இசைக்கவி ரமணன்

 

chair
தனிமை என்பது மிகநிஜமானது, அதன்
தாழ்வாரத்து நிழல் உட்பட

தனிமை என்பதை இனிமை என்பதா?
தீக்குள் வைக்கும் எந்த விரலும், கண்ணனைத்
தீண்டும் இன்பத்தைக் காணுமா?

தனியே இருப்பது தனிமையாகாது
எந்த உயிரும் எந்தக் கணமும்
எங்கும் தனிமையில் இல்லை
ஏதோ ஒன்றைச் சார்ந்தே இருப்பதை
ஏதோ ஒன்று பார்த்துக்கொண்டே இருக்கிறது

நான்போய் உட்கார்வதால் தீர்ந்துவிடாது
நாற்காலியின் தனிமை
ஆளைப் போல அதுவும்தான்
அமர்ந்திருக்கிறது தரைமீது
தரையும் கூடச் சதா சுழலும்
பூமியின் மடியில் பொருந்திக்கொண்டிருக்கிறது

அடுக்கிக்கொண்டே போனால்
அயரவைக்கிறதே ஆண்டவனின் தனிமை!

அலையலையாகப் பரவும் எண்ணங்களை
அபிப்பிராயம் கொள்ளாமல்
அதிர்ச்சி அடையாமல்
அதற்குப் பொறுப்பே ஏற்காமல்
அயராமல் இடைவிடாமல்
அப்படியே பார்த்திருந்தால்

எல்லாம் ஒடுங்கி
ஏதோ ஒன்று மிஞ்சும்
எதிரெதிரே உறவின்றிப் பிரிவின்றி
இடைவெளி மட்டும் சற்றும் குறையாமல்
இருப்பதே தனிமையின் தறுவாய்

எது மிஞ்சியதோ அதுவே
எது பார்த்துக்கொண்டிருந்ததோ அதனில்
எத்தனமின்றிக் கரைந்து தீரும்

எதுவுமே இன்றியும்
எல்லாமாகவும்
மல்லாந்து கிடக்கும் இருப்பே
மகோன்னதத் தனிமை

நன்றி : படம்: ஓவியர் ஜீவானந்தன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *