Blog

  • ஜீவாவின் நாற்காலி தெரிவித்த சேதி

     

    இசைக்கவி ரமணன்

     

    chair
    தனிமை என்பது மிகநிஜமானது, அதன்
    தாழ்வாரத்து நிழல் உட்பட

    தனிமை என்பதை இனிமை என்பதா?
    தீக்குள் வைக்கும் எந்த விரலும், கண்ணனைத்
    தீண்டும் இன்பத்தைக் காணுமா?

    தனியே இருப்பது தனிமையாகாது
    எந்த உயிரும் எந்தக் கணமும்
    எங்கும் தனிமையில் இல்லை
    ஏதோ ஒன்றைச் சார்ந்தே இருப்பதை
    ஏதோ ஒன்று பார்த்துக்கொண்டே இருக்கிறது

    நான்போய் உட்கார்வதால் தீர்ந்துவிடாது
    நாற்காலியின் தனிமை
    ஆளைப் போல அதுவும்தான்
    அமர்ந்திருக்கிறது தரைமீது
    தரையும் கூடச் சதா சுழலும்
    பூமியின் மடியில் பொருந்திக்கொண்டிருக்கிறது

    அடுக்கிக்கொண்டே போனால்
    அயரவைக்கிறதே ஆண்டவனின் தனிமை!

    அலையலையாகப் பரவும் எண்ணங்களை
    அபிப்பிராயம் கொள்ளாமல்
    அதிர்ச்சி அடையாமல்
    அதற்குப் பொறுப்பே ஏற்காமல்
    அயராமல் இடைவிடாமல்
    அப்படியே பார்த்திருந்தால்

    எல்லாம் ஒடுங்கி
    ஏதோ ஒன்று மிஞ்சும்
    எதிரெதிரே உறவின்றிப் பிரிவின்றி
    இடைவெளி மட்டும் சற்றும் குறையாமல்
    இருப்பதே தனிமையின் தறுவாய்

    எது மிஞ்சியதோ அதுவே
    எது பார்த்துக்கொண்டிருந்ததோ அதனில்
    எத்தனமின்றிக் கரைந்து தீரும்

    எதுவுமே இன்றியும்
    எல்லாமாகவும்
    மல்லாந்து கிடக்கும் இருப்பே
    மகோன்னதத் தனிமை

    நன்றி : படம்: ஓவியர் ஜீவானந்தன்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy
    ”மைகொண்ட கண்ணாள், மகாலஷ்மி கொஞ்சிடும்,
    வைகுண்ட வாசியவன் வாசுதேவன், -பொய்கொண்ட,
    பூமியைப் பாராமல், பொய்யுறக்கம் போடுகிறான்,
    சாமிக்கு சுப்ரபாதம் சொல்”….கிரேசி மோகன்….

    Share
  • சீதையின் சீற்றம்!

    சீதையின் சீற்றம்!

    ஒரு அரிசோனன்

    எனக்கு அலுத்துப்போய் விட்டது.  கோபம் கோபமாக வருகிறது! 

     12

     இப்பொழுது எங்கு பார்த்தாலும், “சீதைக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது.  அவள் அடிமைபோல நடத்தப் பட்டாள்!  கற்பிற்கு இலக்கணமாகத் திகழ்ந்த அவளுக்குக் காலம் முழுதும் கண்ணீரே பரிசாகக் கிடைத்து!  இப்படிப்பட்ட அநீதி இழைத்தவனை, கொடுமைக்காரனை, அவதார புருஷன் என்றும், நேர்மையின் மறு உருவம் என்றும், அறநெறியாளன் என்றும் எப்படிப் போற்றமுடியும்? 

    “மனைவியை மதிக்கத் தெரியாதவனை மகேசன் எ+னப் புகழலாமா?  ஒருமுறை தீயில் புகுந்து மீண்டவளை மீண்டும் எவனோ சொன்னான் என்று கானகம் அனுப்பிய கல்நெஞ்சனல்லவா இவள் கணவன்!  அப்படியாவது அவளைக் கானகத்தில் நிம்மதியாக இருக்கவிட்டனா?  மீண்டும் உன் கற்பை நிருபித்துக் காட்டு என்று சொல்லி, அவளை மனம் உடையச் செய்து, உயிர் துறக்கச் செய்துவிட்டானே!”  என்று எனக்குப் பரிந்து பேசுவதாகத் தங்களையே எனக்கு வழக்காடுவோராகச் செய்து கொள்வோர் சிலர்.

    இன்னும் சிலரோ, மனம் போனபோக்கில் இன்னும் என்னென்னவோ சொல்கிறார்கள். 

    “என்னடா இது, சீதை கற்பில் சிறந்தவள் என்று நாமே ஒப்புக்கொள்கிறோமே, அப்படிப்பட்ட கற்புக்கரசி தனது கணவனை மற்றவர் தூற்றுவதைத் தாங்குவாளா?” என்று கணநேரமும் கருத்தில் கொள்வதில்லை.

    கணவன் தன்மீது அவதூறு சொல்வது தவறு என்று தட்டிக்கேட்டுத் தீக்கடவுளுக்கே சவால் விட்டவள், தன் கணவன் மீது எப்பழியும் விழக்கூடாது என்று இவ்வுலகுக்குக் காட்டுவதே பெரிது, தனது உயிர் கூடத் துச்சமே என்று எண்ணிய பெண்குலப் பெருவிளக்கு, அவளது கணவரைக் கண்டவர் பழிப்பதை விரும்புவாளா என்று ஏன் அவர்களால் எண்ணிப்பார்க்கத் தொன்றவில்லை?

    எப்படி இருந்தாலும், நீங்கள் அனைவரும் என் அன்பான குழந்தைகளே ஆவீர்கள்!  தந்தை ஒழுக்கம் கற்பிக்கிறார் அன்று அவர்களுக்குத் தோன்றாது, தன்னைத் தண்டிக்கிறார், எனவே அவர் இரக்கமற்றவர் என்றே நினைப்பார்கள்!  தாயைத் தந்தை கடிந்து கொண்டால், அவரை அடிக்கக் கையை ஓங்கிக்கொண்டு வரும் அறியாக் குழந்தைகளாகத்தான் உங்களை எண்ணுகிறேன்.

    எனவே, என்னை யாரும் அடிமை செய்யவில்லை, ஆதிக்கம் செய்யவில்லை, செய்யவும் இயலாது, என் கருத்து என்ன என்று ஒரு தாயாக உங்களுக்கு விளக்கக் கடமைப்பட்டு உள்ளேன்!

    என் கண்ணினும் இனிய செல்வங்களே! கேளுங்கள்…

    …அதற்கு முன்னர், அறிவியலில் வல்ல குழந்தைகளுக்கு விஞ்ஞான விளக்கமும், ஆன்மீகத் துறையில் ஆர்வம் உள்ள சிறார்களுக்கு ஆன்மிகம் மூலமாகவும், பெண்மை ஆண்மையைவிட எவ்வளவு உயர்த்து, பெண்கள் இல்லாமல் ஆண்களே இல்லை,  ஆண்மையே இல்லை, இந்த உலகம், இயற்கை, படைப்பு எதுவுமே எல்லை என்பதையும் விளக்கிவிடுகிறேன்.

    மனிதர்களிடம் இருபத்திரண்டு பண்பு காரணித் தொகுப்புகளும் (genes), இரண்டு இனக்கீற்றுகளும் (choromosomes)  இருந்த போதிலும், மனிதக் கரு இரண்டு இனக்கீற்றுகள் மூலம் உருவாகிறது, அது ஆணின் ஒன்றும், பெண்ணின் ஒன்றும் இணைந்து உருவாவது என்பதைத் விஞ்ஞானம் அறிந்த குழந்தைகளுக்கு நான் விளக்கவேண்டியதில்லை. பெண் கரு இரண்டு x இனக்கீற்றுகளின் இணைப்பினாலும், ஆண் கரு ஒரு  x, ஒரு y இனக்கீற்றுகளின் இணைப்பினாலும் உருப்பெறுகின்றன என்பதும் நீங்கள் அறிந்ததே!

    பெண் x  இனக்கீற்றை மட்டுமே உண்டுபண்ணுகிறாள், ஆண் x மற்றும் y இனக்கீற்றை உண்டுபண்ணுகிறான்.  இதில் y இனக்கீற்று x இனக்கீற்றை விடச் சிறியது என்றும் என்னுடைய விஞ்ஞானக் குழந்தைகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

    x இனக்கீற்று 1098  மரபணுக்களையும், y இனக்கீற்று 26 மரபணுக்களையும் உள்ளடக்கியதில் இருந்து, பெண்ணை உருவாக்கும் x இனக்கீற்றின் உயர்வை உள்ளலாமே! [1]

    பெண்மையே பெரிது என்று அறிவியலிலிருந்து அறிந்துகொள்ளலாமே!

    இதுமட்டுமா!  ஆண் உள்ளர்ந்த ஆற்றல் (potential energy) உடையவன் என்றால், பெண் இயங்காற்றல் (kinetic energy) உடையவள்.  இதைதான் சிவம் என்றும், சக்தி என்றும் ஆன்மீகக் குழந்தைகள் இயம்புகிறார்கள்.  சிவத்திடம் எதையும் படைக்கும், காக்கும், அழிக்கும், மறைக்கும், அருளும் உள்ளார்ந்த ஆற்றல் இருந்தாலும், அதை உணரும் ஆற்றல் இல்லை.  சிவத்திடம் உணரும் ஆற்றலை (ego) உண்டுபண்ணி, அவனைத் அவன் தொழில்களை ஆற்றவைப்பவள் உமையம்மையான, பென்மையின் வடிவமாகிய சக்தியே என்று ஆதி சங்கரர்  இயம்பி உள்ளாரே! [2]

    சக்தியுடன் இணைந்த பின்னரே சிவம் ஆக்கும் திறனைப் பெறுகிறது;  அந்த இணைப்பின்றி சிவம் அசையக்கூட இயலாது.”

    என்றல்லவா அழுத்தம் திருத்தமாகப் பெண்மையைப் போற்றிப் புகழந்து உள்ளார்! [3]

    எனவேதானே, நாவுக்கு அரசரான அப்பர் பெருமானும் தாயை முதலில் வைத்து, சிவபெருமானை, “அம்மையே, அப்பா, ஒப்பிலா மணியே!” என்று போற்றுகிறார்.  “வேயுறு தோளி பங்கன்” என்று காழிப்பிள்ளையாரும் அப்பனின் உடலில் பாதியை அம்மை தனதாக்கியதை உணர்ந்து ஓதுகிறார்!

    பெண்மையைப் போற்றி, ஆண்கள் பெண்ணடிமை செய்வதாகக் கூறும் என் குழந்தைகளும், பழமையே சிறந்தது என்று ஆண்களை மேலாகப் பேசும் என் செல்வங்களும் ஒரு வடமொழி சுலோகத்தை மேற்கோள் காட்டுகிறார்கள்.

    பித்ருர் ரக்ஷதி பாலாப்யே, பர்த்ருர் ரக்ஷதி கெளமாரே |

    புத்ரோர் ரக்ஷதி வ்ருத்தாப்யே, ந ஸ்திரீ ஸ்வாதந்த்ரமர்ஹதி  ||

    தந்தை சிறுவயதில் காப்பாற்றுகிறார், கணவர் குமரிபருவத்தில் காப்பாற்றுகிறார்,

    பிள்ளை வயோதிகத்தில் காப்பாற்றுகிறான், பெண் தானாக இருக்கத் தகுதி பெறுவதில்லை.

    சரியாக, உள்ளார்ந்து பார்த்தால், பெண்களாகிய நாங்கள் ஆண்களை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துவிட்டோம் என்பது இந்த சுலோகத்தில் இருந்து புரியும்.  பெண்களுக்குத் தொண்டு செய்வதே ஆண்களின் கடமை என்று சொல்லாமல் சொல்லுகிறது அல்லவா இந்தக் குறட்பா!  அதுதானே ஆண்களின் “கால்கட்டு” என்று வழங்கப்படுகிறது.  ஒருவரைக் காப்பாற்றவேண்டும் என்றால், காப்பாற்றுபவர் தனது சுதந்திரத்தையும்தானே இழக்கிறார்!

    ஆக, தந்தை, கணவன், மகன் இவர்கள் மூவரின் தானியங்கும் தகுதியையும் ஒரு பெண் கைப்பற்றி விடுகிறாள் என்பதுதானே இந்த சுலோகத்தின் தொடர்ப் பயன், இயல் விளைவு, பின்விளைவு எல்லாம்!

    எனவே, ஆண்களைத் தனது பிறப்பிலிருந்தே தனது ஆதிக்கத்தில் வைத்துவிடும் பெண்ணினத்தை ஆண்களால் அடிமை செய்துவிட இயலுமா?  நாணல் மாதிரி வளைந்து கொடுத்து வெள்ளத்திலும் நிலைத்துவிடும் பண்பு கொண்டவர் பெண்கள் – எதிர்த்து நின்று வீழ்பவர்கள் ஆண்கள்!  இது அவரவர் இயல்பு!  வளைந்து கொடுப்பதால் பெண்கள் வலிமை அற்றவர்கள் அல்ல.  வரட்டுப் பிடிவாதத்துடன் நிமிர்ந்து நிற்பதால் ஆண்கள் வலிமையிர் சிறந்தவரும் அல்ல.

    தத்துவம் போதும் என்று தோன்றி விட்டதல்லவா! எனவே,  என்னைப்பற்றிச் சொல்லப் போகிறேன்…

    …என் கணவர் இராமன் மனிதத் தாயான கோசலையின் வயிற்றில்தான் பிறந்தார்.  எனவே, அவர் பிறப்பு இயற்கைப் பிறப்பு.  ஆனால் என்னை அரசமுனியான ஜனகர் பிள்ளைவரம் வேண்டி நிலத்தை உழுதபோது நான் நிலத்திற்கு அடியில் கிடைத்தேன். [4]  எனவே, நான் மனிதக் குழந்தையாகத் தோன்றினாலும், மனிதப் பிறப்பு அல்ல, தெய்வப் பிறப்பு.  எக்குழந்தையால் மண்ணுக்கடியில் பலகாலம் புதைத்து இருக்க இயலும்?  அறிவுகொண்டு ஆலோசனை செய்யும் என் கண்மணிகளே, சிந்தித்துப் பாருங்கள்.

    நான் பிறப்பிலேயே உயர்ந்தவள்.  என்னால் மண்ணுக்கடியில் இருக்க இயலுமானால், என் திறன் எப்படிப்பட்ட உயர்வுள்ளதாக இருக்கவேண்டும்!  ஆகவே, பிறப்பிலேயே அதிக வலிமை படைத்தவளாகத்தான் பிறந்தேன்.

    என் மிகைப்பட்ட வலிமை விரைவிலேயே வெளிப்பட்டது.

    சிவபெருமானின் வில் இருந்த பெட்டியை ஐயாயிரம் வலிமை மிக்க வீரர்கள் இழுத்து வரவேண்டி இருந்தது! [5]  அப்படிப்பட்ட வில்லை என்னவர் இராமன் நின்று, எடுத்து, நிறுத்தி, நாண் ஏற்றித்தானே உடைத்தார்!  அதற்கு இரு கைகளும்தானே வேண்டி இருந்தது!  என்னைவிட எட்டு வயது பெரிய என்னவருக்கு இரண்டு கைகள் தேவைப்பட்டது.  ஆனால் பூப்பந்து விளையாடிய சிறுமியான நானோ, பந்து சிவபெருமானின் வில் இருந்த பேழைக்கடியில் சென்றபோது, குனிந்து அமர்ந்து, என் ஒரு கையினாலேயே வில் இருந்த பேழையை உயர்த்திப் பந்தை எடுத்தேன்.

    இப்போது சொல்லுங்கள், யாருக்கு வலிமை அதிகம்?  எனக்கா, என்னவருக்கா?  ஐயாயிரம் வீர்களுக்கு இல்லாத வலிமை என்னவருக்கு இருந்தது.  அவரைக் காட்டிலும் அதிக வலிமை எனக்கு இருந்தது.  இதை அறியாதவரா என்னவர் இராமன்!  அவரைவிட வலிமை உள்ள என்னை அடிமை செய்ய அவரால் இயலாது என்று அவருக்குத் தெரியாதா, என் கண்மணிகளே!

    “என்னருமைத் தாயான சீதையே!  அப்படியானால், அவர் சொன்னதை எல்லாம் நீங்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டீர்கள்?  ஏன் இராவணனை உங்களைச் சிறைப் பிடித்து எடுத்துச் செல்ல விட்டர்கள்? உங்கள் கணவரது அவதூறான சொற்களை ஏன் பொறுத்துக்கொண்டீர்கள்? நாங்களாக இருந்தால் இப்படிப்பட்ட ஒரு கணவரை விட்டு நீங்கி இருப்போமே!

    “தீக்குளித்து உங்கள் தூய்மையத் துலங்கச் செய்த பின்னரும், உளவாளிகள் உரைத்த சொல்லுக்காக, கருவுற்றிந்த உங்களை இரக்கமின்றிக் காட்டுக்கு அனுப்பினாரே உங்கள் கணவர்!  பின்னர் தங்களை முனிவர் வால்மிகியின் ஆசிரமத்தில் கண்டும், மீண்டும் அப்பழுக்கற்றவள் என்று சான்று காட்டச் சொல்லித் தங்களை இவ்வுலகிலிருந்தே நீங்கச் செய்தாரே!  அப்படிக் கருணை என்பதே கடுகளவும் இல்லாதவராக உங்களவர் இருந்தும் தாங்கள் ஒரு உணர்ச்சியற்ற பதுமையைப் போலத்தானே இருந்து விட்டீர்கள்! பொங்கி எழுந்திருக்க வேண்டாமா?” என்றுதானே கேட்கிறீர்கள்!

    ஏன் என்று விளக்குகிறேன்.

    “நீ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், இலக்குவனையோ, பரதனையோ, சுக்கிரீவனையோ, இன்னும் மனதில் தொன்றுபவருடன் நீ செல்லலாம்.” என்று என்னவர் சுட்டுப் பொசுக்கும் சொற்களால் என் இதயத்தை பிளக்க முற்பட்டபோது, நான் கலங்கி நின்றேனா!

    “ஒரு இழிந்தவன், ஒரு இழிந்தவளுடன் பேசுவதுபோல, சொல்லத்தகாத சொற்களை ஏன் சொல்லுகின்றீர்?” என்று எதிர்த் தாக்குதல்லவா தொடுத்தேன்! [6]

    यथा मे हृदयं नित्यं नापसर्पति राघवात् |

    तथा लोकस्य साक्षी मां सर्वतः पातु पावकः ||[7]  ६-११६-२५

    யதா மே ஹ்ருதயம் நித்யம் ந அபஸர்ப்பதி ராகவாது |

    ததா லோகஸ்ய ஸாக்ஷீ மாம் ஸர்வத: பாது பாவக: || 6-116-25

    நெருப்புக் கடவுளான அக்னியே! உள்ளத்தினாலோ, சொல்லாலோ, நான் களங்கப் பட்டவள் என்றால், கோபம் கொண்டு (என்னைச்) சுட்டு எரிப்பாயாக!

    என்று சவால் விட்டுத்தானே தீப் புகுந்தேன்!  அடிமை செய்யப்பட்டவளாக இருந்தால் அச்சப்பட்டு நடுங்கி இருந்திருக்க மாட்டேனா!

    அதுமட்டுமா!

    பொசுக்கும் செந்நாக்குகளை உடைய தீக்கடவுளே எனது கற்புக் கனலைத் தாங்கமுடியாது திணறி, என்னை வெளிக்கொணர்ந்து, என்னவரிடம் எனக்காக மன்றாடுகிறான்.  படைக்கும் கடவுளான பிரம்மன் முதல் முக்கண்ணன் வரை அனைவரும் என் பெருமையையே பேசுகிறார்கள் என்றால் அவர்களும் என்னைப் போற்றி, என் பெருமையை அறிந்துகொள்ளும் வண்ணம் என்னவருக்கு அறிவுரை கூறினார்கள் என்றுதானே பொருள்!

    கம்பநாட்டாரும்,

    அங்கி யான் என்னை இவ் அன்னை கற்பு எனும்

    பொங்கு வெந் தீச்சுடப் பொறுக்கிலாமையால்

    இங்கு அணைந்தேன் உறும் இயற்கை நோக்கியும்

    சங்கியா நிற்றியோ எவர்க்கும் சான்றுளாய். [8] – 9.3983

    என்று என் கற்பைப் போற்றுகிறார்.

    சுடுசொல் சொன்ன என்னவரை விட்டு நான் என் நீங்கவில்லை?  அப்படி நீங்கி இருந்தால் அவர் சொன்னது உண்மை என்று நான் ஒப்புக்கொண்டதாகத்தானே ஆகும்!

    “இராமனின் சுடுசொல் தாங்காமல் சீதை நீங்கியதுதான் சரி!” என்றா உலகம் கூறும்?

    “சீதை குற்றம் இழைத்தவள்.  எனவே, இராமனின் சொல்லில் இருக்கும் உண்மையைத் தாங்க மாட்டாமல் ஓடி விட்டாள்!” என்றுதானே என்னைத் தூற்றி இருக்கும்!  கற்புக்கரசி சீதை என்று புகழ்பவர்களே, இராமன் பெண்ணடிமை செய்தான் என்று எனக்குப் பரிந்துகொண்டு வருபவர்களே இன்று என்மீது வசை பாடி இருப்பார்கள்!

    இராவணனை அழிக்கவேண்டும் என்று அவதாரம் எடுத்தவர் என்னவர்.  அதை நான் செய்துவிட்டால் அவருக்கு என்ன பெருமை!  அவர் அவதாரம் எடுத்தது வீணாகி அல்லவா போயிருக்கும்!  எனவே நான் இராவணன் என்னைக் கவர்ந்து செல்ல அனுமதித்தேன்! எரிக்கடவுளே என் கற்புத் தீயைத் தாங்க இயலாதபோது, அரக்கன் இராவணனைச் சுட்டுப் பொசுக்க என்னால் இயலாதா?

    “நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் அன்னையே!  இராமர் தங்களைத் தீப்புகும் நிலைமைக்குத் தள்ளியது என்ன நீதி?” என்றுதானே கேட்கிறீர்கள்!

    அன்புள்ள ஒரு கணவன் என்ற முறையில் அவர் அதைச் சொல்லி இருந்தால் அது தவறுதான்.  அப்படி அவர் சொல்ல நேர்ந்ததற்குத்தான் என்னிடம் சரியாக வாங்கிக் கட்டிக்கொண்டார்.

    त्वया तु नरशार्दूल क्रोधमेवानुवर्तता |

    लघुनेव मनुष्येण स्त्रीत्वमेव पुरस्कृतम् || [9]  ६-११६-१४

    த்வயா து நரஸா’ர்தூல க்ரோதமேவ அனுவர்த்ததா |

    லகுனேவ மனுஷ்யேண ஸ்த்ரீத்வமேவ புரஸ்க்ருதம் || 6-116-14

    மாந்தரில் புலிக்கு நிகரானவரே!  வலிமையற்ற மனிதனைப்போல பெண்மைக்கே முக்கியத்துவம் அளித்து, உம்மால் கோபமே கைக்கொள்ளப்பட்டது. – 6.116.14

    என்னவரை வலிமையற்றவர் என்றும், ஆண்மையைக் கைக்கொள்ளாது பெண்மையைக் கைக்கொண்டு, சினம் காட்டுகிறீர்கள் என்று சாடினேன்.  என் உரிமையை அப்படித்தான் நிலை நாட்டினேன்.

    இருப்பினும், அவர் ஒரு மன்னவர்.  மன்னவரின் மானம் காக்க நடத்தப்படும் போரில் பல்லாயிரக் கணக்கானவர்கள் மடிகிறார்கள்.  அந்தப் போர்வீரர்கள் தங்களது தனிப்பட்ட பகைக்காவா எதிரிப் போர்வீரனை வீழ்த்துகிறார்கள்!  இல்லையே!  மன்னனுக்காகத்தானே!

    ஆகவே, ஒரு மன்னனுக்கு மனைவியைவிட மக்களே பெரிது!  மக்களின் மதிப்பே பெரிது. எனவே மன்னனை ஒரு மனைவியின் கணவனாக மட்டும் அளவிடக்கூடாது, என் குழந்தைகளே!

    “அரசியைக் கவர்ந்து சென்ற அரக்கனை அரசர் அழித்தது சரியே!  ஆயினும், மாற்றான் ஒருவன் மனையில் மாதக்கணக்கில் இருந்தவளை நமது மன்னர் எப்படி ஏற்றுக்கொள்ளலாம்?” என்றுதான் மக்கள் முழங்குவார்கள் என்பதை என்னவர் அறிவார்.

    அவருக்காக உயிரையும் உவப்புடன் கொடுக்கும் மக்கள், தன் மீது பழி சொல்லக்கூடாது என்பதில் அரசனுக்கு ஆர்வம் இருக்கவேண்டும்;  எனவே அரசி தன் தூய்மையை துலங்கவைக்கவேண்டும் என்பது அவர் மனதில் உயர்ந்து ஓங்கி இருந்தது.

    மக்களுக்காகத்தான் மகேசன்.  அவனுக்காக மக்களல்ல என்ற நெறியை உணர்ந்து அதன்படி நடந்துகொண்டவர் என்னவர்.  அவரைப் போற்றாமல் நான் எப்படித் தூற்றுவேன், அல்லது மற்றோரை – அவர்கள் என் மக்கட்செல்வங்களாக இருந்தாலும் – எப்படித் தூற்றவிடுவேன்?

    மீண்டும் ஒரு ஒற்றன் கொண்டுவந்த தகவலைக் கேட்டு ஏன் என்னைக் காதுக்கு அனுப்பினார்?

    ஒரு சிறு தீப்பொறி ஒரு பெரிய காட்டையே கொளுத்திவிடும்.  எனவே, அது பெரிதாவதற்குள் அதை அணைத்துவிட வேண்டும்.  இன்று ஒருவன்தானே பேசுகிறான் என்று வாளாவிருந்தால், சில நாள்களில் பலர் பேசுவார்கள்.  “சீதை தீப்புகுந்ததை நாம் நேரிலா பார்த்தோம்!  ஏதோ கண்கட்டி வித்தை செய்து, அப்படி ஒரு செய்தியை உண்டாக்கி விட்டார்கள்!” என்று புறம் பேசத் துவங்குவார்கள்.  காது, கண், மூக்கு வைத்து அவர்களே ஒரு கதையையும் உண்டாக்கி விடுவார்கள்.

    அதனாலேயே அவர் மீண்டும் என்னைக் காட்டுக்கு அனுப்பினார்.

    “உங்களைத்தானே காட்டுக்கு அனுப்பினார்!  தான் சுகவாசியாகத்தானே இருந்தார்!  அவரும் பதவியைத் துறந்து உங்களுடன் கானகம் ஏகி இருக்கலாமே!” என்று நீங்கள் கேட்கும் வினாவுக்கு இதுவே எனது விளக்கம்:

    அவர் அப்படிச் செய்திருந்தால், “அவருக்காக ஆயிரக்கணக்கானவர் இராவணனை எதிர்த்துப் போர் புரிந்தோமே!  கடலில் பாலம் சமைத்தோமே!  இது வீண்தானா?  விழலுக்கு இறைத்த நீர்தானா?” என்று தூற்றி இருக்க மாட்டார்களா?

    அவர் காலடியே சுவர்க்கம் என்று தன்னையே அவருக்காகக் கொடுத்த அனுமனே அவரை விட்டல்லவா நீங்கி இருப்பான்!  அவருக்காகப பதினான்கு ஆண்டுகள் தந்து, தனது அரச போகத்தையும், இல்லாளையும் துறந்து, தமையனுக்குத் தொண்டு செய்த இலக்குவன் அவரை உயர்வாக மதித்திருப்பானா?

    என் அருமைச் செல்வங்களே!  அறிவில் சிறந்த என் கண்மணிகளே!  சிந்தித்துப் பாருங்கள்!  அரசன் என்று ஆகிவிட்டால் தனது நலத்தைவிட மக்களிடம் நற்பெயர் வாங்குவதே தலையாயதாகி விடுகிறது.

    என்னவரும் சுகபோகம் அனுபவிக்கவில்லை.  என் நினைவிலேயே ஏங்கினார்.  அந்நிலையில் அது ஒன்றைத்தானே அரசரான அவரால் செய்ய இயலும்?  நினைத்திருந்தால் வேறு மனைவியரைக் கைக்கொண்டு இருந்திருக்கலாம்.  அதை அன்றைய நெறியும் அரசர்களுக்கு அனுமதித்தது.  அவர் அதைச் செய்யவில்லையே!  என்மேல் இருந்த காதலால்தானே அதைச் செய்தார்!  காதலனை நினைத்து ஏங்கும் கன்னியரைப் பற்றி நிறையக் காவியங்கள் புனைவதைப் படித்திருப்பீர்கள்.  காதல் மனைவியே நினைத்துக் கற்புடன் இருந்த கணவர் என்னவர்தானே!

    கடைசியில், நான் என் உயிர் துறந்தேன், என்னவர் மீண்டும் என்னைத் தூயவள் என்று நிரூபிக்கும் நிலைமைக்குத் தள்ளினார் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

    முனிவர் வால்மீகி என் செல்வங்களாகிய லவனும், குசனும் அரியணை ஏறி, ரகு வம்சத்தின் மேன்மையைத் தொடர வேண்டும் என்று விரும்பினார்.  என்னவர் என்னை மீண்டும் அப்படியே எப்படி ஏற்பார்?  ஆண்டுகள் கடந்தால் அநியாயப் பழி நீங்கி விடுமா?  மீண்டும் தோண்டி எடுத்துப் பழி போடமாட்டர்களா?

    எனவேதான் என்னவர் அமைதி காத்தார்.

    எனக்கும் அலுத்து விட்டது.  அவரும் அமைதி பெறவேண்டும், நானும் மீண்டும், மீண்டும் வீண்பழியிலிருந்து விலகவேண்டும் என்று தோன்றி விட்டது.  ஆகவே, நான் எங்கிருந்து வந்தேனோ, அந்த நில அன்னையிடமே சரணடைந்தேன்.

    “என் நில அன்னையே!  நான் உண்மையிலேயே என் கணவருக்கு கற்புடைய மனைவியாக விளங்கி இருந்தால், உன் சீதையை இந்த வாழ்வுச் சுமையிலிருந்து விடுவித்துவிடு!” [10]

    என்று கோரினேன்.  அவளும் என்னை அன்புடன் அழைத்துச் சென்றாள்.

    நான் தற்கொலை செய்துகொண்டேன் என்று நீங்கள் பலர், பல மொழிகளிலும் எழுதி வருகிறீர்கள்.  உங்களை ஒன்று கேட்கிறேன், என் செல்வங்களே!  தீயினாலேயே தீண்ட இயலாத நான் மலையிலிருந்து வீழ்ந்தால்தான் இறந்துவிடுவேனா, அல்லது நான் விரும்பாமல் பூமி பிளந்துதான் என்னைக் கொண்டுபோக இயலுமா?  நன்கு சிந்தியுங்கள். மண்ணில் தோன்றிய மாபெரும் பிறப்பு என்னுடையாது.  நானே என் அன்னையான மண்ணைச் சரணடைந்தேன்.

    இலங்கையில் தீயில் புகும் முன்னர் நான் வாழவேண்டும் என்று விரும்பினேன்.  எனவே என் கற்புக்கனல் தீக்கடவுளைச் சுட்டுப் பொசுக்கியது.  அவனும் என்னைத் திரும்ப என்னவரிடம் ஒப்படைத்தான்.  மீண்டும் பழி சொல்லி என்னைக் கானகத்திற்கு அனுப்பச் செய்த, என் அருமையை அறியாத மாந்தர்கள் நடுவில் நான் வாழ விரும்பவில்லை.  என் இரு கண்ணின் மணிகளை என்னவரிடம்  இணைத்துவிட்டு, என் அன்னையின் மடியில் தஞ்சம் புகுந்தேன்.  அவ்வளவே!…

    என் மனதில் உள்ளதை என் செல்வங்கள் உங்களிடம் பகிர்ந்து கொண்டதும் என் சீற்றம் தணிந்து விட்டது.  என் குழந்தைகளான நீங்கள் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

     

    ************************************************

    [1]  Chromosomes:  Definitions and Structure, by Jessie Szalay, Live Science, February 19, 2013

    [2]  ஆதி சங்கரர் அருளிய சௌந்தரிய லகரி:  சுலோகங்கள் 1 – 41

    [3]  சௌந்தரிய லகரி, முதல் சுலோகத்தின் தமிழாக்கம்

    [4]  வால்மீகி இராமாயணம் – பாலகாண்டம் –  சர்க்கம் 66 – சுலோகங்கள் 13-16

    [5]  வால்மீகி இராமாயணம் – பாலகாண்டம் –  சர்க்கம் 67 – சுலோகங்கள் 3 & 4

    [6]  வால்மீகி இராமாயணம் – உயுத்த காண்டம், சர்க்கம் 116, சுலோகம் 5

    [7]  வால்மீகி இராமாயணம் – உயுத்தகாண்டம் –  சர்க்கம் 116 – சுலோகம் 25

    [8]  கம்பராமாயணம் – மீட்சி படலம், செய்யுள் 3983

    [9]  வால்மீகி இராமாயணம் – உயுத்தகாண்டம் –  சர்க்கம் 116 – சுலோகம் 14

    [10]  வால்மீகி இராமாயணம் – உத்தரகாண்டம்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy
    கன்னிப்பெண் ராதைகைத் தாம்பால் கட்டுண்டு,
    பின்னிப் பிணைந்த கண்ணனவன் -முன்னம்
    உரலிழுத்த ந்யாபகம் உந்த உருள
    மருள முழித்தனள் மாது ….கிரேசி மோகன்….

    கண்ணிநுண் தாம்புக்கும் கட்டுண்டோன், கன்னிப்பெண் ராதைக்கும் கட்டுண்டோன்….

    Share
  • மறக்கப்பட்ட நம் தலைவர்கள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    images

    இந்தியா (இனி இந்தியா என்று சொல்வதைத் தவிர்த்து பாரதம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று எப்போது அரசிடமிருந்து ஆணை பிறக்கப் போகிறதோ?) சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் முடிந்துவிட்டன. காந்திஜி படுகொலை செய்யப்பட்டு 67 ஆண்டுகள் முடியப் போகின்றன. ஆர். எஸ். எஸ். காரர்கள் சதிசெய்து அவரைத் தங்கள் வன்முறையால் இந்திய அரசியலிலிருந்து விலக்கிவிட்டனர். ஆனாலும் காங்கிரஸ்காரர்களாவது அவர் பிறந்த நாளன்று அவர் பெயரைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். உலகின் பல நாடுகளில் பல பல்கலைக்கழகங்களில் காந்திஜியின் அஹிம்ஸை வழிகளைப் பற்றியும் காந்திஜியின் கொள்கைகளைப் பற்றியும் ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் எத்தனை பல்கலைக்கழகங்களில் காந்திஜி பற்றிய ஆராச்சி நடந்துகொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு பள்ளியின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது மாணவன் ஒருவன், ‘இறந்தவர்களானாலும் சரி. உயிரோடு இருப்பவர்களானாலும் சரி, யாரோடு உணவருந்த விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டபோது எதிர்பாராத இந்தக் கேள்விக்கு சிறிதும் யோசிக்காமல் ‘காந்திஜியோடு’ என்றார். உலகின் பல பெரிய தலைவர்களோ பெரிய விஞ்ஞானிகளோ அவர் நினைவுக்கு வரவில்லை. காந்திஜிக்கு மிகவும் பின்னால் வந்தவர் – காந்திஜி இறந்து பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தவர் – காந்திஜியை நினைவில் வைத்திருந்தார்.

    காந்திஜியை நம்மில் எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறோம் என்பது ஒரு புறம் இருக்கட்டும். காந்திஜியைக் கொன்ற ஆர். எஸ். எஸ்ஸிலிருந்து வந்திருக்கும் மோதி இன்னொரு வகையாக நம் மனதிலிருந்து காந்திஜியின் நினைவை அழிக்க முயற்சி செய்கிறார். காந்திஜியை எத்தனை பேருக்கு நினைவிருக்கிறதோ தெரியாது; ஆனால் அக்டோபர் 2 காந்திஜி பிறந்த நாள் விடுமுறை நாள் என்று மட்டும் எல்லோருக்கும் தெரியும். ‘அக்டோபர் இரண்டா? அன்று காந்திஜி பிறந்த நாளுக்கு விடுமுறை’ என்று எல்லோரும் சொல்லிக்கொள்வார்கள். அன்றாவது அவருடைய பெயர் எல்லோர் வாயிலும் இருக்கும். விடுமுறை என்பதற்காக அந்த ஒரு நாளில் காந்திஜி பெயரை உச்சரிக்கும் பழக்கத்தையும் மறக்கடிக்கும் ஒரு கைங்கரியத்தை இப்போது மோதி மேற்கொண்டிருக்கிறார். அன்றைய தினத்தை இந்தியாவைத் தூய்மைப்படுத்தும் தினமாக அனுசரிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருக்கிறார். அன்று விடுமுறை இல்லாதது மட்டுமல்ல; அன்று காந்திஜி பெயரை உச்சரிக்கும் தேவையையும் இல்லாமல் ஆக்கியிருக்கிறார்.
    காந்திஜி போதித்த உள்ளத் தூய்மையை முதலில் பின்பற்றினால் இந்தியாவின் புறத் தூய்மை தானாகவே வருமே!

    அதே மாதிரிதான் நேருஜியின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுவதையும் இந்தியாவைத் தூய்மைப்படுத்தும் தினமாக அனுசரிக்கச் சொல்கிறார். சுதந்திரப் போராட்டத்தில் நேருஜியின் பங்கையும் அதன் பிறகு சுதந்திர இந்தியாவை நடத்திச் சென்று அவர் இந்தியாவை ஒருங்கிணைந்த நாடாக வைத்திருந்ததையும் வேகமாக மறக்கச் செய்யும் கைங்கரியங்களில் மோதி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    அடுத்து வருவது வல்லபாய் பட்டேல். இன்றைய இந்தியாவை இன்றைய உருவில் ஒருங்கிணைத்ததே பட்டேல்தான் என்று இந்தியர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? காலண்டர் தயாரிப்பவர்கள் மட்டும் எல்லோர் பிறந்த நாளையும் பட்டியலிடும்போது அவர் பிறந்த நாளையும் குறிப்பிடுகிறார்கள். நாள்காட்டியில் அன்றைய தேதிக்குரிய தாளைக் கிழிக்கும்போது ‘இன்று பட்டேலின் பிறந்த நாளா?’ என்று நினைவுபடுத்திக்கொள்கிறோம். தினசரி காலண்டர் இப்போது எத்தனை பேரிடம் இருக்கிறது?

    பாரதியாருக்கும் பாரதிதாசனுக்கும் பல்கலைக்கழகங்கள் நிறுவியாயிற்று, இனி அவர்களுடைய போதனைகளை எளிதாக மறந்துவிடலாம் என்று நினைக்கிறோம். ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்றார் பாரதிதாசன். தலைநிமிர்ந்து நிற்கும்படியாகவா நாம் காரியங்கள் செய்துகொண்டிருக்கிறோம்? ஒரு பிரியாணிப் பொட்டலத்திற்கும் நூறு ரூபாய்க்கும் கூலிக்கு மாரடிக்க நாம் தயாராக இருக்கும்போது எப்படித் தலை நிமிர்ந்து நிற்க முடியும்? தமிழினம் எவ்வளவு அறிவீனமாகிவிட்டது என்பதைத் தெரிந்துகொள்ள ‘ஓம் ஓபாமா’ என்ற திரைப்படத்தைப் பாருங்கள். கட்சித் தலைமையிலிருந்து போன்கால் வரவும் கட்சித் தலைவர் ஒருவர் தன்னுடைய செல்போனைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, எதிரே இல்லாத தலைமைக்கு முன்னே சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து வணங்கிவிட்டுப் பின் தொலைபேசியை எடுத்துப் பேச ஆரம்பிக்கிறார். என்னே நம் சுய மரியாதை! அது திரைக்கதை என்றால் உண்மையில் நடந்த சம்பவம் ஒன்று. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயிலிலிருந்து ஜாமீனில் வந்தவுடன் இன்றைய தமிழக முதல்வர் (தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் பிரதிநிதி) முன்னவரின் காலில் விழுந்து வணங்குகிறார். என்னே நம் பக்குத்தறிவுப் பாதை பயணித்த கதை!

    periyar-400மதத்தின் பெயரால் ஜனங்களை முட்டாளடித்து அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்திய பிராமணர்களின் செயல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த பெரியாரைப் பற்றிய புரிதலே சரியாக இல்லாதபோது அவரை மறப்பது மிகவும் எளிது. ஊழலில் ஊறிப்போன ஒரு அரசியல்வாதியை, குற்றம் சாட்டப்பட்டவர் கேட்ட வாய்தாக்களை எல்லாம் கொடுத்துப் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் அவரைத் தண்டித்தபோது 193 பேர் அந்தச் செய்தி கொடுத்த அதிர்ச்சியில் இறந்திருக்கிறார்கள், அல்லது தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் (139 பேர் மாரடைப்பால் இறந்தவர்கள் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கூறுகிறது). இவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்குப் பெரியாரின் ‘போலிப் பகுத்தறிவு இயக்கம்’ காரணம் என்று சொல்லுமளவுக்கு பெரியாரைப் புரிந்துகொண்டிருக்கிறோம். அவர் காட்டிய பகுத்தறிவுப் பாதையில் செல்ல நாம் என்றுமே தயாராக இல்லாதபோது இப்போது மட்டும் நினைவில் வைத்திருப்போமா என்ன?

    காமராஜ் இறந்தபோது அவர் தலைமாட்டில் 160 ரூபாய் மட்டும் இருந்ததாம். லஞ்சம் வாங்குவது, சொத்து சேர்ப்பது என்பது பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாத காமராஜ், கக்கன் போன்ற எளியவர்கள் வாழ்ந்த தமிழகமா இப்போது கணக்கில் அடங்காத அளவு சொத்து சேர்க்கும் தலைவர்களை உருவாக்கியிருக்கிறது? வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் சொத்தின் அளவை மதிப்பிட்டோமானால் அதில் எத்தனை பூஜ்யங்கள் இருக்கின்றன என்பதை எண்ணி மாளாது என்றார் எங்கள் நண்பரின் தந்தை ஒருவர். இதற்கு நேர்மாறாக இறக்கும்போது 160 ரூபாய் வைத்திருந்த காமராஜரின் எளிமையையும் அவரையும் சேர்த்து மறந்துவிட்டோம்.

    எளிமைக்கும் மக்களின் நலனில் அக்கறை செலுத்துவதற்கும் அடையாளமாக விளங்கிய தலைவர்களை நாம் மறந்துகொண்டே போக, சொத்துச் சேர்ப்பதையும் மக்களை முட்டாளடிப்பதையும் தங்கள் சாதனைகளாகக் கொண்ட தலைவர்கள் காளான்கள் போல் முளைத்துக்கொண்டேதான் இருப்பார்கள். வளர்க ஊழல் புரிவோர் ஆட்சி! வாழ்க தமிழகம்!!

    பி.கு. இந்தக் கட்டுரையின் கருத்துகள் அனைத்தும் ஆசிரியர் திருமிகு நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களின் சொந்த கருத்துக்கள் மட்டுமே. வல்லமை இதழுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

    Share
  • காற்று வாங்கப் போனேன் – 51

    — கே.ரவி.

    கானல் நீரோ, கற்பகச் சோலையோ இந்தத் தொடரின் கருப்பொருள் இல்லை. இதன் கருப்பொருள் கவிதை. அடாடா! பெரிய தவறு. கவிதை இதன் கருப்பொருள் இல்லை; கதாநாயகி!

    தானே வெடித்துச் சிதறிய ஒற்றைப் புள்ளியும் அவள்தான். அதிலிருந்து பொலபொலவென்று பிரிந்து பரவும், பரவிக் கொண்டே இருக்கும் பிரபஞ்ச சக்தியும் அவள்தான். “ஊடலும் கூடலும் கோவலர்க் களித்து” என்று இளங்கோ சொன்னது போல் ஊடலும், கூடலும் பாவலர்க்களிக்கும் மாதவிப் பொன்மயிலாளள் அவள்தான். கூடல் மாநகரையே தீக்கிரையாக்கிய கண்ணகியைப் போல், மனக்காட்டை எரிக்கும் அக்கினிக் குஞ்சும் அவள்தான்.
    அவளை ஆராதிக்கவே இந்தத் தொடர்.

    ‘அதெல்லாம் சரி, கவிதை எழுதுவதில் என் பங்கு என்ன என்று தெளிவாகச் சொல்லுவே’ என்று எரிச்சலுடன் கேட்கிறான் புத்தி சிகாமணி.

    சொல்கிறேன். எழுதும் போது அடங்கியிருக்கும் நீ, எழுதி முடித்தபின் போடும் ஆட்டம் இருக்கிறதே அது பேயாட்டம் அப்பா! கவிஞன், அவன் மனம் போன போக்கில் ஏதேதோ எழுதிவிட, அதை வைத்துக் கொண்டு நீ செய்யும் வியாக்கியானம் இருக்கிறதே, அது தலைசுற்ற வைப்பது!

    சிகாமணி கேட்கிறான்: ‘ஏம்பா, நீ கூட போன பகுதியில் கானல், கோணல் என்று என்னென்ன வியாக்கியானம் செய்தாய், இப்போது என்னைக் குறை சொல்கிறாயே!’

    நானா செய்தேன், இல்லை. அது, கவிதை தானே தனக்குச் செய்து கொள்ளும் அலங்காரம். எந்த அனுபவக் களத்தில் அது ஊற்றெடுத்து வந்ததோ, அதன் ஆபரணங்களை அது அணிந்து கொண்டுதான் வரும். எழுதும் கவிஞனுக்குப் புலப்படாத அந்த நுட்பங்கள் படிக்கும் ரசிகனுக்குப் புலப்படத்தான் செய்யும்.

    ‘நானும் அதைத்தானே செய்கிறேன்’ என்று சீறுகிறான் சிகாமணி.

    இல்லை, ரசிகனின் பார்வைக்கு அணிகள் புலப்படலாம். ஆனால், ரசிகனே அணிகள் செய்து அவளுக்கு மாட்டிவிடக் கூடாது. புரிகிறதா?

    என்ன புரிந்ததோ போ என்று சிகாமணி அலுத்துக் கொள்கிறான்.

    vairamuthuஎப்படி ஒரு கவிதை தானே அணிகள் அணிந்து வருகிறது என்பதற்குத் தற்கால எடுத்துக் காட்டு ஒன்று சொல்கிறேன். கவிஞர் வைரமுத்து எழுதிய ஒரு பாடல் சர்ச்சைக்கு உள்ளானது. தோழன் என்ற தமிழ்ச்சொல் இருக்க அவர் ஏன் சினேகிதனே என்று எழுதினார் என்ற கேள்வி ஒரு மேடையில் எழுந்த போது, நான் பதில் சொன்னேன்: அந்தப் பாடலை முதலில் சரியாகப் படிக்க வேண்டும். அதில் “சினேகிதனே” என்று அவர் எழுதவில்லை. “ஸ்னேகிதனே” என்றுதான் எழுதியிருக்கிறார்.

    “ஸ்னேகிதனே, ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே”

    இதுதான் அந்தப் பாட்டின் முதல் வரி. இதைத் ‘தோழனே ரகசியத் தோழனே’ என்று பாடிப் பாருங்கள். ஜீவனே இருக்காது. ‘ஸ்’ என்ற உச்சரிப்புத்தான் இந்தக் கவிதையின் உயிர்நாடி. ரகசியத்தின் குறியீடு ‘உஸ்’ தானே! ரகசியத் தோழமையை ஒலிக்குறிப்பாலேயே உணர்த்தும் உச்சரிப்பு அது. ரகசியமாகக் காதுக்குள் யாரோ பாடுவது போன்ற அனுபவத்தைத் தரவல்ல உச்சரிப்பு அது. எப்படி அந்தக் கவிதை தன் அனுபவக் களத்தில் இருந்தே தன் அணிகலனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்துவிட்டது பார்த்தாயா, சிகாமணி, உன் உதவி இல்லாமலேயே!

    இன்னொரு கவிதை, சற்றே பழைய கவிதை:

    murugaசீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
    தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களுமோர்
    கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியுமருட்
    கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே

    என்னய்யா இது வள்ளலாருக்குத் தமிழ் இலக்கணம் தெரியாதா என்ன? ஆறு வதனங்கள், பன்னிரு தோள்கள், இரண்டு தாள்கள், ஒரு வேல், மயில்வாகனம், கோழிக்கொடி, தணிகாசலம், ஆக மொத்தம் 24 விஷயங்களைச் சொல்லிவிட்டு, இவ்வளவும் தம் ‘கண்ணுற்றது’ என்று ஒருமையில் சொல்லி விட்டாரே!
    vallalpic1இந்தப் பாடலின் அனுபவக் களம் என்ன தெரியுமா? கண்ணாடியில் இராமலிங்கர் தம்மைப் பார்த்த போது, அதிலே மேற்சொன்னவாறு முருகப் பெருமான் காட்சி தந்தார். அப்போது வந்த பாடல் இது. மேலே சொன்ன 24 விஷயங்களும் தனித்தனியாகவா அவருக்குப் புலப்பட்டன? இல்லை. மேற்சொன்ன அனைத்துமே வடிவான ஒரே முருகப் பெருமான் அவருக்குக் காட்சியானான். இதை ஒருமையில் சொன்னது எவ்வளவு பொருத்தம்! இதை ஆங்கிலத்தில் சொல்வதென்றால், ‘ஸிந்தடிக் யூனிட்டி’ (Synthetic Unity) என்று சொல்ல வேண்டும். அதாவது, ஒன்றிய நிலை அல்லது ஒருமை நிலை.

    நான் ஏதோ கதையளப்பதாகக் கருத வேண்டாம் தம்பி! ‘இம்மானுவெல் கன்ட்’ என்ற ஜெர்மானிய தத்துவ மேதையைப் பற்றி முன்பே சொன்னேன் இல்லையா? அவன் சொன்னது இதுதான். நாம் ஓர் ஆப்பிள் பழத்தைப் பார்க்கும் போது, சிவப்பு நிறம், மென்மையான தோல், குளுமையான சுவை, உருண்டையான வடிவம் என்றெல்லாம் அதன் பண்புகளைத் தனித்தனியாக நுகர்ந்து, அவற்றைப் பிறகு ஒன்றிணைத்து ஆப்பிள் என்ற ஒரு பொருளை அறிவில் உருவகப் படுத்திக் கொள்கிறோமா, இல்லை, ஆப்பிள் என்ற ஒரு பழத்தைப் புலன்களால் பலவாறு நுகர்ந்து, அதன் பண்புகள் இன்னின்னவை என்று பகுத்துத் தெளிகிறோமா என்பதுதான் அவன் கேட்ட கேள்வி.

    பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மேலை நாடுகளில் ஒரு விதமான சூனிய வாதம் எழுந்து, பரவி, ஆதிக்கம் செய்தது. அது என்ன வாதம்? நாம் புலன்களால் நுகரும் பண்புகள் தவிர்த்துப் பொருண்மை என ஒன்றுமே இல்லை, அதாவது, சிவப்பு, மென்மை, குளுமை, உருண்டை ஆகிய பண்புகளைத் தவிர ஆப்பிள் என்ற ஒரு பொருளை நாம் நேரடியாக நுகர்வதே இல்லை, எனவே பொருண்மை என்பதே இல்லை. இதுதான், பார்க்லீ, ஹ்யூம் ஆகிய பிரிட்டிஷ் சிந்தனையாளர்கள் உலவ விட்ட சூனிய வாதம். அது ஒரு பெரிய அறிவியற் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த போதுதான் கன்ட் மேற்சொன்னவாறு கேள்வி கேட்டு அந்தச் சூனிய வாதத்தை எதிர் கொண்டான் என்பது மெய்யியல் வரலாறு.

    வள்ளற் பெருமானின் கவிதையில் வந்த ஒருமை-பன்மை மயக்கம் எவ்வளவு பெரிய தத்துவக் குழப்பத்துக்கு விடையாகித் தெளிவு சேர்த்தது! ஆனால், சமீபத்தில், என் இனிய நண்பர், நல்ல கவிஞர் ஒருவர் எழுதிய பாடல் தேசிய விருது பெற்றது. அது கருத்து ரீதியாக மிக நல்ல பாடல்தான். ஆனால், அதன் தொடக்க வரியில் உள்ள ஒருமை-பன்மைக் குழப்பத்தை யாராலும் தீர்க்க முடியாது.

    “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே”

    இதை அப்படியே ஆங்கிலத்தில் சொல்லிப் பார்க்கலாமே:

    EVERY FLOWERS TELLS!

    என்ன சொல்லி இதை அமைதி செய்வது!

    நான் அந்தக் கவிஞரின் மனத்தைப் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதைச் சொல்லவில்லை. இதற்கு ஒரு நல்ல சமாதானம் அவரோ, வேறு யாரோ சொல்லிவிட்டால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். எனக்கு அந்தச் சமாதானம் தோன்றாமற் போனதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். உரைநடைக்கும், செய்யுளுக்கும் வடிவ வேற்றுமை உண்டு. ஆனால் உரைநடைக்கும், கவிதைக்கும் வடிவத்தில் மட்டுமா வேற்றுமை காண்பது? உரைநடையில் சொல்ல முடிவதைக் கவிதையில் சொல்வது தேவையற்றதோ என்று தோன்றுகிறது. படிப்பவருடைய சிந்தனையை நோக்கித் தொடுக்கப்படும் வாக்கியங்கள் உரைநடையில் அமைவதே பொருத்தம் என்று நினைக்கிறேன். அதுதான் நேரடியான அறிவுத் தொடர்புச் சாதனம். ஆனால் எதை உரைநடையில் சொல்ல முடியவில்லையோ அதைச் சொல்ல முற்படுவதே கவிதை என்று ஒரு தீர்மானம் போட்டுவிடலாமா?

    என்னப்பா சட்டசபையா நடத்துகிறோம், தீர்மானம் போடுவதற்கு? நம் சங்கை நாம் ஊதுவோம். அவரவர் பங்குக்கு அவரவர் சங்கை ஊதிக் கொள்ளட்டுமே. கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்ய நாம் யார்? அப்படிச் செய்ய வேண்டியது என்ன அத்தனை அவசியமா? இல்லை அது சாத்தியமா? எதை உரைநடையில் சொல்ல முடியாது? “மின்னல் உறங்கியது” என்று சொல்லி என்ன புரிய வைக்க முடியும்? அதைப் புரிந்து கொள்ளத் தேவையே இல்லை; உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதனால்தான் தன் நூலுக்கே, “மின்னல் உறங்கும் போது” என்ற அருமையான ஒரு கவிதைத் தலைப்பைத் தந்தார் கவிஞர் ஈரோடு தமிழன்பன். அது புரிந்து கொள்வதற்காக இல்லை, ரசிப்பதற்காக.

    கவிஞர் மருதகாசியின் பழைய திரைப்பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது:

    தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
    கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

    பாரதியின் குயில் பாட்டில் வரும் அமர வரிகள்:

    மின்னற் சுவைதான் மெலிதாய் மிக இனிதாய்
    வந்து பரவுதல் போல் ……

    இதை உரை நடையில் எழுதி யாருக்கு என்ன புரிய வைக்க முடியும்! கவிதையின் சமாச்சாரமே வேறு சாமி!

    மேலே சொல்லப்பட்ட வள்ளலார் பாட்டில் ஒன்றை நாம் சரியாகக் கவனிக்கத் தவறிவிட்டோம். “அருள் கார்கொண்ட தணிகாசலமும்” என்று சொல்கிறாரே! அருளாகிய கார்மேகங்கள் சூழ்ந்த தணிகை மலை. புறக் கண்களுக்குப் புலனாகும் தணிகை மலை கார்மேகங்கள் சூழ்ந்த மலைதான். ஆனால் அருளாகிய கார்மேகங்கள் சூழ்ந்த தணிகை மலையாக முருகப் பெருமானே இருப்பது புறக் கண்களுக்குப் புலப்படாது. கவிஞன் எந்தக் கண்களால் தரிசனம் பெறுகிறான் என்பதை இந்தப் பாடல் எப்படித் தெளிவாக்குகிறது பார்த்தாயா தம்பி!

    “என்கவிதை எந்நாளும் பயன்படாது” என்ற என் கவிதையை முன்பே முழுசாகத் தந்து விட்டேன். அதில் வரும் ஒரு புலம்பல் வரி இப்போது கொஞ்சம் புரியத் தொடங்குகிறதோ?

    தரிசனக் கடலாடி விட்டு வார்த்தைத்
    தறிகளிலே சிக்குண்டு தவிக்கும் பேதை

    ஆனால் அந்தத் தறியில் தான் எத்தனை வண்ண வண்ண ஆடைகள் நெய்து கொள்கிறோம்!

    (தொடரும்)

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    அக்டோபர்  27, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  திரு. வெ. திவாகர் அவர்கள்

    V. Dhivakar

    இந்த மாதம் அக்டோபர் 11, 2014 அன்று 195 கி.மீ. வேகத்தில் வீசிய ‘ஹூட் ஹூட்’ புயல், ஆந்திர மாநிலத்தின் துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தில் கரையைக் கடந்து நகரை சூறையாடியதுடனல்லாமல் அதன் காரணமாக ஆறு பேர் உயிரிழக்கவும் நேரிட்டது. இவ்வாறு அடுத்த வீட்டு ஆந்திராவை அலங்கோலமாக்கிய புயலை, விசாகையில் வசிக்கும் திரு. திவாகர் அவர்கள் அந்தப் பேரிடரிலும் தனது சிரமத்தைப் பொருட்படுத்தாது தொகுத்து வழங்கிய மேன்மையான செயலைப்பாராட்டி அவரை வல்லமையாளர் என அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பெருமை அடைகிறோம்.

    நாடகக் கலைஞரும், எழுத்தாளருமான திரு. திவாகரை அறியாத வல்லமை வாசகர்களே இருக்க வழியில்லை. வல்லமை வாசகர்களுடன் தனது படைப்புகளைப் பகிர்ந்து கொள்வதுடன், இந்த “வல்லமையாளர் விருது” வழங்கிப் பாராட்டும் பொறுப்பையும் ஏற்று ஒரு நூறு வல்லமையாளர்களைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டி மகிழ்ந்தவரே அவர்தான். அடுத்தவர்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் செயலை மேற்கொண்ட சிறந்த வல்லமையாளர்களில் ஒருவரான திவாகர், அப்பணியின் காரணமாகவே காலந்தாழ்த்தி இப்பொழுது வல்லமையாளராகப் பாராட்டப்படும் ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.

    விசாகப்பட்டினத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் திவாகர் ஆந்திராவைக் குறிப்பிடும் பொழுது அடுத்தவீடு என்றே குறிப்பிடுவார். “அடுத்த வீடு – நம் தமிழகத்தின் அடுத்த வீடு இந்த ஆந்திரதேசம்தானே.. ஆந்திரதேசத்தில் என்னுடைய அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்…” என்று ஆந்திர அனுபவங்களை “அடுத்தவீடு” என்ற வலைப்பூவில் பதிவு செய்து வருகிறார். தமிழ்மக்களுக்கு ஒரு நேர்முக வர்ணனையாளர் போன்று ஆந்திர செய்திகளை ஆறு ஆண்டுகளாகப் பகிர்ந்து வந்திருக்கிறார் திவாகர்.

    “ஆந்திரப்பிரதேசம் ஆத்திரப்பிரதேசமாக மாறியது ஏனோ” என்று ஆந்திரம்-தெலுங்கான பிரிவினைக்கு முன்னிருந்தே ஆந்திரா தெலுங்கானா சர்ச்சைகளை “அடுத்த வீட்டு ஆந்திராவை இப்போது ரணகளமாக்கும் தெலுங்கானா பிரச்னை” எனக் கடந்த ஐந்தாண்டுகளாகப் பதிவு செய்து வந்திருக்கிறார். மார்கழியில் ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் திருப்பாவை தமிழில் ஒலிப்பது, ஆந்திர மாநிலக் கோயில்கள், திருப்பதி பிரசாதம் – பங்கு விற்பனை, காளஹத்தி கோயில் தலைவாசல் கோபுரம் சுக்கு நூறாக இடிந்து விழுந்த காட்சி, தெலுங்கு எழுத்தாளர்கள் பற்றி, ஆந்திர உணவு, விசாகப்பட்டின தமிழ்ச்சங்க நடவடிக்கைகள் எனப் பல தகவல்களை இதுவரை பகிர்ந்து வந்திருக்கிறார். அவ்வாறு இதுவரை பதிவு செய்து வந்த அவரது அனைத்து அடுத்த வீட்டுப் பதிவுகளையும் ஒப்பிடும்பொழுது ஹூட் ஹூட் புயலினால் ஏற்பட்ட அழிவை விவரிப்பது அவருக்கு மிகவும் வேதனை தரும் நிகழ்வாக இருந்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இருப்பினும் தனது நேரடி அனுபவங்களை அவருடைய அடுத்த வீட்டில் ஏற்பட்ட அலங்கோலங்களை” “ஹூட் ஹூட் புயலின் தாண்டவம் – ஒரு நேரடி அனுபவம்”   என்று தமிழ் வெப்துனியா செய்தித் தளத்திலும், கூகுள் தமிழ்க் குழுமங்களிலும் அவர் பகிர்ந்து கொண்டது தொழில்முறை செய்தியாளர்களையும் பின்னுக்குத் தள்ளிய செயலாகும்.

    மிகச் சிறந்த எழுத்தாளரான திவாகரை பலர் வரலாற்று புதினங்கள் எழுதுபவராகவும் நன்கறிவர். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் வரலாற்றுப் புதினம் “வம்சதாரா” இவர் எழுதிய முதல் வரலாற்று நூல். தொடர்ந்து, சென்னை பழனியப்பா பிரதர்ஸ் பதிகப்பகத்தினரால் வெளியிடப்பட்ட “திருமலைத் திருடன்” என்ற பதினொன்றாம் நூற்றாண்டு சம்பந்தப்பட்ட வரலாற்றுப் புதினம், மதராசபட்டினத்தில் குண்டு வீசிய எம்டன் கப்பல் நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு “எஸ். எம். எஸ் எம்டன் 22-09-1914”  என்ற வரலாற்று நூல், “விசித்திர சித்தன்”, “தேவன் நூறு”, “நம்ம ஆழ்வார் நம்மாழ்வார்”, “ஆனந்த விநாயகர்” என்ற தெலுங்கில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட நூல், சோழ மன்னன் குலோத்துங்கனின் காலக் கதையான “அம்ருதா” என்ற சமீபத்திய வரலாற்று நூல் வரை பலநூல்களை வெளியிட்டுள்ளார்.

    V. Dhivakar3

    திவாகரின் தமிழ்ப்பணி இலக்கியபபடைப்புகள் என்ற வட்டத்தில் அடங்கியதல்ல. அவர் தேவாரத்தை தெலுங்கில் மொழிபெயர்க்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். விசாகப்பட்டினத்தின் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகவும் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொண்டாற்றி வருகிறார். அங்கு தமிழ்ச்சங்கத்தில் வள்ளுவர் சிலை நிறுவிய பணியிலும் பெரும் பங்காற்றினார். “வெளியூரில் தமிழ்ச்சங்கம் வைத்து அதை சரியாக வளர்ப்பது எப்படி ?…..இப்படி யாராவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல நான் உடனே பள்ளி மாணவன் கையை தூக்குவது போல தூக்கி விடுவேன்” என்று நகைச்சுவையாக தனது தமிழ்ச்சங்க பணிகள் பற்றியும் குறிப்பிடுகிறார் திவாகர்.

    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு ஆய்வுக்கட்டுரை வாசிக்க அழைப்பு வந்த பொழுது இவர் வாசித்ததமிழும் இந்திய தமிழ்ச்சங்கங்களும் என்ற ஆய்வுக்கட்டுரை நல்ல பல ஆலோசனைகளை முன் வைத்தது. அக்கட்டுரையின் முக்கியக் கருத்துகள் சுருக்கமாக கீழே வழங்கப்பட்டுள்ளது:

    […]

    இன்று இந்திய மாநிலங்களின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தமிழ்ச்சங்கங்கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. தமிழ்ச்சங்கங்களின் தலையாயப்பணி நிச்சயமாக தமிழைப் பேணிப்பாதுகாப்பதில்தான் இருக்கவேண்டும். இதனை இங்கே தயங்காது ஏன் கூறுகிறேன் என்றால் பல தமிழ்ச்சங்கங்களின் தற்போதைய நிலையை நன்கு அறிந்தவன் நான். அந்த தமிழ்ச்சங்கங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமானால் திரைப்படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளோ, பிரபலங்களின் பாடல் கச்சேரிகளோ அல்லது கூத்தாட்டங்களும், குதியாட்டங்களும் நிறைந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகளோ நடத்தப்படவேண்டிய காலகட்டத்தில் உள்ளனர் சங்க நிர்வாகிகள். தமிழ் மக்களுக்கு எழுச்சி ஊட்டும் நிகழ்ச்சிகள் கேளிக்கை நிகழ்ச்சிகள் மட்டுமே என்ற சூழ்நிலை உள்ள காலகட்டமிது. அதனால் இந்தக் கேளிக்கை நிகழ்ச்சிகள் அனைத்தும் அதிக அளவில் நடத்தப்படுகிறது. இந்தக் கேளிக்கை நிகழ்ச்சிகளை ஒரேயடியாகக் குறைக்காமல் மெல்ல மெல்ல நம் மக்களுக்குத் தமிழில் ஆர்வம் காட்டும் விஷயங்களாக நிகழ்ச்சிகளை அவர்கள் முன் எடுத்துச் செல்லவேண்டும்.

    V. Dhivakar2
    […]
    இந்தத் தமிழ்ச்சங்கங்களுக்குத் தாயக தமிழகத்தில் அரசு தகுந்த அங்கீகாரம் அளிக்கவேண்டும். தாயகத் தமிழகத்தில் தமிழ்ச்சங்க ஆணையம் ஒன்று நிறுவப்படவேண்டும். இந்த ஆணையத்தின் கீழ் ஆங்காங்கே பதிவுசெய்யப்பட்ட தமிழ்ச்சங்கங்கள் அங்கத்தினராகி தமிழக அரசின் உதவியோடு செயல்படும்போது, அதுவும் தமிழுக்காக செயல்படும்போது நம் தமிழன்னை நம்மை எப்போதும் வாழ்த்திக் கொண்டே இருப்பாள்.
    [ http://www.aduththaveedu.blogspot.com/2010/06/blog-post.html ]

    கவியரங்கில் பங்கு கொண்டு கவிதை வாசிக்கும் திவாகர் ஒரு கவிஞரும் கூட, பிடுங்கப்பட்ட எனது பல் என்னைப் பார்த்து முறையிட்டுக் கேட்ட கேள்விதான் இது என்று விளக்கமுறைத்து “பிரிவு நிரந்தரமே” என்று இவர் வழங்கிய இவரது கவிதையில் ஒரு பகுதி …

    ஒன்றா இரண்டா
    ஐம்பது வருட பந்தம்
    உன்னோடு என் உறவு
    இனியும் வேண்டுமோ

    எப்படியெல்லாம் இருந்தோம்
    எண்ணிப்பார்க்கிறேன் நான்
    அழுகை வருகிறது எனக்கு
    அன்பான அந்தக் காலகட்டம்

    பல்லின் முழு முறையிடலையும் (முழுக்கவிதையும்) இங்கு காணலாம் – http://www.vamsadhara.blogspot.com/2009_03_18_archive.html

    இந்த நகைச்சுவைக் கவிதையைப் போன்றே, இவரது தொலைபேசி உரையாடல் வழி நிகழ்வுகளை விவரிக்கும் நகைச்சுவைக் கதைகளும் திவாகரின் எழுத்தின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டும். வரலாற்று நூல், வலைப்பதிவுகள், நகைச்சுவை, கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், தமிழ்ச்சங்கப் பணிகள் என தமிழுக்கு இவர் ஆற்றிவரும் பங்களிப்புகள் தொடரட்டும் என வாழ்த்தி வல்லமைக் குழுவினர் எங்களுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • குறளின் கதிர்களாய்…(44)

    -செண்பக ஜெகதீசன்

    கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
    குத்தொக்க சீர்த்த விடத்து. (திருக்குறள்-490: காலமறிதல்)

    புதுக் கவிதையில்…

    காலமறிந்து
    கடமையாற்று…

    உறுமீன் வரும்வரையில்                      heronandfish
    பொறுமையாயிருந்து,
    உற்ற தருணம் வரும்போது
    மீனைக்
    கொத்தி எடுத்திடும்
    கொக்கு போலிரு…!

    குறும்பாவில்…

    காலம் வரும்வரைக் காத்திரு
    கொக்கு போல,
    கடமையாற்று அது கொத்துவதுபோல…!

    மரபுக் கவிதையில்…

    உரிய தருணம் வரும்வரையில்
    ஓய்வாய் நின்றே காத்திருந்து,
    பெரிய மீனாய் வந்ததுமே
    பற்றிடக் கொத்தும் கொக்கினைப்போல்,

    அரிய உலக வாழ்வதிலே
    அவசரம் ஏதும் கொள்ளாமல்,
    தெரிந்தே உரிய தருணமதில்
    தொடங்கிடு, செயல்படு வென்றிடவே…!

    லிமரைக்கூ…

    பொறுமையாயிருந்து தக்கதருணத்தில் கொத்தும் கொக்கு,
    காலமறிந்து செயல்படாமல்
    கடமையாற்றித் தோல்வியடைந்தால் நீயொரு மக்கு…!

    கிராமிய பாணியில்…

    காத்திருக்குது காத்திருக்குது
    கொக்குத்தான் காத்திருக்குது,
    ஒத்தக்காலுல காத்திருக்குது
    கொத்தாமத்தான் காத்திருக்குது..

    நல்லமீனு வரும்போது
    நழுவாமத்தான் கொத்திடுமே…
    கொக்கப்பாத்து தெரிஞ்சிக்க
    காலம்பாத்து நடந்துக்க,
    நல்ல
    காலம்பாத்து நடந்துக்க…

    காத்திருக்குது காத்திருக்குது
    கொக்குத்தான் காத்திருக்குது…!

     

    Share
  • இடைவெளி தேவையா?

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    grandparentsமுதியவர்களை இளையவர்கள் தமக்கு முட்டுக்கட்டைகள் என்று எண்ணுகிறார்கள். அவர்களுக்கு அவசரம்; இவர்களுக்கு ஆறுதல். அவசரம் என்பது சிந்திக்க விடாது. எதையும் ஆறுதலாக எடுக்கும் பொழுது பல தெளிவுகள் ஏற்பட வாய்ப்புண்டு அல்லவா? இதனை இளமை ஏற்க மறுக்கிறது. இதைப்பார்க்க முதுமை மறுகுகிறது. எடுத்ததற்கெல்லாம் ஏதாவது சொல்லியபடியே இருக்கிறார்களே என எரிச்சல்படுகிறார்கள் இளையவர்கள். அவர்கள் அப்படிச் சொல்வதற்குக் காரணம் அவர்களுக்கு முன்பு கிடைத்த பாடமாகும். தமக்கு ஏற்பட்ட கசப்புகள், மனச்சங்கடங்கள், மீண்டும் இளையவர்களுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்னும் நல்ல எண்ணமே இதற்கான காரணமாக இருக்கிறது எனலாம்.

    பாட்டிகள், தாத்தாக்கள் எல்லாம் பிள்ளைகளுக்கு நல்ல கதைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவார்கள். அந்தக் கதைகளில் அருமையான பயனுள்ள செய்திகள் எல்லாம் உள்ளே இருக்கும். அவையாவும் வாழ்க் கையில் பிரச்சினைகள் வரும் பொழுது தீர்வு காண்பதற்கு உதவி நிற்கும் தன்மை வாய்ந்தனவாகும். எனவே பாட்டி தாத்தாவை ஒதுக்கிவிடுவது என்பது முறையற்ற செயலேயாகும்.

    ஒளவை பாட்டிதான்…ஆனால் அவரை ஒதுக்கினோமா? அவரின் “அறஞ்செய விரும்பு“ தொடர்தரும் அருங்கருத்துக்கள் எமக்கெல்லாம் அரணாக இருக்கிறதல்லவா?

    பாட்டி வைத்தியம் பலவித பக்குவத்தை அளிப்பதையும் பார்க்கிறோம் அல்லவா? குழந்தைகள் அழும்; ஏன் அழுகின்றன என்று சில வேளைகளில் கண்டுபிடிக்கவே முடியாது போய்விடும். வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் விக்கி விறைத்துவிடுவார்கள். அங்கு ஒரு பாட்டி இருந்தால்…அவருக்கு அதற்கான காரணமும் தெரியும். அதற்கான பரிகாரமும் தெரியும். பாட்டியின் பக்குவத்தால் பதறித் துடித்த குழந்தை பக்குவமாவதுடன் சிரித்து விளையாடவும் தொடங்கிவிடும். வீட்டில் உள்ளவர்களும் ஆறுதல்பட்டு நிற்பர்.

    இரவில் தயிர் சாப்பிடக்கூடாது. இரவில் கீரை சாப்பிடக்கூடாது என்று முதியவர்கள் எச்சரிப்பார்கள். அதனை இளையோர் கிண்டல் பண்ணி அவர்களின் எச்சரிக்கையையும் புறந்தள்ளி விட்டுச் சாப்பிடுவார்கள். அதன் பின்பு அவர்கள் அவஸ்தைப்படும் பொழுதுதான் முதியோரின் எச்சரிக்கை பற்றி உணர்ந்து கொள்ளுவார்கள்.

    முதியவர்கள் சொல்லுவது அத்தனையும் மூடப்பழக்கம் என்றும், தேவையற்றன என்றும் எண்ணுவதே இளையவர் வழக்கமாகி விட்டது. அதனால் அவர்கள் எதைச் சொன்னாலும் காரண காரியம் பாராது உடனே ஒதுக்கித்தள்ளி விடுவதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டார்கள்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 141

    மலர் சபா

    மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை

    மாதவியின் முடங்கலைப் பார்த்துக் கோவலன் உண்மை உணர்தல்

    அதன் பின் கௌசிகன்
    கோவலனைப் பிரிந்து வருந்துதலால்
    அழிவைத் தரும் நெஞ்சத்தையும்
    நிறைந்த காம நோயை உடையவளுமாகிய   sankailakkiyam
    பூங்கொடி போன்ற மாதவியின் மடலைக்
    கோவலனிடம் கொடுத்தான்.

    தாம் அவளுடன் கூடி வாழ்ந்த காலத்தில்
    அவள் கூந்தலில் இட்ட புனுகு நெய்யின் மணத்தை
    அம்மடலின் மீது இருந்த
    மண் இலச்சினை உணர்த்தியது.
    எனவே அதைப் பிரிக்க இயலாதவனாய்
    மீண்டும் மீண்டும் நுகர்ந்தான்.

    பின் அதனுள் பொதிந்திருக்கும்
    அவள் கருத்துகள் அறிய வேண்டி
    இலச்சினை அகற்றி அதைப் பிரித்துப்
    படிக்கத் தொடங்கினான்.

    மடலில் எழுதியிருந்தவை:

    அடிகளே! உம் திருவடிகள் இருக்கும்
    திசை நோக்கி வணங்குகின்றேன்.
    தெளிவில்லாத என் புன்மொழிகளைத்
    தாம் கேட்டருள வேண்டும்.
    குலப்பிராட்டியாம் கண்ணகியோடு
    இரவோடு இரவாக யாரும் அறியாவண்ணம்
    நீவிர் சென்றதற்குக் காரணம்தான் என்ன?

    இதை உணராமல் என்னுள்ளம்
    செயலற்றுப் போகின்றது.
    இக்குழப்பத்தைப் போக்க வேண்டும்.
    குற்றம் நீங்கிய அறிவுடைய மேலானவரே!
    உம்மைப் போற்றுகின்றேன்!

    இதற்கு நான்தான் காரணம் எனில்,
    “என் சொல் குற்றமற்ற சொல்” என்று கருதி
    அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட வேண்டும்.

    இங்ஙனம் அவள் எழுதிய வார்த்தைகள் கண்டு
    அதன் பொருள் உணர்ந்து
    ‘மாதவி ஒரு குற்றமும் அற்றவள்;
    இது எல்லாம் எம் தீவினை போலும்’
    என்றெண்ணிய கோவலன்
    அம்மடலை மீண்டும் மீண்டும் வாசித்தான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 80 – 95
    http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–

    படத்துக்கு நன்றி:
    http://www.gunathamizh.com/2011/03/what-she-said.html

     

    Share
  • மழையும் மெளனமும்!

    -கே. ரவி

    மெளனத்தைக் குடையாக விரித்துக் கொண்டு
    மழைமேகம் நடந்துவரக் காற்று வந்து
    கெளரவமாய்க் கைப்பிடித்துக் கூட்டிச் செல்ல    Lightning
    ககனத்தில் ஒருபாதை திறக்க ஆஹா
    சவுக்கைப்போல் வெட்டியது மின்னல் சட்டச்
    சடசடவென் றதிர்வெடிகள் எக்கச் சக்கம்
    மெளனத்தின் உடலெல்லாம் பொத்தல் பொத்தல்
    மழையோடு மெளனமுற வாட லாமா?

    மல்லாந்து படுத்திருந்தேன் வானம் இல்லை
    மாறாக மின்விசிறி சுழலக் கண்டேன்
    சொல்லாழ்ந்த கற்பனையா மாயச் சூதா
    சூழ்ச்சிவலை பின்னுபவள் யாரோ எங்கும்
    கல்லாத வித்தையிது கவிதை யாகக்
    கலகலக்கும் உற்சாக வெள்ளம் இங்கே
    இல்லாத உண்மைக்குச் சாயம் பூசி
    இதயத்தைக் கொள்ளையிடும் ஜாலக் காரி!

    எனக்குள்ளே ஒருகனவா இல்லை நானோர்
    ஏகாந்தக் கனவுக்குள் இருக்கின் றேனா?
    தனக்குவமை இல்லாத ஒருநி லைக்குத்
    தள்ளாடிக் கொண்டேநான் நடக்கின் றேனா?
    மனக்குளத்தில் தூறெடுக்க மலர்நீட் டத்தை
    மகோன்னதத் தூரிகையாய் மாற்றி னேனா?
    கனக்கிறது பனித்துளியும் காலை வேளை
    கண்திறக்கக் காத்திருக்கும் புல்நான் தானா?

    சொல்லடீ சொல்லடியென் றுலுக்கி னானே
    சொன்னாயா சொல்லாமல் போக்குக் காட்டிக்
    கொல்லாமல் கொன்றாயா உணர்ச்சி கள்நீ
    கொய்துவிளை யாடுகின்ற கொய்யாத் தோப்பா?
    புல்லென்று நினைக்காதே பூகம் பத்தைப்
    புன்னகையோ டெதிர்கொள்ளத் தெரிந்த வன்நான்
    நில்லென்று கூவுகிறேன் நின்று காட்டு
    நெறிஞ்சியிலுன் பாதங்கள் சிவந்தால் என்ன?

     

    Share
  • ஆண்டுக் கணக்கா யுகக்கணக்கா?

    -கே. ரவி

    ஆண்டுக் கணக்கா யுகக்கணக்கா
    தோண்டத் தோண்ட வளர்கிறதே
    வானும் புவியும் பிரிந்த போது
    நானும் நீயும் பனியும் தீயும்
    கடல்பி ரிந்து கலைந்த போது
    நீயும் நானும் நீரும் நிலமும்
    பாரி வள்ளல் ஏறி வந்த
    தேரே உன்மேல் படர்ந்தி ருந்த
    முல்லைக் கொடியை மறந்து விட்டாயா?

    மரப்பொந் தாய்நான் காட்டை எரிக்கும்
    அக்கினிக் குஞ்சாய் அமர்ந்தி ருந்தாய்
    அள்ளி எடுத்துனை அப்படி யேயென்
    மனத்துக் குள்ளே வைத்தா னேயவன்
    மறக்க முடியுமா பிரிந்துவிட் டோமே
    யார்பிரித் தார்கள் ஏன்பிரிந் தோம்நாம் – ஓ
    மானிட இருட்டின் மாயா ஜாலம்
    விடியத் தானே போகிறது
    வெளிச்சம் வந்து விட்டால்
    உலகத் துக்கே தெரிந்துவிடும்
    நீதான் எந்தன் நிழல் என்று!

    Share
  • நீங்கவேண்டிய மனவடிவம்…?

    -நாகினி

    ஒளியாய் வளியாய்
    விண்ணாய்  மண்ணாய்
    செடியாய் கொடியாய்                                  nature
    ஓங்கிய விருட்சமாய்
    மலையாய் அலையாய்
    விளங்குவோன் என
    இயற்கை வடிவாய்
    ‘உன்னை’ப்
    போற்றித் துதித்த
    கரம் கொண்டே
    இயற்கையைச் சிதைக்கும்
    வன்முறைச் செயலுக்கும்
    காரணியாய் விளங்குவோன்
    ‘நீ’யே எனப்
    பழி சுமத்தி
    நேரத்திற்கொரு நிறம்
    மாறும் பச்சோந்தி
    மன வடிவு நீங்கி
    உள்ளொன்று வைத்துப்
    புறமொன்று பேசாத
    உண்மைப் பகுத்தறிவு குறையா
    மனித(ம்) வடிவாய்ப் பாரில்
    உலவிட உரமாகும்
    எங்கும் நிறை ‘இறை’யே போற்றி!

     

    Share
  • அந்த மாப்பிள்ளை காதலிச்சான் …

    — கவிஞர் காவிரிமைந்தன்

    panam padaithavan
    மெல்லிசை மன்னர்கள் என்கிற பட்டம் சென்னை என்.கே.டி.கலா மண்டபத்தில் வழங்கப்பட்டது. நெற்றியிலே ஒரு திலகம் எப்படித் திகழுமோ அப்படி கவிஞர் வரையும் பாடல் வரிகளிலும் சில நட்சத்திரமாய் மின்னும். எழில் முகம், செவிகள், என ஏனைய இடங்களிலிருந்தாலும் பளிச்சென்று படுவது அந்தத் திலகம்தான்!

    அதுவும் அந்நாளில் கோலோச்சியிருந்த கவிஞர் கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகிய இருவருக்கும் திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மெல்லிசை மன்னர்கள் பட்டம் வழங்கியபோது ஆற்றிய உரையில் கற்பகம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலைச் சுட்டிக்காட்டி புதிதாக வந்துள்ள கவிஞர் வாலி அவர்கள் எழுதிய இந்த வரிகள் தன்னைக் கவர்ந்தன என்று சபையில் எடுத்துரைத்து ‘மைவிழியில் வடம் புடிச்சான்’ என்கிற வரியை ரசித்துப்பாராட்டினார். இது கவிஞர் வாலி அவர்களின் கற்பனைக்கு கண்ணதாசன் தந்த பாராட்டு மொழியாகும்!

    இந் நிகழ்ச்சியில் விருதினை வாங்கிட வருகை தந்த மெல்லிசை மன்னர்கள் இருவரையும் அடையாளம் தெரியாததால் சபாக்காரர் உள்ளே விடவில்லை என்பதும் பிறகு அடையாளம் தெரிந்த ஒரு திரைப்பிரமுகர் தலையிட்டு அவர்களை உள்ளே அழைத்துச் சென்றதும் மறக்க முடியாதது! அந்த அளவு மக்கள் மத்தியில் வரும்போதும் எளிமையாக தோற்றமளித்த காரணத்தால் இப்படி ஒரு சம்பவம் நடந்தது!

    ‘பணம் படைத்தவன்’ திரைப்படத்தில் கவிஞர் வாலி அவர்களால் இயற்றப்பட்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களும் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா அவர்களும் இணைந்து நடித்த காட்சியில் பி.சுசீலா குரலில் இழைந்துவரும் இப்பாடல் தருகின்ற மயக்கம் கொஞ்சமல்ல! கவிஞரின் கற்பனை – பெண்மையின் குணங்களில் நான்கும் பேதையவளை படுத்தும்பாட்டை பாட்டில் நாகரீகச் சொல்லெடுத்து நயமாக வடித்துத் தந்துள்ளார்! பெண் தானிருக்கும் தனிமையில் பாடத்துவங்கும் இந்தப் பாட்டின் இடையே கதாநாயகன் வருவதையும் கவனியாமல் தொடர, நாயகனும் பாடலோடு இணைந்து டி.எம்.செளந்திரராஜன் குரலில் மெருகூட்டிய இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் ஒருவித மயக்கம் வந்துவிடுகிறது பாருங்கள்! இப்போது பாடலை மறுபடி கேளுங்கள்!!

    http://youtu.be/ceF3fMieGqY
    காணொளி: https://www.youtube.com/watch?v=UUrzzPjerag

     

    படம்: பணம் படைத்தவன்
    பாடல்: வாலி
    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    குரல்: டி எம் எஸ், பி. சுசீலா
    ………………………………………………………………

    அந்த மாப்பிள்ளை காதலிச்சான்
    கையைப் புடிச்சான்
    என்னை கையை புடிச்சான்
    அங்கே முன்னால் நின்றேன்
    பின்னால் சென்றேன் வா வா என்றான்
    கூடவே வா வா என்றான்

    ஊர் அடங்கக் காத்திருந்தான்
    ஓய்வில்லாமே பார்த்திருந்தான்
    ஊர் அடங்கக் காத்திருந்தான்
    ஓய்வில்லாமே பார்த்திருந்தான்
    பால் பழத்தை வாங்கி வந்தான்
    பள்ளியரையின் வாசல் வந்தான்
    வெக்கதிலே நானிருந்தேன்
    பக்கத்திலே தானிருந்தான்

    அந்த மாப்பிள்ளை காதலிச்சான்

    கண்ணுறங்கப் பாய் விரிச்சான்
    கொடி இடையில் காய் பறிச்சான்
    கண்ணுறங்கப் பாய் விரிச்சான்
    கொடி இடையில் காய் பறிச்சான்
    குத்து விளக்கைக் கொறச்சி வைச்சான்
    கொதித்திருந்தேன் குளிர வைத்தான்
    வெட்கத்திலே நானிருந்தேன்
    பக்கத்திலே தானிருந்தான்

    ஓஓஓஓஓஓஓஓஓஓ

    மண்ணளந்த பார்வை என்ன
    மயங்க வைத்த வார்த்தை என்ன
    மண்ணளந்த பார்வை என்ன
    மயங்க வைத்த வார்த்தை என்ன
    முத்து நகையின் ஓசை என்ன
    மூடி வைத்த ஆசை என்ன
    என்னருகே பெண்ணிருந்தா
    பெண்ணருகே நானிருந்தேன்

    அந்தப் பூங்கொடி பூத்திருந்தா காத்திருந்தா
    என்னைப் பார்த்திருந்தா
    அங்கே கண்ணால் கண்டேன் பின்னால் சென்றேன்
    நீ தான் என்றேன் வாழ்வே நீ தான் என்றேன்

    கட்டழகைப் பார்த்து நின்னேன்
    கண்ணிரண்டில் பாடம் சொன்னேன்
    கட்டழகைப் பார்த்து நிண்னேன்
    கண்ணிரண்டில் பாடம் சொன்னேன்
    மொட்டு சிரித்தால் விட்டுக் கொடுத்தாள்
    தொட்டுக் கொடுத்தேன் தானும் கொடுத்தாள்
    அம்மம்மா என்ன சுகம்
    அத்தனையும் கன்னி சுகம்

    அந்தப் பூங்கொடி பூத்திருந்தா காத்திருந்தா
    என்னைப் பார்த்திருந்தா
    அங்கே கண்ணால் கண்டேன் பின்னால் சென்றேன்
    நீ தான் என்றேன் வாழ்வே நீ தான் என்றேன்

    vaali(1)visramtmsps3பணம் படைத்தவன்

     

    Share
  • வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! அணுமின் உலை எதிர்ப்பாளிகள்! அணுமின் உலை அபாய எதிர்பார்ப்புகள்!

    picture-1

    (Anti-Nuclear Power Activists in India)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    http://jayabarathan.wordpress.com/2011/11/04/anti-nuclear-power-activities/

    முன்னுரை: ‘வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! ‘ என்று முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை நேரு காலத்தில், தமிழகம் புறக்கணிக்கப் படுவதை அடுக்கு மொழியில் முழக்கித் தமிழருக்குச் சுட்டிக் காட்டினார்! இந்தியாவிலே தலைசிறந்த ஆய்வுத் தளங்களில் ஒன்றான, இந்திரா காந்தி அணுவியல் ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு கல்பாக்கத்தில் பலருக்குப் பணி அளித்துத் திறமை மிக்க விஞ்ஞானி களை, பொறிநுணுக்க வல்லுநர்களை உற்பத்தி செய்து வருகிறது! அணு உலை எதிர்ப்பாளிகள் ஞாநி, டாக்டர் இரமேஷ், புகழேந்தி போன்ற தமிழக அறிவாளிகள் இப்போது கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்கள் யாவும் புற்றுநோய் உற்பத்திக் கூடங்கள் என்றும் அவை தமிழகத்துக்குத் தேவை யில்லை என்றும் அவற்றை நிரந்தரமாக நிறுத்தி மூடிவிடப் பறைசாற்றி வருகிறார்கள்!

    பாதுகாப்பான பாரத அணு உலைகளின் கதிர்வீச்சால் எந்தப் புற்று நோயும், அல்லது சந்ததி ஊனமும் பணியாளருக்கு இதுவரை உண்டான தில்லை! செர்நோபிள் அணு உலை போன்றோ அல்லது அணு ஆயுதங்கள் போலவோ, பாரத அணுமின் உலைகள் ஒருபோதும் வெடித்து மக்களுக்குப் பேரழிவை உண்டு பண்ண மாட்டா! அச்ச மின்றி பாரத அணு உலைகளில் ஆக்க உணர்வோடு பணி புரியக் கூரிய அறிவும், சீரிய திறனும், ஓங்கிய வல்லமையும் தமிழர் வசம் களஞ்சியம் போல் செழித்துக் கிடக்கிறது!

    மூர்க்க யானையைப் பார்க்கப் போன ஆறு குருடர்கள்!

    யானையின் பூத வடிவையும், மூர்க்கப் பண்பையும் கண்டு அஞ்சிய ஒருவர் அது எப்படி இருக்கிற தென்று பார்த்து வர ஐந்து குருடர்களை அனுப்பினார்! கால்களை நெருடி மிரண்ட குருடன் கோயில் தூணைப் போலிருக்கிறது யானை என்று கூறினான்! தும்பிக்கையை வருடிய ஒருவன் ‘ஐயோ! மலைப் பாம்பு போலிருக்கிறது யானை என்று அஞ்சி ஓடினான்! மூன்றாவது குருடன் முன்னும் பின்னும் அசையும் காதுகளைத் தடவி, வெஞ்சாமரை விசிறிகளைப் போன்றது யானை என்று வியந்தான்! படுத்துக் கிடந்த போது அதன் பூத உடலைத் தடவிய ஒருவன் பெரிய பாறாங்கல் போல இருக்கிறது யானை என்று மனம் பூரித்தான்! ஐந்தாவது குருடன் நீட்டிக் கொண்டிருக்கும் தந்தங்களை நீவி, யானைக் கூரிய ஈட்டியைப் போன்றது என்று வெகுண்டு ஒதுங்கினான்! யானையின் முழுத் தோற்றத்தையும், குணத்தையும் அவர்களில் ஒருவர் கூடக் கண்டு கொள்ள முடிய வில்லை! அதன் மூர்க்கக் குணத்தை மட்டும் அறிந்து தூரத்தில் நின்று நோக்கிய ஆறாவது நபருக்கு, யானையின் உறுப்புகளைப் பற்றியோ, பயிற்சி மூலம் அதன் வீரிய பண்பைத் திருத்த முடியும் என்ற அறிவோ அல்லது முறையுடன் பழகினால் அதனைப் பணி புரிய வைக்கலாம் என்றோ எதுவும் தெரியாமல் போனது!

    அனுப்பிய ஆறாவது நபர் ஐந்து குருடர்கள் கண்டு பிடித்துத் தந்த முரண்பாடான விளக்கங்களில் எதை எடுத்துக் கொள்வது என்று குழப்பம் அடைந்தார்! தனக்கு விருப்பான ஒருதிசைக் கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு, தன் கண்ணோட்டத்தில் இவ்விதம் எழுதி வெளியிட்டார்:- ‘மூர்க்கமான யானை மாந்தரை விழுங்கி விடும் மலைப் பாம்பு! அதன் அருகில் எவரும் செல்வது ஆபத்தானது! மனிதரைக் குத்திக் கொன்று விடும் கூரிய ஈட்டிகள் இரண்டு யானை யிடம் உள்ளன! அருகில் நடமிடும் நபர்களைக் கனத்த காலால் மிதித்து நசுக்கி விடும்! ‘ ஆறாவது அறிவாளி அனைத்தையும் சேர்த்து யானையைப் பற்றி வெளியிட்ட விபரங்களில் சில உண்மைகள் இல்லாமல் இல்லை! அதே சமயம் அவரது கூற்றில் பல தவறுகள் இருக்கின்றன!

    அணுமின் உலை எதிர்ப்பாளிகளின் குறுகிய பார்வைகள்

    அணுமின் உலை எதிர்ப்பாளிகள் கறுப்புக் கண்ணாடி அணிந்து, தூரத்தில் அஞ்சி நின்று கொண்டு பூதக் கண்ணாடி மூலமாகப் பார்த்து அணு உலைகளை ஆராய்ந்து வருகிறார்கள்! அல்லது அணு உலை நிகழ்ச்சிகளைக் காதால் கேட்ட இரண்டாவது நபர் வடிகட்டி எழுதிய சில சக்கைகளை எடுத்துக் காட்டுகிறார்கள்! அல்லது தெளிந்த பாலை விட்டு மேலாக மிதக்கும் மேலாடையை மட்டும் எடுத்துக் கொண்டு, அணுமின் உலைகளை எதிர்க்க வந்து விடுகிறார்கள்!

    பூகம்பத்தில் கூடங்குள ரஷ்ய அணு உலை பிளந்து விடும் என்று ஒருவர் கூச்சலிடுகிறார்! கடந்த முப்பது ஆண்டுளாக உலகில் இயங்கி வரும் 438 அணுமின் உலைகளில் எதுவும் பூகம்பத்தில் இதுவரைத் தகர்ந்து போக வில்லை! அடுத்தவர் கல்பாக்கம் அணு உலையில் விபத்தென்றால் சென்னை நகரமே அழிந்துவிடும் என்று அச்ச மூட்டுகிறார்! மற்றொருவர் கல்பாக்கம் அணு உலையில் பணி புரிவோருக்கும் அவரது குடும்பத்தாரும் புற்று நோய் தொற்றிக் கொள்கிறது என்று பயங்காட்டுகிறார்! அணு உலைக் கருகில் வாழ்பவருக்கும் அவரது சந்ததிகளுக்கும் ஆறு விரல்கள் முளைக்கும் என்று இன்னொருவர் வட்டாரப் பட்டியலைக் காட்டுகிறார்! இவை அனைத்தும் அணுமின் உலைகளில் உண்டாகும் கதிர்வீச்சால் ஏற்படும் உடற் தீங்குச் சம்பவங்களா என்பது ஐயப்பாட்டுக்கு உரியன!

    ஞாநி தனது ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரையில் வட்டாரப் பணியாளிகள் 15,025 பேரைச் சோதித்ததில் 167 நபர்கள் [1%-2%] புற்றுநோய் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்! புற்றுநோய்ப் புள்ளி விபரம் எடுக்கும் புத்திசாலிகள் முக்கியமான ஒரு விபரத்தைக் காட்ட வில்லை! அதை விட்டு விட்டார்கள்; அல்லது மறைத்து விட்டார்கள்; அன்றி அதைச் சேமிக்க மறந்து விட்டார்கள்! கல்பாக்க அணு உலை கட்டுவதற்கு முன்பாக அந்த வட்டாரத்தில் வாழ்ந்த 15,000 மாந்தரில் எத்தனை பேருக்கு அல்லது எத்தனை சதவீதம் புற்றுநோய் வந்திருந்தது என்று காட்டி யிருந்தால், இரண்டு சதவீதங்களின் கழித்தல் எண் கல்பாக்க அணு உலையால் உண்டானது என்று நிரூபித்துக் காட்டலாம்! அதுதான் முறையான, துல்லிய புற்றுநோய்ப் புள்ளி விபரம்! அவ்விதம் அவரது புள்ளி விபரங்கள் ஏனோ காட்டப்பட வில்லை!

    வட அமெரிக்க நாடுகளில் வழக்காட விழித்திருக்கும் ஓநாய்க் கூட்டம்

    சமீபத்தில் குறிப்பிட்ட சில ஃபயர்ஸ்டோன் டயர்கள் [Firestone Tires] அவற்றைப் பூட்டிய கார் வாகனங்கள் ஓடும் போது வெடித்து, வட அமெரிக்காவில் ஆயிரக் கணக்கான நபர்கள் மரண மடைந்தது வெளியானது. உடனே வாய்ப்புகளைப் பயன் படுத்தி ஓநாய்களைப் போல் தாவிய வழக்கறிஞர்கள் ஃபோர்டு மோட்டர் கம்பெனியின் [Ford Motor Company] மீது வழக்குப் போர் தொடுத்து பல மில்லியன் டாலர் நஷ்ட ஈட்டுத் தொகையைக் கறந்து விட்டனர். அது போல் அணு உலைகளால் புற்று நோய் மரணங்கள் பணியாளிகளுக்கு ஏற்படுவ தாகத் தெரிய வந்தால், அவற்றின் உரிமை யாளர்களை நீதி மன்றத்திற்கு இழுத்துப் போரிட்டு வழக்கறிஞர் கூட்டம் உறிஞ்சிக் குடித்து சக்கை யாக்கிவிடும்!

    தற்போது [2000 முடிவு வரை] அமெரிக்க நாட்டில் 104 அணுமின் உலைகள், கனடாவில் 12 அணுமின் உலைகள், பிரான்ஸில் 59 அணுமின் உலைகள், பிரிட்டனில் 35 அணுமின் உலைகள், ஜெர்மனியில் 19 அணுமின் உலைகள் [20-30] ஆண்டுகளாக இயங்கி மின்சாரம் பரிமாறி வருகின்றன. மேற்கூறிய மேலை நாடுகளில் பணி செய்வோர் எவருக்கும் அணு உலைக் கதிர்வீச்சால் புற்று நோய்களோ அன்றி வேறெந்த நோய் நொடிகளோ வருமாயின் அங்குள்ள வழக்கறிஞர்கள் உரிமை நிர்வாகத்தின் மீது வழக்குப்போர் தொடுத்து, பல மில்லியன் டாலர் நஷ்ட ஈடுத் தொகையைப் பறித்து விடுவார்கள்! அப்படிப்பட்ட வழக்குப் போர்கள் அமெரிக்காவிலோ, கனடாவிலோ, ஐரோப்பிய நாடுகளிலோ எந்த அணுமின் உலையின் கதிர்வீச்சால் தூண்டப் பட்டதாக இதுவரை அறியப்பட வில்லை!

    மரணப் புள்ளி விபரப்படி, அமெரிக்காவில் ஐந்தில் ஒருவர் தற்போது புற்றுநோயில் மாண்டு போகிறார்! 1970 முதல் 2000 ஆண்டு வரை கடந்த முப்பது வருடங்களில் சுமார் 12 மில்லியன் நபர் புற்று நோயில் மடிவார் என்று மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது! அதாவது ஆண்டு ஒன்றுக்கு 400,000 பேர் புற்று நோயுக்குப் பலியாவார்கள்! அவற்றில் இயற்கை, மற்றும் மானிடச் செயற்கைக் கதிர்வீச்சுப் புற்று நோய்களால் மாள்பவர் மட்டும் [3%] 10,000 பேர்கள்! அந்த 10,000 பேர் மரணத்தில் 104 அணுமின் உலைகளில் பணிபுரிபவரில் 40 பேருக்கு புற்றுநோய் வரலாம் என்று மதிப்பீடு அட்டவணை காட்டுகிறது. இதில் முக்கியமாகத் தெரிய வேண்டியது: ஏற்படும் புற்றுநோய் மரணங்களில் 97% அணு உலைக் கதிர்வீச்சால் உண்டானவை அல்ல!

    அணுவியல் துறைகள் வளர்ச்சிக்கு எதிர்ப்பாளிகள் முட்டுக்கட்டை!

    ‘வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! ‘ என்று முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை நேரு காலத்தில், தமிழகம் புறக்கணிக்கப் படுவதை அடுக்கு மொழியில் தமிழருக்குச் சுட்டிக் காட்டினார்! தற்போது பாரதத்திலே இரண்டாவது பெரிய அணுவியல் ஆராய்ச்சிக் கூடம், இரட்டை அணுமின் நிலையம், வேகப் பெருக்கி சோதனை அணு உலை கல்பாக்கத்தில் இயங்கி வருகின்றன! பாரதத்திலே மிகப் பெரும் 2000 MWe ஆற்றல் கொண்ட இரட்டை அணுமின் நிலையங்கள் கூடங்குளத்தில் உருவாகி வருகின்றன! ஞாநி, டாக்டர் இரமேஷ் போன்ற தமிழக அறிஞர்கள் தற்போது கல்பாக்கம், கூடங்குள அணுமின் நிலையங்கள் யாவும் கான்சர் உற்பத்திக் கூடங்கள் என்றும் அவை தமிழகத்துக்குத் தேவை யற்றவை என்றும் பறைசாற்றி வருகிறார்கள்! கல்பாக்கம், கூடங்குளம் மின்சக்தி அளிப்பதோடு, ஆயிரக் கணக்கான தமிழருக்கும், மற்ற மாநில மாந்தருக்கும் நிரந்த, தற்காலிக வேலைகளை அளித்துக் கொண்டிருக்கின்றன!

    பாரதத்தின் அணுவியல் விஞ்ஞானத்தின் முன்னேறத்தையோ, விண்வெளி ஏவுகணை வீச்சுகளையோ பழைமை வாதிகள் யாரும் முட்டுக்கட்டை போட்டு நிறுத்த முடியாது! அணுயுகமும், அண்ட வெளியுகமும் உலகெங்கும் ஓங்கி வளரும் போது, பாரதம் மாந்தரும் அவற்றில் சிறிதளவு பங்கெடுக்காமல் போனால், இந்தியா பின்தங்கிய நாடாக தாழ்ந்து போய்விடும்! அணுமின் உலைகளை எதிர்ப்பாளிகள் புறக்கணித்தாலும், அணுவியல் துறையில் முன்னணியில் நிற்கும் பாரதம், இன்னும் பல்லாண்டுகளுக்கு அணு மின்சக்தியை உற்பத்தி செய்யத்தான் போகிறது!

    யந்திர வாகனங்களில் ஏற்றுக் கொள்ளும் அபாய எதிர்பார்ப்புகள்

    மனிதர் தயாரித்த எந்த யந்திர சாதனமும், வாகனமும் மக்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கும் என்று எவரும் உத்திரவாதம் தர முடியாது! கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் ஆக்கப்பட்ட நீராவி எஞ்சின் அல்லது டீசல் எஞ்சின் கப்பல்கள், ரயில் வண்டிகள், சுழற் தட்டு அல்லது ஜெட் விமானங்கள், ராக்கெட் எஞ்சின் விண்வெளிக் கப்பல்கள் ஆகியவற்றில் சில வாகனங்கள், எப்போதா வது மனிதத் தவறாலோ அல்லது யந்திரப் பழுதாலோ விபத்துக் குள்ளாக நேரும்! அவைத் தரக் கட்டுப்பாடு முறையில் தயாரிக்கப் பட்ட உறுப்புகளால் அமைக்கப் பட்டாலும் அபாயங்களைக் குறைக்கும் குறிக்கோளில் வடிவாக்கப் பட்டவை! உதாரணமாக அமெரிக்காவில் பெரு வீதிகளில் காரில் பயணம் செய்வோர் அபாய எதிர்பார்ப்பு 3000 இல் 1. கடல் பயணத்தில் கப்பலில் செல்வோர் அபாய எதிர்பார்ப்பு 100,000 இல் 1. தீவிபத்துக்களில் மரணம் அடைபவர் அபாய எதிர்பார்ப்பு 25,000 இல் 1. தொடர் வண்டி ரயில் பயணத்தில் அபாய எதிர்பார்ப்பு 250,000 இல் 1. ஆகாய விமானப் பயணங்களில் ‘ஏற்கும் அபாய எதிர்பார்ப்பு ‘ [Acceptable Risk] 100,000 இல் 1 [1 in 100,000 chance of fatality per year].

    அனுதினமும் ஒரு மணி நேரத்தில் நூற்றுக் கணக்கான வாணிபத் துறை விமானங்கள் குறைந்தது (300-400) நபர்களைத் தூக்கிக் கொண்டு வானத்தில் ஐந்து மைல் உயரத்தில் பறக்கின்றன! எப்போதாவது மனிதத் தவறாலோ, யந்திரப் பழுதாலோ அன்றிக் காலநிலை முறிவாலோ விமானம் விழுந்து மாந்தர் பலர் உயிரிழக்கிறார்! ஆனால் அடுத்து விமானங்கள் பறக்காமல் போகின்றனவா ? அல்லது மக்கள் விமானத்தில் ஏறிப் பயணம் செய்ய அஞ்சுகிறார்களா ? இல்லை!

    மனிதருக்குப் பயன்படும் அல்லது மனித ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் ஆகாய விமானம், அண்டவெளிக் கப்பல், அணுமின் உலை ஆகியவை யாவும் ‘பூஜியப் பழுதுகள் ‘ அல்லது ‘ஏற்கும் பழுதுகள் ‘ [Zero or Acceptable Defects] என்னும் தரக் கட்டுப்பாடு நெறியில் [Quality Control & Assurance] தயாரிக்கப் பட்ட சாதனங்களைக் கொண்டு உருவாக்கப் பட்டவை! ஆகவே பணம் கொடுத்துப் பயணம் செய்ய ஒருவர் விமான ஆசனத்தில் அமரும் போது, விமானம் ஆக்கப்பட்ட ‘ஏற்பு அபாய எதிர்பார்ப்புக்கு ‘ [Acceptable Risks] உடன்படுகிறார்! அதே சமயம் விமான ஏற்பு அபாய எதிர்பார்ப்பை நம்பாதவர், ஏற்றுக் கொள்ளாதவர் விமானத்தில் பறக்க வேண்டியதில்லை! பதிலாக மெதுவாக ஊர்ந்து செல்லும் கப்பலில் செல்லலாம்! கப்பல் பயணத்தின் அபாய எதிர்பார்ப்பை நம்பாதவர், கடல் பயணத்துக்கு அஞ்சுபவர் எங்கும் போகாமல் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கலாம்!

    பணியாளருக்கு அளிக்கும் உயர்ந்த பயிற்சிகள், பாதுகாப்பு முறைகள்

    இந்திய அணுசக்தி நிர்வாகம் முதலில் தேர்ந்தெடுக்கும் போதே சிறந்த விஞ்ஞானிகளையும், உயர்தர எஞ்சினியர்களையும் பாரத மெங்கும் தேடிச் சலித்து எடுக்கிறது. 1957 ஆண்டு முதல் கடந்த 45 ஆண்டு களாக ஒவ்வோர் ஆண்டிலும் குறைந்தது 250 நபர்களைத் [50 எஞ்சினியர், 50 பெளதிக, 50 இரசாயன, 50 உயிரியல், 50 உலோக வியல் விஞ்ஞானிகள்] தேர்ந்தெடுத்து தனித் தனியாக ஓராண்டுக்குப் அணுவியல் விஞ்ஞானம், அணுவியல் இரசாயனம், அணுக்கருப் பொறியியல், கதிரியக்கத்தின் நன்மை தீமைகள், பாதுகாப்பு முறைகளில் கல்வி புகட்டப் படுகிறது. கல்லூரி போல் தேர்வுகளும் வைக்கப்படும். 2002 ஆண்டு வரைப் பயிற்சி பெற்ற 11250 [45×250=11250] வல்லுநர்களைப் ‘பம்பாய் அணுசக்தி பயிற்சிக் கூடம் ‘ [Atomic Energy Training School, Bombay] பாரத அணுவியல் துறைகளில் பணி செய்யத் தயாரித்துள்ளது. அவர்களே அனைத்து அணுவியல் துறைச்சாலைகள், அணு உலைகள், அணுமின் உலைகள், வேகப் பெருக்கி அணு உலை, புளுடோனியம், யுரேனியம் இரசாயனத் தொழிற்சாலைகள் ஆகியவற்றை இப்போது இயக்கி வருகிறார்கள்.

    அத்துடன் ஒவ்வொரு அணுமின் உலைகளிலும் தனியாகக் குறிப்பிட்ட பயிற்சிகளைப் பணியாளிகளுக்கு அளித்து மனிதத் திறமைகள் கூர்மை யாக்கப் படுகின்றன. கதிரியக்கத்தைக் கையாள, அணு உலையின் தளங்கள் நான்கு கதிர்வீச்சு அரங்கு களாகப் [Zone-1, Zone-2, Zone-3, Zone-4] பிரிக்கப் பட்டுள்ளன. அரங்கு-1 நிர்வாகத் துறையினர் நடமாடும் தூய தளங்கள்; உணவு அருந்தும் அறைகள். அரங்கு-2 மிதமான கதிர்வீச்சு கொண்ட தளங்கள். ஆட்சி அறை, பராமரிப்புத் தளங்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவை. வீரிய கதிர்வீசும் சாதனங்கள் பராமரிக்கப் படும் தளங்கள் அரங்கு-3 நிலையைப் பெறுபவை. அரங்கு-4 இல் அணு உலை, தீய்ந்த எரிக்கோல்கள் சேமிப்புத் தடாகம் [Spent Fuel Storage Pool] ஆகியவை அமைக்கப் பட்டுள்ளன. அரங்குகளின் எல்லைகளில் அழுத்தமான நிறக் கோடுகளில் தரையில் வரையப் பட்டு, அணிய வேண்டிய பாதுகாப்பு உடைகள், கவசங்கள் ஆகியவை அறிக்கைப் பலகையில் குறிக்கப் பட்டு, எச்சரிகை விதிகள் காணப்படும்.

    அணுமின் உலை அணுகுண்டைப் போல வெடித்துப் பேரழிவை உண்டாக்குமா ?

    ஜப்பான் ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்களில் வெடித்த அணு குண்டுகளுக்கும், மின்சாரம் பரிமாறும் அணு உலைகளுக்கும் பெருத்த மாறுபாடுகள் உள்ளன! செர்நோபிள் ரஷ்ய அணு உலையில் உண்டான வெடிப்பு அணு குண்டுகள் போல நியூட்ரான் பெருக்கம் மீறி அணுக்கருப் பிளவுகளால் ஏற்பட வில்லை! அணு உலையின் தணிப்பு நீர் மூலக்கூறுகள் கடும் வெப்பத்தால் நீராவி ஆகி, உலோகத்துடன் கலந்து மின்னியல் பிரிவு பட்டு, ஏராளமான ஹைடிரஜன் வாயு கிளம்பி, எப்போதும் தீக்கனலாய்ச் சிவக்கும் கரித்திரள் கட்டியின் உஷ்ணத்தில் ஆக்ஸிஜனுடன் மூர்க்கமாய் இணைந்ததால் பயங்கர வெடிப்பு ஏற்பட்டது! அணுகுண்டு போல அணு உலைகள் வெடித்து வீடுகளையும், கட்டடங்களையும் தகர்த்துப் பேரழிவை உண்டாக்க மாட்டா! அணுகுண்டில் கட்டு மீறிப் பெருகும் அணுக்கரு இயக்கங்கள் வேக நியூட்ரான்களால் தூண்டப் படுபவை! கல்பாக்கம் வேகப் பெருக்கி அணு உலையைத் தவிர, பாரதத்தின் மற்ற எல்லா அணுமின் உலைகளும் மெது வேக நியூட்ரான் இயக்கங்களால் வெப்ப சக்தியை ஆக்குபவை!

    அணுகுண்டுகளில் யுரேனியம்235 [Close to 100% purity] அல்லது புளுடோனியம்239 ஆகிய அணுப்பிளவு உலோகங்கள் [Fissionable Materials] உபயோகமாகி, எந்த வித மிதவாக்கியும் [Moderator to reduce Neutron Energy] இல்லாது வேக நியூட்ரான்கள் அவற்றைத் தாக்கிப் பேரளவு வெப்ப சக்தி, வெடிப்பு, கதிரியக்கப் பொழிவுகளும் பொங்கிப் பேரழிவு உண்டாகுகிறது!

    ஆனால் வேகப் பெருக்கியைத் [Fast Breeder Reactor] தவிர மற்ற பெரும்பான்மை யான வெப்ப அணு உலைகளில் [Thermal Nuclear Reactor] பயன்படும் எரிபொருள்: [(0.7%-3%) Fissionable Uranium235 or (2%-3%) Plutonium]. எளிய நீர் அல்லது கனநீர் மிதவாக்கியாக [Light Water or Heavy Water Moderator] உபயோகமாகி வேக நியூட்ரான் சக்தி மிதமாக்கப்பட்டு வெப்பப் பிளவு இயக்கத்தில் [Thermal Fission Reaction] மட்டுமே சக்தியை உண்டாக்குகிறது! வேகப் பெருக்கி அணு உலைகளில் மிதவாக்கி இல்லாது வேக நியூட்ரான் இயக்கம் நிகழ்ந்தாலும், எரிபொருளின் செறிவு (2%-3%) புளுடோனியம்239 அல்லது (2%-3%) யுரேனியம்233 மிகக் குறைந்த அளவில்தான் பயன்படுகிறது! ஆதலால் பாரதத்தின் எந்த அணு உலையிலும் அணுகுண்டு போல் நியூட்ரான் இயக்கத்தால் பெரு வெடிப்போ அன்றிக் கதிர்வீச்சுப் பொழிவால் சுற்றுப்புற பேரழிவோ எதுவும் நிகழவே நிகழாது!

    இந்திய அணுமின் உலைகளில் பணி செய்யப் பாதுகாப்பு உறுதி

    பாரத அணுவியல் துறைகளின் உள்ளே பணிபுரியும் நபர்களுக்குக் கதிர்வீச்சுப் பாதுகாப்பு அளிப்பதுதான் நிர்வாகிகளின் முதல் பணி! முக்கியப் பணி! அடுத்த இரண்டாம் பணி, அணுவியல் துறைகளைச் சுற்றி வாழும் பொது மக்களைக் கதிர்வீச்சு தாக்குதலிலிருந்து காப்பது! சூழ்மண்டலக் காற்று, நீர்வளம், நிலவளம், தாவரங்கள் ஆகிய வற்றைக் கதிர்க் கசிவுகளிலிருந்து காப்பது! இவ்விரண்டு பணிகள் சரிவரச் செய்யப் பட்டு வருகின்றனவா என்று அனுதினம் 24 மணி நேரமும் கண்காணித்து மேற்பார்ப்பது, ‘உடல்நலப் பெளதிக வாதிகள் ‘ [Health Physicists]. உடல்நலப் பெளதிகக் குழுவினர்தான் பிலிம் பாட்ஜ்களை [Film Badges] பணியாளிகளுக்கு அளித்துச் சோதித்து வருபவர். அனுதினமும் சூழ்மண்டலக் காற்று, நீர், நிலத்தின் கதிர்த் தீண்டல்களைச் சோதித்து வருபவர். பணி புரியும் உடல்நலப் பெளதிக வாதிகள் நிலையத்தைச் சேர்ந்தவராயினும், அவரது தலமை அதிகாரிகள் தனிப்பட்ட நிறுவகத்தின் குழுவினர்!

    பம்பாய், சென்னை, ஹைதராபாத், ராஜஸ்தான், தாராப்பூர், குஜராத், கர்நாடகா, நரோரா போன்ற பல இடங்களில் இயங்கி வரும் அணு உலைகள், அணுமின் உலைகள், அணுவியல் ஆய்வுத் துறைகள் ஆகியவற்றில் அநேக இந்திய ஆடவர், பெண்டிர் பணி புரிந்து வருகிறார்கள்! அவர்களில் 98 சதவீதம் வரையறைக்கு உட்பட்ட கதிரடி பெற்று உடல் நலமோடு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் சந்ததியில் யாருக்கும் ஆறாவது விரல் முளைக்க வில்லை! அறிந்தோ அறியாமலோ வரையறை அளவோ, அதற்கும் சற்று மிகையான அளவோ கதிர்வீச்சுப் பெற்றவர்களும் புற்று நோயால் தாக்கப் படவில்லை! அவரது பிள்ளைகளுக்கும் ஆறாவது விரல் தோன்ற வில்லை!

    பம்பாய் கனடா இந்திய அணு ஆய்வு உலையில் நான் தணிந்த கதிரடிகள் பெற்று ஆறு ஆண்டுகள் பணி செய்த பின், பிறந்த என் இரண்டு புதல்விகளில் யாருக்கும் என் கதிரடியால் எந்த நோயும் உண்டாக வில்லை! கைகளில் ஆறாவது விரலும் முளைக்க வில்லை! தற்போது கனடாவில் யந்திரவியல் எஞ்சினியர்களான என் இரண்டாவது புதல்வியும் அவளது கணவரும் அணுமின் நிலையங் களில் கடந்த நான்கு ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்கள். 4000 MWe [8×500 MWe] ஆற்றல் கொண்ட வட அமெரிக்காவின் மிகப் பெரிய பிக்கரிங் அணுமின் நிலையத்தில் [Pickering Nuclear Generating Station] மகள் பணி செய்கிறாள். எனது மருமகன் வேறொரு அணுமின் உலையில் 3200 MWe [4×800 MWe] ஆற்றலுடைய டார்லிங்டன் அணுமின் நிலையத்தில் [Darlington Nuclear Generating Station] பணி புரிகிறார். அவர்கள் இருவருக்கும் அணு உலைக் கதிரடியால் எந்த வித நோயும் இல்லை! அவர்களுக்கு பிறந்த இரண்டு குழந்தைக்கும் ஆறாவது விரல் முளைக்க வில்லை.

    தமிழக மாந்தருக்கு ஓர் வேண்டுகோள்! பாதுகாப்பான அணு உலைக் கதிர்வீச்சால் எந்தப் புற்று நோயும், அல்லது சந்ததி ஊனமும் பணியாளருக்கு உண்டாவ தில்லை! செர்நோபிள் அணு உலை போன்றோ அல்லது அணு ஆயுதம் போலவோ, பாரத அணுமின் உலைகள் ஒருபோதும் வெடித்து மக்களுக்குப் பேரழிவை உண்டு பண்ண மாட்டா! பாரத அணு உலைகளில் ஆடவர், பெண்டிர் யாரும் அஞ்சாமல் நிரந்தரமாகவோ அன்றித் தற்காலிகமாகவோ பணி செய்து அறிவுக்கும், திறனுக்கும், வயிறுக்கும் உணவு அளித்து வரலாம்! ஆக்க உணர்வோடு பணி புரிய கூரிய அறிவும், சீரிய திறனும், ஓங்கிய வல்லமையும் தமிழர் வசம் களஞ்சியம் போல் செழித்துக் கிடக்கிறது!

    தகவல்:

    1. World Nuclear Status Report, Nuclear Europe WorldScan [July-Aug 2001]

    2. Safety of Candu Nuclear Power Stations By: V.G. Snell [Jan 1985]

    3. Nuclear Power in Canada, Canadian Nuclear Association Report [1975]

    4. Nuclear Risk Prevention & Mitigation, First Civil Protection Forum [Nov 29, 2002]

    5. Radiation Protection Qualifications, Access Limits & Working Rights [July 2000]

    6. Nuclear Power Safety & Understanding Ionizing Radiation [Aug 1992]

    7. Nuclear Power in USA- A Rational Approach By: Robert W. Deutsch [1987]

    ***************************

    Share