ஆண்டுக் கணக்கா யுகக்கணக்கா?

-கே. ரவி

ஆண்டுக் கணக்கா யுகக்கணக்கா
தோண்டத் தோண்ட வளர்கிறதே
வானும் புவியும் பிரிந்த போது
நானும் நீயும் பனியும் தீயும்
கடல்பி ரிந்து கலைந்த போது
நீயும் நானும் நீரும் நிலமும்
பாரி வள்ளல் ஏறி வந்த
தேரே உன்மேல் படர்ந்தி ருந்த
முல்லைக் கொடியை மறந்து விட்டாயா?

மரப்பொந் தாய்நான் காட்டை எரிக்கும்
அக்கினிக் குஞ்சாய் அமர்ந்தி ருந்தாய்
அள்ளி எடுத்துனை அப்படி யேயென்
மனத்துக் குள்ளே வைத்தா னேயவன்
மறக்க முடியுமா பிரிந்துவிட் டோமே
யார்பிரித் தார்கள் ஏன்பிரிந் தோம்நாம் – ஓ
மானிட இருட்டின் மாயா ஜாலம்
விடியத் தானே போகிறது
வெளிச்சம் வந்து விட்டால்
உலகத் துக்கே தெரிந்துவிடும்
நீதான் எந்தன் நிழல் என்று!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க