Blog

  • தேகமும் யோகமும் 11 வது பகுதி..

    கவியோகி வேதம்

    yoga21

     ‘தீவிர இச்சை’யைக் கட்டுப்படுத்துவது எப்படி?

    ….. யான் சில அன்பர்கட்கு யோகா கற்றுக்கொடுத்துவரும்போது ஒரு இளம்பெண் கூச்சத்தோடு என்னிடம் சொன்னாள். ‘வேதம் சார்!நீங்கள் சொல்லிக்கொடுக்கும் எல்லாப் பயிற்சிகளையும் நான் தினசரி வீட்டில் தவறாமல் செய்துவருகிறேன். ஆயின் இப்போதெல்லாம் யோகா செய்தபின் கடும் பசி ஏற்படுகிறது. எதையாவது உடனே நிறைய சாப்பிடணும்போல் தீராத ஆசை உண்டாகிறதே.அது ஏன்? முன்பு போல் என்னால் இப்போ தின்னும் ஆசையைக் கட்டுப்படுத்த முடியவில்லையே? ஏன் சார்?’-என்றாள்.

    ……….. நான் சொன்னேன். ஆமாம். யோகா செய்தபின் பசிக்கும்தான். காரணம் என்னவென்றால், உன் உடம்பிலுள்ள கெட்ட ரத்தம்,கழிவுகள் எல்லாம் அவ்வப்போது உடன் வெளியேறுகிறது.ரத்தமும் சுத்தமாகிறது. வயிற்றிலும்  அதிக அமிலம் சுரந்து ஏதாவது  ‘தின்னத்தா, தின்னத்தா’ என்று நாட்டிய ஜதி  போல் அது பேசுகிறது. இங்குதான் நாம் அதி ஜாக்கிரதையாக இருக்கணும். வயிற்றை அடக்கத்தெரியணும். மெதுவாக அதனிடம் பேசு. ஓவராகத் தின்று என் வயிற்றில் தொப்பை போட விடாதே! உனக்கு வேண்டியது கொஞ்சம் தான் தருவேன். நீ அமிலத்தைக் கிளப்பி நான் அதிகம் தின்று குண்டாகணுமா உன்னால்?,’ என்று  வெறியுடன் கேள். அந்த மன உணர்ச்சியை நீ சரியாகப் புரிந்துகொண்டு அது வெறும்  ‘போலிப்பசி’ என்று உணர்ந்தாயானால் , அந்தந்த வேளையில் மட்டும் மிக அளவாக  உன்  வயிற்றுக்குப்  போட்டாயானால்,உடம்பு சிக் என்று இருக்கும். இல்லையெனில் இருபது வயதுக்குள்   ‘குட்டியானை’ ஆகிவிடுவாய். இது உனக்குத் தேவையா? என யோசி, பின் நன்கு செயல்படு” என்றேன்.

    .. அவள் புரிந்துகொண்டாள். அந்த உணர்வு நசையினை அடக்கி இன்னும் தீவிரமாகப் பயிற்சிகள் செய்து, சிப்ஸ், சாக்லெட், முறுக்கு போன்ற எண்ணெய்ப் பதார்த்தங்களை அறவே நீக்கிவிட்டாள். காலை, மதியம், இரவு என்று உணவு வேளைகளையும், உணவின் தரத்தையும் ஒரு  கட்டுக்குள் கொண்டுவந்தாள்.          ……….அந்தக் கன்னிப்பெண்ணின் முகம்இதனால்அதீதப்பொலிவுற்றது. உடம்பும் சிக் என மாறியது. நான் மேலே சொன்ன இந்த அதீத (வேண்டாத)உணர்வுகளைத்தான்   ‘ தீவிர இச்சை’ என்கின்றோம்.

     மனம் ஒன்று சொன்னால் யோசியாமல், சட்டெனச் செயல்படாதிருக்கும் நிலையே யோக ஆன்ம நிலை ஆகும்.. நிதானம் அப்போதுதான் பிடிபடும்.

    இதேபோல்தான் யோகாவைத் தீவிரமாகப் பயின்றால் மெதுவாக உங்கள் உள்ளே ஒரு சாத்தான் தோன்றி ‘ செக்ஸ்’ தாகத்தைத் தூண்டும். இது ஒரு கழிவு மாதிரிதானே என்றெல்லாம் அந்த சாத்தான் சமாதானம் சொல்லி உங்களை ‘டெம்ப்ட்’ செய்து படுகுழியில் விழத்தூண்டும். அதற்கு இடம் கொடுத்தால் அவ்வளவுதான். நீங்கள் அம்போ என்று ஆகிவிடுவீர்கள். உடல் சக்தி இழந்து, ஞாபகசக்தி,ஆன்ம சக்தியும் இழந்து, ஒரு ஒல்லிப்பிச்சானாக, எதுவும் பேச சக்தியற்றவனாக ஆகிவிடுவீர்கள். ஜாக்கிரதை! செக்ஸ் உணர்வைக் கட்டுப்படுத்தி,  அதுதரும் நிறைய ஆன்ம சக்தியில்அதனை மெதுவாக கலைகள், கவி, கதை இயற்றல் போன்ற நல்ல வழிகளில் மனத்தைத்  திருப்பிவிட்டீர்களாயின்  உங்கள் வாழ்க்கையே ப்ரம்மானந்தமாகிவிடும்.

     இதனை அவசியம் யோகா பயில்பவர்கள் ஆரம்பத்திலேயே உணர்ந்து ஜாக்கிரதையாகி  அதுதரும் பேரின்ப சக்திமூலம் நல்ல வழிகள் கண்டு வாழ்க்கையை ரம்மியமானதாக ஆக்கிக்கொள்ளவேண்டும். என் யோக ஆசான் ஒரு சமயம் சொன்னார்.. ‘எப்படி பளுதூக்கும் குண்டு உன் கைகால் சதைகளை வலிமைப்படுத்துகிறதோ, அப்படியே  ‘டெம்ப்டேஷன்’ என்கிற தீவிர இச்சையைக் கட்டுப்படுத்தும்  உன் உள்மன  ‘ஆற்றல்’ உன்னைத் தூக்கி  மேலே நிறுத்தி  ஆத்மாவிற்கு அதிகமான தெய்வீக சக்தியைக் கொடுக்கிறது. இதற்கு  நான் சந்தித்த ஒரு நல்ல  மனிதனின்கதையை உதாரணமாகச் சொல்கிறேன். அப்போதுதான் உங்களுக்குப்புரியும்!

        ……எங்கள் ஊருக்கு அருகே ரங்கசமுத்திரம் எனும் சிற்றூர் இருக்கிறது. சிறுவயதில் நச்சுத்தீனி தின்று உடம்பு குண்டான ,  ‘சக்திகாந்தன்’ எனும் ஒரு வாலிபர் ஒரு யோகியிடம் தியானம், ஆசனங்கள் முதலியன கற்றபின் குருவின் மந்திர உபதேசத்தால் கவரப்பட்டு அவர் சொன்னபடியே இந்த தீவிர இச்சைகளை எல்லாம் அடக்குவதில் வெற்றி கண்டு, சகல யோக வித்தைகளும் மனோபலத்தால், தினசரிப் பயிற்சியால்  கைகூடப்பெற்று பின்பு தீவிர சன்னியாசி ஆனார்.

     அவரது முகப்பொலிவையும், உடல் அழகையும் கண்டு நேசித்த எத்தனையோ பணக்காரர்கள் அவரிடம்  என் பொண்ணைக் கட்டிக்கோ, என் சொத்து பூரா உனக்குத்தரேன், என் வியாபாரத்தில் நீ கலந்துகொண்டாயானால் நிச்சயம் இந்த ஊரிலேயே நீ பெரிய பணக்காரனாவாய் என்றெல்லாம் அவரை(tempt) செய்து வசியப்படுத்த முயன்றார்கள். அந்த வாலிபரோ (சாமியாரோ?)- குரு வாக்கைப் பரிபாலனம் பண்ணுவதிலேயே குறியாக இருந்தார். தன் முகத்தின் தேஜஸ்  தன்   குருவின் ஆன்மிக உபதேசத்தாலும் , பயிற்சியாலும்,  ரகசிய மந்திர  தீட்சையாலுமே வந்தது என்று பரிபூரணமாக உணர்ந்து அவர்கள் பேச்சுக்கெல்லாம் ஒரு பெரிய ‘நோ’ போட்டு ஒதுங்கிவிட்டார். அதனால் அவரது வைராக்கியத்தைக் கண்டு மகிழ்ந்து அந்த குரு தம் பெரிய ஆஸ்ரமத்தையே அவரிடம் ஒப்படைத்துவிட்டார்.அவரது சமாதி நிலைக்குப்பிறகு அந்த சக்திதாசர் ஆஸ்ரம வேலைகளை மிக அற்புதமாக விஸ்தரித்து, காயத்ரி யக்ஞம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணங்கள் போன்றவற்றால் தம் ஊரையும் பக்கத்து ஊர்களையும்  ஆன்மிகச் செழிப்பு  மிக்க ஸ்தலங்களாக்கிவிட்டார்.. தனது மந்திரங்களாலும்,யோக சக்தியாலும், மூலிகை மருத்துவத்தாலும்  ஊராரின்  சகல நோய்களையும், வாழ்வுப் பிரச்னைகளையும் தீர்த்துவைத்து வெற்றிகண்டார்.

     இதனால் திடீர் என்று ரங்கசமுத்திரத்துக்கு வந்த ஒரு  ‘ஹிமாலயன் யோகி’ அவரது நற்செயல்களையும், ஆன்மப்பணிகளையும் பாராட்டி, தனது ஆன்ம சக்தியையும் அவருக்கு ‘தீட்சை’ மூலம் கொடுத்து  ‘ப்ரம்மாநந்த  சக்திதாசர்’என்னும் பட்டப்பேரையும் கொடுத்துத் தன் தீர்த்த யாத்திரையைத் தொடங்கினார்.  இந்த உண்ணும்  ‘பேராசை நச்சை’ச் சாமர்த்தியமாக தன் வைராக்யத்தால் வென்றவர் எப்படி உண்மையான தீவிர பரிபூரண யோகியானார் என்பதற்காக  இந்த வரலாற்றைச் சொன்னேன்.,

    .. ஆதலால் அன்பர்களே! இந்தத் தீவிர நசையை,இச்சையை (temptation) வென்றோர் நிச்சயம் இறைவனுக்குப் பக்கத்திலேயே ஒரு  ‘சீட்’ போட்டுக்கொண்டு வசிப்போர் ஆவர்.இவர்களால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை.

     மக்களுக்குப் பல விதத்திலும் இவர்கள் தொண்டு செய்வார்கள். அகம்பாவத்தின் சாயல்கூட அவரிடம் இருக்காது.. ஒருசமயம் இயேசு கிருஸ்து தன்  மாணவர்களுக்கு உபதேசித்தார். உங்கள் ஆன்ம வலிமையைக்குலைக்கும் வினோதமான இச்சை உங்கள் பக்கம் வரும்போது, சட்டென மனத்தால் அதனை அடித்துப்போட்டு, “ஏ சாத்தானே! என் ஆன்ம பலத்துக்கு முன் உன் நொண்டிக்கைகளை நீட்டாதே. உன்னைப் பிய்த்து எறிந்துவிடுவேன். என் பின்னால் பயந்து நீ ஒரு மைல் தள்ளிப்போய்விடு. முன்னால் நின்றால் உனக்கே ஆபத்து! வாலாட்டாதே! என்னிடம்’ என்று சொல்லி அதனை விரட்டுங்கள் என்றாராம். இந்தத் தீவிர இச்சை யாரை (பிரபலங்களை)எப்படியெல்லாம் வளைத்து அடிமையாக்கி அவர்கள் வாழ்க்கையையே நாசமாக்கியிருக்கிறது என்று அடுத்த அத்தியாயத்தில்,சொல்கின்றேன்.

    (தொடரும்)-

    Share
  • கணக்கொன்று எழுது!

    -மீ.விசுவநாதன்

    நேருக்கு நேர்நின்று பேசும் – கடவுள்
    –நீயென்று நம்புகிறேன் நாளும் !
    யாருக்கும் நீதானே தோழன் – மனித
    –யாழினை மீட்டுகிற ஞானன் !

    தூணுக்குள் இருக்கின்ற துணிவு – ஒரு
    –துரும்புக்குள் வாழ்கின்ற கனிவு
    ஆணுக்கும் பெண்ணுக்கும் அழகு – உன்
    –அருள்கொஞ்சும் கீதைமொழி உயர்வு !

    பாரதியின் பாட்டுள்ளே கண்ணா – பசு
    –பதியெனவே பதிந்திட்டாய் நன்னா !
    பூரணனே படைப்பெல்லாம் நீயே – என்ற
    –புத்திதனை எனக்கருளு வாயே !

    திருஅல்லிக் கேணியிலே நன்றாய் – மனம்
    –தெளிகின்ற வழிசொல்லி நின்றாய் !
    கருவேண்டி ஒருதாயைத் தொழுது – நான்
    –கருதாத கணக்கொன்று எழுது !

     (திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிகோவில்
    சம்ப்ரோக்ஷணம் 12.06.2015 அன்று நடைபெறுகிறது)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(153)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே!

    இனிய வணக்கங்கள். வினாடிகள் நிமிடங்களாக, நிமிடங்கள் மணிகளாக, மணிகள் நாட்களாக, நாட்கள் வாரங்களாக இதோ அடுத்ததொரு வாரம் அடுத்ததொரு மடல்.

    காலங்கள் ஓடிக்கொண்டேயிருக்கின்றன. ஓடும் அக்காலங்கள் தம்முள் கடந்து செல்லும் நிகழ்வுகளைச் சரித்திரங்களாகப் பதிவு செய்கின்றன. அச்சரித்திரம் அந்நாட்டின் வரலாற்றினை அடுத்துவரும் காலங்களுக்கு காலத்தின் கண்ணாடியாக எடுத்துச் சென்று காட்டி நிற்கின்றன. அச்சரித்திரம் பேணப்பட வேண்டுமாயின் அவை அவற்றின் முக்கியத்துவம் கெடா வகையில் அத்தாட்சியுடன் பதிவு செய்யப்பட வேண்டும். எது எப்படியாயினும் அச்சரித்திர நிகழ்வுகளே அந்நாட்டின் மீது மக்கள் பெருமை கொள்ளவும், அப்பெருமையின் அடிப்படையில் அந்நாட்டின் மகத்துவத்தைப் பேணவும் வழி கிடைக்கிறது.

    இங்கிலாந்து நாட்டில் நான் காலடி வைத்த நாள் முதல், இங்குள்ள நாட்டினரிடம் கண்டு ஆச்சரியப்பட வைப்பது இவர்கள் தமது கடந்தகால சரித்திரத்திற்கும், தமது வாழ்முறை கலாச்சாரத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவமே! எந்தக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று அரசமைத்தாலும் அவர்கள் தமது கலாச்சார, சரித்திர அடையாளங்களைப் பேணுவதற்காக தமது வரவு செலவுத் திட்டத்தில் கணிசமான தொகையை ஒதுக்கிக் கொள்கிறார்கள். இது அவர்களது கொள்கை அடிப்படையோ இல்லையோ, அவர்கள் இவ்வாறு செய்வதன் காரணம் இந்நாட்டு மக்கள் அவற்றிற்குக் கொடுக்கும் மதிப்பும் அரசியல் கட்சிகள் மக்களின் கருத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவமேயாகும் .

    என்னடா இவன் கதையளப்பது போல் மடலில் அடுக்கிக் கொண்டே போகிறானே என்று அன்பான வாசகர்கள் எண்ணலாம். இதை நான் இப்போது குறிப்பிடுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. ஆமாம் ஏறத்தாழ 200 வருடங்களின் முன்னால் நிகழ்ந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போர் ஒன்றினை இருநூறு வருடங்கள் கழித்து இவர்கள் நினைவு கூர்வதும், அதற்குக் கொடுக்கும் முக்கியத்துவமுமே ஆகும்.

    waterloo 200“Battle of Waterloo” அதாவது “வாட்டர்லூ யுத்தம்” எனும் யுத்தம் ஜூன் மாதம் 18ம் தேதி 1815ம் ஆண்டு “வாட்டர்லூ” எனும் இடத்தில் நிகழ்ந்தது. இந்த ” வாட்டர்லூ ” எனும் இடத்திற்கும் தற்போது இங்கிலாந்தில் உள்ள “வாட்டர்லூ” எனும் இடத்திற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. இந்த யுத்தம் நிகழ்ந்த “வாட்டர்லூ ” எனும் இடம் தற்போதைய “பெல்ஜியம்” ஆகும். அப்போது இந்த இடம் “நெதர்லாந்து ஐக்கிய இராச்சியம் ( United Kingdom of Netherlands) எனும் அமைப்பாக இருந்தது.

    1815 ஆம் ஆண்டு, மாவீரன் நெப்போலியன் திரும்பவும் அதிகாரத்தைக் கைப்பற்றிய நேரம். நெப்போலியனின் அதிகாரத்திற்கு எதிரான பல நாடுகள் நெப்பொலியனின் அரசுக்கெதிராகக் கூட்டணி அமைக்க முயற்சித்துக் கொண்டிருந்த நேரம். ஃபிரெஞ்சு தேசத்திற்கு அண்மித்த “வாட்டர்லூ” எனும் இடத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ” வெலிங்டன் பிரபு” (Duke of wellington) தலைமையில் அந்நாளைய இராணுவத் தளபதி “பிரஸ்சியன்கெப்கார்ட் வொன் பிளெச்சர்” (Prussian Gebhard von Blücher) என்பவர் அமைத்த “ஏழாவது கூட்டணி” (Seventh Coalition) எனும் இராணுவக் கூட்டமைப்பு நிலை கொண்டது.

    அக்கூட்டணியை எதிர்த்து மேலும் பல இராணுவங்கள் இணைந்து தாக்குதலை மேற்கொண்டால்தான் அவர்களை இலகுவாக வெற்றி அடையலாம் என்று திட்டம் தீட்டிய மாவீரன் நெப்போலியன் தனது முக்கியமான தாக்குதலை “வாட்டர்லூ” எனும் இடத்தில் நிகழ்த்தினார். இத்தாக்குதல் நிகழ்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் பிரஸ்ஸியன் இராணுவம் மற்றொரு இடத்தில் ஃபிரெஞ்சு இராணுவத்திடம் தோல்வியுற்றிருந்தது. இத்தோல்வியின் பின்னால் மீண்டும் பலமாக பிரஸ்ஸியன் ராணுவம் கட்டியெழுப்பப்பட்டதை அறிந்த வெலிங்டன் பிரபு, அவர்கள் தனது நெப்போலியனுக்கெதிரான போருக்கு ஆதரவளிப்பார்கள் எனும் நம்பிக்கையோடு தாக்குதலை எதிர்கொண்டார்.

    அன்று மாலைவரை நெப்போலியனின் தாக்குதலை தனது திட்டமிடுதலினால் சமாளித்துக் கொண்டிருந்த வெலிங்டன் பிரபுவின் படைகளோடு பிரஸ்ஸியன் இராணுவமும் ஒன்றிணைந்து ஃபிரெஞ்சு இராவணுத்தைச் சிதறடித்து ஃபிரெஞ்சு நாட்டின் அதிகாரத்தை 18ம் லூயி மன்னனிடம் கையளித்தார்கள். நெப்போலியன் கைது செய்யப்பட்டு செயிண்ட் ஹெலினாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு நெப்போலியன் 1821ம் ஆண்டு உயிர் நீத்தார்.

    யார் இந்த “வெலிங்டன் பிரபு “?

    Sir_Arthur_Wellesley,_1st_Duke_of_Wellington

    1769ம் ஆண்டு – மே மாதம் 1ம் நாள், அயர்லாந்து நாட்டில் பிறந்த “ஆர்த்தர் வெல்லஸ்லீ” (Arthur Wellesley) என்பவரே இவர். “ஃபீல்ட் மார்ஷல்” எனும் இராணுவ உயர் பதவியை வகித்தவர். அந்நாளைய பிரித்தானியாவின் இராணுவ வீரர்களில் இவர் மிகச் சிறந்தவராகக் கருதப்பட்டார்.

    1787ம் ஆண்டு – இராணுவத்தில் இணைந்த இவர் ஒரு கர்னலாக பதவி வகித்தார். இவர் அயர்லாந்து பாராளுமன்றத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

    1796ம் ஆண்டு – நெதர்லாந்து , இந்தியா ஆகிய நாடுகளில் பல போர்களில் பங்கு கொண்டார் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடந்த, திப்பு சுல்தான் கொல்லப்பட்ட நான்காவது ஆங்கில மைசூர் போரில் இவர் இங்கிலாந்து படைக்குத் தலைமை தாங்கினார்.

    1799ம் ஆண்டு – ஸ்ரீரங்கப்பட்டினம், மைசூர் ஆகிய பகுதிகளின் கவர்னராக நியமிக்கப்பட்டார்.

    1814ம் ஆண்டு – நெப்போலியன் தலைமறைவாக இருந்த காலத்தில் இவர் ஃபிரெஞ்சு நாட்டின் பிரித்தானிய தூதுவராக கடமையாற்றும் போது இவருக்கு ” டியூக்” (Duke) எனும் பட்டமளிக்கப்பட்டது. இவரது இராணுவ காலம் முடிவுற்றதும் பிரித்தானிய அரசியலில் குதித்த இவர் இரண்டுமுறை கன்சர்வ்வேடிவ் கட்சியின் சார்பில் பிரதமராக பதவி வகித்தார்.

    1852ம் ஆண்டு – இவரது இறுதி காலம் வரை இங்கிலாந்து இராணுவத்தின் தலைமைக் கட்டளைத் தளபதியாகக் கடமையாற்றினார்.

    Lorddouroஇப்போது இந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போரில் டியூக் ஆஃப் வெலிங்டன் அடைந்த வெற்றியின் போது உயிர் நீத்த 24,000 வீரர்களை 200 வருடங்களின் பின்னால் நினைவு கூரும் முகமாக லண்டன் “வாட்டர்லூ” இரயில் நிலையத்தில் ஒரு நினைவுச் சின்னம் திறக்கப்பட்டது. இந்நினைவுச் சின்னத்தை அப்போரின் வெற்றிக்கு காரணமான டியூக் ஆஃப் வெலிங்டனின் பரம்பரையில் வந்தவரான 9வது டியூக் ஆஃப் வெலிங்டன் சார்ல்ஸ் வெலரியன் வெலஸ்லீ என்பவர் திறந்து வைத்தார். மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்நிகழ்வு இந்நாட்டு மக்கள் மக்கள் தமது சரித்திர நிகழ்வுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பறைசாற்றி நிற்கிறது.

    இத்தகைய உணர்வுகளே தமது நாட்டின் மீது தாம் கொண்ட மதிப்பையும் அதன் அடிப்படையில் அந்நாட்டைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், வசதிக் குறைவின்றி வைத்துக் கொள்ளும் மனோபாவத்தின் அடிப்படையாகிறது. நம்மில் எத்தனைப்பேர் நமது நாடுகளின் சரித்திர நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் ?

    ஆச்சரியமாக இல்லையா ?

    மீண்டும் அடுத்த மடலில் …
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • களைந்த கனவுகள்!

    -துஷ்யந்தி

    காத்திருந்து கன்னியிவள்
    கரம்பிடித்தாள் மன்னவனை
    நிலையில்லாத வாழ்க்கையாய்
    ஆனதிந்த வாழ்க்கையே…!

    தோற்றுவிட்ட கனவுகளாய்                             faded dreams
    எண்ணமெல்லாம் மாறிவிடப்
    பேதையிவள் என்செய்வாள்?
    வாடியே நின்றிடுவாள்…!

    விதவையென பெயர்தந்து
    வெண்ணிற உடை தந்து
    கை வளைகள் தானுடைத்துக்
    கைவிலங்கு போட்டுவைக்க
    என்பிழை இவள் செய்தாள்?

    கன்னியிவள் காலங்கள்
    தன்னந்தனியாய்க் கழிந்ததனால்
    உலகிவளுக்குத் தந்தபெயர்
    முதிர்கன்னி என்றிருக்க…

    கல்யாணக் கோலம் கண்ட
    பின்னே நேர்ந்த விபத்தால்
    இவள் கணவன் உயிரிழக்க
    இப்போது இவள் பெயர்
    விதவையென்றானதோ?

    ஏற்றுக்கொள்ள முடியாத
    காரணங்கள் பல சொல்லி
    மூலையிலே ஒதுக்கிவிட்ட
    சாக்கடைச் சமுதாயமே!

    சுமங்கலியை அமங்கலியாய்
    மாற்றியதும் நீரல்லவா…?
    அவள் எதிரிலே வருதல்
    ஆகாதென்று காரணம்
    சொல்வதும் நீரல்லவா…?

    போற்றுவதும் தூற்றுவதும்
    பெரிதில்லை உமக்கெல்லாம்
    மனம் பட்டிடும் பாட்டை
    எவரும் கொஞ்சம் நினைத்தீரோ…?

    சாத்திரங்களும் சம்பிரதாயங்களும்
    வகுத்துத்தந்த உண்மைகளை
    வாய்க்கு வந்தாற்போல
    சொல்வதை நிறுத்திடுவீர்…!

    மாயவன் தந்த உடல்
    பூமிக்குப் போகும் வரை
    அவன் பார்வையிலே யாவரும்
    சமமென்று உணருங்கள்!

    வாழ்விலே சாதனைகள்
    என்செய்தோம் என்பதனை
    யாவரும் ஒருமுறை
    தனக்குள்ளே கேட்டுடுவீர்!

    அதனால் தோன்றிடும் விடைகளே
    விருட்சங்களை உருவாக்கும்
    அன்று அனைவரின் மனதிலும்
    ஒரே எண்ணம் உருவாகும்!

     

    Share
  • காக்கைகள் மட்டும் கரைகின்றன…!

    -தாரமங்கலம் வளவன்

    தங்கள்
    மௌன மொழியைக் கலைக்க
    காற்சலங்கைகள் காத்திருக்கின்றன         crow
    வீணைக் கம்பிகள்
    விரல்களின் ஸ்பரிசத்திற்காக
    ஏங்கித் தவிக்கின்றன!

    வேகமாய்ப் படியும் தூசி
    புல்லாங்குழலின் அனைத்துத்
    துளைகளையும் அடைத்துக் கொள்ள,
    காக்கைகள் மட்டும் தங்கள் அகன்ற
    வாயுடன் கரைந்து கொண்டே இருக்கின்றன!

     

    Share
  • காலம் (9)

    மீ. விசுவநாதன்

    vallamai111-300x150111

    அனைத்தும் இலவசம் ! அப்படியும் ஆசை
    அனைத்தும் அடங்குமா ! ஆழ நனைத்து
    உழுத வயலிலும் ஒட்டாத ஒர்நெல்
    எழுமே சிறுபுல் என. (81) 21.03.2015

    வண்ணத்தைப் பார்க்கின்ற வண்ணத்தைச் சின்னதாம்
    கண்மணிக்குள் வைத்தவனைக் கண்ணனை ; மண்ணையே
    வெண்ணையாய் உண்டபடி வெள்ளையாய்ப் பல்காட்டி
    மண்ணளக்கும் மாலென் மகன் . (82) 22.03.2015

    பொறாமை மறையப் புகழ்வதால் புத்திப்
    புறாவின் அலகிலே பூவாய் உறவு
    மலரும் ; பகைமை மடிந்து மனித
    குலத்தை உயர்த்துங் குணம். (83) 23.03.2015

    சுயநலத்தால் பந்தம் சுகமென்றே எண்ணி
    நயமாகப் பேசி நடத்தும் பயவாழ்வு
    ஓர்நாளில் துண்டுபடும் ! உண்மையாம் அன்பொன்றே
    நீரடித்து நீங்கா நிஜம். (84) 24.03.2015

    சங்கரரின் வம்சத்தில் சத்திய தோற்றமாய்
    துங்கை சிருங்கேரி தூயபீட அங்கமாய்
    பாரதீ தீர்த்த பசும்பொன்னாம் சத்குருவாய்
    பாரதம் வந்த பயன். (85) 25.03.2015

    (சிருங்கேரி சங்கராச்சார்யாள் அனந்தஸ்ரீ விபூஷித
    ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளுக்கு இன்று 65வது
    வர்தந்தி தினம் (பிறந்த தினம்))

    நானே பெரியோன் நலம்பல செய்பவன்
    பேனா பிடித்தால் பெரியதோ ராள்நான் !
    எனவே நினைப்போர் இருக்கும் திசையை
    மனமே முதலில் மற. (86) 26.03.2015

    கிரிக்கட்டில் வெற்றிதான் கிட்டாதென் றாலும்
    சரிக்கட்டி ஆடிடலாம் ; தப்பாய் நெறிமுறை
    இல்லாமல் ஆடுகிற இல்வாழ்வில் மானுடனே
    நல்லமைதி கூவ நதி. (87) 27.03.2015

    நீர்மோரும் வெள்ளரியும் நிச்சயம் கோடைக்குத்
    தீர்மான நல்லுணவு ! தீமையை ஓர்நாளும்
    கிட்டவே சேர்க்காத கீர்த்திமிகு நல்லோர்போல்
    திட்டமாய் வைக்கும் தினம். (88) 28.03.2015

    முன்னோர்கள் , பாதையிலே முட்களை நீக்கியதால்
    என்போன்ற சின்னவர்கள் எத்தனை இன்பமாய்
    உல்லாச மாகவே ஊர்கோலம் போகின்றோம் !
    நல்லதே செய்வது நன்று. (89) 29.03.2015
    பொந்திலே கூடும் புதுவானில் வாழ்வுமாய்
    அந்தக் கிளிதான் அலைகிறது – எந்த
    மழைவெயிலும் இன்பந்தான் ; மானுடனே கொஞ்சம்
    உழைத்தால் உயர்வே உனக்கு. (90) 30.03.2015

    Share
  • முட்களும் சொற்களும்!

    -துஷ்யந்தி

    சொற்களுக்கும் முட்களுக்கும்
    சொல்லிலடங்கா ஒற்றுமைகள்
    உண்டென்று கண்டுகொண்டேன்
    இன்று உன் வார்த்தைகளில்…                              thorns and words

    ரோஜாவென்று வாசம்காட்டி
    இன்பம்காட்டி உள்ளமெல்லாம்
    இன்னிசை மழை பொழிய
    வைத்ததுவும் நீதானே…!

    இல்லாத ஒன்றுக்காய்
    இன்பங்கள் அத்தனையும்
    கண்ணிமைக்கும் நேரத்தில்
    தகர்த்ததுவும் உண்மைதானே…!

    மெல்லிய ஸ்பரிசமாய்
    என்னுள்ளே நினைவானாய்
    உள்ளத்தில் நீங்காத ரோஜா
    வாசனை நீயானாய்…!

    மென்மையும் வெண்மையும்
    தைத்ததில் என்னுள்ளே
    இன்னமும் கசிகின்றது
    இதயத்துள் வலிகளாய்…

    சிக்கிக்கொண்ட வார்த்தைகள்
    சீர்திருத்தி மீண்டு வர
    எத்தனை நாள் காத்திருக்க?
    சொல்லிவிடு இன்றெனக்கு…!

    முட்களில் பிறந்த ரோஜா
    சிக்கியதில்லை முட்களில்
    அப்படித்தான் நினைத்திருந்தேன்
    மாய உலகில் உன்னையும்

    வார்த்தைகளில் வலைவிரித்து
    வாஞ்சையாய்ப் பேசவைத்து
    மீண்டிடா ரணம்கொடுக்க
    உன்னால் எப்படி முடிந்தது??

     

    Share
  • எனக்கான நேரமில்லை!

    -கனவு திறவோன்

    என் நேரத்தைக் கேட்கிறாயே
    என்ன செய்வேன்?
    கவிதையைக் கேட்டிருந்தால்
    தந்திருப்பேன்!

    நீ வாழும் என் சரிதம்
    அது மட்டும்தான் என்பதால்
    ஊருக்கே காட்டுகிறேன்
    உனக்குத் தர மாட்டேனா?

    என் மன வானத்தைக் கேட்டிருந்தால்
    தந்திருப்பேன்
    கற்பனையில் வாழ்ந்து களைத்துப்
    போயிருக்கிறேன்!

    உடல் உந்தி வாழுதல்
    உவப்பில்லை
    சிறகாய் இணைந்திட வா
    சேர்ந்தே பறப்போமே!

    சுவாசத்தைக் கேட்டிருந்தால்
    தந்திருப்பேன்
    நீ இருக்கிறாய் என்பதின்
    சாட்சியமே அதுதான்!

    நற்சாட்சிகள் இருந்து என்ன பயன்?
    கணக்குப் பிழைகள் தானே
    வழக்கை முடிக்கின்றன!

    என் நேரத்தைக் கேட்டால்
    எப்படித் தருவேன்?
    அஃது எனதல்ல…

    நீயே என் நேரத்தை
    நிர்ணயிக்கிறாய்
    சில நாட்களை
    நிமிடங்களில் முடிக்கிறேன்
    சில நாட்களை
    மாமாங்கமாய்க் கடக்கிறேன்
    நீட்டிப்பதும் சுருக்குவதும்
    உன் செயல் தான்!
    உனக்கான என் நேரத்தை
    கேட்பது மரபோ?

    என் நேரத்தைச் சபிப்பதும்
    ஆசிர்வதிப்பதும்
    நீ தான்!
    வரம் தந்தவளே
    கரம் ஏந்தலாமா?

    என் நேரத்தைக் கேட்கிறாயே
    என்ன செய்வேன்?

     

    Share
  • சம்பளத்தின் மரணம்

    -கவிஜி

    பித்த நிலைக்குள்
    போகும் உன்னதத் தருணம்
    மொத்தக்
    கொடியில் ஒத்த ஆடை…

    தாவரங்கள் துருவங்கள்
    இலைமறையாய்
    உள்ளங்கை
    மறைக்கும் உயிரோசைக்குள்
    காடு கொண்ட ஒற்றையடி…

    மதி கொண்ட நிறத்தின்
    மௌன மொழி மண்டிய
    பயத்தில் முயங்கித்
    திரிவது பூனை
    மறந்த மதில்…

    சொல்லுதல் செய்தல்
    இடைவெளி இல்லாத
    நூலகத்தில் பாசி படர்ந்து
    தூசுகளூடே சிறு கீற்று
    வெளிச்சம்…

    தத்தம் கண்களின் கவிதை
    கொன்று குவிக்கும்
    குருட்டுச் சிந்தனைக்குள்
    மயிரடர்ந்த
    மயக்கத் தாழ்…

    இரு கைகள் ஆணி
    இறங்க
    இன்னும் இரு கைகள்
    நீட்டியவனே
    சம்பளம்…

     

    Share
  • ஞானம் தேடுகிறேன்

    -கனவு திறவோன்

    புத்தருக்கு ஞானம் தந்த
    போதி மரம்
    எனக்கு
    ஜன்னல் தந்தது
    கதவு தந்தது
    கட்டில் தந்தது
    கோவில் கூரை தந்தது
    புத்தரின் சிலையும் தந்தது
    எல்லாவற்றையும்
    வைத்துக் கொண்டு
    ஞானம் தேடுகிறேன்.

    Share
  • அவன், அது , ஆத்மா (16)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 16

    “அவனும் நீலகண்டனும்”

    அவனும் அவனுக்கு நண்பன் நீலகண்டனும் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர்கள். சிவாஜி கணேசன் படங்களைத் தங்கள் வீட்டு உத்திரக் கட்டைகளிலும், தங்களுடைய பெட்டிகளிலும் ஒட்டி வைத்து ரசிக்கக் கூடிய வெறியர்கள். தெருவில் சில நண்பர்கள் சேர்ந்து “சிவாஜி ரசிகர் மன்றம்” துவங்கினார்கள். அதன் அலுவலகம் கன்னிமூலைத் தெருவில் ஒரு வீட்டில் இருந்தது. அந்த மன்றத்திற்கு பேப்பர் ராமலிங்கம்தான் செயலாளர். அவரும் தீவிர ரசிகர். அவரது தகப்பனார் அனந்தநாராயணன். அவரைக் “கிட்டாத்தம்பி” என்று அழைப்பார்கள். “இந்து”, ஆனந்தவிகடன், கல்கி, குமுதம் போன்ற பத்திரிகைகளுக்கு நீண்டகாலமாகவே அவர்தான் “ஏஜென்ட்”. அதனால் ராமலிங்கம் சில பத்திரிகைகளை அந்த ரசிகர் மன்றத்திற்கு படிப்பதற்காகக் கொண்டுத் தருவார். அதிலும் முக்கியமாக சிவாஜி செய்தியாக இருந்தால்தால்தான் ரசிகர் மன்றத்திற்கு அந்தப் பத்திரிகையைத் தருவார். “பேசும்படம்” பத்திரிகையைத் தந்து அதில் உள்ள சிவாஜி படங்களின் அழகைச் சொல்லிச் சொல்லி மகிழ்வார். அவனும் நீலகண்டனும் சந்தோஷத்தில் மிதப்பார்கள். இந்த ரசிகர் குழாத்தில் ரமணியும் உண்டு.

    ரமணி, “ஆவணிசார்” என்று அழைக்கக் கூடிய “எஸ். ராமசுப்ரமணியன்” அவர்களின் மகன். ஆவணிசார் திலகர் வித்யாலயம் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆவணி மாதத்தில் பிறந்ததால் அவரை “ஆவணி சார்” என்று அழைப்பதாக அவனுக்கு அப்பா கூறினார். இதுபோன்ற பட்டப் பெயர்களால் அழைக்கக் கூடிய கலையுணர்வு அந்த ஊர் மக்களுக்கு உண்டு. “நொறுங்கல்”, “நெட்டம்பி”, ENDகண்ணன், பங்களாவாத்துச் சுப்பாமணி, காவட்டு, “கிரீஸ்”, “ஜெமினி”, “குன்றி”, “குட்டிச் சங்கர்”, “மாட்டு விஸ்வம் மாமா”, கருப்பட்டி, “நெட்ட கிருஷ்ணையர்”, “அத்தை கண்ணன்”, “டைப்சார் கண்ணன்” , “பாவா சங்கரன்”, “வெள்ளப் பிள்ளையார்”, சின்னம்பி, பெரியம்பி என்று எத்தனையோ உண்டு. ஒவ்வொரு வீட்டிலும் ஆண்குழந்தைகளை “அம்பி” என்று அழைப்பது வழக்கம். எந்தனையோ பேர்களை “அம்பி” என்று அழைத்தாலும் எந்த அம்பியை அழைக்கிறார்கள் என்பதை மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் கலையைக் கிராமம் கற்றுக் கொடுத்திருந்தது. அது அழகாகவும் இருக்கிறது.

    சரி மீண்டும் ரசிகர் மன்றத்துக்கு வருகிறேன். அந்த மன்றத்தில் “நல்ல கண்ணு” என்ற ஒரு ரசிகர் இருந்தார். “நிறைகுடம்” படத்தில் சிவாஜிக்கு கிளிக் கூடு போல ஒரு சுருளாக முடியலங்காரம் இருக்கும். நல்லகண்ணுவும் அதேபோல தனது முடியலங்காரத்தை வைத்திருந்தார். அவர் அவனுக்கும், நீலகண்டனுக்கும், ரமணிக்கும் நல்ல பழக்கமானவர். சிவாஜி கணேசன் படங்களை திருநெல்வேலிக்குச் சென்று முதல் நாள் முதல் கட்சியில் பார்த்து விட்டு வந்து அவர்களிடம் கதையை “நல்லகண்ணு” சொல்லும் அழகில் அவனும், நீலகண்டனும் மெய்மறந்து நிற்பார்கள். “அந்த சீன்ல அண்ணன் நடிப்புல பிச்சு ஓதரிட்டார்டா…அப்படி அவர் அங்க நடந்து வருவாரு.. அதுக்கே நம்ம கொடுத்த ரூவா செத்துது ” என்று அவனையும், நீலகண்டனையும் உசுப்பேற்றி விடுவார். அவர்களுக்கு அந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் திருநெல்வேலிக்குச் சென்று பார்க்கும் அளவுக்கு அவனுக்கு வசதி கிடையாது. படம் வெளியாகி நூறு நாட்களுக்குப் பிறகுதான் அந்தப் படம் அவனது கிராமத்து “டூரிங் கொட்டகைக்கோ” அல்லது அம்பாசமுத்திரத்தில் உள்ள கிருஷ்ணா, கல்யாணி திரையரங்கத்திலோ வரும். அதற்கும் அவர்களால் அவ்வளவு எளிதாகச் சென்று விட முடியாது. அவர்களது பெற்றோர்கள் அதற்கெல்லாம் விடமாட்டார்கள். அவனும் தனது தலைமுடியை “நிறைகுடம்” சிவாஜியைப் போல வைத்துக் கொள்ள முயற்சி செய்வான். “இப்ப என்ன அலங்காரம் வேண்டிக் கிடக்கு..யாருகூட ஓடிப் போப் போறே” என்று அவனுக்கு அம்மா கத்துவாள். அவன் அதைக் காதில் வாங்காமல் நடையில் மாட்டி இருக்கும் சிறிய கண்ணாடியில் தெரியும் தனது முடியைக் கலைத்துக் கலைத்து அலங்காரம் செய்து கொள்வான்.

    உள்ளூர் “டூரிங் டாக்கீஸில்” படம் போடுவார்கள். அதை விளம்பரப் படுத்த அவர்கள் தெருவில் உள்ள சுவர்களில் அந்தத் தியேட்டர் வேலைக் காரர்கள் “போஸ்டர்” ஓட்டுவார்கள். மாட்டு வண்டியில் கொட்டு மேளத்துடன் ஒவ்வொரு தெருவாக “சினிமா நோட்டீஸ்” கொடுத்து வருவார்கள். காலையில் குத்துக்கல்தெரு முக்கில் இந்த சினிமாக் கொட்டுச் சத்தம் கேட்டவுடனேயே அவனும், நீலகண்டனும் அந்த வண்டியை நோக்கி ஓடுவார்கள். வண்டிக்குள் உட்கார்ந்து “சினிமா நோடீஸ்” கொடுப்பவரிடம்,”அண்ணாச்சி எங்கள்ட்ட அந்த நோடீசத் தாங்க நாங்களே ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுத்துடறோம்” என்று அவரிடம் ஒரு கொத்து சினிமா நோடீஸ் வாங்கி அவனும், நீலகண்டனும் ஒவ்வொரு வீடாகக் கொடுத்து “கட்டாயம் இந்த சிவாஜி படத்த”ப் பாருங்க” என்று சொல்வார்கள். ஏதோ அவர்களின் கைபணத்தைப் போட்டு படம் எடுத்ததைப் போலக் கெஞ்சுவார்கள். வண்டியில் அந்த வேலையாள் சுகமாகச் சிரித்தபடி உட்கார்ந்திருப்பார். “பொழுது வெடிஞ்சுதா சினிமாவுக்கு…புத்தகம் படிக்க புத்தி போமாட்டேங்கறதே” என்று அவனுக்கு அம்மா மனம் நொந்து அவனைத் திட்டுவாள்.

    ஒருநாள் பாட்டனயினார்புரம் தெருவில் உள்ள சுவரில் ஒட்டப்பட்டிருந்த “கலாட்டாக் கல்யாணம்” திரைப்படப் போஸ்டரில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் சாணி அடித்து விட்டனர். சாணி அடித்தவர்களும் அதேதேருவில் உள்ள அவர்களுக்கு நண்பர்கள்தான். இருந்தாலும் “ரசிகர்” மன்றம் வேறல்லவா…கோபம் பொங்கி வர அவனும், நீலகண்டனும் போஸ்டரில் சாணி அடித்த எம்.ஜி.ஆர். ரசிகர்களிடம் தெருவில் சண்டை போட்டனர். “ரகு”, “சக்தி”, கிட்டு என்று பலர் எம்.ஜி.ஆர். ரசிகர்கள். அவனும் ஆதிவராக அப்பளம் டெப்போ கண்ணனும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். எம்ஜிஆர் போஸ்டரில் இவர்கள் சாணி அடித்தனர். தெருவில் நிறையப் பசுமாடுகள் இருந்ததால் சாணிக்குக் குறைவில்லை. சண்டைபோட்ட அனைவரும் ஒன்றாக மாலையில் குளிப்பதற்காக ஆற்றங்கரைக்கு உற்சாகமாகச் சென்று விடுவார்கள்.

    ஒரு தீபாவளி அன்று காலையில் பட்டாசுகள் கொளித்திவிட்டு, இனிப்புப் பலகாரங்களைச் சுவைத்த பின்னர் அவனும் நீலகண்டனும் அம்பாசமுத்திரம் கல்யாணித் தியேட்டரில் வெளியான “ராமன் எத்தனை ராமனடி” திரைப்படம் பார்க்கத் திட்டமிட்டனர். பண்டிகைக் காலங்களில் பெரியோர்களை நமஸ்காரம் செய்தால், ஒன்றோ இரண்டோ ரூபாய் தருவார்கள். அப்படி இரண்டு ரூபாய்கள் அன்று அவர்களுக்கு வசூலாச்சு. காலையில் அவன் வீட்டில் இட்டிலியைச் சாப்பிட்டு விட்டு, எட்டு மணிக்கெல்லாம் அவனும், நீலகண்டனும் அம்பை கல்யாணியை நோக்கிக் கிளம்பினர். தாமிரபரணி ஆற்றின் குறுக்காகக் கடந்து அம்பைக்குச் சென்ற பொழுது முதல் காட்சி துவங்கி விட்டது. ஐந்து காட்சிகள் நடக்கும். இரண்டாவது காட்சி பத்தரை மணிக்குத் துவங்கும். அவர்கள் வரிசையில் நின்றனர். தரை டிக்கட்தான். நல்ல தீபாவளிக் கூட்டம். படம் முடிந்து அவர்கள் அதே ஆத்தங்கரை வழியாக நடந்து களைத்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் சிவன்கோவில் வாசலுக்கு வரும் பொழுது மாலை மணி மூன்றரை. அவர்கள் வீட்டில் இருவரையும் கலையில் இருந்தே தேடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். தெருவுக்குள் நுழையும் பொழுது,” இப்படி நல்ல நாளும் தானுமா காலைல போனவா இப்பத்தான் வரா…எங்க போயிட்டு வரான்னு கேளுக்கோ” என்று அவனுக்கு அம்மா அப்பொழுது அவன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த “குளத்து வாத்தியாரிடம்” வருத்தமுடன் முறையிட்டாள். குளத்து வாத்யாரிடம் அவன் “டியூஷன்” சென்று கொண்டிருந்தான். அவர்,” எங்கடா போயிட்டு வரேள்” என்றார். “ராமன் எத்தனை ராமனடி” சினிமாவுக்கு என்று அவன் சொன்னான். “சாப்பாட்டு ராமா” என்று அவர் அவனது முதுகில் செல்லமாக ஒரு தட்டு தட்டினார். அன்று தீப்பாவளி. அதனால் அம்மாவும் திட்டவோ, அடிக்கவோ இல்லை. “இப்படி பட்டினியோட இருந்தா உடம்பு என்னத்துக்காகும்” என்றபடியே அவன் பசிபோக்க தீபாவளி விருந்துச் சாப்பாடு கொடுத்தாள். இதுவே வேறு நாளாக இருந்தால் அவன் முதுகுத் தொலி பிஞ்சிருக்கும்.

    எஸ். சங்கரநாராயணன் சார்

    எஸ். சங்கரநாராயணன் அவனுக்கு எட்டாம் (8-C) வகுப்புக்குத் தமிழாசிரியர். நல்ல உயரம். முழுக்கைச் சட்டையும், பேன்ட்டும் அணிந்து வலதுகையில் ஒரு புத்தகமுமாகத்தான் அவர் வகுப்புக்கு வருவார். பாடம் நடத்தும் பொழுது கையில் புத்தகம் வைத்துக்க் கொள்ளாமல் மாணவர்களின் கவனம் எப்போதும் தான் நடத்தும் பாடத்தில் ஒன்றியிருக்கும்படி சுவையாகப் பாடம் நடத்துவார். மாணவர்களின் கவனம் சிதறினால் அவருக்குக் கோபம் வந்துவிடும். பெரியபுராணம் பாடலுக்கு மிக அழகாக, காட்சிக்குக் காட்சி கேட்பவர் மனதில் கற்பனை விரியும் வகையில் விளக்கம் கூறுவார். அவர் திருநாவுக்கரசரின் “மாசில் வீணையும் மாலை மதியமும்” தேவாரப் பாடலுக்கு விளக்கம் கூறிவிட்டு அன்றைய காலத்தில் வெளியாகியிருந்த “திருவருட்செல்வர்” படத்தில் அப்பரடிகளாக நடித்திருந்த சிவாஜி கணேசன் அவர்களது நடிப்பைப் பற்றி மிகவும் பெருமையாகச் சொல்லி, மாணவர்கள் அந்தப் படத்தை பார்க்கவேண்டும் என்றும், நாயன்மார்களின் பெருமையை அந்தப் படம் நன்றாகக் கூறுகிறது என்றும் சொன்னார். நாவுக்கரசரை நாம் பார்த்ததில்லை. இந்தப் படத்தைப் பார்த்த பிறகு இப்படித்தான் நாவுக்கரசர் இருந்திருப்பார் என்று நம்மால் கற்பனைசெய்து கொள்ள முடியும் என்றும், பல பாடல்கள் கூறும் அரிய கருத்தை ஒரு காட்சி மூலம் மக்கள் மனதில் பதிய வைக்கலாம் என்பதற்கு இந்தப் படம் ஒரு சாட்சி என்றும் சொன்னது, ஏதோ இன்று அவர் சொன்னதுபோல அவன் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.. அவனுக்கு “சினிமா சிவாஜி” என்பதுபோய், பக்திக்கும் ,தேசபக்திக்கும் கிடைத்த ஒரு அபூர்வக் கலைஞர் சிவாஜிகணேசன் என்பது புரிந்தது.

    பெரியபுராணப் பாடல்களை மாணவர்கள் ரசித்துப் படிக்கவேண்டும் என்பார். அந்தப் பாடல்களை எப்படிப் பதம் பிரித்துப் படிக்கவேண்டும் என்றும் கூறுவார். அவர் பாடம் நடத்தும் பொழுது அவனும், இன்னும் சில மாணவர்களும் அவரது நாற்காலிக்கு மிக அருகிலேயே தரையில் அமர்ந்துதான் பாடத்தை கவனிப்பார்கள். அவர் தமிழ்ப் பாடல்களை உச்சரிக்கும் அழகைப் பார்த்துத்தான் அவனுக்கு தமிழ்க் கவிதைகளில் ஆர்வம் வந்தது. அவனது துரதிர்ஷ்டம் சங்கரநாராயணன் சார் அந்த வருடம் பாதியிலேயே பள்ளியைவிட்டு பேட்டையில் உள்ள “இந்துக் கல்லூரிக்கு” விரிவுரையாளராகச் சென்று விட்டார்.

    சில ஆண்டுகளுக்குப் முன் அவன் அவரை சென்னையில் ஒரு மாலைப் பொழுதில் ஆழ்வார்பேட்டை அம்புஜம்மாள் தெருவில் நடைபெறும் “இலக்கிய சிந்தனை” மாதக் கூட்டத்தில் சந்தித்தான். இந்தக் கூட்டத்தை “R. A. K. பாரதி, ப. லெஷ்மணன்” இருவரும் இணைந்து பல வருடங்களாகச் சிறந்த முறையில் நடத்தி வருகின்றனர். தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று ஆண்டு விழாவாக சென்னை A . V. M. இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில், சென்ற ஆண்டின் சிறந்த சிறுகதைக்குப் பரிசும், சிறந்த தமிழறிங்கருக்கு “பம்பாய் ஆதிலெஷ்மணன் விருதும்” தந்து கௌரவிக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் கடேசி சனிகிழமை அன்று இந்தக் கூட்டம் நடைபெறும். நிறைய இலக்கிய அன்பர்கள் கலந்துரையாட ஒரு அருமையான இடமாக இந்தக் கூட்டம் இருந்து வருகிறது. இந்தக் கூடங்களால்தான் அவனுக்கு N. R. தாசன், திருப்பூர் கிருஷ்ணன், எழுத்தாளர் எஸ். சங்கரநாராயணன், ராஜ்கமல் கண்ணன், அமுதபாரதி போன்றவர்களின் நட்பு கிடைத்தது.

    அப்படி ஒரு கூட்டத்தில் அவன் அந்த மாதச் சிறுகதையைத் தேர்வு செய்து, சிறுகதை பற்றிய தனது கருத்தையும் தெரிவித்தான். அந்த இலக்கியக் கூட்டத்தின் முடிவில், “எனக்குத் தமிழிலும், தமிழ்க் கவிதையிலும்” ஆர்வம் வரக் காரணமானவர்களில் இங்கே அமர்ந்திருக்கக் கூடிய ஓய்வு பெற்ற தமிழாசிரியர் திரு. எஸ்.சங்கரநாராயணன் மிக முக்கியமானவர். எட்டாம் வகுப்பில் எனக்கு இவர்தான் தமிழாசிரியர். இன்று அவர் அவரது மாணவனின் உரையைக் கேட்டது அந்த மாணவனுக்கு இன்னும் ஊக்கம் தருவதாக இருக்கிறது.” என்றான். உடனே அவர் எழுந்து, “என் மாணவன் மீ.விசுவநாதன் இன்று சிறுகதைகளைப் பற்றிக் கூறிய கருத்தும், இலக்கியத்தில் அவனுக்கு இருக்கும் ஈடுபாட்டையும் அறிந்து நான் பெருமைப்படுகிறேன். அவன் இலக்கிய உயரங்களைத் தொட வாழ்த்துகிறேன் ” என்றார். கூட்டம் முடிந்து நீண்ட நேரம் அவருடன் அவன் உரையாடிக் கொண்டிருந்தான். அவரோடு மெதுவாக நடந்து ஆழ்வார்பேட்டை பஸ் நிறுத்தம் வரை சென்று அவரை வழியனுப்பி வைத்தான். எஸ். சங்கரநாராயணன் சாரை அவன் அன்று மீண்டும் சந்தித்தபொழுது, எட்டாம் வகுப்பில் அவர் விளக்கம் சொன்ன,

    “மாசில் வீணையும் மாலை மதியமும்
    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
    மூசு வண்டரைப் பொய்கையும் போன்றதே
    ஈசன் எந்தை இணையடி நிழலே”

    என்ற திருநாவுக்கரசரின் தேவாரமும், அந்தப் பாடலுக்கு திருவருட்செல்வரில் அப்பராக வாழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் அவன் மனதில் நிறைதிருந்தனர்.

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 2

    சி. ஜெயபாரதன்.

     

    kahlil-gibran

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே !

     

    என் ஆத்மாவே ! நீ
    ஏன் அழுகிறாய் ?
    என் பலவீனத்தை நீ
    அறியாயோ ?
    உன் கண்ணீரின் கூர்மை
    காயப் படுத்தும்
    என்னை ஊடுருவி !
    காரணம்
    என்பிழை தெரியா தெனக்கு !

    எதுவரை நீடிக்கும்
    உன் அழுகை ?
    நின் கனவுகள், ஆசைகள்,
    அறிவுரைகள்
    எவற்றையும் கலைக்க என்னிடம்
    எதுவு மில்லை
    மனித வார்த்தைகள் தவிர !
    என் மீது கண்ணோக்கு
    என் ஆத்மாவே !

    உன் உபதேசங்களைக்
    கவன மாய் நான்
    பின்பற்றி
    இரை யானது
    என் வாழ்வு முழுவதும் !
    எப்படி நோகிறது பார்
    என் இதயம் ?
    களைத்துப் போனது
    என் வாழ்க்கை
    பின்பற்றி உன்னை !

    உன்னதம் பெற்றது
    என் இதயம்
    உன் ஆசன பீடத்தில் !
    அடிமை யானது உன்னிடம்
    இப்போது
    பிணைத்துக் கொண்டு ! எனக்குத்
    துணைவனாய் இருந்த
    என் பொறுமை
    இப்போது எனக் கெதிராய்ப்
    போட்டி போடுது
    பகைவனாய் !

    வாலிப வயதெனக்கு
    வழங்கியது
    வாழ்வில் ஓர் நம்பிக்கை !
    கண்டிக்கும் அது என்னை
    இப்போது
    கவனக் குறைவால்
    பேணிப் பாராததால் !
    எப்போதும் ஏன் என்னை
    வற்புறுத் துகிறாய்
    என் ஆத்மாவே ?

    எனது இன்பங்களை எல்லாம்
    புறக்க ணித்தேன் !
    உன் அறிவுரைக் குடன்பட்டு
    என்மீது புகுத்திய
    உன் நியதியைப் பின்பற்றி
    வாழ்வின் பூரிப்பைத்
    துறந்தேன் !
    நீதி வழங்கு நீ எனக்கு !
    அல்லது
    கொடு மரணத்தை
    விடுவிக்க என்னை
    நியாயமே உனது உன்னத
    நெறியான தால் !

    என் மீது பரிவு காட்டு
    என் ஆத்மாவே !
    என் மீது அன்பை
    ஏற்றி இருக்கிறாய்
    என்னால்
    சுமக்க முடியாப் பளுவாய் !
    நீயும் அன்பும்
    இணை பிரியா வல்லினம் !
    ஆனால்
    நானும் செல்வமும்
    இணை பிரியா பலவீனம் !
    எப்போ தாவது
    போராட்டம் நின்று விடுமா
    வல்லினத் துக்கும்
    மெல்லினத் துக்கும் இடையே ?

    என் மீது பரிவு காட்டு
    என் ஆத்மாவே !
    என் பிடிக்கு அகப்படாத
    அதிர்ஷ்டத்தை
    எனக்கு அளித்தி ருக்கிறாய் !
    நீயும் அதிர்ஷ்டமும்
    உச்சி மலையில் மீது
    உட்கார்ந் திருக்கிறீர் ! ஆனால்
    நானும் இடர்களும்
    பள்ளத்தில்
    தள்ளப் பட்டுள்ளோம்
    ஒன்றாக !
    எப்போ தாவது கூடி
    ஐக்கிய மாகுமா
    மலையும் பள்ளமும் ?

    என் மீது பரிவு காட்டு
    என் ஆத்மாவே !
    எழில் மயத்தை காட்டினாய்
    எனக்கு ! ஆனால்
    ஏனோ அதை ஒளித்து வைத்தாய் !
    நீயும் எழிலும்
    ஒளிச்சுடராய் வாழ்கிறீர் !
    ஆனால்
    நானும் அறியாமையும்
    இருள் வெளியில்
    சிறைப் பட்டோம் !
    எப்போ தாவது
    படையெடுத்து வெல்லுமா
    ஒளி யானது
    இருளின் மீது ?

    முற்றுப் பெறுவதில் தான்
    உந்தன் பூரிப்பு
    வந்தடையும் உனக்கு ! அதை
    எதிர்பார்த்து நீ
    இன்பம் அடைகிறாய்
    இப்போது !
    ஆயினும் இந்த உடல்
    வாழ்க்கையில் துன்புறுகிறது
    வாழ்ந்திடும் போது !
    இதுதான் என்னைக் குழப்பும்
    என் ஆத்மாவே !

    முடிவற்ற நீடிப்பை நோக்கி
    துரிதமாய்ப் போகிறாய் நீ !
    ஆயினும் இந்த உடல்
    மெதுவாகச் செல்லுது
    மரணத்தை நோக்கி !
    காத்து நிற்ப தில்லை நீ
    அவனுக்கு !
    விரைவில் அவனும்
    மறைவ தில்லை !
    இது சோக மளிக்கும் எனக்கு
    என் ஆத்மாவே !

    சொர்க்க புரி உன்னை
    ஈர்ப்பதால் நீ
    உயரத்தில் ஏறுகிறாய் !
    ஆயினும் இந்த உடல்
    கீழே வீழ்கிறது
    பூமியின் ஈர்ப்பால் !
    ஆறுதல் அளித்திடாய் நீ
    கடவுளுக்கு !
    அவரும் உனைப்
    பாராட்டுவ தில்லை !
    இதுதான் என் அவலநிலை
    என் ஆத்மாவே !

    மெய்ஞானக் களஞ்சியம் நீ
    ஆயினும் இந்த உடல்
    அறிவைப் புரிவதில்
    பரம ஏழைதான் !
    விட்டுக் கொடாதவன் நீ !
    கீழ்ப்படி யாதவன்
    அவனும் !
    இதுதான் எனக்கு வேதனை
    என் ஆத்மாவே !

    இரவின் மௌன வேளையில்
    தேவனைக் காணச் சென்று
    இனித்திடும்
    தெரிசனம் பெறுவாய் !
    ஆயினும் இந்த உடல் என்றும்
    முடங்கிக் கிடக்கும்
    பிரிவிலும்
    நம்பிக்கை இழப்பிலும்
    கசப்ப டைந்து !
    இதுதான் எனக்குச் சித்திரவதை
    என் ஆத்மாவே !
    பரிவு காட்டு என்மீது
    என் ஆத்மாவே !

     

     

    “நானிங்கு பிறந்தது எல்லோரோடும் இருப்பதற்கு, எல்லோருக்கும் உதவுவதற்கு!
    எனது ஏகாந்தத்தில் இன்று நான் புரிவது நாளைக்குப் பல்வேறு மாந்தரால் எதிரொலிக்கப்படும்.”

     

    நானிங்கு பிறந்தது
    அனைவ ரோடும் வாழ்வதற்கு !
    அனைவ ருக்கும் உதவுதற்கு !
    எனது தனிமையில்
    இன்று நான் புரிவதை
    ஏனைய மாந்தர்
    எதிரொலிப்பார் நாளை !
    – கலில் கிப்ரான்

    என் ஆத்மாவைக்
    கவர்ந்து கொள்ளும்
    மிருதுவான முரட்டுக்
    கரங்கள் யாருடையவை ?
    கசப்பான களிப்பும்,
    இனிப்பான வலியும்
    கலந்து என் இதயத்தில்
    ஊறிப் போயிருக்கும்
    ஒயின் எது ?
    இரவின் மௌன வேளையில்
    என் தலையணை மேல்
    பறக்கும் அந்தச்
    இறக்கைகள் யாவை ?
    என் தூக்கம் கலைக்கும் அவை !
    என்ன நடக்கு தென்று
    எவரும் அறியக்
    காணாது !
    ஆனந்தக் களிப்பை விடப்
    பேருன்னத மான
    சிரிப்பின்
    பிரதிபலிப்பை விடப்
    பேரழகுத் துயரம்
    கலந்திருக்கும் எனது
    பெரு மூச்சில் !
    – கலில் கிப்ரான்

    Share
  • கவிஞானி ரூமியின் கவிதைகள்

    கவிஞானி ரூமியின் கவிதைகள்
    (கி. பி. 1207-1273)
    கவிதை -1
    தடம் காண முடியாச் சுவடு

    ஆங்கில மூலம் : கொலிமன் பார்க்ஸ்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    ajay

    Poet Rumi’s 800 th Birth Anniversary

    முன்னுரை :

    பாரசீகக் கவிஞர் ஜெலாலுதீன் ரூமி 1207 ஆம் ஆண்டில் தற்போது ஆஃப்கானிஸ்தான் எனப்படும் பூர்வீகப் பாரசீக தேசத்தில் உள்ள பால்க் (Balkh) என்னும் இடத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே மங்கோலியர் படையெடுப்புக்கு அஞ்சி அவரது குடும்பத்தினர் நாட்டை விட்டுத் துருக்கியில் உள்ள கொன்யாவுக்கு ஓட வேண்டியதாயிற்று. அங்குதான் ரூமி தனது வாழ்நாளின் பெரும் பகுதியைக் கடந்தார். நாஷாப்பூரில் (Nashapur) சில காலம் தங்கிய போது கவிஞர் அத்தார் (Poet Attar) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவரது குடும்பத்தினருக்குக் கிடைத்தது. ரூமிக்கு வாய்த்த மகாக் குருமார் களில் முதல்வர் (Mentors) கவிஞர் அத்தார். ரூமியின் ஞானக் கொடையை அறிந்த கவிஞர் அத்தார் “அஸ்ரார் நமா” (Asrar Nama – The Book of Secrets) என்னும் நூலை அன்பளிப் பாகக் கொடுத்தார். 1226 இல் ரூமி திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகன்.

    அறிஞராகத் திகழ்ந்த ரூமி டெர்விஸ் (Dervish) இஸ்லாமியக் குரு ஸாம்ஸ் ஆஃப் தபிரிஷ் (Shams of Tabriz) அவர்களை 1244 இல் சந்தித்த பிறகு புத்துயிர் பெற்று அவரது ஆன்மீகச் சிந்தனையில் மகத்தான ஒரு திருப்பம் ஏற்பட்டது. “நெடுங் காலமாய் முன்பு நான் நினைத்து வந்த அந்தக் கடவுளைக் கண்டேன்,” என்று ரூமி அந்த தேவதூதரைக் கண்ட போது பெருமிதம் கொண்டார். மதக்குரு ஸாம்ஸ் அவர்களுக்குப் பிறகு ரூமியின் சிந்தனையைச் செழிக்கத் தூண்டியவர் ஸலாதீன் ஸர்கப் (Saladin Zarkub) பிறகு ஹூஸம் (Husam) என்பவர். கவிஞர் ரூமி பல கவிதைகளில் விளிக்கும் “நீ” என்பது கடவுளா, ஸாம்ஸா அல்லது யார் என்பதை வாசகர்தான் யூகித்துக் கொள்ள வேண்டும்.

    ஞானக் கவிஞர் ரூமி ஓர் மதஞானி, பேரறிஞர், இஸ்லாம் மதத்தின் ஒரு தூணாகக் கருதப் படுபவர். 1244 ஆண்டு ஆன்மீகத் திருப்பத் துக்குப் பிறகு ரூமி தனது 38 ஆவது வயது முதல் 24,000 பாக்கள் கொண்ட “மத்னாவி” (Masnavi or Mathnawi) என்னும் தன் படைப்பு நூலை எழுதத் துவங்கினார். அவரது அடுத்த புகழடைந்த நூல் “திவான்-இ-ஸாம்ஸ்-இ-தாமிரிஷ் (Divan-E-Shams-E-Tabriz – The Collective Poems of Shams of Tabriz) என்பது. ரூமியின் கவிதைப் படைப்புகளில் ஒரு வித “மாயப் புதிர்” (Mystic Connotation) புரிந்தும் புரியாத பொருளில் புலப்படும். ரூமியின் பட்டப் பெயர் “மௌலானா”. மௌலானா என்றால் நமது கோமான் (Moulana means our Master) என்று பொருள். ரூமிக்குப் பிடித்த இசைக் கருவி புல்லாங்குழல். பாரசீகப் பாக்களை இசைக் கருவிகள் மூலம் பாடலாம் அல்லது வாசிக்கலாம்.

    ரூமியின் கவிதைகள் பன்னாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அவரது ஞானக் கருத்துக்கள் அகில நாடுகளுக்கும் உகந்தவை. கவிஞர் ரூமி கொய்னாவைச் சார்ந்த “மெவ்லெவி மதக்குழு நெறி” (Mevlevi Dervish Order, called Whirling Dervishes) எனப்படும் “இசைப்பா ஆட்டக் குழுவின்” துவக்கப் பிதா. ரூமி இஸ்லாமியர், யூதர், கிறித்துவர் ஆகிய மூன்று மத இனத்தவர் மீதும் சமமான மதிப்பைக் கொண்டவர். பாரசீகக் கவிஞர் ரூமி உலகிலே மிகப்பெரும் ” ஸூபி மாயப் புதிர் கவிஞராக” (Sufi Mystic Poet) மதிக்கப் படுகிறார். ரூமியின் கருத்து : “கடவுளைத் தவிர வேறோர் கடவுள் இல்லை. கடவுள் என்பவர் ஒருவரே.”

    ++++++++++++++++

    ரூமியின் கவிதைகள்

    என்னைத் தவிர நீ வேறு
    எல்லோருடனும் இருப்பாயானால்
    எவரோடும் நீ இருக்க வில்லை !
    என்னைத் தவிர நீ வேறு
    எல்லோரிடம் இல்லா விட்டால்
    ஒவ்வொருவர் உடனும் நீ இருக்கிறாய் !
    ஒவ்வொரு வருக்கும் உரிமையாய்
    இருப்பதற்குப் பதிலாக
    எல்லாரும் போல் இருப்பாய் !
    பலரைப் போல் நீ இருந்தால்
    நீ எவனு மில்லை !
    பூஜியம் !

    ஜெலாலுதீன் ரூமி.

    ++++++++++++

    தடம் காண முடியாச் சுவடு
    கவிதை -1

    நான் கிறித்துவன் அல்லன்
    நான் யூதனோ, இஸ்லாமோ அல்லன்
    இந்து, புத்தம், சுஃபி அல்லது
    ஸென் போன்ற
    எந்த மதத்தையும் சாராதவன் !
    ++++++++++++
    எந்தக் கலாச்சார கட்டமைப்பும்
    எனக்கில்லை !
    கிழக்கி லிருந்தோ, மேற்கி லிருந்தோ
    உதித்தவன் அல்லன் !
    கடலி லிருந்தோ அல்லது
    கடல் மேலிருந்தோ வரவில்லை !
    ++++++++++++
    மண்தளத்தி லிருந்து
    இயற்கைக்குப் புறம்பான
    புனிதனாகப்
    பிரபஞ்சத் தனிமங்கள் கலப்பின்றிப்
    பிறக்க வில்லை நான் !
    ++++++++++++
    இவ்வுலகு அல்லது
    அவ்வுலகின்
    தனித்துவ வடிவ மில்லை.
    ஆதாம், ஈவாளின்
    சந்ததியோ அன்றி
    வேறொன்றி லிருந்தோ நான்
    அவதரிக்க வில்லை.
    +++++++++++++
    என் பூர்வீகக் கதை :
    எனது நாடு எந்த நாடு மில்லை !
    உடம்புக்கோ
    என் ஆத்மா வுக்கோ
    தடம் காண முடியாத
    ஒரு சுவடு நான் !
    ++++++++++++
    நேச இனத்தைச் சார்ந்தவன் !
    இரு உலகங்களை
    ஒருங்கே கண்டவன் நான் !
    அழைத்திட
    ஒரே குரல் தான் !
    அறிவது முதலோ, முடிவோ,
    அகமோ, புறமோ
    மூச்சு விடுகின்ற
    அனைத்தும்
    மனித இனத்தின்
    சுவாசிப்பு தான் !
    ***************************
    தகவல் :
    1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
    Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
    2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
    3. Life of Rumi in Wikipedia
    +++++++
    On-line texts and translations of Rumi
    “MA-AARIF-E-MATHNAVI A commentary of the Mathnavi of Maulana Jalaluddin Rumi (R.A.)”, by Hazrat Maulana Hakim Muhammad Akhtar Saheb (D.B.), 1997 .
    Four new translations of Rumi poems by Coleman Barks
    Rumi poetry set to beautiful Persian Music on Mp3 and CD
    The Masnavi I Ma’navi , by Maulana Jalalu-‘d-din Muhammad Rumi, Abridged and Translated by E.H. Whinfield on sacred-texts.com
    Dar al Masnavi , several English versions of selections by different translators.
    (Rumi.net) Rumi’s little-known biography and poems (Quatrains and Odes) in English by Shahram Shiva
    Quatrains at Iranian.com
    On Rumi
    The Foundation of Universal Lovers of Mevlana Jelaluddin Rumi (EMAV)
    The Rubaiyat of Rumi Lecture of Khosro Naghed .
    Rumi, Poet of Love and Justice , CHN News
    Jalaluddin Rumi
    About Rumi, English translations and personal/rare biography
    Several Rumi Poems (Quatrains and Odes) in English
    Iranian studies site
    The Threshold Society and Mevlevi Order
    The Mevlevi Order of America . [This organization and the one above are unaffiliated with each other]
    Official website of the Family of Jalal al-Din Muhammad Rumi
    Mevlana
    Mawlana Jalal al-Din Rumi- Mevlevi webpage
    RumiOnFire.com – A Tribute to Rumi
    What goes round… – The Guardian , November 5, 2000
    Rumi Lectures at Harvard University
    Rumi and the Tradition of Sufi Poetry
    Mewlana Jelal Ad-Din Rumi
    Treasures of Persian Literature , by Professor Behrouz Homayoun Far
    Guernica Magazine (guernicamag.com) on the 800th anniversary of Rumi’s birth
    Sermon on Rumi by UU Minister John Young
    Can Rumi Save Us Now?

    ********************

    Share
  • காதல் நாற்பது – 40 நோயைப் பொருட்படுத்தவில்லை !

    ajay

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    நம் உலகெங்கும் காதலிக்கிறார்

    என்பது நாம் அறிந்ததே !

    உறுதியான காதலைப்

    புறக்கணிப்ப தில்லை நான் !

    இளவயதிலேயே

    காதலைத் தெரிந்து கொண்டேன்

    அப்போதிருந்தே

    பூக்களைச் சேமித்தேன்,

    சமீபக் காலம் வரை !

    இன்னும் பூமணத்தை நுகர்கிறேன் !

    புன்னகைக்குக் கூட

    கைக்குட்டையை

    வீசி எறிகிறார் வழிப்போக்கர் !

    அழுதாலும் எனக்கு அனுதாபப்பட

    ஒருவரு மில்லை !

    ஒற்றைக்கண்

    கிரேக்க அரக்கனின் வெண்பல் கூட

    நழுவிச் செல்லும்,

    அடிக்கடிப் பெய்யும்

    மழையில்

    மழுங்கிய கொட்டையை

    விழுங்கும் போது !

    எதுவும் மறக்கச் செய்யாது,

    ஒதுக்கித் தள்ளாது

    காதல் என்பதை !

    என்னினிய அன்பனே !

    அத்தகைய காதல னில்லை நீ !

    நோயில் நோகும் எனக்குக்

    காத்திராமல்

    ஆத்மாக்கள் தழுவிக் கொள்ளச்

    சீக்கிரம் சிந்தனை செய்,

    மற்றவர்

    காலம் கடந்த விட்டதென்று

    ஓலமிடும் போது !

    ************

    Poem -40

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

    Oh, yes! they love through all this world of ours!

    I will not gainsay love, called love forsooth.

    I have heard love talked in my early youth,

    And since, not so long back but that the flowers

    Then gathered, smell still. Mussulmans and Giaours

    Throw kerchiefs at a smile, and have no ruth

    For any weeping. Polypheme’s white tooth

    Slips on the nut if, after frequent showers,

    The shell is over-smooth,–and not so much

    Will turn the thing called love, aside to hate

    Or else to oblivion. But thou art not such

    A lover, my Belovழூd! thou canst wait

    Through sorrow and sickness, to bring souls to touch,

    And think it soon when others cry “Too late.”

    **********

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy
    ”தூணில் இருப்பவன், துரும்பில் இருப்பவன்,
    வேணு இசையில் விளங்கிட,-ஆணில்,
    பெரியவன் காலப் பிரமாண மாய்மால்
    (OR)
    பெரியவன் காலப் ப்ரமாணாமாய் வீற்றான்,
    கரியவன் கண்ணன் குழல்”….கிரேசி மோகன்….

    ஆணில் பெரியவன் -புருஷோத்தமன்
    கரியவன் கண்ணன் குழல் -தலை முடி அல்லது புல்லாங்குழல்….

    Share