குறளின் கதிர்களாய்…(41)
-செண்பக ஜெகதீசன்
வேலொடு நின்றா னிடுவென் றதுபோலுங்
கோலொடு நின்றா னிரவு. (திருக்குறள்-552: கொடுங்கோன்மை)
புதுக் கவிதையில்…
வழிப்பறி கள்வர்
வேல்காட்டி மிரட்டி
மக்களிடம்
பொருள்பறிப்பதைப் போன்றதே,
ஆட்சியாளர் மக்களிடம்
அதிகாரம் காட்டிப்
பொருள் பெறுவதும்…!
குறும்பாவில்…
அதிகாரத்தில் பொருள்கேட்கும் ஆட்சியாளரும்,
வேல்காட்டி பொருள்பறிக்கும்
திருடனும் ஒன்றே…!
மரபுக் கவிதையில்…
பயணமாய்த் தனிவழி செல்வோரும்
பயந்து நடுங்கிட வேல்காட்டித்
தயவு பண்பு ஏதுமில்லாத்
திருடர் அவர்பொருள் பறிப்பாரே,
உயர்வாய் நாட்டை ஆள்வோரும்
உறுதுணை யிலாது மக்களையே
பயந்திட மிரட்டிப் பொருள்கேட்டால்,
பண்பில் அவரும் கொள்ளையரே…!
லிமரைக்கூ…
வேல்காட்டி மக்கள் பொருள்பறிப்பார் கள்வரே,
அவர்போன்றே அரசியலார்
அதிகாரப் பலம்காட்டி பலர்பொருள் கொள்வரே…!
கிராமிய பாணியில்…
போவாத போவாத
தனிவழியே போவாத,
கள்ளன்வந்து மறிப்பானே
காட்டிகிட்டு வேல்கம்ப
கைப்பொருளப் பறிப்பானே..
அதால
போவாத போவாத
காட்டுவழி போவாத..
நாட்டுலயும் கதயிதுதான்-
நாட்டுமக்க பணம்பறிக்க
காட்டுனாலே அதிகாரத்த,
அந்தக்
கள்ளனும் ராசாங்கமும்
வேறயில்ல ஒண்ணுதானே…!