Blog

  • சரஸ்வதி வெண்பாக்கள்

    கிரேசி மோகன் 

     

    10574236_1490587474554176_3016036001259081854_n

    சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்….’’வெண்பூ வெண்பா’’ என்ற தலைப்பில் தேவி சரஸ்வதி மீது எழுதிய வெண்பாக்களும், 70துகளில் ரவிவர்மா சரஸ்வதியைப் பார்த்து வரைந்த வாட்டர்-கலர் ஓவியமும்….

    மூவர்க்கும் சேர்த்து முதற்பாடல்

    “படைத்திடும் வாணி துடைத்திடும் துர்க்கா
    இடைபுகுந்து காக்கும் இவளும் -சடைப்பின்னல்
    ஆக இணைந்து அலகிலா ஆட்டத்தை
    பாகப் பிரிவினையில் பார்ப்பு”….
    வெண்பூ வெண்பா
    ————————

    (சரஸ்வதி வெண்பாக்கள்)
    ————————————
    சு.ரவி ரவிவர்மா ஓவியம் பார்த்து
    —————————————
    எண்ணையின் வண்ணத்தில் எண்ணென் கலையாளை
    பண்ணிசைக்கும் கோலம் படுஜோர் -உன்நுதல்
    குங்குமம் கொட்டி கலைமகள் நாசியில்
    தங்கிய மூக்குத்தி தூள்….(1)

    நாணல் இடையாளாம் ,நாவன்மை உடையாளாம்
    பூணல் அயன்மணந்த புண்ணியளாம்-வீணில்
    அலையாதெ நெஞ்சே அறுபத்தி நான்கு
    கலையாளை சேரக் கவி….(2)

    நாக்கில் நரம்பின்றி நாளும் வசைபாடி
    தீக்குள் குளிர்காயா தேநெஞ்சே -வாக்கில்
    கலைவாணி வந்து குடியேறும் வண்ணம்
    அலைபாய்ந் திடா(து) அடங்கு….(3)

    ரவியுடன் சுற்றி ரகசியங்கள் கற்ற
    கவிஅனுமன் கானம் குளிரப் -புவிமிசை
    பாயப் பொழிவாள் படிக நிறத்தாள்
    ஆய கலையாள் அருள்….(4)

    வந்தனம் செய்ய வரமளிக்கும் வாணியால்
    மந்தனும் ஆவானே மாகவி -சிந்தையும்
    வாக்கும் செயலுமவள் போக்கே துதித்திட
    தேக்கும் வடிக்குமே தேன்….(5)

    பலகலைக்கு ஞானி பயில்வோர்க்கு தோணி
    தளைதப்பா தீந்தமிழின் தேனி -நிலைகுலைந்து
    நான்நீ எனப்பேசும் நாநீ நுழையாயே
    வாணி வரமருள்வாய் நீ….(6)

    தேஜ சொரூபிணீ தேவி சரஸ்வதி
    ராஜ ஷியாமளா ரக்ஷிநீ -பூஜை
    புனஸ்காரம் எந்தன் நமஸ்காரம் தாயே
    மனக்கிலேச யாழினை மீட்டு….(7)

    வேதங்கள் நான்குமவள் காதணியும் குண்டலம்
    நாதப் பரப்பிரமம் நாசிக்காற்று -ஓதும்
    புராணங்கள் மேகலை பாதச் சிலம்பு
    சராசரங்கள் சேரும் சபை….(8)

    கட்டளை போடு கலித்துறைக்கு பாரதி
    கட்டளை கோர்ப்பெனக்கு கைவர -வெட்டவெளி
    வெண்பா களித்துறையில் வாழவைத்த வாணியே
    என்பால் கலித்துறைக்கேன் ஏய்ப்பு….(9)

    சகலகலா வல்லி அகலாதென் வாக்கில்
    பகலிரவாய்க் கொள்வாய்நீ பள்ளி -புகலவரும்
    வெண்பாவாம் வாரிசத்தில் வந்தமர்ந்து நின்புகழை
    பெண்பாவாய் பாடிப் பற….(10)

    நவையூறும் நாவில் சுவையூறச் செய்து
    அவையேறும் வாழ்வை அளிப்பாய் -இவையாவும்
    பெற்றிட வெண்பாக்கள் குற்றம் குறையின்றி
    சொற்றுளியால் சீராய் செதுக்கு….(11)

    மட்டொழுகும் வெண்கமலம் மீதில் தனிவெண்மைப்
    பட்டிழைய சிற்றிடையில் போயமர்ந்து -மொட்டிதழால்
    ஆய கலைகளை ஆன்றோர்(கு) அறிவிக்கும்
    தாயே எனக்குமதைத் தா….(12)

    சவ்வாது சந்தனம் சத்தியம் அவள்வாக்குக்(கு)
    ஒவ்வாத வாச உபமானம் -இவ்வாத
    உண்மை உணர்ந்தகம்பன் ஓதினன் அந்தாதி
    அம்மை சரஸ்வதிமேல் அன்று….(13)

    வேதம் உபநிடதம் வித்தைகள் எண்ணென்னும்
    பாதம் விளையாடும் பிள்ளைகள் -மாதம்மும்
    மாரியும் பெய்தலாய் மாண்புமிகு கல்வியதி
    காரியின்கண் பார்க்கக் கவி….(14)

    காமுறுவாள் கற்போர்மேல் கைகொடுக்கக் கற்பகமாய்
    நாமருவி நூற்சேலை நெய்திடுவாள் -பூமருவும்
    வாவிவளர் கூத்தனூர் தேவி சரஸ்வதி
    தாவி அளிப்பாள் தமிழ்….(15)

    துமியென்ற கம்பன் தவறில்லை என்று
    சமயத்தில் செய்தாள் சகாயம் -தமிழென்று
    ஆய்ச்சியாய் வந்தன்று பேச்சு வழக்காக்க
    கூச்சலிட்ட கூத்தன் களைப்பு….(16)

    காளிதாச கம்ப குமர குருபரர்கள்
    தோளிலங்க வஸ்த்திரமாய்த் துள்ளிடுவோய் -தாளிரெண்டில்
    கைக்கட்டிக் கேட்கின்றேன் பொய்க்கெட்டா புத்தியை
    கைக்குட்டை யாய்கையில் கட்டு….(17)

    படிகமணி மாலை படிப்புணர்த்தும் ஓலை
    மடிதவழும் வீணை, மருங்கின் -பிடிபடாமை
    கோலத்தை நெஞ்சிருத்தி கும்பிடுவோர் முன்வாழ்த்தாம்
    வேலொத்து பாய்ச்சும் வசவு….(18)

    வர்மன் வரைந்தாற்போல் வாரிசத்தில் வீற்றிருந்து
    தர்மம் தவம்தானம் தேர்ந்திட -கர்மமாய்
    மோனத்தில் மூழ்கி முனையும் மஹாசக்தி
    ஞானத்தை நானுற நல்கு….(19)

    அற்பனே ஆனாலும் ஆசான் அவளிரெண்டு
    பொற்பதம் போற்ற புழலறிவின் -கற்பனை
    ஊற்றில் குளித்து உவப்பால் துடைத்தணிவர்
    மாற்றுத் துணியாய் மனது….(20)

    கல்வி கலவிடும் செல்வம் சிணுங்கிடும்
    வல்லமை வீரம் வணங்கிடும் -செல்வி
    கலைவாணி யாலுன் கவுரவம் கூடும்
    தலைவானில் நிற்கும் திமிர்ந்து….(21)

    வேறெதையும் எண்ணாது வேண்டி வணங்கிடுவாய்
    சாரதையை நம்பி சிருங்கேரி -ஊரதனில்
    பாரதன்பின் வாழ்வு பரிசுத்தம் ஆகிடும்
    பாரதன்பின் பார்க்கப் பளிங்கு….(22)

    துங்கா நதிக்கரைசத் சங்காய் சிருங்கேரி
    சிங்கா சனத்திருக்கும் சாரதே -சங்காய்
    கிடக்கின்றேன் சும்மா எடுத்தூதி அம்மா
    நடத்தெனது நாடகத்தை நன்கு….(23)….13-08-2011

    சங்கரன் முன்செல்ல சாரதை பின்செல்ல
    துங்கையின் தீரத்தில் தேவியின்ச -தங்கையின்
    சத்தம் குறைந்திட சத்குரு பார்த்திட
    வித்தை சிருங்கேரி வாய்த்து….(24)

    கர்ப நுணல்மேல் குடையாய் படம்பிடிக்கும்
    சர்ப சகாய சிருங்கேரி -கர்ப
    கிரகத்து சாரதையை கும்பிடுவோர் முன்பு
    கிரகங்கள் கூப்பும் கரம்….(25)

    வித்தை, வினயம், விசாரம், விவேகமிவை
    மொத்தமுமென் நெஞ்சில் முளைத்திட -ஸ்ரத்தை
    அளித்திடு சாரதா அம்பிகே, என்னுள்
    முளைத்திடு முண்டக மா….(26)

    உளம்கொடுக்கும் உன்ன, உரம்கொடுக்கும் நண்ண
    களம்கொடுத்து ஞானக் கொழுந்தாய் -புலன்மடக்கி
    ஆசை அறுத்தான்ம பூசைக்கு சாரதை
    ஓசை சதங்கையொலி ஓம்….(27)

    நையப் புடைப்பாள் நமதகந்தை போக்கிட
    ஐயம் அகன்றதும் ஆதரவாய் -கையைப்
    பிடித்திழுத்துச் செல்வாள் பரமசுகம் கூட்ட
    படித்ததெலாம் பெண்ணிவள்முன் பாழ்….(28)

    கோனார் கணக்கினில், கம்பன் கவிதையில்
    நானார் விளக்கநூல் நாற்பதில் -மூணாறில்
    எண்ணும் எழுத்துமாய் எங்கும் இருப்பவளை
    எண்ணல் அயன்கை எழுத்து….(29)

    பேசக் கொடுத்ததில்லை பாரதியின் தாய்மொழி
    கோஷமிட்டு கூற்றன் குதிக்கஆ -வேசமுற்று
    நாரணா, நான்முகா, நாதா நமச்சிவாயா
    கூறநா கிட்டிடும் காப்பு….(30)

    எண்ணமவள் நேற்று எழுத்தவல் இன்றுநாம்
    பண்ணும் செயலவள் பின்நாளை -பெண்ணவள்
    ஆன்றோர்க்கு ஞானம் அறிவிலார்க்கு ஆணவம்
    தேன்தோன்றும் தாய்சொல் தமிழ்….(31)

    கீரன் திருமுரு காற்றுப் படையவள்
    மாறன் திருவாய் மொழியவள் -சூரன்
    மகாகவி பாரதியின் மாங்குயில் பாட்டு
    தகாதோர் செவிக்கவள் திட்டு….(32)

    வண்டுவந்து மொய்க்கா வரைந்த மலர்சோலை
    கொண்டவர்மன் ஓவியத்தில் கால்மடித்து -முண்டகத்தின்,
    மெல்லிதழில், தோகை மயிலன்ன தடாகத்தில்
    நல்கிடுவாள் யாழில் நலம்….(33)

    என்பிழைகள் ஏராளம் என்றாலும் அன்னையே
    புன்மொழியான் என்னைப் பொறுத்தருள்வாய் -உன்விழியால்
    கூட்டு தமிழை கவிபாடும் ஆற்றலை
    ஏட்டுச் சுரைக்காய் எனக்கு….(34)

    பாக்கு பழமிலை பூக்கள் பணிவெதிர்
    பார்ப்பாள் பராசக்தி பாரதி -வாக்கில்
    வினயமுடன் வித்தை விரும்புவோர் தம்மை
    தனயனென ஏற்பாள்அத் தாய்….(35)

    வேசிவரக் காத்தவடை தோசை வரதனை
    ஆசுகவி ஆக்கிய ஆனைக்கா -ஆசிகையே
    காளமேகம் வாய்க்கெட்டி கைக்கெட் டியவாணி
    மூளயோகம் என்வாய்க்கும் மூட்டு….(36)

    பாத்தநூறு தெய்வத்தில் பாரதியை போலிங்கு
    காத்திருக்க வைக்கா கடவுளெது -கூத்தனூர்
    தேவி மனம்வைத்தால் தேளின் கொடுக்கிலும்
    காவியம் கொட்டும் களிப்பு….(37)

    சாத்திரங்கள் வேதங்கள் கூத்தனூர் தேவியின்
    நேத்திரத்து தீர நுணலிமைகள் -பாத்திரம்
    கண்டவள் பார்வை கருவண்டு போடுமே
    பண்டிதப் பிச்சை பிறப்பு….(38)

    பண்டித வன்புலிக்கு பாமரத் தோல்போர்த்தும்
    மண்டை கனத்தில் மிதக்குங்கால் -எண்டிசைக்கும்
    மூளியைக் காவிய மன்னனாய் மாற்றிடும்
    காளியின் தாஸன் கதை….(39)

    வேதவ்யாசன் சொன்னது வேழம் தொகுத்தது
    கீதையைக் கண்ணன் கொடுத்தது -ஏதுமே
    வெற்றிக்குப் பின்னிருந்து வாணி விதைத்ததே
    முற்றும் துறக்கவும்அம் மாது….(40)

    கூனியின் சூழ்ச்சியும் கைகேயி வீழ்ச்சியும்
    மானி இராமன் முதிர்ச்சியும் -தோணி
    குகனின் நெகிழ்ச்சியும் குன்றனைய வாயு
    மகனனுமன் வாக்குமவள் மாண்பு….(41)

    பால்முகமும் வேல்விழியும் மால்மருவா நூல்மருங்கும்
    ஆல்சிவன்பெண் பால்வடிவாய், நால்மறையும் -தாள்தழுவ
    சீதமலர் போதமர்ந்து போதிக்கும் ஏதமில்
    லாதவள்யாழ் கீதம் லயிப்பு….(42)

    கூனியின் சூழ்ச்சியில் கைகேயி வீழ்ச்சியில்
    மானி இராமன் முதிர்ச்சியில் -தோணி
    குகனின் நெகிழ்ச்சியில் குன்றனைய வாயு
    மகனின்சொல் வாக்கிலவள் மாண்பு….(43)

    காடுவரை சென்றங்கு கொள்ளியில் வெந்துஎமன்
    ஏடுரைத்த வண்ணம் எரிவாயில் -போடும்முன்
    முட்டா ளையும்காக்கும் மந்திரமாம் வாணியைநா
    கட்டாலப் போறவனே கொள்….(44)

    தாத்தனூர் சேர்த்த திரவியங்கள் செல்லாது
    கோர்த்தநூறு சுற்றமும் கூடவரா -கூத்தூர்
    பேடையை நம்பிநீ பாடை படுத்திருக்க
    காடென் கடைசிவரை காப்பு….(45)

    கல்லறைக் காட்டினில் செல்லரித் தாலுமுடல்
    சொல்லரித்துப் போகாது சோர்வடையாய் -புல்லரித்து
    போற்றி உனைத்தூக்கி பூர்புவஸ் லோகத்திற்(கு)
    ஏற்றி விடுவான் எமன்….(46)

    தெக்குவாய் கூறிடும் தோத்திரங்கள் சுத்தமாய்
    மக்குபோய் ஆளும் மகாசபை -சுக்கலான
    ஓலைச் சுவடி உவேசா அவர்களால்
    நாளைக் கடந்துநிற்கும் நூல்….(47)

    கற்றதனால் ஆயபயன் நற்றமிழாள் நல்லுறவைப்
    பெற்றதே போதுமென்று போதியமர் -மற்றதெலாம்
    செந்திருவால் செல்வமும் சங்கரியால் வீரமும்
    வந்திரும்பார் வாணி வகுத்து….(48)

    போகத்தில் விந்து புகுமுன் புகுந்தங்கு
    மோகச் சினைமுட்டை மூளையை -வேகவைத்து
    பாமரனா, பண்டிதனா, மாமர மண்டையா
    தாமரையாள் தந்திடுவாள் தீர்ப்பு….(49)

    உச்சிக் குடிமியை ஊடாடும் பூணலை
    மெச்சிடும் ஆசார மேன்மையை -த்ச்சமாய்
    எண்ணும் கலைவாணி ஏற்பாள் வினயத்தை
    மின்னும் அணியாய் மகிழ்ந்து….(50)

    வீணை படிகமணி வேதக் கரத்தளை
    பானை பிடிக்குமயன் பத்தினியை -சேனை
    கலைகள்எண் ணென்சூழ செந்தா மரையில்
    விளையும்வெண் பூவை வணங்கு….(51)

    பத்தரைப் பொன்னில் பதினாறாம் யவ்வனத்தில்
    முத்திறைக்கும் சேயின் முறுவலில் -சித்திரையில்,
    புத்தரின் மோனத்தில், புண்ணிய தீர்த்தத்தில்
    இத்தரைதர் மத்தில் இவள்….(52)

    காசியில் கங்கையில், ஆசியில், ஆண்மையில்
    வாசி அடக்கும் விளையாட்டில் -பூசிடும்
    மாசிவை வெண்ணீற்றில், ஹாசிய நாடகத்தில்
    ஆ!சிரி அப்பா அவள்….(53)

    தண்டடியில் தூங்கி தவமகுடி கேட்டெழுந்து
    மண்டயிடித் தாங்கே மலமறுக்கும் -குண்டலினிப்
    பாம்புக்(கு) அடங்காது, பாரதியின் கண்ணிநுண்
    தாம்புக்(கு) அடங்கத் தெருள்….(54)

    ஈரெட்டு ஆறெட்டை ஈன்றவள், நான்மறையை
    சீராட்ட வந்த செவிலித்தாய் -பாரேட்டுப்
    பாக்கள் பதிகங்கள் பாசுரங்கள் யாவையும்
    ஆக்கி சமைத்திடும் ஆய்….(55)

    அஞ்சிலே சம்பந்தர்(கு) ஆரா அமுதளித்து
    பிஞ்சில் பழுக்கவைத்த பார்வதி -கஞ்சியை
    கல்வி ‘நகரேஷு காஞ்சி’யாய் ஆக்கினள்
    செல்விகா மாட்சியில் சேர்ந்து….(56)

    பொற்றா மரைக்குளமே, போட்ட பதிகங்களை
    சற்றும் முழுகாது சேர்த்தவளே -கொற்றவள்
    மீனாட்சி பிள்ளைத்த மிழ்சொல் குருபரர்
    நாணாச்சு வில்லம்பு நீ….(57)

    எண்ணென் கலைகளை ஏழு சுரங்களில்
    பண்ணென யாழில் பயின்றிடும் -அன்னத்து
    வாகனன் பத்தினி வெண்தா மரைவாணி
    மோகனென் வாக்கினில் முந்து….(58)

    வேதயிதி ஹாசபு ராண உபநிடதம்
    யாதுமுன் மூச்சில் இழையும்சங் -கீதமாகும்
    கோத்த படிகமாலை யோடுகூத்த னூர்வாழும்
    ஆத்தாளே ஆசுகவி ஆக்கு….(59)

    வித்தை சிறக்க விளைவுகள் மேன்மையுற
    சித்தம் சிதறாது சீர்பெற -புத்தியில்
    வாநீ அமர்ந்திட வாக்கு பெருகிட
    வாணியின் தாளை வணங்கு….(60)

    தன்னேரில் லாதவள் தானே தனக்குவமையாள்
    பொன்னேர் முகமும் புலமையால் -மின்னேர்
    வசீகர வாணி வழங்குவாள், ஞானப்
    பசீகரம் ஏந்திப் பிழை….(61)

    வெற்றிட மாய்விளங்கும் சிற்றிடையை, செந்தமிழ்ப்பால்
    முற்றியத் தாய்மை முலையிரெண்டை -நெற்றியிடைக்
    குங்குமப் பொட்டை, கமலத் தயன்பெட்டை
    செங்கமல மொட்டை சரண்….(62)

    வந்தனம் பாரதி வாணி சரஸ்வதி
    மந்தனென் மூளை முடுக்கினில் -வந்துநுண்
    ஆன்ம தரிசன ஆர்வம் பெருக்கிடு
    நான்மகன் அன்றோ நினக்கு….(63)

    வாணி மஹாலதன் வாசலில் வீற்றிருக்கும்
    ராணியே நாடக ஏணியே -நானினி
    எப்போதும் நிந்தன் எழிலுருவை மாந்திட
    இப்போதே நெஞ்சம் இரங்கு….(64)

    கோபம் அகங்காரம் கர்வம் புறங்கூறல்
    தாபம் தணியாதோர் தீவீரம் -பாபம்
    வரிந்திடச் செய்திடும் வீணர்தம் தீங்கில்
    இருந்திட மாட்டாள் இவள்….(65)

    கம்பனின் இல்லத்து கட்டு தறிபாட
    நம்புமென் வாயுண்ணும் நோன்பிற்கா -அம்பையே
    உண்ணதான் வாயென்றால் ஊமையாய் ஆக்கிடு
    பண்ணது பின்னேபெப் பே….(66)

    தோப்பில் துரவில் தளும்பும் அடவியில்
    மோப்பம் பிடிக்கும் மலர்வண்டில் -மேய்ப்புல்லின்
    வண்ண மரகதத்தில் வெற்படி வாரத்து
    மண்ணில் மழையின் மணம்….(67)

    வாதாடல் வம்பிழுத்தல் வஞ்சித்தல் வைத்துமனை
    சூதாடல் மாற்றான் மனைசுகித்தல் -தோதாக
    வந்தவரை ஏய்த்து வழிப்பறி செய்தலிவை
    அந்தவா ணிக்கு அவம்….(68)

    சத்துவத்தில் சாந்தமாய், சாகசத்தில் ராஜசமாய்
    சுத்தமன தாமசத்தில் சும்மாவாய் -அத்தனையும்
    தாண்டி அனுபூதி தந்திடும் தாயிவளை
    வேண்டிட வையத்தில் வான்….(69)

    வலுவிவள் சேர்க்கை, வளமிவள் நூற்கை
    புலியிவள் மான்தோல் போர்த்தி -எளிமையாய்
    கோலம் கொடுத்தாலும், கூறக் கலம்பகம்
    காலன் உயிருக்கே காவு….(70)

    கற்பனை தந்து கவிதை களைத்தந்து
    தற்பெருமை தந்துனைத் தாழ்த்திடுவாள் -அற்பனாய்
    செய்வள் சரஸ்வதி, சிந்தைக்கப் பால்செல்ல
    பெய்வள் திருஞானப் பால்….(71)

    தனியானை வரும்முன் மணியோசை யாம்போல்
    கனிவான சொல்முன் குரலில் -தணிவும்
    உடையவர்கள் நாவில் சடையப்ப வள்ளல்
    கொடையளிப்பாள் கம்பன் கவிக்கு….(72)

    கோல மயிற்சாயல் கூவும் குயில்வாயள்
    நூலை நிகர்த்துநெளி நுண்ணிடையாள் -பாலை
    வனச்சோலை பாக்கள் விழையும் கவிக்கு
    மனச்சோர்வை நீக்கும் மருந்து….(73)

    எழுதா கிழவி, எழுதிப் பழக
    பொழுதும் அணைத்துப் புணரும் -அழகி
    துடியிடையில் பிள்ளைத் தமிழேந்தி, வேண்ட
    பொடிநடை யாய்வருவாள் பார்….(74)

    வெண்தா மரைமேனி, செந்தா மரைப்பாதம்
    விண்தா மரைபூத்தோன் வல்லியே -கண்தா
    மரைபாராய் பண்தா மறைவாணி என்தாய்
    முறையன்றோ நீயிம் மகர்க்கு….(75)

    பாழெனத் தள்ளாதிப் பாவியை உந்தன்கை
    யாழெனக் கொண்டுமடி ஏந்திடு -ஊழெனை
    வாட்டாத வண்ணம் வகைசெய்வாய் வாணி
    பாட்டெழுதப் போகுமே பாடு….(76)

    தேவாரம் வேண்டாம் திருவாய் மொழிவேண்டாம்
    நாவோரம் நின்றென்னை நானறியும் -தீவீரத்
    தேடலில் ஈடுபட்டு வீடான் மனிலென்றும்
    நீடூழி வாழவைவா ணி….(77)

    கூத்தன் சபாபதி கூடப் பிறந்ததால்
    கூத்தனூர் கொண்டாயோ கோயிலாய் -வாத்தியார்
    அம்மா எனக்களிப்பாய் ஆடா(து) அசங்காது
    சும்மா இருக்கும் சுகம்….(78)

    காளமேகம் வெண்பாவில், கம்பன் விருத்தத்தில்
    காளிதாசன் கற்பனை கங்கையில் -ஏளுகின்ற
    பார தியெனதுவெண் பாக்களில் சீராக
    ஊர திசியக்க உய்….(79)

    சங்கத் தமிழும், சதுர்மறையும், சாத்திரமும்
    செங்கண்மால் நாம சகஸ்ரமும் -சங்கரியின்
    ஆயிரம் பேரும் அதிகாரம் பெற்றது
    தாயிவள் வாய்வந்த தால்….(80)

    நாடகம், சங்கீதம், நாட்டியம், முத்தமிழ்
    பாடும் பதிகங்கள் பாசுரங்கள் -நாடிடும்
    தன்முத் திரைபதிக்க தேவி சரஸ்வதியின்
    சின்முத் திரைக்கை சிறப்பு….(81)

    சொல்லக்கேள் நெஞ்சே சகத்தில் பிறந்திறக்கும்
    அல்லல்தீர் மாமருந்து ஆகுமிங்கு -வெள்ளத்தை
    ஒத்து விரைந்துனக்கு ஓதுவிக்கும் ஓங்கார
    வித்தைக்(கு) அதிபதியின் வாக்கு….(82)

    மாதவம் செய்தும் மகாயக்ஞம் செய்துமுன்
    தீதவம் தீராது, தாமரைப் -போதமர்
    வாணியை, ஞான விசார உயர்வளிக்கும்
    ஏணியை எந்நாளும் ஏத்து….(83)

    நால்செல்ல நாள்செல்ல நாம்செல்ல வேண்டுமே
    ஆள்கொல்லி கூற்றன் அழைப்பானே -கேள்நல்ல
    வார்த்தைக்(கு) அதிபதி வாணியைப் போற்றிடப்
    பூர்த்தியா கும்பார் பிறப்பு….(84)

    நாடுவாய் நெஞ்சே நளினம் அமர்வோளை
    சூடுவாய் நெஞ்சே சரோருகத்தாள் -பாடுவாய்
    நெஞ்சே பதுமத்தில் நல்லதோர் வீணையைக்
    கொஞ்சும் கலையாள் கழல்….(85)

    அறிவு அலுத்திடும், ஆன்மீக ஞானச்
    செறிவு நிலைத்திடும் சான்றோர் -உறவாய்
    நெறியை உணர்த்திடும் நான்முகன் பத்தினி
    வெறிநான் அகந்தை விலக்கு….(86)

    நாக்கில் நரம்பின்றி நாணாது பேசுவோர்
    வாக்கில் வராள்கலை வாணியவள் -தூக்கில்
    இடப்படும் போதும் இனியன கூற
    தடைப்படுமே தண்டனை தீர்ப்பு….(87)

    கண்ணன் குழலில் கணபதி மோதகத்தில்
    வண்ண மயிலூர்வோன் வேல்முனையில் -மின்னிம்
    திருவில், மஹேசன் தவத்தில் திகழ்வாள்
    உருவிலிவள் பாயும் ஒளி….(88)

    “தும்பைவெண் பட்டுடுத்தி தாமரை வீற்றவளை,
    நம்பிஊ டாடும்நன் நூலிழையும், -கம்பனில்லக்
    கட்டுத் தறியில் கவியாகி நெய்துவெண்
    பட்டளிக்கும் பாரதிக்கே பார்”….(89)

    “கதிர்முகத்தாள் செந்நெல் கதிர்நகத்தால் யாழில்
    உதிர்சுரத்தால் எண்எண் உரைப்பாள் -சதுர்முகத்தோன்
    பத்தினி என்வாக்கில் பூத்திட நீயென்னைப்
    பத்திநீ எண்ணு பரிந்து”….(90 )

    “தொழுகைக்கும் , காலில் விழுகைக்கும் , கண்ணீர்
    அழுகைக்கும் வாணி அசையாள் – கழுகைத்தன்
    வாகனமாய்க் கொண்டோன் வயிறுதித்தோன் பத்தினி
    நாகனமற் றோர்பால் நிலைப்பு”….(91)

    “நாபிக் கமலத்தில் நன்கமர்ந்து நானிலம்
    சோபிக்க ஓதும் சதுர்முகனை -தாபிக்க
    வைத்தவளைப் போற்றிட , வையத்(து ) தளவுகல்வி
    கைத்தல நெல்லிக் கனி”….(92)

    ”அண்டாது வெவ்வினைகள், ஆய கலைகளை
    விண்டோதும் வீணை விரலாலைக் -கண்டோடும்;
    கொண்டாடும் அன்பர் குடும்பத்து வாரிசாக
    வெண்டா மரையாள் விருப்பு”….(93)

    “விருந்தா வனக்கண்ணன் வேய்ங்குழல் வாக்கு,
    கருந்தா மரைக்கண்கள், கூறைக்குள் -பொருந்தாத
    இல்லா இடையை , இருத்துவோர் புத்தியில்
    சொல்லாள் பதத்தின் சுவடு”….(94)

    “சோதித்த பின்வாழ்க்கை சொல்லித் தரும்பாடம்;
    வேதத் தயன்மணந்த வாணியோ -போதித்து
    கூட்டுவாள் சத்சங்கம் ,காட்டுவாள் நன்னெறி
    தீட்டுவாள் வைரமாகத் தேய்த்து”….(95)

    “தலைஎழுத்தை மாற்றும் திருப்பட்டூர் அய்யன்
    முலையழுத்த மோகிக்கும் மாதே -கலைஎழுத்தென்
    மேடை வசனத்தின் மேன்மைக்கு ,வெண்ணிற
    ஆடை அணிந்தோய் அரண்”….(96)

    ”ஆரா முதனாகம் ஆள்பவளும், வெள்ளிமலை
    ஊரான் இடபாகம் உற்றவளும் -கூறார்
    பதிலுனக்கு ஞானம் பொருத்து; ,சரசு
    வதியே வினாவிடை வீடு”….(97)

    “மகர யாழை மடியேந்தி மீட்டி
    அகர முதல அளிப்பாள் -நுகர்வோர்
    கவியிளங்கோ ,கம்பன், குமர குருபரராய்
    புவிவிளங்க வாக்கன் பளிப்பு”….(98)

    “சம்போ மகாதேவன் சோதரி, செவ்விதழ்
    அம்போ ருகமமர்ந்தோய் ஆதரி -அம்பே
    சகலகலா வல்லி, சரஸ்வதி வாணி
    புகலெனக்குன் பாதாம் புயம்”….(99)

    ”பாத நமஸ்காரம், பூசை புனஸ்காரம்
    ஏதும் புரிந்திலேன் என்றாலும் -ஆதுரம்
    உற்றெனது வாக்கிலே உட்கார்ந்து வெண்பாக்கள்
    பெற்றிட வைத்தாய்வெண் பூ”….(100)
    “புத்தகம் , முத்துமணி பக்கயிரு கைபற்ற
    மத்தயிரு கையால் மடியேந்தும் -சித்திர
    யாழினை மீட்டிடும் ஏழிசைச் செல்வியே
    வாழிய வாழிய வே”….(101)
    —————————————————————————————————————

    Share
  • வருக வருக வருகவே!

    இசைக்கவி ரமணன்

    வருக வருக வருகவே!

    Tamil-Daily-News-Paper_88965570927

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B5/[/mixcloud]

    அலைமகளே! கலைமகளே! மலைமகளே!
    வாசல் திறந்து வைத்தோம், எங்கள்
    வாழ்வை மலராய் அளித்தோம்! (வருக)

    வறுமை நீங்கிட வேண்டும், மனது
    வள்ளலாய் மாண்புற வேண்டும்
    பொறுமை துணிவு உறுதி அழகு
    பூரண மாகிட வேண்டும்
    அகமும் புறமும் திருவே மலரும்
    ஆனந்தம் ஒங்கிட வேண்டும்! (அலைமகளே)

    அறிவில் ஒளியுற வேண்டும், அதனால்
    அகிலம் பயனுற வேண்டும்
    செறிவு திறமை தெளிவு கலைகள்
    செம்மையாய்த் திகழ்ந்திட வேண்டும்
    மனமெனும் மலரில் நினைவாய் அமர்ந்து
    தினமெனை மீட்ட வேண்டும்! (கலைமகளே)

    தடைகள் தகர்ந்திட வேண்டும், நீ எந்தத்
    தருணமும் காத்திட வேண்டும்
    கடமை வீரம் கருணை கவிதை
    காலமும் தொடர்ந்திட வேண்டும்
    வெளியிலும் உள்ளும் எதிரிகள் இல்லா
    வெற்றியே நீ தர வேண்டும்! (மலைமகளே)

    அண்டபகிரண்டம் பந்து விளையாடும் அன்னை சக்தி வருக! எங்கள்
    அகமும்புறமும்பல சுகமும்தினம்தந்து மகிழும் தேவி வருக!
    கண்டதுண்டமாய் கவலை வீழ்த்திடும் காளி நேரில் வருக! எங்கள்
    கலியை நீக்கிடும் கருணைத் தாயகம் ராஜேஸ்வரி வருக! ராஜ
    ராஜேஸ்வரி வருக!

    08.08.2008/காலை 8.40/நவதுர்கா சந்நிதி, ஜாகேஷ்வர்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy1

    “ஏனிந்த எக்காளம் யாதவக் கண்ணனுக்கு
    தானந்த தற்பரம் தானென்ற -ஆனந்த
    ஞானம் பிறந்ததோ ! நான்யார் பயின்றதில்!;
    வேணும்கட் டிக்கு வேணு”….கிரேசி மோகன்…
    (OR)
    ஞானம் பிறந்ததோ ! நான்யார் பயிற்சியால்!;
    சோணை ரமண சுகம்”….

    ****ஆதிமுலமே ஆயினும் அவனியில் அவதரித்து விட்டால் ஆதிதன் முலத்தை மறக்கும் அஞ்ஞானம் தவிர்க்க முடியாது போலிருக்கிறது…அது அகல அருணை ரமணர் அருளிய வழி “நான் யார்” (WHO AM I) விசாரணை…நம்மைப் போலவே நவநீதனும் நான் யார் விசாரணை செய்து நனி ஆனந்தம் கொண்டு நர்த்தனம் ஆடுகிறான் போலும்….

    “பூந்துழாய் பிய்ய , பசுங்கன்று பாய்ந்தோட
    தீந்தமிழ் ஆண்டாள் திருப்பாவை -ஏந்திய
    காதினால் வந்ததே கோதையின் மீதுற்ற
    காதலாம் கண்ணனுக்குக் காண்”….கிரேசி மோகன்….

    காதலுக்கு கண்ணு கிடையாது….கண்ணன் ஆண்டாள் மீது கொண்ட
    காதலுக்கு காது கிடையணும்….LOVE IS BLIND but KRISHNA’S LOVE IS SOUND….

    Share
  • கம்பனும் வால்மீகியும் – இலக்கிய ஒப்பீடு – 2

    கம்பனும் வால்மீகியும் – இலக்கிய ஒப்பீடு  – 2

    ஒரு அரிசோனன்

    சென்ற ஒப்பீட்டில் அகலியை சாப விமோசன’த்தைப் பற்றியும், இராமன்-சீதையின் முதல் சந்திப்பைப் பற்றியும் கண்டோம். கம்பனும் வால்மீகியும் எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்பதையும் கண்டோம்.  இருவரும் அவரவர்கள் காலத்துப் பண்பாட்டையும், மரபையும் ஒட்டியே இராமகாதைக்கு வடிவம் கொடுத்தார்கள். மாய மான் இராமன் குரலில் ஓலமிட்டதைக் கேட்டு சீதைக்கும், இலக்குவனுக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தைப் பற்றி எவ்வாறு எழுதி உள்ளார்கள் என்பதைக் காண்போம்.

    …பொன்மானைக் கண்டதும், அதைப் பிடித்துத் தரும்படி இராமனிடம் கேட்கிறாள் சீதை.  அது மாய மான் என்று அறியாது, இலக்குவனை சீதைக்குக் காவலாக வைத்துவிட்டு, அதைப் பின்தொடர்ந்து செல்கிறான் இராமன். ஓடிக் களைத்த இராமன், மானை அம்பால் அடிக்கிறான். மாய மான் உருவம் கொண்ட அரக்கனான மாரீசன், “ஏ சீதா, ஏ லட்சுமணா!” என்று இராமனின் குரலில் கூக்குரலிட்ட வண்ணம் மண்ணில் சாய்ந்து இறக்கிறான். அக்கூக்குரல் சீதை, மற்றும் இலக்குவனின் காதுகளில் விழுகிறது…

    வால்மீகி சொல்வதைக் காண்போம்:

    आर्तस्वरम् तु तम् भर्तुः विज्ञाय सदृशम् वने |
    उवाच लक्ष्मणम् सीता गच्छ जानीहि राघवम् || ३-४५-१

    ஆர்த்தச்வரம் து தம் பர்த்து: விக்ஞாய ஸத்ருஸ’ம் வனே |

    உவாச லக்ஷ்மணம் சீதா கச்ச ஜாநீஹி ராகவம் || 3-45-1

    வனத்தில் எழுந்த பரிதாபமான குரலைத் தன் கணவனுடையதாக அறிந்து, இராமனிடம் செல் என்று இலக்குவனிடம் சீதை கூறினாள்.

    न जगाम तथा उक्तः तु भ्रातुः आज्ञाय शासनम् || ३-४५-४

    ந ஜகாம ததா உக்த: து ப்ராது: ஆக்ஞாய ஸா’ஸனம் || 3-45-4

    அவ்வாறு சொல்லப்பட்டும், அண்ணனின் ஆணையை நினைவில் கொண்டு (இலக்குவன்) செல்லாமலிருந்தான்.
    तम् उवाच ततः तत्र क्षुभिता जनक आत्मजा |

    सौमित्रे मित्र रूपेण भ्रातुः त्वम् असि शत्रुवत् || ३-४५-५

    தம் உவாச தத: தத்ர க்ஷுபிதா ஜனகாத்மஜா |

    ஸௌமித்ரே மித்ர ரூபேண ப்ராது: தவம் அஸி சத்ருவது || 3-45-5
    यः त्वम् अस्याम् अवस्थायाम् भ्रातरम् न अभिपद्यसे |

    इच्छसि त्वम् विनश्यन्तम् रामम् लक्ष्मण मत् कृते || ३-४५-६

    ய:த்வம் அஸ்யாம் அவஸ்த்தாயம் ப்ராதரம் ந அபிபத்தியசே |

    இச்சஸி த்வம் வினஸ்’யந்தம் ராமம் லக்ஷ்மண மத் க்ருதே || 3-45-6
    लोभात् तु मत् कृतम् नूनम् न अनुगच्छसि राघवम् |

    व्यसनम् ते प्रियम् मन्ये स्नेहो भ्रातरि न अस्ति ते || ३-४५-७

    லோபாது து மத் க்ருதம் நூனம் ந அனுகச்சஸி ராகவம் |

    வ்யசனம் தே ப்ரியம் மன்யே ஸ்நேஹோ ப்ராதரி ந அஸ்தி தே || 3-45-7

    அதைக்கண்டு மனம் கொதித்த ஜானகி அவனிடம் கூறினாள். “சுமித்திரையின் மகனே! நண்பனைப் போன்ற உருவத்துடன் உடன் பிறப்பின் எதிரியாக நீ இருக்கிறாய்.  எப்பொழுது நீ இந்தமாதிரி நிலையில் அண்ணனின் (உதவிக்குப்) போகாமல் இருக்கிறாயோ, இலக்குவா, நீ எனக்காக (என்னை விரும்பியே) இராமனின் அழிவை விரும்புகிறாய்.  என்(மீது) எழுந்த பேராசையால் அன்றோ தேவைப்படும்போது இராகவனைப் பின்தொடராமல் (உதவிக்குச் செல்லாமல்) இருக்கிறாய்!  தவிப்பில் இருக்கும், (அனைவருக்கும்) பிரியமான அண்ணனிடம் உனக்கு அன்பு இல்லை.”

    …இப்படிப் பட்ட கடும் சொற்களை சீதை கூறினாலும், இலக்குவன் நிதானமாக, “இராமனை யாராலும் துன்புறுத்த இயலாது, மூவுலகங்களுமே சேர்ந்து எதிர்த்தாலும், அவனைக் கட்டுப்படுத்த முடியாது, இப்பொழுது கெட்ட குரல் இராமனுடைது அல்ல. மாயையை உண்டு பண்ணும் அரக்கனுடையதாக இருக்கலாம்.  அந்த சிறந்த மானைக் கொன்றுவிட்டு உங்கள் கணவர் திரும்புவார்.” என்று பதினோரு சுலோகங்களில் எடுத்துரைக்கிறான். அவன் சொல்லில் நம்பிக்கை இல்லாததாலும், ஆபத்தில் மாட்டிக்கொண்டு இருக்கும் தன் கணவரின் உதவிக்குச் செல்லாமல், தான் கடும் சொல் கூறியும் தன்னை விட்டு அகலாமல் இருக்கிறானே என்ற பதட்டத்தினாலும் சீதை மேலும் சீற்றமடைகிறாள்…

     

    सुदुष्टः त्वम् वने रामम् एकम् एको अनुगच्छसि |

    मम हेतोः प्रतिच्छन्नः प्रयुक्तो भरतेन वा || ३-४५-२४

    ஸுதுஷ்ட: த்வம் வனே ராமம் ஏகம் ஏகோ அனுகச்ச்ஸி |

    மம ஹேதோ: ப்ரதிச்சன்ன: பிரயுக்தோ பரதேன வா  || 3-45-24

    समक्षम् तव सौमित्रे प्राणान् त्यक्ष्यामि असंशयम् || ४-५-२६

    ஸமக்ஷம் தவ ஸௌமித்ரே ப்ராணானு த்யக்ஷ்யாமி அஸம்ஸ’யம் | 3-45-26

    रामम् विना क्षणम् अपि न एव जीवामि भूतले |

    इति उक्तः परुषम् वाक्यम् सीतया रोमहर्षणम् || ३-४५-२७

    ராமம் வினா க்ஷணமபி ந ஏவ ஜீவாமி பூதலே |

    இத்யுக்த: பருஷம் வாக்கியம் சீதயா ரோமஹர்ஷணம் || 3-45-27

    अब्रवीत् लक्ष्मणः सीताम् प्रांजलिः विजितेन्द्रियः |

    उत्तरम् न उत्सहे वक्तुम् दैवतम् भवती मम || ३-४५-२८

    அப்ரவீது லக்ஷ்மண: சீதாம் ப்ராஞ்சலி: விஜிதேந்த்ரிய: |

    உத்தரம் ந உத்ஸஹே பகத்தும் தைவதம் பவதி மம || 3-45-28

    वाक्यम् अप्रतिरूपम् तु न चित्रम् स्त्रीषु मैथिलि |

    स्वभावः तु एष नारीणाम् एषु लोकेषु दृश्यते || ३-४५-२९

    வாக்கியம் அப்ரதிரூபம் து ந சித்ரம் ஸ்த்ரீஷு மைதிலீ |

    ஸ்வபாவ: து ஏஷ நாரீணாம் ஏஷு லோகேஷு திருஸ்’யதே || 3-45-29

    श्रोत्रयोः उभयोः मध्ये तप्त नाराच सन्निभम् |

    उपशृण्वंतु मे सर्वे साक्षिनो हि वनेचराः || ३-४५-३१

    ராமம் வினா க்ஷணமபி ந ஏவ ஜீவாமி பூதலே |

    இத்யுக்த: பருஷம் வாக்கியம் சீதயா ரோமஹர்ஷணம் || 3-45-31

    गमिष्ये यत्र काकुत्स्थः स्वस्ति ते अस्तु वरानने || ३-४५-३३

    கமிஷ்யே யாத்ரா காகுத்ஸ்த்த: ஸ்வஸ்தி தே அஸ்து வரானனே || 3-45-33

    रक्षन्तु त्वाम् विशालाक्षि समग्रा वन देवताः |

    निमित्तानि हि घोराणि यानि प्रादुर्भवन्ति मे |

    अपि त्वाम् सह रामेण पश्येयम् पुनरागतः || ३-४५-३४

    ரக்ஷந்து த்வாம் விசாலாக்ஷி ஸமக்ரா வன தேவதா: |

    நிமித்தானி ஹி கோராணி யானி ப்ராதுர்பவந்தி மே |

    அபி த்வாம் ஸஹ ராமேண பஸ்’யேயம் புனராகத: || 3-45-34

    “மிகவும் கெட்டவனே! என்பொருட்டு (என்னை அடைவதற்காக) நீ தனியாகவோ, அல்லது பரதனால் தூண்டப்பட்டோ, இரகசியமாக காட்டுக்கு இராமனைத் தொடர்ந்து வந்திருக்கிறாய். சுமித்திரையின் மகனே, உன் முன்னாலேயே என் உயிரைத் துறந்து விடுவேன். இப்புவியில் ஒருகணமும் இப்புவியில் இராமனில்லாமல் நான் வாழ மாட்டேன்.” (கோபத்தினால்) மயிர்க்கூச்செறிவுற்ற சீதையால் இப்படிப்பட்ட குத்தும் சொற்கள் சொல்லப்பட்டன.

    (இதனால்) உணர்வு ஓடுங்கப்பட்டுப் போன இலக்குவன் சீதையைக் கைகூப்பிச் சொன்னான்.  “மைதிலி, (நீ) எனக்கு தெய்வமாக ஆகிறாய். பதில் உரைக்கவும் திறனற்றவனானேன்.  பெண்களிடம் சொல்லத்தகாத வார்த்தைகள் (இருப்பது) என்பது வியப்பல்ல. பெண்களுடைய இப்படிப்பட்ட இயல்பு இவ்வுலகங்களில் காணப் படுகிறது. (இவ்வாறு கடும் சொற்களைச் சொல்வது) இரு காதுகளுக்கு நடுவில் (தைத்த) சுடும் அம்பைப்போல இருக்கிறது. (இதைக்) கூர்ந்து கேட்கும் காட்டில் செல்பவர் எல்லோருமே (வனம் வாழ் தெய்வங்கள் அனைவருமே) இதைக் கேட்கிறார்கள்.

    “எங்கு காகுஸ்தர் (இராமன் இருக்கிறாரோ) அங்கு செல்வேன். இனிய முகம் உள்ளவளே! நீ நலமாக இருப்பாயாக. அகண்ட கண்களை உடையவளே! வனத்தில் இருக்கும் எல்லாத் தெய்வங்களும் உம்மைக் காப்பார்களாக! இந்த சகுனங்களை மதிப்பிட்டால், தீயனவாகவே எனக்குப் படுகின்றன.  இராமனோடு கூடத் திரும்பி வருங்கால், உம்மைப் நான் பார்ப்பேனோ?”

    गोदावरीम् प्रवेक्ष्यामि हीना रामेण लक्ष्मण |

    आबन्धिष्ये अथवा त्यक्ष्ये विषमे देहम् आत्मनः || ३-४५-३६

    கோதாவரீம் பிரவேக்ஷ்யாமி ஹீனா ராமேண லக்ஷ்மண |

    ஆபந்திஷ்யே அதவா த்யக்ஷ்யே விஷமே தேஹம் ஆத்மன: || 3-45-36

    पिबामि वा विषम् तीक्ष्णम् प्रवेक्ष्यामि हुताशनम् |

    न तु अहम् राघवात् अन्यम् कदाअपि पुरुषम् स्पृशे || ३-४५-३७

    பிபாமி வா விஷம் தீக்ஷ்ணம் பிரவேக்ஷ்யாமி ஹுதாசனம் |

    ந து அஹம் ராகவாது அன்யம் கதாபி புருஷம் ஸ்ப்ருசே || 3-45-37

    …இவ்வாறு இலக்குவன் சொன்னதும், நீர் மல்கும் கண்களுடன் சீதை,

    “இலக்குவா, இராமன் இல்லாவிட்டால், கோதாவரியில் புகுவேன், தூக்கில் தொங்குவேன், இல்லாவிட்டால், மலை உச்சியில் இருந்து (குதித்து) உடலைத் துறப்பேன். இல்லை, கடும் விஷத்தைக் குடிப்பேன்; தீயில் பிரவேசிப்பேன்..  இராகவன் அல்லாது மற்ற ஆடவர்கள் ஏன்னை ஒருபொழுதும் தொட விடமாட்டேன்”

    இவ்வாறு கூறி வயிற்றில் அடித்துக்கொண்டு அழுதாள். இப்படி அழுத சீதையை வணங்கிவிட்டு,  இராமன் சென்ற இடத்தை நோக்கிச் சென்றான், இலக்குவன்.

    கம்பர் இந்நிகழ்ச்சியை எவ்வாறு சித்தரிக்கிறார்?

    …மாய மானின் கூக்குரலைக் கெட்ட சீதை, இராமனுக்குத்தான் எதோ தீங்கு நேர்ந்துவிட்டது என் நினைத்து வயற்றில் அடித்துக்கொண்டு கீழே விழுந்தால். “நான் மானைப் பிடித்துக் கொடு என்று கேட்டதால் தானே இந்நிலை நேர்ந்தது என்று தரையில் புரண்டு அழுதாள்.

    குற்றம் வீந்த குணத்தின் எம் கோமகன்

    மற்று அவ் வாள் அரக்கன் புரி மாயையால்

    இற்று வீழ்ந்தனன் என்னவும் என் அயல்

    நிற்றியோ இளையோய் ஒரு நீ என்றாள்.  – 3.806

    “குற்றம் (என்பதே) கலக்காத என்னுடைய அரசகுமாரன், அந்த அரக்கன் செய்த மாயையால் நிலைதடுமாறி வீழ்த்து விட்டான் என்று அறிந்தும், என் அருகில் நிற்பாயோ, நீ ஒரு தம்பியோ?” என்றாள்.

    இவ்வாறு சீதை சினம் கொண்டு கேட்டவுடன், இராமனுடைய வலிமையைப் பற்றியும், யாரும் அவனை வெல்ல இயலாது என்றும், தம் இருவர் பெயரையும் சொல்லி அலறி இருப்பது மான் உருக்கொண்டு வந்த அரக்கன்தான் என்றும், கவலைப்படாமல் இருக்கும்படியும் சீதையை இலக்குவன் வேண்டுவதாகக் கம்பர் ஏழு செய்யுள்களில் கூறுகிறார்.

    என்று அவன் இயம்பலும் எடுத்த சீற்றத்தள்

    கொன்றன இன்னலள் கொதிக்கும் உள்ளத்தள்

    நின்ற நின் நிலை இது நெறியிற்று அன்று எனா

    வன் தருகண்ணினள் வலிந்து கூறுவாள்.  – 3.814

    ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்

    பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும் நீ

    வெருவலை நின்றனை வேறு என் யான் இனி

    எரியிடைக் கடித்து வீழ்ந்து இறப்பென் எனா.  – 3.815

    இந்த விதமாக அவன் (இலக்குவன்) சொல்லியும், (உள்ளத்தில்) எழும்பிய சீற்றத்தினால், தானே கொல்லப்படுவது போன்ற துயரத்தை அடைந்து, கொதிக்கும் உள்ளத்துடன், (இங்கு) நிற்கும் உனது நிலையானது நெறியில்லாத ஒன்றாகும் என்று கடிந்து சொல்ல ஆரம்பித்தாள். 

    ஒரு நாள் பழகியவர்கள்கூட உயிரையும் கொடுப்பார்கள். எனவே, உயர்ந்தவன் (இராமன்) தீங்கடையும் செய்தி கேட்டும், ஒன்றும் தோன்றாமல் நீ நின்று கொண்டிருக்கிறாய். இனி வேறு என்ன (செய்ய இயலும்)?  இப்போது நான் தீக்கு நடுவில் விழுந்து இறப்பேன்!” என்றாள்.

    அவளைத் தடுத்து நிறுத்திய இலக்குவன், அவள் கால்களில் விழுந்து வணங்கி, இராமன் தனக்கு இட்ட கட்டளையை மீறி, அவளைத் தனியாக விட்டுச் செல்லும்படி செய்ததை நினைத்து மனம் நொந்தவாறு செல்கிறான்.

    அறம்தனால் அழிவு இலது ஆகல் ஆக்கலாம்

    இறந்து பாடு இவர்க்கு உறும் இருக்கின் இவ் வழி

    துறந்து போம் இதனையே துணிவென் தொல்வினைப்

    பிறந்து போந்து இது படும் பேதையேன் எனா.  – 3.820

    நல்வினை(தர்மம்)யால் (மட்டுமே) அழிவு ஏற்படாதவாறு காக்க இயலும். இங்கு இருந்தால் இவருக்கு (சீதைக்கு) இறக்கும்படி ஆகிவிடும். இந்த இடத்தைவிட்டு நீங்குவதையே நான் துணிந்து செய்வேன். முன்வினைப் பயனால் உண்டான இந்த (வேதனையை) அனுபவிக்கும் பாவியானேன் என்று (மனதிற்குள் புலம்பினான்).

    இங்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால், கழுகுகளின் தலைவனான (ஜடாயு) பார்த்து தன்னால் இயன்ற வண்ணம் காத்துக்கொள்வான் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு சென்றான்.

     

    ஒப்பீடு

     

    இலக்குவன்-சீதை சொற்பரிமாற்றம் கம்பரால் சுருக்கமாகவே கொடுக்கப்பட்டிருக்திறது.  முதலில் சீதை அழுததை இரண்டு செய்யுள்களில் (8 வரிகளில்) கூறிய கம்பர், ஒரே ஒரு விருத்தப் பாவின் மூலம் (4 வரிகளில்), இலக்குவனை இராமனின் உதவிக்குச் செல்லுமாறு சீதை கூறியதாக எழுதி இருக்கிறார்..  வால்மீகி ஒரு சுலோகத்தில் (ஒரு வரியில்) மாய மானில் குரலை தனது கணவரின் குரல் என்று அடையாளம் கண்டு கொண்டபின், மூன்று சுலோகங்களில் (ஆறு வரிகளில்) இராமனுக்கு உதவியாகச் செல்லும்படி இலக்குவனிடம் சொல்வதாகச் சித்தரிக்கிறார்.

    துவக்கத்திலேயே வால்மீகியும், கம்பரும் வேறுபடுகிறார்கள்.  சீதையின் கழிவிரக்கத்தைப் பற்றி, தன்னால்தானே தன் கணவருக்கு இந்நிலை ஏற்பட்டதே என்று புலம்புவதைப் பற்றியும் கம்பர் விளக்குகிறார்.  ஆனால், வால்மீகியோ, மாய மானின் குரல், தனது கணவருடையது என்று நினைத்து சீதை இலக்குவனிடம் பேச ஆரம்பித்து விட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்து கம்பரும், வால்மீகியும் பெண்களைப் பற்றி சிறிது மாறுபாடாக எண்ணி இருக்கிறார்கள் என்று ஊகிக்கலாம்.  இது இலக்குவனின் வாய்மொழியாகப் பின்னர் வால்மீகி இராமாயணத்தில் வெளிப்படுகிறது.

    கம்ப இராமாயணத்தில், இலக்குவன் ஏழு பாக்களின் மூலம் (28 வரிகளில்), இராமனுக்கு எந்தவிதமான தீங்கும் நேராது என்றும், தன் அண்ணனின் வல்லமையும் விளக்குகிறான். வால்மீகி இராமாயணத்தில், இது சிறிது மாறுபடுகிறது.  சீதை சொல்லியும், இலக்குவன் ஏதும் சொல்லாமல் நின்றதாகவும், அதைப் பொறுக்காத சீதை ஐந்து சுலோகங்களின் மூலம் (பத்து வரிகளில்) இராமன் அழியவேண்டும் என்று இலக்குவன் விரும்புவதாகவும், அப்படி ஆகிவிட்டால், தன்னை அடையலாம் என்ற தகாத ஆசையினால் உதவிக்குச் செல்லாமல் நிற்பதாகவும், அவன் மீது கடும் சொற்களினால் குற்றம் சாட்டுவதாகவும் எழுதி உள்ளார். அதன் பின்னரே இலக்குவன், இராமனுடைய வல்லமையைப் பற்றி 10 சுலோகங்களில் (21 வரிகளில்) சொல்வதாக வர்ணிக்கிறார்.  வால்மீகி எழுதியதைப் போன்று  சீதையின் இலக்குவன் மீது கடும் சொல் அம்புகளை எய்யாததற்கு, கம்பரின் தமிழ் மரபும் ஒரு தலையாய காரணம் என்று படுகிறது.  தமையனின் தாரம் தாய்க்கு நிகர் என்பது தமிழர் பண்பாடு.  எனவே, தனயனுக்கு நிகரான இளைய பெருமாள் இலக்குவன் தன் மீது தகாத ஆசை கொள்ளுவான் என்று சீதையால் எண்ணிக்கூடப் பார்த்திருக்க இயலாது, அப்படி எழுதினால் சீதையைத் திருமகளுக்கு இணையாக என்ன, ஒரு சராசரிப் பெண்ணாகக் கூட, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அதை எழுதாமல், கம்பர் விட்டுவிட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனால், வால்மீகியோ, இலக்குவன் சீதையின் கடும் சொற்களுக்கு, தன்னைப் பற்றி கேவலமாகப் பேசப் பட்ட எந்தக் குற்றச் சட்டுகளுக்குமே பதில் எதுவும் சொல்லாமல், இராமனுக்கு எதுவும் நேர்ந்திருக்காது, அவரின் கட்டளையை மீறி நான் செல்ல முடியாது என்று மட்டுமே கூறுவதாக எழுதியுள்ளார். மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் வால்மீகி ஏன் இப்படி எழுதியிருக்கிறார், இலக்குவன் ஏன் சீதைக்கு தனது நேர்மையைப் பற்றி விளக்கம் தெரிவிக்கவில்லை என்று தோன்றும். முதலாவதாக, சீதையை சோபனே (शोभने), அதாவது, மங்கலமானவளே, மிகச் சிறந்தவளே என்றுதான் இலக்குவன் குறிப்பிடுகிறான். இதிலிருந்து அவளைப் பற்றி தவறான எண்ணம் தனக்கு எதுவும் இல்லை என்று ஒரே சொல்லில் தெரிவிக்கிறான். மேலும், சீதை இருக்கும் மன நிலையில் தான் என்ன சொன்னாலும் பயனில்லை என்றே அவன் நினைக்கிறான் என்று வால்மீகி நமக்குப் புரிய வைக்கிறார்.

    அதற்குப் பிறகும் சீற்றம் தணியாதவளாக, இலக்குவன் மீதும், ஏன் பரதன் மீதுமே குற்றச் சாட்டுகளை அடுக்குவதாக வால்மீகி எழுதுகிறார்.  கடைசியில், என்ன செய்தாலும் தன்னை அடைய முடியாது என்றும், தன்னை அடைய முயற்சித்தால் உயிரைப் போக்கிக் கொள்வதாகவும் சீதை சொல்கிறாள். இது சீதையின் கற்பை உயர்த்துவதாகவே அமைகிறது.  கணவர் உயிருக்கு ஆபத்து என்று நினைக்கும் பொது, உணர்ச்சி வசப்பட்ட சீதை தான் என்ன சொல்கிறோம் என்பதை உணராமலேய பேசுவதாகத்தான் வால்மீகி வர்ணித்திருக்கிறார். கற்பில் சிறந்திருந்தாலும், சீதை ஒரு சாதாரணப் பெண்ணாகத்தான் அவரால் உருவகப் படுத்தப் படுகிறாள். அதை அறிந்தே, இலக்குவன் சிந்தியாதவண்ணம், உணர்ச்சிப் பெருக்கில் சொல்லப்பட்ட அவளது  சொற்களை ஒதுக்கி விடுகிறான் என்றும் நாம் புரிந்து கொள்ளவேண்டி இருக்கிறது.

    இருப்பினும், ஏழு சுலோகங்களில் சீதைக்கு இலக்குவன் பதிலளிப்பதாக வால்மீகி விளக்கி உள்ளார்.  அவற்றில் சீதையை தெய்வத்திற்கு இணையாகவே தான் நினைப்பதாகக் கூறி, தனது தூய்மையை விளக்கிவிட்டு, அவளது கடும் சொற்கள் பழுக்கக் காச்சிய அம்பு போலத் தனது காதுகளுக்கு நடுவில் பாய்வது போல இருக்கிறது என்கிறான்.  அச் சொற்களால் செய்வதறியாது திகைத்து, நின்று போனேன் என்று தன் நிலைமையைச் சீதைக்கு எடுத்துக் கூறுகிறான்.  மேலும், பெண்கள் தங்கள் காரியம் ஆகவேண்டும் என்பதற்காக எதை வேண்டுமாலும் பேசுவார்கள் என்றும் சொல்கிறான். இதன்மூலம் வால்மீகி பெண்களைப் பற்றி, அவர்கள் தெய்வத் தன்மை பொருந்தியவர்கள் ஆனாலும், பெண்களாக இருந்தால் எப்படி நடந்து கொள்வார்கள் என்று இலக்குவன் மூலமாக விளக்குகிறார். கம்பரோ, பெண்களை உயர்வாகப் போற்றும் தமிழ் மரபுக்கு இவ்வாறு பெண்களைப் பற்றி விவரிப்பது உகந்ததல்ல என்று விட்டு விடுகிறார்.

    இலக்குவன் செல்லாவிட்டால் தான் உயிரைத் துறந்துவிடுவேன் என்று சீதை சொல்வதாக இரண்டு கவிஞர்களுமே எழுதி இருக்கிரார்கள். இலக்குவன் வாளாவிருப்பது நல்ல நெறி அல்லவென்றும், அவன் செல்லாவிட்டால், தீ மூட்டி உயிர் துறப்பேன் என்று சீதை வாய்மொழியாகவே கம்பர் தெரிவிக்கின்றார்.  வால்மீகியோ, இராமனைத் தவிரத் தன்னை யாரும் தொட முடியாது என்றும், அப்படி ஒரு நிலை வந்தால், உயிரை எப்படித் துறப்பேன் என்று பல வழிகளைக் சீதை கூறுகிறாள் என்று தெரிவிக்கிறார்.  சீதையின் சொல்லில் இருக்கும் முரண்பாட்டை (irony), நமக்குத் தெரிவிக்கிறார் வால்மீகி.  மற்றவர் யாரும் தன்னைத் தொடும் நிலை வந்தால் உயிர் துறப்பேன் என்ற சீதையை, இராவணன் தூக்கிச் செல்லபோகும் முன்னதாகவே முறையை நமக்குக் கோடிட்டுக் காட்டுகிறார் அந்த மகாகவி. கம்பர் இவ்வாறு சீதை வாய்மொழியாகச் சொல்லாததும் சீதை இராவணன் கவர்ந்து செல்லும் புனைவை மனதில் கொண்டுதான்.

    இவ்வாறு சீதை சொன்னதும், அவளை வணங்கிவிட்டுத் திரும்பிப் பார்த்துக்கொண்டே இலக்குவன், இராமன் இருக்குமிடம் தேடிச் சென்றான் – இது வால்மீகி சொன்னது.

    “இங்கிருந்தால் மதிப்பிற்குரிய சீதை இறப்பாள்; சென்றால் பெருங்கேடு வந்து சேரும். ஊழ் வினையால் எனக்கு இந்நிலை ஏற்பட்டது. அறம் ஒன்றினால் மட்டும்தான் அழிவைத் தடுக்க இயலும்.” என்ற இலக்குவன், சீதையைச் சுற்றி வலம் வந்து வணங்கி அங்கிருந்து அகன்றான் — இது கம்பரின் கூற்று.

    இருவருமே, இலக்குவனின் நேர்மையையும், கடமை உணர்வையும், இருதலைக்கொள்ளி நிலைமையையும் விவரிக்கிறார்கள். கம்பருக்கு ஊழ்வினையில் (கர்மா, முன்வினைப் பயன்) இவற்றில் இருக்கும் நம்பிக்கை இலக்குவன் வாயிலாக வெளிவருகிறது.  வால்மீகியோ, அதைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லை.

    இறுதியில், தீங்கு எதுவும் ஏற்பட்டால், கழுகுகளின் தலைவன் ஜடாயு காப்பான் என்ற நம்பிக்கையுடன் செல்கிறான் என்று முடிக்கிறார் கம்ப நாட்டார். வனத்தில் வாழ் தெய்வங்கள் சீதையைக் காப்பாற்றட்டும் என்று இலக்குவன் இயம்பியதாக வால்மீகி வரைகிறார்.

    மகாகவிகள் இருவருமே பின்நாள் வரப் போவதை, முன்கூட்டியே தெரிவிக்கிறார்கள்.  வால்மீகி சீதை வாயிலாகத் தெரிவித்தால், கம்பர், இலக்குவன் வாயிலாகத் தெரிவிக்கிறார்.

    கம்பர் சீதையைத் திருமகளின் அவதாரம் என்று காண்பிப்பதால், அத்தகைய தெய்வ மாதின் வாயில் தகாத சொற்கள் வரக்கூடாது என்று “இடக்கர் அடக்கி” இருக்கிறார்.  வால்மீகியோ, அப்படிச் சீதையைக் காண்பிக்காததால், மானிடப் பெண்ணின் இயல்புகளை அவள் மேல் போர்த்தி இருக்கிறார்.

     

    *************************************************************************************************************

    Share
  • மலையுச்சிப் பூவின் தியானம்

    ரிஷான் ஷெரீப்

     

    மலையுச்சிப் பூவின் தியானம்

    lelacyosemite

    கைக்குழந்தை உள்ளங்கையென மொட்டவிழ்கிறது
    பறிக்கப்படாத கனிகள் வீழ்ந்தழியும் மலைத் தரைகள்
    வனப்பு மிக்க காடுகளைச் சுமக்கின்றன தம்மில் அவை

    அந்திப் பறவைகள்
    கறுப்புத் திட்டுகளாகப் பறந்து மறையும்
    மாலை நேரங்களில் வனங்கள் என்ன செய்யும்

    உன் பாடலெனப் பொழிந்திடும் மழை பார்
    ஒவ்வொரு துளிகளிலும் உறைந்திருக்கக் கூடும்
    தாண்டிப் பறந்த பட்சி இறகுகளின் ரேகைகள்

    நீ மிதந்திருக்கிறாய் ஒரு வெண்குதிரையின் மீது
    யாரும் அகற்றிடா ஆதிச் சருகுகள் மூடி மறைத்திருக்கும்
    தடித்த வேர்கள் பிடித்து வைத்திருக்கும்
    கருங்கற் குகைகளிடை வழி
    உனது பயணப் பாதையல்ல

    நீ பறித்து வரச் சென்ற மலையுச்சிப் பூவின் தியானம்
    கடவுளுக்கானது
    காட்டின் விரூபங்களை மறைக்கும் இராப் பொழுதுகளில்
    உதிக்கும்
    மலையுச்சிப் பூவின் சோர்ந்திடாத் திமிர்

    உனது இலக்குகளில்
    பகலைக் கரைத்த ஈரம் சொட்ட அழுத சூரியன்
    எங்கோ தொலைந்துபோகும் இத் தருணத்தில்
    தாமதியாதே
    வனத்தின் வேர்களில் உனது புரவிகள் சற்று ஓயட்டும்

    – எம்.ரிஷான் ஷெரீப்

    Share
  • இரக்கமுடன் அருள்புரிவாய்!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    கல்வியின் தெய்வமே நீ
    கண்திறந்து பார்க்க வேணும்
    கல்விக்குள் காசை வைத்துக்
    கற்பவரை முடக்கு கின்றாரே
    செல்வம் இல்லா நிலையிலுள்ளார்          goddess-saraswati
    சீராகக் கல்வி பெற
    எல்லை இல்லா நாயகியே
    இரக்க முடன் அருள்புரிவாய்!

    கல்வியைக் காசாக்கிக்
    கடைத்தெருவில் விற்கின்றார்
    காமராசர் பிறந்தமண்ணில்
    கல்வியிப்போக் காசாச்சு!!

    இலவசமாய்க் கல்விதரின்
    எல்லோரும் படித்துநிற்பார்
    இந்தநிலை வருவதற்கு
    எங்களம்மா அருளிவிடு!

    காந்தீயம் பிறந்த நாட்டில்
    காசுகையில் இல்லை என்றால்
    கல்வி தனை நாடிடுவார்
    கனவில்தான் கற்க வேணும்!

    காசில்லாக் குடும்ப மதில்
    பிறந்து விட்ட காரணத்தால்
    கல்வி கற்க இயலாரை
    கைதூக்கி விட்டி டம்மா!

    மருத்துவம் படிப்பதற்கு
    மனம் அவர்க்கு இருந்தாலும்
    தரித்திரத்தின் காரணத்தால்
    தான் ஒதுங்கி நின்றிடுவார்!

    வருத்தமின்றி அவர்படித்து
    வாழ் நாளில் உயர்வடையத்
    தரித்திரத்தைப் போக்கிடுவாய்
    தயை நிறைந்த நாயகியே!

    பள்ளித் தலமனைத்தும் கோவில் எனச்சொல்லிச்
    துள்ளி வரும்தமிழாலே சொன்னானே பாரதியும்
    கிள்ளி எறிந்துநிற்கும் கீழான குணமுடையோர்
    பள்ளிகளை இப்போது பணக்கிடங்காய் மாற்றிவிட்டார்!

    பாரதியின் தமிழ் கொண்டு
    பாட்டாலே வேண்டு கின்றேன்
    பலபேரும் கல்வி கற்கப்
    பராசக்தி அருள் புரிவாய்!

    Share
  • நீயே நிலை

    இசைக்கவி ரமணன்

    laitha-tiripurasundari

    கண்ணுக்குக் கண்ணல்லவோ? நீ
    காலத்தின் பண்ணல்லவோ?
    பெண்ணுக்குப் பெண்ணாக பெயருக்குள் உயிராக
    பேசாத பேச்சல்லவோ? நீ
    பிழையாத மூச்சல்லவோ?

    எண்ணுக் கடங்காமலே, நீ
    எண்ணத்தில் நடமாடுவாய்
    மண்மீது வானாக மலருள்ளில் தேனாக
    உண்மைக்குள் உண்மையாக, உயிரில்
    ஊறிடும் தாயல்லவோ?

    என்வாழ்க்கை உன்றன்வசம், நீ
    ஏற்றதால் நானும் நிசம், நீ
    நின்றாடும் நெஞ்சினில் நின்காலில் கொஞ்சிடும்
    நித்திலச் சதங்கைகளே! அவை
    நீளுமென் கவிதைகளே!

    வினைகளினி ஏதுமில்லை, மனம்
    விடைதேடி மோதவில்லை
    சுனையாய்த் துளிர்த்தவொளி சுழியோடும் வெள்ளமாய்த்
    துள்ளிவிளை யாடும்போது, இனி
    துன்ப மேதின்ப மேது?

    அமிழ்தான தமிழூட்டினாய், உலகின்
    அமரிலே அமரம் செய்தாய்
    சிமிழ்விட்டுத் திசையெங்கும் தமிழ்சொட்டும் பறைகொட்டும்
    கவிபாடும் குயிலாக்கினாய்! பிறர்
    கவலையை நீ போக்கினாய்!

    இருகை இறங்காதம்மா! என்
    ஈரவிழி உலராதம்மா! உன்றன்
    அருமையைப் பாடிடும் உரிமையை மிஞ்சிடும்
    பெருமைவே றேதுமில்லை, இந்தப்
    பிள்ளைக்கு நீயே நிலை!

    27.09.2014 / சனிக்கிழமை / 07.00 / வள்ளியூர்-சென்னை ரயிலில்

     

     

    Share
  • சிக்கல் சிக்னல்…?

    -நாகினி

    ஆழ்கடல் வேதனையை
    எதிர்த்து நம்பிக்கை
    நீச்சல் பயணத்தில் நீந்தி
    விண்ணிற்கும் மண்ணிற்கும்
    அறிவுப் பாலம் கட்டிக்  கரைசேர்ந்த
    அறிவியல் வெற்றித்  தொடர்
    அறிவு வாழ்க்கைப் பயணம்…
    அவநம்பிக்கை மூடநம்பிக்கை எனும்
    இரு துருவச் சிக்கல் சிக்னலில்
    சிக்கித் தடம்(தடும்) மாறுதல்
    பகுத்தறிவுப் பிறவியின்
    ஆரோக்கிய மேன்மையோ..!?

    Share
  • காதல் நாற்பது (21)

    — சி. ஜெயபாரதன்.

    திரும்பத் திரும்பச் சொல் நேசிப்பதாய் !

     

    Elizabeth Browing

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    என்னை நீ நேசிப்பதாய் திரும்பச் சொல்
    இன்னு மொருதரம் சொல்,
    கூக்கூக் கீதம் போல் அச்சொல்
    நீ புரிவது போல்
    மென்மேலும் கேட்கட்டும் !
    நினைவில் வை, மலையோ,
    சமவெளியோ  வேண்டாம்!
    வனாந் தரமோ, பள்ளத் தாக்கோ இல்லை
    கூக்கூக்குச் சிரமம் கூடாது !

    பசுமை முழுதாய்ப் பரவி
    வசந்த காலம் புதிதாய் வருகுது !
    என்னிய நேசனே!
    பாராட்டும்,
    காரிருளில் என்னை
    ஐயமுள்ள ஆன்மீகக் குரல் ஒன்று !
    அந்த சந்தேகத் துயரில்
    அவலக் குரல் எழும், என்னிட மிருந்து:
    “இன்னொரு முறை சொல் நீ நேசிப்பதை.”
    எவருக்கு  நாணம் வரும் ?

    விண்ணுலகம் ஒவ்வொன்றிலும்
    எண்ணிலா விண்மீன்கள் சுற்றினாலும்
    ஆண்டு தோறும்
    அளவிலா மலர்கள் பூத்தாலும், என்னை நீ
    நேசிப்பதாய்ச் சொல் என்னிடம்,
    நேசிப்பாய், நேசிப்பாய் முழுதாய் !
    வயதான தாம்பத் தியத்தில்
    எனக்குக் கலக்கம் மட்டும் உள்ளது ,
    என்னவரே !
    உன் ஆத்மாவால்
    என்னை நீ
    மௌன மாகவும் நேசிப்பது !

    ********************

    Poem -21

    Sonnets from the Portuguese
    By: Elizabeth Browning

    Say over again, and yet once over again,
    That thou dost love me. Though the word repeated
    Should seem “a cuckoo-song,” as thou dost treat it,
    Remember, never to the hill or plain,
    Valley and wood, without her cuckoo-strain
    Comes the fresh Spring in all her green completed.
    Beloved, I, amid the darkness greeted
    By a doubtful spirit-voice, in that doubt’s pain
    Cry, “Speak once more–thou lovest!” Who can fear
    Too many stars, though each in heaven shall roll,
    Too many flowers, though each shall crown the year?
    Say thou dost love me, love me, love me–toll
    The silver iterance!–only minding, dear,
    To love me also in silence with thy soul.

    **********

    Share
  • இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை?

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    manju4
    ஆடையிதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்..
    அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்..

    அலைகடலைக் கண்டு ஆடாத மனமும் உண்டோ? அட.. நேற்று வந்த அலைதானே என்று நெஞ்சம் தள்ளிவிடுவதில்லை.  புதிய அலைகளாய் ஒவ்வொரு முறையும் கரையைத் தழுவும் அழகில் நாம் அல்லவா கொள்ளையடிக்கப்படுகிறோம்!

    அதேபோல்தான் – காதல் – அன்று ஆதாம் ஏவாளில் தொடங்கி இன்றும் அதே ஆசை வெள்ளத்துடன் உள்ளத்துள் அலைமோதும் அற்புதம் நடந்தேறிக் கொண்டேயிருக்கிறது!

    இந்தக் காதலைக் கவிஞர்கள் கால காலமாகப் பாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பாடுவார்கள்.. பாடினார்கள்..   நேற்றையக் கவிஞன் பார்த்த பார்வையைப் படித்துவிடும் வாய்ப்பைப் பெற்ற இன்றைய கவிஞன் சிந்தனையும் வளமும் இன்னும் விசாலப்படுவது இயற்கையே..

    சங்க இலக்கியங்களில் சொல்லப்படாத காதலா?  தமிழர்தம் வாழ்க்கையை அகத்துறை, புறத்துறை எனப் பாங்கறிந்து வகைப்படுத்தி, வருகின்ற தலைமுறைகள் அறியும் வண்ணம், செய்யுளுக்குள் செய்திகளைச் செதுக்கித்தான் போனார்கள்.  அனேகமாக, அப்படிச் செய்யுள் வடிவம் பெற்றப் பாடல்களுக்கு உரையாசிரியர்கள் தருகின்ற உரை வடிவில்தான் பெரும்பாலும் பொருள் உணரப்படும்.

    என்னைச் சந்தித்து உரையாடிய பலருள் இவரும் ஒருவர்.  கிண்டி பார்த்தசாரதி என்கிற  அந்தநண்பர் தந்த இந்த இனிய செய்தி – அதுவும் இந்தப் பாடலைப் பற்றி.. அரிய தகவல்களைத் தந்ததை நன்றியுடன் வழிமொழிகிறேன்!  கவிஞரின் பாடல் வரிகளில் சங்கத் தமிழ்ப்பாடலொன்று – வரியொன்றோடு வழங்கப்பட்டதை அருமையாக விவரித்தார்.  விழிவிரிந்து நின்றேன்!  பல முறை இப்பாடலைக் கேட்டதுண்டு!  செய்யுள் வரியொன்றை – திரைப்பாடல்வரியாக மாற்ற முடியும் என்றே செய்து காட்டிய முத்திரைக் கவிஞரே முத்தையா என்னும் கண்ணதாசன்!

    முதலில் சங்கத்தமிழ்ப்பாடல் என்ன சொல்கிறது (கலிங்கத்துப் பரணி – புலவர் ஜெயம்கொண்டார்) என்று பாருங்கள்.. அகத்துறைதான்..

    மாட மாளிகை!  கூட கோபுரம்!
    அரண்மணை வாசல்! அந்தப்புரம்!!
    அழகிய சோலைகள்!  ஆங்காங்கே வண்ணமயில்கள்!
    பழகிய தோழியாய் விண்ணிலே வெண்ணிலா!!
    எழிலினில் வடித்த சிற்பம் என்றிடும் ஏந்திழையாள்!
    அவள் மனம் கவர்ந்த கள்வனாய் ராஜகுமாரன்!
    கண்ணிலே தெறிக்கும் வில்லைக் கண்களால் வாங்கியங்கே
    காதல்போர் நடத்துகின்றார் காமன்வந்த வேளையிலே
    போதும் போதும் என்று சொல்ல யாருக்கும் தோன்றவில்லை!
    காலநேரம் கடந்தபோதும் கூடலிலே தோல்வியில்லை!
    நள்ளிரவு வேளை..நான்கு குணங்களும் நலிந்துபோன
    ஆரணங்கு அரைகுறையாய் கண்விழிக்கிறாள்.. – தழுவிக்
    கிடந்த  தலைவன் கைகளைச் சற்றேயெடுத்து – ஆடையினைச்
    சரிசெய்து கொள்ளும் முயற்சியில் அழகுமயில் ஈடுபடுகிறாள்!

    (அட.. எல்லோரும் ஒருமுறை கைதட்டுங்கள்) கவிஞரின் கற்பனைக்கு பாராட்டுத் தெரிவியுங்கள்!

    நிலவின் வெளிச்சம் கீற்றாய் அந்த உப்பரிகையில் விழ..
    அதுதான் ஆடையென அதை இழுக்கிறாள் தலைவி..

    எங்கள் தங்கராஜாவில் இடம்பெற்ற காதல் பாடலில் இந்தச் சங்கதியை அப்படியே இறக்குமதி செய்கிறார் கண்ணதாசன்!

    ஆடையிதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்..
    அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்..

    எங்கள் அறிவுக்கு எட்டியவரைதானே எங்களால்
    உன் தமிழ்க்கடலில் முத்தெடுக்க முடிகிறது முத்தையா!!
    ஆம்!  உன் ஒவ்வொரு பாடலும் தமிழ் முத்தையா!!

    http://www.youtube.com/watch?v=BU-D2Vi2d2M
    காணொளி: http://www.youtube.com/watch?v=BU-D2Vi2d2M

    படம்: எங்கள் தங்கராஜா
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: கே.வி. மஹாதேவன்
    பாடியோர்: பி.சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்
    ………………………………………………………………………………..

    இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை?
    இதயத்தில் விழுந்தது திருமண மாலை
    உறவுக்கு உரிமைக்கும் பிறந்தது நேரம்
    உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்
    இருவர் என்பதே இல்லை இனி நாம்
    ஒருவர் என்பதே உண்மை

    இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை?
    இதயத்தில் விழுந்தது திருமண மாலை
    உறவுக்கு உரிமைக்கும் பிறந்தது நேரம்
    உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்
    இருவர் என்பதே இல்லை இனி நாம்
    ஒருவர் என்பதே உண்மை

    இருவர் என்பதே இல்லை இனி நாம்
    ஒருவர் என்பதே உண்மை

    பாதிக்கண்களை மூடித் திறந்து பார்ப்பதில் இன்பம்
    பாதித் தூக்கத்தில் கூந்தலைத் தடவி ரசிப்பதில் இன்பம் ஆ..
    பாதிக்கண்களை மூடித் திறந்து பார்ப்பதில் இன்பம்
    பாதித் தூக்கத்தில் கூந்தலைத் தடவி ரசிப்பதில் இன்பம்

    பாதிப் பாதியாய் இருவரும் மாறி
    பழகும் வித்தையே பள்ளியில் இன்பம்
    காலை என்பது துன்பம் இனிமேல்
    மாலை ஒன்றுதான் இன்பம்
    காலை என்பது துன்பம் இனிமேல்
    மாலை ஒன்றுதான் இன்பம்

    இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை?
    இதயத்தில் விழுந்தது திருமண மாலை
    உறவுக்கு உரிமைக்கும் பிறந்தது நேரம்
    உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்

    இருவர் என்பதே இல்லை இனி நாம்
    ஒருவர் என்பதே உண்மை ஆ..
    இருவர் என்பதே இல்லை இனி நாம்
    ஒருவர் என்பதே உண்மை

    ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
    அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம் ஆ..
    ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
    அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்

    காலை நேரத்தில் காயங்கள் பார்த்து
    களிப்பதென்பது கவிதையின் விளக்கம்
    கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
    காணப் போவது மஞ்சம்
    கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
    காணப் போவது மஞ்சம்

    இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை?
    இதயத்தில் விழுந்தது திருமண மாலை
    உறவுக்கு உரிமைக்கும் பிறந்தது நேரம்
    உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்
    இருவர் என்பதே இல்லை இனி நாம்
    ஒருவர் என்பதே உண்மை
    இருவர் என்பதே இல்லை இனி நாம்
    ஒருவர் என்பதே உண்மை

    லால லாலலா லாலா லாலா
    லால லாலலா லாலா
    லால லாலலா லாலா லாலா
    லால லாலலா லாலா

    manju3manju2manju1

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    கேசவ்வின் “பகீரத BRUSH ப்ரயத்தனம்”….

    crazy

    “மந்தா கினிநான் முகன்கை வழியாக
    செந்தா மரைக்கண்ணன் சேவடி -வந்தேகி
    கால்வாய் பதித்து கபாலீசர் வார்சடையின்
    மேல்போய் மிதித்தனள் மண்(பூமி)”….கிரேசி மோகன்….

    மந்தாகினி -கங்கை

    Share
  • முத்தம் கொடுப்பது போல்

    இசைக்கவி ரமணன்

     

    முத்தம் கொடுப்பது போல்

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%B2/[/mixcloud]

     

    images (2)
    முத்தம் கொடுப்பது போல், உயிர்
    மூச்சைத் தருபவளே! வினை
    மொத்தம் எரிப்பவளே! அதில்
    மூண்டு புரள்பவளே! மனச்
    சத்த மடங்கிய வாசலிலே வந்து
    சாய்ந்து கிடப்பவளே! தலை
    சாய்த்துச் சிரிப்பவளே! அந்தச்
    சத்திரத்துத் திண்ணைப் பத்திரத்தில் என்னைத்
    தாங்கி வளர்ப்பவளே! நெஞ்சில்
    தங்கி இருப்பவளே!

    காலத்துக் கோளாறும், உந்தன்
    காலருகே வருமோ? உந்தன்
    கோலத்தைக் கண்டபின்னும், எந்தக்
    கோளும் ஒரு பொருட்டோ?
    ஆலத்தி வேம்பாக் அல்லியில் காம்பாகி
    ஆத்தங் கரையாகி, மண்ணு
    அளையும் பிள்ளையாகி, அடி
    மூலச் சிறுக்கி என் மூளையைக் கொழப்பி
    முன்னுஞ் சிரிப்பவளே! என்
    பின்னும் நடப்பவளே!

    யாருக்குன்னைத் தெரியும்? எந்தப்
    பேருக்குன்னைப் புரியும்? நிதம்
    காணக்காண விரியும், எங்கள்
    கவிதையைப் போன்றவளே! இந்த
    ஊருக்குள் வீதியில் ஒடெஞ்ச கரும்பெடுத்து
    உச்சிமட்டும் கடிச்சு, சும்மா
    ஒதட்டைக் கொதப்பிக்கிட்டு, நீ
    ஓரடி ஈரடி வக்கிற ஜோரில
    ஒயிலுக்கு மையல்வரும், அந்த
    ஓங்காரமும் மயங்கும்!

    பத்துப் பதினாறு, இந்தப்
    பாரினில் கண்ட பேறு, அடி
    வித்தில் வெடிப்பவளே! ஆயினும்
    விண்டு கிடப்பவளே! கண்ணில்
    பட்டதெல்லாம் உந்தன் கொட்டமின்றி வேறு
    பார்க்கவில்லை எதுவும்! நெஞ்சில்
    பற்றவில்லை எதுவும்! அந்த
    வெட்ட வெளியெங்கும் மொட்டு மடியாக்கி
    ஒட்டக் கறப்பவளே! உயிர்
    உள்ளே பறப்பவளே!

    பாதம் சரணமம்மா! இந்த
    பாலன் உன் பிள்ளையம்மா! நாலு
    வேதம் விசிறியம்மா! கவிதை
    வெறி சிவிகையம்மா! பிஞ்சுப்
    பாதமுந்தன் நெஞ்சில் பந்து விளையாடப்
    பார்த்துச் சிரிப்பவளே! கன்னம்
    பற்றித் திளைப்பவளே! அடி
    மீதம் மிச்சமினி ஏதுமில்லாதொரு
    முத்தங் கொடுத்துவிடு, அதில்
    மூச்சை நிறுத்திவிடு!

    Share
  • தோகமயில் ஒண்ணு!

    கே. ரவி

     

    “(சிற்றுந்தில் பயணம் செய்த போது, என் தோளில் சாய்ந்த படி அவள் தூங்கிவிட்டாள். என் மனம் பாடியது. ஓ! அது நிகழ்ந்தது ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்!)

     

    தோகமயில் ஒண்ணு!

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%A3%E0%AE%A3/[/mixcloud]

     

    imb5

     

    தோகமயில் ஒண்ணு தோள்மேல சாஞ்சு தூங்குதடீ
    எட்டநின்னுக் காத்தும் ஏக்கப்பெரு மூச்சு வாங்குதடீ
    பூங்குயில் கூவுது ஆராரோ பொன்வண்டு பாடுது தாலேலோ

    காத்தாச் சிலுக்குறா கண்ணத் தொறந்தா
    கனவா மொதக்குறா நெஞ்சில் சொமந்தா
    ஆத்துமணல் எல்லாம் அள்ளித் தெளிச்ச – ஒரு
    வெள்ளிநெலவா என் மேல படர்ந்தா – என்
    உள்ளத்துல சூரியனப் போல எழுந்தா
    (தோகமயில் ஒண்ணு)
    ஓட தூங்க இந்த ஊர்தூங்க
    ஓசையில்லாம காத்தும் தூங்க
    மானம் தூங்கப் பச்ச வயல் தூங்க – என்
    மார்பில் சாஞ்சபடி அவ தூங்க – என்
    மனசு மட்டும்தான் தூங்கலடீ – அதில்
    பாட்டுச் சத்தம் இன்னும் ஓயலடீ
    (தோகமயில் ஒண்ணு)

    ஓவியத்திற்கு நன்றி : இளையராஜா

    Share
  • நவராத்திரிப் பாடல்கள் – கவிதை நான் பாட …..

    இசைக்கவி ரமணன்

     

    (புண்ணாய்க் கிடக்கிறது தொண்டை. பண்ணாய்க் கொழிக்கிறது நெஞ்சம். பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை. குரலைப் பொறுத்துக்கொள்ளவும்)

     

    கவிதை நான் பாட ……

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F/[/mixcloud]

     

    durga1

     

    கவிதை நான்பாட கனவில் நீ ஆட
    ககனம் சுழலாமல் நின்றதோ!
    சிவிகை ஏறாத சிந்தனை ஒன்று
    சிறகுகொண் டெங்கு சென்றதோ!

    பரவும் இன்பம் நீ நெருடும் துன்பம் நீhqdefault
    மலரின் மென்மை நீ புயலின் வன்மை நீ
    மின்னும் கண்கள் நீ மீறும் காதல் நீ
    ஊறும் போதை நீ ஏறும் கவிதை நீ

    இருள் நீ ஒளி நீ அருள் நீ மருள் நீ
    என்னடி சொல்ல? எதுவும் நீ தேவி (கவிதை)

    மலைபிளக்கின்ற விரல் நகமொன்றில்

    பிறை நிலவுகள் நூறு
    மறை தவழ்கின்ற கழல் நிழல்தன்னில்
    கலை நிலையென்ன கூறு !
    எழில் விதமின்னும் நூறு உன்
    எதிர் நின்றதே பேறு
    விழுந்தாலென்ன எழுந்தாலென்ன
    விழிமுன் வினையெது விதியேது தேவி! (கவிதை)

    கரம் ஆயிரம் கலம் ஆயிரம்images (7)
    கண்ணில் தெரிவதோ எட்டு
    கடந்தா லென்ன தொடர்ந்தே வந்து
    கண்ணில் படும்வண்ணச் சிட்டு
    நடந்தேன் தினம் விழுந்தேன் உனை
    நினைந்தேன் உடன் எழுந்தேன்
    நனவும் கனவும் குலவும் தருணம்
    நதியின் கரையில் தெரியும் உருவம்
    சின்னப் பிரம்போடு மின்னல் நகையோடு
    கன்னங் கரிய சின்னஞ் சிறுமி தேவி ! (கவிதை)
    29.09.2014 / திங்கள் / இரவு 10 45
    வாழ்வு உந்தன் வழிவந்த போது

    தாழ்வு உயர்வு தானென்பதேது?
    சூழ்வன சூழ்க! சுந்தர மாக!
    துன்பமும் இன்பமும் தூசிகளாக

    அந்தரி சுந்தரி சிந்திய புன்னகைimages (5)

    மந்திரச் சொல்லாய் மலர்பூக்க
    வந்து விழுந்திடும் செந்தமிழ்க் கவிதையில்
    அந்தி மறந்தது விடையேக

    வாழ்க்கை முடிந்தது வளமாக
    வாழ்தல் தொடர்ந்தது நலமாக

    இதயம் முழுதும் இளமை உதயம்
    எதுவரை என்னும் கேள்வியும் விழவும்
    அதையும் அழகிய கவிதையில் சொல்லும்
    இதழ்கள் எனதில்லை உனதே தேவி!

     

     

     

    Share
  • நவராத்திரி 2014 (6) அவளே கதி

    இசைக்கவி ரமணன்

     

    அவளே கதி

     

    images (1)

    தீதகற்றிடும் திருவிழி, இவள்
    திட்டினாலும் அது தேன்மொழி
    கோதுசெய்யும் வளைக்கரம், கொடும்
    சூலமேந்தும் ஒளிக்கரம்
    வேதமாயிரம் இவள்நிழல், மன’
    வேதனைகளும் இவள்தழல், இவள்
    பாதமொன்றுதான் நம்கதி, அதைப்
    பற்றி நிற்பதே என்வழி!

    ஆசை ஏதாக ஆயினும், உடன்
    அவள் நினைப்பை அதில் ஏற்றுக
    மாசு யாவும் கலைந்திடும், மன
    மலினம் தானே மறைந்திடும்
    ஆசை ஏதாக ஆயினும், அதை
    அவளுக்கர்ச்சனை ஆக்குக
    ஆசை அவளன்றி வேறெதும், சற்றும்
    அணுகிடா நிலை எய்துக!

    1011679_583001185156685_3523131815273405296_n

    யாவும் நன்மையே வாழ்விலே, இதை
    யாண்டும் மறவாதீர் மனதிலே
    பாவ புண்ணியம் வேறிலை, தாய்
    பால்தனங்களில் மாறிலை
    தேவைகள் நிறைவேறவும், ஓர்நாள்
    தேவையே தீர்ந்து போகவும்
    ஆவல் யாவையும் தந்தனள், அவள்
    ஆசை முடிவாக நின்றனள்

    கருணை ஒன்றுதான் இவள்மனம், அதில்
    கலகலக்கும் பலவாய் குணம்
    உருவம் யாவுமிவள் உருவமே, மன்னும்
    உயிர்கள் யாவுமிவள் உயிரிலே
    பொறுமையில் இவள் பூரணம், இவள்
    பொங்க உண்டு பல காரணம்
    அருமை இவள்செய்கை அருமையே, இவளை
    அறிவதொன்றுதான் பெருமையே!

    கையிரண்டையும் கூப்பியே, இரு
    கண்ணில் கங்கையைத் தேக்கியே, என்
    மெய்யும் உயிரும் ஒடுங்கியே, அவை
    மீறி மீறிச் சிலிர்க்கவே, அடி
    தையலே! உன்றன் காலிலே, மனம்
    கொண்டதே பெரும் காதலே! இனி
    உய்வதென்றொன்றும் இல்லையே! இது
    உயிரில் உயிரான எல்லையே!

    26.090.2014 / வெள்ளி / 21.45 / வள்ளியூர்-சென்னை ரயிலில்

    Share