தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 7

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

இலக்கண விளக்கமும் உவமமும்

முன்னுரை

பொதுவாக ‘உவமம்’ என்பது இலக்கியம் சார்ந்தது. அதற்கேயுரியது. வண்ணனைச் செய்யப்படும் பொருளை அல்லது விளக்கப்படும் கருத்துகளைக் கூடுதல் கவர்ச்சியோடும் தெளிவோடும் அழகோடும் புரிந்துகொள்வதற்காகப் படைப்பாளனால் ஒப்புமை செய்து காட்டப்படுவதே உவமம். ஆனால் தமிழியல் வரலாற்றில் முற்றிலும் மாறான நிலையில் இந்த உவமத்தைப் பயன்படுத்தியிருப்பதை அறியமுடிகிறது. இலக்கண நுட்பங்களைக் கற்பித்தலுக்கான கருவிகளில் ஒன்றாக இந்த உவமமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருவகையில் பொருள் விளக்கம் எனக் கருதப்படலாம். ஆனால் பொருள் விளக்கம் என்பது ‘அகர முதல எழுத்தெல்லாம்’, ‘வெள்ளத்தனைய மலர்நீட்டம்’ என்பன போல அமையும். இலக்கண விளக்கத்திற்காக உவமத்தைப் பயன்படுத்துவது நுண்ணியது. அரியது. உலகத்தின் வேறு எந்த மொழிகளிலாவது இவ்வாறு அமைந்துள்ளதா என்பது ஆய்வுக்குரியது. இந்தப் பின்புலத்தில் இலக்கண விளக்கத்தில் உவமத்தின் பங்களிப்பை இந்தப் பகுதி சுருக்கமாக ஆராய்கிறது.

இலக்கண நூல்களில் உவமப் பயன்பாடு

இலக்கண நூல்களில் உவமப் பயன்பாடு இருவகையில் அமைந்திருப்பதை அறியமுடிகிறது.

  1. தொடர்புடைய இலக்கண நூலிலேயே நூற்பாவின் கருத்தை விளக்குதற்கு நூலாசிரியரே உவமையைப் பயன்படுத்துதல்.
  1. நூற்பாவின் கருத்தை விளக்க உரையாசிரியர்கள் உவமையைப் பயன்படுத்துதல்.

தெளிவுக்குத் தொல்காப்பியம் காட்டும் உவமம்

மகாகவி பாரதி அறிவைச் சுட்டுகிற பொழுதெல்லாம் தெளிவை முன்னிறுத்துவது இயல்பு. ‘பாரதி கவிதைகள்’பெற்ற வெற்றிக்கு இந்தத் தெளிவின் பங்கு ‘செம்பாகம் அன்று., பெரிது. பாரதியின் பெயரை முன்னிறுத்திக் கொள்ளும் கவிஞர் பலரால் எழுதப்படும் கவிதைகள் புரியாத மொழியில் அமைந்திருக்கின்றன என்பது தனி ஆய்வுக்குரியது.“தெளிவு பெற்ற மதியினாய்”  “தெள்ளிய ஞானப் பெருஞ்செல்வமே”, “தெளிவுறு அறிவினை”, “சிந்தை தெளிவாக்கு”, “தெளிந்த நல் அறிவு வேண்டும்”, “மூடச் சித்தமும் தெளிவுறச் செய்தாள்”, “சிந்தனை தெளிந்தோம்”, “நல்ல தெள்ளறிவு”, “சித்தத் தெளிவெனும் தீயின் முன்”, “சித்தந் தெளியும்”, “அறிவு தெளிந்திடும்”, “அறிவிலே தெளிவு”  என்றெல்லாம் தெளிவை முன்னிறுத்தும் பாரதியின் இலக்கியப் போக்கு, தொல்காப்பியத்திலேயே தொடங்கிவிடுகிறது. இந்தத் தெளிவுக்குத் தொல்காப்பியம் ஆடியை உவமமாக்கியிருப்பதை அறியமுடிகிறது.

“அவற்றுள்
ஆடி நிழலின் அறியத் தோன்றி
நாடுதல் இன்றிப் பொருள்நனி விளங்க
யாப்பினுட் தோன்ற யாத்தமைப் பதுவே”

என்னும் நூற்பாவில் தெளிவுக்கு ஆடியை உவமிக்கும் தொல்காப்பியம், ஆடியின் பண்புகளாக,

  1. நாடுதல் இன்மை
  2. பொருள் நனி விளங்குதல்

என்னும் இரண்டினைச் சுட்டி அவ்விரு பண்புகளும் சூத்திரங்களில் அமைதல் வேண்டும் என்பதை விளக்கிக் காட்டுகிறது. ஆடியின் தெளிவைத் தெய்வப் புலமைத் திருவள்ளுவர்  ‘அடுத்தது காட்டும் பளிங்குபோல்’என முகத்திற்கு உவமமாக்குவது ஈண்டு ஒப்பிடத்தகுந்தது.

இனமான மணிகள் இணைந்து நிற்கும் ஓத்து

சூத்திரம், ஓத்து, படலம், பிண்டம் எனத் தொல்காப்பியர் நூல்வகைகளை நான்காகப் பகுப்பர். அவற்றுள் ஓத்தின் இயல்பு கூற வந்தவர்,

“நேரின  மணியை நிரல்பட வைத்தாங்கு
ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது
ஓத்தென மொழிப உயர்மொழிப் புலவர்”

என்னும் நூற்பாவில் உவமத்தால் விளக்கிக் காட்டுவதை அறியமுடிகிறது. இந்நூற்பாவில் ‘நேர், ‘இனம்’ஆகிய இரு சொற்களும் உவமத்தின் பொருள் புலப்பாட்டுத் திறனுக்குப் பேருதவி செய்வனவாம். அளவாலும் தரத்தாலும் ஒத்திருக்கும் மணிகளைக் கோத்து ஆரம் அமைப்பதுபோல, ஒன்றற்கொன்று இயைபுடைய பொருள்களை நிரல்படக் கோத்தமைப்பதே ‘ஓத்து’என்பது இந்நூற்பாவின் உள்ளடக்கமாகும்.

மேலெழுந்தவாரியாக நோக்குவார்க்குச் சூத்திரமும் ஓத்தும் ஒன்று போலத் தோன்றிடினும், முன்னதற்குத் தெளிவையும், பின்னதற்கு அளவு, தன்மை ஆகியவற்றையும் இயல்புகளாக்கித் தொல்காப்பியம் அவற்றிடையே அமைந்த வேறுபாடு காட்டுவது உணரத்தக்கது. தொல்காப்பியத்தை முதனூலாகக் கொண்டு வழிநூல் செய்த பவணந்தியார் இந்நூற்பாவில் (நன்னூல் 16) எத்தகைய மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் கையாளுவதற்கு மேற்கண்ட உவமத்தின் பொருள் புலப்பாட்டுத் திறனே காரணமாக இருத்தல் கூடும். நூன்மரபும் மொழிமரபும் எழுத்திலக்கணமேயானாலும், எழுத்தின் தனிப்பண்புகளை ஆராயும் நூன்மரபை ஒரு தொகுப்பாகவும், மொழியிடை நிற்கும் அதன் மற்றொரு இயல்பை ஆராயும் மொழிமரபை மற்றொரு தொகுப்பாகவும்; தனித்தனி ஓத்துக்களாகப் பிரித்தமைத்திருப்பது ‘ஓத்து’என்பதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டாகலாம்.

நன்னூலுள் உவமங்கள்

‘நூல்’என்பதற்குப் பயனடிப்படையில் தாம் தரும் பொருள் வரையறையைத் தொழில் சார்ந்ததோர் உவமத்தின் துணையால் நன்னூலாசிரியர் பவணந்தியார் அளித்திருப்பதை அறியமுடிகிறது.

“உரத்தின் வளம்பெருக்கி உள்ளிய தீமை
புரத்தின் வளமுருக்கிப் பொல்லா – மரத்தின்
கனக்கோட்டம் தீர்க்கும் நூல் அஃதே போல் மாந்தர்
மனக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு”

மரத்தின் கோணல்களை நூல் தீர்ப்பதுபோல் மனத்தின் கோணல்களை நூல் தீர்க்க வேண்டும்’என்பது மேற்கண்ட நேரிசை வெண்பாவின் கருத்து. ‘மனக்கோட்டம் தீர்ப்பதே நூல்’என்பது பொருள் வரையறை. இலக்கண நூலாசிரியர் ஒருவர் தச்சுத் தொழில் தொடர்பானதோர் உவமத்தைத் தம் கருத்து விளக்கத்திற்குப் பயன்படுத்தியிருப்பது சிந்தனைக்குரியது. இதனைப் போலவே, சூத்திரத்தின் இயல்புக்கு வரையறை கூறும் நன்னூல்,

“சில்வகை எழுத்திற் பல்வகைப் பொருளைச்
செவ்வன் ஆடியிற் செறித்தினிது விளக்கித்
திட்பம் நுட்பம் சிறந்தன சூத்திரம்”

எனத் தொல்காப்பியத்தைப் போலவே ஆடியைத் துணைக்கழைத்திருப்பதைக் காணமுடிகிறது. தொல்காப்பியம் தெளிவுக்கு ஆடியைப் பயன்படுத்திக் கொண்டிருக்க, நன்னூல் அதனோடு திட்பத்திற்கும் நுட்பத்திற்கும் பயன்படுத்திக் கொண்டிருப்பது நோக்கத்தக்கது. எனவே ‘ஆடி’என்னும் உவமம், தெளிவு, செறிவு, இனிமை, நுட்பம் முதலிய  பல்வகைப் பண்புகளுக்கும் களனாகிறது எனலாம்.

அமிதசாகரரும் அம்போதரங்க உறுப்பும்.

தொல்காப்பியமும் நன்னூலும் தாம் கூறவந்த கருத்துக்களை விளக்குதற்கு  நூற்பாக்களில் உவமைகளைப் பயன்படுத்தியுள்ளதைப் போலவே யாப்பருங்கலக்காரிகையுள்ளும் யாப்பு பற்றிய கருத்துக்களைத் தெளிவுறுத்த உவமத்தைப் பயன்படுத்தியுள்ளமை அறியமுடிகிறது. முன்னவற்றில் ஆங்காங்கே உவமை பயன்பட்டிருப்பதைப் போலல்லாது, காரிகையில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே இலக்கண விளக்கத்திற்கு உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது. நால்வகைப் பாக்களில் ஒன்றான கலிப்பா, ஒத்தாழிசைக்கலிப்பா, வெண்கலிப்பா, கொச்சகக்கலிப்பா என மூன்று பிரிவாகும். அவற்றுள் ஒத்தாழிசைக் கலிப்பா, நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா என மூன்று தன்மையனவாக அமைகின்றன. இவற்றுள் அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவைப் பற்றி இலக்கணம் கூறவந்த காரிகையாசிரியர் அதில் அமைந்துள்ள அம்போதரங்க உறுப்பை விளக்க எண்ணுகிறார். தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் நான்கு உறுப்புக்கள் நிரல்பட அமையும் நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவினின்று ‘அம்போதரங்கம்’ என்னும் ஓருறுப்பால் வேறுபடுவதே அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா ஆகும்.  தாழிசைக்கும் தனிச்சொற்கும் நடுவே அம்போதரங்க உறுப்பு வந்து, ‘தரவு, தாழிசை, அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம்’என்னுமாறு ஐந்து உறுப்புக்களால் அமைந்தால் அது ’அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா’எனப் பெயர் பெறும். இவ்வம்போதரங்க உறுப்பு எவ்வாறு அமையும் என்பதைக் கூற வந்த காரிகை,

“நீர்த்திரைபோல் மரபொன்று நேரடி, முச்சீர் குறள் நடுவே மடுப்பின்
…………………………………………..அம்போதரங்க ஒத்தாழிசையே”

‘அம்போதரங்க’ உறுப்பு என்பது இருசீர் அடிகளாலும், முச்சீர் அடிகளாலும், நாற்சீர் அடிகளாலும் அமையப்பெறும். இரண்டு, மூன்று, நான்கு என்னும் சீர்வரிசைகளில் அமையும் அவற்றை நோக்க, நீர்நிலையில் கல்லெறிந்தால் எழும் நீரலை, கல் விழுந்த ஒரு குறிப்பிட்ட மையப் புள்ளியிலிருந்து சிறிது சிறிதாக விரிந்து சென்று கரைந்துவிடுவதைப் போல இருப்பதாகக் காரிகை ஆசிரியர் உவமம் கூறுகிறார். இவ்வடிகளுக்குக்,

“கரைசாரக் கரைசார ஒருகாலைக் கொருகாற்
சுருங்கி வருகின்ற நீர்த்தரங்கம்போல”

என உரையாசிரியர் குணசாகரர் எழுதிக்காட்டும் உரையும் ஈண்டுச் சுட்டற்பாலது.

நிறைவுரை

இதுகாறும் கூறியவாற்றால் உவமம் இலக்கியத்துள் அழகியல் உணர்வை மிகுவிக்கும் பகுதி என்பதும் கருத்து விளக்கத்தில் அதன் பங்களிப்பு இலக்கியம், இலக்கணம் ஆகிய இரண்டினுள்ளும் விரவியிருக்கிறது என்பதும் அதுவும் நூலாசிரியர் உரையாசிரியர் என்னும் இருவர் திறத்தன என்பதும் தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை ஆகிய இலக்கண நூல்களுள் தொடர்புடைய இலக்கண விளக்கத்திற்காக எளிய அழகிய உவமங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதும் அறியலாகும். தொல்காப்பிய இலக்கணத்துள் எழுத்து, சொல் ஆகிய இரண்டு அதிகாரங்களில் இலக்கண விளக்கத்திற்காக உவமப் பயன்பாடு இல்லாத நிலையில் பொருளதிகாரத்தில் அதன் பங்களிப்பு அடுத்த தலைப்பில் ஆராயப்படும்.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *