தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 1

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

‘உவமம்’ – ஓர் இலக்கணப் பார்வை

முன்னுரை

இலக்கிய வடிவங்கள் அனைத்துக்கும் பொதுவானது உவமம். கருத்து நுண்பொருள். உவமம் பருப்பொருள். நுண்பொருளை விளக்க மற்றொரு நுண்பொருளே உவமமாவதும் உண்டு. கருத்துக்களை விளக்க மற்றொரு கருத்தே உவமமாவதும் உண்டு. இயற்கைக்குச் செயற்கையும் செயற்கைக்கு இயற்கையும் உயர்வுக்கு இழிவும் இழிவுக்கு உயர்வும் உவமமாவதும் உண்டு. எது எவ்வாறாயினும் உவமம் என்பது எந்தப் படைப்புக்கும் அழகு சேர்ப்பதோடு பொருள்விளக்கத்திற்கும் தெளிவுக்கும் பயன்பட்டாலே அது சிறக்கும். ‘உவமப் பயன்பாடு’ என்பது மொழியாளுமை, கருப்பொருள் தேர்வு, கருத்து விளக்கம் என்பன போன்றதொரு படைப்பாளனின் பேராளுமை. உவமம் சொல்லிச் சிறந்தாரை ‘உவமைக் கவிஞர்’ என்று போற்றக்கூடிய அளவுக்கு அதன் தாக்கம் இருந்திருக்கிறது. அத்தகைய உவமங்களைப் பற்றிய கோட்பாடுகளையும் அவற்றையொட்டியும் விலகியும் அமைந்த உவமச் சிறப்புக்களையும் விளக்குவதாக இக்கட்டுரைத் தொடர் அமைகிறது. தொடக்கக் கட்டுரைகள் உவமத்தைப் பற்றிய பழந்தமிழ் இலக்கணப் பார்வையை முன்னிறுத்தித் தமிழில் உவமக் கோட்பாடுகளை வரையறுக்க முயல்கின்றன.

தொல்காப்பியமும் உவமமும்

தமிழின் தலையிலக்கண நூலாகிய தொல்காப்பியத்தை ஆராய்ந்த அறிஞர் பலரும் உவமம் பற்றிய தொல்காப்பியக் கருத்துக்களையும் ஆராய்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தொல்காப்பியப் பொருளதிகாரம் ஏனைய அதிகாரங்களைப் போலவே ஒன்பது இயல்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது என்பதும் அவற்றுள் ஏழாவது இயலாக ‘உவமவியல்’ அமைந்துள்ளது என்பதும் அறியப்பட்ட உண்மையாகும். தொல்காப்பியர், ‘உவமவியல்’ என்றே இயலுக்குத் தலைப்பிட்டிருக்கவும் தமிழியல் ஆய்வாளர்கள் பலரும், தமிழறிஞருள் சிலரும் ’உவமையியல்’ என்றே தொல்காப்பியர் வழங்கியிருப்பதாகக் கூறி வருவது சிந்தனைச் சிக்கலாகவே தோன்றுகிறது. ‘உவமவியல்’ என அகர இடைநிலையா, ‘உவமையியல் என ஐகார இடைநிலையா என்பதன்று சிக்கல். ‘உவமமா? உவமையா?’ என்பதுதான் உண்மையான சிக்கல்.

‘உவமை’யில்லாத் தொல்காப்பியம்

தொல்காப்பிய நூற்பாக்களில் ‘உவமம்’என்னும் சொல்லே பேரளவு பயன்பாட்டுக்குரியதாக விளங்குகிறது.

“உள்ளுறை உவமம் ஏனை யுவமம்
தள்ளாதாகும் திணையுணர் வகையே”

“தடுமா றுவமம் கடிவரை யின்றே”

“பொருளே உவமம் செய்தனர் மொழியினும்
மருளறு சிறப்பின் அஃதுவமம் ஆகும்”

“உவமப் போலி ஐந்தென மொழிப”

என்னுமாறு தொல்காப்பியத்தில் பரவலாகவும் தெளிவாகவும் பயின்றுவரும் நூற்பாக்களால், அந்நூல் ‘உவமம்’ என்னும் சொல்லுக்குத் தரும் இன்றியமையாமையும் மதிப்பும் புலப்படக்கூடும். ‘உவமப்பொருள், உவம உருபு, உவமப்போலி, உவமத்தொகை, உவமத் தோற்றம், உடனுறை உவமம், உவம வாயில், தடுமாறுவமம்’என்றெல்லாம் வரும் வழக்குகள், ‘உவமம்’என்னும் சொல்லின் பயன்பாட்டையே உறுதி செய்கின்றன.

 ‘உவமம்’ —  ‘உவமை’ — சிறு விளக்கம்

தொல்காப்பிய உவமவியலில் அமைந்துள்ள முப்பத்தெட்டு நூற்பாக்களில் ஒரு நூற்பாவைத் (8) தவிர எந்தவிடத்திலும் ’உவமை’என்னும் சொல் பயன்பாட்டைக் காணவியலவில்லை. அவ்வெட்டாவது நூற்பாவும்,

“உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்”

என அமைகிறது. இந்நூற்பாவில் தொல்காப்பியர் ‘உவமை’என்னுஞ் சொல்லை, ‘உவமத்தின் தன்மை’என்னும் பொருளிலேயே கையாள்கிறார் என்பது பேராசிரியர் எழுதியுள்ள உரையால் புலனாகும். உள்ளத்தின் தன்மை ‘உண்மை, வாயின் தன்மை ‘வாய்மை’ என்றாற்போல உவமத்தின் தன்மை உவமை. ‘மை’பண்புப்பெயர் விகுதி. எனவே உவமத்தின் தன்மை உவமை. பொருளுக்கிசைந்த உவமம் கூறப்படுகிறபொழுது ’அவ்வுவமப்பொருளின் உவமத்தன்மை’ பொருளோடு பொருந்துமாறு உரைத்தல் வேண்டும் என்பதே இந்நூற்பாவின் கருத்து. ஆசிரியர் இளம்பூரணர்  இதனை,

“உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும்”

எனப் பாடங்கொண்டு, ‘உவமம் இரட்டைக் கிளவியாயினும் நிரல் நிறுத்தமைந்த நிரல்நிறை சுண்ணமாயினும் பொருளும் அவ்வாறே வருதல் வேண்டும்’என உரைகூறுவார். அவர் கொண்ட பாடத்திற்கு அவ்வுரை பொருந்தும். அவ்வாறு பாடங்கொண்டால், ‘உவமத்தின் தன்மை பொருளில் புலப்படுமாறு உவமித்தல் வேண்டும்’என்னும் உவமை பற்றிய இன்றியாமையாக் குறிப்பினைத் தொல்காப்பியர் கூறாது போனார்’ என்னும் நிலை ஏற்படும்.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *