தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 9
புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com
தொல்காப்பியப் பொருளதிகார உவமங்கள் – 2
முன்னுரை
தொல்காப்பியம் பொருட்பகுதியின் பொருள் புலப்பாட்டுக்காகப் பொருத்தமான உவமங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் பாங்கினை ஆராயும் முந்தைய கட்டுரைப் பொருளுடன் இந்தக் கட்டுரையும் இதற்கு அடுத்து வரும் கட்டுரையும் தம்மை இணைத்துக் கொள்கின்றன. இலக்கண ஆசிரியன் ஒருவனுடைய இலக்கிய உள்ளத்தை அறிந்து கொள்வதற்கும் இவை பயன்படக்கூடும். மேலும் இலக்கணத்தை இலக்கியமாக்கும் முயற்சி தொல்காப்பியர் காலத்திலேயே காழ்கொள்ளத் தொடங்கியிருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம். கணிதம் போலச் சொற்களைக் கோத்து அதனைக் ‘கவிதை’ என்று நம்ப வைக்க முயலும் தற்காலப் படைப்பாளர்கள் இதனைச் சிந்திப்பது பயன்தரலாம். ‘தொல்காப்பியம் ஒரு காடன்று அது ஒரு பூங்கா’ எனப் பின்னுள்ள கலைஞர்கள் அதனை அழைப்பதற்கான காரணங்கள் அந்த நூலிலேயே இருந்திருக்கின்றன. அகப்பொருள் இலக்கியத்திற்கு இலக்கணம் சொல்ல வந்த தொல்காப்பியர் அகத்திணை மணம் குறையாமலும் அறச்சிந்தனை மேலோங்கும் வகையிலும் உவமங்களைப் பயன்படுத்தியுள்ளார். இது பற்றிய ஆய்வினை இக்கட்டுரை முன்னெடுக்கிறது.
வெள்ளத்தைத் தடுத்த மலை
வெள்ளம் வருமுன் அணையிடுதல் என்பது ஒரு சொலவடை. மண்ணாசை காரணமாகத் தொடுக்கின்ற போருக்கு வஞ்சித்திணை என்று பெயர். பதின்மூன்று துறைகளை உள்ளடக்கிய அத்திணையுள்,
“வருவிசைப் புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமை யானும்” 91
என்பதாகிய துறையும் ஒன்று. விசையொடு பெருகிவரும் கடும்புனலைக் கல்லாகிய அணை தடுத்து நிறுத்துமாறு போலத் தன்மேல் கடுகித் தொகையாக வரும் பகை மறவரைத் தான் ஒருவனே தடுத்து நிறுத்தும் பெருமிதமும் வஞ்சித்திணையாகும் என்பது கருத்து. பகைவர்களை வெள்ளமாகவும் தடுக்கின்ற வீரனைக் கல்லணையாகவும் உவமித்தது ஓர் இலக்கியப் புலவன் என்றால் இந்த ஆய்வுக்கு இங்குத் தேவையிருந்திருக்காது. தொல்காப்பியத்தின் இந்த உவமம் பின்னால் வந்த ஐயனாரிதனாரையும் கவர்ந்திருக்கிறது. அதனை அவர் சற்றொப்ப ஆசிரிய வசனமாகவே வழிமொழிந்திருக்கிறார். ஓர் இலக்கணத்தில் இடம்பெற்றதால் தனிக்கவனத்திற்கு ஆளாகிறது.
“பொருபடையுட் கற்சிறைபோன்று
ஒருவன் தாங்கிய நிலையுரைத்தன்று”
என்பது வெண்பாமாலையின் தனிநிலை பற்றிய கொளுவாகும். இதற்கு இலக்கண விளக்கம் தந்திருக்கும் ஐயனாரிதனார் வினையின் நீங்கிய விளங்கிய அறிவும் எதனையும் வியந்து நோக்காத பக்குவமும் உடைய சான்றேர்களும் அத்தகைய வீரத்தையுடைய மறவனைப் பெற்ற முதியவளின் வயிற்றை வியப்புடன் நோக்குவதாக,
“வீடுஉணர்ந் தோர்க்கும் வியப்பாம்!(ஆல்) இந்நின்ற
வாடல் முதியாள் வயிற்றிடம் – கூடார்
பெரும்படை வெள்ளம் நெரிதரவும் பேரா
இரும்புலி சேர்ந்த இடம்!”
என்னும் துறைவிளக்கப் பாடலில் குறிப்பிடுகிறார். காப்பியரும் ஐயனாரிதனாரும் பயன்படுத்திய அந்த உவமத்தை,
“வேந்துடைத் தானே முனைகெட நெறிதர
ஏந்துவாள் வலத்தன் ஒருவனாகி
தன்னிறந்து வாராமை விலக்கலின் பெருங்கடற்கு
ஆழியனையான் மாதோ என்றும்
பாடிச்சொன்றோர்க்கன்றியும் வாரிப்
புரவிக் காற்றாச் சீறூர்த்
தொன்மை சுட்டிய வண்மை யோனே!” புறம் 330
என்னும் புறநானூற்றுப் பாடலிலும் காணமுடிகிறது. ‘நெரிதர’, ‘ஒருவனாகி,’ ‘பெருங்கடற்கு ஆழியான்’ என்னும் சொற்களை அப்படியே புறநானூற்று ஆசிரியர் பயன்படுத்தியிருக்கிறார் என்பது நோக்கத் தகுந்தது.
உவமங்களான உணர்வுகள்
பருப்பொருளை உவமமாக்குவது ஒன்று, நுண்பொருளை உவமமாக்குவது ஒன்று, காட்டலாகாப் பொருட்களெல்லாம் நுண்பொருள்களே. நுண்மையை உணரலாமேயன்றி ஐம்பொறிகளால் நுகர்தல் இயலாது. தொல்காப்பியம் இதனை ‘நெஞ்சு கொளின் அல்லது காட்டலாகாப் பொருள்’ என்று கூறும்.
“ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா
கற்பும் ஏரும் எழிலும் என்றா
சாயலும் நாணும் மடனும் என்றா
நோயும் வேட்கையும் நுகர்வும் என்றாங்கு
ஆவயின் வரும் கிளவியெல்லாம்
காட்டலாகாப் பொருள என்ப”
என்பது நூற்பா. இந்நூற்பாவில் பயின்றுவரும்‘ ஆவயின் வரூஉம் கிளவியெல்லாம்’ என்பதனால் தாய்மை அன்பை அடக்கிக் கொள்ள இயலும். தாய் போன்றாள் என்றால் அது உருவத்திற்கான உவமமாகாது பண்பிற்கான உவமமாகும். பண்பு காட்டலாகாப் பொருள். தாய்போல் பேசி என்றால் தாய் தன் சொற்களில் காட்டும் பரிவைக் கலந்து பேசி என்பதே பொருளாகும். பெண்மையின் உச்சம் தாய்மை. பெண்மை சிறப்படைவது தாய்மையால். தாய்மையன்றிப் பெண்மையில்லை. தாய்மையடையாத பெண்மை பெருமைக்குரியதாகாது. தாய்மை பரநலத்தின் அடையாளம். இந்தப் பண்பைப் புதிய வரவான மனைவியிடத்தும் ஒருவன் எதிர்பார்க்கிறான். தலைவன் எதிர்பார்க்கும் இந்த உணர்வை நன்கு புரிந்து கொண்ட காமக்கிழத்தி என்னும் உறவுடையாள் ஊடல் காரணமாகப் புலந்து நிற்கும் தலைவியைத் தலைவனோடு சேர்த்து வைக்கும் கடமையைச் செய்கிறாள்.
“காதற்சோர்வில் கடப்பாட்டு ஆண்மையின்
தாய்போல் கழறித் தழீஇய மனைவியைக்
காய்வின்று அவன் வயின் பொருத்தற்கண்ணும்”
என்பது தொல்காப்பிய நூற்பாவாகும். காமக்கிழத்தியின் கூற்றுச் சூழலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தாயன்பு பற்றிய இந்த உவமத்தைத்,
“தாய்போல் கழறித் தழீஇக் கோடல்
ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப”
என்னும் நூற்பாவிலும் உவமமாக்கியிருக்கிறார் தொல்காப்பியர். உரையாசிரியப் பெருமக்கள் இந்த இரண்டு நூற்பாக்களையும் மாட்டேற்றாகக் கொள்வர். இதனால் காமக்கிழத்தியாயினும் மனைவியேயாயினும் எல்லா நேரங்களிலும் காமக்குறிப்பே வெளிப்பட நிற்பர் என்னும் கற்பனை பொய்த்தும் அவ்விருவரும் அன்பில் தலைமகனுடைய தாயன்பை வெளிப்படுத்தியே நிற்பர் என்பதும் பெறப்படும். படவே தாயன்பு உறவுநிலை மாறியும் நிற்கும் என்பதும் தலைவனுக்கும் காமக்கிழத்தி, மனைவி என்னும் உறவுகளுக்கும் இடையில் நிலவும் அன்பு தாயன்பின் கலப்பே என்பதும் அனுமானிக்கப்படும்.
உண்மையான நட்பு உள்ளமே
உலகியல் சார்ந்த உதவிகளை ‘ஒப்புரவறிதல்’ என்றும் அறப்பயன் நோக்கிய உதவிகளை ‘ஈகை’ என்றும் திருவள்ளுவர் ஆராய்வார். ‘பொருளெல்லாம் வேளாண்மை செய்தற்பொருட்டு’ என்பதனாலும் ‘ஒன்று ஈவதே ஈகை’ என்பதனாலும் அவ்விரண்டு அறங்களும் பொருளைக் கருவியாக உடையவை என்பது பெறப்படும். அருவப் பொருளால் அவ்வறங்களைச் செய்ய இயலாது. தொல்காப்பியம் அருவப் பொருளால் உதவி செய்யலாம் என்று தெளிவாக்குகிறது. உதவும் இந்த அருவப்பொருளை அவர் ‘உள்ளம்’ என்று குறிப்பிடுகிறார். தொல்காப்பியரின் இந்தக் கருத்தினைத் திருவள்ளுவர் ‘ஊக்கமுடைமை’ என்று செல்வமாக்குகிறார். ‘உதவி எதுபோல அல்லது ‘யார் செய்வது போல’ என்றால் பொதுவாகப் பாரியைத்தான் சொல்வார்கள். தொல்காப்பியமோ ‘உள்ளம் போல’ உதவ வேண்டும் என்று கூறுகிறது.
“உள்ளம் போல உற்றுழி உதவும்
புள்ளியல் கலிமா உண்மை யான”
என்னும் நூற்பா பொருள்வயிற் பிரிந்த தலைமகன் மீண்டுவரும் சூழலை விவரிக்கிறது. தலைவியைப் பிரிந்த தலைவன் மீள்வது நெடிய சுரமாயினும் தலைவியை வழிநடைச் சோர்வு ஆங்காங்கே தங்கி மீளுமாறு புலனெறிவழக்கம் செய்யும் வழக்கம் தமிழில் இல்லை. ஆதலின் தலைவியைக் காணச்செல்லும் அவன் உள்ளத்தின் வேகம் போலத் தாவிச்செல்லும் (பறந்து செல்லும்) பறவையை ஒத்த குதிரை இருப்பதால் அவன் எவ்விடத்தும் தங்காமல் தலைவியை வந்தடைவான் என்பது கருத்து. இந்த உவமத்தால் தலைவியை உடனே காண வேண்டுமென்றால் மனக்கண்ணில கொண்டு காணுதற்கு உதவும் உள்ளத்தைப்போலத் தலைவன் சென்று மீளும் குதிரை விரைவினையுடையது என்பது விளக்கப்பட்டது. உள்ளம் என்னும் அருவப் பொருளும் உதவும் என்பது தொல்காப்பியப் புதுமை.
நிறைவுரை
மேற்கூறிய சில கருத்துக்களால் பொருண்மையை விளக்குதற்கு அகத்திணை, புறத்திணை மற்றும் பொருளியல் ஆகியனவற்றில் உவமங்கள் பன்படுத்தப்பட்டுள்ள பாங்கு ஓரளவு புலனாகலாம். வினை, பயன், மெய், உரு என்னும் நான்கனுக்கும் பருப்பொருள் மட்டுமேயன்றி நுண்பொருளும் உவமமாக்கப்படலாம் என்னும் கருத்தும் பெறப்படும். இலக்கணத்தை இலக்கியமாக்கும் முயற்சி தொல்காப்பியத்திலேயே தொடங்கிவிடுகிறது என்பதை இதனால் உணரமுடியும். தொல்காப்பிய உவமத்துள் பேராண்மை சார்ந்ததொரு உவமம் அடுத்த கட்டுரையில் விளக்கப்படும்.
(தொடரும்…)