மீ. விசுவநாதன்

vallamai111-300x150111

அனைத்தும் இலவசம் ! அப்படியும் ஆசை
அனைத்தும் அடங்குமா ! ஆழ நனைத்து
உழுத வயலிலும் ஒட்டாத ஒர்நெல்
எழுமே சிறுபுல் என. (81) 21.03.2015

வண்ணத்தைப் பார்க்கின்ற வண்ணத்தைச் சின்னதாம்
கண்மணிக்குள் வைத்தவனைக் கண்ணனை ; மண்ணையே
வெண்ணையாய் உண்டபடி வெள்ளையாய்ப் பல்காட்டி
மண்ணளக்கும் மாலென் மகன் . (82) 22.03.2015

பொறாமை மறையப் புகழ்வதால் புத்திப்
புறாவின் அலகிலே பூவாய் உறவு
மலரும் ; பகைமை மடிந்து மனித
குலத்தை உயர்த்துங் குணம். (83) 23.03.2015

சுயநலத்தால் பந்தம் சுகமென்றே எண்ணி
நயமாகப் பேசி நடத்தும் பயவாழ்வு
ஓர்நாளில் துண்டுபடும் ! உண்மையாம் அன்பொன்றே
நீரடித்து நீங்கா நிஜம். (84) 24.03.2015

சங்கரரின் வம்சத்தில் சத்திய தோற்றமாய்
துங்கை சிருங்கேரி தூயபீட அங்கமாய்
பாரதீ தீர்த்த பசும்பொன்னாம் சத்குருவாய்
பாரதம் வந்த பயன். (85) 25.03.2015

(சிருங்கேரி சங்கராச்சார்யாள் அனந்தஸ்ரீ விபூஷித
ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளுக்கு இன்று 65வது
வர்தந்தி தினம் (பிறந்த தினம்))

நானே பெரியோன் நலம்பல செய்பவன்
பேனா பிடித்தால் பெரியதோ ராள்நான் !
எனவே நினைப்போர் இருக்கும் திசையை
மனமே முதலில் மற. (86) 26.03.2015

கிரிக்கட்டில் வெற்றிதான் கிட்டாதென் றாலும்
சரிக்கட்டி ஆடிடலாம் ; தப்பாய் நெறிமுறை
இல்லாமல் ஆடுகிற இல்வாழ்வில் மானுடனே
நல்லமைதி கூவ நதி. (87) 27.03.2015

நீர்மோரும் வெள்ளரியும் நிச்சயம் கோடைக்குத்
தீர்மான நல்லுணவு ! தீமையை ஓர்நாளும்
கிட்டவே சேர்க்காத கீர்த்திமிகு நல்லோர்போல்
திட்டமாய் வைக்கும் தினம். (88) 28.03.2015

முன்னோர்கள் , பாதையிலே முட்களை நீக்கியதால்
என்போன்ற சின்னவர்கள் எத்தனை இன்பமாய்
உல்லாச மாகவே ஊர்கோலம் போகின்றோம் !
நல்லதே செய்வது நன்று. (89) 29.03.2015
பொந்திலே கூடும் புதுவானில் வாழ்வுமாய்
அந்தக் கிளிதான் அலைகிறது – எந்த
மழைவெயிலும் இன்பந்தான் ; மானுடனே கொஞ்சம்
உழைத்தால் உயர்வே உனக்கு. (90) 30.03.2015

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க