-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

கல்வியின் தெய்வமே நீ
கண்திறந்து பார்க்க வேணும்
கல்விக்குள் காசை வைத்துக்
கற்பவரை முடக்கு கின்றாரே
செல்வம் இல்லா நிலையிலுள்ளார்          goddess-saraswati
சீராகக் கல்வி பெற
எல்லை இல்லா நாயகியே
இரக்க முடன் அருள்புரிவாய்!

கல்வியைக் காசாக்கிக்
கடைத்தெருவில் விற்கின்றார்
காமராசர் பிறந்தமண்ணில்
கல்வியிப்போக் காசாச்சு!!

இலவசமாய்க் கல்விதரின்
எல்லோரும் படித்துநிற்பார்
இந்தநிலை வருவதற்கு
எங்களம்மா அருளிவிடு!

காந்தீயம் பிறந்த நாட்டில்
காசுகையில் இல்லை என்றால்
கல்வி தனை நாடிடுவார்
கனவில்தான் கற்க வேணும்!

காசில்லாக் குடும்ப மதில்
பிறந்து விட்ட காரணத்தால்
கல்வி கற்க இயலாரை
கைதூக்கி விட்டி டம்மா!

மருத்துவம் படிப்பதற்கு
மனம் அவர்க்கு இருந்தாலும்
தரித்திரத்தின் காரணத்தால்
தான் ஒதுங்கி நின்றிடுவார்!

வருத்தமின்றி அவர்படித்து
வாழ் நாளில் உயர்வடையத்
தரித்திரத்தைப் போக்கிடுவாய்
தயை நிறைந்த நாயகியே!

பள்ளித் தலமனைத்தும் கோவில் எனச்சொல்லிச்
துள்ளி வரும்தமிழாலே சொன்னானே பாரதியும்
கிள்ளி எறிந்துநிற்கும் கீழான குணமுடையோர்
பள்ளிகளை இப்போது பணக்கிடங்காய் மாற்றிவிட்டார்!

பாரதியின் தமிழ் கொண்டு
பாட்டாலே வேண்டு கின்றேன்
பலபேரும் கல்வி கற்கப்
பராசக்தி அருள் புரிவாய்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *