தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 4

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

தொல்காப்பிய நோக்கில் ‘உவமம்’ 

முன்னுரை

தமிழிலக்கியத்திலோ இலக்கணத்திலோ இயல், படலம் என்பன போன்ற  பகுப்புக்கள் பொருள் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டவையாகும். அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் எனவும்,  புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் எனவும் அமையும் இலக்கியப் பாகுபாடானாலும், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் எனவும், உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் எனவும் அமையும் இலக்கணப் பாகுபாடானாலும் அவையெல்லாம் தொடர்புடைய நூற்பொருள் பாகுபாடே. இலக்கியத்தில் முன்னோக்கு, பின்னோக்கு உத்திகள் அமைவதும் இலக்கணத்தில் ‘மாட்டேறு’ முதலிய உத்திகள் அமைவதும் அத்தகையதே! ஆனால் உள்ளடக்கத்தால் வேறுபட்ட இயல்களில், குறிப்பிட்டதொரு பொருளை நுட்பமாகவும் தெளிவாகவும் சுட்டிச் செல்கிற மரபு தொல்காப்பியத்தில் அமைந்திருப்பதை அறியமுடிகிறது. இது பற்றிய சிந்தனையைச் சுருக்கமாக இப்பகுதி முன்னெடுக்கிறது.

உவமம் பொருளிலக்கணத்தைச் சார்ந்ததே

தொல்காப்பியர் பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களையும் தனித்தனி பொருள் கட்டுமானம் கொண்ட இயல்களாக அமைத்திருக்கிறார்.  உவமவியலையும் அவ்வாறே உவமம் பற்றிய செய்திகளுக்காக ஒதுக்கியிருக்கிறார். ஆனால் உவமம் பற்றிய சிந்தனைகளைப் பொருளதிகாரத்தின் ஏனைய சில இயல்களிலும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

“உள்ளுறை உவமம் ஏனை உவமமெனத்
தள்ளா தாகும் திணையுணர்  வகையே”

“உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலமெனக்
கொள்ளும் என்ப குறியறிந் தோரே”

“உள்ளுறுத் திதனோடு ஒத்துப்பொருள் முடிகென
உள்ளுறுத் திறுவது உள்ளுறை உவமம்”

“ஏனை யுவமம் தானுணர் வகைத்தே”

என்னும் நூற்பாக்கள் அகத்திணையியலில் காணக்கிடக்கின்றன. அதாவது உவமவியலில் ஆராய்ந்திருக்கும் உவமம் பற்றிய சிந்தனைகள், அகத்திணை அமைக்கிற பொழுதும் தொல்காப்பியருக்குத் தோன்றியிருக்கின்றன என்பது கருத்து. மேலும்,

“நோயும் இன்பமும் இருவகை நிலையிற்
காமங் கண்ணிய மரபிடை தெரிய
……………………………………………………….
இருபெயர் மூன்றும் உரியவாக
உவம வாயிற் படுத்தலும் உவமம்
ஒன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி”

“இறைச்சி தானே உரிப்புறத் ததுவே”

“இறைச்சியிற் பிறக்கும் பொருளு மாருளவே
திறத்தியல் மருங்கின் தெரியு மோர்க்கே”

“அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும்
வன்புறை யாகும் வருந்திய பொழுதே”

“உடனுறை உவமம் சுட்டு நகை சிறப்பென
கெடலரும் மரபின் உள்ளுறை ஐந்தே”

என்னும் நூற்பாக்கள் பொருளியலில் காணக்கிடக்கின்றன. பொருளியல் என்பது சொல்லதிகாரத்துக் கண்டறியப்பட்ட சொற்கள், அகப்பொருள் மாந்தர்கள் வழியாக வெளிப்படும் போது எத்தகைய பொருளைத் தருகின்றன என்பது பற்றி ஆராயும் இயல்புடையது. மேற்கண்ட அகச்சான்றுகளால் உவமம் பற்றிய தொல்காப்பியர் கருத்துக்கள் பின்வருமாறு நிரல்படுத்தப்படலாம்.

  1. தொல்காப்பியர் உவமத்தைத் தனியானதொரு இயலில் ஆராய்ந்திருக்கிறார்.
  1. செய்யுளைப் பற்றி ஆராயும் செய்யுளியலில் உவமத்தைச் செய்யுளுறுப்பாகவோ வேறு வகையாகவோ அவர் சுட்டவில்லை.
  1. உவமவியலில் எட்டு நூற்பாக்களில் அகப்பொருள் மாந்தர்களின் உவமக் கோட்பாட்டை ஆராய்கின்றன.
  1. உவமவியல் நூற்பாக்கள் அகப்பொருள் மாந்தர்களின் கூற்றுப் பகுதியாக அமைந்து, பொருட்புலப்பாட்டையே தம் நோக்கமாகக் கொண்டிலங்குவதை அறியமுடிகிறது.
  1. உவமவியலில் மட்டும் ஆராயப்பட வேண்டிய உவமம் பற்றிய செய்திகளைத் தொல்காப்பியர் அகத்திணையியல், பொருளியல் என்னும் ஏனைய இயல்களிலும் ஆராய்ந்திருக்கிறார். .

 தொல்காப்பியமும் உள்ளுறை உவமமும்

இதுகாறும் சுட்டிக்காட்டிய எடுத்துக்காட்டுக்களால் தொல்காப்பியர்   உவமத்தை உவமவியல் தவிர ஏனைய இயல்களிலும் ஆராய்ந்திருக்கிறார் என்பது உறுதியாகிறது. ஆகவே அவர் உவமத்தைப் பொருளதிகாரத்தின் பகுதியாகவே கருதியிருக்கிறார் எனக் கருத இடமேற்படுகிறது. தமிழில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பது பிற்கால வழக்கு.

“எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி”

என்பதே தொல்காப்பியப் பாயிர வழக்கு. மேலும்,

“தள்ளாதாகும் திணையுணர் வகையே”

என்றதனால், உள்ளுறை உவமத்தையும் வெளிப்பட நின்ற ஏனைய உவமத்தையும் திணையை உணர்வதற்குரிய கருவிகளாகவே அவர் கருதியிருக்கிறார் எனவும் எண்ண முடியும். ‘கவிதைக்கு அழகு உவமம்’ என்னும் கருத்து தொல்காப்பியருக்கு இருந்ததற்கான சான்று தொல்காப்பியத்துள் கிட்டுமாறில்லையாயினும் உவமத்தை அகப்பொருள் மாந்தர்களின் கூற்றுப் பகுதியாகவும் உள்ளுறை உவமத்தைத் திணையுணர் கருவியாகவும் சுட்டிச் செல்கிறார் என்பதை அறியமுடிகிறது.

நிறைவுரை

மேற்கண்ட சில பத்திகளில் தரவுகளின் அடிப்படையில் விளக்கப்பட்ட கருத்துக்களால் ‘உவமம்’ என்பது தற்காலத்தில் கருதப்படுவதுபோலக் கவிதைக்குரிய அழகியல் பகுதி அன்று என்பதும் பொருள் விளக்கத்திற்கானதே என்பதும் பெறப்படும்.  உவமத்தைப் பயன்படுத்துதற்குரியார் அகப்பொருள் மாந்தர் என்பதாலும், அவரும் குறிப்பிட்ட இடத்திலேயே சூழலிலேயே வரையறைக்கு உட்பட்டே உவமம் கூறுதல் வேண்டும் என்னும் கடப்பாடு காணப்படுவதாலும் அதனை அகப்பொருள் பகுதியென்றும் துணியலாம். இதற்கும் பிற்காலத்தில் செய்யுளணியாகக் கருதப்படும் தண்டியலங்காரத்தின் கருத்தியலுக்கும் எள்ளின் முனையளவும் தொடர்பில்லை என்பதும் ஆனால் தமிழ்க் கவிதைகளின் பெரும்பரப்பு தண்டியின் அழகியல் சார்ந்த உவமத்தாலேயே சூழப்பட்டிருக்கிறது என்பதும் பின்னர் விளக்கப்படும்.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *