புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

பரிமேலழகரின் உவமத் திறன்

முன்னுரை

சொல்லவரும் கருத்து, கற்பாருக்கு மயக்கமின்றிப் புலப்பட வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தப்படுவதே உவமம் ஆகும். தொல்காப்பிய எழுத்ததிகாரத்திலோ சொல்லதிகாரத்திலோ இலக்கண விளக்கத்திற்காகத் தொல்காப்பியர் உவமத்தைக் கையாளவில்லை. ஆனால் பொருளதிகாரத்தில் பதின்மூன்று இடங்களில் பதின்மூன்று உவமங்களை அவர் பயன்படுத்தியிருக்கிறார். இது தனித்த ஆய்வுக்கு உரியது. உவமத்தைச் செய்யுளுக்கு அணியாகக் கொள்வது வடமொழி வழக்கு. அது தமிழிலும் விரவியது. அதாவது உவமப்பயன்பாடு தமிழ் வழக்கு. அதனைச் செய்யுளுக்கு அணியாகக் கொள்வது வடமொழி வழக்கு. தொல்காப்பியத்தில் உவமம் என்ற சொல்லே பயன்பட்டு வந்திருக்கிறதேயன்றி ‘உவமை’ என்ற வழக்கு இல்லை. ‘உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்’ என்னும் நூற்பாவில் மட்டும் ‘உவமத்தின் தன்மை’ என்ற பொருளில் அச்சொல் பயின்று வந்திருக்கிறது. இந்தப் பின்புலத்தில் உவமத்தைப் பழந்தமிழ் வல்லார் பொருட்பகுதியாகவே கருதியிருக்கின்றனர் என்பது தெளிவாம். ‘உவம விளக்கம்’ என்னுந் தலைப்பில் உவமத்தை நுட்பமாக ஆராய்ந்திருக்கும் அறிஞர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள், மிகத் தெளிவானதொரு கருத்தினை முன்னெடுக்கிறார். “உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுதல். தருக்க நூலோர் உவமத்தை ஓர் அளவையாகக் கொள்வர். அலங்கார நூலோர் அதனை ஓர் அலங்காரமாகக் கொள்வர். தமிழிலக்கண நூலோர் அதனைப் பொருள் புலப்படுக்கும் கருவியாதல் பற்றிப் பொருளுறுப்பாகக் கொள்வர்” என்பது அவர் ஆய்வு. செய்யுளியலும் அது தொடர்பான உவமவியலும் தொல்காப்பித்துள் பொருளதிகாரப் பகுதியில் அமைந்திருப்பதும் நாட்டார் அவர்களின் கருத்துக்கு வலுசேர்க்கக் கூடும். மேலும் தொல்காப்பியர் உவமத்தை உவமவியலில் மட்டும் ஆராயாமல் அகத்திணையியல், பொருளியலிலும் ஆராய்ந்திருக்கிறார் என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது. இந்த அடிப்படையில் திருக்குறள் பரிமேலழகர் உரையில் குறட்பாக்களின் பொருள் விளக்கத்திற்காகப் பரிமேலழகர் பயன்படுத்தும் உவமங்கள் சிலவற்றைப் பற்றிய ஆய்வுத் தொகுப்பு இக்கட்டுரைத் தொடரின் இறுதிக் கட்டுரையாக அமைகிறது.

உவமப் பயன்பாட்டில் திருக்குறள்

திருக்குறளில் கருத்து விளக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள உவமங்களுக்கென்று ஒரு தனித்தன்மை உண்டு. அது என்ன தனித்தன்மை? திருக்குறள் கருத்துக்களைத் திருவள்ளுவரால் காட்டப்பட்டிருக்கும் உவமங்களைத் தவிர்த்துப் பிற உவமங்களைக் கொண்டு விளக்க இயலாது. அவர் காட்டியிருக்கும் உவமங்களைக் கொண்டு பிற கருத்துக்களோடு பொருத்திக் காட்ட முடியாது. நுட்பமான இப்பிணைப்பு திருக்குறளில் மட்டுமே காணக்கூடியதாகும். ‘பசுத்தோல் போர்த்திய புலி’ என்னும் உலகவழக்கை மாற்றிப் ‘பெற்றம் புலியின்தோல் போர்த்து மேய்ந்தற்று’ (273) என்றது ஒரு சான்றாகலாம். கருத்து விளக்கத்திற்காகவே திருவள்ளுவர் உவமங்களை நன்கு சிந்தித்துத் திட்டமிட்டே பயன்படுத்தியிருக்கிறார் என்பது இதனால் புலனாகக் கூடும்.

அழகர் உரையில் உவமப் பயன்பாடு

திருக்குறள் பொருள் விளக்கத்திற்காகப் பரிமேலழகர் பல்வகையான உவமங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். உலகவழக்கிலிருந்தும் செய்யுள் வழக்கிலிருந்தும் உவமங்களை எடுத்துக் கொள்கிறார். உரையெழுதும் திருக்குறளிலிருந்தே உவமங்களை எடுத்துக் கொள்கிறார். இலக்கியமாகிய திருக்குறளுக்கு இலக்கணத்தை உவமமாக்கி விளக்கம் தருகிறார். சங்க இலக்கிய வரலாற்று நிகழ்வுகளை உவமமாகக் கொள்கிறார். இலக்கியப் பதிவுகளையும் வரலாறாகக் கருதி உவமமாக்கிக் கொள்கிறார். தமிழ் மருத்துவத்தையும் சமுதாயத்தில் நடப்பியலில் உள்ள மருத்துவச் சிந்தனைகளையும் உவமமாக்கி விளக்கம் தருகிறார். இவ்வாறு அவர் தமது உரையில் கருத்து விளக்கத்திற்காக எடுத்தாளும் உவமங்கள் சிலவற்றை ஆராய்வதன் மூலம் இலக்கிய உரைகளிலும் உவமம் செலுத்தும் ஆளுமையைப் புரிந்து கொள்ள முடியும். பொதுவாகக் கவிதைகளில்தாம் உவமங்களைக் காண்பது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. சிறுகதை, நாவல், கட்டுரை, ஆய்வேடு என எந்தப் பதிவுகள் ஆனாலும் அவற்றில் பயன்படுத்தப்படும் உவமங்களின் ஆழத்தை அறிந்து துய்த்தல் வேண்டும் என்பதை முன்னெடுப்பதும் இக்கட்டுரையின் நோக்கங்களுள் ஒன்றாகும்.

உவமத்தில் உலாவரும் உலகியல்

ஒரு பொருளைக் கேட்டு வாங்கிச் சென்று திருப்பித் தந்துவிடுதல் உலகியல் நிகழ்வு. சிலர் வாங்கிப் போவதோடு சரி. திரும்பத் தரமாட்டார்கள். பொருளைக் கொடுத்தவன் அவர்களைக் காணும் பொழுதெல்லாம் அவன் நினைவில் ‘இவன் அந்தப் பொருளைப் பெற்றுச் சென்றவன் அல்லவா?’ என அவன் வாங்கிச் சென்ற பொருள் நினைவுக்கு வரும்.’ ‘அவனைப் பார்க்கிற பொழுதெல்லாம் அவன் வாங்கிச் சென்ற புத்தகம் அல்லவா நினைவுக்கு வருகிறது’ என்பது போல! இந்த உலகியலை உற்று நோக்கிய பரிமேலழகர் பொருட்பாலில் அமைச்சனின் பழக்க வழக்கம் பற்றிக் கூறும் குறட்பாவில் இதனை உவமமாகப் பதிவு செய்திருக்கிறார்.

“போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது” (693)

“அமைச்சர் தம்மைக் காக்கக் கருதின் அரிய பிழைகள் தங்கண் வராமல் காக்க; அவற்றை வந்தனவாகக் கேட்டு அவ்வரசர் ஐயுற்றால் அவரைப் பின் தெளிவித்தல் யாவர்க்கும் அரிது ஆகலான்.”

(மேற்கண்ட தவறுகளைப் பற்றி) ஒருவன் சொல்லியக்கால் தகுமோ என்று ஐயுறாது, தகாதென்றே அவர் துணிய ஒழுகல். ஒருவாற்றால் தெளிவித்தாலும் கடன் கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறு போலக் கண்டுழியெல்லாம் அவை நினைக்கப்படுதலின் ‘யார்க்கும் அரிது’ என்றார்.

என விளக்கவுரையில் அழகரின் உலகியல் நோக்குப் புலப்படுவதைக் காணலாம். அரசு மந்தணங்களை மாற்றாரிடம் வெளிப்படுத்துதல் என்பது அறைபோதல், அரசுனுக்குரிய மகளிரோடு உறவு கொள்வதற்கு உரிமையோடு மருவல்.  அருமையான பொருளை அபகரித்தலுக்கு அரும்பொருள் வௌவல். இவையே அரிய பிழைகள். இத்தகைய பிழைகளை இவன் செய்திருப்பானோ என அரசன் ஐயுறா வண்ணம் அமைச்சன் ஒழுக வேண்டுமாம். ஒருமுறை ஐயம் ஏற்பட்டுவிடின் பிறகு மன்னனைத் தெளிவித்தல் அரிதாம். இந்தக் கருத்தினை விளக்கத்தான் பரிமேலழகர் உலகியல் சார்ந்த ‘கடன் கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறு போல’ என்னும் உலகியல் உவமத்தைப் பயன்படுத்துகிறார்.

இலக்கணத்தை உவமமாகக் காட்டுதல்

‘அண்ணல் காந்தியடிகளின் வழி செல்வோம்’ என்றால் எல்லாரும் தண்டி யாத்திரை போகவேண்டும் என்பது பொருளன்று. அவர் சொன்ன நெறிமுறைகள் என்பது பொருள். ‘கபிலரது பாட்டு’ என்னுந் தொடரில் கபிலரும் அவர் எழுதிய பாட்டும் தனித்தனியாக இருந்து உடைமைப் பொருளை உணர்த்துகிறது. அதனால் இது பிறிதின் கிழமை. இனி, அந்தப் பாட்டு அவர் எழுதியதாலேயே அவர்க்கு அது உடைமையாயிற்று. பாட்டாகிய செய்யுள் அவ்வுடைமைக்குக் காரணமாதலின்  அது செய்யுட்கிழமை ஆயிற்று. எனவே செய்யுட் கிழமை என்பது ஆறாம் வேற்றுமைப் பொருளாகிய உடைமைப் பொருளை உணர்த்தும் இரண்டு முறைகளில் பிறிதின் கிழமையின் வகைகளுள் ஒன்று என்பது பெறப்படும்.

“பொறிவாயில் ஐந்தவித்தான் ஆற்றல் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார்” (6)

என்பது குறட்பா. இந்தக் குறட்பாவிற்கு,

“மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது மெய்யான ஒழுக்க நெறியின்கண் வழுவாது நின்றார், பிறப்பின்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்.”

என்று பொழிப்புரை எழுதியிருக்கிறார். இந்தப் பொழிப்புரையைத் தொடர்ந்து வரும் விளக்கவுரையில்,

“ஒழுக்கநெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின் ஆண்டை ஆறனுருபு செய்யுட்கிழமைக்கண் வந்தது ‘கபிலரது பாட்டு’ என்பது போல”

என்று ஒரு குறிப்பு வருகிறது. ஐந்தவித்தவன் இறைவன். ஐந்தவித்தான் ஆற்றல் என்றால் ஐந்தவித்தானது ஆற்றல் என்று பொருளன்று. ஐந்தவித்தானால் சொல்லப்பட்ட ஆற்றல் என்பது பொருள். சொன்னவன் ஐந்தவித்தான், சொல்லப்பட்டவை ஐவகை ஆற்றல். இவ்வாற்றல் அவனோடு பிணிக்கப்பட்டது அன்று. பிரிந்து நிற்பது. எனவே ‘ஐந்தவித்தானது ஆற்றல்’ என்னும் ஆறாம் வேற்றுமை விரிக்கப்படினும் அது ‘அவனது ஆற்றல்’ என்னும் தற்கிழமையாகாது. ‘அவனால் சொல்லப்பட்ட ஆற்றல்’ எனப் பிறிதின் கிழமையாய் நின்றதாம். எதுபோல? ‘கபிலரது பாட்டு’ என்பதுபோல!. ‘கபிலரது பாட்டு’ என்றால் ‘கபிலருடைய பாட்டு’ என்று பொருள் தந்தாலும் அவ்வுரிமைத்தொடர் கபிலரால் எழுதப்பட்ட பாட்டு’ என்று பிறிதின் கிழமையாகத்தான் அமையும். அதுபோல  ‘‘ஐந்தவித்தான் ஆற்றல்’ என்னும் தொடர் ஆறாம் வேற்றுமைக்குரியதாக விரிக்கப்படினும் அது ‘ஐந்தவித்தானது ஆற்றல் எனத்’ தற்கிழமையாக நில்லாது ‘ஐந்தவித்தானால் சொல்லப்பட்ட ஆற்றல்’ எனப் பிறிதின் கிழமைப் பொருளினைத் தருவதைக் காணலாம். இந்த விளக்கத்திற்குக் ‘கபிலரது பாட்டு’ என்னும் இதனைப் போன்ற இலக்கணப் பயன்பாடு உடைய மற்றொரு தொடரை உவமமாகப் பயன்படுத்தியுள்ளார் அழகர்.

பாமர வழக்கை உவமமாக்குதல்

‘முரண்’ என்பது எல்லாப் படைப்புக்களுக்கும் அழகு சேர்க்கும் தொடையழகு, ‘பகலில் ஒரு நிலவு!’ ‘முள்ளும் மலரும்’ ‘பஞ்சும் நெருப்பும்’ ‘கருப்பும் சிவப்பும்’ என்பதுபோல. ‘இருளும் ஒளியும்’ என்பது மக்கள் வழக்கு!. புத்தாண்டு பிறந்தவுடன் இருளாண்டு கழிந்தது இனி வரும் ஆண்டு ஒளியாண்டு’ என்பது ஒரு மாற்ற முடியாத முரண். இந்த முரணைத் தனது உரையில் வைத்துத் திருக்குறளுக்குக் கருத்து விளக்கம் தந்திருக்கிறார் பரிமேலழகர்.

“களவென்னும் காரறிவாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்” 287

“களவு என்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை உடையராதல் உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமையை விரும்பினார்கண் இல்லை”

“களவும் துறவும் ‘இருளும் ஒளியும்’ போலத் தம்முள் மாறாகலின் ஒருங்கு நில்லா என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது”

எனப் பொழிப்புரையும் விளக்கவுரையும் எழுதியிருக்கிறார் அழகர்.

 1. களவின்கண் கன்றிய காதலவர் அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் (286)
 2. பொருள் கருதிப் பொச்சாப்பு பார்ப்பார்கண் அருள் கருதி அன்புடையர் ஆதல் இல் (285).

இவையிரண்டும் இந்தப் பாடலுக்கு முந்தைய குறட்பாக்கள். ‘கள்ளாமை’ என்பது உள்ளத்தினாலும் கள்ளக் கருதாமை என்னும் பொருளைத் தரும். உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவது இல்லறத்தில் இயலாது, துறவறத்திற்கும் அரியது. துறந்தார்க்குரித்தாய அறங்களுள் இது தலையாயது. துறவுநிலையில் உள்ளவர்கள் களவுமனம் கொண்டவர்களாக இருப்பின் துறவு நிலையில் அமைதி கிட்டாது. ஞானம் பிறவாது. இது திருவள்ளுவம். காரணம் துறவும் களவும் முரண். எதுபோல? இருளும் ஒளியும் போல. கரவு இருள். துறவு ஒளி. ‘இருளோடு சேர்ந்த ஒளி’ என்பது எங்கும் இல்லை. இது இருக்கும் இடத்தில் அது இருக்காது. அது இருக்கும் இடத்தில் இது இருக்காது. எனவே களவு மனம் கொண்டவர்களிடத்தில் துறவு காழ்கொள்ளுவதில்லை என்பதை விளக்கிய மூன்று பாடல்களுக்கும் ஒரே உவமத்தைப் பயன்படுத்தி விளக்கமளித்திருக்கும் அழகரின் உரைத்திறன் இது!.

நத்தையெழுத்து நல்லெழுத்தாகாது

யானைக்கும் அடிசறுக்கும் என்பது பழமொழி. அதனால் அடி சறுக்குவதனாலேயே அது யானையாகிவிடாது. கடற்கரையில் நத்தை ஊர்ந்து செல்லும். அதன் கூரிய கால்களால் மற்றும் கொம்புகளால் கோடுகள் சில உருவாகும். அவை எழுத்துக்களைப் போலத் தோன்றும். ஆனால் அவை எழுத்துக்கள் அல்ல. அந்த எழுத்துக்களைக் கொண்டு இலக்கியம் செய்ய முடியாது.  கற்க முடியாது.  நத்தைக்கு ‘ஏரல்’ என்பது பெயர். மணலில் ஊரும் நத்தையின் கோடு எழுத்தாவதில்லை. ஆயினும் அதனை யாரும் மதிப்பதில்லை. காரணம் கல்மேல் எழுத்து என்பது இந்த மண்ணின் எழுத்துக் கொள்கை. நீர்மேல் எழுத்து என்பதும் ஏரல் எழுத்து என்பதும் ஒரே தன்மையன. அறிவுடையார் அதனை எழுத்தாகவோ இலக்கியமாகவோ கொள்ளார்.  கல்லாதவன் ஊழ் காரணமாகச் சிற்சில பொழுதுகளில் கற்றாரும் வியக்கும் வண்ணம் கருத்துரை சொன்னாலும் அறிவுடையார் அதனை மதியார்.

“கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும்
கொள்ளார் அறிவுடையார்” (404)

“கல்லாதவனது நுண்மை ஒரோவழி நன்றாயிருப்பினும் அறிவுடையார் அதனை ஒண்மையாகக் கொள்ளார்”

“(நன்றாயினும் – நன்றாகாது) ஆயிற்றாயினும் ஏரல் எழுத்துப் போல்வதோர் விழுக்காடாதலின் நிலைபெற்ற நூலறிவுடையார் அதனை மதியார் என்பதாம்”

நத்தையின் கோடு எழுத்தாகாது. கல்லாதவரின் நுண்மை அறிவாகாது. கற்றாரின் கையெழுத்தைவிட நத்தையின் எழுத்து அழகாக இருப்பினும் ஏற்பாரில்லை. கல்லாதவர்களின் கருத்துக்கள் ஒரோவழிச் சிறப்பாயிருப்பினும் அதனை மதிப்பாரில்லை என்னும் திருக்குறள் கருத்தினை ‘ஏரல் எழுத்து’ என்பது கொண்டு விளக்கிய அழகர் உரைத்திறன் இது.

அடைச்சொற்களுக்கும் உவமம் காட்டும் அழகர் 

‘இனியவை கூறல்’ என்பது ஒரு அதிகாரத்தின் பெயர். இனிய சொற்களைப் பேச வேண்டும் என்பது மட்டுமன்று. இன்னாத சொற்களைப் பேசுதல் கூடாது என்பதும் அந்த அதிகாரம் சொல்லவரும் கருத்து. இனிய சொற்களைப் பேசுவதினால் உண்டாகும் நன்மையையோ இன்னாத சொற்களைப் பேசுவதால் உண்டாகும் தீமையையோ திருக்குறள் குறிக்கவில்லை. அழகர் கண்டறிகிறார். இனிய சொற்களை ஏன் பேச வேண்டும்? இன்னாத சொற்களை ஏன் பேசக்கூடாது என்னும் வினாவைப் பரிமேலழகர் தமக்குத் தாமே எழுப்பிக் கொள்கிறார்.

“இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” (100)

“அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க, அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல்; இனிய கனிகளும் தம் கைக்கண் உளவாயிருக்க அவற்றை நுகராது இன்னாத காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும்”

என்று பொழிப்புரை எழுதியவர்,

“இனிய கனிகள் என்றது ஔவை உண்ட நெல்லிக்கனிபோல் அமிழ்தாவனவற்றை இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய் போல நஞ்சாவனவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம்”

என விளக்கவுரை எழுதியிருக்கிறார். இந்தக் குறட்பாவிலும் அதற்கான உரையிலும் கவனத்திற்குரியன பல.

 1. ‘இனிய, இன்னாத’ என்றவாறு உவமத்திற்கு அடைபுணர்க்கப்பட்டுள்ளன.
 2. பொருளுக்கு அடைபுணர்க்கப்படவில்லை.
 3. ‘இனிய கனி’ என்றும் ‘இன்னாத காய்’ என்றும் பரிமேலழகர் தாம் வருவித்துக் கொண்ட தொடருக்கு உரையெழுதுகிறார்.
 4. ‘இனிய’ ‘இன்னாத’ சொற்களுக்கான காரணம் அறப்பயன் என்பதாகக் கொள்ளுகிறார்.
 5. கூடுதலாக இன்னாத சொற்கள் அறப்பயன் நல்காததோடு பாவத்தை நல்கும் என்பதாகவும் எழுதுகிறார்.

இங்கே பதிவிடப்பட்ட இவைகள் திருக்குறளில் சொல்லப்படாத கருத்துக்கள். அறப்பயன் தருவதால் சொற்கள் இனிமையாயின. அறப்பயன் தராதது மட்டுமன்றி உயிருக்கும் கேடு தரும் என்பதால் சொற்கள் இன்னாதவாயின. இவற்றுக்கு ‘ஔவை உண்ட நெல்லிக்கனி’ என்னும் புறநானூற்றுப் பதிவையும் ‘எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காய் தெங்காகா’ என்னும் உலகியல் பழமொழியையும் இணையாகக் கொண்டு உவமித்துக் கருத்து விளக்கம் தருகிறார். ஒரே குறட்பாவின் இரண்டு கருத்துக்களை இருவேறுபட்ட உவமங்களால் விளக்கியிருப்பதே அழகரின் உரைத்திறனாகும்.

தேனும் நெய்யும் சேர்ந்தால் நஞ்சு

‘மாறுபாடில்லாத உணவு’ என்னும் தொடர் திருக்குறளில் 944, 946 என்னும் இரண்டு குறட்பாக்களில் பயின்று வருகிறது. முதற் குறட்பாவில் வந்திருக்கும் மாறுபாடில்லாத உணவு எது என்பதை விளக்குவதற்காகப் பரிமேலழகர் கையாண்டிருக்கும் உவமமே தேனும் நெய்யும் சேர்ந்தால் நங்சாகும்’ என்பதாகும்.  முன் உண்ட உணவு செரித்தலும் வேண்டும் செரித்த உணவு குருதியாக மாறவும் வேண்டும். அதற்குச் சிறிது கால அவகாசம் வேண்டும். இதனைத்தான் ‘அற்றதறிந்து’ என்னும் சொல் குறிக்கிறது. ‘’அற்றாலும் அதன் புரதம் அறாதாகலின்’ என்பார் பரிமேலழகர். மாறு கொள்ளாத உணவு வகைகளை அவர் விரிவாகப் பட்டியலிடுகிறார்.

 1. உண்பான் பகுதியோடு மாறுகொள்ளாமை
 2. கால இயல்போடு மாறுகொள்ளாமை
 3. சுவை வீரியங்களால் தம்முள் மாறு கொள்ளாமை

இவை எப்படி எதனால் மாறுபடும் என்பதையும் விளக்கியுள்ளார்.

 1. வாத, பித்த, ஐயங்களான் ஆய பகுதிகளுக்கு அடாதவற்றைச் செய்தலும்
 2. பெரும்பொழுது, சிறுபொழுது என்னும் கால வேறுபாடுகளுள் ஒன்றற்கு ஆவன பிறிதொன்றற்கு ஆகாமையும்
 3. தேனும் நஞ்சும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல்வனவுமாம்.

“அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து” (944)

“முன்னுண்டது அற்றபடியை அறிந்து பின் மிகப்’ பசித்து உண்ணுங்கால் மாறுகொள்ளாத உணவுகளைக் குறிக்கொண்டு உண்க”

“தேனும் நெய்யும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல” (944)

என்று அமைந்திருக்கிறது. மாறுபட்ட சுவைகளின் இணைப்பு உடல்நலத்திற்குக் கேடு தரும். இன்றைக்கும் நடப்பியலில் மீனையும் கோழியையும் ஒரே நேரத்தில் உண்ணக் கூடாது என்பது பின்பற்றப்படுகிறது. இந்த மாறுபட்ட சுவைக்குத்தான் இருவேறுபட்ட சுவைகளைக் கொண்ட தேனையும் நஞ்சையும் உவமாக்குகிறார் பரிமேலழகர். அதாவது இனிப்புச் சுவையுடைய தேனும் அதனின் மாறுபட்ட சுவையுடைய நெய்யும் தனித்தனியாக நலம் செய்யினும் இணைந்தால் கேடுதரும். இதனைப்போல முரண்பட்ட சுவையுடைய உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும் என்பதற்காக இந்த இணைப்பை அழகர் உவமமாக்கியிருப்பதுதான் அவர்தம் உவமத்திறனாகும்.

பசும் பானை நீரும் பரிமேலழகர் உரையும்

இலக்கியப் பயன்பாடு, உலக வழக்கு என்னும் இரண்டிடத்தும் சிறக்கின்ற சில உவமங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று வேகாத மண்பானையில் ஊற்றிய நீர் போல’ என்பது மழலையைப் ‘பச்சை மண்’ என்பதும் மகப்பேறுற்ற மகளிரை ‘பச்சை உடம்பு’ என்று சொல்வதும் உலக வழக்கு. பச்சைப் பானையில் நீரூற்றுதல் என்பது செயல் ஒருங்கிணைந்து உருப்படாது என்பதற்கும் கனவாய்க் கற்பனையாய் மெல்லப் போய் முடிந்துவிடும் என்பதற்கும் வழக்கில் சொல்லப்பட்டு வரும் உவமையாகும். இலக்கியத்தில் திருவள்ளுவர் இந்த உவமத்தைச்,

“சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமட்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று” (660)

என்னும் குறட்பாவில் கையாள்கிறார். அல்நெறியில் தேடிய செல்வச் சேமிப்பு பசிய மட்கலத்துள் பெய்த நீருக்கு ஒப்பாகும் என்பது கருத்து. திருவள்ளுவருக்கு முன் இந்த உவமத்தைத் தொல்காப்பியர் தலைவி தன் அகவுணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கிற்குப் பயன்படுத்தியுள்ளார்.

“தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்
எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லைப்
பிறநீர் மாக்களின் இன்றிய ஆயிடைப்
பெய்ந்நீர் போலும் உணர்விற்று என்ப” (1064)

என்னும் நூற்பாவில் இந்த உவமம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் அழகையும் ஆழத்தையும் உள்வாங்கிய பரிமேலழகர் தனது உரையிலும் எடுத்தாண்டுள்ளார்.

“அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்” (755)

“தாம் குடிகள் மாட்டுச் செய்யும் அருளொடும், அவர் தம்மாட்டுச் செய்யும் அன்பொடும் கூடி வாராத பொருளீட்டத்தை அரசர் பொருந்தாது கழியவிடுக”

“கூடிவருதல் ஆறில் ஒருபங்காய் வருதல் அவ்வாறு வாராத பொருளீட்டம் பசுமட்கலத்துள் செய்தானையும் கொண்டு இறத்தலின் அதனைப் புல்லார் என்று ஒழியாது புரளவிடல் என்றும் கூறினார்”

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் எனத் தொடங்கும் குறட்பாவால் அரசனுக்குரிய திறை குடிமகனின் வருமானத்தில் ஆறில் ஒருபங்கு என்பது பெறப்படும். அதற்கு மாறாக வரும் வருமானம் அல்நெறியால் பெறப்படுவதாகக் கருதப்படும். அவ்வருமானத்தைக் கருவூலத்தில் சேமித்தால் சேமிக்கப்படும் செல்வமும் அதனைச் சேமிக்கின்ற கருவூலமும் ஒருங்கே அழியும் என்பது கருத்து. இதனைத்தான் ‘செய்தானையும் கொண்டு இழத்தலின்’ என்னும் தொடர் குறிக்கிறது. ஆனால் இவ்வாறு உரை சொல்வதற்குக் குறட்பாவில் சொல்லோ இடமோ இல்லை. ‘சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல்’ (660) என்னும் குறட்பாவைக் கருத்திற் கொண்டே இதனை எழுதுகிறார். மேலும் அந்தக்  குறட்பாவின் கருத்தாக, ‘அரசனும் செல்வமும் சேரப்போம்’ என்பதாம் என உரைத்திருப்பதும் காண்க. அகத்திணைப் பொருள் விளக்கத்திற்காகத் தொல்காப்பியத்தில் கண்ட உவமத்தைத் திருவள்ளுவர் பொருளதிகாரக் கருத்துக்குப் பயன்படுத்தி நூல் செய்கிறார். அவ்விரண்டனையும் உள்வாங்கிய பரிமேலழகர் அவ்விரண்டும் பொருளாகாத வேறொரு குறட்பாவின் பொருள் விளக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதே அழகரின் உவமத்திறன் ஆகும்.

நிறைவுரை

நூல் நுகர்ச்சிக்குக் காரணங்கள் பல. கருத்து, சொல்லாட்சி, யாப்பு, வெளிப்பாட்டு உத்தி, உணர்ச்சி, வண்ணனை, உவமங்கள் எனப் பல்வகையாக அது பல்கும். அவற்றுள் உவமத்தால் ஒரு நூலை நோக்குவதும் மதிப்பிடுவதும் கற்பாரின் உளப்பண்பைச் சார்ந்தது. தொடக்கத்தில் சொல்லியது போலத் திருக்குறளின் உவமங்களும் பொருள்களும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாய்ப் பிரிக்க முடியாததுபோலப் பரிமேலழகரின் உரையில் காணப்படும் உவமங்களும் குறட்பாவின் கருத்துக்களோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. மேலாகத் திருக்குறளில் காணமுடியாத இலக்கண உவமங்களைப் பரிமேலழகர் காட்டியிருப்பது மொழி, சிந்தனை, இலக்கிய உத்தி ஆகியவற்றின் வளர்ச்சிநிலையைக் காட்டுவதாகக் கொள்ளமுடியும். பரிமேலழகர் காட்டிய இந்த நெறியைப் பிற்காலத்தில் கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசர், உவமைக் கவிஞர் சுரதா முதலியோர் பின்பற்றிச் சிறந்தனர். திருக்குறள் உவமங்களும் அழகரின் உவமங்களும் துலாக்கோலின் தட்டுக்கள் இரண்டிலும் சமமாகவே நிற்கின்றன என்பதைக் குறிப்பிட்டு இந்தக் கட்டுரையும் ‘பரிமேலழகர் உரைத்திறன்’ என்னும் இக்கட்டுரைத் தொடரும் நிறைவு பெறுகிறது!. வல்லமைக்கு நெஞ்சார்ந்த நன்றி!

(நிறைவு)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.