தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 5

0

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

தொல்காப்பியமும் தண்டியலங்காரமும்

முன்னுரை

‘உவமம்’ என்பது தமிழ் இலக்கிய மற்றும் இலக்கண மரபுப்படி அகப்பொருள் மாந்தர்களின் கூற்றுப் பகுதியில் பயன்படுவது. அது தற்காலத்தைப் போலச் செய்யுளுக்கு அல்லது கவிதைக்கு அழகு சேர்க்கும் ஓர் உறுப்பு என்பது வடமொழி மரபு. இதற்கான சான்றுகள் முந்தைய கட்டுரைகளில் சுட்டப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தில் ‘அணி’ என்னும் சொல், ‘செய்யுளணி’ என்னும் பொருளில் அந்நூலின் எந்தவிடத்தும் ஆளப்படவில்லை. உவமவியலில் செய்யுளணி பற்றிய குறிப்பு ஏதும் காணப்படவில்லை. செய்யுளுறுப்புக்களில் ஒன்றாகவும் அது கூறப்படவில்லை. இந்த மூன்று கருத்துக்களும் தொல்காப்பியத்தை உற்று நோக்கிய அளவில் காணப்படும் வெகு இயல்பான உண்மைகள். இருந்தும் தொல்காப்பியம் அணியிலக்கணச் சிந்தனைகளை வெளிப்படுத்துகிற நூலெனவும் தொல்காப்பியருக்கு அணியிலக்கணச் சிந்தனை இருந்திருக்கிறது எனவும் கருதுகிற போக்கு, தமிழியல் ஆய்வுலகில் நிலவுகிறது.  இதுபற்றிய அறிஞர் சிலருடைய கருத்துக்களின் வன்மை மென்மைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

தொல்காப்பியத்துக்கு அணியிலக்கணம் உடன்பாடா?

தொல்காப்பியம் ‘உவமவியல்’ என்னுந் தலைப்பில் அமைந்த இயலில் செய்யுளில் அமையும் அணி பற்றியே ஆராய்ந்திருக்கிறது. அவ்வியல் பல்வேறு வகையில் இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் உவமைகளின் வகைகளைப் பற்றிக் கூறுகிறது. உவமத்தைத் தவிர மற்ற அணிகள் ஏதும் தொல்காப்பியத்தில் காணப்படவில்லை. அதற்குக் காரணம், ஏனைய அணிகளின் அடிப்படைக் கூறுகள் எல்லாம் உவமையில் நிலவியதால் அவையெல்லாம் உவமத்தின் சிதறல்களாகவே கருதப்பட்டிருக்கலாம் அல்லது உவமையணி மட்டுமே தொல்காப்பியர் காலத்தில் பயன்பாட்டில் இருந்து, மற்ற அணிகள் வளர்ச்சிடையாமல் இருந்திருக்கலாம்.” என்னும் ஊகத்தின் அடிப்படையில் எழுந்திருக்கும் இத்தகைய கருத்துக்கள் பல்வேறு ஐயங்களை எழுப்ப வல்லனவாக அமைந்திருக்கின்றன. ஆதலால் பின்வரும் விளக்கம் பதிவு செய்யப்படுகிறது.

  1. உவமவியலில் செய்யுளணி பற்றிய குறிப்பு எந்த நூற்பாவில் அமைந்திருக்கிறது என மேற்சுட்டிய ஆய்வாளர் சுட்டவில்லை.
  2. உவமவியல் அகப்பொருள் மாந்தர்தம் கூற்றுப் பகுதியில் வினை, பயன், மெய், உரு என உவமம் தோன்றும் முறையும், சிறப்பு, நலன், காதல், வலி, கிழக்கிடும் பொருள் என அதன் நிலைக்களன்கள் பற்றி ஆராய்கிறதே அல்லாமல் தண்டியலங்காரத்தைப் போலப் பல்வகை உவமைகளைப் பற்றி ஆராயவே இல்லை என உறுதியாகக் கூற முடியும்.
  3. ‘உவமைகளின் வகை’ எனத் தொல்காப்பியம் கூறுகிறது என்றால், அவ்வகைகள் எவை என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை.
  4. ஏனைய அணிகளின் கூறுகள் எல்லாம் உவமத்துள் அடங்கியதாகக் கருதப்பட்டதே உவமம் மட்டும் கூறப்பட்டதற்கான காரணம் என்றால், அக்காரணம் தொல்காப்பியத்தில் பதிவு செய்யப்படாமல் போனதற்குக் காரணம் என்ன?
  5. மற்ற அணிகள் வளர்ச்சியடையாமல் போனதும் (other kinds of figures of speech had not been developed then) உவமையின் தனித்த பயன்பாட்டுக்குக் காரணமாயின் மற்ற அணிகள் வளர்ச்சியடையாமல் போனதற்கான காரணங்கள் என்ன என்பதை மேற்கண்ட பகுதியால் அறிந்து கொள்ளவியலவில்லை.
  6. உவமத்தைச் செய்யுளணியாகவும் உவமவியலை அணியிலக்கணம் கூறும் பகுதியாகவும் முன்னரே கருதி முடிவெடுத்துக் கொண்டு அவற்றையெல்லாம் உவமவியலில் தேடியும் காணவியலவில்லை என்பதெல்லாம் ஆய்வு நெறிக்கு ஏற்றதாகுமா என்பது சிந்தனைக்குரியது.

தொல்காப்பிய உவமம் பற்றிய பாவாணர்தம் விளக்கம்

“தொல்காப்பியத்திலும் தொன்னூல்களிலும் உவமை அணியிலக்கண  முறையில் கூறப்படாமல் பொருளிலக்கண முறையிலேயே கூறப்பட்டுள்ளது. தோழி, தலைவன் தலைவியொடு, சிறப்பாகத் தலைவனொடு உரையாடும் போது உள்ளுறையுவமம், ஏனை யுவமம் என்னும் இருவகை உவமங்களையும் ஆளுவது மரபு. இவற்றை விளக்க எழுந்ததே உவமவியல். பிற்காலத்தில் வடநூலார் அணியிலக்கணம் வகுத்தபோது தமிழிலக்கண உவமவியலைப் பயன்படுத்திக் கொண்டதுடன் ‘உவமை’ என்னும் பெயரையும் ‘உபமா’ எனத் திரித்துக் கொண்டனர். தொல்காப்பியம் கடைக்கழகக் தொடக்கத்தெழுந்த வழிநூலாதலால் அதற்கு முந்திய அகத்தியம் முதலிய நூல்கள் வடமொழி இலக்கணங்களுக்கு முதனூல் என்பதை எவரும் மறுக்க முடியாது. மேலும் ‘ஐந்திரம்’, ‘பாணினீயம்’ முதலிய வடமொழி வியாகரணங்கள் எல்லாம் நன்னூல் போல் எழுத்தும் சொல்லும் ஆகிய இரண்டே கூறுவனவென்றும், தொல்காப்பியம் முதலிய தொன்னூல்கள் யாவும் எழுத்து, சொல், பொருள் மூன்றையும் கூறும் பிண்டங்கள் என்றும் வேறுபாடறிதல் வேண்டும். வடமொழியில் யாப்பிலக்கணம் ‘சந்தன’ அல்லது ‘சந்தோபிசிதி’ என்னும் நூல்களிலும் அணியிலக்கணம் ‘அலங்காரம்’ என்னும் நூல்களிலும் வேறாகக் கூறப்படும். தமிழிலோ யாப்பும் அணியும் பொருளிலக்கணக் கூறுகள்” என்னும் பாவாணர் அவர்களின் விளக்கம் உவமம் பற்றிய அனைத்துவகை ஐயங்களையும் களைவதாக அமைந்துள்ளது.

நிலைக்களன் ஒன்று சிந்தனை இரண்டு

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் காணப்படும் உவமவியல் இருவேறு வகையான சிந்தனைகளுக்குக் களமாயிருக்கிறது. ‘உவமவியல் அடிப்படையிலேயே பிற்கால அணியிலக்கணங்கள் வளர்ந்தன என்றுரைக்கும் ஆய்வறிஞர்களும், ‘உவமவியலை அடிப்படையாக வைத்துத் தமிழின் தனித்தன்மை மிக்க துறையாக அணியிலக்கணம் வளர்ச்சி பெறவில்லை’ என்னும் ஆய்வறிஞர்களும் தமிழாய்வு உலகத்தில் உள்ளனர் என்பது ஈண்டு இன்றியாமையாக் கருத்தாகச் சுட்டப்படுகிறது.

“அகத்திணையியல் அகப்பொருளாகவும், புறத்திணையியல் புறப்பொருளாகவும், களவியல் இறையனார் களவியலாகவும், செய்யுளியல் யாப்பருங்கலம் – காரிகை, பாட்டியல் – பிரபந்தவியல் எனப் பல்வகையாகவும் விரிந்து வளர்ந்தமை போன்று ‘உவமை’ என்ற ஒன்றே பின்பு அணிக்கும் அலங்காரத்திற்கும் இடமளித்துத் தன்னை அடியாகக் கொண்டு வளர்ந்த பல்வேறு அணிகளையும் இணைத்துக் கொண்டு தனி அணி இலக்கணமாக வளர்ந்து வந்துள்ளது என்று கருத இடமளிக்கிறது”

எனப் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆய்வுலகில்,

“தொல்காப்பியத்தோடு ஒட்டிய தமிழ் மரபோடு பொருந்திய
உவம  வளர்ச்சி பற்றிய நூலொன்றும் தோன்றவில்லை”

என்னும் சிந்தனையும் போதிய கவனத்திற்கு ஆளாகியுள்ளது என்பதும் நோக்கத்தக்கது.

“தொல்காப்பியர் தம் நூலை எழுத்து, சொல், பொருள் என்னும் முப்பகுதி உடையதாக யாத்துள்ளார். தமக்கு முன்னிருந்த பகுப்புமுறை உண்மை கொண்டே அவர் இப்பகுப்பு முறையை ஏற்றுக் கொண்டிருத்தல் வேண்டும். எழுத்திலக்கணம் அடிப்படையாகவும், சொல்லிலக்கணம் அதன் வளர்ச்சியாகவும், சொல்லுணர்த்தும் பொருள் பற்றிய இலக்கிய இலக்கணம் முடிந்த பயனாகவும் கொள்ளப் பெற்றன. எழுத்தும் சொல்லும் கற்பது பொருள் பற்றிய இலக்கியக் கொள்கைகள் அனைத்தையும் உணர்ந்து இலக்கியங்களை விளக்கமுறக் கற்று இன்பம் நுகர்வதற்கே என்று எண்ணினர். தமிழ்ப்புலவர், பிற்கால இலக்கண ஆசிரியர் சிலர் எழுத்து, சொல்லோடு நின்று விட்டனர். பொருளைப் பற்றி எழுதியவர்கள்கூடத் தொல்காப்பியக் கருத்துக்களையே திரும்பவும் சுருங்கக் கூற முயன்றனரேயன்றிப் புதுமை படைக்கவோ முன்னதை மேலும் விளக்கவோ முயலவில்லை எனலாம். சிலர் பொருளிலக்கணத்திலிருந்து யாப்பைப் பிரித்துத் தனி இலக்கண நூல் எழுதினர். சிலர் அகம் புறம் பற்றித் தனி இலக்கண நூல்களை யாத்தனர். வேறு சிலர் பாட்டியல் நூல் என்னும் ஒரு பிரிவைக் கலப்படமாக ஆக்கினர். ஆனால் உவமவியலை அடிப்படையாகக் கொண்ட தமிழ் அணியியல் ஒன்றும் தோன்றவில்லை.”

தொல்காப்பிய நிலைக்களத்தில் இவ்வாறு இருவேறு சிந்தனைகள் கிளைத்துள்ளன. எனினும்,

  1. தண்டியலங்காரம் என்னும் வடமொழித் தழுவல் நூலில் குறிக்கப்பட்டுள்ள உவமைகளின் பெயர்கள் ஒன்றுகூடத் தமிழில் இல்லையாதலாலும்,
  2. தனக்குப் பின்னால் செய்யுளணி பற்றிய நூல் தோன்றும் எனக்கருதி முன்கூட்டியே தொல்காப்பியர் உவமவியலைப் படைத்தார் என்பது அளவையியலுக்குப் (LOGIC) பொருந்தாமையானும்
  3. தண்டியலங்காரத்துக்கு முன்னர் எழுந்த தமிழ்க்கவிதைகளில் அணி விகற்பங்களைப் பற்றிய குறிப்புக்கள் ஏதும் இல்லாததாலும்

அணியிலக்கணச் சிந்தனை தொல்காப்பியருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை என்னும் முடிவுக்கே வரவேண்டியுள்ளது.

உவம நெறி பற்றிய பாவலர் பாலசுந்தரனார் கருத்து

‘உவமம்’ எனத் தொல்காப்பியர் பயன்படுத்தியதற்கும், ‘உவமையணி’ எனப் பிற்காலத்தார்  உருவாக்கிக் கொண்டதற்கும் உள்ள தொடர்பினை ஆய்வறிஞர் ச.பாலசுந்தரனார்  பின்வருமாறு விளக்கிக் காட்டுகிறார்.

“உவமமானது செய்யுளொடு ஒருங்கிணைந்து, சிறப்பு நலன் முதலாகியவையேயன்றி மெய்ப்பாடுகளையும் நிலைக்களனாகக் கொண்டு தோன்றுதலான் உவமவியலை, மெய்ப்பாட்டியலின் பின்னும் செய்யுளியலின் முன்னுமாக அமைத்துக் கூறினார் ஆசிரியர்.

“இடைக்காலத்தே இலக்கண நூல் செய்த ஆசிரியன்மார் மெய்ப்பாடுகளையும் ஆகுபெயர் முதலாய குறிப்பு மொழிகளையும் பொருள்கோளையும் முரண்தொடை முதலியவற்றையும் நோக்கு முதலாய செய்யுளுறுப்புக்களையும் வேறுபட வந்த உவமத் தோற்றங்களையும் உள்ளுறை உவமத்தினையும் செய்யுட்கு அணி செய்வனவாகக் கொண்டு வடமொழி அலங்கார நூல்களைப் பின்பற்றி அணிநூல் செய்து போந்தனர்”.

“தொல்காப்பியத்துள் கூறப்படும் உள்ளுறை உவமம் ஏனையுவமம் என்னும் பொருளிலக்கணப்பகுதியை அணியிலக்கணம் கூறுவதாகக் கருதி உவமை என்னும் அணியிலிருந்தே பிற அணிகள் யாவும் விரிந்தனவாதலின் அவற்றையெல்லாம் அடக்கி இவ்வாசிரியர் உவமவியல் கூறுவதாக மயங்குவர் பலர்.”

“தமிழ் இலக்கணம் யாவும் வடமொழி இலக்கணங்களை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டவை எனக் கருதுவார்க்கும் அதற்கேற்ப ஆய்வுரைகளைக் கூறுவார்க்கும் தமிழிலக்கணத்தின் தொன்மையினையும் தொல்காப்பியத்தின் நுண்மையினையும் எடுத்துக் கூறித் தமிழின் தனித்தன்மையை ஏற்கச் செய்வதென்பது ஏறா மேட்டிற்கு நீர் பாய்ச்சுதலை ஒக்கும் என்க”

ஆய்வு என்னும் பெயரால் தமிழ் மரபைப் பிறழ உணர்ந்தார்க்கும்  உணர்ந்த  பின்பும் மரபழிக்க முயல்வாருக்கும் பாவலரின் இவ்வரிய விளக்கம் பயன்படுதல் வேண்டும்.

நிறைவுரை

இதுகாறும் வலிமை வாய்ந்த தரவுகள் பலகொண்டு காட்டப்பெற்ற விளக்கங்களால் உவமம் என்பது தமிழ் மரபென்றும் அது அகப்பொருளில் தலைமக்களுக்கானது என்றும், பின்னாலே வடமொழி மரபு தழுவி எழுதப்பெற்ற தண்டியலங்காரம் என்னும் நூலில் காணப்பெறும் உவமம் பற்றிய கருத்துக்களும் விளக்கங்களும் செய்யுளுக்கு அணியானவை என்றும் புரிந்து கொள்ளலாம். கலாச்சாரக் கலப்புக்கள் இலக்கிய இலக்கணங்களில் எதிரொலிக்கவும் செய்யும் என்பதற்கு இது சான்றாகலாம். தற்காலத்தில் உவமம் பற்றிய தொல்காப்பிய மரபு முற்றிலும் கைவிடப்பட்டு அது கவிதைக்கு அழகு சேர்க்கும் ஓர் உறுப்பு என்ற அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் பொருள் புலப்பாட்டுக் கருவியாகவும் செய்யுளுக்கு அணியாகவும் அமைந்திருக்கும் இவ்வுவமங்கள் கவிதைகளின் பெருமைக்கு எவ்வாறு துணைசெய்கின்றன என்பதைத் தொடர்ந்து வரும் கட்டுரைகளால் விளங்கிக் கொள்ளலாம்.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *