கிரேசி மோகன்
தவ சிவன்….Friend Philosopher and Guide….
“உத்ரக் கிரியை உலகில் முடிந்ததும்
பித்ருக்கள் போவர் பரமகுரு -மித்ரன்
மகாதேவன் கைக்குள் மறுஜென்மம் காண;
சகா,தேவன், தெய்வம், சிவம்”….கிரேசி மோகன்….
கிரேசி மோகன்
தவ சிவன்….Friend Philosopher and Guide….
“உத்ரக் கிரியை உலகில் முடிந்ததும்
பித்ருக்கள் போவர் பரமகுரு -மித்ரன்
மகாதேவன் கைக்குள் மறுஜென்மம் காண;
சகா,தேவன், தெய்வம், சிவம்”….கிரேசி மோகன்….
இசைக்கவி ரமணன்
காப்பு
எதிர்கொண் டழைக்கும் விநாயகா! ரெட்டைப்
புதிர்சூழ வீற்றசிங் காரா! சதிராடும்
காபாலி நாயகியைக் கற்பகத்தை நாவார
நான்பாடச் செய்வீர் நலம்
ஜென்மஜென் மங்களாய்க் கன்மக் கந்தைகளை
என் தோளில் நான்சுமந்தே
என்னை நானே தாங்க இயலாத கேலியாய்
எத்தனை யுகம் போனதோ!
நன்மையாவும் பருகி புன்மையாவும் பழகி
நான்கண்ட அனுபவங்கள்
நின்றன நின்றன நின்றவற் றின்நடுவில்
நெளிகிறேன் நதியாக நான்
அன்றுகதை நாணமெனில் சென்றகதை பாடமெனில்
இன்றுகதை ஒன்றுமிலையே
என்றுமுள பேருண்மை நின்றுவிளை யாடவே
எதிர்வந்த மயிலை உமையே! (1)
சித்தமென் றொன்றுண்டு செதில்செதில்கள் செதில்களாய்ச்
சித்திரம் படிவதுண்டு
சத்தமில் லாமல்நீ சரிநடுவில் அரிவாயே
சரியான வாளைக்கொண்டு!
மொத்தமலி னங்களும் மூண்டுமேல் வரும்போது
மூச்சே திகைப்பதுண்டு
சுத்தமே அண்டா அசுத்தனே நானா?
சொல்லியழ யாரிங்குண்டு?
மொத்தத்தை யும்சின்ன முத்தத்தி னால்மாற்றி
முறுவலால் கொல்லும் தாயே!
சத்தத்தின் நடுவிலே சாந்திசுக மாய்நின்ற
சத்யமே! மயிலை உமையே! (2)
கண்ணும் திறக்காத காலத்தில் உன்னழகுக்
காலடியில் நான்வளர்ந்தேன்
எண்ணத்தில், இளம்பிள்ளை இதயத்தில் உன்கோலம்
எப்போதும் ஏந்திநின்றேன்
மண்ணைப் பிசைந்தாளும் மழைபோல இவ்வாழ்க்கை
மனதைப் பிசைந்தயர்ந்தேன்
கண்ணுன்னைக் காணுமோ காணாமல் மூடுமோ
கண்ணீரில் உயிர்கரைந்தேன்
உண்மையில் உனக்கெந்தன் ஒருநினைவு வந்ததால்
ஓடிவந் தேன் மீண்டுமே!
பெண்மையின் வண்ணமே! பேசிடும் வடிவமே!
பெருமயிலை ஆளும் உமையே! (3)
வெகுதொலைவில் சென்றவள் விரலருகில் நிற்கிறாய்
வேறென்ன நான்கேட்பது?
தகுதியில்லாத எனைச் சந்நிதியில் சேர்ப்பித்த
கருணையோ அவள்செய்தது
மிகவிளைய காலமும் மீண்டது, மனமுன்முன்
மின்னலின் யாழானது
நகைசெய்த படிநீயும் நாடாளும் தெருவிலே
நாளெலாம் கால்சென்றது
மிகையின்றிச் சொல்லவா? மிச்சமில் லாமலெனை
மிஞ்சவத் தாயென் தாயே!
அகமெங்கும் சுகமான தமிழ்கொண்டு நான்பாடத்
தலையாட்டும் மயிலை உமையே! (4)
மயிலையொரு கயிலையென மார்நெகிழ குருநாதர்
மயிலையில் அமர்ந்து சொன்னார்
மயிலான உன்முன்பு மனம்நிற்கும், பயிலாத
மறைகூடும் என்று சொன்னார்
ஒயிலாடும் உன்னருகில் உருவேற்றிக் குங்குமம்
ஒருவிரலில் நெற்றி வைத்தார்
கயிலையொரு மயிலையெனும் காட்சியை நெஞ்சுக்குள்
காட்டாமல் காட்டிவைத்தார்
பயில்வதெல் லாமழகு பருகிடும் வித்தைதான்
பாமரனுக் கருளும் தாயே!
கயிறெரிந் தேபோன கதையாக ஆக்கினாய்
கயிலையின் மயிலை உமையே! (5)
மனம்விட்டுக் கயல்துள்ளும் மயிலைக் குளம்சுற்றும்
மாடத் தெருக்கள் சுற்றி
தினம்புதிது புதிதாக விதம்காட்டும் பூக்களும்
தினம்கூடும் காய்கனிகளும்
இனமெனில் மனித இனம் இடமெனில் மயிலையென
இதயத்தில் கர்வம்பொங்க
உனையெண்ணி வேறேதும் ஒருதுளியும் எண்ணாமல்
ஓர்வாழ்வு நான் வாழ்கிறேன்
தினமுன்னைப் பார்த்தேங்கும் பிள்ளையை நீயும்தான்
தினம்பார்க்க வேண்டும் அம்மே!
மனம்பிரிய முடியாத மயிலையில் எனைக்கூட்டி
மழைபொழியும் மயிலை உமையே! (6)
கற்பகம் என்பதெது? கால்களா? கண்களா?
கனிவாயின் கள்ள நகையா?
விற்புருவ மா?மலர் வேய்ந்த உடையா?மறை
வேதத் திருச்செவிகளா?
சொற்பொருளும் எட்டாத காபாலி பாகமா?
சொல்லித் தீரா மோகமா?
அற்புதம் தடுமாறும் ஆனந்தமா? இல்லை
அதைமிஞ்சும் அமைதிதானா?
பொற்பதம் தொட்டுநான் பூரித் தெழுந்தகணம்
போராடும் கேள்வியிலையே!
கற்பிக்க முடியாத கருணையே உருவான
கற்பகம் மயிலை உமையே! (7)
கூடிவரும் கார்மேகம் தேடிவரும், உன்னழகு
கோபுரக் கலசம் முட்டும், நீ
ஆடிவிளை யாடியவோர் அழகான முத்ததனில்
அன்றுநில வாய்க்கொஞ்சிடும்
பாடிவரும் குயிலோடு பவளவாய்க் கிள்ளைகள்
பந்திபோட் டுப்பாடிடும்
ஓடிவரும் பிள்ளைகள் உன்வாயி லில்நின்று
ஓவென்று கத்திமகிழும்
ஈடிணையு மில்லாமல் என்னுயிரை மொத்தமாய்
ஏந்தியெழில் பார்க்கும் தாயே!
நாடிவரும் எவருக்கும் நலமே வழங்கிடும்
நன்மயிலை வாழும் உமையே! (8)
சாம்பவீ! என்வினையைச் சாம்பலாய் ஆக்கினாய்
சடுதியில் காடெரித்தாய்
சாம்பலே மேனியாய்க் காபாலி சங்கரன்
சந்நிதியின் அருகில் நின்றாய்
சாம்பலைத் தமிழினால் கன்னியாய் உயிர்ப்பித்த
சம்பந்தன் சாட்சியானாய்
சாம்பலாய்ப் போன என் வாழ்விலே நீவந்து
தளிராக முறுவலித்தாய்
தேம்பியழும் குழந்தைக்குத் தேடிமுலைப் பால்தந்த
தெய்வத்தை மிஞ்சும் தாயே!
பூம்பாவ டைகட்டிப் புவனத்தை ஆள்கின்ற
பொன்மயிலை வாழும் உமையே! (9)
எங்கேது வங்கியதோ அங்கேயே முடிவதுதான்
இவ்வாழ்வின் அழகல்லவா?
இங்கிருந் தெங்கெங்கி லோதிரிந்தே சேர்ந்த
திறுதியில் இங்கல்லவா?
இங்கெனைக் குடிவைத்த இதயங்களைத் தாயே
எப்போதும் காக்கவேண்டும்
மங்கலம் வைபவம் மணமுள்ள புகழவரின்
மனையெங்கும் ஓங்கவேண்டும்
இங்குன்னை நீங்காமல் இனியெங்கும் சுற்றாமல்
இணையடியில் ஏந்து தாயே!
தங்கத்தின் தங்கமே! கற்பகத் தருவே! நிதம்
தழைத்தோங்கும் மயிலை உமையே! (10)
27.09.2014 / சனிக்கிழமை / 20.33
— நாகேஸ்வரி அண்ணாமலை.
இந்தியாவில் எதற்கெடுத்தாலும் பள்ளிகளுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விடுவது வழக்கமாக இருக்கிறது. சென்ற மாதம் கர்நாடகாவில் ஒரு எழுத்தாளர் மறைந்தபோது விடுமுறை அளிக்கப்பட்டது. அவர் பெரிய சிந்தனைவாதி, பெரிய சமூக சீர்திருத்தவாதி, கன்னட மொழிக்கு என்னென்னவோ செய்திருக்கிறார் என்றெல்லாம் விடுமுறை கொடுத்ததற்குக் காரணங்களாகக் கூறப்பட்டன. இருந்தாலும் பள்ளிகளையும் அரசு அலுவலகங்களையும் ஒரு நாள் அவை பணிபுரிவதை நிறுத்தும் அளவிற்கு அவர் பெரிய ஆளா என்பது சர்ச்சைக்குரிய விஷயம். அது போகட்டும். அரசியல் தலைவரோ அல்லது ‘பெரிய மனிதர்’ யாரோ இறந்துவிட்டால் அதைக் காரணமாகக் கொண்டு விடுமுறை விடுவதால் யாருக்கு லாபம்? இறந்தவரின் போதனைகளையோ சிறப்புகளையோ அன்று நினைவுகூர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தினாலாவது அதில் ஒரு அர்த்தம் உண்டு. அன்று விடுமுறை கொடுப்பதால் பலர் சினிமாவுக்குப் போவார்கள். அல்லது வீட்டில் இருந்துகொண்டு தொலைக்காட்சிப் பெட்டி முன் உட்கார்ந்துவிடுவார்கள். இறந்தவர்களின் வழியில் நாமும் நடக்க வேண்டும் என்றோ அவர்கள் கூறிய அறிவுரைகளை அன்று சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்றோ யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.
இந்தியாவில் பல மதங்கள் இருப்பதால் எல்லா மதங்களின் முக்கிய பண்டிகைகளுக்கும் விடுமுறை கொடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உண்டு. இந்துக்கள் மாதத்திற்கு ஒரு பண்டிகை கொண்டாடுகிறார்கள். சிறுபான்மை மதங்கள் தங்களுக்குரிய முக்கியமான நாட்களைக் கொண்டாடுகிறார்கள். இதனால் சில வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் (restricted holidays) கொடுக்க வேண்டிய அவசியம். இதற்கு மேல் தேசிய விடுமுறை நாட்கள் வேறு. இந்தத் தேசிய விடுமுறை இந்தியக் குடிமக்கள் எல்லோருக்கும் பொது. தனியார் துறைகளில் வேலை பார்ப்பவரையும் சேர்த்து எல்லோருக்கும் அன்று விடுமுறை. வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் விடுமுறை இல்லை. மொத்தத்தில் பதினைந்து விடுமுறை நாட்கள், அதற்கு மேல் வரையறுக்கப்பட்ட விடுமுறைகள் இரண்டு என எல்லோருக்கும் பதினேழு விடுமுறை நாட்கள் கிடைத்துவிடுகின்றன.
அமெரிக்காவில் இதற்கு நேர் எதிர். சுதந்திர தினம், நன்றி தெரிவிக்கும் பண்டிகை, கிறிஸ்துமஸ், தொழிலாளர் தினம், போரில் இறந்த வீரர்கள் தினம் என்று ஐந்தே தேசிய விடுமுறை நாட்கள்கள்தான். கிறிஸ்தவர்களின் மிக முக்கிய தினமான ஈஸ்டருக்குக் கூட விடுமுறை கிடையாது. குளிர் காலத்தில் எவ்வளவு குளிர்ந்தாலும் விடுமுறை கிடையாது. பனி அளவுக்கு மேல் பெய்து வாகனங்கள் சாலைகளில் ஓட முடியாது என்றால்தான் விடுமுறை கொடுப்பார்கள். கல்வி நிறுவனங்களை அதிகப்படியாக ஒரு நாள் மூடினால்கூட கல்வி பாதிக்கப்படுமாம்; தொழில் நிறுவனங்களை ஒரு நாள் மூடினால் உற்பத்தி பாதிக்கப்பட்டுவிடுமாம். உலகில் எல்லாவற்றிலும் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்று விரும்பும் அமெரிக்காவின் கொள்கை இது.
இந்தியாவில் சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் மாணவர்களைக் கல்வி நிறுவனங்களுக்கு வரச்செய்து தேசியக் கொடியை ஏற்றி சில உபதேசங்களை அளிப்பார்கள். காந்திஜி பிறந்த நாளன்று அதுவும் கிடையாது. சில மணி நேரங்களாவது மாணவர்களைக் கல்வி நிறுவனங்களுக்கு வரச்செய்து அவருடைய போதனைகளைப் போதிக்கலாம். 1948-லேயே மறைந்துவிட்ட காந்திஜியை இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்தியக் குடிமக்கள் நினைவு வைத்திருப்பார்கள் என்று நினைத்து நான் ஆயாசப்பட்டதுண்டு.
இந்தியக் குடிமக்கள் காந்திஜியை சீக்கிரமே மறப்பதற்குரிய ஒரு காரியத்தை இந்திய அரசு இப்போது செய்யப் போகிறது. அன்று மத்திய அரசு அலுவலர்களுக்கு விடுமுறை இல்லையாம். விடுமுறை இல்லை என்பது பெரிய விஷயமல்ல. ஆனால் அவருடைய பிறந்த நாளை இந்தியாவைச் சுத்தப்படுத்தும் நாளாக அனுசரிக்கப் போகிறார்களாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். காந்திஜியை கௌரவிப்பதாக ஜாலம் காட்டி அந்த நாளை நாட்டைச் சுத்தப்படுத்தும் நாளாக மாற்றப் போகிறார்கள். நாளடைவில் காந்திஜியை மறப்பதற்கு இது மறைமுகமான வழி. பாழ்பட்ட இந்தியாவைச் சுத்தப்படுத்தும் பணியை ஆரம்பித்தவர் என்ற பெருமையைத் தட்டிக்கொள்ளலாம்; அந்த பிம்பத்தை தனக்கு உருவாக்கிக்கொள்ளலாம் என்பது மோதியின் ஆசை. காந்திஜி மனச் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்; மத, ஜாதி துவேஷம் என்னும் அழுக்கை மனதிலிருந்து அகற்றவேண்டும் என்று நாளெல்லாம் சொன்னார். தேசத் தந்தையைக் கொலைசெய்த ஆர். எஸ். எஸ். கட்சியிலிருந்து தோன்றிய மோதிக்கு காந்திஜியின் கொள்கை மேல் என்ன பற்று இருக்க முடியும்? ஒரு சில இந்தியராவது நினைவு வைத்திருக்கும் காந்திஜியை வரும் தலைமுறையினர் முழுவதுமாக மறந்துவிடுவதற்கு மோதியின் அரசைத் தவிர வேறு யாருக்கு இவ்வளவு அருமையான யோசனை தோன்றும்! இனி பாடப் புத்தகத்திலிருந்து தேசத் தந்தை மெதுவாக நீக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
படம் உதவிக்கு நன்றி:
http://news.oneindia.in/india/modi-shocker-no-holiday-this-oct-2-gandhi-jayanti-cleanliness-pledge-1529705.html
http://news.oneindia.in/india/take-cleanliness-drive-residential-areas-govt-employees-1530084.html
செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தில் பங்கு பெற்று, சென்ற வாரம் (2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதியன்று) செவ்வாய்க் கோளின் சுற்று வட்டப் பாதையில் மங்கல்யான் முதல் முயற்சியிலேயே நிலைநிறுத்தப்பட்டிருப்பதற்குக் காரணமான இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் அவர்களையும், அவர் தலைமையில் அரும்பணியாற்றியிருக்கும் அனைத்து இஸ்ரோ அறிவியலாளர்களையும் இவ்வார வல்லமையாளர்கள் எனப் போற்றிப் பாராட்டுவதில் வல்லமை இதழ் குழுவினர் பெருமை கொள்கிறோம்.
சென்ற வாரம் இந்திய வரலாற்றில் ஒரு மறக்க முடியாத வாரம், உலக அரங்கையே இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைக்கும் சாதனையை நிகழ்த்தினார்கள் நம் இஸ்ரோ அறிவியலாளர்கள். செவ்வாய்க் கிரகத்தில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள், அங்குள்ள கனிம வளம் ஆகியவற்றை கூர்ந்தாய்வு செய்வதற்கான கருவிகளுடன் ஆளில்லாத விண்கலமான மங்கல்யான், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 2013 நவம்பர் 5ம் நாளன்று செலுத்தப்பட்டது. இந்த மங்கல்யான் வெற்றிகரமாக முதல் முயற்சியிலேயே செவ்வாய்க் கோளின் சுற்று வட்டப் பாதையில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதியன்று துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது. பல அயலகச் செய்தித்தாள்களும் சலிப்பின்றி மீண்டும் மீண்டும் தவறாமல் தங்கள் செய்திகளில் குறிப்பிட்டது இந்தியாவின் இந்த செவ்வாய் திட்ட விண்வெளிச் சாதனையை.
முதல் முயற்சியிலேயே செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் இந்தியாவின் மங்கல்யான் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. இந்த அரிய சாதனையைப் புரிந்ததன் மூலம் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற நாடு என்ற பெருமையும் இந்தியாவிற்குக் கிட்டியுள்ளது. “இச்செயல் பங்களூரில் இருந்து ஒரு கோல்ஃப் பந்தை லண்டனில் இருக்கும் ஒரு குழியில், அதுவும் முதல் வீச்சிலேயே விழச்செய்யும் அளவிற்குத் துல்லியமானது,” என்றும் ஒரு அறிவியலாளர் குறிப்பிட்டுள்ளார். விண்வெளி ஆராய்ச்சியில் முன்னிலையில் இருக்கும் அமெரிக்க மற்றும் ரஷ்ய அறிவியலாளர்களாலும் கூட முதல் முயற்சியிலேயே இச்செயலில் வெற்றி பெற இயலவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. இச்சாதனை இந்திய அறிவியலாளர்களின் தொழில்நுட்பத் திறனை உலகநாடுகளின் கவனத்திற்குக் கொண்டு சென்ற ஒரு குறிப்பிடத்தக்க செயலாக அமைந்ததுவிட்டது.
அத்துடன், செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப் பாதைக்குள் செயற்கைக்கோளை நிலை நிறுத்திய நான்கு விண்வெளி நிறுவனங்களில் ஒன்று இந்தியாவின் இஸ்ரோ. இதற்கு முன்னர் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் மட்டுமே இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளன. ஆசிய நாடுகளில் முதன்முதலில் வெற்றிபெற்ற நாடு இந்தியா என்பதும், சீன விண்வெளி ஆராய்ச்சியாளர்களை இம்முறை இந்திய ஆய்வாளர்கள் இந்தப் போட்டியில் விஞ்சிவிட்டார்கள் என்பதும் மற்றொரு சாதனை.
வரலாற்றிலேயே, உள்நாட்டு தொழில்நுட்பம் மூலம், உள்நாட்டிலேயே இந்திய அறிவியலாளர்களால் உருவாக்கப்பட்டு செவ்வாயின் சுற்றுப் பாதையில் மிகக் குறைந்த செலவில் நிலைநிறுத்தப்பட்ட ஒரே செயற்கைக்கோளும் மங்கல்யான்தான். திட்டசெலவின் அடிப்படையில் உலகில் குறைந்த செலவில் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் திட்டம் எனவும் இது புகழ்பெற்றுள்ளது. இந்தச் சாதனையை, ஹாலிவுட் படத்தயாரிப்பின் செலவினும் மிகக் குறைந்தது என்றும், இந்த மாதம் அமெரிக்க நாசா விண்வெளி நிலையம் அனுப்பிய துணைக்கோளான மேவன் (Maven) திட்டத்தின் பத்தில் ஒரு பங்கு செலவு இது என்பதையும் ஒப்பிடாது இச்செய்தியை அளிக்க எந்த செய்தி நிறுவனத்தினாலும் இயலவில்லை.
இந்த சாதனைகளுடன் உலக செய்தியாளர்களைக் கவர்ந்ததும், யாரும் எதிர்பாராத வகையில் வியந்து போனதுமானது என்றால் அது இந்திய விண்வெளித்துறையில், செய்வாய் கோளின் மங்கல்யான் திட்டத்தில் பணிபுரிந்தவர்களில் அதிக எண்ணிக்கையிலான பெண் ஆய்வாளர்களும், பொறியியல் வல்லுனர்களும் பங்கு பெற்று இருப்பதேயாகும். இஸ்ரோ தனது வெற்றிகரமான வேளையைக் கரவொலி எழுப்பிக் கொண்டாடியதைப் படம் பிடித்த செய்தி நிறுவனங்கள் அவற்றை வெளியிட்ட பொழுது, டுவிட்டர் சமூக வலைத்தளம் புதுவகையில் உற்சாகம் கொண்டது. இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையில் மகிழ்ச்சியுடன் தங்களுக்குள் கைகுலுக்கிப் பாராட்டிக்கொண்டும், வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டுமிருந்த பெண்களை, மலர் சூடிய கூந்தலுடனும் இந்தியக் கலாச்சார உடையுடனும் கொண்டாடிய அறிவியலாளர்களைக் கண்ட உலக ஊடகங்கள் அனைத்தும் எதிர்பாராத வியப்பில் மூழ்கியது தெளிவாக விளங்கியது.
“இது போன்று பெண்களின் பங்களிப்பை நாசா படங்களில் பார்த்ததில்லையே”, “இந்தியாவின் மார்ஸ் திட்டத்தின் முகங்கள் இப்பெண்மணிகள், இவர்கள்தான் உண்மையான முன்மாதிரிகள்” என்ற செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. “கடைசியாக இத்தனை பெண்கள் விண்வெளி ஆய்வில் பங்கு பெற்றதை நாம் எப்பொழுது பார்த்திருக்கிறோம்?” என்று வியந்தார் எகிப்திய ஊடகவியலார் மோனா எல்ட்டாஹவி (@monaeltahawy).
கார்டியன் , நியூஸ்வீக் , பி ஆர் ஐ , பி பி சி , நியூ யார்க் டைம்ஸ் என உலகின் முன்னணி செய்தி நிறுவனங்கள் யாவும் மங்கல்யான் வெற்றிச் செய்தியுடன் இந்தியப் பெண் அறிவியாலாளர்களின் படங்களைத்தான் வெளியிட்டன.
இஸ்ரோவின் சற்றொப்ப 14,000 பணியாளர்களில் 20% பெண்கள் என்பது ஒரு வியப்பான செய்தியாகப் பரவியது. மினால் சம்பத், நந்தினி ஹரிநாத் போன்ற இஸ்ரோ அறிவியலாளர்களைப் பற்றி இந்தியர்கள் முன்னரே அறிந்தவர்கள்தான் என்றாலும், அவர்களும் இந்த அளவிற்கு பெண் அறிவியலாளர்கள் கட்டுப்பாட்டறையில் பங்கு பெற்றிருந்திருக்கிறார்கள் என்பதை முதன் முதலாக அறிந்து வியந்ததை டுவிட்டர் செய்திகள் காட்டின.
கீழே குறிப்பிட்ட படம் ஆயிரத்திற்கும் அதிகமுறை பகிர்ந்து கொள்ளப்பட்டது.
Love this pic so much:when was last time u saw women scientists celebrate space mission? #India #MarsMission @soutik pic.twitter.com/K9BBzX1vz2
— Mona Eltahawy (@monaeltahawy) September 24, 2014
#Mangalyaan, #IndiaAtMars, #marsorbitormission, #MarsMission, #Isro மற்றும் #Martian முதன்மை செய்திப் பரிமாற்றச் சொற்களாக டுவிட்டரில் உருவெடுத்தன. @MarsOrbiter முகவரியைத் தொடர்பவர்கள் எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கைத் தொட்டது.
Behind every successful space mission lies a team of hard working and hardly sleeping scientists. These are the brains behind Mangalyaan:
ISRO Scientists/Engineers:
K Radhakrishnan: The Chairman of ISRO and Secretary in department of space.
M Annadurai: Programme Director of Mars Orbiter Mission.
S Ramakrishnan: Director of Vikram Sarabhai Space Centre and Member Launch Authorisation Board.
SK Shivakumar: Director of the Isro Satellite Centre.
P Kunhikrishnan: Director of the PSLV programme.
Chandradathan: Director of the Liquid Propulsion system.
AS Kiran Kumar: Director of the Satellite Application Centre.
MYS Prasad: Director of the Satish Dhawan Space Centre and Chairman of the Launch Authorisation Board.
S Arunan: The Project Director of Mars Orbiter Mission and was responsible for leading a team to build the spacecraft.
B Jayakumar: Associate Project Director of PSLV project.
MS Pannirselvam: The Chief General Manager of range operation director at Sriharikota Rocket port.
V Kesava Raju: Mission Director of Mars Orbiter Mission
V Koteswara Rao: ISRO scientific secretary
&
Their Team of Scientists and Engineers

செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் மங்கல்யான் இணைக்கப்படும் விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தை ஒரு மாபெரும் இந்திய வரலாற்று நிகழ்ச்சியாக மாற்றி இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரையும் பெருமை கொள்ளச் செய்த அறிவியலாளர்களை பாராட்டாத இந்தியர் இல்லை எனலாம். முன்னர் ஒருமுறையும் தொடர்ந்து 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உலக சாதனையை செய்தவர்கள்தாம் நம் இந்திய இஸ்ரோ அறிவியலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்க மற்றொரு செய்தி. ரஷ்யாவை 8 தொடர் வெற்றிகரமான செயற்கைக் கோள் நிறுவிய நாடு என்ற இரண்டாம் இடத்திற்குத் தள்ளிய இந்திய விண்வெளி ஆய்வாளர்களின் சாதனைகளைக் கண்டு இன்றைய உலகம் வியக்கிறது.
இதற்கும் மாறாக வளரும் நாட்டிற்கு விண்வெளி ஆராய்ச்சி தேவையா, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கலாமே என்று முணுமுணுத்தவர்களை பொருட்படுத்தாது “டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்” என்ற மழலையர் பாடலையும் கீழ்வருமாறு மாற்றியமைத்து பாடி இந்தியர்கள் தங்கள் வெற்றியைக் கொண்டாடினார்கள்.
“Twinkle, twinkle, little star
World’s envious; we’re on mars!
Up above the world so high,
We’ve made it in a single try!”
செவ்வாயை அடைந்த இந்தியாவின் மார்ஸ் ஆர்பிட்டர் “Howdy @MarsCuriosity? Keep in touch. I’ll be around.” என்று அனுப்பிய டுவிட்டர் செய்தியையைத் தொடர்ந்து “Namaste @MarsOrbiter” என்று நாசாவின் ‘மார்ஸ் கியுரியாசிட்டி’ தனது டுவிட்டர் செய்தி ஒன்றை அனுப்பி வரவேற்க, விண்வெளி வரலாற்றில் இந்தியாவின் சாதனையின் அடையாளமான இச்செய்திப் பரிமாறல், அதனைப் பார்த்த அனைவரையும் பெருமிதம் கொள்ள வைத்தது.
Howdy @MarsCuriosity ? Keep in touch. I'll be around.
— ISRO's Mars Orbiter (@MarsOrbiter) September 24, 2014
கீழே சென்னையில் பள்ளி மாணவர்கள் இஸ்ரோ அறிவியலாளர்களைப் பாராட்டிய படமொன்று. இச்சிறார்கள் அனைவருக்கும் இஸ்ரோ அறிவியலாளர்கள் ஒரு சிறந்த முன்மாதிரி.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஒரு நாட்டின் முன்னேற்றத்தின் திறனுக்குச் சான்றுகள். இது இளைய தலைமுறையை அத்துறையில் ஈடுபட ஊக்குவிக்கும். அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் இந்தியர்கள் சாதித்துவிட்டோம், மென்மேலும் பல சாதனைகள் புரியப்போகிறோம் என்ற உறுதியான நம்பிக்கையையும் அவர்கள் மனதில் விதைத்த இஸ்ரோ அறிவியலாளர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளும் பாராட்டுகளும்.
——————-
தகவல்களும் படங்களும் பெற்ற வலைத்தளங்கள் :
http://www.vallamai.com/?p=50937- ஆசியாவின் முதற் சாதனையாகச் செந்நிறக் கோளைச் சுற்றிவரும் இந்திய விண்ணுளவி மங்கல்யான் – சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா.
http://www.theguardian.com/science/2014/sep/24/india-mars-satellite-successfully-enters-orbit?CMP=ema_565
http://www.newsweek.com/how-india-achieved-cheapest-ever-interplanetary-mission-mars-273588
http://www.pri.org/stories/2014-09-26/women-are-face-indias-mars-mission-theyre-still-exception
http://www.bbc.com/news/world-asia-india-29357472
http://www.bbc.com/news/world-asia-india-29339555
http://www.bbc.com/news/world-asia-india-29357438
http://www.firstpost.com/india/live-meet-the-masterminds-behind-isros-mangalyaan-success-1726461.html
**************************************************************************************
வல்லமையாளர்களுக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
இசைக்கவி ரமணன்
கதவு தொலைந்த கணம்
நிறுத்திக்கொள்வோம்!
நீ சொன்ன வாசகங்களையும்
நான் சொன்ன வார்த்தைகளையும்
பொறுத்துக்கொள்வோம்!
நீ கண்ட பிழைகளையும்
நான் கண்ட குறைகளையும்
மறந்து போவோம்!
என் அத்து மீறல்களையும்
உன் அராஜகத்தையும்
எதற்கு நீ?
எதற்குத்தான் நான்?
என் தாய் நீ, உன் சேய் நான்
என்னும் ஒரே நினைப்பில்
என் விருப்பம், உன் விருப்பம்
என்னும் ஒரே நம்பிக்கையில்
காதல், கவிதையென,
காலமெல்லாம் காளியென்னும்
போதையில் வாழாமல்,
புலனைந்தும் செயல்படாமல்
சாதாரணன் போல்வாழச்
சகத்தில் எதற்கடி நான்?
ஆதார ஸ்ருதியாக
அடிநாதம் நீயாக
பேதமே இல்லாமல்
பெற்றுவரும் அனுபவத்தைச்
சேதாரமில்லாமல், உன்
சேவடியில் சேர்ப்பித்தல்
தவிர எனக்கென்றோர்
தவமுண்டோ? நானிதிலே
தறிகெட்டுப் போவதிலும்
தவறுண்டோ? வந்து
தழுவியென்னைக் காப்பதன்றிக்
கடமைதான் உனக்குண்டோ?
ஆடுவது தாயம், இதில்
அளப்பானேன் தர்மநியாயம்?
போடு! விழுகிறேன். மீண்டும்
போடு! எழுகிறேன்! சற்றே
ஆடுவதை நிறுத்தியென்னை
ஆடவிடு! அப்புறம் பார்!
பாடுவதும் வாடுவதும்
பரபரப்பதெல்லாமும்
கூடொன்றில் நுழைந்தால்
குடும்பம்போல் வந்தே தீரும்
ஏடுகள் படிப்பதாலோ
எவனேனும் சொல்வதாலோ, எந்தப்
பாடும் மாறாது
பராசக்தி விருப்பம்தான்
ஆடு நனைவதும்
ஓநாய் அழுவதும்!
வீழ்த்திச் சிரிக்கின்றாய்
வெட்கமின்றி; ஒருமுறை
வீழ்ந்துதான் பாரேன்!
வெற்றியென்பது
விளங்காது தோல்வியின்றி
சரிசரி
உனது கவிதை எனதே எனும்போது
எனது இன்பதுன்பம் உனதே அல்லவோ?
உனக்கும் எனக்கும்
ஊடாடும் சொந்தத்தில்
உரிமையே உறவன்றோ?
உறவென்று பிறிதுண்டோ?
வாடி வா!
வக்கணையின் ராணியே!
தேடியெனைப் பெற்றுவிட்டு, முகம்
திருப்பிக்கொண்டால்? நானென்ன
வாடி அழுவேனா? வாசலில் கெஞ்சுவேனா?
ஜாகேச்வரத்திலந்த
யோகத் தனிமையில் நீ
நோகாமல் படியேறி
வேகமாய் வந்தென்னைத்
தொட்டுத் தட்டியெழுப்பியதைக்
கண்ணுற்ற கணமே, உன்
குட்டுடைந்து போனதடி!
கொடியவினை தீர்ந்ததடி!
இன்னுமென்ன பம்மாத்து?
இறங்கிவா! ஏறி வா!
மின்னல்களைத் தேர்ந்தெடுத்து
மீட்டுவோம் வா!
நான்பாட நீயாட நீயாட நான்பாட
தேன்கூடும் தமிழின் தித்திப்பில் நாமொன்றாய்
நீயே நானாகவும் நானே நீயாகவும்
தீயே நீராகத் தெளிந்திருப்போம்! யாவர்க்கும்
தாயாய் விளங்கும்
தயவே! தமிழின்
தகவே வருக!
கதவு தொலைந்த
கணத்தில் இந்தக்
கவிதை நேர்ந்தது
26.090.2014 / வெள்ளி / 21.15 / வள்ளியூர்-சென்னை ரயிலில்
சந்தர் சுப்ரமணியன்
அவருக்குள் தமிழ்மணக்கும், அறிந்தே முன்னர்
அன்னைபெயர் புட்பமென அமைந்த தாமோ?
குவளைக்குள் பூகம்பம்! கொடையாய்ச் செந்தீ!
கொடுங்காலூர் வரையெழுந்து கொதித்த செந்நா!
திவளைக்குள் பொறியேற்றுத் தீயைச் சேர்த்துத்
திரையாக்கிச் செந்தமிழாய்த் தெறிக்கும் தாரா!
இவருக்கோர் கவிமலரை இயற்றி வந்தேன்!
இவரெழுத்தை என்குரலில் இயம்பு கின்றேன்! (1)
காவியங்கள் பாடவில்லை; காதல் என்னும்
கற்பனைக்குள் கரையவில்லை; கானல் நீரைத்
தூவிநஞ்சை வளர்க்கவில்லை; சொல்லால் பொய்யைத்
தொடுத்தளிக்கும் கவிதையில்லை; சொகுசு வாழ்க்கை
மேவுதற்காய் மாறவில்லை; மேன்மை கொன்று
மேனிலையை அடையவில்லை; மேடை வேண்டிப்
பாவையெங்கும் பாடவில்லை; பசப்புச் சொற்கள்
பகன்றுநிற்கும் பழக்கமில்லை; பகட்டு மில்லை! (2)
பாடுகின்ற பழக்கமுண்டு; பாட்டில் கீழோர்ப்
பாடுகளைப் பகர்வதுண்டு; பழமை எண்ணம்
சாடுகின்ற வழக்கமுண்டு; சாதிப் பூசல்
தனையெதிர்க்கும் நெஞ்சமுண்டு; சமத்து வத்தைத்
தேடுகின்ற தாகமுண்டு; சிறப்பாய்ப் பெண்டிர்
சேமமுறச் சிந்தையுண்டு; செயலில் தூய்மை
நாடுகின்ற நேர்மையுண்டு; நலிந்தோர் வாழ்வில்
நலம்சேர விழைவதுண்டு; நியாயம் உண்டு! (3)
துண்டமிலாச் சமுதாயம் தொடங்க வேண்டி,
செந்தமிழா! ஒருவார்த்தை செப்பிச் சென்றார்!
கண்டதெலாம் அறிவியலால் கணக்கால் ஆயக்
கைப்பிடிக்குள் அடங்குமவை காண்போம்; வான
மண்டலமும் விரலசைவில் நடக்கும்! பூவாய்
மாரியும்நம் குரல்கேட்டுச் சுரக்கும்! இங்கே
விண்டதெலாம் விளைவிக்கும் வேகம் கொண்டால்
விடிகின்ற வேளைவரும்! விரைக வென்றார்! (4)
அல்லுலகை ஆள்கின்ற அந்தப் போதில்
ஆதவன்காண் கிழக்கிந்த அன்னை பூமி!
புல்வெளியைப் பூக்காடாய்ப் புதுக்கி எங்கும்
புன்னகையைப் புழங்கவிட்ட புதுமை தேசம்!
சொல்லுலவுங் கவிபடைத்துச் சொந்த நாட்டின்
தூய்நெறியைத் தீந்தமிழால் சொல்லிச் செல்வோர்
நல்லுலகில் அன்றமைந்த நாற்றங் காலாய்
நடைபயின்ற பாரதத்தை நயந்து நின்றார்! (5)
சேய்மையதும் அண்மையதும் தொலைந்தே ஒன்று
செய்வினையைச் செயப்பாட்டு வினையைச் செய்தார்!
தாய்மையெனத் தமிழ்மொழியின் தன்மை தன்னைத்
தமதாக்கி முன்னிலையில் படர்க வென்றார்!
ஆய்தம்போல் தனிநிலையை அடையச் செய்ய
அகச்சுட்டு புறச்சுட்டென் றறிவைச் சுட்டி
வாய்மையெனும் ஒன்றன்பால் வளர்க என்றார்!
மற்றெவையும் பயனிலைதான் எழுவாய் என்றார்! (6)
சாதியெனும் அமைப்புகளேன்? சங்கம் வைத்துச்
சந்தையென மனிதரையேன் தரம் பிரித்தாய்?
போதைநிலைப் பொய்க்கணக்கின் போக்கில் இன்று
பொதுநிலையே மனக்கணக்காய் போன திங்கு!
தீதெனினும் தொடர்கின்ற தீயாய்ச் சாதி!
தேசத்தின் கறையிவைதான்! தெரிந்தி வற்றை
வீதியிலே தூக்கியெறி! மெய்யாய் நல்ல
வேள்விக்கோர் தேதிகுறி! விடியும் என்றார்! (7)
மண்புழுவாய்ப் பிறந்திருந்தால் மண்ணைத் தின்னும்
மந்திரம்தான் தெரிந்திருக்கும்; மனிதர்க் கெங்கே?
எண்ணளவில் அதிகரிக்கும் ஏழை மக்கள்!
இதைத்தானா சுதந்திரத்தின் ஏற்றம் என்றோம்?
கண்ணெதிரே தெருவிலிவர்! காசு கொண்டோர்
காலமாயும் காணிநிலம் காண்பர்!; ஆயுள்
தண்டனைதான் பசியிவர்க்கு! சனத்தில் பாதி
தவித்திருக்கப் பாரதமோர் ஏழைச் சந்தை! (8)
பொய்யுரையை முதலீடாய்ப் போட்டு நாட்டின்
பொதுசனத்தை விற்கின்ற புதிய சாதி!
கையிரண்டு போதாது கயமைக் கென்றே
கைந்நூறு வேண்டிவிழும் கடவுள் தாளில்!
மெய்ந்நெறியை மறைத்துயர்தல் மேன்மை என்ற
‘மெய்ப்பொருளை’ அரசியலாய் விற்கும் கூட்டம்!
செய்கையிலே தன்மானம் சிதைத்தோர் தம்மைச்
சேர்த்தீன்ற கருப்பையும் சினந்து நாணும்! (9)
வெறுங்கரங்கள் என்செய்யும்? வினவு வோர்க்கு,
விரல்பத்தும் மூலதனம்! விளங்க வேண்டும்!
நொறுங்கட்டும் மதிமயக்கும் நோயாம் சோம்பல்!
நோகாமல் இலக்கடையும் நுட்பம் இல்லை!
சிறுங்கற்கள் சேர்ந்தெழுந்த சிகரம் போலே
சிந்தனைகள் சேருமெனின் தெரியும் வெற்றி!
குறுஞ்செயல்கள் நமையாங்கே கொண்டு செல்லும்!
கொண்டசெயல் வேலையல்ல வேள்வி என்றார்! (10)
மண்ணதற்குள் அழிந்தொழியும் மனிதம் என்னும்
மறைகின்ற இலக்கணத்தை மாற்றிக் காட்டு!
திண்மையினைக் கொண்டுயர்ந்த திறனால் என்றும்
திரும்பாத சரித்திரத்தில் திளைத்து வாழ்நீ!
உண்மையிதே! உன்னளவில் உயர்வு வேண்டி
உடைமைதேடி உலகுழல்தல் உயர்வே அன்று!
திண்ணைதனை இடித்தங்கோர் தெருவை ஆக்கு!
தெருவாங்கே விரியுமதில் தேசம் காண்பாய்! (11)
பள்ளத்து மண்புழுவைப் பாம்பாய் மாற்றிப்
படமெடுக்க வைக்குமவர் பாக்கள்! பூக்கள்
அள்ளித்தான் அவர்தெளித்தார்! அனைத்தும் தீமை
அழிப்பதற்காய்த் தீயுமிழும் நாக்கள்! தீக்குள்
தெள்ளுந்தேன் அவர்கவிதை! தெறிக்கும் போதே
சிந்தனையின் சுடரேற்றும் தீக்கள்! மக்கள்
உள்ளத்தை உலுக்கும்பொய் உதறச் செய்தே
உயர்வுக்காய் வழிகாட்டும் ஊக்கப் பூப்பே! (12)
அண்ணல்கை வில்லதுவே அன்னை சீதை
அகமெரிக்கும் விறகெனவாய் ஆன தின்று!
கண்ணீரில் சீதனங்கள் கடத்தி வந்து
கல்யாணச் சிறைபுகுந்த கைதி பெண்டிர்!
மண்ணெண்ணெய் விளக்கெரிக்கும் வழக்கம் எல்லாம்
மாண்டுவிட்ட கதையாகி மறைந்த நாளில்
பெண்ணெண்ணெய் எரிக்கின்ற பேய்கள் கூட்டம்!
பெயருக்காய்த் திருமணங்கள்! பிணமாய்ப் பெண்மை! (13)
தெருவளைவின் சந்தையதில் தேர்ந்து வாங்க
தெருப்பொருளா கால்நடையா தையல் இன்னும்?
பொருளளித்துப் பொருள்பெறுதல் பொதுவில் மெய்ம்மை!
பொருள்கொடுத்துப் பெண்கொடுக்கும் பொய்ம்மை தீமை!
கருவறைக்குள் போற்றுன்றன் கருணை தன்னை!
கயவரெனின் காட்டுன்றன் கண்ணில் தீயை!
புருவமிலை மீசையது! புலியாய் மாறு!
புதியகீதை பாடுலகைப் புரட்டிப் போடு! (14)
பேரிருளில் தீச்சுடராய்ப் பொலிந்து நன்மை
புரிகின்ற பிறப்பதுவே பெண்மை! உண்மை!
ஈரமிலா இயல்பேற்ற இரும்புத் தன்மை,
இதயத்தில் நல்லெண்ண மின்மை வன்மை!
பாரதனில் மங்கையரின் பங்கு தம்மைப்
பாடலினால் அவர்விரித்தார்! பன்மை மென்மை
சேருமெனில் தோள்புடைக்கச் சேரும் திண்மை!
செந்தமிழில் தெரிவித்தார் தெண்மை! நுண்மை! (15)
வேருக்கு நீருழவன் விடுவ தாலே
விளைவிங்கே வருகிறது! விழலே நாமும்!
பாருக்குள் தெய்வதத்தைப் பாராப் போதும்
பயிரெல்லாம் அவன்சிரிப்பைப் படைத்து நிற்பான்!
ஏருக்கே அவன்கால்கள் என்ற போதும்
இதயத்துள் உலவியவன் எண்ணில் நிற்பான்!
ஊருக்கே உலைவாய்தான்! உழைப்பால் உண்டி
உவந்தளிக்கும் எழுவாயே உழவன் தானே! (16)
கள்ளத்தின் போக்காலே காற்றின் தூய்மை
காணாமல் போனதுபார்! கழிவே எங்கும்!
அள்ளத்தான் நீரில்லை! ஆற்றின் தூய்மை
அதற்கின்னும் வழியில்லை! அடுத்து வாழும்
பிள்ளைக்கோர் நல்லுலகைப் பேணிக் காக்கும்
பெருங்கடமை உனக்கிலையோ? பிழைகள் தீர
உள்ளத்தின் பரப்பதனில் வெள்ளை தீட்டு!
ஓசோனைத் தைப்பதற்கோர் ஊசி தேடு! (17)
விண்ணதனை மின்னல்கள் வெட்டும் போக்கின்
விளைவாக விரிசல்கள் வாரா தென்றும்!
மண்ணதன்மேல் கலப்பையினை மடக்கி ஓட்ட
மண்ணுக்கே புண்ணாகும் வழக்கம் உண்டோ?
கண்ணதனை இமையுரசக் காயம் உண்டோ?
கண்ணீரால் கொப்பளிக்கும் கன்னம் உண்டோ?
பெண்ணுளத்தின் ஊடலதைப் புரிய வைக்கப்
பெருங்கவிஞன் சொன்னதிவை! புதுமை அன்றோ? (18)
சொல்லுக்குள் கருத்தடைத்த தோட்டா சீறும்
துப்பாக்கி அவர்கவிதை! துளைத்த போதும்
மல்லுக்காய் முன்நிற்க மயங்கும் நெஞ்சம்!
மரணத்தில் புதுநெறியை மலர வைக்கும்!
வில்லுக்கு வளைகின்ற நாணைப் போலே
வளையாது தலையெனினும் விரட்டும் அம்பை!
அல்லுக்குள் வெளிச்சத்தின் ஆற்றல் காட்டும்
அறிவுப்பூப் பூகம்பம்! அமைதிப் பூதம்! (19)
கவிதைக்கென் றுதித்தாரா? கவிழ்ந்தோர் தம்மைக்
கரைசேர்க்கச் செனித்தாரா கவிஞர் தாரா?
புவியோர்க்காய்ப் பிறந்தாரா? பொதுமை தாராப்
பொய்யகற்றப் புதுநெறியைப் போதித் தாரா?
செவிசேர்க்கத் தீங்கவிகள் தெரிந்த தாரா,
தெவிட்டாதக் கவியாறா? செல்வத் தாரா?
அவைகேட்க அளித்தாரா? அகிலம் தாரா
அறமழையைப் பொழிந்தாரா? அதுநம் பேறா? (20)
கவிமொந்தை! கருத்துடந்தை! கள்ளார் சிந்தை!
கால்மறக்கும் மனமந்தை! கனவுச் சந்தை!
செவியுந்தும் தமிழ்ச்சிந்தும்! தேனைத் தந்தும்
திகட்டாத ஒருபந்தம்! தெரியா தந்தம்!
புவியெங்கும் புதுக்கந்தம்! புதிதாய் வந்தும்
புதிரவிழ்க்கும் அவர்சிந்தும்! புலமை முந்தும்!
அவையெங்கும் புகழ்தங்கும்! அவருட் பொங்கும்
அறிவொளியில் இருள்மங்கும்! அவர்பாச் சிங்கம்! (21)
அமிலத்தில் கரைத்தெடுத்த அமுதச் சாற்றை
அளிக்கின்ற பாற்கடல்தான் அவர்தம் பாக்கள்!
கமலத்தின் கள்ளூற்றில் கரைந்த தீப்பூ!
கவிதைக்குள் குறுவாளாய்க் கரந்த சொற்கள்!
விமலத்தின்* வெளிப்பாடு! வெளிச்சத் தேடல்! (*சுத்தம்)
விடியல்கள் அவர்கவிகள்! வேரால் பொய்ம்மை
இமயத்தைப் பொடியாக்க எழுந்த ஆல்கள்!
இதயத்தைக் குடைகின்ற எழுத்துப் பூச்சி! (22)
எழுத்துக்குள் வேள்வித்தீ ஏற்றி வைத்தே
எளியோரின் ஏற்றத்துக் கிலக்கை வைத்தார்!
பழமைக்குள் புதுமைதனைப் பகுத்து வைக்கப்
பாட்டுக்குள் காட்டுத்தீப் பதுக்கி வைத்தார்!
விழுதுக்குள் புதுக்கருத்தை விளைய வைத்து
விளைவாகும் ஞானத்தை விருந்தாய் வைத்தார்!
முழத்துக்குள் இவ்வுலகை முடக்கும் தாரா
மொழிகின்ற கவியென்றும் வாழ்க! வாழ்க! (23)
கே. ரவி
என்னைய்யா இது, சோகத்தைக் கூட ரசிக்கணும்னு சொல்றீக!
ஏன் ரசிக்கக் கூடாது. இலக்கிய ரசனை என்பது சந்தோஷ சமாச்சாரம் மட்டுமே என்பது தப்புக் கணக்குத் தம்பி!
இலக்கிய ரசனை என்பது, தன் வாழ்வில் தன் அனுபவமாக வராத ஒரு நிகழ்வை, இன்னொருவர் அனுபவித்த ஒன்றை, அந்த இன்னொருவருக்குள் எப்படியோ நுழைந்து, ஏறக்குறைய அவர் அனுபவித்தபடியே அனுபவிப்பது.
அங்கே பார், அந்த மங்கை அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள். அவளருகே ஒருவன் குருதி வெள்ளத்தில் இறந்து கிடக்கிறானே! யாரவன்? அவள் கணவனோ? ஆம், அதோ தொலைவில் நின்று கொண்டு இந்தக் காட்சியைப் பார்த்தபடி ஒரு மூதாட்டி ஏதோ சொல்கிறாளே அதைக் கேள்: என்னத்த சொல்ல! இன்னைக்குக் காலைலதானுங்க இந்தப் பொண்ணு தலைல பூமுடிச்சு விட்டு அவன் பிரியா விடைபெற்றுக்கிட்டுப் போனான். அப்படிப் பூமுடிச்சப்ப, அவ கூந்தல்ல வச்சு விட்ட பூச்சரத்துல வண்டு ‘ஞொய்’னு ரீங்காரம் செஞ்ச சத்தம் கூட இன்னும் ஓயலீங்க! அப்ப அவனக் கட்டித் தழுவி அவனுக்கு விடைகொடுத்து அனுப்பினா இந்தப் பொண்ணு. இப்பப் பாருங்க, இந்த சாயரட்ச வேளைல ரத்த வெள்ளத்துல செத்துக் கெடக்குற அவனப் பாக்க வேண்டிய நெலமைக்கு ஆளாயிட்டாளே அந்த மஹாபாவி! பாக்க சகிக்கலேங்க இந்த சோகக் காட்சி!
எப்படி ஒரு சோகக் காட்சி நம்மை உலுக்குகிறது பார்த்தாயா! உனக்கு நேர்ந்த சோகம் இல்லை. யாருக்கோ நேர்ந்ததுதான். ஆனால் ஒரு கணம், ஒரே ஒரு கணம்தான், அந்தச் சோகத்தை நீ அனுபவிக்குமாறு அந்த மூதாட்டியின் வார்த்தைகள் செய்துவிட்டனவே! அந்த ஒரு கணத்தை, அதன் கனத்தை, உன் வாழ்நாளில் நீ மறக்க முடியாதவாறு, அவ்வப்போது நீ நினைத்துக் கொள்ளுமாறு ஆகிவிட்டதே!
வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழல்மேல்
கொண்டாள் தழீஇக் கொழுநன்பால் காலைவாய்ப்
புண்தாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க்
கண்டாள் அவன்தன்னைக் காணாக் கடுந்துயரம்
ஆம், காலையில் கோவலனிடம் பூச்சூடிக் கொண்டு அவனை வழியனுப்பி வைத்த கண்ணகி, மாலை அவனைப் பிணமாகக் கண்டு அழுத காட்சியை நாம் என்றைக்கும் மறக்க முடியாமல் செய்து விட்டாரே இந்த இளங்கோவடிகள்! அந்தச் சோக அனுபவக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல, வண்டுகளைப் பாட வைத்தும், குஞ்சம் துவளத்துவளத் தொங்கிய பூமாலையை அசையச் செய்தும், கணவனும் மனைவியும் ஆரத் தழுவிக் கொண்டு பிரிய முடியாமல் பிரிந்ததை “தழீஇ” என்று நீட்டி முழக்கியும், புண் தாழ்ந்து குருதி பொங்கி வழிந்ததைப் படம் பிடித்துக் காட்டியும், எப்படியெல்லாம் பாடுபடுகிறார் புலவர்!
இதென்னய்யா, மத்தவன் அவஸ்தையை வேடிக்கை பாக்க வைக்கறதுதான் புலவன் வேலையா?
இல்லை, வேடிக்கை பார்க்க வைப்பது இல்லை அவன் வேலை, அந்த வேதனையை அப்படியே, கொஞ்சமேனும் அனுபவிக்க வைப்பதுதான் அவன் வேலை. ஏன் அனுபவிக்க வேண்டும்? அறுசுவை விருந்திலே கசக்கும் பாகற்காய்ப் பொறியல் ஏன் படைக்க வேண்டும்? அட, சும்மா வசனத்துலியே பேசிக்கிட்டிருந்தா எப்படி, நாமும் பாடுவோம் அப்பு:
சோகத்தில் கூடசுகம் உண்டு தோழி
சோகத்தின் சாரத்தைச் சொல்ல வந்தேன்
தேகத்தில் ஒளிந்திருக்கும் தினவை எல்லாம்
தீவைத்துக் கொளுத்துவது சோக மன்றோ
வேகத்தை விறுவிறுப்பைப் பிடித்தி ழுத்து
வெறுமையினைக் காட்டுமொரு தீப மன்றோ
சோகத்தைப் பயில்வதற்குத் துணிந்து விட்டால்
சோதனைகள் இல்லைமனம் துவள்வ தில்லை
இதயத்தைப் பிழிந்துவிடும் சோகத் தாலே
இருக்கின்ற சுமையெல்லாம் கண்ணீ ராகி
உதிர்ந்துவிடும் நீயாக மட்டும் உன்னை
உள்ளுக்குள் நீகாண முடியும் நெஞ்சின்
அதிர்வுகளை நீவிவிடும் அனுப வத்தை
அரைநொடியில் ஏற்படுத்தும் இசையி னாலோர்
அதிசயத்தை உருவாக்கும் அதற்கும் மேலே
அமரநிலை உண்டென்று நினைவு றுத்தும்
இருட்டென்றா எண்ணுகிறாய் இல்லை இல்லை
ஏகாந்த நீழலடி நுழைந்து பாரேன்
உருண்டுவரும் மேகங்க ளூடு செல்லும்
ஒளிநிலவை நினைத்துக்கொள் ஒருக ணம்தான்
விருட்டென்று பயமெல்லாம் விலகி யோடும்
வியர்வையெல்லாம் பூப்பூக்கும் சோகம் உன்னை
அருட்கரத்தால் நெஞ்சாரத் தழுவிக் கொள்ளும்
அமைதியுடன் நீயுறங்கக் கவிதை சொல்லும்
எப்படி இருக்குத் தம்பீ!
என்ன சொன்னாலும் சரி அப்பு, சோகத்தை ரசிக்கணும்னு சொல்றத ஒப்புக்க முடியலே!
தம்பி, ரெண்டு ரூவா கொடுத்து டிக்கெட் வாங்கிப் போய்ப் பாசமலர் படம் பாத்து, சிவாஜியும் சாவித்திரியும் அழுதபோதெல்லாம் கூடவே அழுதியே, மறந்துட்டியா? காசு கொடுத்து வாங்கிய கண்ணீர் தம்பி! ஏன்?
கப்பலோட்டிய தமிழன் படம் நான் பலமுறை பார்த்து ரசித்த படம்தான். 1986 அல்லது 87, தொலைக்காட்சியில் அந்தப் படத்தை, ஐந்தாவது முறையாக என்று நினைக்கிறேன், நான் பார்த்துக் கொண்டிருந்த போது, முழுதும் பார்க்க முடியாமல் என் கண்களை மறைத்த கண்ணீர்த் துளிகளை நான் துடைத்துக் கொண்டே இருந்தேன். தான் அமர்ந்திருந்த நாற்காலியைத் திருப்பிப் போட்டுக் கொண்டு, தொலைக்காட்சிப் பெட்டிக்கு முதுகைக் காட்டிக் கொண்டு, படத்தைப் பார்க்காமல், நான் அழுவதை என் நண்பன் முரளி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும்தான் நான் சுதாரித்துக் கொண்டேன்.
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா – இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ!
அடாடா, நெஞ்சைப் பிழிந்தெடுக்கும் பாடல். அந்த எட்டையபுரத்துச் சுப்பய்யாவின் பாடலை எஸ்.வி.சுப்பையா திரையில்
பாரதியாராகத் தோன்றிப் பாடியபோது நான் எப்படி அழாமல் இருந்திருக்க முடியும்? சுதந்திரப் போராட்டத்தின் போது நான் பிறக்கவே இல்லை. ஆனாலும் அந்தக் காலத்துக்கு என்னை அழைத்துச் சென்று, அதன் அனுபவக் களங்களில் என்னை நனையச் செய்து, அந்த வீர சக்தியையும், தன்மான உணர்வையும் எனக்குள் ஊட்டிய மாயத்தை இதுபோன்ற படங்களும், பாடல்களும் செய்யவில்லையா?
திரைப்படம் எடுக்கும் தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே, வார்த்தைகள் மூலமாக மட்டுமே, பல காட்சிகளை நம் மனத்திரையில் கவிஞர்கள் ஓடவிட்டிருக்கிறார்கள்.
இந்தப் பகுதியின் தொடக்கத்தில் சொன்ன அமரவாக்கியத்தை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்:
இலக்கிய ரசனை என்பது, தன் வாழ்வில் தன் அனுபவமாக வராத ஒரு நிகழ்வை, இன்னொருவர் அனுபவித்த ஒன்றை, அந்த இன்னொருவருக்குள் எப்படியோ நுழைந்து, ஏறக்குறைய அவர் அனுபவித்தபடியே அனுபவிப்பது.
போச்சு, திரும்பவும், ‘ஒருவருக்குள் இன்னொருவர் நுழைந்து’ங்கற பழைய வேதாளம் வந்து விட்டது ஓய்! அது வரத்தான் செய்யும். சபரிமலை செல்லும் போது, பேருந்தில் எனக்கும், சு.ரவிக்கும் ஏற்பட்ட அனுபவத்தை, எங்களுக்குள் நடைபெற்ற உரையாடலை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளலாம்!
இப்படி அனுபவிப்பதால் ஏதேனும் பயன் உண்டா? இதுதானே உன் கேள்வி?
அதுவும் ஒரு கேள்வி.
அப்படியானால் வேறேதோ கேள்வியும் இருக்கிறதோ?
உண்டு. நீர் என்னமோ கோத்தகிரி எஸ்டேட் என்றெல்லாம் சொல்லிவிட்டு ஒருவர் அனுபவத்தை இன்னொருவர் அனுபவிப்பதுன்னு பழைய பாடத்துக்கே வந்து விட்டீரே என்பதுதான் இன்னொரு கேள்வி.
தம்பி, அது கோத்தகிரி எஸ்டேட் இல்லை, கேட்டகிரி மிஸ்டேக், அதாவது, வகுப்புத் தப்பிதம். அதற்கும் நம்முடைய இப்பொழுதைய விஷயத்துக்கும் தொடர்பு உண்டு. சொல்கிறேன்.
நீ, கேட்கிறாயே, மேலே சொன்னவாறு இன்னொருவருடைய அனுபவக் களத்துக்குள் புகுந்து அனுபவிப்பதால் ஏதேனும் பயனுண்டா என்று, அதுவே ஒரு கோத்தகிரி எஸ்டேட். மன்னிச்சுக்க தம்பி, சகவாச தோஷம் தொத்திக் கொண்டது. கேட்டகரி மிஸ்டேக். எப்படி? ஒரு அனுபவம் பயனுள்ளதா, பயனற்றதா என்ற கேள்வியே தவறு. அனுபவம் என்பது பயன் கருதி வருவதில்லை. நாம் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, நுகர்ந்து, தொட்டு அனுபவிக்க உலகமே அதன் உள்ளடக்கங்களோடு விரிந்து கிடக்கிறது. அதனால் பயன் அடைவதும், பயன் பெறாததும் அனுபவிப்பவரைப் பொறுத்தது.
நான் இந்த உடல் மட்டும் இல்லை. இந்த உடல் என் கூடுதான். பஞ்ச பூதங்கள் தைத்து வழங்கிய சட்டையாகத்தான் நான் இதை அணிந்து கொண்டிருக்கிறேன். இப்படி ஓர் ஆழமான நம்பிக்கை பலருக்கு உள்ளது. நானும் நம்புகிறேன்.
என் நம்பிக்கை மேற்சொன்ன நிலையையும் தாண்டிச் செல்கிறது. நமக்கு ஸ்தூல உடல் இருப்பது போலவே, சூக்ஷ்ம சரீரம் என்று ஒன்று உண்டு. அது திட்ப உடல் போல் சதை, எலும்பு, குருதியால் ஆன உடல் இல்லை. அதை எந்தப் புலனாலும் உய்த்துணர முடியாது. ‘ஸாஃப்ட் வேர்’ (software) என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அது போன்ற நுட்ப உடல் அது. பூதவுடல் என்பது ஹார்ட்வேர், சூக்ஷ்ம உடல் என்பது ஸாஃப்ட்வேர். பின்னது முனைப்புகளால் ஆனது. முனைப்புடல் என்றும் சொல்லலாம். ஒருவன் அல்லது ஓருயிர் இன்ன வடிவில், இன்ன உடல் எடுத்து, இன்னவாறு இயங்கப் போவதை நிர்ணயம் செய்வது இந்த நுண்ணுடல் அல்லது முனைப்புடல்தான். ஒருவன் மரணம் அடைவதற்கு முன்பே, அதாவது அவன் உயிர்நிலை திட்ப உடலைப் பிரிவதற்கு முன்பே, உடல் எடுக்கும் முனைப்பால் மட்டுமே உருவான நுட்ப உடலைக் கலைத்து விட வேண்டும். அதாவது, வடிவ மோகம் அறவே இன்றி ஆக வேண்டும். அப்படியாகித் தன் திடவுடலை முழுதுமாகக் கழற்றிப் பஞ்சபூதங்களில் கலந்துவிடச் செய்யாவிட்டால், அவனுடைய திடவுடலைப் பிரிந்த பின்னும் நுண்ணுடல் அல்லது முனைப்புடல் தன் முனைப்புக்கு ஏற்ப ஒரு திடவுடல் பெற ஏங்கித் திரியும். அப்படியோர் உடல் செய்து கொள்ள வாய்ப்புக் கிடைத்ததும், செய்து கொண்டு அதை ஆளத் தலைப்படும். இதுவே அதன் அடுத்த பிறவி எனப்படுகிறது. இதெல்லாம், ஓரளவு அனுபவ ரீதியாக எனக்குள் மலர்ந்த நம்பிக்கை.
முன்பே நான் குறிப்பிட்டேனே, 101 பாடல்கள் அடங்கிய குருமந்திரம் என்ற படைப்பு 1986-ல் எனக்குள் மலர்ந்து வந்தது என்று. அதில் இரண்டு பாடல்கள் இங்கே நினைவு கூரத் தக்கது:
பூதங்களில் கலந்து போகாத சூக்குமம் தன்
வாதனைக் கேற்ப சாயல் வனைந்திடும் வனைந்த வண்ணம்
பூதங்கள் நெய்த சட்டை புனைந்திடும் புனைந்து கொண்டு
சாதனை போல மீண்டும் சகதியில் ஜனிக்குமாமே!
தூலத்தில் வைத்த பற்றே தூலத்தை விட்ட பின்னும்
தூலமே போல எண்ணும் சூக்கும வடிவம் பின்னும்
தூலத்தில் பற்றறுந்து தூலத்தின் கட்டவிழ்ந்தால்
மூலத்திற் கலப்ப தென்ற முக்திகை கூடுமாமே
இதையெல்லாம் இங்கே நான் சொல்லக் காரணம் தம்பி நீ கேட்ட கேள்விதான். ஆம், ஸ்தூல உடலாகிய திட்ப உடலை நுண்ணுடல் நிரந்தரமாக நீங்கிச் சென்றுவிடும் மரணம் சம்பவிப்பதற்கு முன்பே, அவ்வப்போது, திட்ப உடலில் இருந்து நீங்கிச் செல்லும் பயிற்சியைத்தான் கனவு நிலை தருகிறது.
ஆனால், இரண்டு குறைபாடுகள் இந்தப் பயிற்சியில் உண்டு. பெரும்பாலும் கனவுகள் நினைவில் பதிவாகித் தங்குவதில்லை என்பது முதற்குறைபாடு. கனவில், அறிவின் துணை சிறிதும் இன்றி நுண்ணுடல் அலைபாய நேர்வதால், அது தான்தோன்றித் தனமாக, எந்த வழிகாட்டுதலும், நெறிமுறையும் அற்ற தாறுமாறான அனுபவமாகிறது.
ஆனால், இந்தக் குறைபாடுகள் இன்றி அறிவு விழித்திருக்கும் நிலையிலேயே, திட்பவுடல் நீங்கி நுண்ணுடல் பயணம் மேற்கொள்பவன் கவிஞனும், யோகியும்தான்.
கவிதை ஜனிக்கும் வேளையில் தானன்றிப் பிறிதான ஓர் அனுபவக் களத்தில் கவிஞன் சஞ்சரிக்கிறான். அந்த அனுபவத்தை அவனுடைய அறிவு, விழிப்பு நிலையிலேயே உள்வாங்கிக் கொண்டு, அதை வார்த்தைகளில் வடித்து, நிரந்தரமாக்குகிறது.
யோகியின் கதை வேறு. அவன், திட்பவுடல் நீங்கிப் பயணம் மேற்கொள்ளும் போது தன்னை வரவேற்கும் எந்த அனுபவக் களத்திலும் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்துத் தான் நுண்ணிலையிலும் இல்லாமல் தானாக, எந்த முனைப்பும் அற்ற தானாக, ஆகும் ஒரே முனைப்பில் லயிக்கிறான். அவன் களம் விரிய, விரிய முக்காலங்களுக்கும், எல்லா லோகங்களுக்கும் பொதுவான எல்லா அனுபவங்களுமே தானாக உணரும் அத்வைதானந்த அனுபவமே அவனுடைய இலக்காகிறது. அதுவே கடவுள் நிலை. இதுதான் இந்தக் கணத்தில் என் நம்பிக்கை.
எனவே, தம்பி, இப்போது சொல்லு, ஒருவன் இன்னொருவனுடைய அனுபவக் களத்துக்குள் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து செல்வதால் ஏதேனும் பயனுண்டா, இல்லையா? உன் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
சபரி மலை யாத்திரைக்குப் பெரிய பாதையில் செல்பவர்கள், மாலை அணிந்து கொண்ட நாளில் இருந்தே செருப்பில்லாமல் நடந்து பழகுவார்கள். அப்படிப் பழகி விட்டால், யாத்திரையின் போது, செருப்பில்லாமல் பெரிய பாதையில், கல்லும் முள்ளும், குண்டும் குழியும் கடந்து, இரண்டு நாட்கள் நடந்து செல்லும் போது அவ்வளவு சிரமம் தெரியாது. அது போலத்தான், திட்ப உடலை நீங்கிச் சில கணங்கள் விழிப்புடன் பயணம் செய்யும் பயிற்சி மேற்கொண்டால், மரணம் சம்பவித்து, அப்படிச் சிலகாலம் இருக்க நேரிடும் போது அதிக சிரமம் இருக்காதோ என்று நினைக்கிறேன். இது ஒரு பயன் இல்லையா?
அப்படிப் பயணம் செய்யத் தெரியாதவர்களும் அந்த அனுபவக் களத்தில் பங்கேற்க வாய்ப்பாகும் வண்ணம், அதைச் சொற்களில் நிரந்தரம் செய்து விடுவது ஒரு பெரிய சமூகப்பயன் இல்லையா? சரி தம்பி, நீயே முடிவு செய்துகொள்.
முன்பு நான் எழுதிய இன்னொரு கவிதை நினைவு வருகிறது. அட எல்லாவற்றையும் என் கவிதை சொல்லி விடுகிறதே!
நிழலுக் கென்றே சோலை அமைத்து
நிம்மதியாக வாழ்கின்றேன்
பழத்துக் கென்றோ பனிமலர்க் கென்றோ
பயனைக் கருதாமல்
நிழலுக் கென்றே சோலை அமைத்து
நிம்மதியாக வாழ்கின்றேன்
மீண்டும் முதலில் சொன்ன அமர வாக்கியத்தை நினைவு படுத்திக் கொள்வோம்:
இலக்கிய ரசனை என்பது, தன் வாழ்வில் தன் அனுபவமாக வராத ஒரு நிகழ்வை, இன்னொருவர் அனுபவித்த ஒன்றை, அந்த இன்னொருவருக்குள் எப்படியோ நுழைந்து, ஏறக்குறைய அவர் அனுபவித்தபடியே அனுபவிப்பது.
இதை ஏன் அடிக்கடி அமர வாக்கியம் என்கிறேன். மரணத்துக்குப் பிறகு நிகழக் கூடிய ஒன்றை மரணத்துக்கு முன்பே நிகழ்த்திக் காட்டி, மரணத்தை வெல்லும் வழியைக் காட்டுவதால் இது அமர வாக்கியம் தானே!
பாரதியுடன் நெருங்கிப் பழகி, அவனால் உள்ளூக்கம் பெற்ற வ.ராமசாமி என்ற வ.ரா., அறிஞர் அண்ணாவால், ‘அக்ரஹாரத்து அதிசய மனிதர்’ என்று போற்றப்பட்ட எழுத்தாளர், கவிஞனைப் பற்றிச் சொன்ன ஒரு குறிப்போடு இந்தப் பகுதியை நிறைவு செய்கிறேன்.
ஒரு கவிஞன் மலரைப் பாடினால் மலாரகவும், கடலைப் பாடினால் கடலாகவும், புயலைப் பாடினால் புயலாகவும் தானே மாறிவிடும் ரசவாதத்தை வியந்துவிட்டு, வ.ரா. ஓர் அமர வாக்கியம் எழுதுகிறார். அதாவது நான் மிகவும் சிரமப்பட்டுச் சொல்ல முற்பட்ட கருத்து வெகு சுலபமாகவும், இயல்பாகவும் வந்து அமர ஒரு வாக்கியமாக அமைந்ததால் அது அமர வாக்கியம்:
கவிஞன் கட்சி பேசலாமே தவிர சாட்சி சொல்ல முடியாது.
(தொடரும்)
-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்
சமயத்தின் பெயரால் சண்டை
சாதியின் பெயரால் சண்டை
குமைகின்ற உள்ளங் கொண்டார் 
குழப்பமே செய்வார் நாளும்!
அமைதியை எண்ணிப் பாரார்
ஆரையும் மனதில் கொள்ளார்
அழித்தலை மட்டும் நாடி
அனைத்தையும் ஆற்ற வந்தார்!
வெறி தனைக் கொண்டதாலே
நெறி தனை மறந்தேவிட்டார்
அறி வெலாம் மங்கிப்போக
அரக்கராய் மாறி விட்டார்!
தூய்மையாம் சமயம் தன்னைத்
தூய்மையாய்ப் பார்க்கா நின்று
பேயென உருவம் கொண்டு
பிணக்காடாய் மாற்று கின்றார்!
கடவுளின் பெயரைச் சொல்லிக்
கருணையை வெட்டி வீழ்த்தித்
தெருவெலாம் ரத்தம் ஓடச்
செய்கிறார் தினமும் எங்கும்!
குண்டுகள் வெடிக்கும் வேளை
குரூரமே நிகழும் அங்கே
மண்டைகள் சிதறி மண்மேல்
வாரியே உதிரம் ஓடும்!
வைத்திய சாலை கோவில்
வயோதிகர் தங்கும் இல்லம்
சித்தத்தில் வைக்கா வண்ணம்
சிதைக்குமே வைத்த குண்டு!
எத்தனை உயிர்கள் போயும்
இரக்கமே வாரா நிற்கும்
அத்தனை அரக்கர் தம்மால்
அகிலத்தின் அமைதி போச்சே!
ஆதியென நிற்கின்ற கடவுள்தானும்
அரக்ககுணம் கொண்டாரை அருகில்வையார்
பேதமெலாம் கடவுளுக்கு இல்லையப்பா
பேய்மனத்தை ஆண்டவனும் ஏற்கமாட்டான்!
ஆண்டவன் படைப்பில் நாங்கள்
அனைவரும் மனிதர் அன்றோ
வேண்டாத அழிவைச் செய்து
விளைந்தது என்ன கண்டீர்?
ஆண்டவன் படைத்த இந்த
அற்புத அகிலம் தன்னில்
அமைதியை காப்போ மானால்
ஆனந்தம் அடைவோம் நாளும்!
வேண்டிய விதத்தில் வாழ
விண்ணையும் தொட்டு நிற்க
ஆண்டவன் அருளைப் பெற்று
அகிலத்தில் அமைதி காப்போம்!
காட்டேறி போலிருக்கும் காட்டுமிராண்டிகளே
கடவுள் தந்தபூமிதனைக் கந்தகமாய் ஆக்காதீர்!
அறநெறியில் வாழுங்கள் அருளதனைப் பேணுங்கள்
அகிலமெங்கும் அமைதிதனை ஆக்கிடுவோம் வாருங்கள்!
-செண்பக ஜெகதீசன்
வேலொடு நின்றா னிடுவென் றதுபோலுங்
கோலொடு நின்றா னிரவு. (திருக்குறள்-552: கொடுங்கோன்மை)
புதுக் கவிதையில்…
வழிப்பறி கள்வர் 
வேல்காட்டி மிரட்டி
மக்களிடம்
பொருள்பறிப்பதைப் போன்றதே,
ஆட்சியாளர் மக்களிடம்
அதிகாரம் காட்டிப்
பொருள் பெறுவதும்…!
குறும்பாவில்…
அதிகாரத்தில் பொருள்கேட்கும் ஆட்சியாளரும்,
வேல்காட்டி பொருள்பறிக்கும்
திருடனும் ஒன்றே…!
மரபுக் கவிதையில்…
பயணமாய்த் தனிவழி செல்வோரும்
பயந்து நடுங்கிட வேல்காட்டித்
தயவு பண்பு ஏதுமில்லாத்
திருடர் அவர்பொருள் பறிப்பாரே,
உயர்வாய் நாட்டை ஆள்வோரும்
உறுதுணை யிலாது மக்களையே
பயந்திட மிரட்டிப் பொருள்கேட்டால்,
பண்பில் அவரும் கொள்ளையரே…!
லிமரைக்கூ…
வேல்காட்டி மக்கள் பொருள்பறிப்பார் கள்வரே,
அவர்போன்றே அரசியலார்
அதிகாரப் பலம்காட்டி பலர்பொருள் கொள்வரே…!
கிராமிய பாணியில்…
போவாத போவாத
தனிவழியே போவாத,
கள்ளன்வந்து மறிப்பானே
காட்டிகிட்டு வேல்கம்ப
கைப்பொருளப் பறிப்பானே..
அதால
போவாத போவாத
காட்டுவழி போவாத..
நாட்டுலயும் கதயிதுதான்-
நாட்டுமக்க பணம்பறிக்க
காட்டுனாலே அதிகாரத்த,
அந்தக்
கள்ளனும் ராசாங்கமும்
வேறயில்ல ஒண்ணுதானே…!
-நாகினி
நிற்க இடமில்லை
மரங்களைச் சாய்த்து
எழுந்தன குடியிருப்புகள்…
****
பெருக்கெடுக்கும் வெள்ளம்
குறையவே இல்லை
பிறவி மழை…
****
போக்குவரத்து நெரிசல்
போகாத வலி(ழி)யில்
ஆட்டோ ஈன்றது மகவு…
****
வயல்வெளி குடியிருப்பு வளாகமாக
முளைத்தும் குறையவில்லை
நடைபாதை வசிப்பிடம்…!!
படக்கதை – 23
முடிவுக் காட்சி
++++++++
மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
வசனம், வடிவமைப்பு : வையவன்
ஓவியர் : தமிழ்
++++++++
முற்றும்
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை
அடிகள் ஒருப்படுதல்
கொடுங்கோல் ஆட்சி செய்யும்
மன்னனின் வீழ்ச்சியை
மக்கள் எதிர்நோக்கியிருப்பது போலவே
இவர்கள் மூவரும் ஞாயிறு மறையும்
அந்தி வேளையை எதிர்நோக்கியிருந்தனர்.
நிலமகள் கண்ணகியின் நிலைக்கு இரங்கித் துயிலுதல்
அவர்கள் எதிர்பார்த்தவாறே
பலவகைபட்ட விண்மீன்களாகிய
தம் சேனையோடு
பால்போன்ற வெள்ளிய கதிர்களைப் பரப்பி,
பாண்டிய குலத்தின் முதல்வனாகிய
திங்கள் செல்வன் தோன்றினான்.
விண்மீன்கள் கொண்டு தொடுத்தது போல்
ஒளிர்ந்த முத்துவடமும் சந்தனக் குழம்பும்
கண்ணகியின் இளமை பொருந்திய முலைகளைச்
சேராது நீங்கியது.
முல்லை மலர் சூடிய அவள் பொலிவு பெற்ற கூந்தல்
தாதுசேர் கழுநீர் மாலை பொருந்தாது நீங்கியது.
சந்தனத் தளிர்களுடன் வேறு தளிர்களும்
சேர்த்துத் தொடுத்த மாலையானது
அவள் மாந்தளிர் மேனியைத் தழுவாது நீங்கியது.
இவ்வாறு தோற்றம் கொண்டு
நடந்து சென்ற கண்ணகியின் மீது
பொதிகை மலையில் தோன்றி
மதுரை இசைப்புலவர் நாவில் பொருந்திய
தென்றல் அதனோடு பால்நிலாவும்
தன் கதிர்களை விருப்பத்துடன் சொரிந்து
அவள் வேட்கைதனைத் தூண்டியது.
இதனைக் கண்ட நிலமகள்
“முன்பு கணவன் உடன் இல்லாதபோது
இவளை வருத்திய வேனில்,
இப்போது அவன் அருகிருந்தும்
அவளை வருத்துகிறதே” என்று
பெருமூச்செறிந்து அடங்கினாள்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 14 – 29
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram7.html
படத்துக்கு நன்றி:
http://www.lurvely.com/photo/4981281546/moon_silhouette/
— கவிஞர் காவிரிமைந்தன்.

முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ? முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ?
ஒளியும் இருளும் சந்தித்துக் கொள்ளும் இனிய மாலை நேரம்..
கதிரும் மேற்கில் மறைந்து இருளே உலகை ஆளும் ..
கடலின் அலைகள் வழக்கம்போல் வந்து சிந்து பாடும்
வானின் நிலவும் வந்து தன் எழில் முகத்தை அங்கே காட்டும்..
இவைகளுக்கு இடையில் தலைவன் அங்கே வந்து சேர்ந்துவிட்டால் இன்பத்திற்கே திறந்து வைத்த உலகம் இதுவே எனலாம்!
எழிலாள் முகத்தை எப்படி எப்படி வர்ணிக்க முடியுமோ என்று ஏடெடுத்து எழுதுகின்றான் காதலன் இங்கே பாரீர்!
முகிலைக் கிழித்து முழுவதும் காட்டும் நிலவினைப் போலவே நீயும் – கார்
குழல் மறைத்து கொஞ்சம் கொஞ்சமாய் காட்டுகின்றாயோ நின் அழகை..
முழுமனதோடு ஒருமித்துக்கிடக்கும் இதயங்கள் இரண்டும் ஒன்றும்!
பெருமிதத்தோடு தொடருகின்ற கவிதையில் காதல் மஞ்சம்! மஞ்சம்!
அழகைப் பற்றி அழகாய் கவிதை அசைந்து வருகிறது பாருங்கள்!
அளவாய் வார்த்தை அன்பாய் சொல்லி அங்கே நிற்குது காணுங்கள்!
இளமை இனிமை இணைந்து நிற்கும் பேரழகின் ஊர்வலம்!
இன்பம் இன்பம் என்றே மயங்கும் கண்கள் நான்கின் சங்கமம்!
கவிஞர் வாலி வரைந்தளித்த காதல் ஓவியம்!
வார்த்தையில் சொன்னால் ஒரு காவியம்!
http://www.youtube.com/watch?v=xUFY8ZR-o4Q
காணொளி: http://www.youtube.com/watch?v=xUFY8ZR-o4Q
பாடல்: சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?
திரைப்படம்: சந்திரோதயம் (1966)
இயற்றியவர்: வாலி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
…………………………………………………………………………………….சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?
செந்தாமரை இரு கண்ணானதோ?
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?
செந்தாமரை இரு கண்ணானதோ?
பொன்னோவியம் என்று பேரானதோ?
என் வாசல் வழியாக வலம் வந்ததோ?
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?
செந்தாமரை இரு கண்ணானதோ?குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ?
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ?
குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ?
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ?
நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ?
நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ?
எந்நாளும் பிரியாத உறவல்லவோ?இளம் சூரியன் உந்தன் வடிவானதோ?
செவ்வானமே உந்தன் நிறமானதோ?
பொன் மாளிகை உந்தன் மனமானதோ?
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ?
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ?
செவ்வானமே உந்தன் நிறமானதோ?ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆமுத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ?
முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ?
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ?
முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ?
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ?
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ?
என் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ?சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?
செந்தாமரை இரு கண்ணானதோ?அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே
துணையோடு சேராத இனமில்லையே
என் மேனி உனதன்றி எனதில்லையேஇதழோடு இதழ் வைத்து இமை மூடவோ?
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ?
மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ?
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ?
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ?இளம் சூரியன் உந்தன் வடிவானதோ?
செவ்வானமே உந்தன் நிறமானதோ?
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?
செந்தாமரை இரு கண்ணானதோ?
ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ
இசைக்கவி ரமணன்
தன்னிதயக் கமலத்தில் லயித்திருப்பாள்
தண்ணொளியைத் தான்பருகும் தரிசனத்தைப்
புன்முறுவ லாயிதழில் விரித்திருப்பாள்
போதாந்த மெளனத்தில் பொருந்தி நிற்பாள்
கன்மமெனும் அரக்கன்மேல் காலை வைத்துக்
கர்ச்சிக்கும் சிங்கத்தில் தங்கி நிற்பாள்
புன்மைகள் தீர்க்கின்ற புஷ்டி மாதா
புத்தியினில் வந்தாட்சி புரிக தாயே!
தாயுனக்கு நான்செல்லப் பிள்ளை யாயின்
தரணிக்கே நானுற்ற பிள்ளை; என்றும்
வாயினிக்க உன்பெயரே வழங்கும்; சொல்லும்
வார்த்தைகள் சத்தியமாய் முழங்கும்; வெற்றுக்
காயினிக்க வைக்கின்ற கனியே! காணும்
கண்ணுக்குள் வந்துகொஞ்சும் களியே! நின்று
நீயிருக்கும் ஜேகேச்வரத்தில், என்றன்
நிழலாடும் பேறென்னே புஷ்டி மாதா!
எனக்கொன்று தெரியவில்லை என்றிருந்தேன்
எனக்கொன்றும் புரியவில்லை என்றறிந்தேன்
தினம்கொல்லும் மனதோடு திசைதிரிந்து
தெருப்புழுதி மிகப்படியத் தேம்பி நின்றேன்
உனக்கேநான் உனக்கேயென் றுணர்ந்தபின்னே
எனக்கினியும் என்னவேண்டும் இயம்பு தாயே!
வினாக்குறியை வியப்பாக்கும் புஷ்டி மாதா!
விதிமாற்றிக் கதிசமைக்கும் விந்தை நீயே!
தினந்தோறும் உன்பாதம் கழுவிக்கொண்டு
தீர்த்தத்தைப் பரவசமாய் அருந்திக்கொண்டு
வனந்தோறும் வளையவரும் காற்றைப் போல
உனைச்சுற்றி உனைச்சுற்றி ஓடிக்கொண்டு
நினைந்தாலும் உன்புகழைப் பாடிக்கொண்டு
நெஞ்சார உன்னோடு பேசிக்கொண்டு
வனப்பான கன்னத்தை வருடிக்கொண்டு
வாழுமிந்தப் பேறார்க்கு வாய்க்கும் தாயே?
தொட்டுவிட முடியாத நிலகளெல்லாம்
தோகைவிரித் தாடவைத்தாய் கண்ணின் முன்னே
விட்டுவிட முடியாத வீண்மையெல்லாம்
விலகிநின்று பார்க்கின்ற வித்தை தந்தாய்
சுட்டுவிட முடியாத வினைக்கூட்டத்தைச்
சொக்கட்டான் காய்களாக்கிச் சொல்லித் தந்தாய்
பட்டமரம் எங்குமிங்கே பாரிஜாதம்!
பாதம்போல் மிக மென்மை ஏது தாயே!
பால்தெளித்த குங்குமப்பூப் பாதம்; நூறு
பெளர்ணமியைக் கடைந்தெடுத்த வதனம்; எண்ணில்
மால்தருமோரு உடைகொண்ட வண்ணம்; நோக்கின்
மயலழித்து வாழ்த்துமந்தஜாசம்
கால்சதங்கை சலசலக்கக் கலகலத்தாய்
கன்னத்தே காதணியை மின்னச் செய்தாய்
வேல்பழிக்கும் விழியாளே புஷ்டி மாதா!
நீயிருக்கும் நினைவொன்றே நிறைவு தாயே!
மூவேளை மாறுமிவள் கோலம்; அன்னை
முழுமேனி அறியாது ஞாலம் ; கோடி
தேவாதி தேவர்தொழும் தெய்வம்; எட்டுத்
திசையெங்கும் எழில்வீசும் கருவம்! சின்னப்
பாவாடை கட்டிவரும் பாலை; எந்தப்
பாலையிலும் இவள்பசுமைச் சோலை; சற்றும்
கூவாமல் உதவிக்கு வருவாள்; எந்தன்
குறைதீர்க்க வரவழைத்தாள் புஷ்டி மாதா!
பரிசுத்தம் இவள்காட்டும் பாவம்; எந்தப்
பதவிக்கும் முடிவான பாதம்; அந்தத்
துரியநிலை பெரியநிலை அன்று! கைகள்
தொழுதழுது நிற்கட்டும் முன்பு; மிக்க
அருகிலுள தாய்த்தோன்றும் காட்சி; ஆனால்
அரிதெதிலும் அரிதிவளின் மாட்சி; யாவும்
புரிகின்ற புரியாத புதிரே! நெஞ்சைப்
புடம்போடும் என்புஷ்டிக் கருணைத் தாயே!
நீயுறவு நீசிறகு நீபரிவின் சிகரம்
நின்நினைவு முக்தி: நினை மறப்பதே மரணம்
நீ உலவும் உண்மை; நீ நிறமற்ற வெண்மை
நினைவுகன வூடுருவும் நிகரற்ற தன்மை
நீ சரிவில் கரமே! நெஞ்சிலெழும் ஸ்வரமே!
நின் உள்ளங் கையிலென்றன் பிஞ்சு விரலே!
நினதுகடன் எனது சுகமே புஷ்டி மாதா!
என்றும்நான் உன்செல்லப் பிள்ளை எனும்போது
இதைமிஞ்சும் பதவியிவ் வண்டத்தில் ஏது?
உன்மடியில் எனது சிம்மாசனம் தாயே!
உலகாளும் போது, அமுது ஊட்டுவது நீயே!
என்றுமுள தாருக வனத்திலுறை தீயே!
எஞ்ஞான்றும் என்னுயிரின் உயிர்ச்சோதி நீயே
பொன்றாத வரமருளும் புஷ்டியுமைத் தாயே!
போற்றியுன் புகழ்பாடப் புவியில் பிறந்தேனே!
(நவம்பர் 2007, தனிமையில் இருந்தபோது)
படங்களுக்கு நன்றி
http://vedantavaibhavam.blogspot.in/2012/03/2012.html
பவள சங்கரி
தலையங்கம்
நம் இந்தியப் பிரதமர் திரு மோடி அவர்களின் பொருளாதார வளர்ச்சித் திட்டம் வாழ்த்தி வரவேற்கப்படவேண்டிய ஒன்று. அகில உலக மதிப்பீட்டாளர்கள், எஸ் & பி எதிர்மறை மதிப்பீட்டிலிருந்து நிலையான பொருளாதாரம் என்ற மதிப்பீட்டை அளித்திருப்பது, இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. மேக் இன் இந்தியா என்று பெருமையுடன் தலை நிமிர்ந்து சொல்லும்போது நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, ஜெர்மனி என்றால், ‘Work excellence’, ஜப்பான் என்றால் தொழில்நுட்பங்களும், பிரித்தானியர் என்றால் கடுமையான தரக்கட்டுப்பாடுகளும், ஜப்பான், கொரியா என்றால், புதிய பரிமாணங்களும் (Innovation) கொண்டது என்று ஒவ்வொரு நாட்டு தயாரிப்புகளுக்கும் ஒரு பொதுக்கருத்து இருப்பதுபோல, மேக் இன் இந்தியா என்றால் மிகுந்த தரக்கட்டுப்பாட்டுடன், புதுமையும், புத்தாங்கங்களும் கொண்டதாகவும், அற்புத நேர்த்திகளுடன், நம் தயாரிப்புகள் இருக்க வேண்டும். இவையனைத்துடனும், சந்தைப்படுத்தும்போது, அதன் விலை நிர்ணயங்கள் மற்ற நாட்டுத் தயாரிப்புகளுடன் போட்டியிடத்தக்கவையாக இருத்தல் அவசியம். அப்படி இருந்தால் நம்முடைய மேக் இன் இந்தியா என்ற புதிய பொருளாதாரக் கோட்பாடு வெற்றியடையும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இதற்கு நாம் செய்ய வேண்டியவைகள் கற்பனையான விளம்பரங்களை விடுத்து, உண்மையான அக்கறையுடன் ஒவ்வொரு இந்தியரும் தன்னை இதில் அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்றால் தரம் மிகுந்தது, மலிவானது, செயல் திறனுடையது என்று உலக மக்களை உணர வைத்தால் உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஒரு வல்லரசாகும் என்பதில் ஐயமில்லை. மேலே குறிப்பிட்ட எஸ் & பி பொருளாதார நிலைப்பாட்டில், நாமும் ++ அடையும் காலம் வெகு தொலைவில் இல்லை. இறக்குமதி செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும், தரக்கட்டுப்பாட்டை வலியுறுத்த வேண்டியதும் அவசியம். தரத்தில் சிறு விலகல் ஏற்பட்டாலும், அப்பொருட்கள் முழுவதுமாக நிராகரிக்கப்படவேண்டும்.
நம் உரூபாயின் மதிப்பை அதிகப்படுத்துதல் மிகவும் அவசியம். இதற்காக, நமது நாட்டில் கிடைக்கக்கூடிய எண்ணெய் எரிவாயு வளங்களை முழுமையாகப் பயன்படுத்துதலும், நிலம் மற்றும் கட்டுமானத் துறைகளில் அரசு போதிய கவனம் செலுத்தி, குதிரை பேரங்களைத் தவிர்த்து, சரியான இடம் மற்றும் கட்டிட மதிப்பீடுகளையும் வெளியிட வேண்டியதும் அவசியம். சமீபத்திய செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியுள்ளது போல, அரசு ஒவ்வொரு நகரங்களுக்கும், நகர்ப்புறங்களுக்கும் விலை நிர்ணயம் செய்து, அதை வங்கிகள் மூலமாக உறுதிப்படுத்தினால் நம்முடைய பொருளாதாரம் சீரடையும். உரிய சேவைக்கு, உரிய கூலி என்ற கோட்பாடை அரசு கடைப்பிடிப்பது நலம். சரியான முறையில் அரிய இக்கோட்பாடு வழிநடத்தப்பெறுமாயின், நம் கனவு நனவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அந்நிய நாடுகளின் முதலீடுகளை நாம் எவ்வாறு வரவேற்கிறோமோ அது போல நாமும் அந்நிய நாடுகளில் முதலீடு செய்வதையும் ஊக்கப்படுத்த வேண்டும். இந்த வகையில் சில முதலீட்டாளர்கள் தற்போது வெளிநாடுகளில் முதலீடு செய்ய ஆரம்பித்திருப்பதும் நம்பிக்கையூட்டுவதாகவே உள்ளது.
வெல்க பாரதம்!