Blog

  • எட்டுக் கோணல் பண்டிதன் – 12

    எட்டுக் கோணல் பண்டிதன் – 12

    தி. இரா. மீனா

                அத்தியாயம் பதினெட்டின் தொடர்ச்சி

    11. விகற்பமில்லாத தன்னிலை உடையவனுக்கு அரசாட்சியிலும்,பிச்சை எடுப்பதிலும்,லாப நஷ்டங்களிலும், மக்கள் கூட்டத்திலும், காட்டிலும் விஷேஷமென்று எதுவுமில்லை.

    12. இதைச் செய்தோம், இதைச் செய்யவில்லை என்னும் இரட்டையிலிருந்து விடுபட்ட யோகிக்கு அறம், பொருள், இன்பங்கள் எங்கேயுள்ளன!

    13. ஜீவன் முக்தராகிய யோகிக்குக் கடமையேதுமில்லை. மனதில் பற்றுதல் இல்லை. இயல்பாக இருப்பதே அவர் தொழிலாகும்.

    14. நினைப்பனைத்தின் முடிவிலே இளைப்பாறுகின்றவருக்கு மோக மெங்கே, உலகமெங்கே, தியானமும், விடுதலையும் எங்கே?

    15. உலகத்தைக் காண்பவன் அஃதில்லையென்று சாதிக்கட்டும். உலகைக் கண்டும் காணாதவன் என்ன செய்வது ?

    16. பரம்பொருளைக் கண்டவன் அப்பரமே நான் எனக் கருதவேண்டும். இரண்டாவதைக் காணாதவன்- நினைப்பற்றவன்-எதை நினைப்பான்?

    17. தன் ஆசையைக் காண்பவன் அதை அடக்குவான். பெரியார் ஆசையடைய மாட்டார். அடைவதற்கு எதுவுமில்லாத போது அவர் எதைச் செய்வார்?

    18. உலகத்து மனிதர்களைப் போல இருந்தாலும் ஞானி அவர்களிலிருந்து மாறுபட்டவன். தனக்குக் களங்கம் வருவதை அவன் ஒருகாலும் அனுமதிக்க மாட்டான்.

    19. நினைப்பும்,  நினைப்பின்மையுமற்று,  வாதனையற்று  நிறைவுற்றிருப்பவன் உலகப் பார்வையில் பல செய்தும் உண்மையில் எதுவும் செய்யாதவனே.

    20. எதை எப்போது செய்ய நேர்கிறதோ அதைச் செய்து சுகமாக இருக்கும் தீரனுக்கு எந்தக் கவலையுமில்லை.

    21. பற்றற்று, கட்டற்றுச் சுதந்திரமாக இருப்பவன் காற்றில் சருகென வினையை ஏற்றாடுவான்.

    22. உலகியல் அற்றவனுக்கு எதனிடமும் களிப்போ, ஏக்கமோ உண்டாகாது. அவன் என்றும் மனம் குளிர்ந்து உடலற்றவன் என ஒளிவிடுவான்.

    23. மாசற்றுக் குளிர்ந்த உள்ளமுடையவனாகத் தனக்குள் மகிழ்ச்சி அடையும் தீரன் எதையும் ஒழிக்க நினைக்க மாட்டான். அவனுகெங்கும் அழிவில்லை.

    24. இயல்பாகவே மனதில் எதுவும் இல்லாதவனாகச் செயல்படும் தீரனுக்கு பாமரர்களுக்குரிய மான, அவமானங்கள் இல்லை.

    25. இந்த வேலையைச் செய்வது உடலே நானில்லை என்னும் கருத்தைப் பின்பற்றுபவன் செய்தும் செய்யாதவனே.

    26. ஆர்வமற்றவன் போலச் செயல்பட்டாலும் அவன் சாதாரணனில்லை. ஜீவன் முக்தனான அவன் உலகில் உழன்றாலும் தன் தன்மையிலிருந்து மாறமாட்டான்.

    27. பற்பல ஆராய்ச்சிகளால் களைத்த தீரன் எதையும் நினைக்க மாட்டான், அறிய மாட்டான், கேட்க மாட்டான், பார்க்க மாட்டான்.

    28. சமாதியும், சமாதியின்மையும் இல்லாததால் ஞானி அறிஞனு மில்லை; பாமரனுமில்லை. உலகம் கற்பிதமென நிச்சயித்து அதைப் பார்க்கும் போது பிரம்மமாயிருக்கிறான்.

    29. எவனுக்கு மனதில் அகந்தையிருக்கிறதோ அவன் செய்யாதவனாக இருந்தாலும் செய்கிறான். அகந்தையில்லாத தீரன் செய்தும் ஒன்று மில்லை.

    30. முக்தனது மனம் குழப்பமின்றி, குதூகலமின்றி, தொழிலின்றி,  அசைவின்றி, ஆசையின்றி இருக்கிறது.

    31. ஆலோசிக்கவோ, செயல்படவோ முற்படாத உள்ளம் எந்தக் காரணமுமில்லாமல் ஒரொருகால் ஆலோசிக்கும், செயல்படும்.

    32. உண்மையை உள்ளபடி கேட்கும் சாதாரணன் மயக்கமடைகிறான். ஞானியோ சாதாரணனைப் போல ஒடுக்கம் அடைகிறான்.

    33. சித்த ஓர்மையையும், அடக்கத்தையும் சாதாரணர் மிகப் பழகுவர். தூங்கியவர் போலத் தன்னிலை நிற்கும் தீரர் செய்யக் கூடியது எதையும் காண்பதில்லை.

    34. முயற்சியினாலோ, முயற்சியின்மையாலோ சாதாரணர் அமைதியடைவதில்லை.  அறிஞரோ உண்மை நிச்சயத்தாலேயே சாந்தனாகிறார்.

    35. அப்பழக்கத்தையே மேற்கொண்ட மனிதர்களும் உலகற்று நோயற்று அறிவோடு அன்போடு நிறைவாய்த் திகழும் தம்மையுணர்வதில்லை.

    36. சாதாரணர கன்மத்தால்  விடுதலை பெறுவதில்லை. புண்ணியவான்  ஞானத்தினால் விடுபட்டு நிலை பெறுகிறான்.

    37. அதுவாக விரும்புவதால் சாதாரண மனிதர் அப்பரம்பொருளை அடைவதில்லை தீரனோ விரும்பாமலே  பரம்பொருளே தானாயிருக்கிறான்.

    38. ஆதாரத்தை விட்டு எதையும் அடைய விரும்பும் அவிவேகிகள் பிறவிச் சுழலைப் பெருக்குவார்கள். விவேகிகள் பிறவி வேரையே அறுத்து விடுவார்கள்.

    39. சாந்தியடைய விரும்பும் சாதாரணர் சாந்தியடைவதில்லை. தீரன் உண்மையை உணர்ந்து என்றும் மனமடங்கியிருக்கிறான்.

    40. காட்சியைப் பற்றி நிற்பவனுக்கு ஆன்மப் பார்வை எங்கேயிருக்கிறது? தீரர் அதையும், இதையும் காணாமல் அழிவற்ற ஆன்மாவையே காண்பார்கள்.

    [தொடரும்]

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 25

    கதை வடிவில் பழமொழி நானூறு – 25

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 51

    கட்டுடைத் தாகக் கருமம் செயவைப்பின்
    பட்டுண்டாங்(கு) ஓடும் பரியாரை வையற்க
    தொட்டாரை ஒட்டாப் பொருளில்லை ‘இல்லையே
    அட்டாரை ஒட்டாக் கலம்’.

    பழமொழி – இல்லையே அட்டாரை ஒட்டாக் கலம்

    குடும்பத்தப் பத்தி சரியா விசாரிச்சிட்டுத்தான் முடிவச் சொல்லணும்னு இப்ப எதுக்கு தேவையில்லாம ஒத்தக்கால்ல நிக்கற. எனக்கென்னமோ பாக்க நல்ல குடும்பமாத்தான் தெரிஞ்சாங்க. அப்பா தொடர்ந்து கொண்டே போக இடையில் அம்மா .

    போதும் நிறுத்துங்க. ‘உங்களுக்கு வெளுத்ததெல்லாம் பால்’. என்னால அப்டி யோசிக்க முடியாது. எதையும் நான் நிதானமா யோசிச்சுதான் முடிவெடுப்பேன்.

    நிதானம் நிதானம்னு சொல்லிக்கிட்டு ‘நீ கண்ண மூடிக்கிட்டு உலகமே இருட்டா இருக்கும்னு’ பேசற. இது அப்பா.

    இங்க என்ன பழமொழிக்கு பழமொழி போட்டியா நடக்குது. சண்டபோடும்போதும் சரமாரியா பழமொழியா கொட்டறாங்க. நல்ல தமிழ்ப் பற்றுதான்.  இருக்கட்டும். ஆனா இப்ப பேசிக்கிட்டிருக்கறது என் கல்யாணத்தப் பத்தி. ரெண்டு நாள் முன்ன பொண்ணு பாக்கப் போனோம். எனக்கும் பாக்கறதுக்கு அவங்க நல்லகுடும்பமாத்தான் தெரிஞ்சாங்க. எப்டியிருந்தாலும் அரேஞ்ட் மேரேஜ். அதனால பொண்ணப் பத்தின விவரங்கள் அதிகமா தெரியாது. ஆனா இந்த அம்மா ஏன் அவங்க குடும்பத்தப் பத்தியே பேசிக்கிட்டு இருக்காங்கனு தெரியல. நான் என்ன மொத்த குடும்பத்தையா கல்யாணம் செஞ்சுக்கப் போறேன். இருந்தாலும் அம்மா காரணம் இல்லாம சொல்ல மாட்டங்க. என்னன்னு அவங்ககிட்டயே கேட்டுத் தெரிஞ்சிக்கலாம். போன எடத்துல யாராவது மரியாதைக்குறைவா பேசினாங்களோ என்னமோ? யோசித்துக்கொண்டே அவர்களின் சண்டையில் இடையில் நுழைந்தேன்.

    அம்மா ஆரம்பித்தாள். உனக்கு எம்மேல நம்பிக்கை இருக்குல்ல. கொஞ்சம் பொறு. நான் நாலுபேர்கிட்ட அந்தக் குடும்பத்தப் பத்தி , அவங்க முந்தின தலைமுறையப் பத்தி நல்லா விசாரிச்சுட்டு எம் முடிவச் சொல்றேன்.

    உட்டா அவங்களோட ஏழு தலைமுறையப் பத்தியும் கேள்வி கேட்ப போல. எரிச்சலுடன் கிளம்பிவிட்டார் அப்பா.

    அவர் கிடக்கிறார். நீ கேளு. அம்மா ஆரம்பித்தாள். இப்டித்தான் முன்னால எங்க ஊர்ல தாத்தாவோட ஒண்ணுவிட்ட தங்கச்சிக்கு ஒடம்பு முடியாமப் போச்சு. அவங்க மொத்த சொத்தையும் எங்க அம்மா பேர்ல எழுதிவைக்கறதாவும் அவங்களக் கடைசி காலம் வரை பாத்துக்கிடணும்னு சொல்லி தாத்தாகிட்ட வந்தாங்க. அப்ப எங்கம்மா படிச்சிக்கிட்டு இருந்தாங்க. எங்க ஊர்ல கோவிந்தன்னு ஒருத்தன் இருந்தான்.  அவனுக்கு குடும்பம்னு ஒண்ணும் இருக்கல. அப்ப தாத்தா இந்த கோவிந்தன அந்த ஆச்சிக்கு தொணையா இருக்கச் சொல்லி பேசி வச்சாரு. அதுக்குத் தகுந்த சம்பள நெல்லையும் அவனுக்கு கொடுத்துட்டு இருந்தாரு. இவனும் ஆச்சி கூடவே ஒத்தாச செஞ்சுக்கிட்டு இருந்தான். ஆச்சிக்கு நிறைய சொத்து. அவளுக்கு பிள்ள குட்டி எதுவும் இல்ல. இந்த கோவிந்தன் கொஞ்சம் படிச்சிருந்ததால அவன நம்பி காடு கழனி பொறுப்ப எல்லாம் ஒப்படைச்சாங்க ஆச்சி.. கொஞ்ச கொஞ்சமா அவங்க சொத்து விவரம் பூராத் தெரிஞ்சுக்கிட்ட அவன் ஆச்சி செத்தபிறகு எல்லாம் தனக்கு வர மாதிரி எழுதி வச்சிக்கிட்டான். தாத்தாகிட்டயும் நல்ல பயலாத்தான் நடிச்சிக்கிட்டிருந்தான். மொதல்ல தாத்தா இறந்துட்டாரு. அப்பறந்தான் அந்த ஆச்சி செத்துச்சு. அவங்க செத்தப்பறம்தான் தெரிஞ்சுச்சு. இவன் மொத்தத்தையும் தம் பேருக்கு மாத்திக்கிட்ட விசயம். எங்கம்மாவுக்கு ஒண்ணும் கிடைக்கல. இந்தக் கதைய எங்கம்மா எங்கிட்ட பலதடவை சொல்லியிருக்காங்க.

    ஓ கேக்க சினிமா கதை மாதிரி இருக்கே. நான் சொல்ல அம்மா கோபத்துடன்

    இது ஒண்ணும் கதையில்ல. நிசம். யாருக்குத்தெரியும் இந்த மாதிரி இன்னொருத்தர் காச ஏமாத்தி அந்தப் பரம்பரையில யாராவது பொழைச்சிருந்தாங்கன்னா அந்தப் பாவம் எல்லாருக்கும்தானே வந்து சேரும். அதனாலதான் நான் விசாரிக்கணுங்கறேன். அம்மா முடிக்க நான் தொடர்ந்தேன்.

    அம்மா இதத்தான் ‘இல்லையே அட்டாரை ஒட்டாக் கலம்னு’ பழமொழி நானூறு சொல்லுது. ஒருத்தன்கிட்ட காரியத்த ஒப்படைக்கும்போது அதோட பயனை அவனே எடுத்துக்குவான்னு தோணிச்சின்னா அவன்கிட்ட ஒப்படைக்கக் கூடாதுங்கறது அதோட பொருள். கோவிந்தன் மாதிரி ஆள விசாரிக்காம வேலைக்கு வச்சது தாத்தாவோட தப்பு. அதுக்குனு எல்லாரையும் அவனப்போலவே நினைச்சு சந்தேகப்படறது எனக்கு சரியாப் படல. அப்பறம் உன் இஷ்டம். சொல்லிவிட்டு அப்போதைக்கு அந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக நினைத்து கிளம்பினேன்.

    பாடல் 52

    குரைத்துக் கொளப்பட்டார் கோளிழுக்குப் பட்டுப்
    புரைத்தெழுந்து போகினும் போவர் – அரக்கில்லுள்
    பொய்யற்ற ஐவரும் போயினார் ‘இல்லையே
    உய்வதற்(கு) உய்யா இடம்’.

    ‘இல்லையே உய்வதற்கு உய்யா இடம்’

    வந்தே பாரத் விமானத்தில் எவ்வளவு முயற்சித்தும் பயணச்சீட்டு கிடைக்கவில்லை. மனம் முழுக்க கவலையுடன் துபாயிலிருந்து நான் இந்தியாவில் இருக்கும் என் குடும்பத்தாருடன் பேச முயல்கிறேன். பேச கேட்க எவ்வளவோ விஷயங்கள் இருந்தாலும் மனம் ஒருநிலையில் இல்லாதபோது தலையில் இடிவிழுந்தமாதிரி ஒரு உணர்வு. இனிமே எப்போ கிடைச்சு நான் எப்போ போக.. என் தாய் மண்ணை மிதிக்க முடியுமோ என்னவோ. இயலாமை என்னை முழுமையாய் ஆக்கிரமிக்க, கைபேசியை கீழே வைத்துவிட்டு என் முயற்சியைக் கைவிட்டேன்.

    போனவாரம் பேசியபோது மனைவி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. இன்னும் நம்ம வீட்டுப்பக்கத்துல கொரோனா தாக்கம் குறைந்த பாடில்லை.நானும் குழந்தைகளும் பத்திரமாதான் இருக்கோம். நம்ம விமல் அண்ணன் அடுத்த சனிக்கிழமை குடும்பத்தோட கிளம்பி வரப்போறதா கேள்விப்பட்டேன். அவங்ககூட சேந்து நீங்களும் புக் பண்ணியிருக்கலாமே. அதன்பிறகு அவள் பேசிய எதுவும் சரியாகக் காதில் விழவில்லை.  ஏதோ ஒப்புக்குப் பேசிவிட்டு கைபேசி இணைப்பைத் துண்டித்தேன்.

    விமல் கூடவா இப்படி. எத்தனைதடவ சொன்னேன். நீ ஊருக்குக் கிளம்பறதா இருந்தா எனக்கும் சேத்து புக் பண்ணுனு. நான் தொழிற்சாலைக்குள் வேலை செய்வதால் முழுநேரம் இணைய இணைப்பு கிடைக்காது. காலை அல்லது மாலை நேரங்களில் தொழிற்சாலைக்கு வெளியேதான் முயற்சிக்க வேண்டும். அதிலும் பல தடங்கல்கள். அதனால தான் விமல், ரவி, மதன் இவங்க மூணு பேர் கிட்டயும் சொல்லிவச்சிருந்தேன்.

    ரவியும் மதனும் போனவாரம் கூப்பிட்டு டேய் திடீர்னு புக் பண்ணிட்டோம். உனக்கும் சேத்து பண்ண டிக்கெட் இல்ல. கிளம்பறோம். பத்திரமா இருந்துக்கோ. சீக்கிரமா இங்கிருந்து கிளம்பிடு என அறிவுரை சொல்லிவிட்டுப் போய் விட்டார்கள்.

    இந்த விமல் புக் பண்ணினத என்கிட்ட சொல்லக்கூட இல்ல. மனைவி சொல்லி தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு. இவங்ககூடயெல்லாம் இவ்வளவு வருசம் நட்பு வச்சிருந்தத நினைச்சா வெட்கமா இருக்கு. இன்னிக்கு மனசுசரியில்ல. நாளைக்குதான் கூப்பிடணும்.

    இரவு உணவிற்குப் பின் களைப்பில் உறங்கிவிட்டேன்.  அடுத்தநாள் காலை கைபேசியில் மூன்று மிஸ்ட் கால்கள். அதுவும் நண்பன் விமலிடமிருந்து.

    என்ன ஆச்சரியம். ஊருக்குப் போய் சேந்தப்புறம் சாவகாசமா என் நினைப்பு வந்திருக்கு போல. இருந்தாலும் பரவாயில்ல. நான் நல்லவனாவே இருந்துட்டுப் போறேன். ஆனா கூப்பிட்டவுடனே நல்லா திட்டிட்டுதான் பேச ஆரம்பிக்கணும்.

    மனதுள் நினைத்துக்கொண்டே அழைத்தேன். அடுத்தமுனையில் வேறு ஒருவரின் குரல்.

    சார் நீங்க மிஸ்டர் ரகுதானே. என உறுதிப்படுத்திக்கொண்டு நான் பெங்களூரிலிருந்து மருத்துவர் சுதீப் பேசறேன். உங்க நண்பர் விமல் வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாயிடுச்சு. அவருக்கும்  அவருடைய குடும்பத்துக்கும் பலத்த அடிபட்டிருக்கு. அவரோட கைபேசியில உங்களின் எண்தான் எமெர்ஜென்சினு பதிவுசெய்யப்பட்டதால உங்களுக்குத் தகவல் குடுக்கறோம். அவர் முடித்தவுடன்

    பதட்டத்துடன் விமல் இப்போ எங்கே இருக்கிறான். பேசமுடியுமா.

    என் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ஒரே பதில். இப்போ எந்த பேஷண்டையும் பேச அனுமதிக்கமுடியாது. மருத்துவமனை முகவரிய உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். பக்கத்தில யாராவது சொந்தக்காரங்க இருந்தாங்கன்னா சொல்லிருங்க. இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன் பெருங்குரலெடுத்து அழவேண்டும்போல் தோன்றியது. நேற்றுவரை சுயநலவாதியாய்த் தெரிந்த என் நண்பன் உயிர்காப்பானாய் மாறிப்போயிருந்தான்.

    இதுக்குத்தான் எனக்கு டிக்கெட் புக் பண்ணாம விட்டானா. கடவுளே! அவனையும் குடும்பத்தாரையும் நல்லபடியாகக் காப்பாற்று வேண்டிக்கொண்டே  ரவி மற்றும் மதனின் எண்களை அழைக்க ஆரம்பித்தேன். விமலின் தாயார் ரொம்ப வயதானவர். அவரைத் தவிர அவனுக்கு யாரும் கிடையாது.

    ‘இல்லையே உய்வதற்கு உய்யா இடம்’ என்ற பழமொழி நானூற்றின் பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது. நண்பர்கள் கைவிட்டாலும் நல்ல ஊழ் இருந்தால் அவருக்கு எவ்விதமான ஆபத்தும் வராது என்பது இதோட பொருள். என் விஷயத்திலையும் அப்டிதான் நடந்திருக்கு.

    யோசித்துக்கொண்டே அடுத்து செய்ய வேண்டிய வேலைக்கு ஆயத்தமானேன்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 280

    படக்கவிதைப் போட்டி – 280

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (18.10.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 279இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 279இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. நித்தி ஆனந்த் கலைநுட்பத்தோடு எடுத்துவந்திருக்கும் இந்தக் கருப்புவெள்ளைப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்து வழங்கியுள்ளார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவ்விருவரும் நம் நன்றிக்கு உரியவர்கள்!

    ’உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது பழமொழி. அந்த வகையில் வியர்வை சிந்தி உப்பை உருவாக்கி நம் உணவுக்குச் சுவைகூட்டும் தொழிலாளர்கள் என்றும் நம் நன்றிக்கும் நேயத்துக்கும் உரியவர்கள்.

    இனி, இப்படத்துக்குப் பொருத்தமான கவிதைகளோடு காத்திருக்கும் கவிஞர்களை அன்புபாராட்டி அழைப்போம்!

    *****

    ”வான்மழை கண்டால் கோனும் குடிகளும் மகிழ்வர்; ஆனால் உப்பளத் தொழிலாளர்களோ மழைநீர்ப்பட்டு உப்புக் கரைந்தால் உழைப்பும் பிழைப்பும் கரைந்துபோகுமே என்று பதைப்பர்!” என்ற உண்மையை விண்டுரைக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வேண்டாம் அங்கு…

    வானில் மேகம் திரண்டுவந்து
    வையம் நனைய மழைபெய்தால்
    கோனி லிருந்து குடிகள்வரை
    கும்பிட் டேத்துவர் மகிழ்ச்சியிலே,
    தானியம் போலிலை உப்பதுவே
    தண்ணீர் பட்டால் கரைந்திடுமே,
    மேனி யுழைப்போர் உப்பளத்தில்
    மேகம் கண்டால் பதைப்பாரே…!

    *****

    ”குழந்தைகளை நாம் தூக்குகிறோம் உப்புமூட்டை; இறுதியில் நம்மீது அடுக்கப்படுவதோ மணல்மூட்டை” என்று வாழ்க்கையின் சுமைகளை விளக்குகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    இருவர் தூக்கியும் சுமையின் பாரம்
    குறையவில்லை
    வாழ்க்கையின் பாரமும் அதுதானே

    வானத்தைத் தொட்டு விடுமோ பாரம்
    வாய்பிளந்து நோக்கின்றோம் கூடையைத் தான்

    வானத்தைத் தொட்டு விடுமோ பாரம்
    வாய்பிளந்து நோக்கின்றோம் கூடையைத் தான்

    எத்தனையெத்தனை இன்னல்கள்
    அத்தனையத்தனை பாரங்கள் பிறகு
    வந்தனவந்தன இன்பங்கள்
    வாழ்வின் நிதசுகத் தருணங்கள்

    மழலைகளைத் தூக்கினோம் உப்புமூட்டை
    உழைக்கும் வர்க்கமெனப் பலமூட்டை
    புடைக்கும் நரம்பதில் உடற்கூட்டை
    இறுதியில் நம்மீது அடுக்கிடுவர் மணல்மூட்டை

    மொத்தத்தில் பாரம் சுமந்திட மனிதனன்றோ
    வாழ்க்கையின் பாடமும் அதுவன்றோ!

    *****

    ”ஆழக்கடலில் விளைந்து ஆதவன் அருளால் உருக்கொண்டு மானுடனின் பசிதீரத் தான் கரையும்” என்று உப்புக்கும் மேகத்துக்கும் உள்ள ஒப்புமையை இனிதாய் இரட்டுற மொழிந்துள்ளார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    உப்பும் மேகமும்

    ஆழக் கடலில் தான் விளையும்
    ஆதவன் அருளால் உருக் கொள்ளும்
    கொடுவெப்பம் ஏறுகையில் உயிர் தரிக்கும்
    கொட்டும் மழையில் கரைந்து போகும்
    மானுடனின் பசிதீரத் தான் கரையும்
    வானுயர அதன் மேன்மை ஓங்கி நிற்கும்
    அளவுக்கு மிஞ்சுகையில் அதிர்ச்சியூட்டும்
    களவுசெய்ய ஒண்ணாப் பெருஞ்செல்வம்
    படிக வடிவில் உருவான பெட்டகமாம்
    உப்பும் முகிலும் உலகம் காக்கும்!

    கவிஞர்களே! உப்பின் சிறப்பை, உப்பளத் தொழிலாளரின் உழைப்பை விளக்கி நீங்கள் வடித்துள்ள கவிதைகள் நன்று! உங்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    பகலவன் பார்வை பட்டுப்
    பாற்கடலின் பரந்த கரை மடியில்
    படிகம் படிகமாய்ப் படிந்த
    படியலின் பளிங்குக் குவியல்!

    அவியல் முதல் பொரியல் வரை
    அறிவியல் முதல் ஆன்மவியல் வரை
    அலைகளின் உவர்ப்பு நீருக்குள்
    அடங்கிய உப்புக்குள் அடக்கம்!

    கூடை நிறைய வெள்ளை உப்பு
    கூட்டு உழைப்பில் விளைந்த உப்பு
    நாட்டுக்கு விடுதலை நல்கிய உப்பு
    நம்ம காந்தியார் காய்ச்சிய கல்உப்பு!

    உப்பளத்தில் உழைத்து உழைத்து
    அப்பளமாய் ஆன உடம்பின்
    உப்பு வியர்வை உரமானது
    உப்பு நீர்க் கடலுக்கு உயிரானது

    வெண்மேகம் தாலாட்டுமா இங்கு?
    வெயில் சுடும் தேகம் நீராடுமா?
    கைகள் இணைந்து சேராமல் போனால்
    மெய்யுடல் ஒருவேளை பசியாறுமா?

    வானமே எங்கள் எல்லை
    வாய்ப்புகளை என்றும் நாங்கள் நழுவவிட்டதில்லை
    வல்லமையோடு வலிமை கொண்டு உழைத்தால்
    வாழ்வில் என்றும் இல்லை தொல்லை!

    ”உப்பளத்தில் உழைத்துழைத்து அப்பளமாய் ஆன தொழிலாளர்களின் உடம்பின் உப்பு வியர்வையே உரமானது; உப்புநீர்க் கடலுக்கு உயிரானது” என்றுரைக்கும் திரு. யாழ். பாஸ்கரன், ”வல்லமையோடு உழைத்தால் வாழ்வில் என்றும் இல்லை தொல்லை” என்று முத்தாய்ப்பாய் முடித்திருக்கின்றார். அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • கலாப்ரியா, க.பஞ்சாங்கம் ஆகியோருக்கு ‘விளக்கு’ விருது

    கலாப்ரியா, க.பஞ்சாங்கம் ஆகியோருக்கு ‘விளக்கு’ விருது

    அமெரிக்கத் தமிழர்களின் ‘விளக்கு’ இலக்கிய அமைப்பின் 24வது (2019) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் திலகவதி, பேரா. சு. சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு 2019ஆம் ஆண்டின் விருதுக்குரியவர்களாக கீழ்காணும் இரு எழுத்தாளர்களை ஒரு மனதாகத் தேர்வு செய்துள்ளது.
     
    1. கவிஞர் கலாப்ரியா கவிதை, நாவல், வாழ்க்கை வரலாற்றுப் புனைவுகள், கவிதை விமர்சனம், தமிழ்த் திரையுலகம் பற்றியும் தமிழர் வாழ்வில் திரையுலகின் தாக்கங்கள் பற்றியும் ஏராளமான ஆவணப் பதிவுகள்.
     
    2. பேரா. க.பஞ்சாங்கம் கவிதை, நாவல், சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், நவீனக் கோட்பாடுகளின் அடிப்படையிலான விமர்சன ஆய்வுகள்,
     
    ஒவ்வொன்றும் ரூ 1,00,000 மதிப்புள்ள இவ்விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
     
     
    தமிழின் மிக முக்கியமான, ஒரு தவிர்க்கவே முடியாத அபூர்வமானதொரு நிகழ்வு கலாப்ரியா. தமிழ்க் கவிதைப் போக்கில், கவிதை மொழியில், அழகியலில், நவீனம் நோக்கிய பலவகையான உடைப்புகளையும் திறப்புகளையும் ஏற்படுத்திய முதன்மைக் கவியான கலாப்ரியாவுக்கு அவரது கவிதைச் செயல்பாட்டையும் அண்மைக்கால உரைநடைகள் மற்றும், புனைவு முயற்சிகளையும் கௌரவித்துப் போற்றும் வகையில் 2019ஆம் ஆண்டிற்கான ‘புதுமைப்பித்தன் நினைவு விளக்கு’ விருதினை அவருக்கு அளிப்பதில் ‘விளக்கு’ விருது நடுவர் குழுவும் ‘விளக்கு’ அமைப்பும் மனநிறைவும் மகிழ்வும் கொள்கின்றன.
     
    தமிழில் பண்டைய இலக்கிய இலக்கணங்களில் இருந்து இன்றைய சமகாலம் வரையிலான எல்லா வகைப் பிரதிகளிலும் ஆழ்ந்த புலமையும், அவற்றைச் சமூகவியல் மற்றும் நவீன கலையிலக்கியக் கோட்பாடுகளின் அடிப்படையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழமான கட்டுரைகளில் திறனாய்வு செய்து, தமிழில் தெளிவான திறனாய்வுப் பார்வைகளை உருவாக்கியிருக்கும் பேராசிரியர் க.பஞ்சாங்கத்தைக் கௌரவித்துப் போற்றும் வகையில் 2019ஆம் ஆண்டிற்கான ‘புதுமைப்பித்தன் நினைவு விளக்கு’ விருதினை அவருக்கு அளிப்பதில் ‘விளக்கு’ விருது நடுவர் குழுவும் ‘விளக்கு’ அமைப்பும் மனநிறைவும் மகிழ்வும் கொள்கின்றன.
     
    ‘விளக்கு’ செயற்குழு
    அக்டோபர் 14, 2020
    Share
  • என் நண்பர் குஷ்வந்த் சிங் – நிர்மலா ராகவன் நேர்காணல்

    என் நண்பர் குஷ்வந்த் சிங் – நிர்மலா ராகவன் நேர்காணல்

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    மலேசியாவுக்கு வந்த எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கை நிர்மலா ராகவன் ஒரு நேர்காணலுக்காகச் சந்தித்தார். ஆனால், அதற்கு முன்னதாகக் குஷ்வந்த் சிங், நிர்மலா ராகவனை ஒரு மணிநேரம் நேர்காணல் செய்தார். இந்தியர்களுக்குத் தங்கள் தாய்மொழியை விட, ஆங்கிலமே நன்றாக வரும் எனக் குஷ்வந்த் சிங் மேடையில் சொல்ல, நிர்மலா ராகவனும் மேடைக்குச் சென்று, நானும் இந்தியாவிலிருந்து வந்தவள்தான். எனக்கு ஆங்கிலத்தை விட, தமிழே நன்றாக வரும் எனக் கூறினார். மறு பிறவி இல்லை என்று குஷ்வந்த் சிங் சொல்ல,  அப்படியானால் ஒருவர் ஏழையாகவும் இன்னொருவர் பணக்காரராகவும் பிறப்பது எப்படி? கர்ம வினைதானே அதற்குக் காரணம்? எனக் கேட்டுள்ளார்.

    எழுத்தாளர் குஷ்வந்த் சிங் உடனான தம் உரையாடல்கள், அவருடன் மேற்கொண்ட பயணம், குஷ்வந்த் சிங் பகிர்ந்துகொண்ட பல்வேறு சுவாரசியமான அனுபவங்கள் ஆகியவற்றை நிர்மலா ராகவன், இந்த அமர்வில் நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 16

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 16

    -மேகலா இராமமூர்த்தி

    அங்கங்கள் அறுபட்டுத் துடித்துப் புலம்பிக்கொண்டிருந்த சூர்ப்பனகை, மரகத மலைபோல் இராமன் தவச்சாலை நோக்கி வரக் கண்டாள். அவனைக் கண்டதும் தன் வயிற்றில் அடித்துக்கொண்டு கண்ணீரும், செந்நீரும் பெருக, ”ஐயனே! உன் அழகிய வடிவின்மீது நான் கொண்ட ஆசையால் எனக்கு நேர்ந்த அவலைத்தைப் பார்!” என்று அரற்றினாள்.

    அங்கங்கள் பங்கப்பட்டு நிற்கும் சூர்ப்பனகையைக் கண்டதும் ’இப்பெண் ஏதோ தீச்செயல் புரிந்து இளவல் இலக்குவனால் தண்டிக்கப்பட்டிருக்கின்றாள்’ என்பதை உய்த்துணர்ந்த இராமன்,  “அம்மா! நீவிர் யார்?” என்று வினவினான். அப்போது அவள் எழிற்கன்னி காமவல்லியாய் நில்லாமல் கோர அரக்க வடிவில் அங்கங்கங்களையும் இழந்து காட்சியளித்ததால் இராமனுக்கு அவளை அடையாளம் காண இயலவில்லை.

    ”என்னைத் தெரியவில்லையா? நான் தான் விண்ணுலகும் மண்ணுலகும் ஆளும் இராவணனின் தங்கை!” என்றாள் சூர்ப்பனகை.

    அப்போதும் அவளை அடையாளம் கண்டுகொள்ள இயலாத இராமன், ”அரக்கர் வதியும் இடம்விட்டு இந்தத் தவச்சாலைக்கு நீவிர் வந்தது ஏன்?” என்று வினவ, ”காமக் கொடுநோய்க்கு மருந்து போன்றவனே! நான்தான் நேற்றும் வந்தேனே!” என்று அவனுக்குத் தன் முந்தையநாள் வருகையை நினைவூட்டினாள் அவள்.

    தாம் இருந்த தகை அரக்கர்
    புகல் ஒழிய தவம் இயற்ற
    யாம் இருந்த நெடுஞ் சூழற்கு
    என் செய வந்தீர் எனலும்
    வேம் இருந்தில் எனக் கனலும்
    வெங் காம வெம் பிணிக்கு
    மா மருந்தே நெருநலினும்
    வந்திலெனோ யான் என்றாள்.
    (கம்ப: சூர்ப்பனகைப் படலம் – 2946)

    ”அழகே வடிவாய் நேற்று வந்தவரா நீர்?” என்று வியந்துகேட்ட இராமனைப் பார்த்து, “உறுப்புகள் குறைந்தால் அழகும் குறையாதோ?” என்று பதிலிறுத்தாள் சூர்ப்பனகை. இவள் உறுப்பறை பட்டதற்கு இளவல் இலக்குவனே காரணமாயிருக்கவேண்டும் என்றெண்ணிய இராமன், இலக்குவன் இவ்வாறு செய்யக் காரணம் என்ன என்றறிய விழைந்து, ”இப்பெண்ணின் மூக்கையும் காதுகளையும் அரியுமாறு இவள்செய்த பிழை யாது?” என்று இலக்குவனைப் பார்த்துக் கேட்டான்.

    ”அண்ணா! இவள் கண்களில் கனல்பொங்கச் சீதையைத் தின்பவள்போல் அவளைத் துரத்திக்கொண்டு ஓடிவந்தாள்; தமியளாய் வந்தாளா? தன் கூட்டத்தாரையும் உடனழைத்து வந்தாளா?” என்பதை நானறியேன் என்றுரைத்தான் இலக்குவன். அப்போது இடைமறித்த சூர்ப்பனகை இராமனை நோக்கி,

    ”கருவுற்ற பெண் தவளை, தன் கணவனாம் ஆண் தவளையருகே ஒரு சங்கு தங்கியிருக்கக் கண்டு கோபம் கொண்டு நீரைக் கலக்கும் வளம்பெற்ற நாட்டையுடையவனே! தன் கணவனின் அருகே மற்றொரு மனைவியைக் கண்டால் பெண் மனம் எரியாதோ?” என்று கேட்டாள்.

    ஏற்ற வளை வரி சிலையோன்
         இயம்பாமுன் இகல் அரக்கி
    சேற்ற வளை தன் கணவன்
         அருகு இருப்ப சினம் திருகி
    சூல் தவளை நீர் உழக்கும் துறை
         கெழு நீர் வள நாட
    மாற்றவளைக் கண்டக்கால்
         அழலாதோ மனம் என்றாள். (கம்ப: சூர்ப்பனகைப் படலம் – 2950)

    ’சூல்தவளை சங்கோடு சினக்கும்’ அதாவது அஃறிணை உயிர்களே தன் கணவன் அருகே பிற பெண்ணிருக்கச் சினக்கும்போது, தான் விரும்பும் இராமன் அருகே மாற்றாளாய் ஒருத்தி நிற்கக் கண்டு சினவாமல் இருக்க இயலுமா எனக் கேட்கிறாள் சூர்ப்பனகை.

    இவ் அடிகளை, துளைபொருந்திய தாளையுடைய ஆம்பலினது அகலிய இலையின் நிழலில், கதிர்போலும் கோட்டையுடைய நத்தையினது சுரிமுகத்தையுடைய ஏற்றை (ஆண் நத்தை), நாகாகிய இளைய சங்குடனே பகற்காலத்தே மணம் கூட்டுவிக்கும் நீர் விளங்கும் கழனியுடைய நாடு” எனும் பொருள்தருகின்ற புறப்பாட்டு அடிகளோடு நாம் ஒப்பிடலாம்.

    புழற்கால் ஆம்பல் அகலடை நீழற்
    கதிர்க்கோட்டு நந்தின் சுரிமுக ஏற்றை
    நாகிள வளையொடு பகல்மணம் புகூஉம்
    நீர்திகழ் கழனி நாடு
    (புறம்: 266 – பெருங்குன்றூர் கிழார்)

    சூர்ப்பனகையின் சொற்களால் சினமுற்ற இராமன், ”நேரிய வழியில் போர் புரியாமல் மாயப்போர் செய்யும் அரக்கர்களை அழித்தொழிக்கவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்; விரைந்து இங்கிருந்து ஓடிப்போய் விடு!” என்றான்.

    அப்போதும் அவள் விடாமல் தன்னை இராமன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தவே, ”இவளைக் கொல்லுதலே இவளால் விளையும் தொல்லைகள் தீர ஒரே வழி” என்றான் இலக்குவன். இராமனும் அதனை ஆமோதித்து, ”இவள் இங்கிருந்து அகலவில்லையானால் அதைத்தான் செய்யவேண்டும்!” என்றான்.

    இனியும் இவர்களைத் தன் வழிக்குக் கொண்டுவர இயலாது என்றுணர்ந்த சூர்ப்பனகை, ”உங்களைக் கொல்லக் கூற்றுவனாம் கரனை அழைத்துக் கொண்டு வருகின்றேன்” என்று கறுவிக்கொண்டு அங்கிருந்து அகன்றாள்.

    குருதிவழிய அலங்கோலமாய் வந்துநின்ற சூர்ப்பனகையைக் கண்டு அவளுடைய சோதரன் முறையினனான கரன் நிகழ்ந்ததை வினவ,
    ”வில்லும் அம்பும் ஏந்திய மன்மதனை ஒத்த உருவத்தினரும், தயரதன் புதல்வர்களுமான இரு மானுடர் நம் கானகத்துக்கு அரக்கர்களை அழிக்க வந்துள்ளனர்; உரைப்பருங் காட்சியளாகிய பேரழகுப் பெண்ணொருத்தியும் அவர்களுடன் உள்ளாள். அவளை அண்ணன் இராவணனுக்காக நான் கொண்டுபோக எத்தனித்தபோது அவர்கள் என் மூக்கினைத் துண்டம் ஆக்கினர்” என்று மெய் பாதி பொய் மீதியாக நிகழ்ந்தவற்றைச் சொல்லிமுடித்தாள் சூர்ப்பனகை.

    கண்டு நோக்கரும் காரிகையாள் தனைக்
    கொண்டு போவன் இலங்கையர் கோக்கு எனா
    விண்டு மேல் விழுந்தேனை வெகுண்டு அவர்
    துண்டம் ஆக்கினர் மூக்கு எனச் சொல்லினாள்.
    (கம்ப: கரன்வதைப் படலம் – 2978)

    அதுகேட்டு, இராம இலக்குவரின் கதைமுடிக்கச் சினந்தெழுந்தான் கரன்!

    கரன் ’பொருக்’கென்று போருக்கெழுந்ததைக் கண்ட அவனுடைய படைத்தலைவர்கள் பதினாலு பேரும் மானுடர்களை அழித்தொழிக்கும் நற்பணியைத் தங்களுக்குத் தருமாறு அவனை வேண்ட, அதனை ஏற்றுக்கொண்ட கரன் அவ்வீரர்களைப் போருக்கு அனுப்பினான்.

    ஆனால் போரில் அவர்கள் அனைவரையும் இராமன் பருந்துகட்கு விருந்தாக்கிவிட, அதனையறிந்த கரன் தன் படைகள் அனைத்தையும் திரட்டிக்கொண்டு தானே போருக்குப் புறப்பட்டான்.

    இராமனைக் கரனுக்கு அடையாளம் காட்டினாள் சூர்ப்பனகை. அப்போது கரனுடன் வந்திருந்த அகம்பனன் என்னும் கல்விவல்லானாகிய அரக்க வீரன், சூரியனைப் பரிவேடம் சூழ்தல், அரக்கர் கொடிமீது காக்கைகள் சண்டையிட்டு நிலத்தில் வீழ்ந்து புரளுதல் முதலிய தீ நிமித்தங்கள் தோன்றுவதைக் கண்டு அது குறித்துக் கரனிடம் தெரிவித்து, இராமனை எளிதில் வெல்லக்கூடிய மானுடன் என்று எண்ணாதே என எச்சரித்தான்.

    அதுகேட்டு உலகம் நடுங்கும்படி நகைத்த கரன், ”தேவர்களைத் தேய்த்து உருத்தெரியாமல் அரைத்த அம்மிக்கல் போன்று விளங்குகின்ற என் எழிலார் தோள்கள், போரை வேண்டிப் பூரித்துப் பெருத்துள்ளன! இவை மானிடர்க்கு எளிதில் தோற்றுவிடக்கூடியவை என்றா கூறுகின்றாய்? ஆகா! நம் வீரம் மிக நன்று!” என்றான் ஏளனத்தோடு.

    …நன்று நம் சேவகம்
         தேவரைத் தேய
    அரைத்த அம்மி ஆம் அலங்கு எழில்
         தோள் அமர் வேண்டி
    இரைத்து வீங்குவ மானிடற்கு
         எளியவோ என்றான். (கம்ப: கரன்வதைப் படலம் – 3045)

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

     

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 101 (சென்றடி)

    சேக்கிழார் பாடல் நயம் – 101 (சென்றடி)

    திருச்சி  புலவர் இராமமூர்த்தி

    சென்றடி  வணங்கி  நின்று  ‘’செய்தவ  வேடங்   கொண்டு
    வென்றவற்   கிடையூ   றின்றி  விட்டனன் ‘’ என்று  கூற ,
    ‘’இன்றெனக்  கையன்  செய்த தியார்   செய்ய  வல்லர்’’ என்று
    நின்றவன்  தன்னை  நோக்கி   நிறைபெருங்   கருணை   கூர்ந்தார்!

    பொருள்

    சென்று அரசரை அடிவணங்கி நின்று கொண்டு, “செய்த தவவேடங் கொண்டதனாலே வென்றவனைக்  காப்பாற்றிக்   கட்டளைப் படி கொண்டுபோய் விட்டனன்“ என்று (தத்தன்) சொல்ல, “இன்று எனக்கு ஐயனாகிய நீ செய்ததுபோல யாவர் செய்யவல்லவர்?“ என்று (அவனுக்கு நன்றி கூறுமுகத்தால) நன்மொழி கூறி, (வணங்கி) நின்றானாகிய அவனை நோக்கி, நிறைந்த பெருங்கருணை கூர்ந்தார் (அரசர்).

    விளக்கம்

    செய்தவ வேடத்தான் , என்ற தொடர் , இயல்பாகத்  திருநீறு  அணியாமல் வஞ்சனையாகச்  செய்து கொண்ட  வேடம்  என்பதையும் , சிவபக்தி மேலிட்ட நாயனாரைப் பொய்தவ வேடத்தினை துணையாகப் போர்த்திக்கொண்டு வென்றவனாகத் தன்னை வியந்து கொண்டவன் முத்தனாதன். பசுத்தோல் போர்த்த  நரி  என்று கருதலாம்; செய்தவ வேடங்கொண்டு வென்றவன் என்ற தொடர், முத்தநாதன் படைகொண்டு  பகைத்திறத்தால்  வெல்ல இயலாமல் , சூழ்ச்சியால் வெல்ல எண்ணி, அவ்வாறே  தான்  நினைந்தசெயலைச்செய்து, வென்றுவிட்டதாகக் கருதிய அவன், உண்மையில்  அரசன்கட்டளையால் அறிந்துகொண்டதைத் தத்தன் இங்கே குறிப்பிட்டான் என்ற பொருள்கொண்டது. அதனால்  வேடத்தால் கருதியது முடித்த முத்தநாதனை  அவ்வேடத்தால் தப்பிப்போக உதவியதாகத் தத்தன் கருதியதால் அரசரிடமும் வென்றவன் என்ற சொல்லையே கூறினான் என்ற   பொருளையும்   குறித்தது.

    இன்று எனக்கு  ஐயன்  செய்தது  யார் செய்ய வல்லார் ?- என்ற தொடர்    

    இன்று – எனக்கு – ஐயன் – செய்தது யார் – செய வல்லார்?

    இதுபோழ்து அரசர் கூறிய இந்த நன்மொழியில் ஒவ்வொரு சொல்லும் மிகப்பொருத்தமும் பொருளாழமும் உடைமை குறித்தது!. இன்று எனக்கு – நான் வன்மையனாய் அரசியலில் வீற்றிருக்கும் போது அச்சம் – தன்னலம் முதலிய பல காரணங்களால் யாவரும் என் மொழிவழி நிற்பர்; நான் வலியிழந்து குருதி சோர வீழ்ந்து சிறிது போதில் ஆவியும் சோர நின்ற இன்று இச்சமயத்தில் என் மொழிவழி நிற்றல் அரிது; ஐயன் பகைவன் என்று வாளால் எறியலுற்ற உன் கருத்துக்கு மாறான இப்பணியை இன்று சொற்கடவாது இயற்றலினால் நீ பெரியனாயினை; ஐயன் – முன்னிலை குறித்த படர்க்கைச் சொல். பெருமையும் அருமையுங் குறித்தது; தாதனாகிய தத்தனை ஐயன் – என்றது அவன் தம்பாற் செய்து நிறை வேற்றின கடமையின் நன்மைக்காகவும், வேடம் போற்றிய முறையைக் கடைபோகக் காத்த வுதவிக்காகவும் நன்றி பாராட்டிய அருமைப்பாடும் குறித்தது; செய்தது – (சிலர் செய்வேன் என்று சொல்லுவர்; ஆயின் செய்யார்;) நீ சொல்லியபடியே செய்து முடித்தனை; யார்செய வல்லார்? என்ற வினா எதிர்மறை குறித்தது. நீயே செய்ய வல்லாய் என்ற உடன்பாட்டினும், வேறு எவரும் செய்கலார் எனும் எதிர்மறைக்கூற்று உறுதிப்பாடுடையது; யார் வல்லார்? என்ற வினா அதனினும் மிகவும் உறுதி உணர்த்தும் வழக்கு.

    இங்கே  ஷேக்ஸ்பியரின்,  ‘’அந்தோனியும்  கிளியோபாத்ராவும்’’ என்ற நாடகத்தில் போர்க்களத்தில்  தோற்று விடுவோம் என்ற எண்ணத்தில் அந்தோனி  தன் மெய்க்காவலன்  ஈராஸிடம், ‘’அந்நியர் கைவாளால்  சாவதை விடத்  தன்  நாட்டு வீரனால்  கொல்லப் படுவதே நன்று! ஆதலால் ஈராஸ்,   நீ    உடனே வாளை உருவி, என்னைக் கொன்று விடு!’’ என்று ஆணை இடுகிறான். தயங்கிய  ஈராஸ் ஒரு முடிவுடன்  தன்  வாளை  எடுத்து , ‘’என் அரசனின் இறப்பை எப்படித் தாங்குவேன்!’’ என்று மனத்துள் எண்ணி இதோ கொல்கிறேன்! என்று தன்னையே  மாய்த்துக் கொள்கிறான். அந்தோனி  அவன் வீழ்வதைக் கண்டு,  ‘’ஆ!  என்னினும் மும்மடங்கு நேர்மை கொண்ட வீரனே! நீ எனக்கு அறிவுறுத்தும் ஆசான் ஆகி விட்டாய்!’’  என்று போற்றுகிறான் !

    ‘’EROS

    Farewell, great chief. Shall I strike now?

    MARK ANTONY

    Now, Eros.

    EROS

    Why, there then: thus I do escape the sorrow

    Of Antony’s death.

    Kills himself

    MARK ANTONY

    Thrice-nobler than myself!
    Thou teachest me, O valiant Eros!’’

    என்று  போற்றும் உணர்ச்சிகரமான காட்சி,  நம்  நினைவுக்கு வருகிறது!

    என்று – என்று தம் திருவாக்கினாலே அருண்மொழி கூறி; நோக்கி – கண்ணினாலே அருட்பார்வை செய்து; நிறை பெருங் கருணை கூர்ந்தார் – தம்  திருவுள்ள நிறைந்த பெரிய தண்ணருளை அவனிடத்துச் செய்தார்.  இவைமுறையே மொழி, மெய், மனம் என்னும் மூன்று கரணங்களாலும் தத்தனை நாயனார் ஆசீர்வதித்து அருளிய தன்மை குறித்தன. தத்தன் பெற்றது பெரும் பேறன்றோ?

    Share
  • மீள்பயன்பாடு – சுதா மாதவன் நேர்காணல்

    மீள்பயன்பாடு – சுதா மாதவன் நேர்காணல்

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    அண்மையில் மீள்பயன்பாடு குறித்த என் தாயாரின் நேர்காணலை வெளியிட்டிருந்தேன். அதைக் கண்ணுற்ற திருமதி சுதா மாதவன், தம் தாயாரும் இப்படிப் பல உத்திகளைப் பின்பற்றியதாகக் கூறினார். எந்தெந்தப் பொருள்களை எப்படியெல்லாம் மீண்டும் பயன்படுத்தலாம்? என்று தமது வாழ்க்கையிலிருந்தே சில எடுத்துக்காட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தப் பயனுள்ள உரையாடலைக் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • கொல்லாமை (சிறுகதை)

    கொல்லாமை (சிறுகதை)

    வசுராஜ்

    இன்று பல்வலி அதிகமாக இருந்ததால் பல் மருத்துவரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருந்தேன்.

    கொரானா பயத்தால் வெளியே செல்ல பயந்து ஒத்திப் போட்டதால் பல்வலி அதிகமாகி இன்றுபோய்த் தான் ஆக வேண்டும் என்ற நிலையில் காலை 11 மணிக்கு கிளினிக் வர சொல்லி இருந்தார்கள்.

    என் கணவர்  மாஸ்க் போட்டுக்கொண்டு தயாராக நின்றார். நான் எளிமையான சமையல் செய்து மேசை மேல் வைத்து விட்டுக் கைப்பையுடன் கிளம்பினேன். வீட்டைப் பூட்டிக் கொண்டு வருவதற்குள் என் கணவர் காரைச் சரிபார்க்கக் கீழே போய்விட்டார். ரொம்ப நாளாக எடுக்காததால் பெட்ரோல் எல்லாம் இருக்க வேண்டுமே என நினைத்துக்கொண்டு கீழே இறங்கினால் எங்கள் காரைச் சுற்றி நாலைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள்.

    பதற்றத்துடன் பக்கத்தில் போனால் “கிட்டே போகாதே” இது என் கணவர்.

    எங்கள் குடியிருப்பில் என் தளத்திலேயே குடியிருக்கும் தோழியும் அவள் கணவரும் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். “என்ன ஆச்சு?” எனக் கேட்டேன். என்னோட பல் வேறு “சுருக் சுருக்” என வலித்தது.

    “உங்க காருக்கு அடியில ஒரு பாம்பு பார்த்தோம்” என்றாள்.

    பயத்தில் நான் பத்தடி தள்ளிப் போனேன். அதற்குள் செக்யூரிட்டி கம்புடன் வந்துவிட்டார்.

    அந்தத் தோழி அவரைப் பார்த்து “பாம்பையெல்லாம் அடிக்கக் கூடாது. உடனே “Forest Department”க்கு ஃபோன் பண்ணுங்கள்” என்றார். எனக்குப் பதற்றமாய் இருந்தது.

    இவங்க எப்ப ஃபோன் பண்ணி, அவங்க வர வரைக்கும் அது அங்கேயே உட்கார்ந்திருக்குமா? ஏதாவது பொந்துக்குள் போய்விட்டால் கண்டுபிடிப்பது கஷ்டம். குழந்தைகள் எல்லாம் இங்கே தான் விளையாடுகிறார்கள். பெரியவர்கள் எல்லாம் இங்கே தான் காலையும் மாலையும் நடக்கிறார்கள். விஷமுள்ள பாம்பாய் இருந்தால் என்ன செய்வது என யோசனையில் மூழ்கினேன்.

    பல் வலி கூட மறந்து விட்டது.

    செக்யூரிட்டி பரிதாபமாய்ப் பார்த்தார். பாவம் அவர் தானே ராத்திரி எல்லாம் சுற்றிச் சுற்றி வருகிறார்!

    மெதுவாக அந்தத் தோழியைப் பார்த்து “போன தடவை ஃபோன் பண்ணினோம். அவங்க வந்து பார்க்கும் போது ஒண்ணும் கண்ணுல மாட்ட மாட்டேங்குது. அப்புறம் நாங்க ராத்திரி சுற்றி வரும் போது கண்ணுல படுது. சில நேரம் அடிச்சுடுவோம். பல தடவை தப்பிச்சுடுது” என்றார்.

    அதற்கு அந்தப் பெண் “நீங்களே பாம்பு பிடிக்கப் பழகிக் கொள்ளுங்கள். பிடித்து வைத்திருந்து Forest Department ஆள் வந்ததும் அவங்க கிட்ட கொடுத்து விடுங்கள்” என்றார்.

    எனக்கு எங்கள் செக்யூரிட்டியின் மைன்ட் வாய்ஸ் கேட்டது. “நீங்க கொடுக்கற சம்பளத்துக்கு 12 மணி நேரம் காவல் காக்கறேன். இதுல பாம்பு பிடிக்க வேற கத்துக்கணுமா?”

    அதற்குள் அது மெதுவாக வெளியே வந்தது.

    இதற்குள் இன்னும் நாலைந்து பேர் கூடி விட்டனர். அதில் ஒருவர் “இதைப் பார்த்தா விஷமுள்ளது மாதிரி தெரியுது, அடிச்சுடுவோம்” என்றார்.

    அந்தத் தோழி விடுவதாயில்லை. “இல்லை, நான் ஃபோன் பண்றேன், கொல்லாதீங்க!” என்றார்.

    நான் பிரமிப்பாய் அவரைப் பார்த்தேன். ஜீவகாருண்யம் என்பது இது தானோ, நானும் இரக்கப்படுபவள் தான் என்றாலும் பாம்பை வைத்துப் பாதுகாக்கச் சொல்லும் அளவுக்கு அவ்வளவு இரக்கம் எல்லாம் என்னிடம் கிடையாது.

    இதற்குள் அப்போது தான் வந்த ஒருவர், பட்டென அதன் தலையில் அடித்துவிட்டார். உடனே இன்னும் 2 பேர் அடித்து விட்டார்கள். எனக்குக் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு வந்தது. திரும்பப் பல் வலிக்க ஆரம்பித்து விட்டது. கடவுளே அந்தப் பாம்புக்கு மோட்சத்தைக் கொடு என வேண்டிக் கொண்டு கிளம்பிவிட்டேன். அந்தத் தோழி செக்யூரிட்டியைத் திட்டிக் கொண்டிருந்தார்.

    மருத்துவரிடம் போய் விட்டு வந்து விட்டோம்.

    மாலை அந்தத் தோழி வீடு பூட்டி இருந்ததைப் பார்த்து விட்டு அவருக்கு ஆறுதலாக 2 வார்த்தை பேசலாமென ஃபோன் பண்ணினேன்.

    அவர்களிடம் “உங்களுக்குத் தான் எவ்வளவு இளகிய மனசு. வருத்தப் படாதீர்கள். இதுக்கு எல்லோரும் சேர்ந்து பேசி ஒரு முடிவு பண்ணலாம். ஆமாம், வீடு பூட்டி இருக்கே எங்கே போயிருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

    “ஆமாம் மேடம், அவர்கள் பாம்பை அடித்ததை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை” என்று சொல்லி விட்டு உடன் உற்சாகமாக “இங்கே தாம்பரத்துக்கு அம்மா வீட்டுக்கு வந்திருக்கேன். இன்னிக்கு அம்மா எனக்காக ஸ்பெஷல் சமையல் பண்ணி இருந்தாங்க. அதை சாப்பிட்டப்புறம் செம குஷி ஆயிட்டேன்” என்றார்.

    “அப்படியா? என்ன சமையல்”னு அப்பாவியாய்க் கேட்டேன்.

    “இந்தக் கொரானா நேரத்துல வெளில வாங்க வேண்டாம்னு வீட்டுல வளர்த்த நாட்டுக் கோழி குழம்பு, மட்டன் (அதுவும் வீட்டுல வளர்த்தது தான்) எல்லாம் செஞ்சுருந்தாங்க. செம கட்டு கட்டிட்டேன்”என்றாள்.

    எனக்குத் தலை சுற்றியது.

    இது தான் ஜீவகாருண்யமா? “ஒண்ணுமே புரியல உலகத்திலே”. சந்திரபாபு பாட்டு தான் நினைவுக்கு வந்தது.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 17 (தமர்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 17 (தமர்)

    ச.கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    அகஇலக்கியச் சிறுபாத்திரங்களுள் சுற்றம் எனப் பொருள்படும் தமர் பற்றியும்; அவர் பேசியமை  பற்றியும் பிற பாத்திரங்கள் பேசுகின்றன. தமர் நேரடியாகப் பாடல் காட்சியில் இடம் பெறுவதில்லை. அளவில் பெரிய தொகைப்பாத்திரமாகிய தமர் சூழலுக்கு ஏற்ப அகஇலக்கியத்தின் ஏதேனும் ஒரு குழுப்பாத்திரத்தையோ அல்லது சில பல குழுப்பாத்திரங்களையோ தன்னுள் அடக்கும் தன்மை  உடையதாக உள்ளது. யாருடைய கூற்று; யாரை நோக்கிய கூற்று என்பதை அடியொட்டி ‘நுமர்’ என்றோ ‘எமர்’ என்றோ வடிவமாற்றம் பெறுவது மற்றோரு தன்மை ஆகும்.

    சுற்றம் எனப்  பொருள்படும் தமர்

    தலைவனிடம் இரவுக்குறி நேரும் தோழி அதிலிருக்கும்  வசதி பற்றிப் பேசும்போது;

    “தமர் தம் அறியாச் சேரியும் உடைத்தே” (நற்.- 331)

    என்கிறாள். சுற்றத்தார் கூட ஒருவரை ஒருவர் அடையாளம் காண இயலாத சேரியில் இரவில் சந்தித்தால் எந்த ஒரு இடையூறும் நேராது என்று குறிப்பாகச் சொல்கிறாள். புறஇலக்கியத்திலும் தமர் சுற்றத்தைக் குறிக்கும் உறவுமுறைச்  சொல்லாகப் பயின்று வந்துள்ளது.

    “தமர்தம் அறியா அமர் மயங்கு அழுவம்” (புறம்.- 294)

    எனப் போர்க்களத்தின் தன்மை எடுத்துரைக்கப்படுகிறது. ‘இவர் நம்  சுற்றத்தார்’ என்று அடையாளம் காண இயலாமல் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளும் இடம் என்பதே பொருளாகும். அச்சுற்றம் ஒவ்வொரு சூழலிலும்  வெவ்வேறு உறுப்பினர்களைக் கொண்டு இலங்குவதை அகஇலக்கியம் முழுவதிலும் காண இயல்கிறது.

    நுமர் ஆகும் தமர்

    காதலைப் புரிந்து கொள்ளும் பருவம் எய்தாத பெண்மகள்; மனதில் வேட்கையைத் தூண்டும் பேரழகுடன் அலைவது பற்றித் தருக்கித் தன்னுள் சொல்லி இன்புறுபவன்;

    “நீயும் தவறிலை நின்னைப் புறங்கடைப்
    போதரவிட்ட நுமரும் தவறிலர்” (கலி.- 56)

    என்று படைத்த இறைவனைத் தவறுடையவனாகப் பழிசுமத்தும் போது; அவளது தமரை ‘நுமர்’ என்கிறான். இது போல் தலைவியின் சுற்றத்தை ‘நுமர்’  என்று அழைக்கும் பிற பாடல்களும் உள (கலி.- 58, 112).

    எமர் ஆகும் தமர்

    தமர் தொழில் நிமித்தம் சென்றுவிடுவர் என்று குறியிடமும் நேரமும் பற்றிப் பேசிக் குறிப்பாக வரைவு வற்புறுத்தும் போது;

    “எமரும் வேட்டம் புக்கனர் அதனால்” (நற்.- 67)

    என்ற தோழியின் பேச்சில் தலைவியின் தமர் ‘எமர்’ ஆகின்றனர். தலைவனும் தலைவியும் தத்தம் சுற்றத்தை ‘ஏமர்’ என்று அழைக்கும் பிற பாடல்களும் உள (கலி.- 105,110, 112& 114)

    தமரின் பேச்சு

    மிகவும் செல்லமாக வளர்ந்த தலைவி; எந்த அளவுக்கு எனின் அந்தச் செல்வமிகுந்த பெருமனையில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த கிளையினர் அனைவரும் அவளைக் கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தனர். அவர்கள் கொஞ்சியதையே தோழி பாராட்டு என்கிறாள்.

    “தாயுடை நெடுநகர் தமர் பாராட்ட” (அகம்.- 310)

    அமைந்த வளர்ப்பு அவளிடத்தில் மடமையை மிகுவித்துள்ளது என்று தலைவனிடம் அவளது போக்கிற்கு விளக்கம் அளிக்கிறாள் தோழி. ‘தலைவிக்கு உன்னிடத்தில் மிகுந்த மயக்கம் உள்ளதெனினும் அச்சமும் நாணமும் விஞ்சியுள்ளது’ என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறாள். உமணரின் உப்புவண்டியோடு வந்த பேடை அஞ்சியோடும்படி இடிபோல ஒலித்துக் கடலலை எழுந்து சிதறி விழுகிறது என்ற இடப்பின்புலம் தோழி வெளிப்படையாகச் சொல்லாத நாணத்தின் காரணத்தையும் அச்சத்தையும் தலைவனுக்கு மட்டுமின்றி நமக்கும் தெளிவிக்கின்றன. இப்பாடல் தமரின் பாராட்டைக் குறிப்பிடுவதன் மூலம் தமரின் பேச்சைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறது.

    “ஆர்வுற்று எமர் கொடை நேர்ந்தார்” (கலி.- 104)

    என்று சுற்றத்தார் மகட்கொடைக்குச் சம்மதித்ததைச் சொல்லும் போதும் அவரது பேச்சு குறிப்பாகவே புலப்படுகிறது.

    தலைவன் பாணனின் தமராதல்

    குறித்த காலத்தில் திரும்பாத தலைவனை எண்ணி ஆற்றி இருக்கும் தோழி பாணனிடம் பேசும்போது;

    “கைவல் சீறியாழ் பாண நுமரே
    செய்த பருவம் வந்து நின்றதுவே” (ஐங்.- 472)

    என்று தலைவன் தனக்கு ஏதிலன் என்பது போலவும் அவனைப் பாணனின் சுற்றம் என்பது போலவும் பேசுகிறாள்.

    பெற்றோர் தலைவியின் தமராதல்

    நடக்கவிருக்கும் திருமணம் பற்றிய எதிர்பார்ப்புடன் பேசும் தலைவன்; தன் காதலியிடம் அவளது பெற்றோரை ‘நுமர்’ என்று சுட்டி; அவர்கள் மகளின் கையைப் பிடித்துத் தன்னிடம் ஒப்படைப்பதை;

    “நேரிறை முன்கை பற்றி நுமர்தர” (குறிஞ்சிப்.- அடி- 231)

    இல்லறம் தொடங்கலாம் என்று கூற; அதைத் தோழி செவிலிக்கு எடுத்துச் சொல்கிறாள். இன்றும் பல சமூகங்களின் திருமணநிகழ்ச்சிகளில் ‘கைப்பிடித்துக் கொடுத்தல்’ எனும் சடங்கு நடைமுறையில் இருப்பது நினைந்து இன்புறத்தக்கது. இச்சடங்கு ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தது என்பதைத் தொகைநூற் தரவு காட்டுகின்றது.

    முதலிரவு பற்றிக் கற்புக் காலத்தில்  ஊடலின் போது சிந்தித்துப் பார்க்கும் தலைவன்;

    “தமர் நமக்கு ஈந்த தலைநாள் இரவின்” (அகம்.- 136)

    எனத் தன் நெஞ்சிற்குச் சொல்லும் போதும் பெற்றோரே தமர் எனச்  சுட்டப்படுகின்றனர்.

    குடும்பத்தார் தலைவியின் தமராதல்

    தலைவி பற்றித் தன் நெஞ்சோடு பேசிக் கொள்ளும் தலைவன் ‘அவள் இரவுக்குறியில் தன்னோடு இருக்கும் போது தனக்கு ஒத்தவளாகவும்; விடிந்த பிறகு அவளது குடும்பத்தாரோடு ஒத்தவளாகவும்; ஆக இருவேறு நடத்தையை உடைய கள்வியாகத் திறம்பட நடந்து கொள்கிறாள்’ என்று வியக்கும்போது;

    “தமர் ஓர்அன்னள் வைகறையானே”  (குறுந்.- 312)

    எனக் குடும்பத்தாரை அவளது தமர் என்கிறான். இக்குடும்பத்துள் கூட்டுக் குடும்ப உறுப்பினர்களாய்த்  தலைவியின் பெற்றோர், உடன்பிறப்புகள்,  பங்காளிகள், பெற்றோரைப் பெற்ற  ஆயி ஐயன் அனைவரும் அடங்குவர்.

    ஆயர் குலப்பெண் மோர் விற்றுக்கொண்டு வருகிறாள். அவளிடம் மோர் வாங்கும் பெண்கள் ஒவ்வொருவரும் தம் மனையின் வாயிலை அடைத்து நின்றுகொண்டு; தம் கணவர் அவள் பின்னே தொடர்ந்து செல்லாதவாறு காக்கின்றமையை; அவள் மேல் மையல் கொண்ட தலைவன் காண்கிறான். அவளின் மயிர்முடியில் அவளது தமர் கட்டிச் சூட்டிய கண்ணி அழகூட்டுகிறது.

    “பண்ணித் தமர்தந்து ஒருபுறம் தைஇய” (கலி.- 109)

    அக்கண்ணியைச் சுமக்க மாட்டாதவள் போல மோர்க்குடத்தைச்  சுமந்து கொண்டு ஒயிலாக வரும் தோற்றம் கண்டு பெண்களே மருளுகின்றனர். ‘விரைவில் உன் கிளையோடும் சென்று சேர்க’ என்று சொல்லி அனுப்புகின்றனர். இங்கே ‘தமர்’ அவளது கிளையுடன் கூடிய குடும்பத்தைச் சுட்டுகிறது என்பதைப் பாடலின் பிற்பகுதி மூலம் அறிகிறோம்.

    மடலேறியேனும் தான் விரும்பிய பெண்ணை மணக்க முடிவு செய்த   தலைவனுக்கு;

    “…. …. வழுதிக்கு அருந்திறை
    போலக் கொடுத்தார் தமர்” (கலி.- 141)

    என்று அச்சத்துடன் பெண் கொடுத்தவர் பெற்றோரும் கிளையும் சேர்ந்த தமர் எனலாம். ஒரு ஆண் ஊரார் முன்னர் அறிவித்து; ஒரு பெண்ணை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டிக் கேட்டுவிட்டால்; அதன் பின்னர் அந்தப் பெண்ணின் இல்லற வாழ்க்கை நலம் கேள்விக்குறியாக அக்காலத்தில் இருந்தமை இதனால் தெளிவாகிறது.

    தலைவியின் நட்பு வீட்டில் உள்ளவர்க்குத் தெரிந்தக்கால் அவளைக் குடும்பத்தினர் கண்காணிப்பது இயற்கையே. அத்தருணத்தில்;

    “தமரின் தீராள் என்மோ” (குறுந்.- 392)

    என்று தும்பியிடம் பேசுவதுபோல் சிறைப்புறம் நின்ற தலைவனிடம் தெரிவிக்கிறாள் தோழி. இங்கும் தமர் ஒரே பெருமனையில் வாழும் கிளை  கூடியிருக்கும் குடும்பத்தையே சுட்டுகிறது.

    பெற்றோரும் உடன்பிறப்புகளும் தமராதல் 

    தமரில் பல திறத்தவர் அடங்குவர். அவர்களுள் இரத்த சம்பந்தமுள்ள உறவுடையவரும் இருப்பர்; அப்படி இல்லாதவரும் தமராதல் உண்டு என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்துவதற்கு ஏற்ப;

    “பிறந்த தமரிற் பெயர்ந்து ஒரு பேதை
    பிறங்கல் இடையிடை புக்குப் பிறழ்ந்து …
    செல்குவள் ஆங்கு தமர் காணாமை” (பரி.- 19)

    எனத் திருப்பரங்குன்றின் மேல் விழாக்காலத்தில் ஏறித் தொலைந்து நின்ற பேதைப்பெண் பற்றி வருணிக்கிறது ஒரு பாடல். அவள் ‘பிறந்த தமரை’ விட்டுப் பிரிந்தாள் என்பதால் குருதித் தொடர்புடைய பெற்றோரும் உடன்பிறப்புகளும் மட்டுமே இங்கு தமர் என்று குறிப்பிடப்படுகின்றனர். இப்பாடலின் புனைவில் திருவிழாவில் தொலைந்து போன குழந்தையின் அவசமும்  செயலும்  மிக இயல்பாக வருணிக்கப் பட்டுள்ளது.

    தோழியர் தலைவியின் தமராதல்

    தலைவனோடு நட்பு பாராட்டிப் பின்னர் தயங்கும் தலைவியிடம்;

    “நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
    அறிவறிந்து அளவல் வேண்டும்” (நற்.- 32)

    என்று அறிவுரைக்கிறாள் தோழி. ‘முன்பு நட்டு இப்போது விலகுதல் தகாது. என் சொற்கள் உனக்கு ஏற்புடைத்தாகத் தோன்றவில்லை எனில் நீயே யோசித்துப் பார்; அத்துடன் பிற தோழியரோடு ஆராய்ந்து அவனிடம் அளவளாவுவாயாக’ என்று வழிகாட்டும் தோழி கூறும் ‘நுமர்’ தோழியர் ஆவர். புராணச்செய்திகளை மிகுதியாகக் கொண்ட பரிபாடல் வள்ளியின் தோழியராகும்  கொடிச்சியரை ‘வள்ளி தமர்’ என்கிறது (பா.- 9- அடி- 67).

    மங்கலப் பெண்டிர் தலைவியின் தமராதல்

    திருமணம் என்னும் மங்கல நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுள் சுமங்கலிகளாகிய; பெற்றவள்,  கிளையுள் இருக்கும் பெண்டிர், கிளையல்லாத சொந்தத்தில் இருக்கும் பெண்டிர், உறவல்லாத ஊர்ப் பெண்டிர் அனைவரும் அடங்கும் வாய்ப்புளது. அவர்கள் மணப்பெண்ணை வாழ்த்தியமை;

    “பேரில் கிழத்தி ஆகெனத் தமர்தர” (அகம்.- 86)

    என்ற தலைவன் பேச்சில் இடம்பெறக் காண்கிறோம். தோழியிடம் பண்டு நடந்ததை நினைவுகூரும் தலைவன்; ‘மக்களைப் பெற்ற மகராசிகள்’ என்ற இக்கால வழக்கை ஒட்டி; பிள்ளைப்  பேற்றினால் தம் வயிற்றில் சுருக்கக் குறிகளைப் (stretch marks) பெற்ற வாழ்வரசிகளைச் சுட்டி அமைகிறான். இன்றும் திருமண நிகழ்ச்சிகளில் இத்தனை வகைப்பட்ட பெண்களும் முதலிடம் பெறுவதைத் தமிழ்ச் சமூகத்தில் காண இயல்கிறது. இப்பாடலில் மணப்பெண்ணின் தமர் மங்கலப் பெண்டிர் ஆகின்றனர்.

    கிளையும் கிளையல்லா உறவினரும் தலைவியின் தமராதல்

    மகட்போக்கிய செவிலி தன் குறைபாட்டை வெளிப்படையாகக் கூறி அரற்றுகிறாள்.  தலைவியின் மனநிலையை அறிந்து கொள்ளத் தனக்குத் தெரியவில்லை என்று புலம்பித் தவிக்கிறாள். கூந்தலை ஒப்பனை செய்து கொள்ளச் சொன்ன தன்னைப் புலந்த தலைவியின் உட்கிடக்கையைப் புரிந்து கொள்ளத் தெரியாத அவலத்தைக் காரியம் கைமீறிய பிறகு எண்ணி உளம் வருந்துகிறாள்.

    “தமர் மணன் அயரவும் ஒல்லாள்” (அகம்.- 369)

    எனத் திருமண ஏற்பாடு நடந்த பின்னரும்; அவள் மனம் ஒருப்படாமல்  தான் விரும்பிய தலைவனோடு சென்று விட்டமை குறித்துப் பேசும் அவள்; தன்னைத் தானே நொந்து கொள்கிறாளே அன்றி மகளைக் குறை கூறவில்லை. சுற்றத்தார் செல்வ மனையைப் புதுப்பித்து மணவிழா நடந்தேற ஆயத்தம் செய்தனர் என்பதால்; மணவினை தொடங்கி அது   நடந்தேறும் முன்னர் அவள் தலைவனுடன்  போய்விட்டாள் என்பது தெளிவாகிறது. அதனால் இங்கே ‘தமர்’ திருமணத்திற்கு முதலிலேயே வந்து சேரும் சொந்தபந்தம் அனைத்தையும் சேர்த்தே சுட்டுகிறது.

    தாயாதிகள் தலைவனின் தமராதல்

    ‘மணந்து கொள்வேன்; வாக்குத் தவற மாட்டேன்; அதுவரை தலைவியைப் பேணிப் பார்த்துக் கொள்வாயாக’ என்று கூறிய தலைவன் சொற்களை நம்பிக்கையுடன் ஏற்றுத் தொடர்கிறாள் தோழி. உலக்கைப்பாட்டில்  தலைவனின் குடிப்பெருமையைப் பாடிக்கொண்டே  குற்றும் பின்புலத்தைக் காட்சிப்படுத்துகிறாள். பின்னர் தொடர்ந்து மேலான ஒழுக்கம்  உடையவரின் சொல்லும் செயலும் நடைமுறைப் படுத்தப்படும் முறையை விளக்கிப் பேசும் போக்கு குடிச்சிறப்பைக் கூறுவதால்;

    “காஞ்சி நீழல் தமர்வளம் பாடி…….
    அறனும் பொருளும் வழாமை நாடித்
    தன் தகவுடைமை நோக்கி மற்று அதன்
    பின் ஆகும்மே முன்னியது முடித்தல்
    அனைய பெரியோர் ஒழுக்கம்” (அகம்.- 286)

    என்ற பாடற்பகுதியில் இடம்பெறும் தமர் ஒரு குடியின் தாயாதிகளைக் குறிக்கிறது என்பதே பொருந்துகிறது. தாயாதிகள் பல தலைமுறைகளைச் சேர்ந்த கிளையினராக ஒரே குடியின் வழிவந்தோராவர்.

    உற்றார், தமையர், கிளை, உறவினர் அனைவரும் தலைவியின் தமராதல்:

    காதலியை உடனழைத்துக் கொண்டு காட்டு வழியாகத் தன் ஊர் செல்லும் தலைவன் அவளை ஓய்வெடுக்கச் சொல்லும் போது;

    “அமர் வரின் அஞ்சேன் பெயர்குவென்
    நுமர்வரின் மறைகுவென் மாஅயோளே” (நற்.- 362)

    என்று வெளிப்படையாகத் தன்  மனத் தடுமாற்றத்தையும் நடுக்கத்தையும்  காட்டிப் பேசுங்கால்; தலைவியைத் தேடி வரும் அவளது சுற்றத்தாரை எண்ணி அஞ்சுவது வெளிப்படை. உடன்போகும் தலைவியைத் தேடி வரும் சுற்றத்தில் தமையர், கிளையோடு பிற உறவினர், ஊரார், இளையர், நண்பர் என எல்லோரும் அடங்குவர் என்பதே தலைவனின் அச்சத்திற்குரிய காரணம் ஆகிறது. தனியொருவனாக அவளை அழைத்துச் செல்லும்போது அவன் சண்டைக்கு அஞ்சவில்லை ஆயினும்; அவனது மனத்திண்மைக்குச் சவாலாக அமைவது தமரின் பெருங்கூட்டம் எனில் மிகையாகாது. இக்கருத்தை அரண் செய்யும் இன்னொரு சான்றுப்பாவும் உளது. அது கற்புக்கால   நிகழ்ச்சியாக அமைந்து நகை ஊட்டுகிறது. பிரிவை உணர்த்துகிறான் தலைவன்; அவன் செல்ல வேண்டிய காடு தலைவி கண்முன்னர் தோன்றி மயக்கத்தைத் தருகிறது. ஏனெனில் அவள் தலைவனோடு அதே காட்டுவழியில் வந்து தான் இல்லறத்தைத் தொடங்கினாள். அப்போது ஆறலைப்போரால் ஏற்பட்ட துன்பத்தைத் தலைவன் தனியொருவனாய் எதிர்கொண்டே  நீக்கிவிட்டான்; ஆனால் தலைவியின் தமர் தேடி வந்தபோது ஒளிந்து கொண்டான்.

    “அமரிடை உறுதர நீக்கி நீர்
    எமர் இடை உறுதர ஒளித்த காடே” (நற்.- 48)

    என்ற தலைவியின் மறுப்பில் தான் அதை மறக்க முடியாத காரணம் எதனால் என்பது குறிப்பாக இடம்பெற்றுச் சுவை கூட்டுகிறது.

    தாய்வீட்டார் மணம்முடிந்த பெண்ணின் தமராதல்

    பறவைக்கூட்டம் மரக்கொம்பில் இருந்து கொண்டு; விளையாடும் மகளிர் தம்மை அலைத்தமை பற்றி அவர்களது சுற்றத்தார்க்குக்  கூறுவன போல் பலகாலும் பல ஒலிகளை எழுப்பிய ஊரினை உடையவன் தலைவன் என்ற இடப்பின்புலத்தில் இடம்பெறும் தமர் தலைவியின் தாய்வீட்டார். ஏனெனில் தலைவனின் புறத்தொழுக்கம் பற்றிய பாடலில்

    “தமர்க்கு உரைப்பன போல் பல்குரல் பயிற்றும்”  (கலி.- 75)

    என்ற பறவைகளின் ஆரவாரம் பற்றிய வருணனை உள்ளுறுத்தி அமைவது; அன்றாடம் ஒரு பெண்ணைத் தேடும் தலைவனின் பரத்தமை தலைவியின் தமரது காதுகளைச் சேர்வதைத் தவிர்க்க இயலாது என்பதாம்.

    புகுந்த வீட்டார் தலைவியின் தமராதல்

    புறத்தொழுக்கத்தை நீட்டிக்கும் தலைவனை இல்லத்திற்கு மீட்டு வரவழைக்க எண்ணும் தோழியிடம் தலைவி ‘அது தேவையற்றது; என் துன்பம் எமர்க்குத் தெரியக் கூடாது; அது போதும்’ என்கிறாள்.

    “நோய்மலி வருத்தம் காணன்மார் எமரே” (நற்.- 64)

    என அவள் தன் துன்பத்தைக் குடும்பத்தாரிடம் மறைக்க நினைக்கிறாள். ‘எமர்’ என்று அவள் சுட்டுவது புகுந்த வீட்டாரையே ஆகும்.  இவ்விடத்தில் சிலப்பதிகாரக் கண்ணகி மதுரை சேர்ந்தவுடன் கோவலனிடம் பேசிய சொல்லும்  மனநிலையும் செயலும் ஒப்பு நோக்கத்தக்கன.

    ஊரார் தலைவியின் தமராதல்

    இரவுக்குறியில் துய்க்கும் தலைவனை வரைவிற்குப் பக்குவமாகத் தூண்டும் தோழி அவனிடம் ஊரிலுள்ள பரதவர் அனைவரும் வேட்டைக்குக் கடல்மேற் சென்று விட்டதைக் குறிப்பிட்டு; இரவில் அவன் தன் இருப்பிடத்திற்குத்  திரும்புவதில் உள்ள சிக்கல்களைக் கூறி ‘எங்கள் ஊரில் விருந்தினன் போல வந்து தங்கிச் செல் என்கிறாள்.

    “இன்று நீ இவணை ஆகி எம்மொடு
    தங்கின் எவனோ தெய்ய செங்கால்
    கொடுமுடி பரியப் போகிய
    கோட்சுறாக் குறித்த முன்பொடு
    வேட்டம் வாயாது எமர் வாரலரே” (நற்.- 215)

    ‘வளைத்து முடியிட்ட வலை கிழியும்படி இடர் செய்த சுறாவைக் கொல்லாமல் எம் ஊரார் யாரும் திரும்ப மாட்டார். ஆகையால் ஊருக்குள் வந்து தங்குவதில் உனக்குச் சிக்கல் எதுவுமில்லை’ என்று தோழி தலைவனுக்கு உறுதியளிப்பதால் அவள் கூறும் ‘எமர்’ ஊராரே. இதே போக்கில் மேலும் சில பாடல்கள் உள்ளன (அகம்.- 300; நற்.- 49)

    பரத்தையர் தலைவனின் தமராதல் 

    புறத்தொழுகிய பின் மனைவியைச் சேர நினைத்துக் கெஞ்சும் தலைவனிடம் தோழி பரத்தையரை அவனது தமர் என்கிறாள்.

    “அகலநீ துறத்தலின் அழுதுஓவா உண்கணேம்
    புதல்வனை மெய்தீண்டப் பொருந்துதல் இயைபவால்
    நினக்கொத்த நல்லாரை நெடுநகர்த் தந்துநின்
    தமர்பாடும் துணங்கையுள் அரவம்வந்து எடுப்புமே” (கலி.- 70)

    என்ற பாடலில்; நீண்ட காலமாகத் தலைவியைத் துரந்த தலைவனிடம் பேசும் தோழி; ‘புதல்வனை அணைத்துக் கொண்டு தூங்க முயன்ற தலைவியை அவனது பரத்தையர் பாடி ஆடிய துணங்கையின் ஆரவாரம் தூங்க விடவில்லை’ என்ற மனக்கசப்பின் வெளிப்பாடு இடம் பெற்றுள்ளது. அத் துன்பமிகு உரையில் பரத்தையரைத் தலைவனின் தமர் என்று சுட்டுகிறாள். அதுவும் அந்தப் பரத்தையர் தலைவனின் மனைக்கு நேரில் வந்து பாடி ஆடினர் என்னும் செய்தி அன்றைய சமூகப்பழக்கத்தைக் காட்சிப்படுத்துகிறது.

    ஏவலிளையர் தலைவனின் தமராதல் 

    போர் மேற்சென்ற தலைவன் மனைக்குத் திரும்புங்கால்; தன்னுடன் வந்து போரில் பங்கேற்றுத் துணைசெய்த இளையர்; தனக்கு முன்னர் சென்று மனையாளிடம் தன் வரவை உரைப்பின்; அவள் மகிழ்ச்சி அடைவாள் என்று பாகனிடம் கூறும் போது;

    “தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே” (அகம்.- 144)

    என்கிறான். (பார்க்க- அகஇலக்கியச்  சிறுபாத்திரம்- இளையர்) இங்கு தலைவனுக்கு அவனது ஏவலராகிய கூலிப்படையினரே தமர் ஆகின்றனர்.

    நண்பர் தமராதல்

    வென்ற வேந்தருக்குத் திறை செலுத்தி மன்னர் நண்பர்  ஆயினமை அகப்பாடல் தலைவனின் கூற்றாக அமைகிறது.

    “தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே” (அகம்.- 44)

    என்று வேந்தனுக்காக வினைமேற் சென்ற தலைவன் தன் மனைக்குத் திரும்பும் போது கூறுகிறான். இப்பாடலில் பெரும்பூட்சென்னி கணையன் என்ற மன்னனை வீழ்த்திக் கழுமலத்தைக் கைப்பற்றிய செய்தி உள்ளது. கணையன் திறைப்  பொருளைக் கொடுத்து சோழ வேந்தனின் நண்பன் ஆயினமையால் தமராயினான்

    கரும்பனூர் கிழானின் குறும்பல் குறும்பில் இருந்த இயந்திரப் படுபுழைக்குள் நண்பர் யாவராயினும் நுழையலாம் என்பதை;

    “தமரெனின் யாவரும் புகுப” (புறம்.- 177)

    என்றே புலவர் பாடியுள்ளார்.

    இனத்தார் தமராதல்

    ஆயர்குலப் பெண் தலைவனுடன் பேசும்போது;

    “ஆயர் எமரானால் ஆய்த்தியேம்  யாம்மிக” (கலி.- 108)

     என்று பேசுவதில் ‘எமர்’ ஆயர் இனத்தைக் குறிக்கிறது.

    “நல்லினத்து ஆயர் ஏமர்…
    புல்லினத்து ஆயனை நீ” (கலி- 113)

    என்று பசுக்கூட்டம் மேய்க்கும் ஆயரும்; ஆடு மேய்க்கும் ஆயரும் தொழில் அடிப்படையில் பிரித்துப்  பேசப்படினும் அப்பிரிவில் உயர்வு தாழ்வு கற்பிப்பதால் அங்கு சாதி வேறுபாடு தலை தூக்குவதைத் தலைமாந்தர் இடையே நிகழும் உரையாடல் காட்டுகிறது.

    “கோட்டினத்து ஆயர்மகனோடு யாம் பட்டதற்கு
    என்கண் எமரோ பொறுப்பர் பொறாதார்
    தம்கண் பொடிவது எவன்” (கலி.- 105)

    என்று தான் எருமைக்கூட்டம் மேய்க்கும் ஆய்மகனோடு கொண்ட நட்பைத் தனது சுற்றத்தார் ஏற்றுக்கொண்டாலும் விமர்சனம் செய்யும் பிறர் சொற்களைத் தான் கண்டுகொள்ளப் போவதில்லை என்று வாதிடும் தலைவியின் தாய் அவளைக் கண்களாலேயே கோல்கொண்டு புடைக்கிறாள். இப்படிக் குழப்பம் ஏற்படக் காரணம் இப்பாடல்கள் தோன்றிய காலத்தில் நிலவிய சாதி வேறுபாடு என்பதைப் புறப்பாடல்கள் நிறுவுகின்றன.

    “எமர்க்கும் பிறர்க்கும் யாவராயினும்
    கொடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்” (பதி.- 20)

    இமயவரம்பன் ஆவான் என்று புகழும் குமட்டூர் கண்ணனார் ‘எமர்’ என்று சுட்டிக் கொள்வது தன் இனத்தவரை ஆகும். இங்கு பரிசில் வாழ்க்கை உடைய கூத்தர், பொருநர், விறலியர் ஆகியோர் பிறர் என்று சுட்டப்படுவதால் பாடும் அவர் பாணர் இனத்தைச் சேர்ந்தவர் ஆகிறார்.

    கபிலர் பாரிமகளிரை அழைத்துக் கொண்டு இருங்கோவேளிடம் சென்று அவர்களை மணந்து கொள்ள வினவிய பொழுது பாரியை;

    “நுமருள் ஒருவன்” (புறம்.- 202)

    என்கிறார். வேள்பாரியும் இருங்கோ வேளும் ஒரே இனத்தவர் என்பதைத் தான் ‘நுமர்’ என்னும் சொல்லால் குறிக்கிறார். செவ்விலக்கியக் காலத்தில் ஜாதிப்பாகுபாடு இருந்தது என்பதற்கு இது தக்க சான்றாகிறது.

    தலைவன் மேல் ஊடல் கொண்டு பேசும் பரதவர் குலப்பெண் எமர் என்ற சொல்லிற்குப் பதிலாக எம்மனோர் என்ற சொல்லைப் பயன்படுத்திச் சாதி வேறுபாட்டைக் குறிப்பிடுகிறாள்.

     “எம்மனோரில் செம்மலும் உளரே” (நற்.- 45)

    என்ற அவளது கூற்றில் ‘எம்மனோர்’ எமருக்கு ஈடாவர்.

    முடிவுரை

    அளவில் பெரிய தொகைப்பாத்திரமாகிய தமர் நேரடியாக அகப் பாடல் காட்சியில் இடம் பெறுவதில்லை. சுற்றம் எனப்படும் தமருள் ஒவ்வொரு சூழலிலும்  வெவ்வேறு உறுப்பினர்கள் இயைந்து  இலங்குவதை அகஇலக்கியம் முழுவதிலும் காண இயல்கிறது. தலைவன், இனத்தார், பெற்றோர், தமையர், குடும்பத்தார்,  கிளை, தோழியர், சொந்தபந்தம், பிறந்த வீட்டார்,  புகுந்த வீட்டார், தாயாதிகள், மங்கலப்பெண்டிர், ஊரார், பரத்தையர், இளையர், நண்பர் எனும் அனைவரிலும் சிலரையோ பலரையோ உள்ளடக்கிய உறவுமுறைச் சொல்லாகத் தமர், நுமர், எமர் ஆகிய சொற்கள் அகஇலக்கியத்தில் பயின்று வந்து சிறுபாத்திரத் தகுதியை அடைகின்றன. தலைவனின் தமராகும் பரத்தையர் அவன் மனைக்கு நேரில் வந்து பாடி ஆடினர் என்னும் செய்தி அன்றைய சமூகப்பழக்கத்தைக் காட்சிப்படுத்துகிறது. ஆயர் இனத்தவருள் சாதி வேறுபாடு இருந்தமையை நுமர், ஏமர் ஆகிய சொல்வழக்குகள் நிறுவுகின்றன. பரதவர் இனத்தில் இருந்த சாதி உணர்வு ‘எம்மனோர்’ என்ற சொற்பயன்பாட்டில் புலப்படுகிறது.  புறப்பாடல்களில் தமர் பற்றிய குறிப்புகள் குறிப்பிட்ட இனத்தைச் சுட்ட மட்டுமே பயன்பட்டுள்ளன.

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 13

    பரிமேலழகர் உரைத்திறன் – 13

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                  
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    சொன்னவையும் பெற்றவையும்

    முன்னுரை

    ‘பரிமேலழகர் உரைத்திறன்’ என்னுந் தலைப்பில் வெளிவந்து கொண்டிருக்கும் இத்தொடர் பரிமேலழகர் உரைவழித் திருக்குறள் பொருண்மையை முழுமையாகக் காண்பதையே தனது நோக்கமாகக் கொண்டு அமைகிறது. திருக்குறளுக்குத் தான் விரும்பியவழி உரையெழுதும் பரிமேலழகர் அவ்விருப்பத்தைத் தன்னிச்சையாகச் செய்யாது அறிவியல் அடிப்படையில் வலிமையான சான்றுகளின் அடிப்படையில் பதிவு செய்கிறார். தான் இப்படி உரை காண்பதற்குரிய காரணங்களை அவர் அடுக்கியுரைக்கிறபோது கற்பார்க்கு வியப்பும் அதிர்ச்சியும் ஏற்படுகிறதேயன்றிக் குழப்பம் என்பதே இல்லாமற் போய்விடுகிறது. (1) குறளுக்கு உரையெழுதுகிறார். (2) அதில் அமைந்துள்ள சீர் அல்லது தொடருக்குத் தனித்த பொருள் கொள்கிறார். (3) இந்தப் பொருளன்றி உண்மையில் உணர்த்துகின்ற பொருள் வேறொன்று என்பதைக் குறிக்கின்றார். (இதுபற்றிய விளக்கம் கடந்த வாரக் கட்டுரையில் தரப்பட்டது) (4) இறுதியாக இந்தக் குறட்பா கூறவரும் கருத்துப் பிறிதொன்று என வினைமுடிபு செய்கிறார். இந்த நான்கனுள் ஏற்றபெற்றி அமைத்துக் கொண்டு இத்தொடரைக் கற்றாலன்றித் தொடர்ப்பயன் கிட்டுவது எளிதன்று. அறிமுகத்தை முன்னிறுத்திச் சொல்வோமேயானால்,

    “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
    ஆகுல நீர பிற” (34)

    என்னும் குறட்பாவில் மன மாசை முன்னிறுத்துகிறார் வள்ளுவர். இந்தப் பாட்டில் பயின்றுவந்த சொற்களைக் கொண்டு சொல்லப்பட்டிருக்கும் கருத்து, “உள்ளத்தில் குற்றமில்லாது இருத்தலே அறம். அதுவன்றி ஏனைய சொல்லும் ஒப்பனையும் ஆரவாரத்தன்மையுடையன” என்பது மட்டுமே. ஆனால் ‘வித்தின் பழுது விளைச்சலில்’ என்பதை உணர்ந்த பரிமேலழகர், மனத்தது மாசோடு கூடிய  ஏனைய சொல்லும் செயலும் பயனற்றன என்னும் குறட்பாவில் சொல்லாத கருத்தினைப் பெற்றுச் சொல்லுகிறார்.

    “மனத்து மாசுடையன் ஆயவழி அதன்வழிய ஆகிய மொழி மெய்களால் செய்வன பயனில என்பதூஉம் பெறப்பட்டது”

    இந்தத் தெளிவால் குறட்பாவின் கருத்து முழுமையாகக் கற்பாரைச் சென்றடைவதைக் காணலாம். குறட்பா மனத்து மாசைச்சுட்டி ஏனையவற்றின் தன்மையை விவரிக்கப், பரிமேலழகர் ‘அவற்றால் எந்தப் பயனும் இல்லை’ என்னும் கூடுதல் தகவலைக் கூறுகிறார் என்பதாம். வள்ளுவர் சொன்னவற்றோடு இவ்வாறு தம் நுண்மான் நுழைபுலத்தால் பெற்றறிந்து உரைப்பதைத்தான் ‘சொன்னவையும் பெற்றவையும்’ என்னும் தலைப்பு குறிப்பதாகக் கொள்ளலாம்.

    ஆகம அளவையும் காட்சி அளவையும்

    அறத்தின் வலிமையை உணர்த்த வந்த அதிகாரம் ‘அறன் வலியுறுத்தல்’. அதனுள் அமைந்த குறட்பா ஒன்று இப்படி அமைந்திருக்கிறது.

    “அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
    பொறுத்தானோடு ஊர்ந்தா னிடை (37)

    இந்தக் குறளுக்கு,

    “அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா. சிவிகையைக் காவுவானோடு செலுத்துவான் இடைக் காட்சியளவைத் தன்னானே உணரப்படும்”

    என்று பொழிப்புரை எழுதுகிறார். இது முதல் நிலை. ‘இனி அறத்தின் பயன் இது’ என்பதை ‘ஆகம அளவையால் சொல்ல வேண்டியதில்லை’ என்பதற்கும் ‘காட்சியளவையால் காணலாம்’ என்பதற்குமான மூலம் (மூலச்சொல்) குறட்பாவில் இருக்க வேண்டும் அல்லவா? நம் கண்ணுக்குத் தெரியாதது அவர் கண்ணுக்குத் தெரிகிறது. எப்படி? ‘என’ என்னும் எச்சத்தால் ‘சொல்’ (ஆகமம்) என்பதைப் பெற்றாராம். ‘பொறுத்தானோடு ஊர்ந்தானிடை’ என்பதால் காட்சியளவையைப் பெற்றாராம். அதாவது ஒரு பொருளை உணர்த்துவதற்குரிய மூன்று வழிகள் ‘அளவைகள்’ என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன.

    “பொறிகளால் காணும் காட்சியும் குறிகளால் உயத்துணரும் அனுமானமும்  கருத்தா மொழி ஆகிய ஆகமும் என மூன்று” (242)

    என்னும் அவருடைய உரைப்பகுதியாலேயே இதனை அறிந்து கொள்ளலாம். திருக்குறளில் அமைந்துள்ள,

    “என’ என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், ‘பொறுத்தானோடு ஊர்ந்தானிடை’ என்றதனால் காட்சியளவையும் பெற்றாம்”

    இந்த இரு சொற்களைக் கொண்டுதான் ஆகம அளவை என்பதையும் காட்சியளவை என்பதையும் உணர்ந்து கொண்டு உரையெழுதுவதாகப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறார் பரிமேலழகர். இத்தகைய தர்க்க அறிவியல் சார்ந்த நெறிமுறையைப் பற்றியே இந்தக் கட்டுரை ஆராய்கிறது. அதாவது குறட்பாச் சீர்களை அவற்றின் உள்ளடக்கம் அறியும் கருவிகளாகத் தான் பயன்படுத்திக் கொள்வதாகப் பரிமேலழகர் கூறுகிறார். இவ்வாறு குறட்பாத் தொடர்களிலிருந்து பரிமேலழகர் பெற்றுக் கொண்ட ‘பொருட்செல்வத்தைப்’ பற்றிய ஆய்வு தொடர்கிறது.

    பலருக்கும் பொதுவான ‘பனுவல்’

    ஒழுக்கத்தை வற்புறுத்தாத சமயங்களோ சமுதாயமோ இல்லை. எல்லாச் சமயங்களுக்கும் சமுதாய அமைப்புக்களுக்கும் ஒழுக்க நெறி பொதுவானது. இன்றியமையாதது. மானுடத்திற்கு அழியாப் புகழை அளிப்பது. திருவள்ளுவர் கூறிய பத்து உடைமைகளில் அதுவும் ஒன்று. இல்லறத்தில் கடைப்பிடிக்கப்படும் அவ்வொழுக்கம் துறவறத்தில் பிசகிவிடுமானால் அது கூடாவொழுக்கம் ஆகிவிடும். அதனால்தான் அதனை உலகத்து நூல்களெல்லாம் உயர்த்திப் பிடிக்கின்றன என்பது திருவள்ளுவர் கருத்து. அதனை,

    “ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
    வேண்டும் பனுவல் துணிவு” (21)

    என்னும் குறட்பாவில் பதிவு செய்திருக்கிறார்.

    “தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும்  இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு”

    என்னும் பொழிப்புரையைத் தொடர்ந்து பரிமேலழகர் எழுதுகிறார்.

    ‘பனுவல்’ எனப் பொதுப்பட கூறிய அதனான் ஒன்றையொன்று ஒவ்வாத சமய நூல்கள் எல்லாவற்றிற்கும் இஃது ஒத்த துணிவு என்பது பெற்றாம்.

    ‘நூல்கள் சொல்லுகின்றன’ என்பதுதான் குறட்பா கூறவரும் கருத்து. ஆனால் எத்தகைய நூல்கள் அல்லது எந்தச் சமயத்து நூல்கள் என்பதைத் திருவள்ளுவர் கூறவில்லை. நூலின் அகக்கட்டுமானத்தைக் கருத்திலிருத்தி உரையெழுதும் பரிமேலழகர் ‘எல்லாச் சமயத்திற்கும் திருவள்ளுவர் பொதுவானவர்’ என்னும் தனது உட்கிடக்கையை இதன் வழி வெளிப்படுத்துகிறார். பரிமேலழகர் உரையில் எல்லாச் சமயத்து நூல்களும் உரைவிளக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது நோக்குதற்குரியது.

    ‘பனுவல்’ என்பது எல்லாச் சமயங்களையும் தழுவி நிற்கும் ஒரு பொதுச்சொல் திருவள்ளுவர் ‘பனுவல்’ என்று பொதுப்படக் கூறுகிறாரேயன்றி ‘இன்ன சமயத்து நூல்’ என விதந்தோதவில்லை. அது மட்டுமன்றி இணக்கமான சமயங்கள் என்றும் முரண்பட்ட சமயங்கள் என்றும் வடகலை, தென்கலை என்றும் பாசுரங்கள், பதிகங்கள் என்றும் வழங்கப்படும் சொற்களை நோக்கினால் உண்மை புரியக்கூடும். எனவே மாறுபடு சமயங்கள் வேறுவேறாயினும் ஒழுக்கம் என்பது மாறாத எல்லாரும் ஏற்றுக் கொள்கிற ஒன்று. இதனைத்தான் பரிமேலழகர் அந்தப் பொதுச்சொல்லிலிருந்து பெற்றுக் கொண்டதாக எழுதிக் குறட்பாவின் பொருளடர்த்தியை மிகுவிக்கிறார்.

    இனித் திருவள்ளுவரை ஒரு குறிப்பிட்ட சமயச் சிமிழுக்குள் அடக்க முற்படுவாருக்கும் பரிமேலழகர் வடமொழிச் சார்பாளர் என்னும் கருத்தியல் கொண்டவர்க்கும் அவரை வைணவர் என அடையாளப்படுத்துவார்க்கும் இவ்வாறு பரிமேலழகர் எழுதிக்காட்டும் உரைநெறியே அவர்தம் கருத்து பிசகானது என்பதற்குப் போதுமான சான்றாகலாம். அதாவது பரிமேலழகர் எந்த நிலையிலும் எந்தக் குறடபாவிலும் தன் கருத்தினைத் திருக்குறளுக்கு ஏற்றிக் சொல்லவில்லை என்பதாம். காரணம் திருவள்ளுவர் எல்லாச் சமயங்களுக்கும் தத்துவங்களுக்கும் பொதுவானவர் என்னும் கருத்தியலால் கவரப்பட்டவர் பரிமேலழகர் என்பதும் அதனைக் கருத்திற்கொண்டே அவர் உரை அமைந்திருக்கிறது என்பதும் இங்கே முன்னெடுக்கப்படுகிறது.

    ‘இனிய’, ‘இன்னாத’ எப்படிச் சொற்களாகும்?

    ‘இனியவை கூறல்’ என்னும் அதிகாரத்தின் இறுதியில் அமைந்திருப்பது,

    “இனிய உளவாக இன்னாத கூறல்
    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” 100

    என்னும் குறட்பாவாகும். இந்தக் குறளை உற்று நோக்குவார்க்கு ஓர் உண்மை புலப்படக் கூடும். ‘இனிய’ என்பது பண்படியாகப் பிறந்த உடன்பாட்டுப் பெயர்ச்சொல். அதாவது ‘இனிமையானவை’ என்பது பொருள். ஆனால் ‘எவை இனிமையானவை?’ என்னும் விளக்கக் குறிப்பு பாட்டில் இல்லை. அதுபோலவே ‘இன்னாத’ என்பதும் பண்படியாகப் பிறந்த எதிர்மறைப் பெயர்ச்சொல். அதாவது ‘இன்னாதவை’ என்பது பொருள். ஆனால் “எவை இன்னாதவை?” என்னும் விளக்கக் குறிப்பு பாட்டில் இல்லை. அதிகாத்தின் தலைப்பு ‘இனியவை கூறல்’ என்பதாகும். பரிமேலழகரின் பொழிப்புரை இப்படி அமைகிறது.

    “அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க அவற்றைக் கூறாது, பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல் இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க அவற்றை நுகராது இன்னா காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும்”

    ‘இனிய, இன்னாத’ என்று குறிப்பாகவே குறட்பாவில் பயின்றிருக்கப் பரிமேழகர் அவற்றிற்கு ‘இனிய சொற்கள்’ ‘இன்னாத சொற்கள்’ என உரைகாண்கிறார். அவ்வாறு உரை காண்பதற்கு அந்தக் குறட்பாவில் ஏதேனும் இடமிருக்கிறதா என்றால் இருக்கிறது. இருப்பதும் அவருக்குத் தெரிகிறது!. எங்கே? ‘கூறல்’ என்ற வினைச்சொல்லை நோக்கி உரையெழுதுகிறார். சொல்லைத் தானே கூறுவார்கள்?. எனவே ‘கூறல்’ என்ற வினைச்சொல் பொதுவாக அமைந்திருப்பதால் ‘சொற்கள்’ என்பதாகத் தான் உரை காண்பதாக விளக்கமளிக்கிறார்.

    “கூறல் என்பதனான் சொற்கள் என்பது பெற்றாம்”

    இது பரிமேலழகரின் சுருக்க உரை. ‘இன்னாத கூறல்’ என்னும் தொடரில் உள்ள ‘கூறல்’ என்னும் உடன்பாட்டை உற்று நோக்கி, அதனை ‘இனிய’ என்பதோடு எதிர்மறையாகப் பொருத்தி உரை காணும் நுண்ணியம் உணரத்தக்கது. அதிகாரத்  தலைப்பு, குறட்பாவில் சொற்களின் பயன்பாடு ஆகியவற்றை நோக்கி உரையெழுதுவதை இயல்பாகக் கொண்ட பரிமேலழகர் தான் உரைகாண்பதற்கான மூலத்தைக் குறட்பாவிலிருந்தே காட்டுவதைக் காணலாம்.

    என்பில்லாததும் அன்பில்லாததும்

    மேலே காட்டிய குறட்பாவில் ‘கூறல்’ என்னும் வினையால் சொற்கள் என்பதைப் பெற்றுக் கொண்டதைப்போல இன்னொரு குறட்பா அமைந்திருக்கிறது. ‘அன்பு’ என்பது உயிர்ப்பண்பு. அப்பண்பு இல்லாவிடின் மானுடம் சிறக்காது. ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பது வள்ளுவம் அத்தகைய அன்பு ஒருவனுக்கு இல்லாவிட்டால் தெய்வ நிந்தனைக்கு ஆளாவான் என்பது வள்ளுவர் சொல்லவரும் கருத்து. இதனை ஓர் உவமத்தின் வழி நின்று விளக்குகிறார்.

    “என்பிலதனை வெயில்போலக் காயுமே
    அன்பி லதனை அறம்” 77

    என்பது அந்தப் பாட்டு. இதற்கு,

    “என்பில்லாத  உடம்பை வெயிற் காய்ந்தாற்போலக் காயும், அன்பில்லாத உயிரை அறம்”

    எனப் பொழிப்புரை எழுதுகிறார் பரிமேலழகர். இந்தக் குறட்பாவில் ‘என்பிலது’ எனவே இருக்க, பொழிப்புரையில் ‘உடம்பு’ என உரைகாண்கிறார். அதுபோலவே ‘அன்பிலது’ எனவே குறட்பாவில் இருக்க ‘உயிர்’ என உரை காண்கிறார். இவ்வாறு அவ்விரு சொற்களுக்கும் உரைகண்டதற்குரிய காரணத்தை விளக்குகிறார். உடம்பும் எலும்பும் இணைந்தேயிருக்கும். எலும்பில்லாத உடம்பு என்றால் அதனால் நிற்க இயலாது. வெப்பத்தைத் தாங்காது. மென்மையான தோல் மட்டுமே இயக்கத்திற்கு உதவும் ‘புழு’ என்பது கருத்து. அன்போடு இயைந்த வழக்காதலின் அன்பு உயிர்ப்பண்பு ஆயிற்று. எனவே அன்பிலது என்பதனால் அன்பில்லாத உயிர் என்பது கருத்து. இதனை,

    “என்பிலது என்றதனான் உடம்பு என்பதும் அன்பிலது என்றதனான் உயிர் என்பதும் பெற்றாம்.”

    திருவள்ளுவர் சொன்ன சொற்களிலிருந்து சொல்ல நினைத்த கருத்தினைப் பெற்றுக் கொள்ளும் பரிமேலழகரின உரைத்திறன் இதுவாம்.

    ‘பாவம்’ மறுமைக்கானது

    மாற்றானுடைய மனைவியை விரும்பியொழுகும் ஒழுக்கத்தை வன்மையாகக் கண்டிப்பது திருக்குறள். அவ்வாறு விரும்பி ஒழுகுபவனிடத்தில் இருக்கக்கூடிய பண்புகளாக நான்கினைப் பட்டியலிடும் குறட்பா இவ்வாறு அமைந்திருக்கிறது.

    “பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
    இகவாவாம் இல் இறப்பான் கண்”  146

    “பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து, பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் நீங்காவாம்” என்பது இப்பாட்டிற்குப் பரிமேலழகர் எழுதிய பொழிப்புரை. இந்தப் பாட்டு இல்லறவியலில் ஒழுக்கமுடைமை என்னும் அதிகாரத்தை அடுத்து அமைந்துள்ளது. இல்லறவியலில் சொல்லப்படும் எதிர்மறை நெறிகளுக்கான விளைவு இம்மைப் பயன் இழப்பதே, இல்லறம் இம்மை நோக்கியதாதலின். ஆனால் பிறனில் விழைதலாகிய இம்மைப் பாவத்தைச் செய்பவன் மறுமைப்பயனையும் இழக்கிறான் எனச் சொல்ல வரும் பரிமேலழகர்  பார்வையில் ‘பாவம்’ என்னும் சொல் படுகிறது.

    “எனவே இருமையும் இழத்தல் பெற்றாம்.”

    என்னும் ஒரு தொடரால் பிறனில் விழைபவனுக்கு மறுமைப்பயனும் கிடையாது எனத் தெளிவுபடுத்துகிறார். அதாவது பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கனுள் ‘பாவம்’ மறுமைக்காக, ஏனைய மூன்றும் இம்மைப் பயனை இழக்கச் செய்வது. எனவே இருமைப் பயனையும் அவன் இழப்பதாக உரையெழுதுகிறார். குறட்பாவில் பயின்று வந்துள்ள சொற்களை அப்படியே பின்பற்றி உரையெழுதாமல் ஆசிரியரின் உள்ளக்கிடக்கைக்கு ஏற்ப நுட்பமாக உரையெழுதும் அவருடைய ஆற்றல் இதனால் புலப்படக் கூடும்.

    களிற்றை எதிர்ப்பதுதான் காளையின்  வீரம்

    ‘என’ என்னும் எச்சத்தால் ஆகம அளவை என்பதைப் பெற்றுக் கொள்கிறார். ‘கூறல்’ என்னும் தொழிற்பெயரால் ‘சொற்கள்’ என்னும் செயப்படுபொருளைப் பெற்றுக் கொள்கிறார். ‘என்பிலது’ என்பதால் உடம்பையும் ‘அன்பிலது’ என்பதால் உயிரையும் பெற்றுக் கொள்கிறார். பயின்று வந்துள்ள சொற்களின் சரியான பொருத்தப்பாட்டினை அறிந்து பாவம் என்பது மறுமைக்கானது என்பதைப் பெற்றுக் கொள்கிறார். இன்னொரு வகையாகவும் அவர் இவ்வாறு பெற்றுக் கொள்வதை அறிய முடிகிறது. சித்திரிக்கும் காட்சியைக் கொண்டு சித்திரிக்கப்படாத காட்சியைப் பெற்றுக் கொள்கிறார்.

    பொருட்பாலில் படையினது தன்மை எனப் படையினது இயல்புகளைக் கூறும் அதிகாரத்திற்குப் ‘படைமாட்சி’ என்று பெயர். படை அங்கங்களுள் சிறந்தது என்பதும் அதனுள்ளும் மூலப்படை சிறந்தது என்பதும் அதுதன்னுள்ளும் வீரன் சிறந்தவன் என்பதும் அந்த அதிகாரம் விளக்கும் பொருண்மையாகும். அந்த வீரனின் வீரச்செருக்குப் பற்றிக் கூறுவதே அடுத்த அதிகாரமாகிய  ‘படைச்செருக்கு’. இந்த அதிகாரத்தில் ஒரு பாட்டு இப்படி அமைந்திருக்கிறது.

    “கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
    மெய்வேல் பறியா நகும்” (774)

    இந்தக் குறட்பா ‘படைச் செருக்கு’ என்னும் அதிகாரத்தில் வருகின்ற பத்துப்பாடல்களில் நான்காவதாக அமைவது. போர்க்களத்தில் எதிர்கொள்கின்ற இடர்களைப் பொருட்படுத்தாது மேன்மேலும் முன்னோக்கிச் செல்லும் போராண்மையை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டது. இதற்குப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “கைப்படையாய வேலைத் தன்மேல் வந்த களிற்றோடு போக்கி, வருகின்ற களிற்றுக்கு வேல் நாடித் திரிவான் தன் மார்பின்கண் நின்ற வேலைக்கண்டு பறித்து மகிழும்”

    என்று விளக்குகிறார். பாட்டில் சொல்லப்படும் கருத்துக்கள் இரண்டே.

    1. கைப்படையாகிய வேலைக்கொண்டு தன் மேல் முதலில் பாயவரும் களிற்றினை உயிரோடு போக்குகிறான்
    1. தொடர்ந்து தன் மேல் பாயவரும் களிற்றினை எறிவதற்கு வேல் இல்லையே என்ற நிலையில் ஏற்கனவே பகைவர்கள் எய்து, தன் மார்பில் தைத்திருக்கும் வேல்களில் ஒன்றினைக் கண்டு மகிழ்கிறான். அவ்வளவுதான்!.

    பரிமேலழகர் சிந்தனையில் கூடுதலாக மூன்று வினாக்கள் தோன்றுகின்றன.

    1. முதலில் தாக்கியது களிறு என்பது சரி. தொடர் தாக்குதலுக்கு வந்ததும் களிறுதானா? என்பதற்கான குறிப்பு பாட்டில் இல்லை.
    2. வேல் கிடைக்காது திகைத்தவன் தன் மார்பில் தைத்த வேல்கண்டு மகிழ்கிறான் என்றால் அவன் மார்பில் பகைவர்களின் வேல் தைத்ததை அவன் அறியவில்லை. இந்தக் குறிப்பு பாட்டில் இல்லை.
    3. ஒரு களிறு அடக்கியது போதுமென எண்ணாது தொடர்போரில் அவன் மனம் ஈடுபட்டது என்பது பாட்டில் குறிக்கப்படவில்லை.

    ஆனால் இந்த மூன்றும் இருந்தால்தான் அது படைச்செருக்கு. ‘படைச்செருக்கு’ என்பதற்கு வீரத்தனம் என்பது பொருள். வழக்கில் இது ‘சூரத்தனம்’ எனப்படும். படைவீரர்களின் போர்க்குணம். இந்தப் போர்க்குணத்தைத் தம் மனக்காட்சியால் பெற்றுக் கொண்டு உரையெழுதுகிறார் பரிமேலழகர்.

    “இதனுள் களிற்றையல்லது எறியான் என்பதூஉம் சினமிகுதியான் வேலிடை போழ்ந்தது அறிந்திலன் என்பதூஉம், பின்னும் போர் விருப்பினன் என்பதூஉம் பெறப்பட்டன.”

    இரண்டு வினைகளோடு முற்றுப்பெறும் ஒரு குறட்பாவை ஐந்து வினைகளோடு முடித்துக்காட்டும் பரிமேலழகரின் உரைத்திறனை என்னென்பது? எப்படிப் புகழ்வது?

    நிறைவுரை

    குறட்பாவிலிருந்து இவ்வாறு வேண்டியனவற்றைப் பெற்றுக் கொண்டு உரையெழுதும் இத்தகைய உரைநெறி பரிமேலழகர் உரையில் ஏறத்தாழ தொண்ணூறு (90) இடங்களில் பின்பற்றப்படுகிறது. இந்த உரைநெறியை எந்த மேனாட்டுத் திறனாய்வுக் கொள்கை கொண்டும் அளக்க முடியாது. அதனால் அளக்கவும் கூடாது. அளந்தால் பயன் தராது. இந்த உரை நெறி தமிழுக்கேயுரியது. உலகமொழி இலக்கியங்களில் காணற்கரிய காட்சி இது. தமிழ் உரையாசிரியப் பெருமக்களின் உரைநெறிகள் தனித்த நோக்கிற்கும் ஆழமான ஆய்வுக்கும் உரியவை. மூலநூல் ஆசிரியனின் உள்ளம் கண்டுணரும் பேரார்வம் இருந்தாலேயொழிய இத்தகைய உரைத்திறன் கைவரப்பெறுவது அரிது. பரிமேலழகருக்கு அந்த ஆர்வம் அளவு கடந்தது. அதனால் அது கைவரப்பெற்றது!

    (தொடரும்…)

    Share
  • வலி (சிறுகதை)

    வலி (சிறுகதை)

    பாஸ்கர் சேஷாத்ரி

    எல்லோருக்கும் வணக்கம் என்றார் டாக்டர் .

    அவர் இன்றுடன் இந்த மருத்துவமனையில் சேர்ந்து பத்து வருடங்கள் முடியப் போகிறது .

    உங்கள் அனைவருக்கும் நன்றி என ஆரம்பித்தார் .

    நாம் எல்லோரும் சின்ன அல்லது பெரிய தப்புகளைச் செய்திருப்போம் . நான் உள்பட.

    இந்தக் கூட்டத்தில் எல்லோரும் அதனை உண்மையாகச் சொன்னால் நான் மகிழ்வேன். எந்தத் தவறுக்கும் தண்டனை எந்த வகையிலும் இல்லை. இந்தக் கூட்டம் குற்ற உணர்ச்சியை எடுக்க மட்டுமின்றி, இனி அந்தத் தவறை செய்யாமல் இருக்க என்றார்

    யாரும் எந்தப் பதிலும் சொல்லவில்லை .

    சரி , நான் ஆரம்பிக்கிறேன் . நான் வந்த புதிதில் ஒரு முதிய பெண்மணியிடம் மிகக் கடிந்து பேசி அவர்களை கிட்டத்தட்ட அழ வைத்து இருக்கிறேன். அப்போது மன்னிப்பு கேட்க கூட ஒரு முதிர்ச்சி இல்லை .

    சார் நான் சிஸ்டர் கற்பகம் – ஒருவர் ரத்த தானம் கொடுக்க வந்தபோது அதிகமாக ரத்தம் எடுத்துவிட்டேன். அவர் மயங்கி விழுந்து எழுந்துவிட்டார். என்றாலும் இன்னும் வலிக்கிறது

    மத்தவங்களும் சொல்லுங்க.

    சார் நான் .

    உங்க பெயரைச் சொல்லிட்டு ஆரம்பிங்க .

    டேவிட் சார் .

    சொல்லுங்க

    நான் ஒருத்தர்க்கு ப்ளட் க்ரூப் மாத்திப் போட்டேன். ஆறு மாசம் கழிச்சு அவர் விலாசம் கண்டுபிடிச்சு சொல்லிட்டேன். ஆனாலும் தப்பு தப்பு தான் .

    அடுத்து என்றார் .

    நான் பிரபா .நான் ஒரு பேஷன்ட் கிட்ட கடன் வாங்கினேன் . அதைத் திருப்பியும் தரல. அவரும் இப்ப இறந்துட்டுதாகச் சொல்றாங்க

    ம் . அடுத்து

    நான் ஏழுமலை சார் .டெட்டால் பெனாயில் அடிக்கடி எடுப்பேன் .

    எப்படி?

    சாப்பாடு டிபன் பாக்ஸ்ல .

    ம் என்றார்

    அடுத்து?

    நான் வீட்டுக்கு ப்ரூட் ஜூஸ் எடுத்துண்டு போவேன் .அது பேஷண்டுக்கு வாங்கினது

    பேரச் சொல்லுங்க ?

    சாவித்திரி

    நான், பிறந்த குழந்தையோட பிறந்த நேரத்தையே மாத்திப் போட்டுட்டேன் . ஒன்னரைக்கு பிறந்த குழந்தையை இரண்டரைன்னு எழுதிட்டேன் .அதைப் பின்னால மாத்த பயம் .

    அடுத்தது ..

    சார் நான் வின்சென்ட் . இந்த வேலைக்கு நான் லஞ்சம் கொடுத்தேன் சார். மாசா மாசம் சம்பளம் வாங்கும்போது குத்துது சார். வாங்கினவர் போன வருஷம் இறந்துட்டாரு

    நெக்ஸ்ட்

    சார் இன்னும் முடியல .

    சொல்லுங்க .

    கோச்சிக்காதீங்க . அந்த பணம் வாங்கினவர் உங்க அண்ணன் .

    நெக்ஸ்ட் .

    யாரும் பேசவில்லை .

    டாக்டர் என்ன சார் செய்யப் போறீங்க .

    என் வலிக்கு ஒரே மருந்து நான் வேலையை விட்டுப் போறதுதான் .

    சார் நாங்க .

    அது உங்க இஷ்டம். இது சுய தண்டனை .

    உங்களுக்கு வலி முக்கியமா, வாழ்க்கை முக்கியமான்னு நீங்க முடிவு பண்ணுங்க தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் .

    அடுத்த ஐந்தாவது நிமிடம், அந்த மருத்துவமனை பரபரவென இயங்கத் தொடங்கியது .

    Share
  • குறளின் கதிர்களாய்…(322)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(322)

    இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
    துறந்தார் துறந்தார் துணை.

    – திருக்குறள் – 310 (வெகுளாமை)

    புதுக் கவிதையில்...

    அளவோடு சினமிருந்தால்
    ஆபத்தில்லை,
    அளவைக் கடந்தவன்
    அழிந்து
    இறந்தவனுக்கு ஒப்பாவான்..
    சினத்தைத் துறந்தவன்
    சிறந்த ஞானமுடைய
    துறவி போன்ற
    பெருமை பெறுகிறான்…!

    குறும்பாவில்...

    அளவுகடந்த கோபமுடையவன் இருந்தும்
    இறந்தவன் போலாகிறான், சினமடக்கி வாழ்பவன்
    சிறப்பு பெறுகிறான் துறவியாக…!

    மரபுக் கவிதையில்...

    இருக்கும் சினம தளவுகடந்தால்
    இறந்தவன் போல்தான் மனிதனுமே,
    பெருகும் கோப மடக்காமல்
    பெயரில் வாழ்கிறான் பிணமாக,
    பெருமை மிக்கது சினமடக்கல்
    பெற்றுத் தந்திடும் உயர்நிலையே,
    தருமே சிறப்பு துறவியாக
    தீதாம் சினமதைத் துறந்தவர்க்கே…!

    லிமரைக்கூ..

    உயிரோடு இருந்தாலுமவன் பிணமே
    கோபமளவைக் கடந்துவிட்டால், துறவியாய் உயர்த்தும்
    கோபத்தைத் துறந்துவிட்ட குணமே…!

    கிராமிய பாணியில்...

    கோவப்படாத கோவப்படாத
    அளவுக்குமிஞ்சி கோவப்படாத,
    அழிவத்தருற கோவம் வேண்டாமே..
    அளவுக்கு மிஞ்சி கோவப்படுறவன்
    ஆளு உயிரோட இருந்தாலும்
    செத்தவன் போலத்தான்..
    கோவத்த அடக்கக் கத்துக்கிட்டு
    கொணத்தோட வாழுறவன்,
    கொணத்துல ஒசந்த
    சாமியாரு போலத்தான்..
    அதால
    கோவப்படாத கோவப்படாத
    அளவுக்குமிஞ்சி கோவப்படாத,
    அழிவத்தருற கோவம் வேண்டாமே…!

    Share
  • பண்டிதர் அயோத்திதாசர் சிலை

    பண்டிதர் அயோத்திதாசர் சிலை

    அண்ணாகண்ணன்

    சென்னை, தாம்பரம், தேசிய சித்த மருத்துவ நிறுவன வளாகத்தில், அயோத்திதாசப் பண்டிதர் மருத்துவமனையும் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள மூலிகைத் தோட்டத்தில், பண்டிதர் அயோத்திதாசருக்கு அழகிய சிலையை அமைத்துள்ளார்கள். அயோத்திதாசர், ஒரு பைசாத் தமிழன் என்ற இதழை நடத்தியதோடு, வேறு 25 நூல்களை எழுதியுள்ளார். திருக்குறளுக்குப் பகுதியளவு உரை வரைந்துள்ளார். ஆதி திராவிடர் முன்னேற்றத்துக்காகப் பல்வேறு சமூக, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். சித்த மருத்துவராகவும் விளங்கியுள்ளார். தம் குருவின் மீது கொண்ட மதிப்பால் காத்தவராயன் என்ற தமது பெயரை அயோத்திதாசர் என மாற்றிக்கொண்டுள்ளார். 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், தமது சிந்தனைகளாலும் துணிவான செயல்களாலும் 21ஆம் நூற்றாண்டிலும் எழுந்து நிற்கிறார்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share