(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

மீ.விசுவநாதன்

அத்யாயம்: 16

“அவனும் நீலகண்டனும்”

அவனும் அவனுக்கு நண்பன் நீலகண்டனும் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர்கள். சிவாஜி கணேசன் படங்களைத் தங்கள் வீட்டு உத்திரக் கட்டைகளிலும், தங்களுடைய பெட்டிகளிலும் ஒட்டி வைத்து ரசிக்கக் கூடிய வெறியர்கள். தெருவில் சில நண்பர்கள் சேர்ந்து “சிவாஜி ரசிகர் மன்றம்” துவங்கினார்கள். அதன் அலுவலகம் கன்னிமூலைத் தெருவில் ஒரு வீட்டில் இருந்தது. அந்த மன்றத்திற்கு பேப்பர் ராமலிங்கம்தான் செயலாளர். அவரும் தீவிர ரசிகர். அவரது தகப்பனார் அனந்தநாராயணன். அவரைக் “கிட்டாத்தம்பி” என்று அழைப்பார்கள். “இந்து”, ஆனந்தவிகடன், கல்கி, குமுதம் போன்ற பத்திரிகைகளுக்கு நீண்டகாலமாகவே அவர்தான் “ஏஜென்ட்”. அதனால் ராமலிங்கம் சில பத்திரிகைகளை அந்த ரசிகர் மன்றத்திற்கு படிப்பதற்காகக் கொண்டுத் தருவார். அதிலும் முக்கியமாக சிவாஜி செய்தியாக இருந்தால்தால்தான் ரசிகர் மன்றத்திற்கு அந்தப் பத்திரிகையைத் தருவார். “பேசும்படம்” பத்திரிகையைத் தந்து அதில் உள்ள சிவாஜி படங்களின் அழகைச் சொல்லிச் சொல்லி மகிழ்வார். அவனும் நீலகண்டனும் சந்தோஷத்தில் மிதப்பார்கள். இந்த ரசிகர் குழாத்தில் ரமணியும் உண்டு.

ரமணி, “ஆவணிசார்” என்று அழைக்கக் கூடிய “எஸ். ராமசுப்ரமணியன்” அவர்களின் மகன். ஆவணிசார் திலகர் வித்யாலயம் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆவணி மாதத்தில் பிறந்ததால் அவரை “ஆவணி சார்” என்று அழைப்பதாக அவனுக்கு அப்பா கூறினார். இதுபோன்ற பட்டப் பெயர்களால் அழைக்கக் கூடிய கலையுணர்வு அந்த ஊர் மக்களுக்கு உண்டு. “நொறுங்கல்”, “நெட்டம்பி”, ENDகண்ணன், பங்களாவாத்துச் சுப்பாமணி, காவட்டு, “கிரீஸ்”, “ஜெமினி”, “குன்றி”, “குட்டிச் சங்கர்”, “மாட்டு விஸ்வம் மாமா”, கருப்பட்டி, “நெட்ட கிருஷ்ணையர்”, “அத்தை கண்ணன்”, “டைப்சார் கண்ணன்” , “பாவா சங்கரன்”, “வெள்ளப் பிள்ளையார்”, சின்னம்பி, பெரியம்பி என்று எத்தனையோ உண்டு. ஒவ்வொரு வீட்டிலும் ஆண்குழந்தைகளை “அம்பி” என்று அழைப்பது வழக்கம். எந்தனையோ பேர்களை “அம்பி” என்று அழைத்தாலும் எந்த அம்பியை அழைக்கிறார்கள் என்பதை மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் கலையைக் கிராமம் கற்றுக் கொடுத்திருந்தது. அது அழகாகவும் இருக்கிறது.

சரி மீண்டும் ரசிகர் மன்றத்துக்கு வருகிறேன். அந்த மன்றத்தில் “நல்ல கண்ணு” என்ற ஒரு ரசிகர் இருந்தார். “நிறைகுடம்” படத்தில் சிவாஜிக்கு கிளிக் கூடு போல ஒரு சுருளாக முடியலங்காரம் இருக்கும். நல்லகண்ணுவும் அதேபோல தனது முடியலங்காரத்தை வைத்திருந்தார். அவர் அவனுக்கும், நீலகண்டனுக்கும், ரமணிக்கும் நல்ல பழக்கமானவர். சிவாஜி கணேசன் படங்களை திருநெல்வேலிக்குச் சென்று முதல் நாள் முதல் கட்சியில் பார்த்து விட்டு வந்து அவர்களிடம் கதையை “நல்லகண்ணு” சொல்லும் அழகில் அவனும், நீலகண்டனும் மெய்மறந்து நிற்பார்கள். “அந்த சீன்ல அண்ணன் நடிப்புல பிச்சு ஓதரிட்டார்டா…அப்படி அவர் அங்க நடந்து வருவாரு.. அதுக்கே நம்ம கொடுத்த ரூவா செத்துது ” என்று அவனையும், நீலகண்டனையும் உசுப்பேற்றி விடுவார். அவர்களுக்கு அந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் திருநெல்வேலிக்குச் சென்று பார்க்கும் அளவுக்கு அவனுக்கு வசதி கிடையாது. படம் வெளியாகி நூறு நாட்களுக்குப் பிறகுதான் அந்தப் படம் அவனது கிராமத்து “டூரிங் கொட்டகைக்கோ” அல்லது அம்பாசமுத்திரத்தில் உள்ள கிருஷ்ணா, கல்யாணி திரையரங்கத்திலோ வரும். அதற்கும் அவர்களால் அவ்வளவு எளிதாகச் சென்று விட முடியாது. அவர்களது பெற்றோர்கள் அதற்கெல்லாம் விடமாட்டார்கள். அவனும் தனது தலைமுடியை “நிறைகுடம்” சிவாஜியைப் போல வைத்துக் கொள்ள முயற்சி செய்வான். “இப்ப என்ன அலங்காரம் வேண்டிக் கிடக்கு..யாருகூட ஓடிப் போப் போறே” என்று அவனுக்கு அம்மா கத்துவாள். அவன் அதைக் காதில் வாங்காமல் நடையில் மாட்டி இருக்கும் சிறிய கண்ணாடியில் தெரியும் தனது முடியைக் கலைத்துக் கலைத்து அலங்காரம் செய்து கொள்வான்.

உள்ளூர் “டூரிங் டாக்கீஸில்” படம் போடுவார்கள். அதை விளம்பரப் படுத்த அவர்கள் தெருவில் உள்ள சுவர்களில் அந்தத் தியேட்டர் வேலைக் காரர்கள் “போஸ்டர்” ஓட்டுவார்கள். மாட்டு வண்டியில் கொட்டு மேளத்துடன் ஒவ்வொரு தெருவாக “சினிமா நோட்டீஸ்” கொடுத்து வருவார்கள். காலையில் குத்துக்கல்தெரு முக்கில் இந்த சினிமாக் கொட்டுச் சத்தம் கேட்டவுடனேயே அவனும், நீலகண்டனும் அந்த வண்டியை நோக்கி ஓடுவார்கள். வண்டிக்குள் உட்கார்ந்து “சினிமா நோடீஸ்” கொடுப்பவரிடம்,”அண்ணாச்சி எங்கள்ட்ட அந்த நோடீசத் தாங்க நாங்களே ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுத்துடறோம்” என்று அவரிடம் ஒரு கொத்து சினிமா நோடீஸ் வாங்கி அவனும், நீலகண்டனும் ஒவ்வொரு வீடாகக் கொடுத்து “கட்டாயம் இந்த சிவாஜி படத்த”ப் பாருங்க” என்று சொல்வார்கள். ஏதோ அவர்களின் கைபணத்தைப் போட்டு படம் எடுத்ததைப் போலக் கெஞ்சுவார்கள். வண்டியில் அந்த வேலையாள் சுகமாகச் சிரித்தபடி உட்கார்ந்திருப்பார். “பொழுது வெடிஞ்சுதா சினிமாவுக்கு…புத்தகம் படிக்க புத்தி போமாட்டேங்கறதே” என்று அவனுக்கு அம்மா மனம் நொந்து அவனைத் திட்டுவாள்.

ஒருநாள் பாட்டனயினார்புரம் தெருவில் உள்ள சுவரில் ஒட்டப்பட்டிருந்த “கலாட்டாக் கல்யாணம்” திரைப்படப் போஸ்டரில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் சாணி அடித்து விட்டனர். சாணி அடித்தவர்களும் அதேதேருவில் உள்ள அவர்களுக்கு நண்பர்கள்தான். இருந்தாலும் “ரசிகர்” மன்றம் வேறல்லவா…கோபம் பொங்கி வர அவனும், நீலகண்டனும் போஸ்டரில் சாணி அடித்த எம்.ஜி.ஆர். ரசிகர்களிடம் தெருவில் சண்டை போட்டனர். “ரகு”, “சக்தி”, கிட்டு என்று பலர் எம்.ஜி.ஆர். ரசிகர்கள். அவனும் ஆதிவராக அப்பளம் டெப்போ கண்ணனும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். எம்ஜிஆர் போஸ்டரில் இவர்கள் சாணி அடித்தனர். தெருவில் நிறையப் பசுமாடுகள் இருந்ததால் சாணிக்குக் குறைவில்லை. சண்டைபோட்ட அனைவரும் ஒன்றாக மாலையில் குளிப்பதற்காக ஆற்றங்கரைக்கு உற்சாகமாகச் சென்று விடுவார்கள்.

ஒரு தீபாவளி அன்று காலையில் பட்டாசுகள் கொளித்திவிட்டு, இனிப்புப் பலகாரங்களைச் சுவைத்த பின்னர் அவனும் நீலகண்டனும் அம்பாசமுத்திரம் கல்யாணித் தியேட்டரில் வெளியான “ராமன் எத்தனை ராமனடி” திரைப்படம் பார்க்கத் திட்டமிட்டனர். பண்டிகைக் காலங்களில் பெரியோர்களை நமஸ்காரம் செய்தால், ஒன்றோ இரண்டோ ரூபாய் தருவார்கள். அப்படி இரண்டு ரூபாய்கள் அன்று அவர்களுக்கு வசூலாச்சு. காலையில் அவன் வீட்டில் இட்டிலியைச் சாப்பிட்டு விட்டு, எட்டு மணிக்கெல்லாம் அவனும், நீலகண்டனும் அம்பை கல்யாணியை நோக்கிக் கிளம்பினர். தாமிரபரணி ஆற்றின் குறுக்காகக் கடந்து அம்பைக்குச் சென்ற பொழுது முதல் காட்சி துவங்கி விட்டது. ஐந்து காட்சிகள் நடக்கும். இரண்டாவது காட்சி பத்தரை மணிக்குத் துவங்கும். அவர்கள் வரிசையில் நின்றனர். தரை டிக்கட்தான். நல்ல தீபாவளிக் கூட்டம். படம் முடிந்து அவர்கள் அதே ஆத்தங்கரை வழியாக நடந்து களைத்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் சிவன்கோவில் வாசலுக்கு வரும் பொழுது மாலை மணி மூன்றரை. அவர்கள் வீட்டில் இருவரையும் கலையில் இருந்தே தேடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். தெருவுக்குள் நுழையும் பொழுது,” இப்படி நல்ல நாளும் தானுமா காலைல போனவா இப்பத்தான் வரா…எங்க போயிட்டு வரான்னு கேளுக்கோ” என்று அவனுக்கு அம்மா அப்பொழுது அவன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த “குளத்து வாத்தியாரிடம்” வருத்தமுடன் முறையிட்டாள். குளத்து வாத்யாரிடம் அவன் “டியூஷன்” சென்று கொண்டிருந்தான். அவர்,” எங்கடா போயிட்டு வரேள்” என்றார். “ராமன் எத்தனை ராமனடி” சினிமாவுக்கு என்று அவன் சொன்னான். “சாப்பாட்டு ராமா” என்று அவர் அவனது முதுகில் செல்லமாக ஒரு தட்டு தட்டினார். அன்று தீப்பாவளி. அதனால் அம்மாவும் திட்டவோ, அடிக்கவோ இல்லை. “இப்படி பட்டினியோட இருந்தா உடம்பு என்னத்துக்காகும்” என்றபடியே அவன் பசிபோக்க தீபாவளி விருந்துச் சாப்பாடு கொடுத்தாள். இதுவே வேறு நாளாக இருந்தால் அவன் முதுகுத் தொலி பிஞ்சிருக்கும்.

எஸ். சங்கரநாராயணன் சார்

எஸ். சங்கரநாராயணன் அவனுக்கு எட்டாம் (8-C) வகுப்புக்குத் தமிழாசிரியர். நல்ல உயரம். முழுக்கைச் சட்டையும், பேன்ட்டும் அணிந்து வலதுகையில் ஒரு புத்தகமுமாகத்தான் அவர் வகுப்புக்கு வருவார். பாடம் நடத்தும் பொழுது கையில் புத்தகம் வைத்துக்க் கொள்ளாமல் மாணவர்களின் கவனம் எப்போதும் தான் நடத்தும் பாடத்தில் ஒன்றியிருக்கும்படி சுவையாகப் பாடம் நடத்துவார். மாணவர்களின் கவனம் சிதறினால் அவருக்குக் கோபம் வந்துவிடும். பெரியபுராணம் பாடலுக்கு மிக அழகாக, காட்சிக்குக் காட்சி கேட்பவர் மனதில் கற்பனை விரியும் வகையில் விளக்கம் கூறுவார். அவர் திருநாவுக்கரசரின் “மாசில் வீணையும் மாலை மதியமும்” தேவாரப் பாடலுக்கு விளக்கம் கூறிவிட்டு அன்றைய காலத்தில் வெளியாகியிருந்த “திருவருட்செல்வர்” படத்தில் அப்பரடிகளாக நடித்திருந்த சிவாஜி கணேசன் அவர்களது நடிப்பைப் பற்றி மிகவும் பெருமையாகச் சொல்லி, மாணவர்கள் அந்தப் படத்தை பார்க்கவேண்டும் என்றும், நாயன்மார்களின் பெருமையை அந்தப் படம் நன்றாகக் கூறுகிறது என்றும் சொன்னார். நாவுக்கரசரை நாம் பார்த்ததில்லை. இந்தப் படத்தைப் பார்த்த பிறகு இப்படித்தான் நாவுக்கரசர் இருந்திருப்பார் என்று நம்மால் கற்பனைசெய்து கொள்ள முடியும் என்றும், பல பாடல்கள் கூறும் அரிய கருத்தை ஒரு காட்சி மூலம் மக்கள் மனதில் பதிய வைக்கலாம் என்பதற்கு இந்தப் படம் ஒரு சாட்சி என்றும் சொன்னது, ஏதோ இன்று அவர் சொன்னதுபோல அவன் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.. அவனுக்கு “சினிமா சிவாஜி” என்பதுபோய், பக்திக்கும் ,தேசபக்திக்கும் கிடைத்த ஒரு அபூர்வக் கலைஞர் சிவாஜிகணேசன் என்பது புரிந்தது.

பெரியபுராணப் பாடல்களை மாணவர்கள் ரசித்துப் படிக்கவேண்டும் என்பார். அந்தப் பாடல்களை எப்படிப் பதம் பிரித்துப் படிக்கவேண்டும் என்றும் கூறுவார். அவர் பாடம் நடத்தும் பொழுது அவனும், இன்னும் சில மாணவர்களும் அவரது நாற்காலிக்கு மிக அருகிலேயே தரையில் அமர்ந்துதான் பாடத்தை கவனிப்பார்கள். அவர் தமிழ்ப் பாடல்களை உச்சரிக்கும் அழகைப் பார்த்துத்தான் அவனுக்கு தமிழ்க் கவிதைகளில் ஆர்வம் வந்தது. அவனது துரதிர்ஷ்டம் சங்கரநாராயணன் சார் அந்த வருடம் பாதியிலேயே பள்ளியைவிட்டு பேட்டையில் உள்ள “இந்துக் கல்லூரிக்கு” விரிவுரையாளராகச் சென்று விட்டார்.

சில ஆண்டுகளுக்குப் முன் அவன் அவரை சென்னையில் ஒரு மாலைப் பொழுதில் ஆழ்வார்பேட்டை அம்புஜம்மாள் தெருவில் நடைபெறும் “இலக்கிய சிந்தனை” மாதக் கூட்டத்தில் சந்தித்தான். இந்தக் கூட்டத்தை “R. A. K. பாரதி, ப. லெஷ்மணன்” இருவரும் இணைந்து பல வருடங்களாகச் சிறந்த முறையில் நடத்தி வருகின்றனர். தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று ஆண்டு விழாவாக சென்னை A . V. M. இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில், சென்ற ஆண்டின் சிறந்த சிறுகதைக்குப் பரிசும், சிறந்த தமிழறிங்கருக்கு “பம்பாய் ஆதிலெஷ்மணன் விருதும்” தந்து கௌரவிக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் கடேசி சனிகிழமை அன்று இந்தக் கூட்டம் நடைபெறும். நிறைய இலக்கிய அன்பர்கள் கலந்துரையாட ஒரு அருமையான இடமாக இந்தக் கூட்டம் இருந்து வருகிறது. இந்தக் கூடங்களால்தான் அவனுக்கு N. R. தாசன், திருப்பூர் கிருஷ்ணன், எழுத்தாளர் எஸ். சங்கரநாராயணன், ராஜ்கமல் கண்ணன், அமுதபாரதி போன்றவர்களின் நட்பு கிடைத்தது.

அப்படி ஒரு கூட்டத்தில் அவன் அந்த மாதச் சிறுகதையைத் தேர்வு செய்து, சிறுகதை பற்றிய தனது கருத்தையும் தெரிவித்தான். அந்த இலக்கியக் கூட்டத்தின் முடிவில், “எனக்குத் தமிழிலும், தமிழ்க் கவிதையிலும்” ஆர்வம் வரக் காரணமானவர்களில் இங்கே அமர்ந்திருக்கக் கூடிய ஓய்வு பெற்ற தமிழாசிரியர் திரு. எஸ்.சங்கரநாராயணன் மிக முக்கியமானவர். எட்டாம் வகுப்பில் எனக்கு இவர்தான் தமிழாசிரியர். இன்று அவர் அவரது மாணவனின் உரையைக் கேட்டது அந்த மாணவனுக்கு இன்னும் ஊக்கம் தருவதாக இருக்கிறது.” என்றான். உடனே அவர் எழுந்து, “என் மாணவன் மீ.விசுவநாதன் இன்று சிறுகதைகளைப் பற்றிக் கூறிய கருத்தும், இலக்கியத்தில் அவனுக்கு இருக்கும் ஈடுபாட்டையும் அறிந்து நான் பெருமைப்படுகிறேன். அவன் இலக்கிய உயரங்களைத் தொட வாழ்த்துகிறேன் ” என்றார். கூட்டம் முடிந்து நீண்ட நேரம் அவருடன் அவன் உரையாடிக் கொண்டிருந்தான். அவரோடு மெதுவாக நடந்து ஆழ்வார்பேட்டை பஸ் நிறுத்தம் வரை சென்று அவரை வழியனுப்பி வைத்தான். எஸ். சங்கரநாராயணன் சாரை அவன் அன்று மீண்டும் சந்தித்தபொழுது, எட்டாம் வகுப்பில் அவர் விளக்கம் சொன்ன,

“மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டரைப் பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே”

என்ற திருநாவுக்கரசரின் தேவாரமும், அந்தப் பாடலுக்கு திருவருட்செல்வரில் அப்பராக வாழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் அவன் மனதில் நிறைதிருந்தனர்.

அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “அவன், அது , ஆத்மா (16)

 1. ரொம்ப விவரமான ருசிமிக்க சரித்திரம் விசுவுடையது.. இன்னும் நிறைய எழுதுக.
   சின்ன வயதில் தோப்பு ஏறிக் கடித்த புளிப்பு மாங்காய் போல்(திருட்டுத்தனமாய்ப்போய்)
   இன்று நமக்குக் கிட்டும் மாம்பழம் கூட அவ்வளவு இனிக்காது. அதுபோல்தான் விசுவின் சின்னவயசுச்சமாச்சாரங்களும்.. தொடர்க விசு!
   யோகியார்1

 2. அன்புக் கவியோகியாரின் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.
  மீ.வி.

 3. உண்மை. பொதுவாக  எம்ஜியார்பால் அப்ராமண மாணவர்களுக்கும் சிவாஜி பால் பிராமண மாணவர்களுக்கும் ஈர்ப்பு  இருந்தது . எம் ஜி யாரை வாத்தியார் என்று தான் அன்பாக அழைப்பார்கள். அவர் படம் முதலில் ரிலீஸ் ஆனால் சாகலேட், பைசா என்று கண்டபடி தியேட்டரில் வாரி இறைத்து மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்வார்கள். பொங்கல் வாழ்த்துக்கள் அவர்கள் படம் உடையவற்றை நண்பர்களுக்கு அனுப்புவார்கள். 

  ராமன் எத்தனை ராமனடி இல் வரும் ‘அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு’  ‘நிலவு வந்து பாடுமோ’  ‘சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்’ முதலிய பாடல்கள் மனதை வருடம் பாடல்கள் .

Leave a Reply

Your email address will not be published.