இசைக்கவி ரமணன்

laitha-tiripurasundari

கண்ணுக்குக் கண்ணல்லவோ? நீ
காலத்தின் பண்ணல்லவோ?
பெண்ணுக்குப் பெண்ணாக பெயருக்குள் உயிராக
பேசாத பேச்சல்லவோ? நீ
பிழையாத மூச்சல்லவோ?

எண்ணுக் கடங்காமலே, நீ
எண்ணத்தில் நடமாடுவாய்
மண்மீது வானாக மலருள்ளில் தேனாக
உண்மைக்குள் உண்மையாக, உயிரில்
ஊறிடும் தாயல்லவோ?

என்வாழ்க்கை உன்றன்வசம், நீ
ஏற்றதால் நானும் நிசம், நீ
நின்றாடும் நெஞ்சினில் நின்காலில் கொஞ்சிடும்
நித்திலச் சதங்கைகளே! அவை
நீளுமென் கவிதைகளே!

வினைகளினி ஏதுமில்லை, மனம்
விடைதேடி மோதவில்லை
சுனையாய்த் துளிர்த்தவொளி சுழியோடும் வெள்ளமாய்த்
துள்ளிவிளை யாடும்போது, இனி
துன்ப மேதின்ப மேது?

அமிழ்தான தமிழூட்டினாய், உலகின்
அமரிலே அமரம் செய்தாய்
சிமிழ்விட்டுத் திசையெங்கும் தமிழ்சொட்டும் பறைகொட்டும்
கவிபாடும் குயிலாக்கினாய்! பிறர்
கவலையை நீ போக்கினாய்!

இருகை இறங்காதம்மா! என்
ஈரவிழி உலராதம்மா! உன்றன்
அருமையைப் பாடிடும் உரிமையை மிஞ்சிடும்
பெருமைவே றேதுமில்லை, இந்தப்
பிள்ளைக்கு நீயே நிலை!

27.09.2014 / சனிக்கிழமை / 07.00 / வள்ளியூர்-சென்னை ரயிலில்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.