மழையும் மெளனமும்!

-கே. ரவி

மெளனத்தைக் குடையாக விரித்துக் கொண்டு
மழைமேகம் நடந்துவரக் காற்று வந்து
கெளரவமாய்க் கைப்பிடித்துக் கூட்டிச் செல்ல    Lightning
ககனத்தில் ஒருபாதை திறக்க ஆஹா
சவுக்கைப்போல் வெட்டியது மின்னல் சட்டச்
சடசடவென் றதிர்வெடிகள் எக்கச் சக்கம்
மெளனத்தின் உடலெல்லாம் பொத்தல் பொத்தல்
மழையோடு மெளனமுற வாட லாமா?

மல்லாந்து படுத்திருந்தேன் வானம் இல்லை
மாறாக மின்விசிறி சுழலக் கண்டேன்
சொல்லாழ்ந்த கற்பனையா மாயச் சூதா
சூழ்ச்சிவலை பின்னுபவள் யாரோ எங்கும்
கல்லாத வித்தையிது கவிதை யாகக்
கலகலக்கும் உற்சாக வெள்ளம் இங்கே
இல்லாத உண்மைக்குச் சாயம் பூசி
இதயத்தைக் கொள்ளையிடும் ஜாலக் காரி!

எனக்குள்ளே ஒருகனவா இல்லை நானோர்
ஏகாந்தக் கனவுக்குள் இருக்கின் றேனா?
தனக்குவமை இல்லாத ஒருநி லைக்குத்
தள்ளாடிக் கொண்டேநான் நடக்கின் றேனா?
மனக்குளத்தில் தூறெடுக்க மலர்நீட் டத்தை
மகோன்னதத் தூரிகையாய் மாற்றி னேனா?
கனக்கிறது பனித்துளியும் காலை வேளை
கண்திறக்கக் காத்திருக்கும் புல்நான் தானா?

சொல்லடீ சொல்லடியென் றுலுக்கி னானே
சொன்னாயா சொல்லாமல் போக்குக் காட்டிக்
கொல்லாமல் கொன்றாயா உணர்ச்சி கள்நீ
கொய்துவிளை யாடுகின்ற கொய்யாத் தோப்பா?
புல்லென்று நினைக்காதே பூகம் பத்தைப்
புன்னகையோ டெதிர்கொள்ளத் தெரிந்த வன்நான்
நில்லென்று கூவுகிறேன் நின்று காட்டு
நெறிஞ்சியிலுன் பாதங்கள் சிவந்தால் என்ன?

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க