன் அந்தப் பொருளைப் பெற்றுச் சென்றவன் அல்லவா?’ என அவன் வாங்கிச் சென்ற பொருள் நினைவுக்கு வரும்.’ ‘அவனைப் பார்க்கிற பொழுதெல்லாம் அவன் வாங்கிச் சென்ற புத்தகம் அல்லவா நினைவுக்கு வருகிறது’ என்பது போல! இந்த உலகியலை உற்று நோக்கிய பரிமேலழகர் பொருட்பாலில் அமைச்சனின் பழக்க வழக்கம் பற்றிக் கூறும் குறட்பாவில் இதனை உவமமாகப் பதிவு செய்திருக்கிறார்.

    “போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
    தேற்றுதல் யார்க்கும் அரிது” (693)

    “அமைச்சர் தம்மைக் காக்கக் கருதின் அரிய பிழைகள் தங்கண் வராமல் காக்க; அவற்றை வந்தனவாகக் கேட்டு அவ்வரசர் ஐயுற்றால் அவரைப் பின் தெளிவித்தல் யாவர்க்கும் அரிது ஆகலான்.”

    (மேற்கண்ட தவறுகளைப் பற்றி) ஒருவன் சொல்லியக்கால் தகுமோ என்று ஐயுறாது, தகாதென்றே அவர் துணிய ஒழுகல். ஒருவாற்றால் தெளிவித்தாலும் கடன் கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறு போலக் கண்டுழியெல்லாம் அவை நினைக்கப்படுதலின் ‘யார்க்கும் அரிது’ என்றார்.

    என விளக்கவுரையில் அழகரின் உலகியல் நோக்குப் புலப்படுவதைக் காணலாம். அரசு மந்தணங்களை மாற்றாரிடம் வெளிப்படுத்துதல் என்பது அறைபோதல், அரசுனுக்குரிய மகளிரோடு உறவு கொள்வதற்கு உரிமையோடு மருவல்.  அருமையான பொருளை அபகரித்தலுக்கு அரும்பொருள் வௌவல். இவையே அரிய பிழைகள். இத்தகைய பிழைகளை இவன் செய்திருப்பானோ என அரசன் ஐயுறா வண்ணம் அமைச்சன் ஒழுக வேண்டுமாம். ஒருமுறை ஐயம் ஏற்பட்டுவிடின் பிறகு மன்னனைத் தெளிவித்தல் அரிதாம். இந்தக் கருத்தினை விளக்கத்தான் பரிமேலழகர் உலகியல் சார்ந்த ‘கடன் கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறு போல’ என்னும் உலகியல் உவமத்தைப் பயன்படுத்துகிறார்.

    இலக்கணத்தை உவமமாகக் காட்டுதல்

    ‘அண்ணல் காந்தியடிகளின் வழி செல்வோம்’ என்றால் எல்லாரும் தண்டி யாத்திரை போகவேண்டும் என்பது பொருளன்று. அவர் சொன்ன நெறிமுறைகள் என்பது பொருள். ‘கபிலரது பாட்டு’ என்னுந் தொடரில் கபிலரும் அவர் எழுதிய பாட்டும் தனித்தனியாக இருந்து உடைமைப் பொருளை உணர்த்துகிறது. அதனால் இது பிறிதின் கிழமை. இனி, அந்தப் பாட்டு அவர் எழுதியதாலேயே அவர்க்கு அது உடைமையாயிற்று. பாட்டாகிய செய்யுள் அவ்வுடைமைக்குக் காரணமாதலின்  அது செய்யுட்கிழமை ஆயிற்று. எனவே செய்யுட் கிழமை என்பது ஆறாம் வேற்றுமைப் பொருளாகிய உடைமைப் பொருளை உணர்த்தும் இரண்டு முறைகளில் பிறிதின் கிழமையின் வகைகளுள் ஒன்று என்பது பெறப்படும்.

    “பொறிவாயில் ஐந்தவித்தான் ஆற்றல் பொய்தீர் ஒழுக்க
    நெறி நின்றார் நீடு வாழ்வார்” (6)

    என்பது குறட்பா. இந்தக் குறட்பாவிற்கு,

    “மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது மெய்யான ஒழுக்க நெறியின்கண் வழுவாது நின்றார், பிறப்பின்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்.”

    என்று பொழிப்புரை எழுதியிருக்கிறார். இந்தப் பொழிப்புரையைத் தொடர்ந்து வரும் விளக்கவுரையில்,

    “ஒழுக்கநெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின் ஆண்டை ஆறனுருபு செய்யுட்கிழமைக்கண் வந்தது ‘கபிலரது பாட்டு’ என்பது போல”

    என்று ஒரு குறிப்பு வருகிறது. ஐந்தவித்தவன் இறைவன். ஐந்தவித்தான் ஆற்றல் என்றால் ஐந்தவித்தானது ஆற்றல் என்று பொருளன்று. ஐந்தவித்தானால் சொல்லப்பட்ட ஆற்றல் என்பது பொருள். சொன்னவன் ஐந்தவித்தான், சொல்லப்பட்டவை ஐவகை ஆற்றல். இவ்வாற்றல் அவனோடு பிணிக்கப்பட்டது அன்று. பிரிந்து நிற்பது. எனவே ‘ஐந்தவித்தானது ஆற்றல்’ என்னும் ஆறாம் வேற்றுமை விரிக்கப்படினும் அது ‘அவனது ஆற்றல்’ என்னும் தற்கிழமையாகாது. ‘அவனால் சொல்லப்பட்ட ஆற்றல்’ எனப் பிறிதின் கிழமையாய் நின்றதாம். எதுபோல? ‘கபிலரது பாட்டு’ என்பதுபோல!. ‘கபிலரது பாட்டு’ என்றால் ‘கபிலருடைய பாட்டு’ என்று பொருள் தந்தாலும் அவ்வுரிமைத்தொடர் கபிலரால் எழுதப்பட்ட பாட்டு’ என்று பிறிதின் கிழமையாகத்தான் அமையும். அதுபோல  ‘‘ஐந்தவித்தான் ஆற்றல்’ என்னும் தொடர் ஆறாம் வேற்றுமைக்குரியதாக விரிக்கப்படினும் அது ‘ஐந்தவித்தானது ஆற்றல் எனத்’ தற்கிழமையாக நில்லாது ‘ஐந்தவித்தானால் சொல்லப்பட்ட ஆற்றல்’ எனப் பிறிதின் கிழமைப் பொருளினைத் தருவதைக் காணலாம். இந்த விளக்கத்திற்குக் ‘கபிலரது பாட்டு’ என்னும் இதனைப் போன்ற இலக்கணப் பயன்பாடு உடைய மற்றொரு தொடரை உவமமாகப் பயன்படுத்தியுள்ளார் அழகர்.

    பாமர வழக்கை உவமமாக்குதல்

    ‘முரண்’ என்பது எல்லாப் படைப்புக்களுக்கும் அழகு சேர்க்கும் தொடையழகு, ‘பகலில் ஒரு நிலவு!’ ‘முள்ளும் மலரும்’ ‘பஞ்சும் நெருப்பும்’ ‘கருப்பும் சிவப்பும்’ என்பதுபோல. ‘இருளும் ஒளியும்’ என்பது மக்கள் வழக்கு!. புத்தாண்டு பிறந்தவுடன் இருளாண்டு கழிந்தது இனி வரும் ஆண்டு ஒளியாண்டு’ என்பது ஒரு மாற்ற முடியாத முரண். இந்த முரணைத் தனது உரையில் வைத்துத் திருக்குறளுக்குக் கருத்து விளக்கம் தந்திருக்கிறார் பரிமேலழகர்.

    “களவென்னும் காரறிவாண்மை அளவென்னும்
    ஆற்றல் புரிந்தார்கண் இல்” 287

    “களவு என்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை உடையராதல் உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமையை விரும்பினார்கண் இல்லை”

    “களவும் துறவும் ‘இருளும் ஒளியும்’ போலத் தம்முள் மாறாகலின் ஒருங்கு நில்லா என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது”

    எனப் பொழிப்புரையும் விளக்கவுரையும் எழுதியிருக்கிறார் அழகர்.

    1. களவின்கண் கன்றிய காதலவர் அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் (286)
    2. பொருள் கருதிப் பொச்சாப்பு பார்ப்பார்கண் அருள் கருதி அன்புடையர் ஆதல் இல் (285).

    இவையிரண்டும் இந்தப் பாடலுக்கு முந்தைய குறட்பாக்கள். ‘கள்ளாமை’ என்பது உள்ளத்தினாலும் கள்ளக் கருதாமை என்னும் பொருளைத் தரும். உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவது இல்லறத்தில் இயலாது, துறவறத்திற்கும் அரியது. துறந்தார்க்குரித்தாய அறங்களுள் இது தலையாயது. துறவுநிலையில் உள்ளவர்கள் களவுமனம் கொண்டவர்களாக இருப்பின் துறவு நிலையில் அமைதி கிட்டாது. ஞானம் பிறவாது. இது திருவள்ளுவம். காரணம் துறவும் களவும் முரண். எதுபோல? இருளும் ஒளியும் போல. கரவு இருள். துறவு ஒளி. ‘இருளோடு சேர்ந்த ஒளி’ என்பது எங்கும் இல்லை. இது இருக்கும் இடத்தில் அது இருக்காது. அது இருக்கும் இடத்தில் இது இருக்காது. எனவே களவு மனம் கொண்டவர்களிடத்தில் துறவு காழ்கொள்ளுவதில்லை என்பதை விளக்கிய மூன்று பாடல்களுக்கும் ஒரே உவமத்தைப் பயன்படுத்தி விளக்கமளித்திருக்கும் அழகரின் உரைத்திறன் இது!.

    நத்தையெழுத்து நல்லெழுத்தாகாது

    யானைக்கும் அடிசறுக்கும் என்பது பழமொழி. அதனால் அடி சறுக்குவதனாலேயே அது யானையாகிவிடாது. கடற்கரையில் நத்தை ஊர்ந்து செல்லும். அதன் கூரிய கால்களால் மற்றும் கொம்புகளால் கோடுகள் சில உருவாகும். அவை எழுத்துக்களைப் போலத் தோன்றும். ஆனால் அவை எழுத்துக்கள் அல்ல. அந்த எழுத்துக்களைக் கொண்டு இலக்கியம் செய்ய முடியாது.  கற்க முடியாது.  நத்தைக்கு ‘ஏரல்’ என்பது பெயர். மணலில் ஊரும் நத்தையின் கோடு எழுத்தாவதில்லை. ஆயினும் அதனை யாரும் மதிப்பதில்லை. காரணம் கல்மேல் எழுத்து என்பது இந்த மண்ணின் எழுத்துக் கொள்கை. நீர்மேல் எழுத்து என்பதும் ஏரல் எழுத்து என்பதும் ஒரே தன்மையன. அறிவுடையார் அதனை எழுத்தாகவோ இலக்கியமாகவோ கொள்ளார்.  கல்லாதவன் ஊழ் காரணமாகச் சிற்சில பொழுதுகளில் கற்றாரும் வியக்கும் வண்ணம் கருத்துரை சொன்னாலும் அறிவுடையார் அதனை மதியார்.

    “கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும்
    கொள்ளார் அறிவுடையார்” (404)

    “கல்லாதவனது நுண்மை ஒரோவழி நன்றாயிருப்பினும் அறிவுடையார் அதனை ஒண்மையாகக் கொள்ளார்”

    “(நன்றாயினும் – நன்றாகாது) ஆயிற்றாயினும் ஏரல் எழுத்துப் போல்வதோர் விழுக்காடாதலின் நிலைபெற்ற நூலறிவுடையார் அதனை மதியார் என்பதாம்”

    நத்தையின் கோடு எழுத்தாகாது. கல்லாதவரின் நுண்மை அறிவாகாது. கற்றாரின் கையெழுத்தைவிட நத்தையின் எழுத்து அழகாக இருப்பினும் ஏற்பாரில்லை. கல்லாதவர்களின் கருத்துக்கள் ஒரோவழிச் சிறப்பாயிருப்பினும் அதனை மதிப்பாரில்லை என்னும் திருக்குறள் கருத்தினை ‘ஏரல் எழுத்து’ என்பது கொண்டு விளக்கிய அழகர் உரைத்திறன் இது.

    அடைச்சொற்களுக்கும் உவமம் காட்டும் அழகர் 

    ‘இனியவை கூறல்’ என்பது ஒரு அதிகாரத்தின் பெயர். இனிய சொற்களைப் பேச வேண்டும் என்பது மட்டுமன்று. இன்னாத சொற்களைப் பேசுதல் கூடாது என்பதும் அந்த அதிகாரம் சொல்லவரும் கருத்து. இனிய சொற்களைப் பேசுவதினால் உண்டாகும் நன்மையையோ இன்னாத சொற்களைப் பேசுவதால் உண்டாகும் தீமையையோ திருக்குறள் குறிக்கவில்லை. அழகர் கண்டறிகிறார். இனிய சொற்களை ஏன் பேச வேண்டும்? இன்னாத சொற்களை ஏன் பேசக்கூடாது என்னும் வினாவைப் பரிமேலழகர் தமக்குத் தாமே எழுப்பிக் கொள்கிறார்.

    “இனிய உளவாக இன்னாத கூறல்
    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” (100)

    “அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க, அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல்; இனிய கனிகளும் தம் கைக்கண் உளவாயிருக்க அவற்றை நுகராது இன்னாத காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும்”

    என்று பொழிப்புரை எழுதியவர்,

    “இனிய கனிகள் என்றது ஔவை உண்ட நெல்லிக்கனிபோல் அமிழ்தாவனவற்றை இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய் போல நஞ்சாவனவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம்”

    என விளக்கவுரை எழுதியிருக்கிறார். இந்தக் குறட்பாவிலும் அதற்கான உரையிலும் கவனத்திற்குரியன பல.

    1. ‘இனிய, இன்னாத’ என்றவாறு உவமத்திற்கு அடைபுணர்க்கப்பட்டுள்ளன.
    2. பொருளுக்கு அடைபுணர்க்கப்படவில்லை.
    3. ‘இனிய கனி’ என்றும் ‘இன்னாத காய்’ என்றும் பரிமேலழகர் தாம் வருவித்துக் கொண்ட தொடருக்கு உரையெழுதுகிறார்.
    4. ‘இனிய’ ‘இன்னாத’ சொற்களுக்கான காரணம் அறப்பயன் என்பதாகக் கொள்ளுகிறார்.
    5. கூடுதலாக இன்னாத சொற்கள் அறப்பயன் நல்காததோடு பாவத்தை நல்கும் என்பதாகவும் எழுதுகிறார்.

    இங்கே பதிவிடப்பட்ட இவைகள் திருக்குறளில் சொல்லப்படாத கருத்துக்கள். அறப்பயன் தருவதால் சொற்கள் இனிமையாயின. அறப்பயன் தராதது மட்டுமன்றி உயிருக்கும் கேடு தரும் என்பதால் சொற்கள் இன்னாதவாயின. இவற்றுக்கு ‘ஔவை உண்ட நெல்லிக்கனி’ என்னும் புறநானூற்றுப் பதிவையும் ‘எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காய் தெங்காகா’ என்னும் உலகியல் பழமொழியையும் இணையாகக் கொண்டு உவமித்துக் கருத்து விளக்கம் தருகிறார். ஒரே குறட்பாவின் இரண்டு கருத்துக்களை இருவேறுபட்ட உவமங்களால் விளக்கியிருப்பதே அழகரின் உரைத்திறனாகும்.

    தேனும் நெய்யும் சேர்ந்தால் நஞ்சு

    ‘மாறுபாடில்லாத உணவு’ என்னும் தொடர் திருக்குறளில் 944, 946 என்னும் இரண்டு குறட்பாக்களில் பயின்று வருகிறது. முதற் குறட்பாவில் வந்திருக்கும் மாறுபாடில்லாத உணவு எது என்பதை விளக்குவதற்காகப் பரிமேலழகர் கையாண்டிருக்கும் உவமமே தேனும் நெய்யும் சேர்ந்தால் நங்சாகும்’ என்பதாகும்.  முன் உண்ட உணவு செரித்தலும் வேண்டும் செரித்த உணவு குருதியாக மாறவும் வேண்டும். அதற்குச் சிறிது கால அவகாசம் வேண்டும். இதனைத்தான் ‘அற்றதறிந்து’ என்னும் சொல் குறிக்கிறது. ‘’அற்றாலும் அதன் புரதம் அறாதாகலின்’ என்பார் பரிமேலழகர். மாறு கொள்ளாத உணவு வகைகளை அவர் விரிவாகப் பட்டியலிடுகிறார்.

    1. உண்பான் பகுதியோடு மாறுகொள்ளாமை
    2. கால இயல்போடு மாறுகொள்ளாமை
    3. சுவை வீரியங்களால் தம்முள் மாறு கொள்ளாமை

    இவை எப்படி எதனால் மாறுபடும் என்பதையும் விளக்கியுள்ளார்.

    1. வாத, பித்த, ஐயங்களான் ஆய பகுதிகளுக்கு அடாதவற்றைச் செய்தலும்
    2. பெரும்பொழுது, சிறுபொழுது என்னும் கால வேறுபாடுகளுள் ஒன்றற்கு ஆவன பிறிதொன்றற்கு ஆகாமையும்
    3. தேனும் நஞ்சும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல்வனவுமாம்.

    “அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
    துய்க்க துவரப் பசித்து” (944)

    “முன்னுண்டது அற்றபடியை அறிந்து பின் மிகப்’ பசித்து உண்ணுங்கால் மாறுகொள்ளாத உணவுகளைக் குறிக்கொண்டு உண்க”

    “தேனும் நெய்யும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல” (944)

    என்று அமைந்திருக்கிறது. மாறுபட்ட சுவைகளின் இணைப்பு உடல்நலத்திற்குக் கேடு தரும். இன்றைக்கும் நடப்பியலில் மீனையும் கோழியையும் ஒரே நேரத்தில் உண்ணக் கூடாது என்பது பின்பற்றப்படுகிறது. இந்த மாறுபட்ட சுவைக்குத்தான் இருவேறுபட்ட சுவைகளைக் கொண்ட தேனையும் நஞ்சையும் உவமாக்குகிறார் பரிமேலழகர். அதாவது இனிப்புச் சுவையுடைய தேனும் அதனின் மாறுபட்ட சுவையுடைய நெய்யும் தனித்தனியாக நலம் செய்யினும் இணைந்தால் கேடுதரும். இதனைப்போல முரண்பட்ட சுவையுடைய உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும் என்பதற்காக இந்த இணைப்பை அழகர் உவமமாக்கியிருப்பதுதான் அவர்தம் உவமத்திறனாகும்.

    பசும் பானை நீரும் பரிமேலழகர் உரையும்

    இலக்கியப் பயன்பாடு, உலக வழக்கு என்னும் இரண்டிடத்தும் சிறக்கின்ற சில உவமங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று வேகாத மண்பானையில் ஊற்றிய நீர் போல’ என்பது மழலையைப் ‘பச்சை மண்’ என்பதும் மகப்பேறுற்ற மகளிரை ‘பச்சை உடம்பு’ என்று சொல்வதும் உலக வழக்கு. பச்சைப் பானையில் நீரூற்றுதல் என்பது செயல் ஒருங்கிணைந்து உருப்படாது என்பதற்கும் கனவாய்க் கற்பனையாய் மெல்லப் போய் முடிந்துவிடும் என்பதற்கும் வழக்கில் சொல்லப்பட்டு வரும் உவமையாகும். இலக்கியத்தில் திருவள்ளுவர் இந்த உவமத்தைச்,

    “சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமட்
    கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று” (660)

    என்னும் குறட்பாவில் கையாள்கிறார். அல்நெறியில் தேடிய செல்வச் சேமிப்பு பசிய மட்கலத்துள் பெய்த நீருக்கு ஒப்பாகும் என்பது கருத்து. திருவள்ளுவருக்கு முன் இந்த உவமத்தைத் தொல்காப்பியர் தலைவி தன் அகவுணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கிற்குப் பயன்படுத்தியுள்ளார்.

    “தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்
    எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லைப்
    பிறநீர் மாக்களின் இன்றிய ஆயிடைப்
    பெய்ந்நீர் போலும் உணர்விற்று என்ப” (1064)

    என்னும் நூற்பாவில் இந்த உவமம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் அழகையும் ஆழத்தையும் உள்வாங்கிய பரிமேலழகர் தனது உரையிலும் எடுத்தாண்டுள்ளார்.

    “அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
    புல்லார் புரள விடல்” (755)

    “தாம் குடிகள் மாட்டுச் செய்யும் அருளொடும், அவர் தம்மாட்டுச் செய்யும் அன்பொடும் கூடி வாராத பொருளீட்டத்தை அரசர் பொருந்தாது கழியவிடுக”

    “கூடிவருதல் ஆறில் ஒருபங்காய் வருதல் அவ்வாறு வாராத பொருளீட்டம் பசுமட்கலத்துள் செய்தானையும் கொண்டு இறத்தலின் அதனைப் புல்லார் என்று ஒழியாது புரளவிடல் என்றும் கூறினார்”

    தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் எனத் தொடங்கும் குறட்பாவால் அரசனுக்குரிய திறை குடிமகனின் வருமானத்தில் ஆறில் ஒருபங்கு என்பது பெறப்படும். அதற்கு மாறாக வரும் வருமானம் அல்நெறியால் பெறப்படுவதாகக் கருதப்படும். அவ்வருமானத்தைக் கருவூலத்தில் சேமித்தால் சேமிக்கப்படும் செல்வமும் அதனைச் சேமிக்கின்ற கருவூலமும் ஒருங்கே அழியும் என்பது கருத்து. இதனைத்தான் ‘செய்தானையும் கொண்டு இழத்தலின்’ என்னும் தொடர் குறிக்கிறது. ஆனால் இவ்வாறு உரை சொல்வதற்குக் குறட்பாவில் சொல்லோ இடமோ இல்லை. ‘சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல்’ (660) என்னும் குறட்பாவைக் கருத்திற் கொண்டே இதனை எழுதுகிறார். மேலும் அந்தக்  குறட்பாவின் கருத்தாக, ‘அரசனும் செல்வமும் சேரப்போம்’ என்பதாம் என உரைத்திருப்பதும் காண்க. அகத்திணைப் பொருள் விளக்கத்திற்காகத் தொல்காப்பியத்தில் கண்ட உவமத்தைத் திருவள்ளுவர் பொருளதிகாரக் கருத்துக்குப் பயன்படுத்தி நூல் செய்கிறார். அவ்விரண்டனையும் உள்வாங்கிய பரிமேலழகர் அவ்விரண்டும் பொருளாகாத வேறொரு குறட்பாவின் பொருள் விளக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதே அழகரின் உவமத்திறன் ஆகும்.

    நிறைவுரை

    நூல் நுகர்ச்சிக்குக் காரணங்கள் பல. கருத்து, சொல்லாட்சி, யாப்பு, வெளிப்பாட்டு உத்தி, உணர்ச்சி, வண்ணனை, உவமங்கள் எனப் பல்வகையாக அது பல்கும். அவற்றுள் உவமத்தால் ஒரு நூலை நோக்குவதும் மதிப்பிடுவதும் கற்பாரின் உளப்பண்பைச் சார்ந்தது. தொடக்கத்தில் சொல்லியது போலத் திருக்குறளின் உவமங்களும் பொருள்களும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாய்ப் பிரிக்க முடியாததுபோலப் பரிமேலழகரின் உரையில் காணப்படும் உவமங்களும் குறட்பாவின் கருத்துக்களோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. மேலாகத் திருக்குறளில் காணமுடியாத இலக்கண உவமங்களைப் பரிமேலழகர் காட்டியிருப்பது மொழி, சிந்தனை, இலக்கிய உத்தி ஆகியவற்றின் வளர்ச்சிநிலையைக் காட்டுவதாகக் கொள்ளமுடியும். பரிமேலழகர் காட்டிய இந்த நெறியைப் பிற்காலத்தில் கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசர், உவமைக் கவிஞர் சுரதா முதலியோர் பின்பற்றிச் சிறந்தனர். திருக்குறள் உவமங்களும் அழகரின் உவமங்களும் துலாக்கோலின் தட்டுக்கள் இரண்டிலும் சமமாகவே நிற்கின்றன என்பதைக் குறிப்பிட்டு இந்தக் கட்டுரையும் ‘பரிமேலழகர் உரைத்திறன்’ என்னும் இக்கட்டுரைத் தொடரும் நிறைவு பெறுகிறது!. வல்லமைக்கு நெஞ்சார்ந்த நன்றி!

    (நிறைவு)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 24

    பரிமேலழகர் உரைத்திறன் – 24

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    பரிமேலழகரும் புறநானூறும்

    முன்னுரை

    பரிமேலழகர் தாம் எழுதிய திருக்குறள் உரையில் தாம் கற்றறிந்த பல நூல்களைப் பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியிருக்கிறார். அறிந்த எல்லா நூல்களையும் அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பயன்படுத்திய நூல்களிலிருந்தும் ஒரே எண்ணிக்கையில் எடுத்துக்காட்டுக்களைத் தரவில்லை. தந்த எடுத்துக்காட்டுக்களையும் ஒரே தன்மையை விளக்குவதற்காகவும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. குறட்பாவுக்குத் தாம் சரியென்று கருதிய கருத்தியலை முன்வைத்து உரையெழுதும் பரிமேலழகர், எந்த விளக்கத்திற்கு எந்த எடுத்துக்காட்டைத் தர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார். சொற்பொருள் விளக்கம், பொருளமைதி, இலக்கணக் கொள்கை, வரலாற்றுப் பதிவு, பண்பாட்டுப் பதிவு எனப் பல நோக்கங்களுக்காகப் பல இலக்கியங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். இத்தகைய பயன்பாட்டிற்கு முதலில் திருக்குறளையே பயன்படுத்திக் கொள்வது பற்றிய கருத்துக்கள் முந்தைய கட்டுரை ஒன்றில் விளக்கப்பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய நூல்களில் அதிகமான எடுத்துக்காட்டுக்களுக்காகப் பயன்பட்ட நூல் ‘புறநானூறு’. அந்நூலிலிருந்து அவர் தரும் எடுத்துக்காட்டுக்களையும் அவை தரும் விளக்கங்களையும் சுருக்கமாக ஆராய்வதாக இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

    அறமா? பொருளா? இன்பமா? (அதிகார விளக்கம்)

    கல்வியா? செல்வமா? வீரமா? எனத் தொடங்கும் திரையிசைப்பாடலைப் பலரும் கேட்டிருக்கக்கூடும். அது இணையான பொருட்களை எடைபோடுகின்ற பாடல். எது சிறப்பு என்று வினவுகிற பாடல். அறம் பொருள் இன்பம் என்னும் தொடர் தம்முள் மாறுபட்டும் வழங்கப்படுகிறது. ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு’ என்பது தொல்காப்பியம் கண்ட தலைகீழ் பாடம். ‘வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவணது எய்த இருதலையும் எய்தும்’ என்பது நாலடியார். இத்தகைய சிந்தனைகளையெல்லாம் உள்வாங்கிய திருவள்ளுவர் ‘அறன் வலியுறுத்தல்’ என்னும் அதிகாரத்தைப் பாயிரத்துள் அமைத்திருக்கிறார். அறம் பொருள் இன்பம் என்னும் முப்பொருளைப் பாடியிருக்கும் திருவள்ளுவர் அறன் வலியுறுத்தல் என்றால் அறத்தினை மட்டுமே வலியுறுத்துகிறாரா என்னும் ஐயம் தோன்றக் கூடும். நம்முள் பலருக்கும் வராத இந்த ஐயம் பரிமேலழகருக்கும் வந்திருக்கிறது. ‘அறன் வலியுறுத்தல்’ என்னும் தொடருக்கு,

    “அம்முனிவரால் உணர்த்தப்பட்ட அம்மூன்றனுள் ஏனை பொருளும் இன்பமும் போலாது அறன் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயத்தலான் அவற்றின் வலியுடைத்து என்பது கூறுதல்” (பாயிரம் — அறன் வலியுறுத்தல் – அதிகாரப் பொருண்மை விளக்கம்)

    என்று தொடர் விளக்கம் தந்திருக்கிறார். வழக்கில் வலியுறுத்தல் என்பதை ஒரு சொல்லாகவே நோக்கிய நம்மில் பலரும் வலி என்பது வலியறிதல் என்னும் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் வலிமையை உணர்த்தும் என்பதை அறிவதில்லை. அறம் பொருளைவிட வலிமையானது, இன்பத்தைவிட  வலிமையானது என்று கூறுவதோடு அதற்கான காரணத்தையும் தொடர்ந்து கூறுகிறார். அறம் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் தரும். மற்ற இரண்டும் தராது.

    அறத்தை அறத்துப்பாலில் கூறிய வள்ளுவர் பொருளைப் பொருட்பாலில் கூறுகிறார். அதற்கு விளக்கமளித்த பரிமேலழகர் ‘பொருள் இன்பங்களுள் இருமையும் பயப்பதாய பொருள்’ (பொருட்பால் முன்னுரை) என்று தெளிவாக்குகிறார். இன்பத்தைப் பற்றிச் சொல்ல வருமிடத்து ‘இம்மையே பயப்பதாய இன்பம்’ (இன்பத்துப்பால் முன்னுரை) என்று பொருள் வரையறை செய்கிறார். எனவே அறம் மூன்றுவகையான பயனைத் தரும். அறமே மற்ற இரண்டினும் வலியுடையது என்னும் கருத்தினை அவர் புறநானூற்றிலிருந்து  பதிவிறக்கம் செய்து கொள்கிறார்.

    “சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்து வழிப் படூஉம் தோற்றம் போல” (புறம். 31)

    என்னும் எடுத்துக்காட்டால் விளக்குகிறார். அதிகாரத்தின் தொடக்கத்திலேயே அது பற்றிய பொருள் வரையறை தெளிவானால் ஏனைய அதிகாரக் கருத்துக்களும் தெளிவாகும் என்பது அவர் கருத்து. அதற்கே புறநானூற்றைத் துணை கொள்கிறார்.

    இலக்கணம் இலக்கியத்திற்காகவே

    ‘ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்’ என்பன மூன்றாம் வேற்றுமைக்குரிய உருபுகள் ஆகும். இந்த ஐந்து உருபுகளுள் ‘ஆல் ஆன்’ என்னும் இரண்டும் கருவிப் பொருளிலும் கருத்தாப் பொருளிலும் வரும், ‘மழையினால் குளம் நிறைந்தது’, ‘கோலால் எழுதினான்’, ‘இதனான் முடிக்கும்’, ‘கலைஞரால் கட்டப்பட்டது’, ‘சாமிநாத அய்யரால் பதிப்பிக்கப்பட்டவை’ என்பன போல. ‘ஆன்’ உருபு தற்போது வழக்கில் இல்லை. ‘ஒடு, ‘ஓடு’, ‘உடன்’ என்னும் மூன்றும் உடன்நிகழ்ச்சிப் பொருளில் வரும். ‘அமைச்சரோடு உதவியாளர் சென்றார்’, ‘அமைச்சருடன் ஒப்பந்தக்காரர் சென்றார்’ என்பன போல. இவற்றால் ஐந்து உருபுகள் கொண்ட மூன்றாம் வேற்றுமை மூன்று பொருண்மைகளில் வரும் என்பது தெரியவரும். வந்தாலும் இவ்வைந்து உருபுகளும் மூன்றாம் வேற்றுமைக்குரியனவே என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

    “அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
    புறத்த புகழு மில”  (39)

    என்ற குறட்பாவிற்கு,

    ‘இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பமாவது அதனோடு பொருந்தாது வருவனவெல்லாம் இன்பமாயினும் துன்பத்தினிடத்த., அதுவுமேயன்றிப் புகழுடைய அல்ல”

    என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “ஆன் உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது ‘தூங்கு கையால் ஓங்கு நடை’ என்புழிப்போல” (புறம் 22)

    என்று விளக்கவுரை எழுதியிருக்கிறார். ‘அறத்தான் வருவதே இன்பம்’ என்னும் தொடரில் பயின்று வரும் ‘ஆன்’ என்னும் வேற்றுமை உருபு அவர் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தப் பாட்டில் சொல்லப்படுவது காம இன்பத்தினை. அது இல்லறத்தோடு இணைந்திருக்க வேண்டிய ஒன்று. ‘பிறன்மனை விழைதல்’ காம இன்பம் தருமெனினும் அது துன்பத்தைத் தரும் புகழைத் தராது. இருக்கின்ற புகழை அழிக்கும். இழிவைத்தரும். அந்த வேற்றுமை உருபிற்கு இலக்கண அடிப்படையில் கருவிப்பொருளைக் கொண்டால் ‘இல்லறத்தால் வருவது இன்பம்’ எனப் பொருள் மயக்கம் உண்டாகும். ‘இல்லறத்தோடு பொருந்தி வருவதே காம இன்பம்’ என்னும் பொருள் கிட்டாது. எனவே பரிமேலழகர் ‘ஆன்’ என்னும் கருவிப்பொருள் உருபு உடன்நிகழ்ச்சிப் பொருள் தந்ததாகக் கருதி எழுதுகிறார். சரி! பரிமேலழகருக்காக வேற்றுமை இலக்கணம் மாறுபடுமா? என்றால் அவர் தான் கொண்ட அதே பொருளை மற்றொருவரும் கொண்டிருக்கிறார் என்பதற்கான இலக்கியச் சான்றினைப் புறநானூற்றிலிருந்து எடுத்துக்காட்டுகிறார். அந்த எடுத்துக்காட்டில், யானையின் வரவு கூறப்பட்டுள்ளது. ஆடிவரும் அதன் துதிக்கையும் அசைநடையும் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஆனால் பாட்டு எப்படி அமைந்திருக்கிறது? ‘தூங்கு கையான் ஓங்கு நடைய’ என்றிருக்கிறது. ‘தூங்கு’ என்றால் ‘தொங்கு’ என்பது பொருள். ‘தொங்குகின்ற கையால் ஓங்கிய நடை’ என்று வராது.  நடைக்குக் கை காரணமல்ல. கையொடு நடையாம். ‘கையான் நடை’ என்பதைக் ‘கையொடு நடை’ என மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும். கொள்ளவே ‘தூங்கு கையொடு ஓங்கு நடைய’ என்பது பெறப்படும். இங்கே ‘ஆன்’ என்னும் கருவிப்பொருள் உருபு, உடன்நிகழ்ச்சிப் பொருளில் வந்தது. இவ்விரண்டு உருபுகளும் மூன்றனுக்குரியன வெனினும் இலக்கியப் பொருள் நுட்பத்திற்காக மாறிய பொருள் தந்து அமைந்திருக்கிறது என்பதைப் பரிமேலழகர் புறநானூறு கொண்டு உணர்த்தியிருக்கிறார்.

    கோட்டுப் பூ என்றால் கிளைப்பூ அல்ல

    இலக்கணப் பொருண்மை விளக்கத்திற்காகப் புறநானூற்று வரிகளைப் பயன்படுத்திக் கொண்ட பரிமேலழகர் தான் கொண்ட பொருளுக்குத் துணையாகவும் புறநானூற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார். நீர்ப்பூ, நிலப்பூ, கோட்டுப்பூ, கொடிப்பூ எனப் பூ நால்வகைப்படும். அவற்றுள் கோட்டுப்பூ என்பது கிளையில் மலரும் பூ. அது இலைகளுக்கு நடுவே மலராது. திருக்குறள் இன்பத்துப்பாலில் தலைவன் தலைவிக்கு இடையே நிலவிய ஊடல் பற்றி உசாவிய தோழிக்குத் தலைவன் சொல்கிறான்,

    “கோட்டுப்பூச் சூடினும் காயும், ‘ஒருத்தியை
    காட்டிய சூடினீர்’ என்று” (1313)

    “கோடுதலைச் செய்யும் மாலையைச் சூடினேன் ஆயினும், நும்மால் காதலிக்கப்பட்டாள் ஒருத்திக்கு இப்பூவணி காட்ட வேண்டிச் சூடினீர் என்று வெகுளா நிற்கும்”

    அக்காலத்தில் (தற்காலத்தில் அருகிய பழக்கம் இது) ஆண்களும் குஞ்சி வளர்த்துப் பூச்சூடுவர். ‘குஞ்சி’ என்பது ஆண்பாலுக்குரியது. ‘குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்’ என்பது நாலடியார் (131). ‘கூந்தல்’ என்பது பெண்பாலுக்குரியது. அந்தக் குஞ்சியில் தலைவன் சூடியது கோட்டுப்பூ. ஊடலுக்கு உரிய திணை மருதம். அத்திணைக்குரிய பூ கோட்டுப்பூ அல்ல. நீர்ப்பூ! மருதம் வயலாகிய நீர்ப்பகுதி! தலைவன் மருத நிலத்துப் பூவைச் சூடாமல் பிறிதொரு நிலத்துப் பூவைச் சூடியதே தலைவியின் ஊடலுக்குக் காரணம் என்று பிற உரையாசிரியர்கள் கருதினார்கள். ஆனால் பரிமேலழகரோ ‘கோட்டுப்பூ’ என்பதைத் தொழில் அடிப்படையில் வந்த பெயராகக் கருதி உரையெழுதுகிறார். எப்படி?

    ‘கோடுதலைச் செய்யும் மாலை’

    ‘கோடு’ என்பதைக் கிளையென்னும் பெயர்ச்சொல்லாகக் கொள்ளாமல் முதனிலைத் தொழிற்பெயராக் கொள்கிறார். கொண்டு, ‘பூ’ என்பதைப் பூக்களால் தொடுக்கப்பெற்ற மாலைக்கு ஆகுபெயராக்குகிறார்.

    பூ – ஆகுபெயர்

    என்று எழுதுகிறார். சரி. இப்படி கோட்டுப்பூ என்பதற்கு அவர் ஏன் ‘வளைந்த மாலை’ என்று பொருள் கொண்டார். தலைவன் உண்மையில் பிற நிலத்துப் பூவை அணியவில்லை. அணிந்திருந்தால் ஊடல் உண்மையாகிவிடும். ஊடல் என்பது கூடலை மிகுவிக்கும் பொய்யாக வருவித்துக் கொண்ட காரணியன்றி உண்மையன்று. அதற்கான காரணம் பொய். எனவேதான் ‘வளைந்த மாலை’ என்று பொருள் கொள்கிறார். மேலும் அதிகாரம் ‘புலவி நுணுக்கம்’. இவ்வாறு ‘வளைந்த மாலை எனத்  தன்னிச்சையாகப் பொருள் கொள்ள இயலுமா? என்னும் வினாவை அவரே எழுப்பிக் கொண்டு அதற்கான சான்றினைக்,

    “கோட்டம் கண்ணியும் கொடுந்திரை காடையும்’ (புறம். 275)
    என்றார் பிறரும்”

    எனப் புறநானூற்று வரிகளை எடுத்தாள்கிறார். இந்தப் புறநானூற்றுப் பாடலுக்குரிய சிறப்பு இதன் ஆசிரியர் ஒரூஉத்தனர் என்பார் பாடிய ஒரே பாடல் இது மட்டுமே. இந்தப் பாடலின் தொடக்க அடியில் போர்க்களத்து வீரனின் தோற்றப் பொலிவைக் குறிப்பிடும் ஆசிரியர் ‘கோட்டம் கண்ணி’ என்ற தொடரை ‘வளைந்த மாலை’ என்னும் பொருளில் பயன்படுத்தியிருக்கிறார். இதனைத் தம் நினைவுப் பேழையிலிருந்து பரிமேலழகர் காட்டி ஒரு நூல் தொடருக்கோ சொல்லுக்கோ சொல்லப்படுவது புத்துரையேயானாலும் அதற்கான சான்றுகளைத் தருவதையும் தமது உரைக்கொள்கையாகக் கொள்கிறார் என்பதை அறிய முடிகிறது.

    ஒன்றில் இரண்டும் இரண்டில் ஒன்றும்

    பரிமேலழகர், புறநானூற்றில் எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதை அவருடைய உரையால் அறிந்து கொள்ளலாம். இக்காலத்தில் உரையெழுதும் அறிஞர் பெருமக்கள் உலகப் பெருநூலைக் கையடக்கப் பதிப்பாகக் கொண்டுவருவதில்தான் கவனமாயிருக்கிறார்களே தவிர, நூல்  நுவலும் பொருளாழத்தை உணர்ந்து புத்துரை கண்டார் இலர். அளவையியல் நுட்பத்தோடு தமது உரையை எழுதும் அழகர், ஒரு நூலை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்னும் முறையறிந்தவர். ஒரே திருக்குறளுக்கு இரண்டு புறநானூற்று எடுத்துக்காட்டுக்களைத் தருகிறார். அதே நேரம் ஒரே புறநானூற்று வரியை இரண்டு குறட்பாக்களுக்கும் பொருத்திக் காட்டுகிறார்.

    “புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
    நட்பாங் கிழமை தரும்” (765)

    என்று ஒரு குறட்பா. இது உண்மையான நட்பிற்கு மெய்ப்புணச்சியும்  சொல்லாடலும் வேண்டுவதில்லை. உணர்ச்சி ஒத்திருப்பதே அதன் அடையாளமாகும் என்னும் கருத்தில் அமைந்திருக்கிறது.

    “ஒருவனோடு ஒருவன் நட்பாதற்குப் புணர்ச்சியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை. இருவருக்கும் ஒத்த உணர்ச்சிதானே நட்பாம் உரிமையைக் கொடுக்கும்”

    புணர்ச்சி ஒரு தேயத்தராதல். “இன்றே போல்க நும் புணர்ச்சி என்றதும் அதனை. ‘பழகுதல்’ பலகாற் கண்டும் சொல்லாடியும் மருவுதல். இவ்விரண்டும் இன்றிக் கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சி ஒப்பின் அதுவே உடன் உயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும்.

    என்று பொழிப்புரையும் விளக்கவுரையும் எழுதியிருக்கும் பரிமேலழகர், விளக்கவுரையில் நட்பாகிய பொருண்மையை விளக்க இரண்டு முறை  புறநானூற்று வரிகளை இரண்டுவகையான பொருண்மை விளக்கத்திற்காகப் பயன்படுத்தியிருக்கிறார்.

    1. சோழன் குராப்பள்ளி துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்தாரைக் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது. புணர்ச்சியென்பது அவர்களைப் போல ஓரிடத்திருந்தது என்பதை விளக்குதற்கு ‘இன்றே போல்க நும் புணர்ச்சி’ என்ற தொடரைப் பயன்படுத்தியிருக்கிறார்.
    1. பழகுதலாகிய சொல்லாடுதலைப் பற்றிய விளக்கம் தருகிறார். அதனைத் தொடர்ந்து புணர்ச்சியும் பழகுதலும் இல்லாததோர் உயரிய நட்பினை விளக்குவதற்காகக் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையர் நட்பினைப் புறநானூற்றுப் பதிவிலிருந்து எடுத்து விளக்குகிறார்.

    புறநானூறு ஒரு இலக்கியம். அதனைத் தமிழினத்தின் வரலாற்று ஆவணம் எனக் கருதும் வரலாற்றறிஞரும் உளர். ஆனால் இலக்கியத்தை வரலாற்று ஆவணமாகக் கருதுவது குறைந்த விழுக்காட்டுப் பயனையே தரும் என்பர் சிலர். ஆனால் பரிமேலழகர் புறுநானூற்றுப் பதிவுகளை வரலாற்று நிகழ்வுகளாகவே கருதியிருக்கிறார் என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு சான்றாகலாம்.

    இது ஒரு குறட்பாவிற்கு இரண்டு புறநானூற்றுப் பதிவுகள் என்றால் மற்றொரு குறட்பாவில் ஒரே புறநானூற்று வரிகளை இரண்டு வகையான விளக்கங்களுக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்.

    ‘நிலவரை நீள் புகழ் ஆற்றின் புலவரைப்
    போற்றாது புத்தேள் உலகு” (234)

    “ஒருவன் நில எல்லைக்கண்ணே பொன்றாது நிற்கும் புகழைச், செய்யுமாயின், புத்தேள் உலகம் அவனையல்லது தன்னை எய்தி நின்ற ஞானிகளைப் பேணாது”

    “புகழுடம்பான் இவ்வுலகும் புத்தேள் உடம்பால் அவ்வுலகும் ஒருங்கே எய்தாமையின் ‘புலவரைப் போற்றாது’ என்றார். அவை இரண்டும் உலகும் ஒருங்கு எய்துதல்”

    என்று பொழிப்புரையும் விளக்கவுரையும் எழுதிப்,

    ‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
    வலவன் ஏவா வானவூர்தி,
    எய்துப என்ப தம் செயலினை முடித்தெனக் கேட்டல்”

    (சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய பாடல் (27)) என்னும் பாடலை எடுத்துக்காட்டாக்கியிருக்கிறார்.

    ஞானிகளைப் பேணாது என்றது, “இம்மையிற் புகழையீட்டாமல் அறிவை மாத்திரம் பெற்று யோக முயற்சியால் மறுமையில் தேவ உடம்பைப்  பெற்றவர்களினும், இம்மையிற் புகழையும் ஈட்டித் தானம் முதலியவற்றின் பயனால் மறுமையில் தேவ உடம்பையும் பெற்றவர்களுக்குத் தேவலோகத்தில் மிக்க சிறப்பு கிட்டும் என்பது கருத்து.

    இம்மையில் பூத உடம்பு, புகழுடம்பு என உடம்பு இருவகைப்படும்.  பூதவுடம்பாவது மண், நீர், நெருப்பு, காற்று, விண் என்னும் ஐம்பூதங்களால் ஆன உடம்பு. புகழுடம்பாவது கீர்த்தியாலும் சீர்த்தியாலும் பெறுவது. முன்னதற்கு அழிவுண்டு. பின்னதற்கு அழிவில்லை. தேவ உடம்பு என்பது ஞானிகள் மறுமையில் பெறுவது.

    இம்மூவகை உடம்பினுள் பூத உடம்பு மட்டும் பெற்றுநின்ற மண்ணுலகத்தாரினும் தேவ உடம்பு மட்டும் பெற்றுநின்ற விண்ணுலகத்தாரினும் இவ்விரு உடம்புகளையும் ஒரே நேரத்தில் பெற்றவர்களின் பெருமை சிறந்து நிற்றல் காண்க. அதனால்தான் புத்தேள் உலகம் தேவ உடம்பு மட்டும் பெற்ற ஞானியரைப் போற்றாதாம்.

    இந்தக் கருத்தியலைத் தாம் புறநானூற்றிலிருந்து பெற்றதாகக் கூறுகிறார். அதாவது புகழைப் பற்றிய கருத்தியல் புறநானூற்றுக் காலத்திலேயே நிலவிவந்த வரலாற்று உண்மையை இந்த எடுத்துக்காட்டின் மூலம் அவர் உறுதி செய்கிறார்.

    புகழைச் செய்கின்ற உடல் நிலையற்றது. நிலையற்ற அதனால் ஈட்டப்படும் புகழ் நிலையானது. இது அறிவின் உச்சம். இதற்கு ‘வித்தகம்’ என்று பெயர். இதனை உடையவர் ‘வித்தகர்’. அடுத்த பாட்டில் (235) ‘வித்தகர்க்கல்லால் அரிது’ என்னுந் தொடருக்குப் பரிமேலழகர் எழுதியிருக்கும் விளக்கம் இதனை இன்னும் தெளிவாக்கும்.

    மேற்கண்ட புறநானூற்றுப் பதிவினை மற்றொரு பாடலுக்கும் மேற்கோளாகக் காட்டுகிறார் அழகர்.

    “இளிவரின் வாழாத மானமுடையார்
    ஔிதொழுதேத்தும் உலகு” (970)

    “தமக்கோர் இழிவு வந்துழிப் பொறுத்து உயிர்வாழாது அதனை நீத்த மானமுடையாரது புகழ்வடிவினை எஞ்ஞான்றும் தொழுது துதியா நிற்பர் உலகத்தார்” என்று பொருளைத் தருவது அது. புகழின்றேல் புத்தேள் நாட்டு உய்யாதால் (பாடல் எண். 966) என்பது மேலே சொல்லப்பட்டது. இந்தப் பாட்டில் ‘உலகு மானமுடையார் ஒளியை ஏத்தும்’ (970) என்று இருக்கிறது. இருக்கவே, ‘புத்தேள் நாடு உய்த்தல்’ பாட்டில் சொல்லப்படவில்லையே, அதாவது இளிவரின் வாழாத மானமுடையவரது புகழால் தேவலோகம் செல்லுதற்பற்றி யாதும் கூறப்படவில்லையே என்பாரின் ஐயம் களைவதற்காகப்,

    “புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வானவூர்தி எய்துவராகலின்” துறக்கச் செலவு சொல்ல வேண்டாவாயிற்று”

    எனப் புறநானூற்றின் அதே பாடலை ஈண்டும் எடுத்துக்காட்டாக்குகிறார்.

    மரணத்திற்கு மருந்தில்லை

    எமனுக்கு ‘எமதர்மன்’ என்றும் பெயர். ‘கூற்றுவன்’ என்றும் பெயர். உயிர் வௌவுதலாகிய தன்னுடைய கடமையை வினைப்பயனுக்கு ஏற்பத் தவறாது செய்தலின் எமனுடைய செயல் அறஞ்சார்ந்து நிற்பது. அதனால் அவன் எமதர்மன். உயிரையும் உடலையும் இரண்டாகக் கூறுபடுத்தலின் கூற்றுவன் என்றும் பெயர். இவையெல்லாம் அறிஞர்களுக்குத் தோன்றிய விளக்கங்கள். எனினும் கூற்றுவன் வந்து உயிரைப் பறித்துவிடின் அம்மரணத்தை மாற்றுதற்கு மருந்து கிடையாது. பரிகாரம் கிடையாது. மரணம் வந்தால் இறப்பைத் தவிர வேறு வழியில்லை.

    “கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
    ஆற்ற லதுவே படை.” (765)

    வீரனின் வீரம் பற்றிக் கூறும் இந்தக் குறட்பாவிற்குக்,

    “கூற்றுவன்தானே வெகுண்டு மேல்வந்தாலும் நெஞ்சொத்து எதிர்நின்று தாங்கும் ஆற்றலுடையதே படையாவது”

    என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் ‘மேல்வரினும்’ என்னும் தொடரிலுள்ள உம்மைக்கு விளக்கம் தர எண்ணுகிறார். அது சிறப்பும்மை என்பது அவர் கருத்து. அது சிறப்பும்மையாக வேண்டுமானால் கூற்றத்தைச் சிறப்பிக்க வேண்டும். எப்படிச் சிறப்பிப்பது? அந்தக் கூற்றுவனுடைய தொழிலுக்கு மாற்றாகப் பிறதொழில் இல்லையாம். அதுதான் சிறப்பாம். அதாவது கூற்றுவனுடைய தொழிலாகிய மரணத்தைத் தடுக்கும் அல்லது நீக்கும் மருந்து இல்லையாம். எனவே அது ‘மருந்து இல் கூற்று’ இந்தக் கருத்துக்குரிய பதிவினைப் புறநானூற்றிலிருந்து எடுத்துக்கொள்ளும் பரிமேலழகர், அதனால் உம்மை சிறப்பும்மை என்கிறார்.

    “மருந்தில் கூற்றமாகலின் உம்மை சிறப்பும்மை”

    இந்தத் தொடர் அமைந்த புறநானூற்று வரிகள்,

    “பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
    மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
    கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி” (புறம். 3)

    “மாற்றரும் கூற்றம்” (1026) என்பது தொல்காப்பியம். கூற்றத்துக்கு மருந்தில் என்றும் அவன் செயலுக்கு அருந்தொழில் என்றும் அடைபுணர்த்திய பாங்குணர்ந்த பரிமேலழகர் ‘மருந்தில் கூற்றமாகலின்’ என்பதைத் தமது உரையில் ஆசிரிய வசனமாகவே (முன்னோர் மொழியை அப்படியே எடுத்துத் தம் உரையில் ஆளுதல்) எடுத்தாண்டுள்ளார்.

    நிறைவுரை

    ஏறத்தாழ முப்பது இடங்களில் ‘புறநானூறு’ என்னும் ஒரு நூலை மட்டும் திருக்குறள் பொருள் விளக்கத்திற்காகப் பயன்படுத்தியிருக்கிறார் பரிமேலழகர். இது ஒரு பன்முகப் பயன்பாடு. ஒரு நூலைக் கற்கிறபோது உண்டாகும் பயன்களையும் அவற்றின் கூறுகளையும் மனத்துள் பதிவு செய்வார்க்கே இத்தகைய வல்லாண்மை கைகூடும். சொற்பொருள் விளக்கம், பொருள் விளக்க அமைதி, இலக்கண அமைதி, இலக்கண விளக்கம், இலக்கியத்தை வரலாறாகக் கொள்ளுதல் என்னும் இத்தகைய பன்முகப் பயன்பாட்டுக்கான கருவியாகப் புறநானூறு அவரால் நோக்கப்பட்டிருக்கிறது. இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களிலிருந்து காட்டப்பட்டிருக்கும் மேற்கோள்களால் திருக்குறள் ஆழம் தெளிவாகிறது. ஒரு நூலை எப்படிக் கற்க வேண்டும் என்னும் கற்றல் கொள்கையும் புலப்படுகிறது. திருக்குறளை இப்படி நோக்கி உரையெழுதியோர் இவரன்றி யாரும் உளரோ? என்னும் ஐயம் ஐயமாகவே நிற்கிறது!

    (அடுத்த கட்டுரையோடு நிறைவுறும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 23

    பரிமேலழகர் உரைத்திறன் – 23

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ‘அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்!’

    முன்னுரை

    ‘வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்’ என்பது உலக வழக்கு. ‘உரைவழக்கிற்கும்’ இது பொருந்தும். பொதுவாக நூல் ஒன்றிற்கு உரையெழுதுவார் பிற இலக்கிய இலக்கணங்களைத் தாம் கொள்கிற பொருளமைதிக்கும் கருத்துக்கும் வலிமை சேர்ப்பதற்காக எடுத்துக்காட்டுவது உண்டு. ஒரு சிலர் எந்த நூலுக்கு உரையெழுதுகிறார்களோ அந்த நூலிலிருந்தே எடுத்துக்காட்டுக்களையும் சான்றுகளையும் பெற்று எழுதுவர். அந்த சிலருள் அழகரும் ஒருவர். இக்கட்டுரையின் தலைப்பு திருமந்திரப் பாடலொன்றின் நான்கு வரிகளில் ஒன்று. “முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்!” என்று விளித்துத்தான் இந்த வரியை அவர் பாடுகிறார். முதல் வரியால் பெறப்படும் உண்மைகள் பல. 1. கண் புறத்தில் இருந்தாலும் பார்ப்பது புறத்தை மட்டுமே. 2. மனக்கண்ணைக் காண முடியாவிட்டாலும் பிறவற்றை உற்று நோக்கும். ‘காண்பது’ என்பதன் பொருள் அதுதான். ‘காண்பது அறிவு’ என்பது வள்ளுவம். அது எந்த இடத்திலும் ‘பார்ப்பது அறிவு’ எனச் சொன்னதில்லை. 3. ‘மனக்கண்’ என்று ஒன்று இருப்பதையும் அதனாலும் ஆழமாக நோக்க முடியும் என்பதையும் அறியாதவர்களையே மூடரென்று திருமூலர் விளிக்கின்றார். இதனை நன்குணர்ந்தவர் பரிமேலழகர். தமது உரைக்குப் புறநூல்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் குறளுரைக்குத் துணை நூலாகத் திருக்குறளையே பயன்படுத்திக் கொள்கிறார். அழகரின் திருக்குறள் உரையில் பொருள் விளக்கத்திற்காகத் திருக்குறள் பயன்பட்டிருக்கும் பாங்கினை ஆராய்வதாக இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

    தனக்குத் தானே விளக்கமான திருக்குறள்

    பரிமேலழகர் திருக்குறளைத் தமது உரைக்கு இரு வகையில் பயன்படுத்திக் கொள்கிறார்.

    1. அதிகாரங்களின் பொருண்மை கூடுதல் துலக்கம் பெறுவதற்கு மற்றொரு திருக்குறளைப் பயன்படுத்திக் கொள்கிறார்.
    2. குறட்பாக்களின் சொற்பொருள் விளக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்.

    இவற்றைப் பயன்படுத்தி விளக்கமளிப்பதிலும் ஒரு நுட்பம் காணப்படுகிறது. முன்னால் உள்ள குறளுக்கு நூலின் பின்னால் உள்ள குறளாலும் பின்னால் உள்ள குறளுக்கு நூலின் முன்னால் உள்ள குறளாலும் விளக்கமளிக்கிறார். இது வியப்பான ஒன்று. என்ன வியப்பு? பல நூறு குறட்பாக்களை உள்ளடக்கிய ஒரு நூலை முற்றவும் கற்று மனத்திருத்தினாலன்றி இது கூடுமா? பரிமேலழகரைப் போகிற போக்கில் குறைசொல்வார் கவனிக்க வேண்டிய இடம் இது.

    அதிகாரப் பொருண்மை விளக்கங்களில் குறள்

    இல்லறவியலில் ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் அதிகாரத்தைத் தொடர்ந்து ‘அன்புடைமை’ என்னும் அதிகாரம் அமைந்திருக்கிறது. இல்லறம் இனிது நடத்தற்கும் அதன் முதிர்ச்சியாகிய அருள் பிறத்தற்கும் அன்பு தேவை. முன்னதற்குச் கோவலனைப் பிரிந்த கண்ணகி இல்லறக் கடமைகளை ஆற்ற இயலாமையைச் சுட்டும் கண்ணகியின் வாய்மொழியைச் சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்துக்காட்டி விளக்கும் பரிமேலழகர், அன்பு அருளிற்குக் காரணம் என்பதை விளக்க அதனைப்போலப் புறத்தில் வேறொரு இலக்கியத்தை நாடாமல் திருக்குறளில் இருந்தே எடுத்துக்காட்டி விளக்குகிறார்.

    “அதனான் (அன்பால்) அருள் பிறத்தல் அருளென்னும்
    அன்பீன் குழவி (757) என்பதனானும் அறிக”

    என்று எழுதி அன்பின் முதிர்ச்சி நிலை அன்பு என்பதைத் திருக்குறளே கூறியிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

    படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னுமிவை அரசனுடைய அங்கங்கள். இவற்றின் செயல்பாடுகளுக்குத் தேவையானவை தூங்காமை, கல்வி, துணிவு. இவற்றுள் கல்வி ஆறு அங்கங்களுக்கும் உரியது. ஏனைய (தூங்காமை, துணிவு) வினைக்குரியன என்பதை முன்னரே (383) தெளிவுபடுத்திவிடும் பரிமேலழகர் அடுத்த அதிகாரமாகக் கல்வியை வைத்தமைக்கான காரணத்தைப் பதிவிடுகிறார்.

    “மேல் ‘தூங்காமை கல்வி’ (குறள். 383) எனத் தோற்றுவாய் செய்த மாட்சியை விரித்துக் கூறுகின்றமையின், இஃது இறைமாட்சியின் பின் வைக்கப்பட்டது”

    மேற்கண்ட குறள் விளக்கங்களில் பின்னது முந்தைய குறட்பாவைச் சுட்டியும் முன்னது அறுபத்தெட்டு அதிகாரங்களுக்குப் பின்னுள்ளதைச் சுட்டியும் கூறப்பட்டன என்பது நோக்கத்தக்கது.

    பொருள் விளக்கத்திற்கு

    ‘பித்தத்திற்கு இஞ்சி நல்லது’ என்பது உலக வழக்கு. இவ்வாறு சொல்வது ‘பித்தம் வருவதற்கு இஞ்சி நல்லது’ என்று பொருளன்று, ‘பித்தம் தெளிவதற்கு இஞ்சி நல்லது’ என்றுதான் பொருள்.

    “அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்
    மறத்திற்கும் அஃதே துணை” (76)

    என்னும் குறட்பாவின் கருத்து அன்பு அறத்திற்குத் துணைசெய்யும். மறத்திற்கும் அந்த அன்பே துணையாகும்’ என்பது போல உள்ளது.  முன்னது சரி. ‘மறத்திற்கும் அன்பு துணையாகும்’ என்றால் அறத்திற்கு எதிரான மறத்தையும் அது வளர்க்குமா? என்னும் ஐயம் தோன்றும். அதனை விளக்கிக்காட்ட  காமத்துப்பாலில் உள்ள,

    “துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
    நெஞ்சம் துணையல் வழி” (1299)

    என்னும் குறட்பாவை எடுத்துக்காட்டி விளக்குகிறார் பரிமேலழகர். ‘துன்பத்திற்குத் துணை யாரோ?’ என்றால் அது வந்துழி அதனை நீக்குதற்கு அவருடைய நெஞ்சத்தையன்றி வேறு துணையில்லை என்பது பொருள். அதுபோல மறத்திற்கும் அன்பு துணை என்றால் அறத்திற்கு மாறான மறத்தை நீக்குதற்கும் அவ்வளவே துணை என்பது பொருளாம். எட்டாவது அதிகாரப் பாடலுக்கு நூற்று முப்பதாவது அதிகாரப் பாடலை எடுத்துக் கொண்டு வந்து பொருள் உரைக்கும் திறன் காண்க.

    ஒழுக்கமிலாதவனின் சுற்றமும் கெடும்

    உவமம் கூறுவதில் திருவள்ளுவர் ஒரு வேறுபட்ட ஆனால் சிறப்பான நெறியைப் பின்பற்றியிருக்கிறார். இந்த நெறி கலித்தொகை முதலிய இலக்கியங்களில் பின்பற்றிய மரபு சார்ந்த நெறியே. அதாவது கருத்துக்களையே உவமமாக்குவது. இதனால் உவமேயமான பொருளும் விளங்கும். உவமமாகச் சொல்லப்படும் கருத்தும் வலிமை பெறும். ‘வறியவன் இளமை போல் வாடிய சினையவாய்’ என்பதுபோல. இது ‘பொருளே உவமம் செய்தனர் ஆயினும்’ (1230) என்னும் தொல்காப்பிய நூற்பாவால் தழுவிக் கொள்ளப்படும்.

    “அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று இல்லை
    ஒழுக்கமிலான் கண் உயர்வு” (135)

    ‘அழுக்காறு உடையவனுக்கு ஆக்கம் இல்லாதவாறு போல ஒழுக்கமிலாதவனுக்கு உயர்ச்சி இல்லை’ என்பது மட்டுமே எழுசீர்களில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கும் கருத்தாகும். ஆனால் பரிமேலழகர், ஒழுக்கமிலாதவனுடைய சுற்றத்திற்கும் உயர்ச்சியில்லை’ என்று கூறுகிறார். இது இந்தப் பாட்டில் சொல்லப்படாத கருத்து. ஆனால் வேறொரு இடத்தில் சொல்லப்பட்ட கருத்து. அது என்ன? அழுக்காறு உடையவனின் சுற்றமும் உண்பதும் உடுப்பதுமின்றித் துன்பப்படும் என்று,

    “கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
    உண்பதூஉம் இன்றிக் கெடும்” (166)

    என்னும் குறட்பாவில் கூறியிருக்கிறார். கூறவே, இந்தப் பாட்டுக்குரியவன் மேற்பாட்டில் உவமமாகக் கூறப்பட்டுள்ளான். அழுக்காறுடையவனுக்கு ஆக்கம் இல்லையென்றால் அவன் சுற்றத்திற்கும் ஆக்கம் இல்லை. அதனால் பொருளான (உவமேயம்) ஒழுக்கமிலானுக்கு உயர்ச்சி இல்லையென்றால் அவனுடைய சுற்றத்தார்க்கும் உயர்ச்சி இல்லை’ என்னும் இந்த நுட்பத்தை,

    “உவமையான் ஒழுக்கம் இல்லாதவன் சுற்றத்திற்கும் உயர்ச்சி இல்லையென்பது பெற்றாம். என்னை? “கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்ற”மும் (குறள். 166) நல்கூர்தலின்”

    என்று எழுதுகிறார். உரையெழுதுவது பதினான்காவது அதிகாரப் பாடலுக்கு. எடுத்துக்காட்டி விளக்கும் பாடல் அமைந்திருப்பதோ பதினேழாவது அதிகாரத்தில்!

    ‘உரம்’ என்றால் அறிவு

    பயிருக்கு இடுகின்ற உரம் வேறு. மனிதர்க்கு இருக்க வேண்டிய உரம் வேறு. முன்னது பயிருக்கு ஊட்டச்சத்து. பின்னது பிற உயிர்களினின்றும் மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது. உரமாகிய அறிவு இல்லாதவன் மரத்திற்கும் கீழானவன் என்னும் கருத்தினை,

    “உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார்
    மரம் மக்களாதலே வேறு” (600)

    என்னும் குறட்பாவில் திருவள்ளுவர் கூறுகிறார்.

    “ஒருவற்குத் திண்ணிய அறிவாவது ஊக்கமிகுதி. அவ்வூக்கமிகுதி இல்லாதார் மக்களாகார், மரங்களாவார். சாதி மரங்களோடு இம்மரங்களிடை வேற்றுமை வடிவு மக்கள் வடிவே: பிறிதில்லை. மக்கட்குள்ள நல்லறிவும் காரிய முயற்சியும் இன்மைபற்றி ‘மரம்’ என்றும், மரத்திற்குள்ள பயன்பாடு இன்மை பற்றி ‘மக்களாதலே வேறு’ என்றும் கூறினார். பயன், பழம் முதலியவும்; தேவர் கோட்டம் இல்லம், தேர், நாவாய்கட்கு உறுப்பாதலும் முதலியன”.

    என்னும் பொழிப்புரையாலும் விளக்கவுரையாலும் பல நுண்ணிய கருத்துக்களைக் கண்டறிந்து கூறும் பரிமேலழகர், பாட்டில் பயின்றுவரும் ‘உரம்’ என்ற சொல் ‘அறிவு’ என்ற பொருளைத் தரும் என்பதற்கு,

    ‘உரம்’ என்பது அறிவாதல்; உரனென்னும் தோட்டியான் (24) என்பதனானும் அறிக.

    என்று மற்றொரு குறட்பாத் தொடர்ப் பொருளையே எடுத்துக் காட்டுகிறார். இரண்டு பாட்டிற்குமான இடைவெளி ஏறத்தாழ அறுநூறு பாக்கள் நினைவாற்றல் என்பது முன்னால் படித்ததை நினைவிற் கொள்வது என்பது பொதுவான கருத்து. பரிமேலழகரோ படித்த அத்தனையையும் நினைவிற் கொள்கிறார். அதனால்தான் அறுநூறாவது பாட்டிற்கு உரையெழுதும் போது இருபத்து நான்காவது பாடற்பொருளை அவரால் நினைவுக்குக் கொண்டு வர முடிகிறது. அந்த நிலையிலும் குறட்பாவிற்கான பொருளைக் குறட்பாவிலேயே தேடிக் கண்டடையும் அவருடைய முயற்சி வெளிப்படுவதைக் காணலாம்.

    ஆயிரம் பாடல் கடந்தாலும் ஆகுபெயர் ஆகுபெயரே

    வேந்துவினை பொருட்டு மனை விட்டுப் பிரிந்தான் தலைமகன். ‘அவ்வேந்தனின் வினை விரைவில் தீருமாயின் இல்லம் சென்று மனைவியோடு கலந்து மாலைப்பொழுதினை இனிமையாக்கலாமே’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறான். ‘அவர்வயின் விதும்பல்’ என்னும் அதிகாரத்தில் வினைமுடியா நிலையில் தலைமகளை நினைந்து விதுப்புறும் தலைமகன் தன் நெஞ்சிற்கு இவ்வாறு கூறுகிறான். இதனை,

    “வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
    மாலை அயர்கம் விருந்து” (1268)

    என்னும் குறட்பாவில் காட்சிப்படுத்துகிறார் திருவள்ளுவர். பாட்டில் ‘மனைகலந்து’ என்பதற்கு ‘மனைவியைக் கலந்து’ என்பது பொருள். ‘மனை’க்கு  ‘வீடு’ என்பது பொருளாயினும் இங்கே அது மனைவியைக் குறித்தது. ‘மனைகலந்து’ என்றால் ‘வீட்டினை அணைத்து’ என்பது பொருளன்று. சரி அப்படியானால் இது ஆகுபெயரா? ஆம். இது ஆகுபெயரே. ‘மனை’ என்பது வேறு எந்தக் குறட்பாவில் ஆகுபெயராக வந்துள்ளது? இங்கேதான் பரிலேழகர் தன் நினைவாற்றலையும் குறட்புலமையையும் ஒருங்கே காட்டுகிறார். வீட்டை அழகுபடுத்துவதும் அது அழகாயிருப்பதும் வேறு. மனைவி பண்புநலன்களால் மங்கலமாக இருப்பது வேறு.

    “மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
    நன்கலம் நன்மக்கட் பேறு” (60)

    என்னும் குறட்பாவில் ‘மங்கலம் என்ப மனைமாட்சி’ என்பதில் ‘மனை மாட்சி’ என்னும் சொல் மனைவியின் மாட்சிமைப்பட்ட பண்புகளைக் குறிக்குமே தவிர வீட்டுக்குப் பூசப்படும் வண்ணங்களைக் குறிக்காது. அந்தத் தொடரில் ‘‘மனை’ என்பதை ஆகுபெயராகச் சொன்னாராம் திருவள்ளுவர். அதனை நினைவூட்டி எழுதுகிறார் அழகர்.

    தானம் பெரிதா? தவம் பெரிதா?

    தவம் துறவறத்திற்குரியதெனினும் இல்லறத்தார், துறவறத்தார் என யாவருக்கும் பொதுவானது. காரணம் அது செய்வார்க்கு வேண்டியன நல்கும் சிறப்புடையது. இவ்வுண்மை தெரிந்தும் ‘இல்லறத்தார் ஏன் தவத்தை மறந்தனர்? என்பதற்குத் திருவள்ளுவர் தற்குறிப்பேற்றமாக ஒரு கருத்தினைப் பதிவு செய்கிறார். துறந்தார்க்குச் செய்யும் தானத்தின்மேல் உள்ள ஆர்வத்தால் அவர்கள் (இல்லறத்தார்) தவத்தினை மறந்து போனார்களாம். இதனைத்,

    “துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
    மற்றை யவர்கள் தவம்” (263)

    என்னும் குறட்பாவில் பதிவு செய்திருக்கிறார். இந்தக் குறளில் தவத்தின் அருமையை விளக்க வந்த பரிமேலழகர் விளக்கவுரையில்,

    “வேண்டிய வேண்டியாங்கு எய்தற் பயத்த தாகலின் யாவராலும் செய்யப்படும் தவத்தைத் தாம் செய்யும் தானத்தின் மேல் விருப்பமிகுதியான் மறந்தார்போலும். எனவே தானத்தினும் தவம் மிக்கதென்பது பெற்றாம்”

    என்று எழுதியிருக்கிறார். தவத்தது சிறப்புப் பற்றிய அழகரின் குறிப்பு இதற்கு அடுத்து வரும் குறட்பாவாகிய,

    “வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
    ஈண்டு முயலப் படும்” (265)

    என்னும் குறட்பாவில் அமைந்துள்ளது. அந்தத் தொடரையே உரையாக்கும் பரிமேலழகர், அதிகாரக் கருத்துக்களை நிரல்பட நோக்குவதோடு முன்பின்னாக நோக்கி முன்னதற்கான விளக்கம் இருக்கும் பிந்தைய குறட்பாவின் தொடரைப் பொருத்தமான இடத்தில் வைத்து உரைகாணும் திறன் இது.

    ‘தள்ளாது’ என்றால் ‘தவறாது’

    ‘தள்ளாத வயது’ என்றால் முதுமை என்று பொருள். ‘வண்டியைத் தள்ளிவிட உதவுக’ என்றால் ‘நகர்த்துதல்’ என்று பொருள். ‘தள்ளுபடி’ விலையென்றால் தமிழகத்துப் பெண்களின் ஏமாற்றுக் களம் என்பது நமக்குத் தெரியும். அவர்களுக்குத் தெரியாது. திருக்குறளில் இந்தத் ‘தள்ளாது’ என்ற சொல் பயின்று வருகிற போது அதற்குப் பொருள் தவறாது, ‘மாறாது’ என்பதாகும்.

    “கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
    தள்ளாது புத்தேள் உலகு” (290)

    என்ற குறட்பாவிற்குப், (‘கள்வார்க்கு உயிர்நிலை தள்ளும். கள்ளார்க்குப் புத்தேள் உலகு தள்ளாது’ என்பது உரைநடை (PROSE ORDER)) பரிமேலழகர், கள்ளமனம் கொண்டார்க்கு  உடம்பு பாதிப்புக்கு ஆளாவது தவறாது. கள்ளமனம் இல்லார்க்கு வீட்டுலக இன்பம் தவறாது” என்று உரையெழுதுகிறார். ‘உடையார் துன்புறுவர். இல்லாதார் இன்றுவர்’ என்பது கருத்து. இந்தக் குறட்பாவில் பயின்றுள்ள தள்ளாது என்னும் சொல் ‘தவறாது’ என்ற பொருளைத் தருவதாகக் கூறும் அழகர், இதே சொல் இதே பொருளில் பயின்றுவரும் மற்றொரு இடத்தை எடுத்துக்காட்டித் தம் நினைவாற்றலையும் புலமைத் திறத்தையும் உறுதி செய்கிறார்.

    “உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
    தள்ளினும் தள்ளாமை நீர்த்து” (596)

    என்பது ஒரு குறட்பா. ‘முயற்சி உரிய பலனைக் கைகூட்டா விடினும் அம்முயற்சியைக் கைவிடாமல் இருப்பதே சான்றோரால் மதிக்கப்படும். இடைவிடாத முயற்சிக்கு என்றைக்கும் பயன் உண்டு. ஆதலின் முயற்சி பயனளிக்கத் தவறினும் அதனைத் தவறியதாகக் கருதாமல் உயர்ச்சியினைப் பெற்றார் போலச் சான்றோரால் மதிக்கப்படுவர். இது இந்தக் குறட்பாவின் பொருள். இந்தக் குறளில் ‘தள்ளினும் தள்ளாமை’ என்ற இரண்டு இடத்தும் அது ‘தவறுதல்’ – ‘தவறாமை’ என்னும் உடன்பாடு மற்றும் எதிர்மறைப் பொருள்களில் வந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறார் பரிமேலழகர்.

    ‘மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து” என்புழியும் தள்ளுதல் இப்பொருட்டாதல் அறிக”

    என்று எடுத்துக்காட்டி விளக்கும் அழகரின் அறிவாற்றலை முந்நூறு பாடல்கள் இடைவெளியில் காண்க.

    கொல்லாமையா? பொய்யாமையா?

    திருவள்ளுவர் ஒரு அதிகாரக் கருத்தினை வலியுறுத்துகிறபோது அதனை முன்னெடுத்து மற்றவற்றைப் பின்னுக்குத் தள்ளுவதுபோல் தோன்றும். மதுவையும் புகைப்பிடிப்பதையும் பழக்கமாகக் கொண்டவனை நோக்கி “ஐயா! இந்த மதுவை மட்டும் விட்டுடு” என்று சொல்வது போன்றது அது. புகைபிடிப்பதைப் பிறகு கண்டிக்கலாம் என்பது கண்டிப்பவர் கருத்து என்பதைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். அது மாதிரியான சூழல் திருவள்ளுவருக்கும் வருகிறது.

    “ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
    பின்சாரப் பொய்யாமை நன்று” (323)

    என்பது குறட்பாவாகும். திருவள்ளுவருக்கு என்ன சிக்கல் என்றால் இதற்கு முன்பாகப் பொய்யாமையை வலியுறுத்தும் போது,

    “பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
    செய்யாமை செய்யாமை நன்று” (297)

    செய்தற்கு அருமையால் சில அறங்கள் தவறினாலும் அவை எல்லாவற்றின் பயனையும் தரவல்ல பொய்யாமையாகிய அறத்தையே மேற்கொள்ளுதல் சிறந்தது என்றெல்லாம் சிந்தித்தே திருவள்ளுவர் இதனை எழுதியிருக்கிறார்.  இவ்வளவு சிந்தித்து எழுதிய திருவள்ளுவர் மூன்று அதிகாரங்கள் கடந்து கொல்லாமையாகிய அறத்தினை வற்புறுத்துகிறபோது அவ்வளவு சிறப்புடைய பொய்யாமையை இரண்டாவதாக ஆக்கிக் கொல்லாமையை முதலிடத்திற்கு உயர்த்துகிறார்.  பொய்யாமைக்குத் தலைமைப் பதவி கொடுத்தவரும் அவர்தான். அதனைக் கொல்லாமைக்கு அடுத்த நிலையில் பதவியிறக்கம் செய்தவரும் அவர்தான். இப்போது திருவள்ளுவர் சொல்லியிருக்கும் நிரலில் கற்பாருக்கு ஐயம் தோன்றக்கூடும். இரண்டறங்களில் எது சிறந்தது? என்று ஐயத்தைக் களைய வேண்டிய பொறுப்பு உரையாசிரியர் பரிமேழகருக்கு நேரிடுகிறது. பரிமேலழகர் உரையெழுதிய அனைத்துக் குறட்பாக்களும் பொருள் துலக்கத்தில் சிறந்து விளங்கினும் ஒருசில குறட்பாக்களும் உரையாசிரியர் பிறர் எண்ணிப் பார்க்க இயலாத உரைகளைக் கூறியிருக்கிறார். அவற்றுள் ஒன்றுதான் மேலே காட்டிய “ஒன்றாக நல்லது கொல்லாமை” என்னும் குறட்பாவாகும்.

    “நூலோர் தொகுத்த அறங்களுள் தன்னோடு இணையொப்பதின்றித் தானேயாக நல்லது கொல்லாமை. அஃது ஒழிந்தால் பொய்யாமை அதன் பின்னே நிற்க நின்று”

    என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகருக்கு மேற்பத்தியில் சொல்லப்பட்டிருக்கும் ஐயம் கற்பாருக்கு வருமே எனக் கவலைப்பட்டிருக்கிறார். அந்தக் கவலையை அவர் ‘அவர்மொழி’யில் பதிவு செய்திருக்கிறார்.

    “அதிகாரம் கொல்லாமையாயினும் மேல் “பொய்யாமை பொய்யாமை ஆற்றின்” (297) எனவும், “யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை” (300) என்றும் கூறினாராகலின் இரண்டு அறத்துள்ளும் யாது சிறந்தது என்று ஐயம் நிகழுமன்றே, அது நிகழாமை பொருட்டு ஈண்டு அதன் பின்சாரப் பொய்யாமை நன்று” என்றார். முற்கூறியதிற் பிற்கூறியது வலியுடைத்தாதலின். அதனைப் ‘பின்சார நன்று’ என்றது நன்மை பயக்கும்வழிப் பொய்யும் மெய்யாயும் தீமை பயக்கும் வழி மெய்யும் பொய்யாயும் இதனைப் பற்ற அது திரிந்து வருதலான் என உணர்க”

    திருக்குறளில் கருத்து முரண் என்னும் பழிச்சொல்லுக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காக அழகர் எழுதிக்காட்டும் இந்த உரை நுட்பம் கட்டுரையாசிரியர் தரும் பின்வரும் விளக்கத்தால் தெளிவாகலாம்.

    அழகர் உரைப்பன இவையே  

    1. அதிகாரக் கருத்தினை முன்னிறுத்தும் வழக்கம் திருவள்ளுவருக்கு இருப்பினும் இந்தப் பாடல் அத்தகையதன்று. ஒரு முரணைக் களைய முற்படுகிறது.
    1. பொய்யாமையை ஏனைய அறங்கள் எல்லாவற்றினும் சிறந்ததாக முன்னர்க் கூறிக் கொல்லாமையை இந்த அதிகாரத்தில் முன்னெடுத்தால் ‘மாறுகொளக் கூறல்’ என்னும் குற்றம் திருக்குறளுக்கு நேரும்.
    1. ‘முன்சொன்ன விதியினும் பின் சொல்லும் விதி’ சிறப்புடைத்தாதலின் பொய்யாமை, கொல்லாமைக்கு அடுத்த நல்ல அறமாகக் கொள்ளப்படும்
    1. ‘பொய்யாமை’ பின்னுக்குத் தள்ளப்பட்டதன் காரணம் என்ன? “வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமையிலாத சொலல்” (291) “பொய்ம்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்” (292) என்பதனால், ‘நிகழாதது கூறலும் நன்மை தந்தால்’ உண்மையெனவும், ‘நிகழ்ந்தது கூறலும் தீமை தந்தால் பொய்ம்மையெனவும் பயனை நோக்கி இவ்வாறு வாய்மையின் தன்மை மாறுபடும். கொல்லாமையோ அங்ஙனம் மாறுபடாதாதலின் பொய்யாமையினும் கொல்லாமை மேலானது காண்க.
    1. ‘கொலை’ பொய்போல நன்மை பயந்தாலும் குணமாகாது. குற்றமே! ‘கொல்லாமை’ தீமை பயந்தாலும் குற்றமாகாது குணமாம் என்க. இதனைப் பற்றி அது திரிந்து வருதலான் ‘திரியாத கொல்லாமை சிறந்தது’ என்க .
    1. ‘சான்றாண்மை’ என்னும் அதிகாரத்துக் ‘கொல்லா நலத்தது நோன்மை’ (984) என நோன்புக்கு அடையாளமே கொல்லாமை என நாயனார் கூறியதும் அறிக.

    மேற்சொன்ன அத்தனைக் கருத்துக்களும் பரிமேலழகரின் பொழிப்புரையிலும் விளக்கவுரையிலும் அடங்கியிருக்கின்றன. ஒரு குறளுக்கு உரையெழுத அதிகாரம், இயல், பால் எனத் தமது எல்லை கடந்த அகநோக்கினால் பொருளெழுதும் அழகரின் உரைத்திறன் இது!.

    நிறைவுரை

    நூலுக்கு உரைசொல்லுவது என்பது தற்காலத்தில் ஒரு பொழுதுபோக்காகக் கருதப்படலாம். கருதப்படுகிறது. திருக்குறளுக்கு வெளிவந்திருக்கும் உரைகளிற் பல சொற்கோவைகளாகவே சோர்ந்து படுத்துவிட்டன. உரை, சிந்தனை வளர்ச்சியின் அடையாளம். பன்முகப் புலமையின் பந்தி. அது முன்னோர்களை விஞ்சியது என்னும் முனைப்பின் வெளிப்பாடாக அமைந்துவிடக்கூடாது. குறட்பா இருக்கிறது. அதற்குள் சீர்கள் இருக்கின்றன. பரிமேலழகர் அவற்றுக்குப் பொருளுரை தருகின்றார். தான் தந்த உரைக்கே விளக்கவுரை தருகின்றார். அந்த விளக்கத்திற்கான சான்றுகளைத் தருகிறார். அந்தச் சான்றுகளைப் புறத்தில் இருந்து காட்டுகிறார். தான் உரையெழுதும் நூலிலிருந்தே காட்டுகிறார். முன்னால் உள்ள குறளுக்குப் பின்னால் இருந்தும் பின்னால் உள்ள குறளுக்கு முன்னால் இருந்தும் எடுத்துக் கொள்கிறார். ஒரு நூலை அவர் எத்தனை முறைப் படித்திருந்தால் இந்த நினைவாற்றலை எட்டியிருப்பார்? மரச்சிலை செதுக்கும் சிற்பி உளிப்பிடியை மரத்திலேயே செய்துகொள்வது போன்றது அழகர் செயல். அவர் படித்தது கரும்பலகையிலோ கணிப்பொறியிலோ அல்ல. ஒலைச் சுவடியில்! எண்ணிப் பார்க்க வேண்டாமா?.

    (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 22

    பரிமேலழகர் உரைத்திறன் – 22

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    பரிமேலழகர் உரையும் அருத்தாபத்தி அளவையும்

    முன்னுரை

    மக்கள் வழக்கே மொழிக்கு அடிப்படை. இலக்கியத்திற்கு மக்கள் வாழ்க்கையே அடிப்படையாகும். இது இயல்பானது. எந்த படைப்பிலக்கியம் ஆனாலும் புலவனின் சிந்தனையாலும் பட்டறிவாலும் வெளிப்படும் நீதி இலக்கியமே ஆனாலும் மக்கள் வாழ்க்கையின் தாக்கம் இல்லாமல் தனித்து அமைய முடியாது. இதற்குப் பல சான்றுகள் காட்ட முடியும். வெளிப்பாட்டு உத்திகளிலும் இத்தகைய சமுதாய தாக்கம் ஆங்காங்கே அமைந்து கற்பாரின் சிந்தனையைக் கூர்மையாக்கும். அவ்வுத்திகளில் ஒன்றுதான் ‘அருத்தாபத்தி’ என்பது. பொதுவாகக் கவிதை அல்லது செய்யுள் என்பது ஒன்றினைச் சொற்களால் விளக்குவது அன்று. ஒன்றினைக் காட்சிப்படுத்துவது. ஒரு அனுபவத்தைச் சொற்கள் வழிக் கற்பாருக்கு உணர்த்துவது. அந்தக் காட்சியை முழுமையாகக் காட்சிப்படுத்துவது படைப்பு நெறி ஆகாது. ஒரு பொருளின் ஒரு பக்கத்தைக் காட்டி ஏனைய பக்கங்களை உய்த்துணரச் செய்வதே படைப்பு நுட்பம். ‘அருத்தாபத்தி’ என்பது இத்தகையதே. ஒரு கருத்தினை விரிவாகச் சொல்லாமல் ஒன்றினைச் சொல்லி மற்றொன்றைப் பெற வைப்பது. ‘அவன் பணக்காரன் அல்லன்’ என்றால் ஏழை என்பது பெறப்படுவது போல. அருத்தாபத்தி என்பது சமயக்கோட்பாடுகளிலும் தத்துவ விசாரணைகளிலும் பயன்படுத்தப்படும் அளவையியல் (LOGIC) வகைகளில் ஒன்று. திருக்குறளில் அமைந்த அருத்தாபத்தி நுட்பங்களைப் பரிமேலழகர் கண்டுணர்த்தும் பாங்கினை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

    அருத்தாபத்தி – ஒரு விளக்கம்

    ‘நல்லாற்றான் நாடி அருளாள்க’ (242) என்னும் குறட்பாத் தொடருக்குத் தாம் எழுதிய பொழிப்புரையில் ‘ஆறு’ என்பதற்கு விளக்கமளிக்கும் பரிமேலழகர் ‘அளவைகளானும் பொருந்தும் ஆற்றானும்’ என்று குறிப்பிடுகிறார்.  விளக்கவுரையில் அளவைகளின் வகைகளை நிரல்படக் கூறுகிறார்.

    “பொறிகளால் காணும் காட்சியும், குறிகளால் உய்த்துணரும் அனுமானமும் கருத்தாமொழியாகிய ஆகமமும்’ என மூன்று. ஒப்புப் பற்றி உணரும் உவமையும் இங்ஙனம் அன்றாயின் இது கூடாதென்று உணரும் அருத்தாபத்தியும்  உண்மைக்கு மாறாய இன்மையும்  என இவற்றையும் கூட்டி ஆறென்பாரும் உளர். இவையும் ஒருவாற்றான் அவற்றுள்ளே அடங்குதலின் மூன்றென்றலே கருத்து”

    பரிமேலழகர் மேற்சுட்டிய விரிவான ஆறு அளவைகளுக்கும் விளக்கம் கூறுவது கட்டுரையின் பொருள் சிறக்க உதவக்கூடும்.  அளவைக்கு வடமொழியில் ‘தர்க்க சாஸ்திரம்’ என்று பெயர். அதாவது ஒரு பொருளின் உண்மையை அளவிட்டு அறிவதற்குக் கருவியான பிரமாணங்களையே தர்க்கம் என்னும் சொல்லால் குறிப்பிடுவர். வடமொழியில் பிரதியட்சம், அநுமானம், உபமானம், ஆகமம், அருத்தாபத்தி, அபாவம், ஐதிகியம், சம்பவம் என எட்டு வகையாக அழைக்கப்படும்.

    1. கண்ணால் காண்பது பிரதியட்சம்
    2. புகையைக் கண்டு நெருப்பு உண்டென்பது அநுமானம்.
    3. குயில் போலப் பாடுவாள் என்பது உபமானம்
    4. சான்றோர் சொல் ஆகமம்
    5. பகல் உண்ணான் பருத்திருப்பான் என்றால் ‘இரவில் ஒளித்துண்பான்’ என்பது அருத்தாபத்தி
    6. ‘நேற்றில்லை இன்றில்லை எனவே நாளையுமில்லை’ என்பது அபாவம்
    7. இம்மரத்தில் பேய் இருக்கிறது என்பது ஐதிகியம் (ஐதீகம்)
    8. ஆயிரத்தில் நூறு என்பது சம்பவம்

    மேற்கண்டவற்றுள் ஐதிகியத்ததையும் சம்பவத்தையும் பலரும் கொள்ளார். எனவே பரிமேலழகர் கூறிய ஆறு மட்டுமே அளவைகள் எனக் கருதப்படும். இருப்பினும் பட்டியலில் காட்டிய எட்டனையும் காட்சி, அனுமானம், ஆகமம் என்னும் மூன்றனுள் அடக்குவர்.

    1. உபமானம் காட்சியில் அடங்கும் (2)
    2. அருத்தாபத்தி, சம்பவம் இரண்டும் அனுமானத்துள் அடங்கும் (3)
    3. ஐதிகியம் ஆகமத்தில் அடங்கும் (2)

    எஞ்சியிருக்கும் அபாவம் காட்சி, அனுமானம், ஆகமம் என்னும் மூன்றனுள்ளும் அடங்கும். எனவே எட்டு மூன்றாயிற்று என்க.

    அளவைகள் எட்டாயினும் ஆறாயினும் அவற்றுள் ‘அருத்தாபத்தி’ என்பது தவிர்க்க இயலாத ஒன்று. இந்த அருத்தாபத்தியைத்தான் முன்னுரையில் கூறியபடி மக்கள் வழக்கிலிருந்து வந்த இலக்கியக் கூறு என இக்கட்டுரை முன்னெடுக்கிறது. ‘அவன் நல்ல பழக்கம் உடையவன் அல்லன். அவனோடு சேராதே’ என்பது வழக்கு. இல்லாத நல்ல பழக்கம் செயல்பட முடியாது. சூனியம் செயல்படாது. வினைமுதலே செயல்படும். இவன் கெட்டுவிடுவான் என்றால் மற்றவனிடத்தில் இருக்கிற தீய பழக்கம் இவனைக் கெடுத்துவிடும் என்பது பொருள். எனவே ‘நல்லொழுக்கம் இல்லாதவன்’ என்றால் ‘தீயொழுக்கம் உண்டு’ என்பது பெறப்படும், அழுக்காறு என்பது போல. தீயொழுக்கம் செயல்படும். தீயொழுக்கம் அவனிடத்தில் இருக்கிறது என்று சொல்லாமல் அல்லது அவன் தீயவன் என்று சொல்லாமல் ‘நல்லொழுக்கம் இல்லாதவன்’ என்னும் சொல்லால் ‘தீயன பழகியவன்’ என்பதை உணர வைப்பதைச் சமுதாயத்திலிருந்து, சமுதாய வழக்கிலிருந்து பெறமுடிகிறதல்லவா? எனவே அருத்தாபத்தியின் மூலம் உலக வழக்கே! இந்த அருத்தாபத்தி திருக்குறளில் பயின்று வரும் இடங்களும் பரிமேலழகர் அதனைக் கண்டறியும் பாங்கும் தொடர்ந்து ஆராயப்படுகிறது.

    விலங்காய்ப் பிறப்பதே மேல்

    ‘மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ என்று அப்பர் பாடினார் என்றால் இப்பிறவியின் பெருமை நோக்கி என்க. இப்பிறவி பெருமை பெறவேண்டுமானால் புகழ் பெறவேண்டும். ஒருவனுடைய ‘பிறவி சிறந்தது’ என்பது அவனடைந்த புகழலால் அறியப்படும். திருவள்ளுவர் இல்லறவியலின் இறுதியில் ‘புகழ்’ என்னும் அதிகாரத்தில் இதனைச் சுட்டுகிறார்.

    “தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று” 236

    என்னும் குறள் ‘வாழ்ந்தால் புகழோடு வாழ்க’ என்னும் பொருளை நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறது. இதற்கு உரையெழுதிய பரிமேலழகர்,

    “மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க, அக்குணம் இல்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று”

    என்று கூறுகிறார். பாட்டில் தோன்றின் புகழொடு தோன்றுக என்னும் தொடரில் உள்ள ‘தோன்றுக’ என்னும் வியங்கோளுக்கு எழுவாய் இல்லை. வியங்கோளுக்கான எழுவாய் மூவிடத்திலும் அமையலாம். ‘மக்களாய்ப் பிறக்கின்’ என உரை காண்பதற்குரிய சொல் குறட்பாவில் இல்லை. ஆனால் அழகர் எழுதுகிறார். எப்படி? அஃதிலார் (அப்படிப் பிறக்கமாட்டாதவர்) என உயர்திணையில் இருப்பதால் ‘தோன்றுக’ என்னும் வியங்கோளும் மக்களை நோக்கியதாகவே இருத்தல் வேண்டும் என்பதாக அனுமானிக்கிறார். எனவே   ‘மக்களாய்’ என்பதை வருவித்துக் கொள்கிறார். இனித், ‘தோன்றலின் தோன்றாமை நன்று’ என்பதற்குப் ‘பிறத்தலின் பிறவாமையே நன்று’ என்றுதான் உரை எழுதியிருக்க வேண்டும். அப்படி எழுதினால் பிறப்புக்குத் தடைசெய்வதுபோல ஆகிவிடும். அழகர் ‘மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று’ என்று எழுதுகிறார். ‘தோன்றுவதைவிடத் தோன்றாமையே நன்று’ எனக் குறட்பாவில் இருக்க ‘விலங்காய்ப் பிறத்தல் நன்று’ என்று அவர் எழுதுவதற்குத் துணையாக இருப்பதுதான் அருத்தாபத்தி அளவை. ‘தோன்றுக’ என்னும் உடன்பாட்டால் தோன்றாமை என்னும் எதிர்மறையும் உடன்பாடாகிறது. எபப்டி;? புகழோடு பிறக்க முடியுமென்றால் சரி. இல்லையாயின் பிறக்காதே என்னாமல் விலங்காய்ப் பிறப்பதே நல்லது என்கிறார். இது உலகியல் தழுவியது.  ‘செய்தால் இப்படிச் செய் இல்லையென்றால் அப்படிச் செய் என்பது உலக வழக்கு’ உலக வழக்கில் இருக்கின்ற இந்த அருத்தாபத்தி அளவையைப் பயன்படுத்திக் கொண்ட பரிமேலழகர்,

    ‘அஃதிலார் என்றமையின் மக்களாய்’ என்பதூஉம் மக்களாய்ப் பிறவாமை என்னும் அருத்தாபத்தியால் ‘விலங்காய்ப் பிறத்தல் என்பதூஉம் பெற்றாம்”

    என்று எழுதுகிறார். பிறப்பைத் தடை செய்ய முடியாது அல்லவா?

    தின்பது இல்லையானால் கொல்வதும்  இல்லை!

    ‘அருளல்லது யாதெனின்’ (254) என்னும் குறட்பாவினாலும் ‘உண்ணாமை உள்ளது’ (255) என்னும் குறட்பாவினாலும் (கொலைசெய்யாவிட்டாலும்) ஊன் தின்பவர்க்குக் ‘கொலைப்பாவம் உண்டு’ என்பது சொல்லப்படுகிறது. ‘கொலை செய்பவன் வேறொருவன் ஆதலின் அப்பாவம் அவனுக்கேயன்றி ஊன் உண்பவனுக்கு வராது’ என்பது ஒரு வாதம். இந்த வாதத்தை மறுத்துப் பின்வரும் குறட்பாவில் திருவள்ளுவர் தம் கருத்தினைப் பதிவு செய்கிறார்.

    “தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யார்யார்க்கும்
    விலைபொருட்டால் ஊன் தருவார் இல்” (256)

    இந்தக் குறட்பாவிற்குப்,

    “பேதைமை காரணமாக அல்லது ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின் பொருள் காரணமாக ஊன் விற்பார் யாரும் இல்லை.”

    எனக் கிடக்கை நிலையிலேயே எந்த மாற்றமும் இல்லாமல் பரிமேலழகர் பொழிப்புரை எழுதியிருக்கிறார். இந்தப் பொழிப்புரைக்குப் பின்னால் அமையும் விளக்கவுரையில்தான் பரிமேலழகர் தம் உரைநுண்ணியத்தைக் காட்டுகிறார். ஈண்டு உரை நுண்ணியம் என்பது திருவள்ளுவரின் உள்ளக்கிடக்கை. பாட்டுக்குள் கிடக்கும் ஆழமான பொருளை வெளிப்படுத்துவதாகவும் திருவள்ளுவரின் உள்ளம் அறியும் முயற்சியாகவும் அமைந்துள்ளது.

    “பின் நிகழும் தின்கை முன் நிகழும் கொலைக்குக் காரணம்  இன்மையின் தின்பார்க்குக் காரணத்தான் வரும் பாவம் இல்லை என்ற வாதியை நோக்கி அருத்தாபத்தி அளவையால் காரணம் ஆதலைச் சாதித்தலின்”

    “காரணம் காரியம் என்னும் இரண்டனுள் காரணம் முற்பட்டிருப்பதும் காரியம் பிற்பட்டிருப்பதும் யாவரும் ஒப்புக் கொள்ளும் இலக்கணமாம். ஆதலால், முன்னே செய்கின்ற கொலைத்தொழிலுக்குப் பின்னே மற்றொருவன் ஊன் தின்பது காரணமாகாது. ஆதலால் கொலைப்பாவம் கொன்றவனைச் சேராது. தானே கொன்று தின்னக் கூடாதேயன்றிப் பிறன் கொன்று விற்றதை விலைகொடுத்து வாங்கித் தின்னத் தடையில்லை” என்பது ஒரு வாதம். இவ்வாறு வாதம் செய்வானை நோக்கி, ‘இவன் வாங்குவான் என்னும் நம்பிக்கையே கொலைஞன் கொல்லுதற்குக் காரணம் ஆதலால், கொலைப்பாவம் கொன்றவனைச் சேரும் என்பது நியாயம். ஊனை வாங்குவார் இல்லையாயின் விற்பார் இல்லை என்னும் கருத்து இவன் தின்னுதற்கு வாங்குவான் இல்லையாயின் அவன் கொன்று விற்றல் செய்யான் என்பது அருத்தாபத்தி பிரமாணம். அதாவது காரணம் முன்னும் காரியம் பின்னுமாய் அமைவதே உலகியல்பு. இங்கே ஊன் தின்பதாகிய காரணம் பின்னிருக்கிறது. இக்காரணத்தின் விளைவு முன்னிருக்கிறது. இதனைத் தெளிவுபடுத்துகிறார் அழகர்.

    இந்த விளக்கத்தை உள்ளடக்கிய பரிமேலழகரின் விளக்கவுரை அமையாதிருக்குமாயின் குறட்பாவில் அட்ங்கியிருக்கும் தர்க்க நியாயம் புலப்படாமல் போயிருக்கக்கூடும்.

    நல்லவன் இல்லையென்றால் தீயவன் தானே!

    கட்டுரையின் முன்னுரையில் கூறியவாறு இன்மை செயல்படாது. இன்மைக்கு மாறாய உண்மைதான் செயல்படும். ஒருவனை நேரடியாகக் குற்றம் சாட்டுதலறியாத பண்பாடு நோக்கிய தமிழியல் பதிவு இது. ஒழுக்கமுடையவளும் அது இல்லாதவளும் இணைந்து போனால் ஒழுக்கம் உடையவளுக்குத்தான் கேடு. உடன் செல்லும் ஒழுக்கமிலாதவளின் எதிர்மறைப் பண்புகளால் இவள் பாதிக்கப்படுவாள் என்பது நடப்பியல். ‘பெரியாரைத் துணைக் கோடல்’ என்று கூறிய திருவள்ளுவர் ‘சிற்றினம் சேராமை’ என்றதும் இது நோக்கியே. இது போன்ற குறிப்புக்களைத் திருவள்ளுவர் பல இடங்களில் குறிப்பிடுகிறார். அவற்றுள் அருத்தாபத்தியைச் சார்ந்த சில குறட்பாக்கள் ஆராயப்படுகின்றன.

    “பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
    பெருகலிற் குன்றல் இனிது” (811)

    என்பது ‘மாறாத மிக்க அன்பு கொண்டார்போல் பழகுவார் ஆயினும் தீய குணங்களை உடையவருடைய நட்பு வளர்வதைவிடத் தேய்தலே சிறந்தது., நன்மையைத் தரும் என்னும் பொருளைத் தரும் இந்தக் குறட்பாவிற்குக்,

    “காதல் மிகுதியால் பருகுவார் போன்றாராயினும் தீக்குணமுடையார் நட்பு வளர்தலின் தேய்தல் நன்று”

    என்று பொழிப்புரை எழுதுகிறார் பரிமேலழகர். எழுதிக், குறட்பா, தான் தந்த பொழிப்புரை அவ்விரண்டனையும் கற்பாருக்குத் தோன்றும் ஐயம் ஆகிய அனைத்தையும் சிந்திக்கிறார். சிந்தித்த பிறகு குறட்பாவில் ‘பண்பிலார் கேண்மை’ என்னும் தொடரில் உள்ள ‘பண்பிலார்’ என்னும் சொல்லுக்குத் ‘தீக்குணம் உடையார்’ என்று தாம் எழுதியது சரியா என்பதற்கான விளக்கத்தையும் விளக்கவுரையில் தந்திருக்கிறார்.

    “நற்குணமில்லார் எனவே தீக்குணம் உடையார் என்பது அருத்தாபத்தியான் வந்தது.”

    என்பதே அந்த விளக்கம். நற்குணம் இன்மையே ஒருவனிடம் செயல்படாது. அடையாளப்படுத்தாது. அதற்கு மாறாய தீக்குணமே செயல்படும். ஒருவனை அடையாளப்படுத்தும். பாட்டில் அவ்வாறு இல்லையே என்றால் அதற்குத்தான் அருத்தாபத்தி அளவை பயன்படுகிறது. கற்பாருக்குத் தெளிவையும் தருகிறது. இதனையொத்த வேறுசில குறட்பாக்களுக்கும் பரிமேலழகர் அருத்தாபத்தி அளவையைப் பயன்படுத்தி உரையெழுதியிருப்பதைக் காணமுடிகிறது.

    “இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
    பண்பின்மை பாரிக்கும் நோய்” (851)

    என்னும் குறட்பாவையும்,

    “எல்லா உயிர்கட்கும் பிற உயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் குற்றம் இகல் என்று சொல்லுவர் நூலோர்”

    “நற்குணமின்மை அருத்தாபத்தியான் தீக்குணமாயிற்று”

    என மேற்கண்ட குறட்பாவிற்குப் பரிமேலழகர் எழுதியிருக்கும் பொழிப்புரை மற்றும் விளக்கவுரை ஆகியனவற்றைக் கற்பார் இதனைப் புரிந்து கொள்ள இயலும்.

    தனிப்படர் மிகுதியும் தனிமைப் புலம்பலும்

    காமத்துப்பால் அதிகாரங்களுள் ‘தனிப்படர் மிகுதி’ என்பதும் ஒன்று. தன்னைப் பிரிந்த தலைவனை எண்ணித் தலைமகள் தனிமையில் புலம்புதல். அதாவது தனிமைத் துன்பம். இது உலகியல் வழக்கும் புலனெறி வழக்குமாகும். ஆனால் புலனெறிவழக்கில் தலைவியைப பிரிந்த தலைவன் புலம்புதற்கு இலக்கியம் இல்லை. கற்பியலில் பிரிவு அறுவகைப்படும். ஓதற்பிரிவு, பொருள்வயின் பிரிவு, பரத்தையிற் பிரிவு என்னும் மூன்றனையும் தவிர, காவற்பிரிவு, பகைதணிவினைப் பிரிவு, வேந்தற்கு உற்றுழிப் பிரிவு’ என்ற மூன்றும் அறத்தை நோக்கிய பிரிவுகளாம். எனவே ‘அவன் புலம்பினான்’ என்று இலக்கியம் செய்தால் அது அறத்திற்கும் பொருளுக்கும் ஏலாதென்க. இதனைப் பரிமேலழகர். ”அறமும் பொருளும் நோக்கிப் பிரிதலின் அவன்கண் இல்லையாயிற்று’ என எழுதுகிறார்.

    தலைவியின் புலம்பலில் ஒன்றினைச் சொல்கிறாள். தாம் விரும்பும் கணவனால் தாம் விரும்பப்படவில்லையெனின் தான் நல்வினை செய்யவில்லை என்றுதானே பொருள்?’ என்று வேதனைப்படுகிறாள். இதனை,

    “வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
    வீழப் படாஅர் எனின்” (1194)

    என்னும் குறளாலும் அதற்குப் பரிமேலழகர் எழுதிய,

    “கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுவாரும் தாம் விரும்பும் கணவரான் விரும்பப் படாராயின் தீவினையாட்டியர்”

    என்னும் பொழிப்புரையாலும் அறியலாம். விளக்கவுரையில்,

    ‘கெழீயின்மை’ — நல்வினையின்மை அது அருத்தாபத்தியான தீ வினையுடைமை யாயிற்று”

    என்று எழுதுகிறார். குறட்பாவில் உள்ள ‘கெழீஇயிலர்’ என்னும் சொல்லுக்கு  நல்வினை யின்மை’ என்பதுதான் பொருள். ‘கெழுதகை இன்மை’ என்பதாம் ஆனால் அழகர் ‘தீவினையாட்டியர்’ என உரைகாண்கிறார். காரணம் நல்வினை ‘இன்மை’ செயல்படாது. தீவினை ‘உண்மையே’ செயல்படும். அதாவது இவள் தீவினை காரணமாகவே கணவன் இவளை விரும்பவில்லையாம் என்பது மனைவியின் கருத்து.

    புகழும் அழியாது! புகழுடையவனும் அழியமாட்டான்

    ‘அவன் யாரோடும் ஒட்டமாட்டான்’ என்பது உலகியல். பொருளதிகாரத்தில் இது இகல். அதாவது இரு மன்னர்களும் போர்க்களத்தில் தமது ஆற்றலை வீணாக்குவதற்கு ஏதுவான கருத்து மாறுபாடு அல்லது பகையுணர்வு. விட்டுக் கொடுத்தல் என்பது அதற்கு எதிர்மறை. இந்தப் பகையுணர்வை நீக்கியார்க்கு அழியாத புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். இந்தக் கருத்தினை உள்ளடக்கிய,

    “இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின்  தவலில்லாத்
    தாவில் விளக்கம் தரும்” (853)

    என்னும் குறட்பாவிற்குப் பரிமேலழகர்,

    “மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் தன் மனத்தினின்றும் நீக்குமாயின் அவனுக்கு அந்நீக்குதல் எஞ்ஞான்றும் உளனாதற்கு  ஏதுவாய்ப் புகழைக் கொடுக்கும்”

    என்று பொழிப்புரை எழுதியிருக்கிறார். பாட்டில் அழிவில்லாத புகழைப் பற்றித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘எஞ்ஞான்றும் உளன் ஆதற்கு ஏதுவாய’ என்பதற்கான சொற்கள் குறட்பாவில் இல்லை. ‘தவல் இல்லாமை’ என்பதற்கு ‘அழிதல் இல்லாமை’ என்பது பொருள். ‘எக்காலத்தும் உளதாதல் இன்றி ‘அழிதல் இல்லாமை’ கூடாது. எனவே ‘தவலில்லா’ என்னும் புகழுக்கான அடைமொழியால் ‘எக்காலத்தும் உளனாதற்கு ஏதுவாய’ என்னும் உரியவனுக்கான அடைமொழி அருத்தாபத்தியான் பெறப்பட்டது. அதாவது புகழுக்குரிய பண்படை புகழைச் செய்தவனுக்கும் அடையானது அருத்தாபத்தியின் பொருட்கொடை என்க. இதனைத்,

    ‘தவலில்லாமை அருத்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று’

    என்னும் தொடரால் விளங்க வைக்கிறார் பரிமேலழகர்.

    மறந்தவர் தானே  நினைக்க முடியும்?

    கண்ணதாசன் கண்ட தலைவி தன் மனத்தைப் பார்த்து ஒரு வினா தொடுக்கிறாள். அது ‘நினைக்கத் தெரிந்த மனமே! உனக்கு மறக்கத் தெரியாதா?’ என்பதாகும். திருவள்ளுவர் கண்ட தலைவியோ உண்மையில் தன்னை எப்போதும் தன் நினைவில் வைத்திருந்த தலைவனை அவன் மறந்ததாகப் பொய்யாகக் கற்பித்து ஊடுகிறாள். காரணம் ஊடுதல் கூடுதலின் அடர்த்தியை அதிகரிக்கும் என்பது இருவருக்கும் தெரியும். குறிப்பாகத் தலைவிக்குத் தெரியும்.  கூடி மகிழாமல் இவ்வாறு ஊடிப் பொழுதை வீணாக்குவது ஏன் என்று வினவிய தோழியிடம் தலைவன் சொல்கிறான்,

    “உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்றென்னை
    புல்லாள் புலத்தக் கனள்” (1316)

    என்பது தலைவன் கூற்று!

    தலைவன் கருத்து (பரிமேலழகரின் பொழிப்புரை)

    “பிரிந்த காலத்து நின்னை இடையீடின்றி நினைத்தேன் என்னும் கருத்தால் ‘உள்ளினேன் என்றேன்’ (என அதனை (அவ்வாறு நான் சொல்லியதனை) ஒரு கால் மறந்து பின்நினைந்தேன் என்றதாகக் கருதி) “என்னை இடையே ஏன் மறந்தீர் என்று சொல்லி முன் புல்லுதற்கு (கூடுதற்கு) அமைந்தவள் அஃதொழிந்து புலத்தற்கு (ஊடுதற்கு)” அமைந்தாள்’

    அருத்தாபத்தியால் அளந்த இடம்

    காமத்துப்பால் முழுமையும் நாடக வழக்கு. திருவள்ளுவர் இந்த இருபத்தைந்து அதிகாரங்களிலிருந்தும் ஒதுங்கிக் கொண்டு அகத்திணை மாந்தர்களைப் பேச வைத்திருக்கிறார். இந்த நுட்பத்தை அறிந்த பரிமேலழகர் தலைமக்கள் மற்றும் தோழி கூற்றாகவே இந்த அதிகாரத்திற்கு உரை எழுதியிருக்கிறார். இந்தப் பாட்டில் அருத்தாபத்தி அளவையைப் பரிமேலழகர் நேரடியாகத் தான் கண்டதாகக் கூறாமல் தலைவி கண்டதாகக் கூறுகிறார். இது மிகப்பெரிய நுட்பம்.

    தலைவன் “எப்பொழுதும் நினைத்தேன் என்கிறான். மறந்தால்தானே நினைக்க வேண்டி வரும்? அப்படியானால் என்னை மறந்தது ஏன்?’ என்று ஊடுகிறாளாம் தலைவி.

    ‘அவன் எழுந்தான்’ என்றால் விழுந்தது பெறப்படும் அல்லவா? குமரகுருபரர் பேசினார் என்றால் அதற்குமுன் அவர் ஊமையாக இருந்தார் என்பது பெறப்படும். அதுபோலத் தலைவன் ‘நினைத்தான்’ என்றவுடன் ‘ஏன் மறந்தீர்’ என்பது தலைவி தலைவனை அளந்த அருத்தாபத்தி. தலைவி ஊடுதற்கும் இந்த அருத்தாபத்தி உதவியிருக்கிறது என்பதுதான் சிறப்பு!.

    நிறைவுரை

    ‘அருத்தாபத்தி’ என்னும் அளவை தத்துவ விசாரணைக்கும் சமயக் கோட்பாடுகளுக்குமானது. அதனை இலக்கிய உரையில் தேவையான இடத்தில் பயன்படுத்தி மூலப்பொருளைத் துல்லியமாக விளக்கியதுதான் பரிமேலழகரின் உரைத்திறன்!. திருக்குறளுக்கான ஏனைய உரைகளில் இவ்வாறு அளவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை அறிந்து சொல்வது கற்பார் கடன்!

    (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 21

    பரிமேலழகர் உரைத்திறன் – 21

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கணமின்றி இலக்கியம் இல்லை…….?

    முன்னுரை

    ‘கொட்டி கிழங்கோ கிழங்கெ’ன்று கூறித் தெருவில் நடந்த வணிகம் அருகிய காலம் இது. எல்லாம் ‘அங்காடி மயம்’ அல்லது ஆன்லைன் மயம். பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் தெருவில் ஒருவர் காலை வேளையில் பற்பொடி விற்பனை செய்தார். அவர் இப்படிச் சொல்லித்தான் விற்பார். எப்படி? ‘பாடாவதி பற்பொடி வேணுமா?’ என்று. ‘பாடாவதி பற்பொடியை யாராவது வாங்குவார்களா?’ என அவரை வினவியபொழுது அவர் சொன்னார் ‘பற்பொடி பாடாவதி அல்ல. பல்லுதான் பாடாவதி. அதுதான் பூச்சிப்பிடித்துக் கெட்டிருக்கும். அதற்குத்தான் இந்தப் பொடி’ என்றார். அவர் சொன்ன விளக்கம் என்னவென்றால் ‘பாடாவதி பல்லுக்குப் பொடி’யாம். ‘பாடாவதி’ என்ற சொல்லைப் பற்பொடிக்கும் அடையாக்கலாம். பல்லுக்கும் அடையாக்கலாம். ஒரு தொடரை வேற்றுமையாகவும் பொருள் விரிக்கலாம். அல்வழியிலும் பொருள் விரிக்கலாம். இரண்டும் இரண்டு தனித்தனிப் பொருளைத் தரும். இதுபோலவே திருக்குறளில் சில சொற்கள், தொடர்கள். இவற்றிற்கு இலக்கண அமைதியைக் கூறுவதன் மூலம் அவற்றின் செம்பொருள் துலங்கவும், குழப்பத்தைத் தவிர்க்கவும் பரிமேலழகர் உரை உதவியிருக்கிறது. அது பற்றிய ஒரு சிறு விளக்கத்தைத் தருவதையே நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

    ஏன் வேண்டும் இலக்கண விளக்கம்?

    இனிமை வேண்டும் என்றால் இலக்கணம் வேண்டும்! ‘காற்றிலேறி விண்ணையும் சாடுவோம் காதற்பெண்கள் கடைக்கண் பணியிலே’ என்பார் பாரதியார். ‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்’ என்பார் பாரதிதாசன். பாரதிதாசன் வழக்கறிவார். பாரதியார் இலக்கணமறிவார். முன்னவர் வழக்கு நோக்கிக் ‘கடைக்கண்’ என்றார். பின்னவர் இலக்கணமறிந்துக் கண்ணின் கடை என்றார். எது சரி? இரண்டுமே சரி. பின்னதன் பொருளைத்தான் முன்னது தருகிறது. முன்னதன் கருத்தையே பின்னது காட்டுகிறது. இதுதான் இலக்கணம். எப்படி? கடைக்கண் என்று ஒன்றில்லை. ஏனென்றால் முதற்கண், இடைக்கண் என்று வேறு இல்லையாதலால்!. சொல் வழங்குகிறதே எனின் அதன் நோக்கம் கண்ணின் கடைப்பகுதியைக் குறிப்பதே!. எனவே ‘கடைக்கண்’ என்பதன் பொருள் கண்கடை என்பதே!. இது பாரதிக்கும் தெரியும் பாரதிதாசனுக்கும் தெரியும்.  அவரிருவருமே இலக்கணம் அறிந்தவர்கள். இந்த மக்களின் வழக்கும் உணர்ந்தவர்கள். எனவே கடைக்கண் என்பது ‘கண்ணினது கடைப்பகுதி’ என்னும் பொருளைத் தருகிறது. ‘அது’ என்பது ஆறாம் வேற்றுமை உருபு. ‘கண்ணினது கடை’ என்றிருந்தால் நெறி. கடைக்கண் என்றிருந்தால் அதனை முன்பின்னாகக் கொண்டு உருபை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது இலக்கணம். அதனால்தான்,

    “நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
    உயிர்க்கிறுதி யாகி விடும்”  (476)

    என்னும் குறட்பாவில் பயின்றுள்ள ‘நுனிக்கொம்பர்’ என்னும் சொல்லுக்கு இலக்கண அமைதி கூற வந்த பரிமேலழகர்,

    ‘நுனிக்கொம்பர் என்பது கடைக்கண் என்பதுபோல முன் பின்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை’

    என்று எழுதுகிறார். கொம்பு என்றால் கிளை. கொம்பினது நுனி என்றால் கிளையினது நுனி என்பது பொருள். இப்படித்தான் பாட்டு இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்படித்தான் எழுத வேண்டும் என்று திருவள்ளுவரிடம் யாரும் சொல்லமுடியாது. அவர் எழுதியதற்குத்தான் நாம் விளக்கம் தரவேண்டும். எனவே ‘கொம்பினது நுனி’ என்பதைத்தான் ‘நுனிக்கொம்பு’ என்று எழுதியிருக்கிறார். கொம்பில் நுனிக்கொம்பு, இடைக்கொம்பு, கடைக்கொம்பு என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. ‘நுனிக்கரும்பு’, ‘நுனியிலை’ என்பதற்கும் இது பொருந்தும் ‘வாழையிலையின் அடி’ என்பார் பாரதிதாசன். பரிமேலழகரின் இந்த இலக்கண விளக்கத்தால் ‘கண்ணினது கடைப்பகுதி’, ‘கொம்பினது நுனி’ என்னும் பொருட்தெளிவும் கிட்டுகிறது. கிட்டவே பிற கண்களும் உளவோ? ‘பிற கொம்புகளும் உளவோ என்னும் குழப்பமும் வராமல் தடுக்கப்டுகின்றன. இதுபோன்று திருக்குறள் பரிமேலழகர் உரையில் வரும் சில இடங்களைத் தொடர்ந்து காணலாம்.

    ஆறாம் வேற்றுமை பொருள் விளக்கம்

    பெயர்ச்சொற்களின் வேற்றுமை பற்றி ஆராய்கிற தொல்காப்பியச் சொல்லதிகாரம் ஆறாம் வேற்றுமைப் பொருள் பற்றி,

    “ஆறாகுவதே
    அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
    தன்னினும் பிறிதினும் ‘இதனது இது’ எனும்
    அன்ன கிளவிக் கிழமைத் ததுவே!” தொல் சொல் (79)

    என்னும் நூற்பாவில் ஆராய்கிறார். ‘இதனது இது’ என்றால் ‘இதனுடைய உரிமை இது’ என்பது பொருள். ‘கிழமை’ என்றால் உரிமை. திங்களுக்கு உரியது திங்கட்கிழமை என்பதுபோல. இந்த உரிமை இரண்டு வகைப்படும். ஒன்று பொருளிலிருந்து பிரிக்க இயலாத உரிமை. பொருளிலிருந்து பிரிக்கக் கூடிய உரிமை. பிரிக்க இயலாத உரிமைக்குத் தற்கிழமை என்று பெயர். பிரிக்கக் கூடிய உரிமைக்குப் பிறிதின் கிழமை என்று பெயர். ‘பெண்ணினது அழகு’ ‘கண்ணினது பார்வை’ என்னும் தொடர்களில் பெண்ணையும் அழகையும் பிரிக்க இயலாது. கண்ணையும் பார்வையையும் பிரிக்க இயலாது. எனவே இவை தற்கிழமை. ‘பாரியது மலை’, ‘கபிலரது பாட்டு’ என்னும் தொடர்களில் பாரியையும் பறம்பையும் பிரிக்கலாம். கபிலரையும் பாட்டையும் பிரிக்கலாம். எனவே இவை பிறிதின் கிழமை.

    இனி இந்தப் பிரிக்க இயலாத தற்கிழமை என்பது ஒன்றுபல குழீஇய தற்கிழமை, வேறுபல குழீஇய தற்கிழமை, ஒன்றியற் கிழமை, உறுப்பின் கிழமை மெய்திரிந்ததாய ஐந்து வகைப்படும்.

    பிரிக்கக் கூடிய உரிமைகளாகிய பிறிதின் கிழமை, உடைமைக் கிழமை, முறைமைக்கிழமை, கருவிக்கிழமை, துணைக்கிழமை, கலக்கிழமை, முதற்கிழமை, செய்யுட்கிழமை எனப் பலவகைப்படும். இவற்றை விரிப்பின் பெருகுமெனினும் செய்யுட்கிழமையைப் பற்றிய ஒரு விளக்கம் தரப்படுகிறது.

    செய்யுட் கிழமை என்றால் என்ன?

    ‘கபிலரது பாட்டு’ என்னுந் தொடரில் கபிலரும் அவர் எழுதிய பாட்டும் தனித்தனியாக இருந்து உடைமைப் பொருளை உணர்த்துகிறது. அதனால் இது பிறிதின் கிழமை. இனி, அந்தப் பாட்டு அவர் எழுதியதாலேயே அவர்க்கு அது உடைமையாயிற்று. பாட்டாகிய செய்யுள் அவ்வுடைமைக்குக் காரணமாதலின்  அது செய்யுட்கிழமை ஆயிற்று. எனவே செய்யுட்கிழமை என்பது ஆறாம் வேற்றுமைப் பொருளாகிய உடைமைப் பொருளை உணர்த்தும் இரண்டு முறைகளில் பிறிதின் கிழமையின் வகைகளுள் ஒன்று என்பது பெறப்படும். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் பின்வரும் பாட்டின் இலக்கண நுட்பத்தைப் புரிந்து கொள்ள இயலும்.

    “பொறிவாயில் ஐந்தவித்தான் ஆற்றல் பொய்தீர் ஒழுக்க
    நெறி நின்றார் நீடு வாழ்வார்” (6)

    என்பது குறட்பா. இந்தக் குறட்பாவிற்கு,

    “மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது மெய்யான ஒழுக்க நெறியின்கண் வழுவாது நின்றார், பிறப்பின்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்.”

    என்று பொழிப்புரை எழுதியிருக்கிறார். இந்தப் பொழிப்புரையைத் தொடர்ந்து வரும் விளக்கவுரையில்,

    “ஒழுக்கநெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின் ஆண்டை ஆறனுருபு செய்யுட்கிழமைக்கண் வந்தது ‘கபிலரது பாட்டு’ என்பது போல”

    என்று ஒரு குறிப்பு வருகிறது. ஐந்தவித்தவன் இறைவன். ஐந்தவித்தான் ஆற்றல் என்றால் ஐந்தவித்தானது ஆற்றல் என்று பொருளன்று. ஐந்தவித்தானால் சொல்லப்பட்ட ஆற்றல் என்பது பொருள். சொன்னவன் ஐந்தவித்தான். சொல்லப்பட்டவை ஐவகை ஆற்றல். இவ்வாற்றல் அவனோடு பிணிக்கப்பட்டது அன்று. பிரிந்து நிற்பது. எனவே ‘ஐந்தவித்தானது’ ஆற்றல்’ என்னும் ஆறாம் வேற்றுமை விரிக்கப்படினும் அது ‘அவனது ஆற்றல்’ என்னும் தற்கிழமையாகாது ‘அவனால் சொல்லப்பட்ட ஆற்றல்’ எனப் பிறிதின் கிழமையாய் நின்றதாம். எதுபோல? ‘கபிலரது பாட்டு’ என்பதுபோல!. ‘கபிலரது பாட்டு’ என்றால் ‘கபிலருடைய பாட்டு’ என்று பொருள் தந்தாலும் அவ்வுரிமைத்தொடர் கபிலரால் எழுதப்பட்ட பாட்டு’ என்று பிறிதின் கிழமையாகத்தான் அமையும். அதுபோல  ‘‘ஐந்தவித்தான் ஆற்றல்’ என்னும் தொடர் ஆறாம் வேற்றுமைக்குரியதாக விரிக்கப்படினும் அது ‘ஐந்தவித்தானது ஆற்றல் எனத்’ தற்கிழமையாக நில்லாது ‘ஐந்தவித்தானால் சொல்லப்பட்ட ஆற்றல்’ எனப் பிறிதின் கிழமைப் பொருளினைத் தருவதைக் காணலாம்.

    வேற்றுமை மயக்கம்

    ‘வேற்றுமை மயக்கம்’ இரண்டு வகைபப்டும். ஒன்று ‘பொருள் மயக்கம்’. மற்றொன்று ‘உருபு மயக்கம்’. வேற்றுமை உருபுகள் தமக்குரிய பொருள் வரையறை எல்லைகளைக் கடந்து வேறொரு வேற்றுமையின் பொருளை உணர்த்தி நிற்பதைப் ‘பொருள் மயக்கம்’ என்பர். பிறிதொரு வேற்றுமை உருபு நிற்க வேண்டிய இடத்தைத் தான் பிடித்துக் கொண்டு அதனை விரட்டி விடுவதை ‘உருபு மயக்கம்’ என்பர். இவ்வாறான மயக்கங்கள் இயல்பானதன்றிச் செயற்கையானதல்ல. புலவனின் உணர்ச்சி வேக வெளிப்பாட்டில் நிகழ்ந்துவிடும் ஒரு விபத்தாகவே கருதப்படலாம். திருவள்ளுவர்,

    “உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
    அற்றே தவத்திற் குரு”. (261)

    என்று எழுதியிருக்கிறார். இந்தப் பாட்டிற்குத்,

    “தவத்தின் வடிவு உண்டி சுருக்கல் முதலியவற்றால் தம் உயிருக்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும் தாம் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமையும் ஆகிய அவ்வளவிற்று”

    என்று பரிமேலழகர் பொழிப்புரை எழுதியிருக்கிறார். ‘தவத்திற்கு இலக்கணம்’ (தவத்திற்கு உரு) என்று பாட்டு அமைந்திருக்கிறது. இப்படி அமைந்தால் ‘கு’ என்னும் நான்காம் வேற்றுமை உருபாகிப் பொருள் தெளிவிருக்காது. புலவனுக்குக் கொடுத்தான் என்றால் பெற்றவன் புலவன். தவத்திற்கு உரு என்றால் கொடைப்பொருளால் குழப்பம் உண்டாகும். உண்மையில் தவத்தினுடைய உரு என்றுதான் இருக்க வேண்டும். அதாவது பாட்டில் நான்காம் வேற்றுமை உருபு வந்திருந்தாலும் அது ஆறாம் வேறாம் வேற்றுமைக்குரிய உடைமைப் பொருளை உணர்த்தி நிற்கிறது. இன்னும் தெளிவாகச் சொன்னால் நான்காம் வேற்றுமை உருபு தனக்குரிய கொடைப் பொருளை உணர்த்தாமல் தனக்கு உரிமையல்லாத ஆறாம் வேற்றுமை உடைமைப் பொருளை உணர்த்தி நிற்கிறது. இந்த இலக்கண நுட்பத்தை அறிந்த பரிமேலழகர்,

    ‘தவத்திற்கு உரு’ என்பது யானையது கோடு கூரிது என்பதனை ‘யானைக்குக் கோடு கூரிது’ என்றாற்போல ஆறாவது பொருட்கண் நான்காவது வந்த மயக்கம்.

    என்று இலக்கண விளக்கம் தருகிறார். ‘யானைக்குக் கோடு கூர்மையானது’ என்பது ‘யானையினுடைய தந்தம் கூர்மையானது’ என்பதையே குறிக்கும்.  ஆனால் இலக்கியங்களில் ‘யானைக்குக் கோடு கூரிது’ என்று வருகிறது. அதனைப் போலவே ‘தவத்திற்கு உரு’ என இருந்தாலும் ‘‘தவத்தினுடைய உரு’ என்று கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். ஒவ்வொரு வேற்றுமைக்கும் தனித்தனிப் பொருள் வரையறை செய்யப்பட்டிருப்பதால் அதனுள் மாற்றம் வந்துவிடக்கூடாது என்னும் மொழிச் செப்பம் காக்கும் முயற்சி இது. வெள்ளாடு மட்டுமன்று வேற்றுமை உருபுகளும் வேலி தாண்டக்கூடாது என்பது இதனால் பெறப்படும்!

    பொருத்தம் பொருளிலும் வேண்டும்

    ‘ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்’ என்பன மூன்றாம் வேற்றுமைக்குரிய உருபுகள் ஆகும். இந்த ஐந்து உருபுகளுள் ‘ஆல், ஆன்’ என்னும் இரண்டும் கருவிப்பொருளிலும் கருத்தாப் பொருளிலும் வரும். ‘மழையினால் குளம் நிறைந்தது’, ‘கோலால் எழுதினான்’, ‘இதனான் முடிக்கும்’, ‘கலைஞரால் கட்டப்பட்டது’, ‘சாமிநாத அய்யரால் பதிப்பிக்கப்பட்டவை’ என்பன போல. ‘ஆன்’ உருபு தற்போது வழக்கில் இல்லை’. ‘ஒடு, ‘ஓடு’, ‘உடன்’ என்னும் இரண்டும் உடன்நிகழ்ச்சிப் பொருளில் வரும். ‘அமைச்சரோடு உதவியாளர் சென்றார்’ ‘அமைச்சருடன் ஒப்பந்தக்காரர் சென்றார்’ என்பன போல. இவற்றால் ஐந்து உருபுகள் கொண்ட மூன்றாம் வேற்றுமை மூன்று பொருண்மைகளில் வரும் என்பது தெரியவரும். வந்தாலும் இவ்வைந்து உருபுகளும் மூன்றாம் வேற்றுமைக்குரியனவே என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

    “அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
    புறத்த புகழு மில”  (39)

    என்ற குறட்பாவிற்கு,

    ‘இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பமாவது அதனோடு பொருந்தாது வருவனவெல்லாம் இன்பமாயினும் துன்பத்தினிடத்த., அதுவுமேயன்றிப் புகழுடைய அல்ல”

    என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “ஆன் உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது. ‘தூங்கு கையால்’ ஓங்கு நடை என்புழிப்போல” (புறம் 22)

    என்று விளக்கவுரை எழுதியிருக்கிறார். ‘அறத்தான் வருவதே இன்பம்’ என்னும் தொடரில் பயின்று ‘ஆன்’ என்னும் வேற்றுமை உருபு அவர் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தப் பாட்டில் சொல்லப்படுவது காம இன்பத்தினை. அது இல்லறத்தோடு இணைந்திருக்க வேண்டிய ஒன்று. ‘பிறன்மனை விழைதல்’ காம இன்பம் தருமெனினும் அது துன்பத்தைத் தரும் புகழைத் தராது. இருக்கின்ற புகழை அழிக்கும். இழிவைத்தரும். அந்த வேற்றுமை உருபிற்கு இலக்கண அடிப்படையில் கருவிப்பொருளைக் கொண்டால் ‘இல்லறத்தால் வருவது இன்பம்’ எனப் பொருள் மயக்கம் உண்டாகும். ‘இல்லறத்தோடு பொருந்தி வருவதே காம இன்பம்’ என்னும் பொருள் கிட்டாது. எனவே பரிமேலழகர் ‘ஆன்’ என்னும் கருவிப்பொருள் உருபு உடன்நிகழ்ச்சிப் பொருள் தந்ததாகக் கருதி எழுதுகிறார். சரி, பரிமேலழகருக்காக வேற்றுமை இலக்கணம் மாறுபடுமா? என்றால் அவர் தான் கொண்ட பொருளை மற்றொருவரும் கொண்டிருக்கிறார் என்பதற்கான இலக்கியச் சான்றினைப் புறநானூற்றில் இருந்து எடுத்துக்காட்டுகிறார். அந்த எடுத்துக்காட்டில், யானையின் வரவு கூறப்பட்டுள்ளது. ஆடிவரும் அதன் துதிக்கையும் அசைநடையும் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஆனால் பாட்டு எப்படி அமைந்திருக்கிறது? ‘தூங்கு கையான் ஓங்கு நடைய’ என்றிருக்கிறது. ‘தூங்கு’ என்றால் ‘தொங்கு’ என்பது பொருள். ‘தொங்குகின்ற கையால் ஓங்கிய நடை’ என்று வராது. நடைக்குக் கை காரணமல்ல. கையொடு நடையாம். ‘கையான் நடை’ என்பதைக் ‘கையொடு நடை’ என மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும். கொள்ளவே, ‘தூங்கு கையொடு ஓங்கு நடைய’ என்பது பெறப்படும். இங்கே ‘ஆன்’ என்னும் கருவிப்பொருள் உருபு, உடன் நிகழ்ச்சிப் பொருளில் வந்தது. இவ்விரண்டு உருபுகளும் மூன்றனுக்குரியன எனினும் இலக்கியப் பொருள் நுட்பத்திற்காக மாறிய பொருள் தந்து அமைந்திருக்கிறது என்பதைப் பரிமேலழகர் உணர்த்தியிருக்கிறார்.

    இங்கே இரு சொல் அங்கே ஒரு சொல்!

    உலகவழக்கில் இயல்பாகப் பேசப்படும் சில தொடர்கள் நம் கவனத்தை ஈர்ப்பதுண்டு. ‘பார்த்துக் கேள்’, ‘கேட்டுப் பார்’, ‘போய்ப் பார்’, ‘பார்த்துப் போ’ என்னும் உலகவழக்கினையும் “புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை” என்பது திருவாசகத்தையும் நோக்குதற்குரியன. மேற்கண்ட சொற்களில் ‘பார்த்தல் என்பது ஒரு வினை. ‘கேட்டல்’ என்பது தனிவினை. ஆனால் ஒரு பொருளைத்தான் குறிக்கிறது. திருவாசகத்தில் வரும் ‘கேட்டல்’ என்பது தனிவினை. ‘அறியோம்’ என்பது தனிவினை. பொருளில் ‘உன்னைக் கண்டவர்களை நாங்கள் கேட்டதில்லை’ என்பது மட்டுமே உலகவழக்கிலும் இலக்கிய வழக்கிலும் அமைந்த இது மாதிரியான சொற்கள் ஆழமான கவனத்தைப் பெறுவதில்லை. ஆனால் உரையாசிரியப் பெருமக்கள் இலக்கியத்தின் பொருளாழம் கருதித் தம் நுண்ணோக்கினால் சில இலக்கண அமைதிகளைக் கூறுகின்றனர்.

    “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
    நன்னயம் செய்து விடல்” (314)

    என்னும் குறட்பாவிற்குப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “தமக்கு இன்னா செய்தாரைத் துறந்தோர் ஒறுத்தலாவது அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல்”

    என்று கூறுகிறார். இக்குறட்பாவைச் சொல்லுகின்ற தமிழ்ப்பேராசிரியர் உட்பட அனைவரும் ‘பிறர் செய்த தீமையையும் நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுதல்’ என்று சரியாகச் சொன்னாலும் ‘மறந்துவிடுதல்’ என்பதற்கான வினைச்சொல் குறட்பாவில் இருக்கிறதா என்பதை எண்ணுவதே கிடையாது. அதாவது அவர்கள் கொள்கின்ற பொருளும் சொல்கின்ற பொருளும் சரியே. அதற்கான சொற்பயன்பாடு குறட்பாவில் இருக்க வேண்டுமல்லவா? இவர்கள் படாத கவலையைப் பரிமேலழகர் பட்டிருக்கிறார். தமது விளக்கவுரையில்,

    ‘செய்து அவ்விரண்டனையும் மறத்தல்’

    என்ற ஒரு தொடரில் தமது உரைநுட்பத்தைப் பதிவு செய்திருக்கிறார். ‘விடல்’ என்பதைப் பகுதிப் பொருள் விகுதியாகக் கொள்ளாமல் அதாவது துணைவினையாகக் (Auxillary verb) கொள்ளாமல் தலைவினையாகவே (principal verb) கொண்டு உரையெழுதுகிறார். ‘செய்து’ என்பது தனி வினையெச்சம். ‘விடல்’ என்பது தொழிற்பெயர். ‘செய்து விடல்’ என்னும் தொடர் ‘செய்து’ என்றும் ‘விடல்’ என்றும் இரண்டாகக் கொள்ளப்பட்டது. இக்குறட்பாவில் ‘ஒறுத்தல்’, ‘விடல்’ என்னுமிரண்டும் தொழிற்பெயர்கள். முன்னது எழுவாய். பின்னது பயனிலை. ‘ஒறுத்தலாவது மறத்தல்’ என இயைத்துப் பொருள் கொள்ளுமாறு அமைந்திருக்கிறது. எனவே ‘விடல்’ என்பதன் பொருள் மறத்தல் என்பதாகும். பரிமேலழகர் இவ்வாறு ‘செய்துவிடல்’ என்பதனை இரு சொல்லாகக் கொண்டு உரையெழுதியிருக்காவிட்டால் ‘பிறர் செய்த தீமையையும் அதற்கு மறுதலையாகச் செய்யப்பட்ட நன்மையினையும்  மறத்தல்’ என்னும் பொருண்மை கிட்டாதாம் என்க.

    ஒரு சொல்லை இரண்டாகப் பிரித்துக் காட்டி உரையெழுதிய பரிமேலழகர் வேறு சில இடங்களில் அது போன்ற சொற்களை ஒரு சொல்லாகவே காட்டியிருக்கிறார். அறிவுடையார், ‘உரிமை காரணமாகத் தம் நண்பர் செய்யும் பணியினை அச்செயலது தன்மை நோக்கி விரும்பி ஏற்றுக் கொள்வார்’ என்னும் பொருள்பட அமைந்த திருக்குறள்,

    “விழைதகைமை வேண்டியிருப்பர் கெழுதகையான்
    கேளாது நட்டார் செயின்” (804)

    என்பதாகும். இதற்குத்,

    “தம் கருத்தை நட்டார் உரிமையால் கேளாது செய்தாராயின் அச்செயலது விழையப்படும் தன்மை பற்றி அதனை விரும்புவர் அறிவுடையார்”

    என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகர், தமது விளக்கவுரையில் நடத்தியிருக்கும் சொல்லாராய்ச்சியில்,

    “வேண்டியிருப்பர் என்பது எழுந்திருப்பர் என்பதுபோல ஒரு சொல் நீர்மைத்து”

    என்று எழுதிக் காட்டுகிறார். ‘வேண்டுதல்’ என்றால் ‘விரும்புதல்’. ‘இருப்பர்’ என்றால் ‘வினையின்றி வாளா இருத்தல்’ ‘வேண்டியிருப்பர்’ என்பதற்கு இவ்வாறு பிரித்து உரைகண்டால் அவர் விரும்புவாரா? விரும்பி இருப்பாரா? என்னும் மயக்கம் ஏற்படும் இதனைக் களையவே ‘வேண்டியிருப்பர்’ என்னும் அச்சொல்லை ‘ஒருசொல் நீர்மைத்து’ என எழுதுகிறார். எதுபோல? ‘எழுந்திருப்பர்’ என்பதுபோல. ‘எழுந்திருப்பர்’ என்பதில் ‘எழுதல்’ ஒரு வினை. ‘இருத்தல்’ அதன் துணைவினை. ‘யானை எழுந்திருக்கும்’ என்றால் ‘யானை எழும்’ என்றுதான் பொருளே தவிர, ‘யானை முதலில் எழும். அப்புறம் இருக்கும்’ என்று பொருளன்று. அதுபோல ‘எழுந்திருப்பர்’ என்றால் ‘எழுவர்’ என்ற ஒருபொருளைத்தான் தரும். அதுபோலவே ‘வேண்டியிருப்பர்’ என்றால் ‘விரும்புவர்’ என்னும் ஒரு பொருளைத்தான் தரும் என்பது பரிமேலழகர் விளக்கம். ‘எழுந்திருப்பர்’ என்பது ‘எழுவர்’ எனப் பொருள்படுமிடத்து ஒருசொல் நீர்மைத்து. இங்கே ‘வேண்டியிருப்பர்’ என்பது ‘விரும்புவர்’ என்னும் பொருள்படுவதால் இதுவும் அதுபோல ஒருசொல் நீர்மைத்து. இதே விளக்கத்தைச்,

    “சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
    ஊக்கம் அழிந்து விடும்.” (498)

    என்னும் குறட்பாவுக்குப்,

    “பெரும்படையுடைய அரசன் ஏனைச் சிறுபடையானை அழித்தல் கருதி அவன் புகலைச் சென்று சேருமாயின் அவனால் தன் பெருமை அழியும்”

    எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் விளக்கவுரையில்,

    “‘அழிந்துவிடும்’ என்பது ‘எழுந்திருக்கும்’ என்பதுபோல ஒருசொல்.”

    எனக் கூறியிருப்பதை நோக்குக. ‘எழுந்திருக்கும்’ என்பது ‘எழும்’ என்று பொருள்படுவதுபோல ‘அழிந்து விடும்’ என்பது ‘அழியும்’ எனப் பொருள்பட்டு ஒரு சொல்லாகும்.

    நிறைவுரை

    மொழியிலக்கணம் அதற்கானதன்று. நமக்கானது. ‘கத்தி கொண்டு ஓடினான்’ என்பதற்கும் ‘கத்திக்கொண்டு ஓடினான்’ என்பதற்குமான வேறுபாடு ஓர் ஒற்றெழுத்தேயெனினும் பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் வேறுபடுத்திக் காட்டுவது காண்க. ‘இலக்கியம் கண்டதற்கே இலக்கணம்’ என்பது உண்மையே. ஆனால் அவ்விலக்கியத்தின் உள்ளடக்கத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள இலக்கணப் புலமை இன்றிமையாத ஒன்று என்பது மேற்கண்ட பதிவுகளால் புலனாகலாம். பரிமேலழகர் இவ்வாறு விளக்கியன அவர் திறன் காட்டுதற்கன்று குறட்பாவின் பொருள் திறன் புலப்படுவதற்கே! உண்மையில் இலக்கணமின்றி இலக்கியம் இல்லை என்பது உண்மையே!

    (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 20

    பரிமேலழகர் உரைத்திறன் – 20

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    சொல் – சொற்பொருள் – சொற்பொருள் விளக்கம்

    முன்னுரை

    திருக்குறளில் பயின்று வரும் சீர்களாகிய சொற்கள் உரையாசிரியர்கள் பார்வையில் அகராதிப் பொருளைத் தருவதில்லை. திருக்குறளின்  பொருண்மையை உணர்ந்து உள்வாங்கிக் கொண்டு எழுதும் உரையாசிரியர்கள் அச்சொற்களுக்குப் புலனெறி வழக்கத்திலும் உலகியல் வழக்கத்திலும் உள்ள பொருளைத் தராது சிறப்புப் பொருளைத் தருகின்றனர். இவ்வாறு இயல்பாக உள்ள பொருளைத் தவிர்த்துப் பொருள்புலப்பாட்டை நோக்கமாகக் கொண்டு பாட்டில் அமைந்துள்ள சொற்களுக்குச் சிறப்புப் பொருள் தருவதையே தலைப்பின் ‘சொற்பொருள்’ என்பது குறிக்கும். இனி அப்பொருளுக்கேற்ற விளக்கத்தையும் அவர்கள் தந்திருக்கிறார்கள். சொல், சொற்பொருள், அதற்கான விளக்கம் என்னும் நிரலை முற்றுமாகக் கற்கின்ற நிலையில்தான் அச்சொல்லுக்கு இயல்பான பொருளைத் தவிர்த்துச் சிறப்புப் பொருள் தந்ததன் உரை நுட்பம் புலப்படுகிறது. ஆசிரியர் பரிமேலழகர் தம் திருக்குறள் உரையில் இவ்வாறு உரைத்த சில இடங்களை ஆராய்ந்து சுட்டிக்காட்டுவதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

    சேர்தல் – நினைத்தல்

    ‘’அவன் சென்னை சென்று சேர்ந்தான்’’ ‘இந்த வண்டி மதுரைக்கு எப்போது சென்று சேரும்?’ ‘இந்தப் பள்ளியில் நான் சேரலாமா?’ என்றெல்லாம் செவிமடுத்திருக்கலாம் இந்தத் தொடர்களில் உள்ள ‘சேர்தல்’ என்னும் சொல் அந்த வாகனம் அல்லது மாணவன் பௌதிக ரீதியாகச் சேர்வதைக் குறிக்கும். அதாவது வாகனம் சென்னை சேரும். மதுரை சேரும். மாணவன் பள்ளியில் சேர்வான். இந்தச் ‘சேர்தல்’ என்னும் சொல் ‘மானம்’ என்னும் பகுதிப்பொருள் விகுதி பெற்றும் வழக்கில் பேசப்படுவது உண்டு. ‘அவன் நல்லவனாகத்தான் இருந்தான் சேர்மானம் சரியில்லை, கெட்டுவிட்டான்’ என்பது போல அது அமையும். இங்கே ‘சேர்மானம்’ என்பதைப் ‘பிடிமானம், அடமானம், வெகுமானம், வருமானம்’ என்ற சொற்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆனால்,

    “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்” (3)

    என்னும் குறட்பாவில் வரும் ‘சேர்ந்தார்’ என்னும் சொல்லுக்கு மேற்கண்ட பொருள் கொண்டால் இறைவனுடைய திருவடியை அடியார் தழுவிக் கொண்டதாகப் பொருள்படும். பாட்டின் பொருண்மை அதுவன்று. தற்காலத்தில் ஒருவர் ‘இறைவனடி சேர்ந்தார்’ என்றால் இறந்துபோனார் என்றுதான் பொருள். அவருக்குத்தான் சுவரொட்டி வழியாகக் கண்ணீர் சிந்துவார்கள். அதே பொருளை இங்கே கொண்டால் பாட்டுக்கான பொருள் முரண்படும். என்ன முரண்? உள்ளத்தில் இறைவனை இடைவிடாது எண்ணுவார் வீட்டுலகின்கண்  அழிவின்றி வாழ்வார் என்பதுதான் பாட்டின் பொருள். கடவுள்வாழ்த்து பாயிரத்துள் அமைந்திருப்பதாலும் நூலின் ஒட்டுமொத்தப் பொருளையும் சுருக்கமாக முன்னுரைபோலச் சொல்ல வேண்டியது பாயிரத்தின் பணியாதலாலும் மேற்கண்ட ‘சேர்ந்தார்’ என்னும் சொல்லுக்கு இயல்பான அகராதிப் பொருளைச் சொல்லுவது முரணாகும் என்பதோடு குழப்பத்தையும் உண்டாக்கும். எனவே பரிமேலழகர்,

    “சேர்தல் – இடைவிடாது நினைத்தல்”

    என்று உரையெழுதிக் காட்டுகிறார். சரி, இவ்வாறு இவர் உரைகொள்ளுவது சரியா? சரியானால் அதற்குக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்தால் திருக்குறள் அதிகாரக் குறட்பாக்களை அவர் நோக்கிய பாங்கு புலப்படும். அதாவது,

    “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்” (3)

    “வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல” (4)

    “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” (5)

    “பொறிவாயில் ஐந்தவித்தான் ஆற்றல் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்” (7)

    என்னும் நான்கு குறட்பாக்களையும் அவர் ஓரலகாகக் கொள்கிறார். அது என்ன ஓரலகு? இறைவனை வழிபடு முறைகளின் தொகுப்பாகக் காண்கிறார். மனம், மொழி, மெய்களால் இறைவனை வழிபட வேண்டும் என்பதுதான் வழிபடு முறைகள். நினைப்பதும் வழிபாடு. இறைவன் திருநாமங்களைச் சொல்வதும் வழிபாடு. நித்திய, நைமித்தியங்கள் செய்வதும் வழிபாடே. மூன்றும் தத்தம் அளவில் சிறந்து நிற்பன. ‘உள்ளம் பெருங்கோயில்’ என்றார் திருமூலர். ‘வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்த சென்னியும் தந்த தலைவன்’ என்பார் அப்பர் பெருமான். “தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க” என்பார் ஆண்டாள் நாச்சியார்.

    மேற்கண்ட உணர்வுப் பதிவுகளை உற்றுநோக்குவார் பரிமேலழகர் அதிகாரத்துக்குள் உள்ள இந்த நான்கு குறட்பாவையும் ‘இறைவழிபாடு’ என்னும் ஓர் அலகுக்குள் கொண்டு வரும் நுட்பம் உணரக்கூடும். அதாவது இறைவனை நினைத்தவர்க்கும் வீடுபேறு உண்டு. அவன் திருநாமங்கள் வாழ்த்தியோருக்கும் வீடுபேறு உண்டு. அவன் நெறிநின்றார் தமக்கும் வீடுபேறு உண்டு என்பது கருத்து.

    ‘நெறிநின்றார்’ எனத் தெளிவாக அமைந்திருக்கிறது. ‘புரிதல்’ என்பதும் ‘சேர்தல்’ என்பதும் அவ்வாறு அமைந்திருப்பதாகக் கருத முடியாது. புரிதல் என்பதற்குப் புரிந்து கொள்ளுதல் என்பதே நேர்பொருளாகும். எனவே ‘புரிதல்’ என்பதற்கு ‘எப்போதும் சொல்லுதல்’ என்று உரை காண்கிறார் அழகர். அதாவது இறைவன் திருநாமங்களை எப்போது உச்சரிப்பது ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி’  அத்திருநாமங்களைச் சொல்லுவது வீடுபேற்றுக்கு வழிவகுக்கும் ஆதலின் இறைவனுடைய பொருள்சேர் புகழை விரும்பிச் சொல்லுதல் வேண்டும் என்கிறார். இதற்கேற்பப் ‘புரிதல்’ என்னும் சொல்லுக்கு ‘எப்போதும் சொல்லுதல்’ என உரைகாண்பதை அறியலாம்.

    அறியவே மனத்தால் எண்ணுவார்க்கும் வீடுபேறு என்பதும் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அதனைத் திருவள்ளுவர் இரண்டு பாடல்களால் சொல்லுவதாகப் பரிமேலழகர் கருதுகிறார். இறைவனை எண்ணுகிறபோது அவனுடைய ஏனைய உறுப்புக்களைவிடத் திருவடியே நினைவுக்கு வரும்., வரவேண்டும் என்பது மரபு. ‘ஈசன் அடிபோற்றி எந்தையடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி’, ‘கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்’ என்னும் திருவாசகமும் அவை. ‘மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்’ என்பது பெரியபுராணம். ‘திருவடிப்புகழ்ச்சி’ என்பது வள்ளலார் பாடியது. ‘சொற்கழிவு பாதமலர்’ என்பது திருவாசகம். அந்தத் திருவடியை மனத்தால் எண்ணுதல் வேண்டுமல்லவா? ‘மாணடி சேர்ந்தார்’, ‘இலானடி சேர்ந்தார்’ என்னும் இரு பாடல்களில் பயின்றுள்ள ‘சேர்ந்தார்’ என்பதற்கு இடைவிடாது நினைத்தல் என உரைகாண்கிறார். ‘நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை’ என்பது அபிராமி அந்தாதி. ‘மாணடி சேர்ந்தார்’ என்பதிலுள்ள ‘சேர்ந்தார்’ என்பதற்கு இவ்வாறு உரைகண்ட பரிமேலழகர் அடுத்த பாடலில் ‘இலானடி சேர்ந்தார்’ என்பதில் உள்ள ‘சேர்ந்தார்’ என்பதற்கான அவ்விளக்கத்தை மீளவும் குறிக்கவில்லை என்பதும் நோக்கத்தக்கது.

    1. ‘மாணடி சேர்ந்தார்’, இலானடி சேர்ந்தார்’ என்னும் இரண்டு குறட்பாக்களையும் இறைவனைச் சிந்திப்பதற்கும்
    1. ‘புகழ்புரிந்தார்’ என்பதை இறைவன் திருநாமங்களைச் சொல்லுவதற்கும்
    1. ‘ஒழுக்க நெறிநின்றார்’ என்பதைச் செயலுக்கும்

    அவர் பொருத்திக் காட்டி எழுதுகிறார்.

    “இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும் வாழ்த்தலும் அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவார் என்பது கூறப்பட்டது”

    என்னும் விளக்கத்தாலேயே அவர் ‘சேர்தல்’ என்பதற்கு ‘இடைவிடாது நினைத்தல்’ என்றும் புரிதல் என்பதற்கு எப்போதும் சொல்லுதல் என்றும் உரையெழுதியதற்கான காரணம் புலப்படுகிறது. ‘சேர்தல் என்பது குறட்பாச் சொல். இடைவிடாது நினைத்தல் என்பது பரிமேலழகர் தரும் சொற்பொருள்.  ‘புரிதல்’ என்பது குறட்பாச் சொல். ‘எப்போதும் சொல்லுதல்’ என்பது பரிமேலழகர் தரும் சொற்பொருள். இவ்விரு சொற்பொருளுக்குமான அவர் தந்த காரண விளக்கங்கள் மேலே தரப்பட்டன.

    ‘குறை’ என்றால் இன்றிமையாத பொருள் (முக்கியம்)

    பொதுவாகக் ‘குறை’ என்ற சொல்லுக்குக் குற்றம் என்பது பொருள். ‘எப்பொழுதும் குறைசொல்லிக் கொண்டிருப்பது அவனுக்கு இயல்பு’ குறையே இல்லாதவர் இவ்வுலகில் இலர். நிலவிலும் குறை உண்டு ‘நிறைகுறை நோக்கி’ என்பன வழக்கு. இலக்கியங்களிலும் இப்பொருளே பெரும்பான்மை. ஆனால் பரிமேலழகர் இந்தச் சொல்லுக்கு ‘இன்றியமையாமை’ என்று உரைகண்டிருக்கிறார்.

    “வினைக்கண் வினைகெடல் ஓம்பல்! வினைக்குறை
    தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு” (612)

    “வினையாகிய குறையைச் செய்யாது விட்டாரை உலகம் விட்டது. அதனான் செய்யப்படும் வினைக்கண் தவிர்ந்திருத்தலை ஒழிக!” என்று பொழிப்புரை எழுதியிருக்கிறார். பாட்டில் அமைந்துள்ள தொடர்களை முன்பின்னாக்கி உலகு வினைக்குறை தீர்ந்தாரின் (ஐ) தீர்த்துவிடும் ஆதலின் வினைக்கண் வினை கெடல் ஓம்பாது ஒழிக’ என்னுமாறு கண்ணழித்து உரையெழுதுகிறார்.

    இங்கே ஆய்வுக்குள்ளாவது ‘வினைக்குறை’ என்னும் சொல்லாகும். வினையாகிய இன்றியமையாத பொருளைக் கைவிட்டாரை இந்த உலகம் மதிக்காது என்பது கருத்து. இந்த உரையை முன்னெடுக்கும் பரிமேலழகர் ‘குறை’ என்பதற்கு ‘இன்றியமையாமை’ என்று உரைகாண்கிறார். பாட்டில் ‘குறை’ என்று இருக்க பரிமேலழகரோ (வினையாகிய) ‘இன்றியமையாத பொருள்’ என்று உரைசொல்வதற்குரிய முகாந்திரம் ஏதேனும் உண்டா என்பதே கருதுகோள்.

    குறை – இன்றியமையாப் பொருள்.

    அதாவது வினையாகிய இன்றியமையாத பொருளாம். தொடக்கத்தில் கூறியவாறு ‘குறை’ என்பதற்குப் ‘பழுது’ என்றே பொருளிருக்க பரிமேலழகர் தாம் கொண்ட பொருளுக்குப் புறநானூற்றுப் பாடலில் வந்த இந்தச் சொல்லைத் துணைக்கழைக்கிறார். அந்தப் பாட்டு,

    “படைப்புப் பல படைத்துப் பலரோடுண்ணும்
    உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
    குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
    இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
    நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
    மயக்குறு மக்களை இல்லோர்க்கு
    ‘பயக்குறை இல்லை’ தாம் வாழும் நாளே!” (188)

    என்னும் பாடலாகும். இந்தப் பாடலின் இறுதி வரியிலுள்ள ‘பயக்குறை’ என்ற சொல்லில் உள்ள ‘குறை’ என்பதற்கான பழைய உரையைத் தன்னுரைக்குச் சான்றாக்கிக் கொள்கிறார். மழலையின் செயல்களால் அறிவு மயங்கும். அத்தகைய குழந்தைகளைப் பெறாதவர்க்கு இல்லறத்தின் பயனாகிய ‘இன்றியமையாப் பொருள்’ வேறு ஏதும் இல்லை என்பது இப்பாட்டிற்கான பழைய உரை. இதனை,

    அது “பயக்குறை இல்லை தாம் வாழும் நாளே” என்பதனானும் அறிக.

    என்னும் தமது விளக்கவுரைக் குறிப்பின் வழி இதனை அறிய வைக்கிறார் பரிமேலழகர். மழலையாகிய இன்றியமையாத பொருள் இல்லையெனின் வாழ்நாள் பெருமை இல்லை. வினையாகிய இன்றியாமையாப் பொருள் இல்லையெனின் ஆள்வினைப் பெருமை இல்லை என இயைத்துப் பொருளறிக.

    ‘குறை’ என்பது குறட்பாச் சொல். இன்றியமையாப் பொருள் என்பது பரிமேலழகர் தரும் சொற்பொருள். அச்சொல் அப்பொருளுக்கு உரித்தாமாறு புறநானூறு கொண்டு விளக்கியது அவர்தம் சொற்பொருள் விளக்கம்.

    இதற்கு இவ்வாறு உரைகாணாது வேறுவகையாக உரைகண்டால் ‘வினையே ஆடவர்க்குயிரே’ என்னும் கருத்தினை உள்வாங்கிக் குறள் கூறும் கருத்து சிறக்காமல் போய்விடுவதுடன் ‘ஆள்வினையுடைமை’ என்னும் அதிகாரத்தோடும் பொருந்தாதாம்.

    ‘உயர்வு’ என்பது பணியாமை

    உலகியலிலும் இலக்கிய வழக்கிலும் உயர்வு என்பது உடன்பாட்டுச் சொல். அது எதிர்மறை அன்று. ஒருவன் உயர்ந்தான் என்றால் அவன் தாழ்ச்சியடையவில்லை என்பது பொருளன்று. முன்பு இருந்த நிலையைவிட இன்னும் உயர்ந்திருக்கிறான் என்பதுதான் பொருள். ‘தாழ்ச்சியடையவில்லை’ என்றால் இருந்த நிலையிலேயே இருந்திருக்கிறான் என்றே பொருளாகும்.  இத்தகைய பொருளைப் பரிமேலழகர் குறட்பா ஒன்றில் பதிவு செய்து தம் உரை நுண்ணியத்தை உறுதி செய்வதைக் காணலாம்.

    “பெருக்கத்து வேண்டும் பணிதல்., சிறிய
    சுருக்கத்து வேண்டும் உயர்வு”  963

    என்பது குறட்பா. இந்தக் குறட்பாவிற்குக்,

    “குடிப்பிறந்தார்க்கு நிறைந்த செல்வம் உளதாயவழி யாவர்மாட்டும் பணிவு வேண்டும். குறைந்த நல்குரவு உளதாயவழிப் பணியாமை வேண்டும்.”

    என்று பொழிப்புரை எழுதுகிறார். பெருக்கத்து வேண்டும் பணிதல் என்பதற்கு அவர் எழுதிய செல்வம் உளதாயவழிப் பணிவு வேண்டும் என்ற உரையில் மாறுபாடு ஏதுமில்லை. ஆனால் சுருக்கத்து வேண்டும் உயர்வு என்பதற்கு அவர் ‘நல்குரவு உளதாயவழிப் பணியாமை வேண்டும்’ என்று எழுதுகிற உரைதான் ஆய்வுப் பொருளாகிறது.

    இந்த உரைக்கு மூலமாக அவர் வருவித்துக் கொண்ட சொல் ‘குடிப்பிறந்தார்’ என்பதாகும். இது இதற்கு (97) முந்தைய அதிகாரமான ‘குடிமை’ (96) என்னும் அதிகாரப் பொருண்மை நோக்கி அமைந்ததாகும். எப்படி? குடிப்பிறந்தார்க்குப் பணிவு இயல்பு. ‘தன்னிலையில் தாழாமை’ (96) என்று குறிப்பாகப் பொருள் விரிப்பார் பரிமேலழகர். எனவே செல்வம் வந்து உற்றக்காலை ஆணவம் கொள்வதும் செல்வம் குறைந்து வறுமை வந்தக்கால் குலைந்து நடுங்குவதும் அவர் அறியாதவை. வறுமையாகிய சுருக்கம் வந்துற்ற காலை அவர் நிமிர்ந்து நிற்பது முந்தைய பணிவு நிலையையே குறிக்கும். இந்தப் பணிவு செல்வம் வந்து குவியும் போது உயராது. அதனால் செல்வம் குறைகிறபோது தாழாது. அதாவது முந்தைய பணிவிலிருந்து குறையாது. அதனால்தான்,

    ‘பணியாமை – தாழ்வு வராமல் பழைய உயர்ச்சிக்கண்ணே நிற்றல்’

    என்று உரையெழுதுகிறார். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று கருதிய பரிமேலழகர்,

    “செல்வக்காலை அது உயர்ச்சி செய்யத் தாம் தாழ்தலும் அல்லற்காலை அது தாழ்வு செய்ய தாம் உயர்தலும் வேண்டும் என்பதாம்”

    என்றும் விளக்கவுரை எழுதுகிறார். செல்வம் தன்னை உயர்த்துங்கால் உயராமல் தாழ்ந்து நிற்றலும் செல்வம் இல்லாத போது அச்செல்வம் தன்னைத் தாழ்த்த தான் உயர்ந்து நிற்றலும் குடிப்பிறந்தார்க்கு இயல்பாம் என்பது இவ்விளக்கவுரையால் பெறப்படும். பணிவும் உயர்வும் செல்வத்தை நோக்கியது என்பது அறிக.

    இவ்வுரையில் ‘உயர்வு’ என்பது குறட்பாச் சொல். அதற்குப் பணியாமை என்பது பரிமேலழகர் கண்ட சொற்பொருள். “அது (செல்வம்) தாழ்வு செய்ய தாம் உயர்தலும் வேண்டும்” என்பது அச்சொற்பொருளுக்கான விளக்கம்.

    உயர்வு ‘பணியாமை’ என்றால் பணிவு ‘உயராமை’ என்பது பெறப்படும். ‘மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு’ என்பதும் ‘மெய்த்திருப் பதம் மேவு என்ற போதினும் ‘இத்திரு துறந்து ஏகு’ என்ற போதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரையினை ஒத்திருக்கும் முகம்’ (5088) என்னும் கம்பராமாயணமும் இந்த வெளிப்பாட்டை ஒத்திருப்பதை உணரலாம். இது எந்த நிலை வந்தாலும் இருந்தநிலை மாறாதிருத்தல். இவ்வாறு உரைகாணாது ‘உயர்வு’ என்பதற்கு இயல்பான பொருளைக் கொண்டால் குடிப்பிறந்தார் இயல்பாகக் கொண்டிருந்த பணிவு சலனத்திற்கு ஆளாகிவிடும் என்பது அறிக.

    நிறைவுரை

    வள்ளுவர் சொல்லுக்குப் பரிமேலழகர் காணும் பொருளும் அதற்கான விளக்கமும் ஒரே அலைவரிசையில் நிற்பதைக் காணலாம். திருக்குறளில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த உரைநெறியை அவர் பின்பற்றியிருக்கிறார். அவர் சொல்லுக்கு இவர் தரும் பொருள் அகராதியில் கிட்டாது. முன்னது மொழிசார்ந்தது. பின்னது படைப்பவன் உள்ளம் அறியும் முயற்சி சார்ந்தது. ஏனைய உரையாசிரியர்களாலும், இல்லாத காரணங்களைச் சுட்டியோ மிகச் சிறுபான்மை மாற்றுக்கருத்துக்களுக்காகவோ அவர் கருத்தினை மிகக் கடுமையாக மறுப்பவர்களாலும் எண்ணிப் பார்க்க இயலாத இத்தகைய புலமைப் பேராற்றல் அவருக்கு இயல்பு.

    (தொடரும்…)

    Share