கம்பனும் வால்மீகியும் – இலக்கிய ஒப்பீடு – 2

2

கம்பனும் வால்மீகியும் – இலக்கிய ஒப்பீடு  – 2

ஒரு அரிசோனன்

சென்ற ஒப்பீட்டில் அகலியை சாப விமோசன’த்தைப் பற்றியும், இராமன்-சீதையின் முதல் சந்திப்பைப் பற்றியும் கண்டோம். கம்பனும் வால்மீகியும் எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்பதையும் கண்டோம்.  இருவரும் அவரவர்கள் காலத்துப் பண்பாட்டையும், மரபையும் ஒட்டியே இராமகாதைக்கு வடிவம் கொடுத்தார்கள். மாய மான் இராமன் குரலில் ஓலமிட்டதைக் கேட்டு சீதைக்கும், இலக்குவனுக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தைப் பற்றி எவ்வாறு எழுதி உள்ளார்கள் என்பதைக் காண்போம்.

…பொன்மானைக் கண்டதும், அதைப் பிடித்துத் தரும்படி இராமனிடம் கேட்கிறாள் சீதை.  அது மாய மான் என்று அறியாது, இலக்குவனை சீதைக்குக் காவலாக வைத்துவிட்டு, அதைப் பின்தொடர்ந்து செல்கிறான் இராமன். ஓடிக் களைத்த இராமன், மானை அம்பால் அடிக்கிறான். மாய மான் உருவம் கொண்ட அரக்கனான மாரீசன், “ஏ சீதா, ஏ லட்சுமணா!” என்று இராமனின் குரலில் கூக்குரலிட்ட வண்ணம் மண்ணில் சாய்ந்து இறக்கிறான். அக்கூக்குரல் சீதை, மற்றும் இலக்குவனின் காதுகளில் விழுகிறது…

வால்மீகி சொல்வதைக் காண்போம்:

आर्तस्वरम् तु तम् भर्तुः विज्ञाय सदृशम् वने |
उवाच लक्ष्मणम् सीता गच्छ जानीहि राघवम् || ३-४५-१

ஆர்த்தச்வரம் து தம் பர்த்து: விக்ஞாய ஸத்ருஸ’ம் வனே |

உவாச லக்ஷ்மணம் சீதா கச்ச ஜாநீஹி ராகவம் || 3-45-1

வனத்தில் எழுந்த பரிதாபமான குரலைத் தன் கணவனுடையதாக அறிந்து, இராமனிடம் செல் என்று இலக்குவனிடம் சீதை கூறினாள்.

न जगाम तथा उक्तः तु भ्रातुः आज्ञाय शासनम् || ३-४५-४

ந ஜகாம ததா உக்த: து ப்ராது: ஆக்ஞாய ஸா’ஸனம் || 3-45-4

அவ்வாறு சொல்லப்பட்டும், அண்ணனின் ஆணையை நினைவில் கொண்டு (இலக்குவன்) செல்லாமலிருந்தான்.
तम् उवाच ततः तत्र क्षुभिता जनक आत्मजा |

सौमित्रे मित्र रूपेण भ्रातुः त्वम् असि शत्रुवत् || ३-४५-५

தம் உவாச தத: தத்ர க்ஷுபிதா ஜனகாத்மஜா |

ஸௌமித்ரே மித்ர ரூபேண ப்ராது: தவம் அஸி சத்ருவது || 3-45-5
यः त्वम् अस्याम् अवस्थायाम् भ्रातरम् न अभिपद्यसे |

इच्छसि त्वम् विनश्यन्तम् रामम् लक्ष्मण मत् कृते || ३-४५-६

ய:த்வம் அஸ்யாம் அவஸ்த்தாயம் ப்ராதரம் ந அபிபத்தியசே |

இச்சஸி த்வம் வினஸ்’யந்தம் ராமம் லக்ஷ்மண மத் க்ருதே || 3-45-6
लोभात् तु मत् कृतम् नूनम् न अनुगच्छसि राघवम् |

व्यसनम् ते प्रियम् मन्ये स्नेहो भ्रातरि न अस्ति ते || ३-४५-७

லோபாது து மத் க்ருதம் நூனம் ந அனுகச்சஸி ராகவம் |

வ்யசனம் தே ப்ரியம் மன்யே ஸ்நேஹோ ப்ராதரி ந அஸ்தி தே || 3-45-7

அதைக்கண்டு மனம் கொதித்த ஜானகி அவனிடம் கூறினாள். “சுமித்திரையின் மகனே! நண்பனைப் போன்ற உருவத்துடன் உடன் பிறப்பின் எதிரியாக நீ இருக்கிறாய்.  எப்பொழுது நீ இந்தமாதிரி நிலையில் அண்ணனின் (உதவிக்குப்) போகாமல் இருக்கிறாயோ, இலக்குவா, நீ எனக்காக (என்னை விரும்பியே) இராமனின் அழிவை விரும்புகிறாய்.  என்(மீது) எழுந்த பேராசையால் அன்றோ தேவைப்படும்போது இராகவனைப் பின்தொடராமல் (உதவிக்குச் செல்லாமல்) இருக்கிறாய்!  தவிப்பில் இருக்கும், (அனைவருக்கும்) பிரியமான அண்ணனிடம் உனக்கு அன்பு இல்லை.”

…இப்படிப் பட்ட கடும் சொற்களை சீதை கூறினாலும், இலக்குவன் நிதானமாக, “இராமனை யாராலும் துன்புறுத்த இயலாது, மூவுலகங்களுமே சேர்ந்து எதிர்த்தாலும், அவனைக் கட்டுப்படுத்த முடியாது, இப்பொழுது கெட்ட குரல் இராமனுடைது அல்ல. மாயையை உண்டு பண்ணும் அரக்கனுடையதாக இருக்கலாம்.  அந்த சிறந்த மானைக் கொன்றுவிட்டு உங்கள் கணவர் திரும்புவார்.” என்று பதினோரு சுலோகங்களில் எடுத்துரைக்கிறான். அவன் சொல்லில் நம்பிக்கை இல்லாததாலும், ஆபத்தில் மாட்டிக்கொண்டு இருக்கும் தன் கணவரின் உதவிக்குச் செல்லாமல், தான் கடும் சொல் கூறியும் தன்னை விட்டு அகலாமல் இருக்கிறானே என்ற பதட்டத்தினாலும் சீதை மேலும் சீற்றமடைகிறாள்…

 

सुदुष्टः त्वम् वने रामम् एकम् एको अनुगच्छसि |

मम हेतोः प्रतिच्छन्नः प्रयुक्तो भरतेन वा || ३-४५-२४

ஸுதுஷ்ட: த்வம் வனே ராமம் ஏகம் ஏகோ அனுகச்ச்ஸி |

மம ஹேதோ: ப்ரதிச்சன்ன: பிரயுக்தோ பரதேன வா  || 3-45-24

समक्षम् तव सौमित्रे प्राणान् त्यक्ष्यामि असंशयम् || ४-५-२६

ஸமக்ஷம் தவ ஸௌமித்ரே ப்ராணானு த்யக்ஷ்யாமி அஸம்ஸ’யம் | 3-45-26

रामम् विना क्षणम् अपि न एव जीवामि भूतले |

इति उक्तः परुषम् वाक्यम् सीतया रोमहर्षणम् || ३-४५-२७

ராமம் வினா க்ஷணமபி ந ஏவ ஜீவாமி பூதலே |

இத்யுக்த: பருஷம் வாக்கியம் சீதயா ரோமஹர்ஷணம் || 3-45-27

अब्रवीत् लक्ष्मणः सीताम् प्रांजलिः विजितेन्द्रियः |

उत्तरम् न उत्सहे वक्तुम् दैवतम् भवती मम || ३-४५-२८

அப்ரவீது லக்ஷ்மண: சீதாம் ப்ராஞ்சலி: விஜிதேந்த்ரிய: |

உத்தரம் ந உத்ஸஹே பகத்தும் தைவதம் பவதி மம || 3-45-28

वाक्यम् अप्रतिरूपम् तु न चित्रम् स्त्रीषु मैथिलि |

स्वभावः तु एष नारीणाम् एषु लोकेषु दृश्यते || ३-४५-२९

வாக்கியம் அப்ரதிரூபம் து ந சித்ரம் ஸ்த்ரீஷு மைதிலீ |

ஸ்வபாவ: து ஏஷ நாரீணாம் ஏஷு லோகேஷு திருஸ்’யதே || 3-45-29

श्रोत्रयोः उभयोः मध्ये तप्त नाराच सन्निभम् |

उपशृण्वंतु मे सर्वे साक्षिनो हि वनेचराः || ३-४५-३१

ராமம் வினா க்ஷணமபி ந ஏவ ஜீவாமி பூதலே |

இத்யுக்த: பருஷம் வாக்கியம் சீதயா ரோமஹர்ஷணம் || 3-45-31

गमिष्ये यत्र काकुत्स्थः स्वस्ति ते अस्तु वरानने || ३-४५-३३

கமிஷ்யே யாத்ரா காகுத்ஸ்த்த: ஸ்வஸ்தி தே அஸ்து வரானனே || 3-45-33

रक्षन्तु त्वाम् विशालाक्षि समग्रा वन देवताः |

निमित्तानि हि घोराणि यानि प्रादुर्भवन्ति मे |

अपि त्वाम् सह रामेण पश्येयम् पुनरागतः || ३-४५-३४

ரக்ஷந்து த்வாம் விசாலாக்ஷி ஸமக்ரா வன தேவதா: |

நிமித்தானி ஹி கோராணி யானி ப்ராதுர்பவந்தி மே |

அபி த்வாம் ஸஹ ராமேண பஸ்’யேயம் புனராகத: || 3-45-34

“மிகவும் கெட்டவனே! என்பொருட்டு (என்னை அடைவதற்காக) நீ தனியாகவோ, அல்லது பரதனால் தூண்டப்பட்டோ, இரகசியமாக காட்டுக்கு இராமனைத் தொடர்ந்து வந்திருக்கிறாய். சுமித்திரையின் மகனே, உன் முன்னாலேயே என் உயிரைத் துறந்து விடுவேன். இப்புவியில் ஒருகணமும் இப்புவியில் இராமனில்லாமல் நான் வாழ மாட்டேன்.” (கோபத்தினால்) மயிர்க்கூச்செறிவுற்ற சீதையால் இப்படிப்பட்ட குத்தும் சொற்கள் சொல்லப்பட்டன.

(இதனால்) உணர்வு ஓடுங்கப்பட்டுப் போன இலக்குவன் சீதையைக் கைகூப்பிச் சொன்னான்.  “மைதிலி, (நீ) எனக்கு தெய்வமாக ஆகிறாய். பதில் உரைக்கவும் திறனற்றவனானேன்.  பெண்களிடம் சொல்லத்தகாத வார்த்தைகள் (இருப்பது) என்பது வியப்பல்ல. பெண்களுடைய இப்படிப்பட்ட இயல்பு இவ்வுலகங்களில் காணப் படுகிறது. (இவ்வாறு கடும் சொற்களைச் சொல்வது) இரு காதுகளுக்கு நடுவில் (தைத்த) சுடும் அம்பைப்போல இருக்கிறது. (இதைக்) கூர்ந்து கேட்கும் காட்டில் செல்பவர் எல்லோருமே (வனம் வாழ் தெய்வங்கள் அனைவருமே) இதைக் கேட்கிறார்கள்.

“எங்கு காகுஸ்தர் (இராமன் இருக்கிறாரோ) அங்கு செல்வேன். இனிய முகம் உள்ளவளே! நீ நலமாக இருப்பாயாக. அகண்ட கண்களை உடையவளே! வனத்தில் இருக்கும் எல்லாத் தெய்வங்களும் உம்மைக் காப்பார்களாக! இந்த சகுனங்களை மதிப்பிட்டால், தீயனவாகவே எனக்குப் படுகின்றன.  இராமனோடு கூடத் திரும்பி வருங்கால், உம்மைப் நான் பார்ப்பேனோ?”

गोदावरीम् प्रवेक्ष्यामि हीना रामेण लक्ष्मण |

आबन्धिष्ये अथवा त्यक्ष्ये विषमे देहम् आत्मनः || ३-४५-३६

கோதாவரீம் பிரவேக்ஷ்யாமி ஹீனா ராமேண லக்ஷ்மண |

ஆபந்திஷ்யே அதவா த்யக்ஷ்யே விஷமே தேஹம் ஆத்மன: || 3-45-36

पिबामि वा विषम् तीक्ष्णम् प्रवेक्ष्यामि हुताशनम् |

न तु अहम् राघवात् अन्यम् कदाअपि पुरुषम् स्पृशे || ३-४५-३७

பிபாமி வா விஷம் தீக்ஷ்ணம் பிரவேக்ஷ்யாமி ஹுதாசனம் |

ந து அஹம் ராகவாது அன்யம் கதாபி புருஷம் ஸ்ப்ருசே || 3-45-37

…இவ்வாறு இலக்குவன் சொன்னதும், நீர் மல்கும் கண்களுடன் சீதை,

“இலக்குவா, இராமன் இல்லாவிட்டால், கோதாவரியில் புகுவேன், தூக்கில் தொங்குவேன், இல்லாவிட்டால், மலை உச்சியில் இருந்து (குதித்து) உடலைத் துறப்பேன். இல்லை, கடும் விஷத்தைக் குடிப்பேன்; தீயில் பிரவேசிப்பேன்..  இராகவன் அல்லாது மற்ற ஆடவர்கள் ஏன்னை ஒருபொழுதும் தொட விடமாட்டேன்”

இவ்வாறு கூறி வயிற்றில் அடித்துக்கொண்டு அழுதாள். இப்படி அழுத சீதையை வணங்கிவிட்டு,  இராமன் சென்ற இடத்தை நோக்கிச் சென்றான், இலக்குவன்.

கம்பர் இந்நிகழ்ச்சியை எவ்வாறு சித்தரிக்கிறார்?

…மாய மானின் கூக்குரலைக் கெட்ட சீதை, இராமனுக்குத்தான் எதோ தீங்கு நேர்ந்துவிட்டது என் நினைத்து வயற்றில் அடித்துக்கொண்டு கீழே விழுந்தால். “நான் மானைப் பிடித்துக் கொடு என்று கேட்டதால் தானே இந்நிலை நேர்ந்தது என்று தரையில் புரண்டு அழுதாள்.

குற்றம் வீந்த குணத்தின் எம் கோமகன்

மற்று அவ் வாள் அரக்கன் புரி மாயையால்

இற்று வீழ்ந்தனன் என்னவும் என் அயல்

நிற்றியோ இளையோய் ஒரு நீ என்றாள்.  – 3.806

“குற்றம் (என்பதே) கலக்காத என்னுடைய அரசகுமாரன், அந்த அரக்கன் செய்த மாயையால் நிலைதடுமாறி வீழ்த்து விட்டான் என்று அறிந்தும், என் அருகில் நிற்பாயோ, நீ ஒரு தம்பியோ?” என்றாள்.

இவ்வாறு சீதை சினம் கொண்டு கேட்டவுடன், இராமனுடைய வலிமையைப் பற்றியும், யாரும் அவனை வெல்ல இயலாது என்றும், தம் இருவர் பெயரையும் சொல்லி அலறி இருப்பது மான் உருக்கொண்டு வந்த அரக்கன்தான் என்றும், கவலைப்படாமல் இருக்கும்படியும் சீதையை இலக்குவன் வேண்டுவதாகக் கம்பர் ஏழு செய்யுள்களில் கூறுகிறார்.

என்று அவன் இயம்பலும் எடுத்த சீற்றத்தள்

கொன்றன இன்னலள் கொதிக்கும் உள்ளத்தள்

நின்ற நின் நிலை இது நெறியிற்று அன்று எனா

வன் தருகண்ணினள் வலிந்து கூறுவாள்.  – 3.814

ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்

பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும் நீ

வெருவலை நின்றனை வேறு என் யான் இனி

எரியிடைக் கடித்து வீழ்ந்து இறப்பென் எனா.  – 3.815

இந்த விதமாக அவன் (இலக்குவன்) சொல்லியும், (உள்ளத்தில்) எழும்பிய சீற்றத்தினால், தானே கொல்லப்படுவது போன்ற துயரத்தை அடைந்து, கொதிக்கும் உள்ளத்துடன், (இங்கு) நிற்கும் உனது நிலையானது நெறியில்லாத ஒன்றாகும் என்று கடிந்து சொல்ல ஆரம்பித்தாள். 

ஒரு நாள் பழகியவர்கள்கூட உயிரையும் கொடுப்பார்கள். எனவே, உயர்ந்தவன் (இராமன்) தீங்கடையும் செய்தி கேட்டும், ஒன்றும் தோன்றாமல் நீ நின்று கொண்டிருக்கிறாய். இனி வேறு என்ன (செய்ய இயலும்)?  இப்போது நான் தீக்கு நடுவில் விழுந்து இறப்பேன்!” என்றாள்.

அவளைத் தடுத்து நிறுத்திய இலக்குவன், அவள் கால்களில் விழுந்து வணங்கி, இராமன் தனக்கு இட்ட கட்டளையை மீறி, அவளைத் தனியாக விட்டுச் செல்லும்படி செய்ததை நினைத்து மனம் நொந்தவாறு செல்கிறான்.

அறம்தனால் அழிவு இலது ஆகல் ஆக்கலாம்

இறந்து பாடு இவர்க்கு உறும் இருக்கின் இவ் வழி

துறந்து போம் இதனையே துணிவென் தொல்வினைப்

பிறந்து போந்து இது படும் பேதையேன் எனா.  – 3.820

நல்வினை(தர்மம்)யால் (மட்டுமே) அழிவு ஏற்படாதவாறு காக்க இயலும். இங்கு இருந்தால் இவருக்கு (சீதைக்கு) இறக்கும்படி ஆகிவிடும். இந்த இடத்தைவிட்டு நீங்குவதையே நான் துணிந்து செய்வேன். முன்வினைப் பயனால் உண்டான இந்த (வேதனையை) அனுபவிக்கும் பாவியானேன் என்று (மனதிற்குள் புலம்பினான்).

இங்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால், கழுகுகளின் தலைவனான (ஜடாயு) பார்த்து தன்னால் இயன்ற வண்ணம் காத்துக்கொள்வான் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு சென்றான்.

 

ஒப்பீடு

 

இலக்குவன்-சீதை சொற்பரிமாற்றம் கம்பரால் சுருக்கமாகவே கொடுக்கப்பட்டிருக்திறது.  முதலில் சீதை அழுததை இரண்டு செய்யுள்களில் (8 வரிகளில்) கூறிய கம்பர், ஒரே ஒரு விருத்தப் பாவின் மூலம் (4 வரிகளில்), இலக்குவனை இராமனின் உதவிக்குச் செல்லுமாறு சீதை கூறியதாக எழுதி இருக்கிறார்..  வால்மீகி ஒரு சுலோகத்தில் (ஒரு வரியில்) மாய மானில் குரலை தனது கணவரின் குரல் என்று அடையாளம் கண்டு கொண்டபின், மூன்று சுலோகங்களில் (ஆறு வரிகளில்) இராமனுக்கு உதவியாகச் செல்லும்படி இலக்குவனிடம் சொல்வதாகச் சித்தரிக்கிறார்.

துவக்கத்திலேயே வால்மீகியும், கம்பரும் வேறுபடுகிறார்கள்.  சீதையின் கழிவிரக்கத்தைப் பற்றி, தன்னால்தானே தன் கணவருக்கு இந்நிலை ஏற்பட்டதே என்று புலம்புவதைப் பற்றியும் கம்பர் விளக்குகிறார்.  ஆனால், வால்மீகியோ, மாய மானின் குரல், தனது கணவருடையது என்று நினைத்து சீதை இலக்குவனிடம் பேச ஆரம்பித்து விட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்து கம்பரும், வால்மீகியும் பெண்களைப் பற்றி சிறிது மாறுபாடாக எண்ணி இருக்கிறார்கள் என்று ஊகிக்கலாம்.  இது இலக்குவனின் வாய்மொழியாகப் பின்னர் வால்மீகி இராமாயணத்தில் வெளிப்படுகிறது.

கம்ப இராமாயணத்தில், இலக்குவன் ஏழு பாக்களின் மூலம் (28 வரிகளில்), இராமனுக்கு எந்தவிதமான தீங்கும் நேராது என்றும், தன் அண்ணனின் வல்லமையும் விளக்குகிறான். வால்மீகி இராமாயணத்தில், இது சிறிது மாறுபடுகிறது.  சீதை சொல்லியும், இலக்குவன் ஏதும் சொல்லாமல் நின்றதாகவும், அதைப் பொறுக்காத சீதை ஐந்து சுலோகங்களின் மூலம் (பத்து வரிகளில்) இராமன் அழியவேண்டும் என்று இலக்குவன் விரும்புவதாகவும், அப்படி ஆகிவிட்டால், தன்னை அடையலாம் என்ற தகாத ஆசையினால் உதவிக்குச் செல்லாமல் நிற்பதாகவும், அவன் மீது கடும் சொற்களினால் குற்றம் சாட்டுவதாகவும் எழுதி உள்ளார். அதன் பின்னரே இலக்குவன், இராமனுடைய வல்லமையைப் பற்றி 10 சுலோகங்களில் (21 வரிகளில்) சொல்வதாக வர்ணிக்கிறார்.  வால்மீகி எழுதியதைப் போன்று  சீதையின் இலக்குவன் மீது கடும் சொல் அம்புகளை எய்யாததற்கு, கம்பரின் தமிழ் மரபும் ஒரு தலையாய காரணம் என்று படுகிறது.  தமையனின் தாரம் தாய்க்கு நிகர் என்பது தமிழர் பண்பாடு.  எனவே, தனயனுக்கு நிகரான இளைய பெருமாள் இலக்குவன் தன் மீது தகாத ஆசை கொள்ளுவான் என்று சீதையால் எண்ணிக்கூடப் பார்த்திருக்க இயலாது, அப்படி எழுதினால் சீதையைத் திருமகளுக்கு இணையாக என்ன, ஒரு சராசரிப் பெண்ணாகக் கூட, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அதை எழுதாமல், கம்பர் விட்டுவிட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனால், வால்மீகியோ, இலக்குவன் சீதையின் கடும் சொற்களுக்கு, தன்னைப் பற்றி கேவலமாகப் பேசப் பட்ட எந்தக் குற்றச் சட்டுகளுக்குமே பதில் எதுவும் சொல்லாமல், இராமனுக்கு எதுவும் நேர்ந்திருக்காது, அவரின் கட்டளையை மீறி நான் செல்ல முடியாது என்று மட்டுமே கூறுவதாக எழுதியுள்ளார். மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் வால்மீகி ஏன் இப்படி எழுதியிருக்கிறார், இலக்குவன் ஏன் சீதைக்கு தனது நேர்மையைப் பற்றி விளக்கம் தெரிவிக்கவில்லை என்று தோன்றும். முதலாவதாக, சீதையை சோபனே (शोभने), அதாவது, மங்கலமானவளே, மிகச் சிறந்தவளே என்றுதான் இலக்குவன் குறிப்பிடுகிறான். இதிலிருந்து அவளைப் பற்றி தவறான எண்ணம் தனக்கு எதுவும் இல்லை என்று ஒரே சொல்லில் தெரிவிக்கிறான். மேலும், சீதை இருக்கும் மன நிலையில் தான் என்ன சொன்னாலும் பயனில்லை என்றே அவன் நினைக்கிறான் என்று வால்மீகி நமக்குப் புரிய வைக்கிறார்.

அதற்குப் பிறகும் சீற்றம் தணியாதவளாக, இலக்குவன் மீதும், ஏன் பரதன் மீதுமே குற்றச் சாட்டுகளை அடுக்குவதாக வால்மீகி எழுதுகிறார்.  கடைசியில், என்ன செய்தாலும் தன்னை அடைய முடியாது என்றும், தன்னை அடைய முயற்சித்தால் உயிரைப் போக்கிக் கொள்வதாகவும் சீதை சொல்கிறாள். இது சீதையின் கற்பை உயர்த்துவதாகவே அமைகிறது.  கணவர் உயிருக்கு ஆபத்து என்று நினைக்கும் பொது, உணர்ச்சி வசப்பட்ட சீதை தான் என்ன சொல்கிறோம் என்பதை உணராமலேய பேசுவதாகத்தான் வால்மீகி வர்ணித்திருக்கிறார். கற்பில் சிறந்திருந்தாலும், சீதை ஒரு சாதாரணப் பெண்ணாகத்தான் அவரால் உருவகப் படுத்தப் படுகிறாள். அதை அறிந்தே, இலக்குவன் சிந்தியாதவண்ணம், உணர்ச்சிப் பெருக்கில் சொல்லப்பட்ட அவளது  சொற்களை ஒதுக்கி விடுகிறான் என்றும் நாம் புரிந்து கொள்ளவேண்டி இருக்கிறது.

இருப்பினும், ஏழு சுலோகங்களில் சீதைக்கு இலக்குவன் பதிலளிப்பதாக வால்மீகி விளக்கி உள்ளார்.  அவற்றில் சீதையை தெய்வத்திற்கு இணையாகவே தான் நினைப்பதாகக் கூறி, தனது தூய்மையை விளக்கிவிட்டு, அவளது கடும் சொற்கள் பழுக்கக் காச்சிய அம்பு போலத் தனது காதுகளுக்கு நடுவில் பாய்வது போல இருக்கிறது என்கிறான்.  அச் சொற்களால் செய்வதறியாது திகைத்து, நின்று போனேன் என்று தன் நிலைமையைச் சீதைக்கு எடுத்துக் கூறுகிறான்.  மேலும், பெண்கள் தங்கள் காரியம் ஆகவேண்டும் என்பதற்காக எதை வேண்டுமாலும் பேசுவார்கள் என்றும் சொல்கிறான். இதன்மூலம் வால்மீகி பெண்களைப் பற்றி, அவர்கள் தெய்வத் தன்மை பொருந்தியவர்கள் ஆனாலும், பெண்களாக இருந்தால் எப்படி நடந்து கொள்வார்கள் என்று இலக்குவன் மூலமாக விளக்குகிறார். கம்பரோ, பெண்களை உயர்வாகப் போற்றும் தமிழ் மரபுக்கு இவ்வாறு பெண்களைப் பற்றி விவரிப்பது உகந்ததல்ல என்று விட்டு விடுகிறார்.

இலக்குவன் செல்லாவிட்டால் தான் உயிரைத் துறந்துவிடுவேன் என்று சீதை சொல்வதாக இரண்டு கவிஞர்களுமே எழுதி இருக்கிரார்கள். இலக்குவன் வாளாவிருப்பது நல்ல நெறி அல்லவென்றும், அவன் செல்லாவிட்டால், தீ மூட்டி உயிர் துறப்பேன் என்று சீதை வாய்மொழியாகவே கம்பர் தெரிவிக்கின்றார்.  வால்மீகியோ, இராமனைத் தவிரத் தன்னை யாரும் தொட முடியாது என்றும், அப்படி ஒரு நிலை வந்தால், உயிரை எப்படித் துறப்பேன் என்று பல வழிகளைக் சீதை கூறுகிறாள் என்று தெரிவிக்கிறார்.  சீதையின் சொல்லில் இருக்கும் முரண்பாட்டை (irony), நமக்குத் தெரிவிக்கிறார் வால்மீகி.  மற்றவர் யாரும் தன்னைத் தொடும் நிலை வந்தால் உயிர் துறப்பேன் என்ற சீதையை, இராவணன் தூக்கிச் செல்லபோகும் முன்னதாகவே முறையை நமக்குக் கோடிட்டுக் காட்டுகிறார் அந்த மகாகவி. கம்பர் இவ்வாறு சீதை வாய்மொழியாகச் சொல்லாததும் சீதை இராவணன் கவர்ந்து செல்லும் புனைவை மனதில் கொண்டுதான்.

இவ்வாறு சீதை சொன்னதும், அவளை வணங்கிவிட்டுத் திரும்பிப் பார்த்துக்கொண்டே இலக்குவன், இராமன் இருக்குமிடம் தேடிச் சென்றான் – இது வால்மீகி சொன்னது.

“இங்கிருந்தால் மதிப்பிற்குரிய சீதை இறப்பாள்; சென்றால் பெருங்கேடு வந்து சேரும். ஊழ் வினையால் எனக்கு இந்நிலை ஏற்பட்டது. அறம் ஒன்றினால் மட்டும்தான் அழிவைத் தடுக்க இயலும்.” என்ற இலக்குவன், சீதையைச் சுற்றி வலம் வந்து வணங்கி அங்கிருந்து அகன்றான் — இது கம்பரின் கூற்று.

இருவருமே, இலக்குவனின் நேர்மையையும், கடமை உணர்வையும், இருதலைக்கொள்ளி நிலைமையையும் விவரிக்கிறார்கள். கம்பருக்கு ஊழ்வினையில் (கர்மா, முன்வினைப் பயன்) இவற்றில் இருக்கும் நம்பிக்கை இலக்குவன் வாயிலாக வெளிவருகிறது.  வால்மீகியோ, அதைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லை.

இறுதியில், தீங்கு எதுவும் ஏற்பட்டால், கழுகுகளின் தலைவன் ஜடாயு காப்பான் என்ற நம்பிக்கையுடன் செல்கிறான் என்று முடிக்கிறார் கம்ப நாட்டார். வனத்தில் வாழ் தெய்வங்கள் சீதையைக் காப்பாற்றட்டும் என்று இலக்குவன் இயம்பியதாக வால்மீகி வரைகிறார்.

மகாகவிகள் இருவருமே பின்நாள் வரப் போவதை, முன்கூட்டியே தெரிவிக்கிறார்கள்.  வால்மீகி சீதை வாயிலாகத் தெரிவித்தால், கம்பர், இலக்குவன் வாயிலாகத் தெரிவிக்கிறார்.

கம்பர் சீதையைத் திருமகளின் அவதாரம் என்று காண்பிப்பதால், அத்தகைய தெய்வ மாதின் வாயில் தகாத சொற்கள் வரக்கூடாது என்று “இடக்கர் அடக்கி” இருக்கிறார்.  வால்மீகியோ, அப்படிச் சீதையைக் காண்பிக்காததால், மானிடப் பெண்ணின் இயல்புகளை அவள் மேல் போர்த்தி இருக்கிறார்.

 

*************************************************************************************************************

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கம்பனும் வால்மீகியும் – இலக்கிய ஒப்பீடு – 2

  1. அற்புதமான ஒப்பீடு ஆய்வு. வாழ்த்துகள். கே.ரவி 

  2. வால்மீகி இராமாயணத்தில் இராமனைத் தேடிச் செல்லாமல் நிற்கும் இலக்குவனைப் பார்த்துச் சீதை தகாத சொற்களைச் சொல்கின்றாள்;  ஆனால் கம்பரோ அண்ணியைத் தாயாக நினைக்கும் தமிழர் பண்பாட்டுக்கேற்ப பாடல் புனைந்துள்ளார் என்பதைச் சான்று காட்டி விளக்கியிருக்கும் இடம் அருமை.  தொடர்ந்து எழுதுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *