நவராத்திரி 2014 (6) அவளே கதி
இசைக்கவி ரமணன்
அவளே கதி
தீதகற்றிடும் திருவிழி, இவள்
திட்டினாலும் அது தேன்மொழி
கோதுசெய்யும் வளைக்கரம், கொடும்
சூலமேந்தும் ஒளிக்கரம்
வேதமாயிரம் இவள்நிழல், மன’
வேதனைகளும் இவள்தழல், இவள்
பாதமொன்றுதான் நம்கதி, அதைப்
பற்றி நிற்பதே என்வழி!
ஆசை ஏதாக ஆயினும், உடன்
அவள் நினைப்பை அதில் ஏற்றுக
மாசு யாவும் கலைந்திடும், மன
மலினம் தானே மறைந்திடும்
ஆசை ஏதாக ஆயினும், அதை
அவளுக்கர்ச்சனை ஆக்குக
ஆசை அவளன்றி வேறெதும், சற்றும்
அணுகிடா நிலை எய்துக!
யாவும் நன்மையே வாழ்விலே, இதை
யாண்டும் மறவாதீர் மனதிலே
பாவ புண்ணியம் வேறிலை, தாய்
பால்தனங்களில் மாறிலை
தேவைகள் நிறைவேறவும், ஓர்நாள்
தேவையே தீர்ந்து போகவும்
ஆவல் யாவையும் தந்தனள், அவள்
ஆசை முடிவாக நின்றனள்
கருணை ஒன்றுதான் இவள்மனம், அதில்
கலகலக்கும் பலவாய் குணம்
உருவம் யாவுமிவள் உருவமே, மன்னும்
உயிர்கள் யாவுமிவள் உயிரிலே
பொறுமையில் இவள் பூரணம், இவள்
பொங்க உண்டு பல காரணம்
அருமை இவள்செய்கை அருமையே, இவளை
அறிவதொன்றுதான் பெருமையே!
கையிரண்டையும் கூப்பியே, இரு
கண்ணில் கங்கையைத் தேக்கியே, என்
மெய்யும் உயிரும் ஒடுங்கியே, அவை
மீறி மீறிச் சிலிர்க்கவே, அடி
தையலே! உன்றன் காலிலே, மனம்
கொண்டதே பெரும் காதலே! இனி
உய்வதென்றொன்றும் இல்லையே! இது
உயிரில் உயிரான எல்லையே!
26.090.2014 / வெள்ளி / 21.45 / வள்ளியூர்-சென்னை ரயிலில்