நவராத்திரிப் பாடல்கள் – கவிதை நான் பாட …..
இசைக்கவி ரமணன்
(புண்ணாய்க் கிடக்கிறது தொண்டை. பண்ணாய்க் கொழிக்கிறது நெஞ்சம். பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை. குரலைப் பொறுத்துக்கொள்ளவும்)
கவிதை நான் பாட ……
[mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F/[/mixcloud]
கவிதை நான்பாட கனவில் நீ ஆட
ககனம் சுழலாமல் நின்றதோ!
சிவிகை ஏறாத சிந்தனை ஒன்று
சிறகுகொண் டெங்கு சென்றதோ!
பரவும் இன்பம் நீ நெருடும் துன்பம் நீ
மலரின் மென்மை நீ புயலின் வன்மை நீ
மின்னும் கண்கள் நீ மீறும் காதல் நீ
ஊறும் போதை நீ ஏறும் கவிதை நீ
இருள் நீ ஒளி நீ அருள் நீ மருள் நீ
என்னடி சொல்ல? எதுவும் நீ தேவி (கவிதை)
மலைபிளக்கின்ற விரல் நகமொன்றில்
பிறை நிலவுகள் நூறு
மறை தவழ்கின்ற கழல் நிழல்தன்னில்
கலை நிலையென்ன கூறு !
எழில் விதமின்னும் நூறு உன்
எதிர் நின்றதே பேறு
விழுந்தாலென்ன எழுந்தாலென்ன
விழிமுன் வினையெது விதியேது தேவி! (கவிதை)
கரம் ஆயிரம் கலம் ஆயிரம்
கண்ணில் தெரிவதோ எட்டு
கடந்தா லென்ன தொடர்ந்தே வந்து
கண்ணில் படும்வண்ணச் சிட்டு
நடந்தேன் தினம் விழுந்தேன் உனை
நினைந்தேன் உடன் எழுந்தேன்
நனவும் கனவும் குலவும் தருணம்
நதியின் கரையில் தெரியும் உருவம்
சின்னப் பிரம்போடு மின்னல் நகையோடு
கன்னங் கரிய சின்னஞ் சிறுமி தேவி ! (கவிதை)
29.09.2014 / திங்கள் / இரவு 10 45
வாழ்வு உந்தன் வழிவந்த போது
தாழ்வு உயர்வு தானென்பதேது?
சூழ்வன சூழ்க! சுந்தர மாக!
துன்பமும் இன்பமும் தூசிகளாக
அந்தரி சுந்தரி சிந்திய புன்னகை
மந்திரச் சொல்லாய் மலர்பூக்க
வந்து விழுந்திடும் செந்தமிழ்க் கவிதையில்
அந்தி மறந்தது விடையேக
வாழ்க்கை முடிந்தது வளமாக
வாழ்தல் தொடர்ந்தது நலமாக
இதயம் முழுதும் இளமை உதயம்
எதுவரை என்னும் கேள்வியும் விழவும்
அதையும் அழகிய கவிதையில் சொல்லும்
இதழ்கள் எனதில்லை உனதே தேவி!