இசைக்கவி ரமணன்

 

முத்தம் கொடுப்பது போல்

 

[mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%B2/[/mixcloud]

 

images (2)
முத்தம் கொடுப்பது போல், உயிர்
மூச்சைத் தருபவளே! வினை
மொத்தம் எரிப்பவளே! அதில்
மூண்டு புரள்பவளே! மனச்
சத்த மடங்கிய வாசலிலே வந்து
சாய்ந்து கிடப்பவளே! தலை
சாய்த்துச் சிரிப்பவளே! அந்தச்
சத்திரத்துத் திண்ணைப் பத்திரத்தில் என்னைத்
தாங்கி வளர்ப்பவளே! நெஞ்சில்
தங்கி இருப்பவளே!

காலத்துக் கோளாறும், உந்தன்
காலருகே வருமோ? உந்தன்
கோலத்தைக் கண்டபின்னும், எந்தக்
கோளும் ஒரு பொருட்டோ?
ஆலத்தி வேம்பாக் அல்லியில் காம்பாகி
ஆத்தங் கரையாகி, மண்ணு
அளையும் பிள்ளையாகி, அடி
மூலச் சிறுக்கி என் மூளையைக் கொழப்பி
முன்னுஞ் சிரிப்பவளே! என்
பின்னும் நடப்பவளே!

யாருக்குன்னைத் தெரியும்? எந்தப்
பேருக்குன்னைப் புரியும்? நிதம்
காணக்காண விரியும், எங்கள்
கவிதையைப் போன்றவளே! இந்த
ஊருக்குள் வீதியில் ஒடெஞ்ச கரும்பெடுத்து
உச்சிமட்டும் கடிச்சு, சும்மா
ஒதட்டைக் கொதப்பிக்கிட்டு, நீ
ஓரடி ஈரடி வக்கிற ஜோரில
ஒயிலுக்கு மையல்வரும், அந்த
ஓங்காரமும் மயங்கும்!

பத்துப் பதினாறு, இந்தப்
பாரினில் கண்ட பேறு, அடி
வித்தில் வெடிப்பவளே! ஆயினும்
விண்டு கிடப்பவளே! கண்ணில்
பட்டதெல்லாம் உந்தன் கொட்டமின்றி வேறு
பார்க்கவில்லை எதுவும்! நெஞ்சில்
பற்றவில்லை எதுவும்! அந்த
வெட்ட வெளியெங்கும் மொட்டு மடியாக்கி
ஒட்டக் கறப்பவளே! உயிர்
உள்ளே பறப்பவளே!

பாதம் சரணமம்மா! இந்த
பாலன் உன் பிள்ளையம்மா! நாலு
வேதம் விசிறியம்மா! கவிதை
வெறி சிவிகையம்மா! பிஞ்சுப்
பாதமுந்தன் நெஞ்சில் பந்து விளையாடப்
பார்த்துச் சிரிப்பவளே! கன்னம்
பற்றித் திளைப்பவளே! அடி
மீதம் மிச்சமினி ஏதுமில்லாதொரு
முத்தங் கொடுத்துவிடு, அதில்
மூச்சை நிறுத்திவிடு!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.