Category: போட்டிகளின் வெற்றியாளர்கள்

போட்டிகளின் வெற்றியாளர்கள்

  • என் பார்வையில் கண்ணதாசன்

    — ஸ்வேதா மீரா கோபால்.

     

    என் பார்வையில் கண்ணதாசன் …

     

    Kannadasanஅறுபடைவீடு கொண்டோன் அருளிய அருந்தமிழில்தான் அவ்வப்பொழுது அரும்பிய அவதாரப்புருஷர்கள் எத்தனை எத்தனை பேர்! ஆத்திச்சூடி ஆசி வழங்கிய ஒளவைப் பிராட்டியும், ஈரடியால் உலகளந்த வள்ளுவனையும் தொடர்ந்து, கண்ணனை குழந்தையாய், சேவகனாய், காதலனாய் மற்றும் அனைத்துமாய்க் கண்டு கவி பாடிய பாட்டுக்கொருப் புலவன் பாரதிக்குப் பின் அந்த கண்ணனுக்கு தாசனாகவேத் தன்னை அர்ப்பணித்துக் கவி புனைந்த கவியரசு நம் தமிழுலகம் கண்டெடுத்த நல் ‘முத்து ஐயா’ நல்முத்து!

     
     

    யார் இந்த கண்ணதாசன்?

    பொன்மனச்செம்மலின் ஆட்சிக்காலத்தில் அரசுக்கவியாய் கண்னதாசன் முடிசூட்டி கௌவுரவிக்கப்பட்டார் என்றால் அவரிடம் ஏதோ ஒரு தனித்துவம் இருக்க வேண்டும் அல்லவா?

    • அவர் புகைப்படங்களை சற்றே உற்றுப் பாருங்கள் – குங்குமப்பொட்டு இட்ட முகத்தில் கைவிரல்கள் பதித்த கன்னத்தோடு,எப்பொழுதும் ஆழ்ந்து யோசித்துக்கொண்டே இருக்கும் கண்களும் கொண்ட ஒருசீரிய சிந்தனையாளர் புலப்படுவார் நம் கண்களுக்கு.
    • ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி பெற்றதால் தானே இவரால் சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட நூற்கள், புதினங்கள் என பல படைப்புகள் இயற்ற முடிந்தது?
    • சாகித்ய விருது (சேரமான் காதலி), சிறந்த பாடல்வரிகளுக்கான தேசிய விருது (குழந்தைக்காக ) உட்பட பல்வேறு விருதுகள் பெற்ற மிகத்திறமையான தமிழ்க்கலைஞர்.
    • மாபெரும் தத்துவ முத்துக்களை பாமரருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் வாழ்வியல் நெறிகளை எடுத்துரைத்த யதார்த்தவாதி.
    • சமுதாய சீர்கேடுகளைச் சாடும் சீர்திருத்தவாதி.
    • திறமைமிகு பல கலைஞர்களை கண்டெடுத்து, தட்டிக்கொடுத்து முன்னுக்கு கொண்டுவந்த நல்மனம் படைத்த படைப்பாளர்.
    • காலத்தால் அழிக்க முடியாத பல திரையிசைப் பாடல் வரிகள் வழங்கிய சிந்தனைச் சுரங்கம்.
    • கம்பனைக் கற்றபின் ஆத்திகராய் மாறிய நாத்திகர். (கவியரசின் பல பாடல்களில் கம்பனின் தாக்கத்தைக் காணலாம்) – “அர்த்தமுள்ள இந்து மதம் “, இயேசு காவியம் ” போன்ற மாபெரும் காவியங்கள் படைத்த ஆன்மீகவாதி.
    – இன்னும் சொல்லப்போனால் இவர் போன்ற ஒரு கவி இனி உதிக்கத்தான் வேண்டும். ஆதலால் தான் மக்களின் கவியரசே அன்று நீவிர் ஆட்சியாளர்களின் அரசு கவி ஆனீரோ?

     
     

    கடவுளின் செல்லப்பிள்ளையோ?

    இறைவன் என்பவர் யார், அவரை வழிபடுவது எப்படி, நாடுவதும் எப்படி என்ற உயர்ந்த தத்துவத்தை மிக எளிமையாக, ஏன் சமயத்தில் நகைச்சுவையும் சேர்த்து கூறுவதை பாருங்கள் –

    • “பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு இராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் – அவனை புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன் …”
    • “நீயே உனக்கு என்றும் நிகரானவன் ….
    துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதய்யா
    வெறும் தூபத்தில் உன் இதயம் மயங்காதய்யா
    விதி கூட உன்வடிவை நெருங்காதய்யா ……….”
    • (மனிதனே) – “காக்கைக் குருவிப்போல் கவலையற்று நீயிருந்தால் , யாக்கை கொடுத்தவனை யார் நினைப்பார் இவ்வுலகிலே “
    என்று கடவுள் நமக்கு துன்பம் கொடுப்பதே அவரை நினைக்கத்தான் என்றும் கடவுள் பக்கம் பேசும் இவரே, வேறு சமயத்தில், துன்பம் நேர்கையில் கடவுளை ஒரு மகன் போல் உரிமையுடன் கேள்வி கேட்பதை பாருங்கள் ….

    • “….கடவுளே உன்னையும் யாம் தேம்பி அழ வையோமோ …”

    என்ற வரி நம் முன்னாள் பிரதமர் நேருவின் இரங்கல் மடலில் வரைகிறார்; ஆம், நம்மை அழச்செய்யும் கடவுளை நம்மால் அழ வைக்க முடியுமோ? என் வாழ்வில் துன்பங்கள் வந்து சேரும் பொழுது மனதில் தோன்றும் முதல் வரி இதுவாகத்தான் இருக்கும்….

    மற்றும் ஒரு பாடலில் ,

    • “…..மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
    நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
    இனம் பார்த்து என்னை சேர்க்க மறந்தாய் கண்ணா
    நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா… “
    (கண்ணா கருமை நிற கண்ணா….. )

    என்று நம்மை துன்பத்தில் ஆழ்த்திவிடும் கடவுள் நல்ல இடம் பார்த்து சுகமாய் இருப்பதும், நம் துன்பத்தை இறைவன் ஒரு முறையாவது அனுபவித்தால் தான் அதன் வலி புரியும் என்று துயரில் உழலும் மனங்களுக்கு கம்பீரமான குரல் கொடுக்கும் அழகே தனி தான்!

     
     

    கற்பனையில் முளைத்த காதலோ ?

    இவ்வுலகில் காதலர்கள் அனைவரும் அவசியம் கற்க வேண்டியது கவியரசின் பாடல்களே. அவை அனைத்துமே தமிழ் அறியாதவர்கள் கூட மொழிப்பெயர்த்து அறிய வேண்டிய பொக்கிஷம் அன்றோ. கவியரசரிடம் ஒருமுறை ,” ஏன் கவிஞரே,

    • “ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன…”
    என்ற பாடலில் ஒருவன் ஒருத்தியை நினைத்துவிட்டால் என்றாலும் பாடல் மெட்டுக்கு பொருந்துமே” என்றதற்கு, கவிஞர் சளைக்காமல் சட்டென்று – ‘ஒருத்திதான் ஒருவனையே நினைப்பாள் ….ஒருவன் என்ன ஒருத்தியை மட்டுமா நினைப்பான் ?’ என்று வினவினாராம்.

    ஆஹா, கண்ணதாசனே காதல் வலையில் விழுந்து ஏமாறும் பெண்களின் நிலையை இதைவிட தெளிவாக எவர் உரைப்பர் ?…..

    காதலனும் காதலியும் எவ்வாறு பரஸ்பரம் புரிந்துக்கொண்டு,ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ,ஓர் உயிர்,ஓர் மனமாய் ,கருத்து ஒருமித்து வாழ வேண்டும் என்பதை

    • “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்; நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் .
    நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்; நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் ….”
    என்ற பாடலில் கூறுகிறார்.

    • “பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
    உன்னைத் தேன் என நான் நினைத்தேன் ….”
    என்ற வீர அபிமன்யு பட பாடலில் அடுத்த நாள் போரில் அபிமன்யு மாண்டுபோகவிருப்பதை, இறுதியில் …
    “இனித் தேன் இல்லாதப்படி கதை முடித்தேன் …”
    என்று சூட்சமமாக சொல்லும் அழகைக் காணுங்கள். இப்பாடலுடன் ,

    • “அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே ………..”
    என்ற பாடலையும் சேர்த்து நோக்கும் பொழுது கவிஞர் புகுந்து விளையாடியிருக்கும் வார்த்தை விளையாட்டு கண்டு நம் தமிழ் போல் வேறு மொழியில் எவரேனும் இப்படி எழுத முடியுமா என்ற கேள்வி எழுகிறது .

     
     

    கற்பனைக்கு அப்பாற்பட்டவரோ?

    கவியரசரால் எழுதப்படாத சொந்தங்கள் இல்லை, அவர் சாடாத சமுதாய சீர்கேடுகள் இல்லை, அவர் தொடாத வாழ்வியல் நெறிகள் இல்லை, தன் வார்த்தைகளின் கதிர்வீச்சால் மிக கடினமான தத்துவங்களையும் எளிமையாகப் புரியச் செய்யும் தத்துவச் சுடர் அன்றோ இவர்?

    “உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
    உனக்கு நீதான் நீதிபதி
    கதைக்கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
    கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு
    காப்பாற்ற சிலபேர் இருந்துவிட்டால்
    கள்வர்கள் வாழ்விலும் ஞாயமுண்டு “

    என்று கூறும் கண்ணதாசன் என்னவோ வெறும் கற்பனையும், நல்ல தமிழும், நிறைந்த தமிழ் இலக்கிய அறிவும் மட்டும் கொண்டு கவிகள் புனைந்ததாக ஒரு சாரார் சொல்வதுண்டு; இது அவ்வாறு உரைப்பவர்களது அறியாமையையேக் குறிப்பதன்றோ? திரைப்படப் பாடல்களுக்கு மேல் இவர் படைத்த நூல்களும் கவிதைகளும் என அணைத்து படைப்புகளுமே அறிவுப்பெட்டகம் என்பது தானே நிதர்சனமான உண்மை? ஒரு முறை, மனிதனுக்கு நம்பிக்கை அவசியம் ஆனால் அகந்தை இருக்கக் கூடாது; தன்னம்பிக்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இந்த அரசுக்கவி கூறும் அழகைப் பாருங்களேன் – டென்மார்க், போலாந்து போன்ற சிறிய நாடுகளைக் கைப்பற்றிய ஹிட்லர் பேரரசு ரஷ்யாவையும் துச்சமாய் எண்ணி கைப்பற்ற துணிந்து, முயன்று தோற்றது.. – என்று நம்மால் முடியும் என்ற நம்பிக்கைவேண்டும் ஆனால் அதே சமயம் நம்மால் மட்டும்தான் முடியும் என்ற அகந்தையும், ஆழம் தெரியாது கால் நனைக்கும் அளவுக்கு மீறிய நம்பிக்கையும் இருத்தல் கூடாது என்பதை விளக்குகிறார். மற்றொருமுறை, இந்தியாவுடன் போர் தொடுக்க வந்த பாகிஸ்தானையும், சீனாவையும் சீறிப் பாய்ந்து விரட்டும் பாங்கைக் காணுங்களேன்;

    • “தாகூர் வடித்து வைத்த தாய் வணக்கப் பா பாடி
    லாஹூரை நோக்கி நமது படை முன்னேறும் ……”
    சிந்து,சியால்கோடு என்று அணைத்து இடங்களிலிருந்தும் திரண்ட நம் பெருஞ்சேனை,

    • “…வந்து விளையாடும் வஞ்சகரை நாள்முழுதும்
    பந்து விளையாடுவது போல் பாய்ந்து விளையாடுதம்மா…”
    என்றும்,

    • “திங்களும் வானும் திரிகிற வரையில்
    எங்களுக்கே உரிமை இந்நாட்டிலே
    யாரது வீட்டில் யாரது பாட்டு
    வேரதிகாரம் பாரத நாட்டில்
    வேர் பிடிக்க விடமாட்டோம் ….”

    என்று மிகவும் ஆணித்தரமாக நம் நாட்டின் உரிமை நமக்கு மட்டுமே என்றும் அதைப் பறிக்க வருபவர் மண்ணோடு நடப்படுவர் என்றும் ஊர்ஜிதப்படுத்துகிறார். இடைப்பட்ட அமைதிக்காலத்தில் பகைவனைக்கூட வாழ்த்தும் இந்த நாட்டுப்பற்று நிறைந்தஉயர்குடிமகன்,

    • “எங்கள் பகைவர் எம்மை அணுகாமல்
    தங்கள் பூமியில் தழைத்துயிர் வாழ்க …”
    என்றும் தோழமையோடு வாழ்த்துகிறார்.

    இன்றுபோல் இணையம் போன்ற வசதி இல்லாக் காலத்திலேயே வரலாறு, வாழ்வியல் ,அரசியல், அறிவியல், ஆன்மீகம் என அணைத்துத் துறைகளிலும் தனது பிரத்தியேக முத்திரை பதித்த கண்ணதாசனே, நீ மட்டும் இன்று எங்களுடன் இருந்திருந்தால் எத்தனை இணையதளங்களை இணைத்து இன்னும் எத்தனை சிந்தனைக்கதவுகள் திறந்து எத்தனை அறிவிற்கான விருந்துகள் படைதிருப்பாயோ?….ம்ம் ….

     
     

    என்னதவம் செய்தேனோ ?

    தமிழ் என் தாய்மொழியாய் தமிழ்நாட்டிலே பிறந்ததற்கு நான் என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை. என் தாயும் எனது சிறுவயது முதலே கண்ணதாசன் போன்ற சிறந்த தமிழ்க் கலைஞர்களின் கவிதை வரிகளை பாடிக்கொண்டே வீட்டில் அனைத்துக் காரியமும் செய்து விடுவார். இதைக்கேட்டு வளர்ந்த எனக்கும் அவ்வரிகளும் அதன் அர்த்தமும் ஆழ்நெஞ்சில் பசுமரத்தாணிப்போல் என்றும் பசுமையாக பதிந்து விட்டது. இப்படித்தான் நான் போட்டிகளில் தோற்று வருந்தினால்
    இம்முறை “போனால் போகட்டும் போடா….”அடுத்தமுறை வெற்றி பெறலாம் என்றும்

    • “உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
    உலகத்தில் போராடலாம்;
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
    தலை வணங்காமல் நீ வாழலாம் …”
    என்ற கவிஞரது புத்துயிர் ஊட்டும் பாடலைப் பாடி என்னைத் தேற்றுவார்.

    சில சமயங்களில்,மிக்ஸியில் அரைக்க நேரும் பொழுது மின்சாரம் துண்டிக்கப்பட்டால்,

    • “யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க …”

    என்று வேடிக்கையாகக் கூறிக்கொண்டே ஆட்டுக்கல்லில் தயங்காது அரைத்து நிமிடத்தில் காரியத்தை முடித்து விடுவார்.
    இவ்வாறு சூழலுக்கேற்ப ஏதேனும் சில வரிகளை பாடிக்கொண்டே வேலை செய்வதும் இன்றும் என் காதில் ஒலிக்கிறது.
    என் தாய்க்குப் பிடித்த மற்றொரு பாடலின் வரிகள் –

    • “..பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது –
    கருடா சௌக்கியமா …”
    (அதற்கு கருடன் சொன்னது – )
    “யாரும் இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால்
    எல்லாம் சௌக்கியமே ..”

    இன்றும் வன்முறையை எதிர்க்க மறுக்கும் நாடுகள் சிலவற்றில் தீவிரவாதிகள் பலரும் மிக சௌக்கியமாக இருப்பதுடன் இவ்வரிகளை நாம் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.

    இது போன்ற இன்னும் எண்ணற்ற தத்ரூபமான வரிகளில் சிறு வயதிலிருந்தே ஊறியதால்,அவை என் உயிருடன் ஒன்றெனக் கலந்து என் வாழ்வில் ஒரு ஆக்கப்பூர்வமான தாக்கத்தையும் ஏற்படுத்திவிட்டது.

     
     

    வாழையடி வாழையாய் …

    என் குழந்தையை தூங்கவைக்க நான் நாடுவதும் கவியரசிரின் ஈடு இனையற்ற தாலாட்டுப் பாடலே –

    • “ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
    மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
    அவன் வாய் நிறைய மண்ணை உண்டு
    மண்டலத்தைக் காட்டியப் பின்
    ஓய்வெடுத்து தூங்குகின்றான் தாலேலோ …………..”

    என்ற கவிஞரின் குளிர்ந்த வரிகளில், M.S.விஸ்வநாதன் அவர்களின் அமிர்த இசையில் அமைந்த தென்றலாய் தாலாட்டும் கிருஷ்ணகானப் பாடலே நான் பாடும் தாலாட்டுப் பாடலும் ஆகும். என் தாய் எனக்கு ஊட்டி வளர்த்த நற்றமிழ் வரிகளை எனது குழந்தைகளுக்கும் சமையம் வரும்பொழுது எடுத்துரைத்து அவர்கள் வாழ்வு தன்னம்பிக்கை நிறைந்த வாழ்வாய் அமைய முயற்சிப்பேன். இப்படியாக தலைமுறைகள் தாண்டியும் கவிஞரின் புகழ் நிலைத்து நிற்கச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமையன்றோ?

    ஆம் ! ஏன் கவிஞரே,அன்றே நீவிர் முழங்கி விட்டீரே,
    • ” நான் நிரந்தரமானவன்,அழிவதில்லை
    எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை “
    என்று; அக்கூற்று நினைவாக உமது பூதஉடல் அழிவினும் உமது வைர வரிகள் தமிழ் உள்ளமட்டும்,ஏன் இந்த வானும் மண்ணும் உள்ளமட்டும் உயிருடன் வாழ்ந்து கொண்டே இருக்க நிச்சயம் எங்களால் இயன்றதை நாங்கள் செய்வோம்….

     

    கவிஞர் வாழ்க;அவர் கவிதைகள் வாழ்க
    கண்ணதாசன் வாழ்க;கண்ணிமைக்காது
    கற்கத் தூண்டும் அவர் படைப்புகள் வாழ்க
    கண்ணே, கலைமானே நின்புகழ்
    காலத்தும் நிலைத்து நிற்கட்டும் !!!!!!

     

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    –ராஜலக்ஷ்மி பரமசிவம்

    என் பார்வையில் கண்ணதாசன்

    Kannadasanகண்ணதாசன் பாடல்கள், கவிதைகள் பற்றிய கட்டுரைப் போட்டியில் சேர்ந்து கொள்வது என்று தீர்மானமான பின்தான் யோசிக்க ஆரம்பித்தேன். கவியரசைப் பற்றிய கட்டுரையை நான் எழுதுவதா…….. ……சற்றே தயங்கி ஓடி ஒளிந்து கொண்ட மனசாட்சியைப் பிடித்து இழுத்து வைத்து , “கவிதை என்பது மெத்தப்படித்தவர்கள் மட்டுமே படித்து ரசிப்பது என்கிற நிலைமையை மாற்றி பாமரரையும் சேரும் விதமாய் கவிதை எழுதியவர் நம் கவிஞர். அதனால் நீ ரசித்த அவருடைய கவிதைகள் பற்றி எழுத என்ன தயக்கம்?” என்று மனசாட்சியை சமாதானப்படுத்தி விட்டு எழுத அமர்ந்தேன்….

    அடுத்த பிரச்சினை தலை தூக்கியது…

    எந்த விதமான கண்ணதாசன் பாடல்களைப் பற்றிக் கட்டுரை வடிப்பது என்று அலைபாய்ந்து கொண்டிருந்தேன். காதலா, வீரமா, ஆன்மீகமா, தத்துவமா, தேசப்பற்றா, சமுதாய அக்கறையா …. ….எதைப் பற்றி எழுதுவது எதை விடுவது. கவியரசு எழுதிக் குவித்திருப்பவை எண்ணற்றவை. ஏராளமோ ஏராளம். அத்தனையும் முத்துக்களே. அதில் தனியாக ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டால் மற்றவை விடும்படி ஆகிவிடுமே என்று தோன்ற நாம் ஏன் என்னைப் பாதித்த , பிடித்த, நான் மயங்கிய பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால் என்ன என்று தோன்ற அப்படியே கட்டுரை எழுத ஆரம்பிக்கிறேன்.

    மீண்டும் ஒரு சுணக்கம். எனக்குப் பிடித்த கவிஞரின் பாடல்களோ ஏராளம். எதைச் சொல்ல…. எதை விட…..மிகசிலப் பாடல்களை பற்றி எழுத நினைத்தேன்.

    ஒரு சில பாடல்கள் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தைத் தொகுத்துக் கட்டுரையாக எழுதுகிறேன்.

    நான் பள்ளி செல்லும் வயதில் , சினிமா பார்ப்பதும், சினிமா பாட்டு கேட்பதும் இமாலயக் குற்றம் என்கிற நிலை இருந்த நாளில் கூட என் மனதில் புகுந்த கொண்ட பாட்டு,

    அம்மா என்பது தமிழ் வார்த்தை
    அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
    கவலையில் வருவதும் அம்மா அம்மா

    அன்றைய சிறு வயது சங்கடங்களுக்கு மட்டுமா “அம்மா அம்மா “. இன்றும் கூட நான் சவால்களை எதிர் கொள்ளும் போதும், கவலைகளில் நான் மூழ்கும் போதும் தெம்பு தருவது ” அம்மா ” என்கிற வார்த்தை தான். எத்தனை நிதரிசனமான உண்மை. அதை அழகிய பாட்டாய் வடித்து நமக்குள் ஊற்றெடுக்கும் தாய் பாசத்தை நாமே உணரும்படி செய்தது இந்தப் பாட்டு என்று சொன்னால் மிகையாகாது. அந்த சிறு வயதில் என்னைப் பாதித்த மற்றுமொரு பாட்டு என்று சொன்னால் அது இந்தப்பாட்டு .

    அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
    ஆதி பகவன் முதலென்றே உயர வைத்தாய் தேவி 

    சரஸ்வதி சபத்தத்தில் வரும் இந்தப் பாட்டு நம் மனதை உருக வைத்தப் பாடல்களில் ஒன்று. இந்தப் பாட்டுக் காதில் விழுந்தாலே நம் கண் முன் சரஸ்வதியின் உருவம் வருவதைத் தடுக்க முடியாது. அத்தனை வலிமை வாய்ந்த வரிகள். இருபது முப்பது வருடங்களுக்கு முன் இந்தப் பாட்டு மிக மிகப் பிரபலம். பல சிறுவர் சிறுமிகளின் மனதைத் தொட்ட பாட்டு என்றே சொல்ல வேண்டும்.

    சகோதரப் பாசம் பற்றி எழுதியுள்ள பாடல்கள் உணர்ச்சி மிகுதியால் கண்கள் குளமாகும். பாசமலர் படத்தில் வரும் அண்ணன் தங்கைப் பாசத்தை கவியரசர் சொல்லும் விதமே அலாதிதான்.

    சிறகில் எனை மூடி அருமை மகள் போல
    வளர்த்த கதை சொல்லவா
    கனவில் நினையாத காலம் இடை வந்து
    பிரித்த கதை சொல்லவா…

    என்று ஒரு தங்கை தன் சகோதரன் மேல் கொண்டிருக்கும் எல்லையற்ற அன்பை விளக்கும் வரிகளில், நாம் நம்மையே தங்கையாகவோ அண்ணனாகவோ நினைக்கத் தவறுவதில்லை என்பது உண்மையே!

    பதின்ம வயதிலோ சொல்லவே வேண்டியதில்லை. காதல் ரசம் சொட்டும் பாடல்கள், திருட்டுத் தனமாய் மனதில் போய் ஒளிந்துக் கொண்டு இன்றளவும் வெளியே வர மறுக்கும் பாடல்கள் பட்டியலிட்டால் பக்கம் போதாது. “அத்திக்காய் அத்திக்காய் ” பாடல் மிகவும் மென்மையாக அதே சமயத்தில் காதலர்களிடையே இருக்கும் காதலின் மகத்துவத்தை அருமையாய் விளக்கும் பாடல்.

    “மாலைப் பொழுதின் மயக்கத்திலே ” பாடல் திருமதி சுசீலா குரலின் இனிமையுடன் ஒலிக்கும் போது மயங்காதவர்கள் யார்? இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    சிவகங்கை சீமையில் வரும் “கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்” என்கிற பாடலைக் கேட்கும் போது மனம் கண்டிப்பாய் அவரவர் திருமண நிகழ்வை மீண்டும் மனதிற்குள் பார்த்து மகிழாமல் இருக்க முடியாது. நம்மை மீண்டும் இளமைக்குத் திருப்பும் சக்தி வாய்ந்தவை இந்தப் பாடல்கள்.

    பாடலுக்கும், கவிதைக்கும் இந்த சக்தி உண்டா என்கிற வியப்பு மேலிடுகிறது. கண்ணதாசனின் பேனா மை செய்யும் விந்தையல்லவா இது.

    சிறுவர்களுக்கும், வாலிப வயதினருக்கும் மட்டுமா கவியரசு பாடல்கள் புனைந்துள்ளார். எல்லா வயதினருக்கும், எல்லா வித நிலையிலும் நாம் ஆறுதல் தேடிக் கொள்ள உதவியாய் பாடல்கள் வந்து விழுந்திருக்கின்றதே! வாழ்வின் ஓர் அங்கமான சோகத்தையும் விடவில்லை கவிஞர். சோகப் பாடல்களில் சோகத்தை பிழிந்ததோடு இல்லாமல் ஆறுதலும் தரவல்லவர் கவியரசர்.

    காலம் ஒருநாள் மாறும் – நம்
    கவலைகள் யாவும் தீரும்
    வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
    வந்ததை எண்ணி அழுகின்றேன்
    சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான்
    அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

    கவலைகள் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்து விடலாகாது என்பதை எவ்வளவு எளிதாய் காலம் மாறினால் கவலைகளும் நீங்கும் என்பதில் அழகாய் விளக்குகிறார்.

    சோதனைமேல் சோதனை போதுமடா சாமி
    வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி

    என்கிறப் பாட்டை கேட்கும் போது மனம் கனத்துப் போவதைத் தடுக்க முடியவில்லை. சோதனைகள் பார்க்காத மனிதர்கள் உண்டா? சவால்களும் வாழ்க்கையின் அங்கமே என்கிற ஆறுதல் உணர்வைத் தரும் பாடல். கண்டிப்பாக அவர் எதிர் நோக்கிய சவால்களே இப்பாடலின் ஆதாரம் என்றே நான் நம்புகிறேன்.

    கவிஞர் மரணத்தை விட்டு விட்டாரா என்ன? அதையும் பாட்டிற்கு கருப்பொருளாக்கும் தைரியம் நம் கவியரசுக்கு மட்டுமே உண்டு என்று நினைக்கிறேன். அந்தப்பாட்டு எவ்வளவு பெரிய ஹிட் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

    வாழ்க்கை என்பது வியாபாரம்; வரும்
    ஜனனம் என்பது வரவாகும்; அதில்
    மரணம் என்பது செலவாகும்
    போனால் போகட்டும் போடா

    இரவல் தந்தவன் கேட்கின்றான் ; அதை
    இல்லை என்றால் அவன் விடுவானா?
    உறவைச் சொல்லி அழுவதனாலே
    உயிரை மீண்டும் தருவானா?

    இந்த வரிகளில் சொன்னவை அத்தனையும் உண்மை தானே! மரணத்தைக் கூட லாவகமாய் கையாளும் தந்திர வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் கவியரசே என்று சொல்லலாம் .

    கண்ணதாசன் பெயருக்கு ஏற்றார் போல் பக்திமான் கூட. “திருமால் பெருமைக்கு நிகரேத ” என்கிற பாடலில் பெருமாளின் பத்து அவதாரங்களின் காரணத்தையும், அவதார மகிமையும் இந்தப்பாடலில் ஒளிர்வது கண்கூடு. இது போல் இன்னும் நிறைய பாடல்கள் பக்தி மணம் கமழ எழுதிவைத்துள்ளார் கவிஞர். அத்தனையும் எழுத இங்கே எனக்கு இடமில்லை.

    கவிஞர் தேன் மழையாய் பொழிந்திருக்கும் பாடல்களில் ஒரே ஒரு துளி எடுத்து சுவைத்ததில் நான் பெற்ற இனிமையை இங்கே பகிர்ந்திருக்கிறேன்.

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    — சரஸ்வதி இராசேந்திரன்

     

    என் பார்வையில்  கண்ணதாசன்

     

     

    Kannadasanஎன் பார்வையில்  கண்ணதாசன்   குறை  நிறைகளுடைய  ஒரு சராசரி மனிதன், படிப்பறிவு   இல்லாவிட்டாலும்  பட்டறிவால்  வாழ்க்கை அவலங் களையே  பாடல்களாகப் புனைந்தவர்.  வெளிப்படையானவர், ஒரு நாத்திகனாக இருந்து ஆத்திகமானவர். அவர் ஒரு பலகோண கவி என்றால் மிகையில்லை. அதுவும் தமிழ்த் திரைப்பட வரலாற்றிலே பல்லாயிரக்கணக்கான பாடல்களை எழுதி மக்கள் மனதிலே  நீங்காத இடத்தை பிடித்து  சிம்மாசனமிட்டவர்.

    போன தலைமுறையிலிருந்து இன்றைய தலைமுறை வரை அவரது பாடல்களை விரும்பிப் பாடுவதிலிருந்தே இதுபுலப்படும்.  வாழ்க்கை நிதர்சனங்களையே பாடல்களாகப்  புனைந்ததினால் அவருக்கு மட்டுமல்ல நம் ஒவ்வொருவருக்கும் கூட அவை பொருந்தியிருக்கின்றன. அவர் பாடல்கள் பாமரனும் புரிந்து கொள்ளும் அளவில் எளிமையாக இருந்தன. என் வாழ்க்கையில் எற்பட்ட சில சிக்கலான நேரங்களில் ‘’அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தாலாடும்” பாட்டு மன அமைதியை தந்திருக்கின்றது அவரது.

    கருவிலேயே திருவுடைய கவி கண்ணதாசன்.  ஞான சம்பந்தர், குமர குருபர் போன்று ஒரு பிறவிக் கவி. குடும்பக் கஷ்டம் ஏற்படும் போது சொந்த அண்ணன் தம்பி கூட உதவாத காரணத்தால் விளைந்ததுதான் “அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான  உலகத்திலே’’ பாடல்.  இந்தபாடல் நமக்கும் பொருந்தும் தானே?

    நம் நெருங்கிய உறவினர் நம்மை விட்டுப்போகும் போது மனம் விட்டுப்போயிடும். அந்த நேரத்தில் உண்மையை விவரிக்கும் ‘’போனால் போகட்டும் போடா இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?’’ பாடல் எத்தனை கருத்துச்செறிவான பாடல். இதை கேட்டதும் தன்னாலேயே மனம் அமைதியாயிடும். “வீடு வரை உறவு  வீதிவரை மனைவி காடு வரை பிள்ளை கடைசிவரை யாரோ?”  மனிதனை தெளிய வைக்கும் பாடல்கள்.

    கனி பிழிந்த சாரங்களினால் காதல் கவிதை களையும் புனைந்தவர். “ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம்”, “பொன்னெழில் பூத்தது புது வானில் வெண்பனி தூவும் நிலவே நில்”, “ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே …நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசி போவோம் குயிலே”  எத்தனை நாசுக்கான காதல் பாடல்கள்.

    மனிதனின் குண நலன்களை படம் பிடித்துக்காட்டுவதில் அவருக்கு இணை அவரே ‘’போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியை கொடுத்தானே, அதில் பொய்யும், புரட்டும், திருட்டும் கலந்து பூமியை கெடுத்தானே’’,  “இறந்தவனை சுமந்தவனும்   இறந்திட்டான் அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்திட்டான்”, “இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்,  உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்றுதான்”,’ அவர் தன் குறைகளை என்றுமே மறைத்ததில்லை. மதுத்தண்ணீர் விட்டேதான் தன் கவிதைகளை வளர்த்தியிருக்கிறார். அதன் விளைவுதான் ‘’ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு  ஒரு கோலமயில் என் துணையிருப்பு”.  அவரைப்பொறுத்தவரையில் கெட்டபின்புதான் ஞானி ஆகியிருக்கிறார். அதையும் கூட பாட்டாக வரித்துள்ளார் “கெட்டபின்பு ஞானி” என்று.

    நகைச்சுவையையும் அவர் விட்டு வைக்கவில்லை “பக்கத்திலே கன்னி பெண்ணிருக்கு  கண்பார்வை போடுதே சுருக்கு”, “வாழைத்தண்டு போல உடம்பு அலேக் நான் வாரி அணைச்சா வழுக்கிறியே  நீ அலேக்”. அரசியல் அவலங்களையும்  அலசியிருக்கிறார் ‘’சிரிப்பு வருது சிரிப்பு வருது
    சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது”. கண்டனக்கார்கள் கூட அவர் கூட கை கோர்த்து நடந்தார்கள் அவரின் நகைச்சுவையைக்கண்டு.

    “தமிழே அமுதே அழகிய மொழியே’’ என்ற பாடல் அவரின் தமிழ்ப் பற்றைக் காட்டியது. அவர் எழுதிய  தத்துவ  பாடல்களிலேயே அவரைக்கவர்ந்தது “பரம சிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது”,  என்ற பாடல். எனக்குமட்டுமில்லை எல்லோருக்கும் பிடித்த பாடல் அது. எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய பாடல்கள் ஏராளம். அவர் ஒரு தெய்வீக கவி.  அவரொரு  காதல் கவி. அவரொரு  தத்துவக்கவி. அவரொரு தமிழ்க்கவி. அவர் ஒரு சீர்திருத்தக் கவி … இப்படி அவரை சொல்லிக்கொண்டேபோகலாம்.

    அர்த்தமுள்ள இந்து மதம் எழுதி அவர் ஒரு முழுமையான ஆன்மீக வாதி என்பதை நிரூபித்து விட்டவர். ஏசு காவியம் பாடி  எம்மதமும் சம்மதம் என்பதை காட்டியுள்ளார். அவரைப்பற்றி எழுத தாள்போதாது, நாள்போதாது  ஆகவே இத்துடன் முடிக்கிறேன்.  தமிழ்த்திரை உலகம்  உள்ள வரை  அவர் புகழ் ஓங்கிக்கொண்டேதான் போகும்.  எங்கள் இதயம் இயங்கும் வரை உன்   பாடல்கள்  ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் கண்ணதாசா உன் புகழ் எண்ணதாசா.

     
     
     
     
     
     
     
     
    மன்னை சதிரா (சரஸ்வதி இராசேந்திரன்)
    51,வடக்கு ரத வீதி  ,மன்னை
    sathiramannai@gmail.com

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    — சாரதா சுப்பிரமணியன்

     

    கண்ணதாசன், என் பார்வையில் …

     

     

    Kannadasanகாவிரிப்பூம்பட்டினம் எனும் ஊரில் ஒரு சமயம் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் அழிவினால் பலகுடும்பங்கள் தத்தம் வீடுகள் பொருட்கள் யாவையும் இழந்து தவிக்கையில் மதுரையை ஆண்ட பாண்டியமன்னன் அவர்கட்டு ஓர் ஊரினையே குடியமைக்க கொடையாகத் தருகிறான். அந்தமக்களும் அங்கு தங்கி வாணிபம் செய்து புதுவாழ்வு தொடங்கினர். பல கோயில்கள் கட்டினர், பாடசாலைகள் தொடங்கினர். அந்த இடம்தான் தற்போதைய செட்டிநாடும் அதன் சுற்றுப்புறமும்.

    செட்டிநாடு என்றாலே அங்குள்ள மக்கள் பேசும் தமிழுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. அதில் கவிதைநயம் இருக்கும், தமிழ்பற்று உண்டு, மொழியின் ரசனை எல்லாம் இழைந்து இருக்கும்.செட்டிநாடு ஒரு தமிழ் பாற்கடல் என்றால் மிகையாகாது. உதாரணமாக ஓர் ஆச்சி(வயது முதிர்ந்தோரை அப்படித்தான் அழைப்பர்)கவலையுடன் அமர்ந்து இருந்தால், மற்றொருவர் அவரிடம் வந்து “என்ன கவலையாக இருக்கீக… சொல்லுங்க” என்றால் அதற்கு அவரின் பதில், “என்ன சொல்ல, ஒண்ணு ஒண்னாசொல்லவா ஒருமிக்க சொல்லவா” என அழகிய நடையில் திருப்பி வரும். அதேபோல் ஒருவரை கோபித்துக் கொள்ளும் சமயத்தில் கூட அழகாகக் கூறுவார்கள். “கோவேறுக்கழுதைக்கு குடைப்பிடித்த கழுதை” என்று எதுகை மோனையுடன் கூடியதா அழகாகக் கோபிப்பார்கள். இப்பேர்பட்ட செட்டிநாடெனும் தமிழ்- -பாற்கடலில் வந்த அமிழ்தம் நம் கவியரசர் கண்ணதாசன். அந்த அமிழ்தத்தில் இருந்து கிடைத்த பலதுளிகளில் இருந்து சில துளிகளை நான் எப்படி பார்க்கிறேன் என்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    என்னைப் பொறுத்தமட்டில் கண்ணதாசன் வெறும் கவிஞர் மட்டும்மல்லர். வாழ்க்கையில் நிகழும் பல நிகழ்ச்சிகளையும் உணர்ச்சிகளையும் வண்ணமயமாகக்குழைத்து,அதில் தமது பாட்டுத்திறன் எனும் தூரிகையால் வாழ்க்கைச்சித்திரத்தை வனப்புற வரைந்த வண்னணதாசன் என்பேன்.

    வீட்டில் குழந்தை பிறந்தவுடன் தொட்டில் வைபவமா? வளரும் குழந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்தா? பக்கத்துவீட்டுப்பெண் சடங்காகி விட்டாளா? எதிர் வீட்டுப்பெண்ணுக்கு வளைகாப்பு சீமந்தமா? அடுத்தமாதம் வீட்டில்திருமணம் நடக்க உள்ளதா? விருந்தாளிகள் யார்வருகிறார்களோ இல்லையோ…தனது அழியாப்புகழ்பெற்ற இனிய வாழ்த்துப்பாடல்கள் வழியாகக் கண்ணதாசன் வீட்டுக்குள் ஆஜர் ஆகிவிடுவார்.

    “இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவினில்” பாடலில் மனதை பறிக்கொடுக்காதவரும் உண்டோ? “மலர்ந்த்து மலராத பாதிமலர்” பணக்கார தாலாட்டு என்றால் “பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்” மனதைத்தொடும் ஏழையின் தாலாட்டு! எந்த பாடலை சொல்வது?அப்பா! கடல் என்றால் தாலாட்டும் தமிழ்க்கடல்தான்

    இளமைப்பருவத்தில் அரும்பும்காதல், ஒருதலைக்காதல், நிறைவேறாக் காதல், தத்துவப்பாடல்கள், சோக ரசம் சொட்டும் பாடல்கள், புறக்கணிக்கப்பட்ட முதுமையில் முதிர்ந்த கணவன் மனைவி ஆதரவு நிறம்பிய பாடல்கள், கல்லூரிச்சிட்டுக்களின் உல்லாசம், சரித்திரநாயகர்களின் பாடல்கள் இப்படி ரசனையோடு எந்தவித சூழ்நிலைக்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி கவியரசர் புனைந்த திறனை என்ன என்பேன்?

    இதை நினைக்கும்போது “பொன்னென்பேன் ஒரு பூ என்பேன்” என்றபாடல் நினைவுக்கு வருகிறது. ”கடவுள் அமைத்து வைத்த மேடை” நிறைவேறாக் காதலைக்கூறும்.”அம்மாடி பொண்ணுக்குத்தங்கமனசு” ஒருத்தலைக் காதல், இப்படி எழுதிக்கொண்டேபோகலாம்!

    காஞ்சிப்பட்டுத்தி கஸ்தூரிபொட்டுவைத்து”, “திருமகள்தேடிவந்தாள்”, “பூமுடித்தாள் இந்தபூங்குழலி”, மணமகளே மருமகளேவாவா”, வாராயெந்தோழிவாராயோ” போன்றத்திருமணப் பாடல்களை இன்று கேட்டாலும் இனிமையே சந்தேகமில்லாமல் இல்லையா?

    கர்ப்பமான பெண் தனக்குப் பிறக்கபோகும் குழந்தையை நினைத்து ”பூப்போல பூப்போல பிறக்கும்” எனப் பூரித்துப் பாடும் பாடல் சோகமுடிவு ஆனாலும் இப்பாடல் அமரத்துவம் அடைந்துவிட்டது. ”உன் கண்ணில் நீர் வழிந்தால்”, பாடலைக் கேட்டால் இன்னும் நம்கண்களில் நீர் வடியும். “யாரைநம்பி நான் பிறந்தேன், போங்கடாபோங்க”, இந்தப் பாடலை எல்லாத் தகப்பன்மாரும் ஒருமுறையாவது நினைவுகூர்ந்து இருப்பார்கள்.

    “வீடுவரை உறவு வீதிவரைமனைவி”, “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை”, “உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை”, “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது”, போனால் போகட்டும்போடா”, போன்ற தத்துவப்பாடல்களில் வாழ்க்கைநெறி கருத்துக்களாகப் புதைந்து உள்ளது.

    இவரின் இசைக் கற்பனை தனி பாணிஎனலாம். “நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்”, “ஒருநாள் போதுமா நான்பாட இன்றொருநாள் போதுமா”, போன்றபாடல்களில் ஸ்வர கோர்வைகளூம் இராகங்களின் பெயர்களும் மணிப்ப்ரவாளமாக்கொட்டும்.

    இசை மட்டுமா, “பார்த்தேன் சிரித்தேன்”, “அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே”, “பொன்னென்பேன் சிறு பூ என்பேன்” போன்ற இலக்கிய ரசம் சொட்டும் பாடல்களும் என்று கேட்டாலும் இனிமை. இப்படி எழுத இனி ஒருவர் பிறக்கத்தான் வேண்டும்.

    மூன்றுமணிநேரம் போகும் திரைப்படத்தின் கதையினை தம் பாடல்களில் ஒரிரு வரிகளிலேயே நமக்கு உணர்த்திடும் வல்லமை நம் கவியரசருக்கு மட்டுமே சொந்தமான தனித்திறமை. கதாநாயகி விதிவசத்தால் காதலைத் துறந்துவேறு ஒருவனை மணக்கிறாள், குழந்தையும் பிறக்கிறது, குழந்தையைத் தாலாட்டிப் பாடுகிறாள், “தைமாதப் பொங்கலுக்கு” என்ற பாடலில் “யாரோடு யார் என்று காலமகன் எழுதியதை யார் மாற்றமுடியும்” என்று தம் மனதை வெளிப்படுத்துகிறாள். இதேபோல் சித்தி என்ற படத்தில், “காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே” என்ற பாடலில் ஒரு பெண் தன் வாழ்வு முழுவதும் தியாகரூபமாக பிறருக்காகவே வாழ்வதை அழகுபடக்கூறி இருக்கிறார்.

    “நாளாம் நாளாம் திருநாளாம்”, “மல்லிகை முல்லைப் பூப்பந்தல்”, “ஆயிரம் இரவுகள் வருவதுண்டு”, இவை என்றும் இளமை வரம் பெற்றவை.

    “எல்லோரும் கொண்டாடுவோம்,அல்லாவின் பெயரைச் சொல்லி”, “சத்திய முத்திரைக் கட்டளையிட்டது பாலகன் ஏசுவின் கீதம்”, “கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா” இந்தப்பாடல்கள் கவியரசரின் சமய ஒருமைப்பாட்டு உணர்ச்சிகளைக்காட்டுகின்றன.

    “ஓர் ஆலயமாகும் மங்கை மனது”, “ராதையின் நெஞ்சமே” நம் தமிழர் இல்லறத்தை நயமாக எடுத்துறைக்கும்படியான் பாடல்களாகும். கவியரசர் தன் பாடல்களில் ஆண்களைவிட தாய்குலத்தின் உணர்சிகளையும் தியாக்ச்சீலத்தையும், குடும்பபாங்கையும், விதவிதமாக வர்ணித்துள்ளார் எனவே என் வாழ்க்கையில் நான் நம் கவியரசரின் காலத்தில் வாழ்ந்ததையும் அவரது பாடல்களை எங்கள் குடும்ப சுப நிகழ்ச்சிகளில் பாடியதையும், எனது மாபெறும் சௌபாக்கியமாக நினைக்கிறேன். இதனை எழுதி முடிக்கும்போது தொலைக்காட்சிப்பெட்டியில், “நானாட்சி செய்து வரும் நான்மாடக்கூடலிலே மீனாட்சி என்ற பெயர் எனக்கு” என்ற பாடல் ஒளிப்பரப்பாகியது.

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    — வாஞ்சீஸ்வரன் கோபால்

    என் பார்வையில் கண்ணதாசன்

     

    Kannadasan
    பாமரனும் பாடல்களை ரசிக்கும்படி செய்தவர் கவியரசு கண்ணதாசன்.

    அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருந்தாரோ அதைப் பற்றிக் கவலைப்படாமல் கவியரசரைப் பார்த்தோமென்றால், அவர் அந்தப் பாமரர்களைப் போலவே கள்ளம் கபடு இல்லாமல், குழந்தை மனத்துடன் வாழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும்.  மஹாகவி காளிதாசரைப்  போல், மஹாகவி பாரதியைப் போல்  இயல்பாகவே அவர் நாவில் கலைத்தாய் சரஸ்வதிதேவி குடிகொண்டிருந்தாள். வார்த்தைகளாக  மட்டுமன்றி, இசையுடனும் சேர்ந்து அமர்ந்திருந்தாள்.  இதை ஏன் சொல்கிறேன் என்றால் அவருடைய எழுத்துத் திறமை,  பேச்சுத் திறமை இதையிரண்டும் தவிர நடிப்பு, திரைப்படத் தயாரிப்பு என்று பல முகங்களைக் கொண்டவராக அவரைப் பார்க்கிறோம்.  அவர் பேசினாலும், எழுதினாலும் அதில் சிறிதளவு கூட எந்தக் குறைகளையும்  நாம்  காண இயலாது.   இயல்பாகவே இசையறிவும் அவருக்குக் கூடி வந்ததால் அவர் இயற்றிய பெரும்பாலான பாடல்களும் வெற்றி பெற்றன. அவரால் இசையமைப்பாளர்களும் பெயர் பெற்றனர்.   அவர் பாடல்களை இசையின்றி பாடிப் பாருங்கள், பாடும் மெட்டுக்கு ஏற்றாற்போல் வார்த்தைகள் வந்து விழுவதை !  இதுதான் அவர் வெற்றியின் ரகசியம்.

    அவர் மெட்டுக்குப் பாட்டெழுதினாலும், அவருடைய பாடல்களுக்கு இசையமைப்பாளர்கள் இசை அமைத்தாலும், அதில் நாம் வேறுபாடு காண இயலாது.  இரண்டும் ஒன்று போலவே நயமாக, ரசிக்கும்படி இருக்கும். அதனால் தான் அவருடைய பாடல்கள் ஐம்பது வருடங்கள் கடந்தும்  இன்னமும்  கேட்டு ரசிக்கப்படுகின்றன.   அவருக்குப் பின்னால் வந்த கவிஞர்களில், காவியக் கவிஞர் வாலியைத் தவிர, வேறு எவருமே கவியரசர் தொட்ட உயரத்தைத் தொட இயலாத காரணம் இதுவேயன்றி வேறில்லை.

    இதைத் தவிர, அவருடைய மேடைப் பேச்சைக் கேட்டிருக்கிறீர்களா…. அது அரசியல் என்றாலும் இலக்கியம், ஆன்மிகம் என்று எதுவாக இருந்தாலும் அவர் வாய் திறந்தவுடன் குற்றால அருவி போல் வார்த்தைகள் ஓடி வருமே அதைக்  கேட்டு மகிழ்ந்த நாட்கள்தான் எத்தனை, எத்தனை…!  “தடுமாறும் போதையிலும் கவி பாடும் மேதையவன்” என்று கவிஞர் சௌந்தரா கைலாசம் அவர்கள் சொன்னது  இங்கே என் நினைவுக்கு வருகிறது.  கவியரசரின் “டச்” என்பதை  ஆங்கிலத்தில் சொன்னால் அது “மைதாஸ் டச்”.  அவர் கை தொட்டதெல்லாம் பொன்னாக இன்னும் மின்னிக் கொண்டே இருப்பதை எவரேனும் மறுக்க முடியுமா ?

    அவரைப் பற்றி அவரே பாடிய பாடலுடன் இந்தப் “பார்வை”யை முடித்துக்  கொள்ள விழைகிறேன்:

    பாமர ஜாதியில் தனி மனிதன் – நான்
    படைப்பதனால் என் பேர் இறைவன் !
    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த
    நிலையிலும் எனக்கு மரணமில்லை !

     
     
     
     
     
     
     
     
    வாஞ்சி
    veegopalji@yahoo.com

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    — கீதா மதிவாணன்

     

    என் பார்வையில் கண்ணதாசன்

     

    Kannadasanதிரையிசைப்பாடல்கள் வழியாகவே நம்மில் பெரும்பான்மையோருக்கு அறிமுகமானவர் கவிஞர் கண்ணதாசன் என்றாலும் திரைப்பாடலாசிரியர் என்பதைத் தவிரவும் எண்ணற்ற பன்முகங்களைக் கொண்ட அவர் என் பார்வையில் ஆகச்சிறந்த ஒரு இலக்கியவாதியாகத்தான் புலப்படுகிறார். இலக்கியங்களிலிருந்து  வரிகளையும் கருத்துக்களையும் தான் எடுத்தாள்வதைக் கவிஞரே நேர்மையாக ஒப்புக்கொண்டபடியால், இலக்கியங்களைக் களவாடி கவிதைகளில் புகுத்துகிறார் என்பவர்களின் குற்றச்சாட்டை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. பந்தியில் பரிமாறப்படும் உணவுக்கான பாராட்டு பரிசாரகரிடம்தான் வழங்கப்படுகிறது. ஆனால் அது தனக்கானதில்லை என்பதை அவரும் அறிவார்; நாமும் அறிவோம்.

    தமிழிலக்கியம் என்பது பாமர மக்களில் சிலருக்கு எட்டிக்காய், சிலருக்கோ எட்டாக்கனி. புலவர்களும் தமிழறிஞர்களும் ஆய்வறிஞர்களுமே  இலக்கியங்களின் நயத்தையும் இன்பத்தையும் மாந்தி மகிழும் பேறு பெற்றவர்களாய் இருக்கிறார்கள். ஆர்வமிருக்கும் பலருக்கு அதற்கான வாய்ப்பு அமைவதில்லை. வாய்ப்பு அமைந்த பலரும் பிறருக்கு அவற்றை அறியத்தரும் முயற்சியில் இறங்குவதில்லை. அதனால் நம்மில் பலர்  வாழ்நாளில் தமிழின் இலக்கிய இன்பங்களை நுகரும் வாய்ப்பு கிட்டாமலேயே வாழ்ந்து மறைந்துபோகிறோம்.

    இலக்கியப் பாற்கடலைக் கடைய கதியற்ற பாமரர்களுக்காக கவிஞர், தானே கடைந்தெடுத்துக் கொண்டுவந்த கவி வெண்ணெயை நம் நாவிலும் தடவி ருசிக்கச்செய்கிறார். அத்தன்மையதான அமரத்துவம் வாய்ந்தவையன்றோ இலக்கியஞ்சார்ந்த அவரது அமுதகானங்கள்?

    நம்மில் எத்தனை பேர் கம்பராமாயணத்தையும் கலித்தொகையையும் கலிங்கத்துப்பரணியையும் நளவெண்பாவையும் படித்திருக்கிறோம்? அந்தப் பெயர்களையாவது கேள்விப்பட்டிருப்பவர்கள் எத்தனை பேர்? எத்தனை பேர் திருக்குறளின் அத்தனை அதிகாரங்களையும் வாசித்து அர்த்தம் புரிந்து பரவசப்பட்டிருக்கிறோம்? பள்ளியில் படித்திருக்கும் ஒரு சில குறள்கள் தவிர பிறவற்றை நாம் அறிய முனைந்ததே இல்லை. பள்ளியிலும் கூட முப்பாலில் மூன்றாம் பாலான இன்பத்தை ஒதுக்கிவிட்டு அறமும் பொருளும்தான் போதிக்கப்படும். காமத்துப்பாலில் காதலின் அத்தனைப் பரிமாணத்தையும் அழகாக அலசியிருக்கும் வள்ளுவரின் திறனை நாம் அறியாமலேயே போய்விடுகிறோம். திருக்குறள் மட்டுமல்ல, கடலென விரிந்துகிடக்கும் சங்க இலக்கியம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் பலவற்றுள் இருக்கும் இலக்கியச்சுவை இன்னதென அறியாமலிருக்கிறோம்.

    நம்மைப் போன்ற இலக்கியம் அறியாதோருக்காக, பல கவிஞர்களும் தங்கள் பாடல்களில் இலக்கியங்களை நயமாகப் புகுத்தி இலக்கிய நயத்தை நாம் அனுபவிக்கத் தந்திருக்கிறார்கள். ஆனால் அனைவரிடத்தும் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பங்கு அலாதியானது. சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள் வரை, பாரதியார் முதல் பட்டினத்தார் வரை யாதொரு தெளிவுரை, பதவுரையின் தேவைகளின்றி எளிதில் எவரும் விளங்கிக்கொள்ளும் வண்ணம் இனிய தமிழ் வார்த்தைகளால் திரைப்பாடல்களின் வழியே இலக்கியத்தைப் பகிர்கிறார் இந்த இன்சுவைக் கவிஞர்.

    யாயும் ஞாயும் யார் ஆகியரோ
    எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
    யானும் நீயும் எவ் வழி அறிதும்,
    செம் புலப் பெயல் நீர் போல,
    அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
    என்ற குறுந்தொகைப் பாடலை அறியாதோர் அநேகருண்டு. ஆனால் கண்ணதாசனின் இப்பாடலை அறியாதோர் யாவர்?

    நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
    இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
    காணும் வரை நீ எங்கே நான் எங்கே
    கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே

    இதே பாடலில் காமத்துப்பாலில் குறிப்பறிதல் அதிகாரத்திலிருந்து ஒரு குறளையும் நமக்குச் சுட்டியுள்ளார்.
    யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
    தான்நோக்கி மெல்ல நகும்.

    நம் கவிஞர் என்ன சொல்கிறார்?
    உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே
    விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே

    இதோ இன்னொரு குறள் அதே குறிப்பறிதலில் இருந்து…
    இருநோக்கு    இவளுண்கண் உள்ளது    ஒருநோக்கு    
    நோய்நோக்கொன்    றந்நோய் மருந்து.

    ‘கலையே உன் எழில் மேனி கனியாவதேன்’ பாடலில் கவி சமைத்த எளிய வரிகள்…

    இரு வேறு பொருள் கூறும் கண்பார்வை ஏன்
    ஒன்று நோய் தந்ததேன் ஒன்று மருந்தானதேன்
    பருவத்தின் ஒரு பார்வை நோயாகுமே
    எழில் உருவத்தின் துணை சேர மருந்தாகுமே

    தமிழிலக்கியம் கற்க எனக்கு ஆர்வமிருந்தும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை என்பதை தமிழறிஞரான என் மாமனாரிடம் ஆதங்கத்தோடு வெளியிடுவதுண்டு. அவர்களும் அவ்வப்போது இலக்கியங்களிலிருந்து சில பாடல்களை எடுத்து நான் அறியத் தருவார்கள்.

    ஒருநாள் கலித்தொகையில் புலவர் பெருங்கடுங்கோ பாடிய ஒரு பாடலை சிலாகித்து விளக்கினார்கள். தனக்குப் பிடித்தவனுடன் பெண் ஊரைவிட்டுப் போகும் பழக்கத்தை அன்று ‘உடன்போக்கு’ என்பார்களாம். இன்றைய வழக்கத்தில் ‘ஓடிப்போதல்’ என்போம். அப்படி உடன்போக்கு போன பெண்ணை அவளுடைய வளர்ப்புத்தாய் தேடிக்கொண்டு போகிறாள். வழியில் எதிர்ப்படுபவர்களைப் பார்த்து ‘இந்த வழியே என் மகள் ஒரு ஆடவனோடு போனதைப் பார்த்தீர்களா?’ என்று அழுதுகொண்டே கேட்கிறாள். அவ்வழியே வந்த பெரியவர்கள் அவளைத் தடுத்து நிறுத்தி அவளுக்கு அறிவுரை சொல்கிறார்கள்.

    பலஉறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
    மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என்செய்யும்?
    நினையுங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
    சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
    நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என்செய்யும்?
    தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
    ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை,
    யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என்செய்யும்?
    சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே

    “மலையிலுள்ள காட்டிலிருந்து பெறப்படும் சந்தனத்தால் அதைப் பூசுவாருக்கு அல்லாமல் மலைக்கு என்ன பயன்? கடலிலிருந்து கிடைக்கும் முத்தால் அதை அணிபவர்க்கு அல்லாமல் கடலுக்கு என்ன பயன்? யாழிலிருந்து கிடைக்கும் இனிய இசை, அதைக் காதால் கேட்பவர்க்கு அல்லாமல் அந்தக் கருவிக்கு என்ன பயனைத் தரும்? அதுபோல் உன் மகளும் உரிய காலத்தில் தலைவனைச் சேர்தலே முறை. அவ்வாறின்றி அவளை உன்னோடு தக்கவைப்பதால் உனக்கென்ன பயன்?” என்று கூறி அவளை சமாதானப்படுத்தித் திருப்பி அனுப்பினர்.

    ஆஹா.. என்னவொரு அற்புதமான வாழ்வியல் தத்துவம். என் மாமனார் சொல்லிக்கொண்டிருக்கும்போதே எனக்குள் ஏதோ குறுகுறுத்தது. இதை.. எங்கோ கேட்டிருக்கிறேன்.. எங்கே..? ஆங்…. அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னும் பாடலில் இந்த வரிகளைக் கவியரசர் இப்படிக் குறிப்பிடுகிறார்.

    மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
    மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
    நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
    நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
    காலம் மாறினால் காதலும் மாறுமோ…
    இப்படித் தொடர்கிறது அப்பாடல். கலித்தொகைப் பாடலைப் புரிந்துகொள்ள எனக்கொரு தமிழறிஞரின் உதவி தேவைப்பட்டது. ஆனால் கண்ணதாசனின் பாடலை எவர் உதவியுமின்றி அழகாக ரசித்து மகிழமுடிகிறதே..

    மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
    பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் – செங்கையால்
    காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
    வேர்த்தளைக் காணென்றான் வேந்து.
    புகழேந்திப் புலவர் பாடிய இந்த நளவெண்பா பாடலை நம்மில் எத்தனைப் பேர் அறிவோம்? இந்த உவமையின் ஒரு பாதி கையாளப்பட்டத் திரைப்பாடல் இந்நேரம் நினைவுக்கு வந்திருக்கவேண்டுமே… ஆம், அதேதான்.

    பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
    நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
    என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
    நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற…
    கவியரசரின் இந்தப் பாடல் மூலம் நளவெண்பாவின் அறிமுகம் கிடைத்தது எனக்கு.

    புலவர் செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணியில் ஒரு பாடல். போர் முடிந்து நெடுநாள் கழித்து வீடு திரும்பிய கணவர்களிடம் ஊடல் கொண்டு வாயிற்கதவைத் திறக்க மறுக்கும் மனைவியரின் ஊடல் தீர்க்க புலவர் பாடுவது….
    வாயின் சிவப்பை விழிவாங்க
    மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
    தோயக் கலவி அமுதளிப்பீர்
    துங்கக் கபாடம் திறமினோ.

    இந்த வரிகளின் நயத்தைக் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் வெளிப்படுத்திய திரைப்பாடல் வரிகள்…
    வாயின் சிவப்பு விழியிலே
    மலர்க்கண் வெளுப்பு இதழிலே

    கவிஞரை ஈர்த்த கலிங்கத்துப்பரணியின் மற்றுமொரு பாடல்,
    கலவிக் களியின் மயக்கத்தால்
    கலைபோய் அகலக் கலைமதியின்
    நிலவைத் துகிலென் றெடுத்துடுப்பீர்
    நீள்பொற் கபாடம் திறமினோ

    கவிஞர் நமக்கு வழங்கும் எளிய வரிகள்….
    ஆடையிதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
    அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது வழக்கம்

    இலக்கியச் சான்றுகளை ஆங்காங்கே தொட்டுக்காட்டி “உள்ளே வாருங்கள், இன்னும் இன்னும் அனுபவிக்கலாம்” என்று ஈர்க்கிறார் தமிழின் சுவையறியத் துடிக்கும் உள்ளங்களை.

    நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்     
    தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று    
    நனந்தலை யுலகமுந் துஞ்சும்     
    ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.
    ஊர் உறங்கிவிட்டது, உலகம் உறங்கிவிட்டது. உரியவன் அருகில் இன்மையால் நான் மட்டும் உறங்காமல் விழித்துக்கிடக்கிறேனே என்ற பொருள்படும் குறுந்தொகைப்பாடலின் சாரத்தை எடுத்துக்கொண்டார் கவிஞர். தலைவியின் கூடவே நிலவும் உறங்காமல் விழித்திருப்பதாக கற்பனை கூட்டி எளிய வரிகளால் நமக்களிக்கிறார்.

    பூ உறங்குது பொழுதும் உறங்குது
    நீ உறங்கவில்லை நிலவே
    கானுறங்குது காற்றும் உறங்குது
    நான் உறங்கவில்லை….

    கண்ணதாசன் அவர்களின் மகன் காந்தி கண்ணதாசன் ஒருமுறை தந்தையாரிடம் சென்று,  “நானும் பாட்டு, எழுதலாம் என்றிருக்கிறேன் அப்பா” என்றாராம். “பாட்டெழுதுவதில் கஷ்டம் இல்லை. ஆனால், சில விஷயங்கள் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும். கம்பராமாயணம் தொடங்கி தமிழிலக்கியம் எல்லாவற்றையும் படிக்கவேண்டும். பிறகு அனுபவங்களுடன் கற்பனையைக் கலந்தால் பாட்டு தானாக வருகிறது” என்று தந்தை பதிலளித்தாராம். பாட்டு எழுதுவது வெகுசுலபம் என்பது போல் சொன்னாலும் தமிழிலக்கியத்தை நன்கு கற்றுணர்ந்திருக்கவேண்டும் என்ற அவரது வார்த்தையில் எவ்வளவு அழுத்தம்! கவியரசரின் பாடல்களில் பலவற்றுள் கம்பராமாயணத்தின் ஈர்ப்பிருப்பதைக் காணமுடியும்.

    நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே
    பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
    மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
    விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான்.

    இந்த வரிகள் கண்ணதாசனின் எண்ணத்தில்
    நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
    நதி செய்த குற்றமில்லை
    விதி செய்த குற்றமின்றி வேறு யாரம்மா?
    என்று அழகிய பாடலாய் விரியும்.

    கண்ணில் தெரியும் பொருளினைக்
    கைகள் கவர்ந்திட மாட்டாவோ?-அட
    மண்ணில் தெரியுது வானம்,
    அதுநம் வசப்பட லாகாதோ?
    என்னும் பாரதியின் வரிகள் கவிஞரின் கவிவண்ணத்தில் மிளிர்கிறது இப்படி!
    கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ?

    என் சொந்தக் கருத்துக்களோடு இணையத்திலிருந்து பெறப்பட்ட பல தகவல்கள் இக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தாலும் இலக்கியத்தின்பால் என்னை வழிநடத்தி அழைத்துச்சென்றவை கண்ணதாசன் பாடல்களில் காணப்பட்ட இலக்கியச்சுவடுகளே. சங்கப்பாடல்களின் பொருளுணர்ந்து அவற்றுள் என்னால் சங்கமிக்க இயல்வதற்கும், நளவெண்பாவையும் கலிங்கத்துப்பரணியையும் கம்பராமாயணத்தையும் வாசித்து வாசித்து இன்புற்றுக் களிப்பதற்கும் பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநல்வாடையை எளிய தமிழில் புதுக்கவிதை பாணியில் எழுதும் துணிவைப் பெற்றமைக்கும் முக்கியக் காரணம் இலக்கியம் சார்ந்த கவியரசரின் இனிய பாடல்களே என்றால் அது கிஞ்சித்தும் மிகையில்லை.

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்…

    — ஷைலஜா

    என் பார்வையில் கண்ணதாசன்…

     

     

    Kannadasan‘மாணிக்கம் கட்டி, வைரம் இடை கட்டி,
    ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில்..’

    என்கிறார் இறைவன் கண்ணனைப்பாடும் பாசுரத்தில் ஆழ்வார் பெருமான்! எந்தக் கலப்படமும் இல்லாத, சுத்தமான 24 காரட் தங்கத்தைதான் ‘ஆணிப்பொன்’ என்று அழைக்கிறோம். ஆணிமுத்தும்  உயர்வானது.

    ‘ஆணிமுத்து வாங்கிவந்தேன் ஆவணி வீதியிலே’ என்று கண்ணதாசன் எழுதிய பாடலைக் கேட்டிருப்பீர்கள்!

    கண்ணதாசனும் தமிழ்மாதமான ஆனியில்  பிறந்த ஆணிமுத்து! இயற்பெயரிலும் முத்தினைக்கொண்டவர்! தமிழ் அன்னையின் கழுத்தில் முத்தாரமாய் திகழ்பவர் !

    திரை இசைப்பாடல்களில் தனி  முத்திரை பதித்த ஒப்பற்ற கவிஞர்! மனவாசமும் கண்டவர் வனவாசமும்  கொடுத்தவர்! இந்தியமண்ணின் உமர்கய்யாம்!  இயேசுகாவியமும் அளித்தவர் அர்த்தமுள்ள இந்துமதமும் படைத்தவர்!

    கண்ணதாசனே!கங்கைவெள்ளம் நீங்கள்!  தங்களைப்பற்றி ஆயிரம்வரிகளுக்கு மிகாமல் எழுதுவதும் சாத்தியமா என்ன! கங்கைவெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது!

    உங்களைப்பற்றி எழுதும் பொழுதிலும் உங்களது பாடல்வரிகளைத்தான்  உதாரணம் காட்டவேண்டி இருக்கிறது பார்த்தீர்களா!  உங்கள்  பாடல்களில் அப்படி ஒரு ஆக்கிரமிப்பு ! அவை யாவும்  மனதில் அசைபோடுகிறது! சீர்மிகு செந்தமிழை  சிகரத்திற்குக்கொண்டு சென்றவரல்லவா இந்த செட்டிநாட்டுக்கவிஞர்!

    எளிமை என்பது எவரையும் வசீகரிக்கும்  மாயம்! அவரது பாடல்களில் எளிமை தான் மிகுதி. அதனால்தான்  பாமரனையும் போய் பற்றிக்கொண்டன! என்னையும் மிகக்கவர்ந்து இன்று எழுதவைக்கிறது!

    தொட்டில் முதல் சுடுகாடு வரையிலான  வாழ்வியல் தத்துவங்களை, வாழ்வின்வளைவுகளை நெளிவுகளை சுழிவுகளை வார்த்தைகளில் வள்ளலாய் வடித்துக்கொடுத்தவரை வெறும் சிறுகட்டுரைக்குள் சிறைப்படுத்தவும் முடியாதுதான். ஆயினும் கதம்பமாலையின் மலர்க்கூட்டமிடையில், தன்பச்சை இலை மேனிவாசனையை வீசும் மரிக்கொழுந்தாய் கவிஞர்புகழ்பாடும் இந்தக்கட்டுரை, இங்கும் மணக்கும்எனும் நம்பிக்கை!

    கலை என்பதே  ஆழ்மனம் சார்ந்ததுதான் அதற்கு படிப்பறிவு அவசியமில்லை படித்தபலருக்கு கலையை  ரசிக்கத்தெரிவதில்லை. எங்கள் கவிஞர் எந்தப்பள்ளிச்சாலையிலும் சென்று பட்டம்  வாங்கியதில்லை ஆனாலும் அறிவு  அவர்  மூளையில்  சாலை போட்டுக்கொண்டது.

    நூல்களை அல்ல நூலகங்களையே  படித்துமுடித்தவர்..அவரது வாழ்க்கை அனுபவம்  வாகான  வார்த்தைகளில் கவிதையாய் வடிவெடுத்தன.

    ஐந்தாயிரம்  பாடல்களுக்கு மேல் எழுதிய   கரங்கள், அரத்தமுள்ள இந்துமதம் என்ற நூலை எழுதியதும்  நாத்திகக்கறை நீங்கப்பெற்று நானிலமெங்கும் அவரது புகழை இன்னமும் உயர்த்தின!

    வீணையின் சுபாவம்  அதனை  மீட்டி முடித்தபின்னும் அதிர்வுகளை சிலக்கணம் பரப்பிக்கொண்டிருக்கும்.

    காலவீணையை உந்தன் கவிதைவரிகளில்மீட்டிவிட்டுப் போய்விட்டாய்  காவியக்கவிஞனே! இனியகானத்தின் அதிர்வு இன்னமும்  ஒலித்துக்கொண்டே இருக்கிறது!

    தாய் பாடும் தாலாட்டில் தமிழ் மணம் கமழ்ந்து வருகின்றது. தாய்க்குக் குழந்தை எப்படித் தெரிகிறதா? கவிஞர் பாடலில் காண்போம் அதை!

    “நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
    நடந்த இளந்தென்றலே வளர்
    பொதிகை மலைதோன்றி
    மதுரை நகர்கண்டு பொலிந்த தமிழ் மன்றமே”

    தமிழ் மன்றத்தைப் போன்று தெரிகின்றதாம்! தமிழுடன் குழந்தையை ஒப்பிட்டுப்பாடும் தாயின் மனம் கவிஞரின் வார்த்தைகளில் பெருமையுடன் வெளிப்படுகிறது.

    சிறுகூடற்பட்டியிலே பிறந்து,  சிகாகோ நகரில் தம் வாழ்வை முடித்த  மகா கவிஞனுக்கு கம்பன்மீதான காதல் அலாதியானது!

    கம்பன்  தன் காவியத்தின் ஒருபாடலில்,
    “மழைவண்ணத்து அண்ணலே உன்
    கைவண்ணம் அங்கு கண்டேன்
     கால்வண்ணம் இங்கு கண்டேன்”
    என்பதாக இராமனைப்புகழ்ந்தபடிஅப்பாடலில் எட்டு வண்ணம் வைத்தான் என்றால் கண்ணதாசனோ “பால் வண்ணம் பருவம் கண்டு” என்று தொடங்கும் பாட்டில் முப்பத்திரண்டு வண்ணம் வைத்துள்ளார்!

    “கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்” என்பது கண்ணதாசன் வாக்கு!

    தனது பாடலின் நடுவே, அவளது  திருப்பாவையின் ஒருபாசுரமான,

    “குத்துவிளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்றபஞ்சசயனத்தின் மேலேறி…”என்றவரிகளின் தாக்கமாய்,

    “குத்துவிளக்கெரிய கூடமெங்கும் பூ மணக்க
    மெத்தைவிரித்திருந்து மெல்லியலாள் காத்திருக்க..”
    என்கிறார் தான் இயற்றிய திரைப்பாடலொன்றில்.

    திருப்பாவை மற்றும் திருவெம்பாவையை  மனதில்கொண்டு  வடித்த “தைப்பாவை” நூல் இலக்கிய உலகின் அணையாவிளக்கு.

    “என்னைக்கவலைகள்   தின்னத்தகாதென்று நின்னைச்சரணடைந்தேன்” என்றான் பாரதி.

     “பின்னிவரும் இன்னலைச் சன்னல்வழிவீசியே பிணமாய்புதைக்கவேண்டும்” என்றார் கண்ணதாசன்.

    பாரதியைப்போலவே கவிஞருக்கும்   உண்டு  ஒரு கனவு ..ஆம்,அந்த முண்டாசுக்கவிஞன்,

    “பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு பத்தினிப் பெண்வேணும்
    எங்கள் கூட்டுக் களியினிலே கவிதைகள் கொண்டு தரவேணும்
    அந்தக் காட்டு வெளியினிலே அம்மா நின்றன் காவலுறவேணும்
    என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித் திடவேணும்”
    (–காணி நிலம்வேண்டும்)
    என்றான்.

    “அழகான சிறிய வீடு அடுக்காகப் புத்த கங்கள்
    பழங்கால ஓவியங்கள் பஞ்சணை குளிர்ந்த காற்று
    தொழத்தக்க இளைய கன்னி தொண்டுக்கோர் சிறியபையன்
    எழிலான காகி தங்கள் எழுதுகோல் பழுதில் லாமல்!”
    என்கிறார் நம் கவிஞர்!
    “தொழத்தக்க இளைய கன்னி” என்பதில் வெறும் காமத்தைத் தாண்டிப் பெண்மையின் மீதான பெருமதிப்பையும் காட்டுவதை உணரமுடிகிறது.

    “எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
    நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
    நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு – அதை
    நமக்காக நம் கையால் செய்வது நன்று
    நமக்காக நம் கையால் செய்வது நன்று”
    (–ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்)

    நமக்கான  கடமைகளை   நம்கைகளால் செய்யவேண்டியது  நல்லதென்பதை  எளிமையாய் அருமையாய்  சொல்லியவிதம்  அதன்படி நடக்கத்தூண்டிவிடுகிறது.

    “அத்திக்காய்காய் காய் ஆலங்காய்வெண்ணிலவே” என்ற பாடலில் இரண்டு அர்த்தங்கள் வரும்படி எழுதி இருப்பார். அத்திக்காய் என்பது ஒரு காய் என்று ஒரு பொருள். அடுத்து, அத்திக்காய் எனில் அந்த திக்காய் (திசையில்) காய் என்றால் நிலா காய்கிறது என்பதுபோல பொருள். பாடல்முழுவதும் காய்களோடு விளையாடி இருப்பார். ஆமாம்! அத்திக்காயை ஏன் முதல் வார்த்தையாய் கொண்டுவந்தார் தெரியுமா?அத்தி மரம்  சுக்கிரனின் ஆகர்ஷண சக்தி கொண்ட மரம். சுக்கிரன்  காதல்தேவதை!

    காதலை நிறைவேற்றுவதில் சுக்கிரனின் பங்கு  மகத்தானது. காதலுக்குரிய கிரகம் இவரே. ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருப்பது மிக மிக அவசியம். மகிழ்ச்சிக்கும், இனிமையான திருப்திகரமான திருமண உறவுக்கும் சுக்கிரனின் அருள் அவசியம்.

    அத்தி மரத்திலிருந்து வெளிப்படும்  ஒரு வகையான ஆற்றல்  தம்பதிகளின் பிணக்கைத் தீர்த்துவைக்கும்  என்பது ஜோதிடர்களின்  நம்பிக்கை. திரைப்படத்தில் தம்பதிகள் சிறு ஊடலில் பாடும் பாடல் இது. எத்தனை விஷய ஞானம் இருந்திருந்தால் கவியரசர் இந்தப்பாடலுக்கு அத்தியை முதல் வார்த்தையாக அமைத்திருப்பார்!’ Amazing’என்பார்கள் ஆங்கிலத்தில்! வியப்பில் வாய் அடைத்துத்தான் போகிறது!

    “மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழைபோல்” சொல்லாமல் கொள்ளாமல் வந்தது! என்று எதிர்பாராமல்வரும் காதலுணர்வைக்குறிப்பிடுகிறார்! காதலைக்காமமின்றி பலப்பலகவிதைகளில்கொடுத்த கவிஞரின் கைவண்ணம் பற்றி எழுத நீள்வானம் தான்  தாள் ஆக  வரவேண்டும்!

    அடுத்து  வாழ்க்கை எங்கும் வாசல்கள் இருப்பதை  இந்தப்பாடலின் வரிகள் உணர்த்துகின்றன.

    “பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
    பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
    பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
    கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
    காட்சி கிடைத்தால் கவலை தீரும்
    கவலை திறந்தால் வாழலாம்!!!”
    (– வாழ நினைத்தால் வாழலாம்)

    வாழ நினைக்கவேண்டுமாம்  நினைத்துவிட்டால் வாழலாம் என்கிறார். “எண்ணியமுடிதல்வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்” என்றான் பாரதி! கவிஞரின் இந்த வரிகள் எளிமைதான் ஆனால் அர்த்தம் கடல் அளவு ஆழமானது. நிறைய சிந்தித்தாலே ஒழிய இந்தவரிகளை நாம் உணர இயலாது.

    “மழைகூட ஒருநாளில் தேனாகலாம்,
    மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்
    ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா,
    அம்மா என்று அழைக்கின்ற சேய் ஆகுமா? “

    இப்படி, தாய்மையை போற்றும் வரிகளிலேதான் எத்தனை நீர்மை !

    இன்னும் மனித மன இயல்பை பட்டவர்த்தனமாய் காட்டும் வரிகளாய்…….
    “ஆடை இன்றி பிறந்தோமே –
    ஆசை இன்றி பிறந்தோமா?
    ஆடி முடிக்கையிலே
    அள்ளி சென்றோர் யாருமுண்டோ?”
    என  நம் கன்னத்தில் அறைவதுபோல கேள்விகள் வருகின்றன.

    சாக்ரடீஸின் தத்துவத்தை மூலமந்திரமாக்கிக் கவிஞரின் கவிதைக் கருவில் தோன்றிய உயர் பாடலான,
    “உன்னையறிந்தால் – நீ உன்னையறிந்தால்
    உலகத்தில் போராடலாம்!
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் – தலை
    வணங்காமல் நீ வாழலாம்!”

    என்று ஆரம்பமாகும்  பாடலை அறியாதார் யார்!

    இன்று எந்த தன்னம்பிக்கை நூல்களை எடுத்துக்கொண்டாலும் “தன்னை அறிவது” அதாவது “SELF-REALISATION” தான் அடிப்படை. அதாவது “KNOW YOURSELF” இதை உன்னை அறிந்தால்  என்னும் பாடலில் எளிமையாக சொல்லிவிட்டார்.

    புராண, இதிகாச, இலக்கியங்களில் கவிஞர் கண்ணதாசனுக்கு ஆழ்ந்து அறிவு! ஆம்  ஒருசில பாடல்களில், அதிலும் ஓரிரு வரிகளில் மட்டும் அந்தப் பாதிப்பு தெரியும்.

    “காலங்களில் அவள் வசந்தம், மாதங்களில் அவள் மார்கழி..”
    (– பகவத்கீதை)

    “மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை
    கன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர்
    கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா.”

    “பருவம் வருதலாற் பற்றல் விழைந்தனள்;
    அருகுள து  எட்டியே யாயினும் முல்லைப்
    படர்கொடி படரும்”
    (– மனோன்மணியம் )

    “தோள் கண்டேன் தோளே கண்டேன்” (கம்பர்)

    “நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
    நதி செய்த குற்றம் இல்லை” (கம்பர்)”

    “அன்றொரு நாள் இதே நிலவில்”  (பாரி மகளிர்)

    “வீடு வரை உறவு வீதி வரை மனைவி” (பட்டினத்தார்)

    இப்படிப்பல!

    “நாளைப் பொழுதை இறைவனுக் களித்து
    நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
    உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!!”

    சோர்வில் துவளும் மனத்திற்கு இதைவிட ஆறுதலான  வார்த்தைகளை கண்ணதாசனைத்தவிர வேறு யாராலும் தர இயலாது..

    இன்னமும்  சொல்லிக்கொண்டேபோகலாம்  ஆனால் கங்கைவெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடுமா என்ன?! சர்க்கரை சமுத்திரமாக தமிழ்நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் அற்புதக்கவிஞனுக்கு  இறுதியாக  அவரது வார்த்தைகளினாலேயே  முடிப்பதே சிறப்பு.

    “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை”என்றார்! ஆம், தமிழைப்போல், கவியரசர் கண்ணதாசனும் நிரந்தரமாக அனைத்துத்தமிழ் நெஞ்சங்களிலும்  வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்!

     
     
     
     
     
     
     
     
    —  ஷைலஜா,பெங்களூர்

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    — சரஸ்வதி இராசேந்திரன்

    என் பார்வையில் கண்ணதாசன்

    Kannadasanஎன் பார்வையில் கண்ணதாசன்  கருவிலேயே திருவுடைய  ஒரு பிறவிக் கவிஞன். பல கோணப்பாடகன். அவர் வெறும் கவிகளில் மட்டும் அழகொழுகப் பாடிப்போகவில்லை,  அவர் வாழ்க்கை நிகழ்ச்சிகளையே சான்றாக்கித் தந்திருக்கிறார். பாமரனும் அறிந்து, புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக  பாடல்களை தந்தவர்.  தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு தனி இடத்தை பெற்றவர்.  இயற்கைப் பொருள்களை சுவைத்து  இயற்கையை இயல்பிற் பாடிய அவர் ஒரு இயற்கை கவிஎனலாம்   ( உதாரணம் ;  இது ஒரு பொன்மாலைப்பொழுது )    தெய்வ அருள் பெற்றுப் பாடிய தெய்வப்பாடல்கள் பல பாடியதால் அவர் ஒரு தெய்வீகக் கவி எனலாம்.

    தத்துவப்பாடல்களைப்பாடியதால்  தத்துவக்கவி (உதாரணம் ; பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது )  தெள்ளத்தெளிவுற  தமிழ் பாடல்கள் பல எழுதியுள்ளதால் தமிழ்க்கவி. காதல் பாடல்கள் பல எழுதியுள்ளதால்  காதல் கவி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

    இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் அவர் ஒரு பலகோண கவி என்று. அது மட்டுமா, உணர்ச்சியூட்டும் பாக்களும், எழுச்சியூட்டும் கட்டுரைகளும், கிளர்ச்சியூட்டும் பேச்சும்  என நல் விதைகளைத் தூவிச்சென்றவர். அவர் வெளிப்படையானவர், வெளி வேஷம் கொண்டவரில்லை, அரசியல் வாதிகளையும் அவர் விட்டு வைக்கவில்லை. இருந்தாலும் கண்டனக்காரர்களும் கூட அவருடன் கைகோர்த்து நின்றனர். நாத்திகத்திலிருந்து  ஆத்திகத்திற்கு வந்தவர், அவருடைய  அர்த்தமுள்ள இந்துமதமே இதற்கு சாட்சி. ஏசு காவியம் பாடி   இதயத்தில் நின்றவர். வாழ்க்கை பாடத்தையே  பல நேரங்களில்    பாட்டாகப்பாடியர்.

    கவிஞர் கண்ணதாசனை அறியாத மக்களில்லை, பேசாத நாவில்லை, அவர் பாடலை பாடாத நாவில்லை. வையத்துள் அவர் பாடல்களால் வாழ்வாங்கு வாழ்ந்து  அமர நிலை எய்திய அமரர் கண்ணதாசனை  நாளும் வாழ்த்துவோம். எண்ணிக்கை இல்லா பாடல்களை எழுதி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த வர் ‘என்னைப்பொ றுத்தவரையில்  என் பார்வையில் கண்ணதாசன் ஒரு தெய்வப்பிறவி என்றால் மிகையில்லை.

     
     
     
     
    சரஸ்வதி இராசேந்திரன் ,
    51 ,வடக்கு ரத வீதி ,மன்னார்குடி  614001

    sathiramannai@ gmail.com

    Share
  • என் பார்வையில் கவியரசர் கண்ணதாசன்

    — சக்தி சக்திதாசன்

    என் பார்வையில் கவியரசர் கண்ணதாசன்

     

     

    Kannadasan

    எழுபதுகளில் புலம்பெயர்ந்த ஒரு புலம்பெயர் தமிழனின் பார்வையில் கவியரசர் கண்ணதாசன் எவ்வகையில் விழுந்தார் எனும் கோணத்திலே எனது இந்த சிறிய பதிவு அமைகிறது.

    நாம் பிறந்த மண்னை விட்டு வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு காலகட்டங்களில் வெளியேறி தமது வாழ்வை வெவ்வேறு இடங்களில் அமைத்துள்ளோம்.

    அவ்வகையில் எழுபதுகளின் நடுப்பகுதியில் மேற்படிப்புக்காக நான் பிறந்த என் தாய்மண்ணாம் ஈழத்தை விட்டு புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் எனது வாழ்வினை அமைத்துக் கொண்டவன் .

    என்னைப் போன்ற எனது நிலையில் உள்ள அநேகம் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள்.

    எனது வாழ்க்கையில் எனது தாய்மண் நினைவுகளோடு என்னை பிணைத்து வைத்துப் பார்க்கும் கவியரசரின் பாடல் ஒன்றை இங்கு எடுத்துப் பார்க்க விழைகிறேன்.

    கவியரசர் தானே தனது வார்த்தைகளில் ” நான் கவியத்தாயின் இளைய மகன், காதல் பெண்களின் பெருந்தலைவன் ” என்று தன்னைப்பற்றிய விளக்கத்தை அழகாக அளித்துள்ளார்.

    ஒரு நாயகி தன் நாயகனின் பிரிவை எண்ணிப் பாடும் இந்தப் பாடலை நான் எனது தாய்மண்ணைப் பற்றிய பிரிவுத்தூயர் வாட்டும் போதெல்லாம் எண்ணிப்பார்த்து எனது மனதைத் தேற்றுவதுண்டு.

    கவியரசரின் தனித்துவமே அதுதான். எந்தவொரு சூழலில் நாம் எம்மைக் கண்டாலும், எத்தகையதோர் உணர்வுத் தாக்குதலுக்கு நாம் உள்ளாகினாலும் அங்கெல்லாம் அந்த ரணத்திற்குக் களிம்பாக அவரது ஏதாவது ஒரு பாடல் எமக்குக் கை கொடுக்கிறது.

    பாலும் பழமும் எனும் படத்தில் பீ.சுசிலாவின் இன்னிசைக்குரலும், விஸ்வநாதன் -ராமமூர்த்தி அவர்களின் இனிமையான இசையும் கவியரசரின் வரிகளுக்கு உயிரூட்டிய பாடலொன்றிலிருக்கும் இரு பத்திகள் எனது தாய் நாட்டோடு எனைப் பிணைக்கும் வரிகளாய் அமைந்திருக்கிறது.

    எண்ணங்களாலே பாலம் அமைத்து
    இரவும் பகலும் நடக்கவா…

    ஆமாம் புலம் பெயர்ந்தோர் வாழ்விலே தாய்நாட்டின் எண்ணங்கள் தானே மிகுந்திருக்கின்றன. அவ்வெண்ணங்களின் துணையாலே பாலம் அமைத்து எனது தாய்நாட்டை நோக்கி நான் இரவும் பகலும் நடப்பதைப் போன்ற ஒரு இனிமையான உணர்வை எனக்கு கவியரசரின் வரிகள் ஈந்திருக்கின்றன.

    தாய்மண்ணை விட்டு இற்றைக்கு சுமார் நாற்பது வருடங்களாய் பிரிந்திருக்கும் என் மன உணர்வுக்கு,

    இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி,
    இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
    இரு கை கொண்டு வணங்கவா.. ,
    இரு கை கொண்டு வணங்கவா..

    எனும் வரிகள் எத்தனை இதமாய் இருக்கிறது என்பது என்னைப்போலுள்ளவர்களின் உணர்வுகளாலேயே புரிந்து கொள்ள முடியும்.

    35 வருடங்களின் பின்னால் 2013ம் ஆண்டு எனது தாய்மண்ணில் மீண்டும் நான் கால்பதித்தபோது மீண்டும் என் மானசீகக் குரு கவியரசரின் வரிகள் உணர்வோடு உள்ளத்தில் சதிராடின

    பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது..
    அழுதால் கொஞ்சம் நிம்மதி
    பேசமறந்து சிலையாய் இருந்தால்….
    பேசமறந்து சிலையாய் இருந்தால்…
    அதுதான் தெய்வத்தின் சந்நிதி…..
    அதுதான் காதல் சந்நிதி

    ஆமாம் அத்தனை காலம் பிரிந்து இருந்த எனது தாய்மண்ணின் மீது கால்கள் பதித்தபோது வார்த்தைகளுக்கு அங்கே என்ன வேலை பேச மறந்து சிலையாக இருந்து எனது தாய்மண்ணை தெய்வசந்நிதியாக எண்ணி வணங்கத்தானே முடியும் !

    தாய்மண்ணின் மீதுள்ள காதலுக்கு அதுதானே சங்கமாகின்றது.

    புலம்பெயர்ந்தவன் எனும் வகையிலே எனது மொழியயும் எனது தாய்மண்ணின் மீதான பாசத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்கு என் மனதில் மானசீகக் குருவாக இருந்து என்னை வழிநடத்தும் கவியரசரின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்துக்களாகத் திகழ்கின்றன.

    அத்தனை முத்துக்களையும் உள்ளடக்கிய முத்துமாலையென கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் ஒரு புலம்பெயர் தமிழனாக என்னுள்ளத்தில் கொலுவிற்றிருக்கிறது.

    ஒரு இளைஞனாக புலம் பெயர்ந்த என் வாழ்க்கைப் பயணத்தில் அகவைகள் நாற்பது அவசரமாக ஓடியே போய்விட்டது. இந்த காலங்களில் எத்தனையோவிதமான இன்ப துன்ப நிகழ்வுகளுக்குள்ளால் நான் உருண்டோடிப் போயிருக்கிறேன்.

    அந்தச் சமயங்களிலெல்லாம் கவியரசரின் அற்புதமான இலக்கியங்கள் தான் எனக்கு கைகொடுத்து எனது உணர்வுகளைச் சீராக்கியிருக்கின்றன.

    வாழ்வு என்மீது தொடுக்கும் அம்புகளின் வலிகளைத் தாங்கும் கேடயங்களாக அர்த்தமுள்ள இந்துமதம் முதற்கொண்டு அவரது பல படைப்புக்கள் என்னை இக்கட்டான சூழல்களில் வழிநடத்தியிருக்கின்றன.

    எப்படி அவரது எழுத்துக்கள் மட்டும் இத்தகையதோர் பாதிப்பை ஏற்படுத்தின ?

    அவர் தனது வாழ்க்கைச் சம்பவங்களோடு, அதாவது ஒரு சாதாரண இளைஞனாக ஒரு குடும்பத்தலைவனாக, நட்புக்களை நம்பி பின் வஞ்சிக்கப்பட்டவராக, நல்ல மனிதர்களின் உதவியால் உயர்ந்தவராக தனது எழுத்துக்களை பிணைத்து அதனை எமக்கு அனுபவ அறிவாக ஊட்டியதால் தான்.

    அவர் நடந்த பாதைகளில் ஏற்பட்ட சறுக்கல்கள் போல் எனது வாழ்வில் எனக்கு ஏற்பட்ட சறுக்கல்களைப் புரிந்து கொள்ள அவரது எழுத்துக்கள் உதவின.

    என் பார்வையில் கண்ணதாசன் ஒரு குன்றின் முன்னே வீற்ரிருக்கும் மாமலை போல் தென்படுகிறார்.

    எனது எழுத்துக்களுக்கு ஒரு உந்துசக்தியைத் தருகிறார். எனது கவிதைகளுக்குள் அவரின் நினைவுகள் வாழ்கின்றன.

    ஆக மொத்தம் அவரை எண்ணும் போதெல்லாம் என் விரல்களில் எழுத வேண்டுமென்ற துடிப்பெழுகின்றது.

    அவர் காவியத்தாயின் இளையமகன் மட்டுமல்ல தனித்துவமிக்க ஒரு தமிழ்மகன்.

     

     
     

     
    சக்தி சக்திதாசன்
    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    –எம். ஜெயராமசர்மா

    என் பார்வையில் கண்ணதாசன்

    Kannadasanகாலத்தை வென்றவன். காவியம் ஆனவன். வேதனை தீர்ப்பவன். வெற்றித்திருமகன் எனப் பலவித முகங்களில் கண்ணதாசனை நான் பார்க்கின்றேன். சிறுகூடல் பட்டி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்து சிந்தனைகளின் ஊற்றாக புறப்பட்டவர்தான் கவி அரசர்.  முத்தையா- கண்ணதாசன் ஆனதே ஒரு முக்கிய சம்பவம்தான். “முத்தைத்தரு” என்று அருணகியாரைப் பாடவைத்து – அவரது வாழ்க்கையையே மாற்றியது ஆண்டவனது அனுக்கிரகம். முத்தையா என்று தந்தை வைத்தபெயரும்அவரைச் சமூகத்தில் ஒரு முத்தாகவே மிளிரச்செய்தது. கண்ணதாசன் என்னும் பெயரும் அவருக்குஉலகில் பெரும் புகழைத்தேடித்தந்தது. இவையாவும் ஆண்டவனின் அனுக்கிரகத்தால் ஆகியிருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது.

    அருணகிரியார் முருகன் அருள் பெற்றதால் மடைதிறந்த வெள்ளமெனச் சந்தப்பாடல்கள் வந்து குவிந்தன. எங்கள் கவியரசரும் ஆண்டவனின் வரம்பெற்று வந்தவராகையால் கம்பனுக்குப் பிறகு “சந்தத்தை” தமிழில் கையாண்ட பெருமைக்கு உரியவர் ஆகின்றார்.

    நெற்றியில் விபூதியும், வாயிலே முருகனது நாமத்தையும் துணையென எண்ணி இருந்தவர் கண்ணதாசன். சேரக்கூடாத கூடாரத்துக்குள் சேர்ந்ததால் அவரின் பேச்சும் போக்கும் , ஏன் எழுத்தும் கூட மாறியது. ஆனால் அவரின் அடிமனத்தில் ஆழமாகப் பதிந்து நின்ற ஆண்டவன் நினைப்பு மட்டும் அப்படியேதான் அடங்கிக்கிடந்தது. காலமும் கனிந்துவரக் கடவுள் நம்பிக்கை கண்ணதாசனிடம் மேலோங்கத்தொடங்கியது.

    நாத்திகம் பேசி நாத்தழும்பேற்றியும், கடவுள் கண்டனம் செய்தும் நின்ற கண்ண தாசன் கடவுளே கதியென்னும் நிலைக்கு வந்து விட்டதை அவர் வாயிலாகவே நாங்கள் அறிந்து கொள்ளமுடிகிறது. “நாத்தினாக இருந்தது இரண்டு மூன்று ஆண்டுகளே. “கந்தபுராணம், பெரியபுராணம், கம்பராமாயணம், திருவாசகம், திருப்பாவை, நாலாயிரத்திவ்யபிரபந்தம், வில்லிபாரதம் இவற்றை எல்லாம் கண்டனம் பண்ணப் படித்தேன். ஆனால், அவற்றைப் படிக்கப் படிக்க என்மனம் அவற்றில் ஆழ்ந்து விட்டது என்று அவரே சொல்லுகின்றார். “நாத்திக வாதம் என்பது அரசியல் நோக்கங் கொண்டது என்பதையும், உள்மனத்தின் உண்மையான உணர்வல்ல என்பதையும் உணர்ந்தேன்” என்பது கண்ண தாசனின் வாக்குமூலமாகும்.

    கண்ணதாசன் அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடல் என்ன தெரியுமா ? ” திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா” என்பதாகும். அவரின் படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் “கிருஷ்ணர்” படமாகும்.

    இந்தியாவிலே கடவுளை நம்பாதவர்கள் ஒரு கட்சியாகக் கூட இருந்தாலும் அவர்கள் எல்லோரும் சேர்ந்து கடவுளைக் கண்டனம் செய்தாலும் அதனால் கடவுளுக்கு எந்தவித வருத்தமும் இல்லை. அதே வேளை கடவுள் நம்பிக்கையும் இல்லாமற் போய்விடவும் இல்லை. இதில் கண்ணதாசன் மிகவும் நம்பிக்கை உடையவராக இருந்த படியால்தான் படித்தவர்களும் போற்றுகிறார்கள் பாமரரும் போற்று கிறார்கள் என எண்ணத்தோன்றுகிறது.

    கடவுளைப்பற்றி சந்தேகம் வருபவர்களுக்கு …

    தெய்வம் என்றால் அது தெய்வம்
    வெறும் சிலை என்றால் அது சிலைதான்
    உண்டென்றால் அது உண்டு
    இல்லை என்றால் அது இல்லை

    என்று சொல்லும் விளக்கத்தைவிட வேறு எப்படிச் சொல்லமுடியும். இதுதான் கண்ணதாசன். சினிமாவுக்கு என்று எழுதப்பட்டாலும் உள்ளத்தில் இருப்பதுதானே வரமுடியும்.

    பூஜ்ஜியத்துக் குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை
    ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்
    அவனைப் புரிந்து கொண்டால்
    அவன்தான் இறைவன்

    பாமரரும் புரியும்படி கடவுள் தத்துவத்தைக் காட்டிவது அவரின் தனித்துவம்தானே.

    ஆண்டவனின் அருள் அவருள் உறைந்து கிடந்தமையால்தான் அவரின் வார்த்தைகளில் அத்வைதம் இருந்தது. துவைதம் இருந்தது. விசிட்டாத்வைதமும் இருந்தது. வேதாந் தமும் சைவசித்தாந்தமும் கூட இருந்தது எனலாம். சரஸ்வதி அவரது நாவிலே சம்மாணம் போட்டே இருந்தாள். மேலே காட்டிய தத்துவங்களை எவ்வாறு நாசூக்காகக் கண்ணதாசன் காட்டுகிறார் பாருங்கள்…..

    தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
    அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
    மண்ணைத்தோண்டி கண்ணீர் தேடும் அன்புத்தங்கச்சி
    என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என்கட்சி
    உண்மை என்ன பொய்மை என்ன
    இதில் தேன் என்ன
    கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
    வாழ்வின் பொருளென்ன
    நீ வந்த கதை என்ன

    தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
    இந்த ஊரென்ன
    சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
    வாழ்வின் பொருளென்ன
    நீ வந்த கதை என்ன

    சகல வித தத்துவங்களும் இங்கே பாமரரரும் புரியச் சொல்லி நிற்கின்றார் கண்ண தாசன். இதனால் வெற்றித்திருமகன் தானே!

    கவிஞன் என்பவன் ஒரு குறுகிய வட்டத்துக்குள் சிந்திக்கக் கூடாது. அவன் சொல்லும் கருத்துக்கள் உலகம் தழுவ வேண்டும், வள்ளுவர் குறள் அப்படிப்பட்டதுதான். வள்ளுவரின் பரந்து விரிந்த நோக்கால் அவரின் திருக்குறள் உலகம் தழிவியதாக இருக்கிறது. நமது கவிஞரும் அப்படியான ஒரு மனநிலையில்தான் செயற்பட நினைக்கின்றார். வள்ளுவர் அறம், பொருள், இன்பம் பற்றியெல்லாம் பாடினார். கண்ணதாசனும் அறத்தை , இன்பத்தை , பொருளை எல்லாம் பாடினார். அத்தோடு அருளையும் தமது பாட்டுக்களால் தந்தும் நின்றார்.

    சங்கரமடத்தைச் சரண் அடைந்தார். ஒருகாலத்தில் காவிகட்டியவர்களையும் சங்கரமடத்தாரையுமே சாடியவர் பின்பு தானாகவே சரண்புகுந்தார். இது அவரிடம் ஏற்பட்ட மடை மாற்றமாகும். அதே கண்ணதாசனே ” யேசுகாவியத்த ” ப்பாடி மீண்டும் தனது நோக்கை விரிவாக்கிக் கொள்கின்றார். புத்தரைப் பாடுகிறார். நபிகளைப் பாடுகிறார். சத்தியம், நேர்மை, சமத்துவம் யாவற்றையும் போற்றிப் பாடுகின்றார். இறையுணர்வு ஊறிவிட்டால் யாவும் சிறந்த கருத்துக்களாகவே வந்து நிற்கும். அதில் பல தத்துவங்கள் வந்துவிடும். வேதத்திலும், உபநிடதத்திலும், உன்னை அறிதல் என்பது அரிய பெரிய தத்துவமாகும். “தத்துவம் அஸி ‘ அஹம் பிரம்மாஸி” உபநிடதத்தின் உயிநாடியாகக் கருதப்படுகிறது. ரமண மகரிஷியும் “முதலில் நீ யார் என்பதை அறி” என்றுதான் சொல்லுகிறார். இப்படியான உயர்தத்துவக் கருத்தை கண்ணதாசன் மிகவும் எளிதாக்கி எமக்குத் தரும்விதம் அவரின் உயராற்றலைத்தான் வெளிப்படுத்துகிறது எனலாம்.

    உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
    உலகத்தில் போராடலாம்
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
    தலை வணங்காமல்  நீ வாழலாம்

    வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் வாழுவோம் என்பது எல்லோரிடத்தும் எளிதாக் வரக்கூடிய தல்ல. அதற்கு ஒரு மனப்பக்குவம் தேவை. “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்னும் நாவுக்கரசர் அஞ்ஞாவார்த்தை “தலை வணங்காமல்வாழுதலில்” தெரி கிறதல்லவா?

    மனமானது சமநிலைக்கு வந்து விட்டால் எதற்கும் அது ஆயுத்தமாகிவிடும். இது ஒரு யோக நிலையாகும். இதனைக் கவிஞர் எப்படிச்சொல்கிறார் பாருங்கள்.

    கடலளவே கிசைதாலும்  மயங்கமாட்டேன் – அது
    கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன்

    இந்த நிலை சாதாரணமாக எல்லோருக்கும் வந்து விடமாட்டாது என்பதைக் கவிஞரின் வரிகள் மிக அற்புதமாகக் காட்டிநிற் கின்றன் அல்லவா?

    குழப்பங்கள் வருவது மனித வாழ்வில் தடுக்கமுடியாத ஒன்று. ஆனால் அந்தக் குழப்பத்தையும் நாம் விலக்கி மனத்தைக் கலங்க விடக்கூடாது என்கின்றார் கவிஞர்.

    மயக்கமா தயக்கமா மனதிலே குழப்பமா
    வாழ்க்கையில் நடுக்கமா
    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல் தோறும் வேதனை இருக்கும்

    வாழ்க்கையில் குழப்பம் வந்தால் தயக்கம்வரும், அதே நேரம் நடுக்கமும் வந்தே சேரும். அரசன் முதல் ஆண்டிவரை அனைவருக்கும் இந்த நிலை வெவ்வேறு உருவத் தில் – வெவ்வேறு விதமாக வரும். எல்லார் வீட்டுக்கும் வாசற்படி இருப்பது போல வேதனைகளும் வீடுதோறும் இருக்கவே செய்யும். இது எத்தனை அனுபவமான ஒரு மிகப்பெரிய கருத்து. யாருமே வேதனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவே முடியாது. எனவே …

    “கலங்காதிருமனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே” என ஆறுதலும் கூறுகின்றார் கண்ணதாசன் அவர்கள்.

    அதே வேளை …

    வந்த துன்பம் எது என்றாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை
    எதையும் தாங்கும் இதயமிருந்தால்
    இறுதிவரைக்கும் அமைதியிருக்கும்

    …..

    நாளைப் பொழுதை இறைவனுக் களித்து
    நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

    என்று புத்தியும் கூறுகின்றார். அதோடு நின்றுவிடாமல் மிகவும் முக்கியமாக ஒன்றையும் சொல்லி நிற்கின்றார்…

    உனக்குக் கீழே உள்ளவர் கோடி
    நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

    எப்பொழுதும் நாம்  அனைவருமே நம்  நிலையை மட்டுமே தினமும் பார்த்துப்பார்து எனக்கு மட்டும் ஏன் இப்படி? அவன் நல்லாய் இருகிறானே! என்று அல்லும் பகலும் மற்றவர்களைப் பார்த்து நமக்குக் கிடைத்தவற்றையும் வீணடித்து விடுவோம். காலுக்குச் செருப்பில்லை என்பவனுக்கும் கவலை. அதே நேரம் காலே இல்லை என்பவனுக்கும் கவலை. கஞ்சிக்கு உப்பில்லை என்பவனுக்கும் கவலை. குடிக்கக் கஞ்சி இல்லையே என்பவனுக்கும் கவலை. இதில் எது முக்கியம் என்பதை உணராமல் இருப்பதே பெரிய கவலை என்பதை யாவரும் உணர்தல் வேண்டும் என்பதை கவிஞர் சொல்லுவதை விட யாராலும் இவ்வளவு எளிமையாகச் சொல்லி விட முடியாதல்லவா? எத்தனையோ பேர் எம்மைவிடவும் மோசமாக இருக்கிறார்கள் என்பதை ஒர் கணம் நினைத்தால் நாங்கள் படும் துன்பம் பெரிதாகவே தெரியாமல் போய்விடும் என்பதைக் கண்ணதாசன் சொல்லும் இடத்தால் அவர் உயர்ந்த கவிஞன் ஆகி நிற்கிறார் எனலாம்.

    வாழ்க்கையில் அவர் அனுபவிக்காத இன்பங்களும் இல்லை, .துன்பங்களும் இல்லை எனலாம். அவற்றை யெல்லாம் அவர் எங்களுக்குத் தனது கவிதைகள் வாயிலாகத் தரவும் மறக்க வில்லை.

    எங்கே வாழ்க்கை தொடங்கும் – அது
    எங்கே எவ்விதம் முடியும்
    இதுதான் பாதை இதுதான் பயணம்
    என்பது எவருக்கும் தெரியாது 

    இது பெரிய தத்துவம்தான் ஆனால் இதில் கவிஞரின் ஒரு பங்கும் காணப்படுகிறது. சிறு கூடல்பட்டியில் இருந்து சென்னை வந்து படுக்க இடமில்லாமல் கடற்கரை ஓரத்தில் படுக்க அங்கும் படுக்க முடியாமல் போலீஸ்காரர்களால் கண்ணாதாசன் போக்கிடம் இல்லாமல் விரட்டி அடிக்கப்படுகிறார். அப்பொழுது அவரது வாழ்க்கைப் பயணம் எப்படி அமையப் போகிறது எங்கே முடியப்போகிறது என்பது அவருக்கே புரியாத ஒன்றாக இருந்திருக்கலாம் அல்லவா? இதுவும் ஒருகருத்தாயும் இருக்கலாம். அதேவேளை மனித வாழ்வை நாங்கள் தீர்மா னிக்கவும் முடியாதிருக்கும் என்பதும் கூட கருத்தாகலாம்தானே!

    சுத்திச்சுத்தி கடவுளிடம்தான் கண்ணதாசன் வருகின்றார். எதைச் சொல்லுவதானாலும் கடவுளையும் கூடவே வைத்திருப்பார்.

    நல்லவர்க் கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனட்சாட்சி
    ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
    நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
    அதுதான் உள்ளத்தின் சாட்சியம்மா — அதுதான் உண்மையின் சாட்சியம்மா

    மனிதர்களே மனட்சாட்சிக்கு மதிப்பளியுங்கள். அல்லது தெய்வத்தை நம்புங்கள். இப்படி செய்யாதுவிட்டால் அது உங்களுக்கு ஏற்றதல்ல அது நல்ல வாழ்வுக்கும் வழி வகுக்காது என்று சொல்லி எமக்கு நற்சிந்தனை வழங்குகின்றார் கண்ணதாசன் அவர்கள்.

    அவரின் பாடல்கள் அழியாப் புகழ் பெற்றன என்பதில் எள்ளளவும் எந்தவித ஐயமும் இல்லை. ஆனால் கண்ணதாசன் வாழ்கின்றார் என்றால் அவரின் “அர்த்த முள்ள இந்துமதம்” பெருங்காரணம் என்பதை எவருமே மறுக்க முடியாது.

    முப்பத்தெட்டு வருடங்கள் கவியரசனாகப் புவியையாண்டவன் கண்ணதாசன். எழுத்தாலும், பேச்சாலும் எம்மைக்கட்டிப்போட்டவன். “வாழநினைத்தால் வாழலாம்” என்று தைரியம் கூறிய தமிழ்க்கவிஞன். ஆகவே அவன் காலத்தை வென்று , காவியமாக வெற்றித்திருமகனாகவே நிற்கிறான்.

    [எம். ஜெயராமசர்மா, மெல்பேண்]

     

     

     

     

     

     

     

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

     

    –ஞா.கலையரசி

    Kannadasanகவிஞர், திரைப்படப்பாடலாசிரியர், அரசியல்வாதி, இலக்கியவாதி, சிந்தனாவாதி என்ற பன்முகத்திறமைகளைப் பெற்றவர் கண்ணதாசன் என்றாலும், என்னைப் பெருமளவு பாதித்தவர் திரைப்படப்பாடலாசிரியர் கண்ணதாசனே.

    சிறுவயதில் எனக்கு மிகவும் பிடித்தது, ‘குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று,’ என்ற பாடல்.

    “உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது – என்
    உள்ளம் எனும் சூரியனைக் கோபம் மூடுது
    காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது
    பேசிக் கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது”

    என்று தகிக்கும் உச்சி வெயில் சூரியனை, கடுங்கோபத்தால் டென்ஷன் அதிகமாகி சிடுசிடுக்கும் உள்ளத்துக்கு ஒப்பிட்டு எழுதிய இவ்வரிகள் அப்போதே என்னை ஈர்த்துச் சிந்திக்க வைத்தன.

    ஒருவித லயிப்புடன் இப்பாடலை நான் பாடியதாலோ என்னவோ, பள்ளித் தோழிகள் அடிக்கடி இதனைப் பாடச்சொல்லிக் கேட்பது வழக்கம். ஐந்தாம் வகுப்பின் முடிவில் என் தந்தையின் பணி மாற்றம் காரணமாக வேறு ஊருக்குச் சென்று விட்டோம். ஆறாம் வகுப்பிலிருந்து பள்ளியிறுதியாண்டு வரை வேறு ஒரு பள்ளியில் படித்தேன். பழைய பள்ளித் தோழிகளின் பெயர்கள் ஒன்றிரண்டு நினைவில் இருந்ததே தவிர, அவர்களின் முகங்கள் நினைவில் இல்லை.

    கல்லூரியில் சேரத் திரும்பவும் பழைய ஊருக்கு வர வேண்டியதாயிற்று. கல்லூரியில் அடியெடுத்து வைத்த முதல் நாள், ஒருத்தி என்னைப் பார்த்து “ஏய், குழந்தையும் தெய்வமும் பாட்டு பாடுவியே, அந்தக் கலையரசி தானே நீ?” என்றாள்.

    அப்போது தான் லேசாக அவள் முகம் நினைவுக்கு வந்தது. அவள் என் ஐந்தாம் வகுப்புத் தோழி அனுசுயா. என் அடையாளத்தை மீட்டெடுத்துப் என் நட்பைப் புதுப்பிக்க உதவிய இப்பாடலை எழுதியவர், கவிஞர் கண்ணதாசன்!

    ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகவும் இனிமையானது என்று போற்றப்படும் கல்லூரி வாழ்வின் இறுதி நாளில், பாட வேண்டும் என நாங்கள் தேர்ந்தெடுத்த பாடல், கண்ணதாசனின், ‘பசுமை நிறைந்த நினைவுகளே!’ அன்றிலிருந்து இன்று வரை, அத்தினத்தில் அனைவராலும் பாடப்படும் பாடல் இது தானே?

    “பசுமை நிறைந்த நினைவுகளே
    பாடிப் பறந்த பறவைகளே
    பழகிக் கழித்த தோழர்களே
    பறந்து செல்கின்றோம்”

    என்பதில் ‘பறந்து’ என்பதற்குப் பதிலாகப் ‘பிரிந்து’ என்று பாடுவதாக ஏற்பாடு.

    அந்த நாளும் வந்தது. கல்லூரி முதல்வர் உட்பட பேராசிரியைகள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். விருந்து முடிந்து இறுதியில் தோழிகள் அனைவருடனும் இப்பாடலைப் பாடத் துவங்கினேன்.

    “குரங்குகள் போல, மரங்களின் மீதே தாவித் திரிந்தோமே
    குயில்களைப் போலே, இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
    வரவில்லாமல், செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
    வாழ்க்கைத் துன்பம், அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே”

    என்று பாடுவதற்குள்ளாகவே, பெரும்பாலோர் பாடமுடியாமல் தேம்பித் தேம்பி அழத் துவங்க, கஷ்டப்பட்டுத் தொடர்ந்து பாடி முடித்தவர்கள் ஓரிருவர் மட்டுமே.

    இப்பாடலைக் கேட்ட எங்கள் முதல்வர், “நீங்களே சொந்தமாக எழுதிப்பாடியதா?” என வினவினார். திரைப்படப்பாடல்களைப் பற்றி மிக மோசமான எண்ணம் கொண்டிருந்த அவர், இப்பாடலைக் கேட்ட பிறகு தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டார் என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்!

    ஏற்கெனவே இதே வரிகளைப் பலமுறை பாடிப் பார்த்திருந்தும் கூட அச்சமயத்தில் முழுவதும் பாடமுடியாத அளவுக்கு, தொண்டையை அடைக்க வைத்த அவ்வளவு பொருத்தமான வரிகளைக் கொண்ட பாடல்! கல்லூரியில் காலடி வைக்காத கவிஞர், மாணவப் பருவத்தின் அனைத்து அம்சங்களையும் அழகாகச் சொல்லிப் பிரிவின் வேதனையைத் துல்லியமாக உணர்த்தி எங்களை அழ வைத்த நிகழ்வு, என்றுமே மறக்க முடியாதது. தொலைக்காட்சியில் இன்று இப்பாடலைக் கேட்டால் கூட, அந்த நாள் நினைவுகள், நேற்று நடந்தது போல, நெஞ்சிலே வலம் வருகின்றன! அந்தளவுக்கு என் மலரும் நினைவுகளில், முக்கிய இடம் பெற்ற சாகா வரம் பெற்ற பாடல் இது!

    என் கல்லூரி வாழ்வின் முதல் நாள், பழைய தோழியை அடையாளம் காணவும், இறுதி நாளை வாழ்நாள் முழுக்க நினைவில் நிறுத்தவும் உதவியவை கண்ணதாசனின் இந்த அருமையான திரையிசைப்பாடல்களே!

    பள்ளி நாட்களில் தினமும் இரவில் தந்தை, தங்கை, தம்பிகளுடன் ஒன்றாக வட்டமாக அமர்ந்து, அன்றைய தின நிகழ்வுகளையும் செய்திகளையும் அனைவருடனும் பகிர்ந்து கொண்டே சாப்பிடுவது வழக்கம். அச்சமயத்தில் என் தந்தை, அரசியல், இலக்கியம், சினிமா, நாட்டு நடப்பு பற்றிய பலசெய்திகளை எங்களுக்குச் சொல்வார்.

    ஒருநாள் தமிழலக்கியத்தை ஆழமாகக் கற்ற கவிஞர் கண்ணதாசன் திரைப்படப்பாடல்களில் இலக்கிய நயத்தை எடுத்தாண்டிருப்பது பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

    “அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் இருந்தார்,” என்ற பாரி மகளிரின் பாட்டின் கருத்தை மையமாக வைத்து, அன்றொரு நாள் இதே நிலவில் அவர் இருந்தார் என் அருகே” என்ற பாடலைக் கவிஞர் இயற்றியிருப்பது பற்றிச் சொன்னார்.

    தொடர்ந்து ‘அத்திக்காய்,’….என்ற பாடல் பற்றிப் பேச்சு வந்தது. அதுவரை அத்திக்காய் என்றால் அத்திமரத்தின் காய் என்று தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு வரியாக தந்தை விளக்கம் சொன்னபோது, எங்களுக்கு வியப்புத் தாங்கவில்லை.

    ஆர்வக்கோளாறு அதிகமாகி “உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?” என்றால் என்ன அர்த்தம் அப்பா?” என்று அவர் சொல்லாமல் விட்ட வரிக்குத் தம்பிகளுக்கு முன்னால் அசட்டுத்தனமாய் நான் கேட்டதும், அது காதில் விழாதது போல் அவர் எழுந்து கையலம்பச் சென்றதும், இதைப்போய்க் கேட்கிறாயே என்று என் தங்கை, யாருக்கும் தெரியாமல் என் காலைக் கிள்ளியதும் என் நினைவுக்கு வந்து, இப்போதும் என்னை நாணச் செய்கின்றது.

    பள்ளிப்பருவத்தில், நோட்டுகளின் கடைசிப் பக்கங்களில் திரைப்படப் பாடல்களை எழுதிவைக்கும் பழக்கம் எங்களிடமிருந்தது. தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட தப்பில்லாமல் சொல்லுமளவிற்கு அவை மனப்பாடமாயிருந்தன. மனப்பாடச்செய்யுள் பகுதியில் கண்ணதாசன் பாடல்களிலிருந்திருந்தால், வகுப்பில் எல்லோருமே முழுமதிப்பெண் பெற்றிருந்திருப்போம்! அக்காலத்தில் இரவு பத்து மணியிலிருந்து பதினொரு மணிவரை வானொலியில், ‘நெஞ்சில் நிறைந்தவை,’ என்ற தலைப்பில் திரைப்படப்பாடல்கள் ஒலிபரப்பாகும். அவற்றில் பெரும்பாலானவை கவிஞர் கண்ணதாசனுடையவை தாம். விளக்கை அணைத்து விட்டுப் படுத்துக்கொண்டே அவற்றைக் கேட்பது மனதுக்கு இதமான தாலாட்டாக இருக்கும்.

    “தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே”

    “உள்ளத்தின் கதவுகள் கண்களடா – இங்கே
    உறவுக்குக் காரணம் பெண்களடா”

    போன்ற பாடல்களைக் கேட்டுவிட்டு நிகழ்ச்சி முடிவதற்கு முன்பே தூங்கிவிடுவது வழக்கம். வானொலியை நிறுத்தாமல் தூங்கிவிட்டமைக்கு அடுத்த நாள் காலையில், அம்மாவிடம் திட்டு வாங்குவது சகஜமாய் நடக்கும் நிகழ்வு.

    கவலைகளால் மனம் சோர்ந்து போயிருக்கும் சமயங்களில், கவிஞரின்
    “ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது”

    “உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக,
    மலர்கள் மலர்ந்தது எனக்காக, அன்னை மடியை விரித்தாள் எனக்காக”

    “அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்,
    இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்”

    “வாழ நினைத்தால் வாழலாம்
    வழியா இல்லை பூமியில்?
    ஆழக்கடலும் சோலையாகும் ஆசை இருந்தால் நீந்திவா”

    போன்ற பாடல்களைக் கேட்கும் போது சோர்வு நீங்கி, மனதில் உற்சாகம் கரை புரண்டு ஓடும்.

    நெருங்கிய உறவுகளை இழந்து விரக்தியின் எல்லையில் நின்ற போது
    “போனால் போகட்டும் போடா, இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?” என்ற பாடலை நமக்காகவே கவிஞர் எழுதியிருக்கிறாரோ என்று தோன்றும்.

    “என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே
    இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே”

    நிம்மதியிழந்து தூக்கத்தைத் தொலைத்த காலத்தில், இவ்வரிகள் சொல்லும் நிதர்சனம் உறைத்தது!

    முதன்முதலில் தாய்மைப்பேறை எதிர்நோக்கியிருந்த காலத்தில்,
    “பூப்போல பூப்போல பிறக்கும்
    பால் போல பால் போல சிரிக்கும்
    மான் போல மான் போல துள்ளும்
    தேன் போல இதயத்தை அள்ளும்”

    என்ற வரிகள் மனதை மயிலிறகால் வருடி பேருவகை அளித்தன!

    “உள்ளாடும் உயிரொன்று கண்டேன், அதன்
    உருவத்தை நான் என்று காண்பேன்?,”
    என்று முதல் குழந்தையை எதிர்நோக்கியிருக்கும் தாயொருத்தியின் கனவையும் ஏக்கத்தையும் அத்துணை நுணுக்கமாக தாம் அனுபவித்தது போல் சொல்லில் வடித்த கவிஞரை, என்ன சொல்லிப் புகழ?

    “அமைதியான நதியினிலே ஓடும்- ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
    காற்றினிலும் நதியினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
    கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்”

    “உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
    உலகம் உன்னிடம் மயங்கும்
    நிலை உயரும் போது பணிவு கொண்டால்
    உயிர்கள் உன்னை வணங்கும்
    உண்மை என்பது அன்பாகும்
    பெரும் பணிவு என்பது பண்பாகும்”

    “கருணை பொங்கும் உள்ளம்- அது
    கடவுள் வாழும் இல்லம்
    கருணை மறந்தே வாழ்கின்றான்
    கடவுளைத் தேடி அலைகின்றான்”

    போன்ற வாழ்வியலுக்குத் தேவையான உயரிய தத்துவங்களை எளிய மொழியில் பாமரருக்கும் புரிகின்ற மாதிரி, பொட்டில் அடித்தாற் போல் படைத்துச் சென்ற மக்கள் கவிஞரின் கவிதைகள் காலத்தை வென்று நிற்கும் சக்தி படைத்தவை!

    என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் கவிஞரின் பல்வேறு பாடல்கள் பொழுதுபோக்கு என்ற அம்சத்தைத் தாண்டி என் ஊனோடும் உணர்வோடும் கலந்து விட்ட காரணத்தினால், ‘அந்த நாள் முதல், இந்த நாள் வரை’ அவை என் மீது தாக்கத்தைச் செலுத்தி என்னை உயிர்ப்புடன் இயங்க வைப்பது, முழுக்க முழுக்க உண்மை!

    ‘காலங்களில் அவள் வசந்தம்,’ பாடல் எழுதிய கவிஞர் கண்ணதாசன் வாழ்ந்த காலம், தமிழ்த்திரையிசைப் பாடல்களின் வசந்த காலம் என்றால் அது மிகையில்லை!

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன் – ஆயிரத்தில் ஒருவன்

    -ஜெயஸ்ரீ ஷங்கர் kannadasan - jayasri

     

    முன்னுரை

    கவியரசர் கண்ணதாசனைப் பற்றி எழுத எனக்கு என்ன தகுதி இருக்கிறது?  என்று நான் என்னையே கேட்டுக் கொள்கிறேன். ‘இல்லை’ என்ற பதிலே என்னுள்ளிருந்து வந்தாலும், அவரது எழுத்தின் பரம ரசிகை என்ற அந்த ஒரு தகுதி  போதாதா, என்று என்னையே நான் தேற்றிக் கொள்கிறேன். ஊர்க் குருவி ஒன்று உயரப் பறக்கும் பருந்தானதாக எண்ணம் கொண்டு சின்னஞ் சிறிய சிறகுகளை  விரித்து வானத்தைப் பார்க்கிறேன். சரி…எழுதலாம்.

    எனது தந்தை திரு. பேரை. சுப்ரமணியன் அவர்கள் கண்ணதாசனின் நண்பராம். ஒரு சமயம், மதராஸில்  இருந்து 1965-இல் கவிஞர் செகந்திராபாத் வந்திருந்த போது எங்கள் வீட்டுக்கும் நண்பர் எனும் முறையில்  எனது தந்தையைக் காண வந்திருந்தார். அப்போது நான் சிறுமி.  கவியரசர் எங்கள் இல்லம் வந்திருந்த அந்த நாளை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

    ‘அவன் அருளாலே அவன் தாள் பணிந்து’ என்று மானசீகமாகக் கவியரசர் கண்ணதாசன் அவர்களையே வணங்கிக்கொண்டு எனது பார்வையில்  அவர்களின் பன்முகங்களைப் பற்றி எண்ணிப் பார்க்கிறேன்.

    வானவில் ஒன்றுதான் அதில் வண்ணங்கள் ஏழு; ஸ்வரங்கள் ஏழுதான் அதனுள் பிறப்பது எத்தனை ராகங்கள்? அது போலத்தான் கவியரசருக்குள் பல மனங்கள்.

    அவர் தனது வாழ்நாளில் பல அவதாரங்கள்  எடுத்து வாழ்ந்திருப்பது கவிஞரின் வாழ்வில் ஒரு வரப்பிரசாதம் ஆகும். என்னைப் பொறுத்தமட்டில், கண்ணதாசன் என்னும் அந்தக் கோடிப் புண்ணியம் செய்த ஆன்மா, வெறும் மானிடன் அல்லன்! அதையும் தாண்டித் தனது பிறப்பைப் பல்லாண்டு காலங்கள் உயிர்ப்புடன் இருக்க வரம் கொண்டு வந்த கர்மயோகி!

    கலியுகத்துக் கண்ணனின் மற்றுமொரு அவதார புருஷராகவும் அவரை எடுத்துக் கொள்ளலாம். கண்ணன்பால் அவர் கொண்ட அன்புக்கும், சரணாகதிக்கும் அவரின் எழுத்துகளே சாட்சி. கண்ணனைச் சாமான்ய மக்களுக்குக் காட்டிக் கொடுத்தவர் அவர்தான்.

    ”கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
    ஏழைக்
    கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்…”

    என்ற பாடல் ஒலிக்காத மனங்களும் உண்டா?

    ஒரு சராசரி மனிதன்,  எண்ணங்களையே அஸ்திவாரமாகக்  கொண்டு, எண்ணங்களையே  வண்ண வானவில்லாக மாற்றி வானம்தொட்ட அவரது இலக்கையும் கடந்து நின்றது சத்தியமே. எந்த முகத் திரையும் இன்றி, தனக்குள் இருந்த நல்லவனும், தன்னை வழி நடத்தும் தீயவனும் எல்லாம் நானே என்று பகிரங்கமாகத் தன்னைத் தானே விமரிசித்துக் கொண்ட புனிதன் அவர்.

    எல்லோரும், ’ஊரே  தன்னை நல்லவன் ’என்று போற்றி மதிக்க  வேண்டும் என நினைக்கும் மனிதர்களிடையே,  “எப்படி எல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்; ஆகவே இப்படித்தான் வாழவேண்டும் என்று புத்தி சொல்லக் கூடிய யோக்கியதை எனக்கு உண்டு” என இத்தனை ஆணித்தரமாகத் தனது அனுபவத்தை மற்றவர்க்கு அனுபவப் பாடமாக  எடுத்துச் சொல்லும் தைரியம் எத்தனை மனங்களுக்கு கைவல்யமாகும்? சிந்தித்துப் பார்க்கிறேன்.

    ’எனது பார்வையில் கண்ணதாசன்’ என்பவர் யார்? அவர் ஒரு சிறந்த படைப்பாளி என்பதைத் தவிர,  ஒரு இலக்கியவாதி, சிந்தனையாளன் என்பதையும் மீறி, மனிதனுக்குள் இருக்கும் தேவையற்ற ‘நெஞ்சத்து நஞ்சாகிய’  தீய குணங்களை மனத்திற்கு வெளியே நிறுத்தி வைத்ததால், அவருக்குள்  இறைவனே குடி கொண்டார்!

    ஆம். அவரது எண்ணங்களே வளைந்து  வில்லானது; வில்லிலிருந்து சீறிய அம்பானது; உருவிய வாளானது; சுழலும்  பம்பரமானது; சாட்டையடியானது; பறக்கும் பட்டமானது; உயர்த்தும் ஏணியானது;  கரை சேர்க்கும் தோணியானது; பாதை உணர்த்தும் கைவிளக்கானது; கொட்டும் அருவியானது; காட்டாற்று வேகமானது; மகுடிக்கு ஆடும் பாம்பானது; துடித்த மனத்திற்கு மயிலிறகானது; எழுத்துகள் எல்லாம் அவருக்கு அடிமை பூதமானது!

    ஒரு எண்ணத்தின் அவதாரம் அத்தனை வடிவங்கள் பெறும்போது, அந்த எண்ணங்கள் கைவரப் பெற்றவர் எத்தனை பக்குவம் பெற்றவறாயிருந்திடல் வேண்டும்?  அப்பேர்ப்பட்ட அவரது எழுத்துகளைப்  படிக்கப் படிக்க ஆனந்தம் மனத்தை ஆளுகிறது!

    “நான் படைப்பதனால் என் பேர் இறைவன்“

    என்று சொன்னவர் தான் அவர். ஆனால், படைப்பது மட்டுமா செய்தார்? அவரது திரையிசைப் பாடல்கள் எத்தனையோ நெஞ்சங்களை வாழ வைத்துக் காத்து இரட்சித்திருக்கிறது. அவரது சிந்தனை எத்தனையோ நெஞ்சங்களில் ஊடுருவிச் சென்று அதனுள் கிடந்த நஞ்சுகளை வெளியேற்றி அழித்திருக்கிறது. இன்றும் காலத்தைக் கடந்து  அதன் செயல்பாடு நடந்து கொண்டே இருப்பதால், கண்ணதாசன் மும்மூர்த்திகளின் பிரதிநிதியாகவே தமிழ் நெஞ்சங்களில் வாழ்ந்து வருகிறார் என்று சொன்னாலும், அது மிகையாகாது.

    அவரது எண்ணப்  பொக்கிஷங்கள் நல்ல நல்ல புத்தகங்களாக மாறி , அவரே அவற்றையெல்லாம்  பாரி போல வாரி வாரி வழங்கி இருக்கிறார்.

    கோபத்தையும், பொறாமையையும், பேராசையையும் ஒருவர் தன்  இதயத்தின் வெளியில் நிறுத்தினால், அவரின் நெஞ்சம் முழுதும் அன்பு, பாசம், காருண்யம், அமைதி, ஆனந்தம், வீரம், செல்வம், நகைச்சுவை, அழகு  என்று மும்மடங்கு பலன் குடி கொள்ளுமாம். இதைச் சிறப்பாக வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி அனுபவ ஏட்டில் பொறித்து நமக்குத் தந்த காலத்தைக் கடந்து வாழும் சித்தர் அவர்.

    சாதாரணமாக, புதிய பாடல்கள் பிறந்ததும் பழைய பாடல்கள் மறக்கப்பட்டு   விடும். ஆனால் கவியரசரின் பாடல்கள் இன்றளவும் நிலைத்து நிற்பதற்கு அவரது கவிதை நயமும், உணர்வுப் பிரயோகமும் தான் காரணம் ஆகும்.

    கவியரசர்  தமது  வாழ்க்கையில் அனுபவித்து உணர்ந்த நிகழ்வுகளைப் பல்வேறு சூழ்நிலையில் திணித்துப் பாடலாக வடித்தார். அது எந்தவொரு  சராசரி மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்துடனும்  இணைந்துவிட்டதால், ஒவ்வொரு பாடலும் ரசிகர்களாகிய நம் மனதை விட்டு இன்றளவும் நீங்காது பதிந்து விட்டது.

    காதலையும், தத்துவத்தையும் கண்ணதாசனைப்  போல் சொல்ல அவரே மீண்டும் பிறந்து வந்தால் தான் உண்டு. அதற்கும் வழியிருக்காது…எத்தனை உயர்ந்த தர்மங்கள் செய்தவர், பிறவிப் பிணியிலிருந்து விடுதலை பெற்றிருப்பார்.  எனக்கான நிறைவு என்னவென்றால், அவர் வாழ்ந்திருந்த காலத்தில் நானும் வாழ்ந்து வந்தேன் என்பது தான்!

    காதலும், கண்ணதாசனும் கடலும் அலையும் போல ஒன்றிணைந்தவர்கள் என்பது நாமறிந்ததே. காதலையே உயிர்த் துடிப்பென கொண்டவர் கவியரசர். காதலின் அத்தனை பரிமாணத்தையும் ரசித்து, உணர்ந்து, தேன்கூடாகக் கட்டி வைத்தவர். காதலென்ற மாய உணர்வுக்கு இதயத்துக்கு இதயம் உருக்கொடுத்த பிரம்மன்! அவர் எழுதிய வரிகளில் இல்லாதவை எதுவும் காதலிலேயே இல்லை எனலாம். காதலின் கர்ப்பக்கிரகம்வரை சென்று வந்து எழுதியவர்  நமது கண்ணதாசன்!

    ’யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது…?’

    இந்த ஒரு வரியில், காதல் நுழைந்த இதயத்தின் முதல் துடிப்பை  இதைவிட அழகாக யாராலும் சொல்லிவிட முடியாது.

    உடலுக்குள் குருதிக்கு பதிலாக எண்ணங்களே ஓடத் தமது எழுதுகோலுக்குள் உணர்வுகளை நிரப்பி அத்தனை உணர்வுகளையும்  அருவியெனக்  கொட்டித் தீர்த்தவர் அவர். அவரது ஒவ்வொரு படைப்பிலும் சமூகச் சிந்தனை நிறைந்திருக்கும். சோர்ந்த இதயங்களைத்  தமது   எழுத்தைக் கொண்டே உற்சாகப்படுத்துவார்.  எவரது கற்பனைக்கும் எட்டாத வார்த்தைகள் கூட அவருக்கு கிட்டும்!

    அவரது திரையிசைப் பாடலுலகில்  பல்லாயிரக்கணக்கான பாடல்களுள் எதை எடுப்பது எதை விடுப்பது என்ற நிலை உருவாகும் போது,

    “உங்களுக்காக நானே சொல்வேன், உங்களுக்காக நானே கேட்பேன்,
    தெய்வங்கள்
    கல்லாய்ப் போனால் பூசாரி இல்லையா?
    உள்ளத்தில் நல்லோர் தானே உயர்ந்தவர் இல்லையா?”

    இந்த வரிகளில் திரையிசையையும் மீறி, ஒரு தவிப்பு… மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொருவரும் உதவ வேண்டும் என்ற  கோரிக்கையாக வைப்பார்  கவிஞர்.

    “சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை
    சொல்லாத
    சொல்லுக்கு விலையேதும் இல்லை“

    அனைவருக்குமான பொக்கிஷம்  இந்தப் பாடல். ‘சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை’ எனும் போது, சில சமயங்களின் பேசும் மௌனங்கள்  விலை மதிப்பில்லாதது, மேலும்  பெருந்தன்மை என்ற குணத்துக்கும் மகுடம் சூட்டி வார்த்தைகளால் விளையாடி இருக்கிறார் கவியரசர்.

    கடைசியாகக் கவியரசர் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல் அவர் தமது ஆழ் மனக் கடலிலிருந்து நமக்கு எடுத்துத் தந்த வலம்புரிமுத்து.

    “அந்திப்  பகல் உன்னை நான் பார்க்கிறேன்
    ஆண்டவனை
      இதைத் தான் கேட்கிறேன்“

    இந்த வரிகளில் மனம் சொக்கும் இதமான தாலாட்டு தொனிக்கிறது. இன்றும் நம் ஒவ்வொரு இதயத்திலும் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.

    கொட்டித் தீர்க்கும் அருவியாய், காட்டாற்று வேகமாய், தெளிந்த நீரோடையாய் அவரது வாழ்வில் தான் எத்தனை சுருதிகள்…நல்ல எழுத்தென்பது அறிவை உழுவதற்குச் சமம். தமது காலம் முடிவதற்குள், அவர் நமக்குத் தந்திருக்கும் பொக்கிஷங்கள் கணக்கிலடங்காதவை. தன்னையே உருக்கி ஒளி தரும் மெழுகுத்திரியாகி  இரவும் பகலுமாக எழுதியெழுதித்  ‘தானம்’ செய்த பரந்தாமன்.

    இப்போது திரைக்குப் பாடல் எழுதக்கூட இங்கே கவிஞர் தட்டுப்பாடு. ஒரு பெரிய இலக்கிய ராஜவீதியிலிருந்து மெல்ல மெல்ல நகர்த்தப்பட்டுவிட்டோம். இதன் முடிவு…நல்ல பாடல் கேட்கும் வாய்ப்பை இன்றைய இளைஞர்கள் இழந்து விட்டனர். பொருள் பொதிந்த பாடல்கள், சிந்தையைச் சீர் செய்யும் நளினங்கள் எதுவுமின்றிக் கேட்கப்படும் இசைக்குள் தொலைந்து போகிறார்கள். ஒரு சமுதாயச் சீர்கேடு மெல்ல உருவாகி வருகிறது. பாசத்தைப் பக்குவமாகச் சமைத்து விருந்து படைத்துக்கொண்டிருந்த ‘அன்னபூரணியை’ நாம் இழந்து விட்டோம். ‘அவனை எழுப்பாதீர்; அப்படியே தூங்கட்டும்!’.

    அவரோ பெரிய விழுதுகள் தாங்கிய ஆலமரம். இன்றோ, நாம் அந்த மரத்தின் மகாத்மியத்தைப் பற்றிப் பேசிச் சிலிர்க்கிறோம்.

    அர்த்தமுள்ள இந்துமதம்: ஒரு மதத்தின் தன்மையை, புனிதத்தை ஆராய்ந்து அவரவரின் கடமைகளை வகுத்துச் சொன்னது.

    குடும்ப சூத்திரம்: அந்தரங்கம் பற்றிய தொகுப்பு; குடும்பத்துக்கு வழி சொல்லியது.

    அனுபவ மொழிகள்: சிந்தையைத் தூண்டும் ஆரோக்கிய பானம்.

    பகவத் கீதை: இறைவனுக்கும் நமக்கும் இடையே இருந்த இடைவெளியை நீக்கியது.

    மனவாசம் , வனவாசம்: கவிஞரின் மனத்தை, வாழ்க்கையை அரசியல், பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை நமக்குக் காட்டிய சரித்திரம்.

    கடைசிப் பக்கம்: வாழ்வியலை நடைமுறைக்கு எளிமையாய்ச் சொல்லித் தருவது.

    ஜாதி, மத பேதமின்றி குரான், இயேசு காவியம்  என்று அவர் தொட்டுச் செல்லாத இலக்கியப் படைப்புகள் இல்லையே. அவரது படைப்புகளுக்கு நிகர் அவரே.

    முடிவுரை

    அவரைப் பற்றி எழுதும் போதே இதயம் புல்லரிக்கிறது.  ’கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது’;  எனது பார்வையில் கண்ணதாசன் ஆயிரத்தில் ஒருவனாக, கடையெழு வள்ளலைப்போல் ‘கலியுக வள்ளல்’ என்பேன்.

     

    Share
  • கடித இலக்கியப் போட்டி முடிவுகள்!

    பவள சங்கரி

    அன்பு நண்பர்களே,

    வணக்கம். இதோ நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கடித இலக்கியப் போட்டியின் முடிவுகள். தன்னுடைய இடையறாத பணிகளுக்கிடையேயும் திரு. இசைக்கவி இரமணன் அவர்கள் போட்டியின் முடிவுகளை குறிப்பிட்ட நேரத்தில் முடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அவருக்கு நம் வல்லமையின் மனமார்ந்த நன்றி உரித்தாகுக. போட்டியை அறிவித்த தேமொழி அவர்களுக்கும், உற்சாகமாகக் கலந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும். பரிசு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள். நாம் ஏற்கனவே அறிவித்திருந்திருந்த முதல் மூன்று பரிசுகள் மற்றும் மூன்று ஆறுதல் பரிசுகளுடன், திரு இரமணன் அவர்கள் மேலும் ஆறு பேர்களுக்கு தலா ரூ. 200 வீதம் ஆறுதல் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்கள். பரிசு பெற்றவர்கள் தங்கள் உள்நாட்டு முகவரிகளை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் பரிசுத் தொகை அனுப்பி வைக்கப்படும்.

    இதோ திரு இரமணன் அவர்களின் போட்டி முடிவுகள் :

    இசைக்கவி இரமணன்

    imagesஉலகம் அழகானது. ஆனால், வாழ்க்கைக்கு அதனளவில் அழகேதும் கிடையாது. வைக்கோலைத் தின்று வெந்நீர் குடிக்கும் சுவாரசியமே உள்ள இந்த வாழ்க்கையில், பிறந்த கணத்திற்கு முன்பிருந்தே உயிரின் பிடரியை மரணம் கவ்விக் கிடக்கும் இந்தக் கணநேரக் கூத்தில் என்ன அழகு இருக்க முடியும்?

    வாழ்க்கை வேறு, வாழுதல் வேறு. நன்கு வாழுவதன் மூலமே ஒன்றுமற்ற வாழ்க்கை ஒளிபொருந்தியதாக மாறுகின்றது. அதுதான் வாழ்வாங்கு வாழுதல். அதற்கு இரண்டு அம்சங்கள் தேவைப்படுகின்றன. ஒன்று, நேயம். இன்னொன்று கலை.

    நேயம், மனிதனை மனிதனாக்குகிறது. கலை, மனிதனுக்கும் இறைவனுக்கும் பாலம் போடுகிறது. வாழ்க்கை, காட்டாறாக இருந்தாலும், பாலத்திலிருந்து பார்க்கும்போது நமக்குப் பதற்றமில்லை. கலை, எல்லாவற்றையும் படைத்து இயக்கும் பரமசக்தியிடமிருந்தே வருகிறது. அந்தப் பரம்பொருள், மனிதனில் தன்னை நேயம் என்றே பதிவு செய்துகொண்டுள்ளது.

    சேதி சொல்லும் இயற்கை, நியதி காட்டும் கோள்கள், பாதி சொல்லும் உயிரினங்கள், பாடம் சொல்லும் வாழ்க்கை, இவையே கலைகள் விளங்கும் தளங்கள். இயற்கையிலும் வாழ்க்கையிலும் ஏற்கனவே தென்படுவதை, நேயமென்னும் தூரிகை ஏந்தி ஓவியன் சித்திரம் தீட்டுகிறான். கவிஞன் கவிதை பாடுகிறான். இன்னொருவன் கல்லை தெய்வமாக்கிக் காட்டுகிறான்.

    கலைகளில் கடிதமும் அடக்கம் என்பது உண்மை. பேசும் சொல்லும், பதியும் எழுத்தும் கலை வயப்படுவது இயல்புதானே? கலை மிளிரும் எழுத்தே இலக்கியம். எனவேதான், வல்லமைக் குழுமத்தார், ஒரு கடித இலக்கியப் போட்டியை அறிவித்தார்கள். வந்து குவிந்தன கடிதங்கள். வம்பாய், என்னைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். எதையும் தட்டிக் கொடுப்பவன் எதைத் தட்டிப் பார்த்து எப்படித் தெரிந்து எதனை எடுப்பான்?

    ஆனால், வந்து சேர்ந்த கடிதங்கள் எல்லாம் சுசீந்திரத்துத் தூண்கள் போலானதால், தட்டி மகிழ்ந்தேன். அவற்றை, நான் நன்று, மிக நன்று, மிக மிக நன்று என்றே வகைப்படுத்த முடிந்தது.

    அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று பற்பலரும் பலவித வண்ணம் காட்டியிருக்கிறார்கள். முதலில், அவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சரி, எந்த அடிப்படையில் நான் பரிசுகளுக்கு உரியவை இன்னின்னவை என்று தேர்ந்தெடுத்தேன்?

    • சொந்த அனுபவம், சற்றே அறிவு, கொஞ்சம் கற்பனை, நிறைய நேசம், இவை கலந்துவரும் கடிதங்களே மனதில் நிற்க வல்லவை. அல்லவா?
    • ஒரு கடிதத்தின் நீளம், அது தாளில் எடுக்கும் இடத்தைப் பொறுத்தல்ல, மனதில் பிடிக்கும் இடத்திற்கு ஏற்பவே நிச்சயிக்கப்படுகிறது. அமைப்பாளர்கள், இரண்டு பக்கங்கள் என்பதாக ஓர் அளவை நிர்ணயம் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த அளவோடு நிறுத்திவிடுவதாலேயே அந்தக் கடிதம் சரியான நீளத்தில் இருப்பதாகக் கருதிவிட முடியாது. வளவளவென்று போகுமானால், ஒரு பக்கத்திற்கும் குறைவான கடிதம் கூட நீளமாகவே தெரியும்.
    • நமக்குத் தெரிந்தவற்றையெல்லாம் கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்னும் ஆவல் மேலிடும் போது, கடிதம் சுமையாகி விடுகிறது
    • கட்டுரை, கடிதமாகாது. கவிதையும் அப்படித்தான்! கடிதம், உரைநடையின் தளம். அதில், கவிதையின் தறுவாய் தென்படலாம். கட்டுரையின் சாயல் தட்டுப்படலாம்.
    • நமது அனுபவத்தைச் சார்ந்திருந்து, அன்பின் அடிப்படையில் வருகின்ற சொற்கள், நேரடியான அறிவூட்டும் நடவடிக்கைகளை விட மேலானவை.
    • ‘இவருக்கு நண்பர்கள் வேண்டாம், முகவரிகள் போதும்!’ என்று சொல்லும் அளவுக்குச் சில கடிதங்கள் இருக்கின்றன. சொல்ல நினைத்ததைச் சொல்வதற்கு பதிலாக, என்ன கேட்க விரும்புவார்கள் என்று அன்பார ஊகித்தல் கடிதங்களை அழகாக்கும்.

    இவ்வளவு சொன்னால் போதும் என்று தோன்றுகின்றது.

    எப்படி இருப்பினும், என்னுடைய தேர்ந்தெடுப்பு என்னுடைய ரசனை, புரிதல், அறிவு இவற்றிற்கேற்பத்தான் இருக்குமே அன்றி, இதுதான் சரியான முடிவு என்பதாக இருக்க முடியாது. ஏனெனில், நான் சராசரிக்கும் குறைவான சாதாரண மனிதன்.

     

    முதற்பரிசு:

    கவாகம்ஸ்

    கடிதத்தின் இறுதியில்தான் அது ஒருவர் தனக்கே எழுதிக்கொண்ட கடிதம் என்பது விளங்குகிறது. ஓர் அறிவியல் புனைவும், ஆழமான காதலும் கலந்து மிகவும் விறுவிறுப்பாகவும் மிளிர்கின்றது இந்தக் கடிதம். கொஞ்சம் கூட சுருதி விலகாத பாடல் போன்று இருக்கின்றது.

    இரண்டாம் பரிசு: 

    மாதவன் இளங்கோ

    இது தனது ரசிகைக்கு ஓர் ஓவியர் எழுதிய கடிதம். இந்தக் கோணமே மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. ஒரு கலைஞனின் மனம், அவனுடைய படைப்பைக் காட்டிலும் எத்தனை நுண்மையானது, பரிசைக் காட்டிலும் அவன் எப்படி ரசனையைத்தான் நம்பி வாழ்கிறான் என்பதெல்லாம் இந்தக் கடிதம் சிறப்பாக உணர்த்துகின்றது.

     

    மூன்றாம் பரிசு :

    ரஞ்சனி நாராயணன்

    அம்மாவுக்கு மகன் எழுதிய கடிதம். நெஞ்சைத் தொட்டது.

     

    ஆறுதல் பரிசுகள்:

    1. கீதா மதிவாணன்: அம்மா, தன் மகனுக்கு எழுதிய அழகான கடிதம்
    2. விசாலம் : மகளுக்குத் தாய் எழுதிய மனதைத் தொடும் கடிதம்
    3. சரஸ்வதி ராஜேந்திரன்: அம்மா, மகளுக்கு எழுதிய அன்புக் கடிதம்

     

     திரு. இரமணன் அவர்கள் வழங்கும் சிறப்புப் பரிசு ரூ. 200 பெறுபவர்கள்

     

    1. நந்திதா : தாய்க்கு எழுதிய அருமையான வரலாற்றுக் கடிதம்
    2. வி. பாலகுமார் : ஒரு கணவன் மனைவிக்கு எழுதியிருக்கும் அன்புக் கடிதம்
    3. கலையரசி : பெண்ணைப் பெற்றவள் தோழிக்கு எழுதிய கடிதம்
    4. ராஜலஷ்மி பரமசிவம் : தோழிக்கு எழுதிய கடிதம்
    5. சங்கர் சுப்ரமண்யன் : காதலிக்கு – சமர்ப்பிக்கப்படாத மடல்
    6. புதுவை பிரபா : ஹாஸ்டலில் சேர்த்த மகளுக்கு அப்பா எழுதியது

    எழுதுகோலை எடுக்கும் முன்பே, இதயத்தைத் திறந்துவிடுவோம்! அன்பு காட்டும் வழியில் வந்து விழட்டும் சொற்கள்!

    அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

    வாய்ப்பளித்த வல்லமைக்கு வணக்கம் கலந்த நன்றி.

    அன்புடன்,

    ரமணன்

     

    இந்தப் போட்டியை அறிவித்த தேமொழிக்கும்  தேர்ந்தெடுத்துக் கொடுத்த திரு ரமணன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

    வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுகள். 

    அன்புடன் என்றும்,
    அண்ணாகண்ணன்

    Share
  • அன்பு மணிமொழிக்கு …

    அன்பு மணிமொழிக்கு,

    உன் அக்கா தேமொழியின் அன்புக் கடிதம். ‘அன்பு மணி’ என்றுதான் எழுத நினைத்தேன்…ஆனால் நான் உன்னை ‘மணி’ என்றழைத்தால், “மணி என்று நாய்க்குட்டிக்குத்தான் பெயர் வைப்பார்கள், நான் என்ன நாய்க்குட்டியா? மணிமொழி என்று கூப்பிடு” என்று நீ அதட்டுவதும் நினைவு வந்தது.

    letter to manimozhiநமக்குள் ஒரு வயதே வித்தியாசம் (சரியாக எனக்குப் பிறகு 500 நாட்கள் கழித்துப் பிறந்தவள் நீ) என்ற காரணத்தால் நம்மிருவருக்கும் சகோதரிகள் என்பதைவிடத் தோழிகள் என்ற அளவிற்கும் உறவு இருந்தது.

    எத்தனை எத்தனை இனிய நினைவுகள் நாம் வளர்ந்த காலத்தில்… என்னை நீ “ஏய்…தேமொழி” என்று அழைப்பதைக் கேட்டு நம் பாட்டிக்கு வருமே கோபம் அதையும் நான் மறப்பதற்கில்லை. அந்தக் கோபத்தில் தனது பொக்கை வாயில் இல்லாத பற்களை அவர்கள் கடிக்கும் பொழுது, அதைப் பார்த்து உனக்கு வருமே சிரிப்பு, அதையும் நான் மறப்பதற்கில்லை. அவர்களுக்கு கோபம் வரவழைக்கவே நீ மீண்டும் மீண்டும் “ஏய்.. தேமொழி” “ஏய்.. தேமொழி” என்றழைத்து அவர்களுக்கு எரிச்சலூட்டுவாய்.

    அவர்கள் எதிர்ப்பை நீ பொருட்படுத்தியதே இல்லை. அவர்கள் மட்டுமா நீ அவ்வாறு அழைப்பதை மாற்ற முயன்றார்கள். அப்பாவும்தான் முயன்று பார்த்தார்கள். அதற்காக அப்பாவும் முன்னுதாரணமாக இருக்க விரும்பி என்னை “அக்கா” என்று கொஞ்ச காலம் கூப்பிட்டுப் பார்த்தார்கள். ஆனால் நீயோ அல்லது தம்பியோ அவ்வாறு என்னை “அக்கா” என்று அழைக்காமல் பெயர் சொல்லித்தான் அழைத்தீர்கள். கடைசியில் “அக்கா” என்றழைத்தது அப்பா மட்டுமே என்ற ஒரு நிலை வந்ததும் அப்பாவும் அவர்களது முயற்சியை கைவிட்டு விட்டார்கள்.

    முதல்வர் ஜெயலலிதாவை எல்லோரும் ‘அம்மா’ என்றழைப்பது போல, உனது தோழிகள், நம் தம்பியின் நண்பர்கள், கல்லூரியிலும் பள்ளியிலும் பயின்ற காலத்தில் என்னைவிட இளைய மாணவர்கள் பலரும் அந்த நாட்களில் என்னை “அக்கா” என்றுதான் அழைத்தார்கள். பிறகு இப்பொழுது கூகிள் குழுமங்களிலும் என்னைப் பலர் அப்படி ‘அக்கா’ என்றுதான் அழைக்கிறார்கள்.

    இப்பொழுதெல்லாம் நாம் வளர்ந்தபொழுது நிகழ்ந்த பல இளம் பருவ நினைவுகளை அசைபோடுவது எனக்கு வாடிக்கையாகிவிட்டது. அம்மாவுக்கு இருந்த ஆசையில் நமக்கு ஒரே துணியில் சீருடை போன்று அணிவித்த கவுன்கள், பாவாடை சட்டைகளில் உலாவந்தது நினைவிற்கு வருகிறது. என்னதான் ஒரே போன்ற ஆடை உடுத்தினாலும் பம்ப்ளிமாசாக இருந்த…இருக்கும் நானும், காற்றில் பறந்துவிடும் அளவிற்கு எலும்பு மேல் தோல் போர்த்திய அளவிற்கு மெல்லிய உருவமான நீயும் ஒரே போன்று என்றுமே இருந்தில்லை. விவேகானந்தர் பாறைக்கு நாம் சென்ற பொழுது பலமாக வீசிய காற்றில் நீ தள்ளாடுவதைப் பார்த்த அப்பாவின் நண்பர், “மணி, அக்கா கையப் பிடிச்சிக்கோம்மா, காத்தில பறந்திடப் போற” என நம்மிருவரையும் ஒரே சமயத்தில் கலாய்த்ததும் நினைவு வருகிறது.

    உருவத்தில் மட்டுமல்ல குணத்திலும் நாம் இருவரும் என்றுமே இரு துருவமாகத்தான் இருந்திருக்கிறோம். அம்மா என்னுடைய மனம் கல் என்று என்னைத் திட்டுவார்கள், கண்ணில் சுலபமாக கண்ணீர் வரவே வராது, அப்படியே உனக்கு உன் அப்பாவின் குணம் என்று சொல்வார்கள். ஆனால் நீ அம்மா இறந்து பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் அவர்களைப் பற்றிப் பேச்சு வந்தால் பொசுகென்று அழுதுவிடுவாய், பொல பொலவென்று கண்ணீர் வரும், அம்மாவைப் போலவே மென்மையான, இளகிய மனம் உனக்கு.

    எத்தனை எத்தனை சுவையான இனிய இளம் பருவ நினைவுகள் நமக்கு. இருவரும் செவன்த் கிராஸ் முக்கில் இருக்கும் பாய் கடைக்கு ஓடிப் போய் பட்டம் வாங்குவோம். எனக்கு எப்பொழுதும் வயலெட் வண்ண பட்டம்தான் வாங்குவேன். உனக்கு “என்ன பாப்பா உனக்கு ருக்குமிணி கலர் பட்டமா?” என கடைக்கார பாயே கேட்டு சிரித்துக் கொண்டே வெளிர் நீலவண்ணப் பட்டத்தை உனக்குக் கொடுப்பார். அவருக்கும் உன் விருப்பம் நன்கு தெரியும். “ருக்குமணியே பர பர” என்றப் பாட்டு பிரபலமான காலம் அது. “அடுத்தாத்து அம்புஜத்த பார்த்தேளா” என்று நாமிருவரும் சேர்ந்து நடனம் ஆடுவோம். டர்க்கி டவலை முந்தானை போல தோளில் போட்டுக் கொண்டு டீச்சர் விளையாட்டும் விளையாடுவோம்.

    உனக்கு எப்பொழுதும் நீதான் கடைசி வார்த்தை சொல்ல வேண்டும். எந்த விவாதம் என்றாலும் நீ சொல்வதுதான் கடைசி வார்த்தையாகவும் இருக்கும், last word freak என்று ஆங்கிலத்தில் அழைப்பார்களே, அது போல என்று நினைத்துக் கொள்வேன். அது போலவே நீதான் முதலில் வரவேண்டும் என்று செயல்படுவதைப் பலமுறை பார்ததுண்டு. ஒருமுறை, சிறுமியாக நீ பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது எதிர் திசையில் வேலையிலிருந்து அப்பாவும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். உடனே நீதான் முதலில் வீட்டிற்குப் போக வேண்டும் என்று வீட்டை நோக்கி ஓட, அப்பாவும் பதிலுக்கு விளையாட்டாக வீட்டை நோக்கி ஓட ஆரம்பிக்க, தெருவில் போனவர்கள் அந்தப் போட்டியைப் பார்த்து சிரிக்க, அது நல்ல வேடிக்கையாக அன்று இருந்தது.

    அது மட்டுமா, பள்ளி செல்லும் பொழுது வக்கீல் வீட்டுப் பெண் சித்திராவை வழியில் பார்த்தால் நீ ஓட்டமும் நடையுமாக முந்தப் பார்ப்பாய், அந்தப் பெண்ணும் சளைக்காமல் வேகமெடுக்க, பிறகு பள்ளிக்குச செல்வது உங்களிருவருக்கும் ஓட்டமும் நடையுமாகத்தான் இருக்கும். ப்ளஸ் டூ படிக்கும் பொழுது, உன் தோழி வாசுகிக்கு ஃபோன் போடுவாய். அந்தப் பக்கம் வாசுகி இந்த இந்தப் பாடம் படித்தேன் என்றால், உடனே போட்டி தொடங்கிவிடும். நீயும் முந்துவதற்ககாக விழுந்து விழுந்து படிப்பாய். அந்த ஆரோக்கியமான போட்டியினால் நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரிக்கும் சென்றாய்.

    ஒருமுறை அம்மா என்னிடம், இரண்டாவதும் பெண்ணாகப் பிறந்ததே என்று நீ பிறந்த பொழுது கொஞ்சம் வருத்தமாக இருந்ததென்றும், ஆனால் நீ அப்பாவுக்கு அசிஸ்டெண்ட் போல ஸ்டெத்தஸ்கோப் அணிந்து அப்பாவுடன் ஹாஸ்பிட்டல் வார்டில் சுற்றி வருவதைப் பார்த்துப் பிற்காலத்தில் பெருமையாகவும் இருந்தது என்றும் சொல்லியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு நம்மூவரிலும் அம்மா உயிருடன் இருக்கும்பொழுது அவர்களைப் பெருமைப்பட, மனம் மகிழ வைத்தது நீதான். இவ்வாறு மருத்துவம் படிக்க உனக்கு உதவியது படிப்பில் முந்த வேண்டும் என்ற உனது மனப்பான்மை.

    ஆனாலும் மணி, எல்லாவற்றிலும் முந்த வேண்டும் என்ற எண்ணம் உனது குணமாகிப் போனதில், இப்படி எங்கள் அனைவருக்கும் முன்னரே உலகை விட்டு மறையவும் முந்துவாய் என நான் நினைத்தும் பார்த்ததில்லை. மனம் ஒப்புக் கொள்ள இயலாத அதிர்ச்சிதான் இது. அயல் நாட்டில் வாழ்பவர்களின் இயலாமைகளில் ஒன்று வீட்டில் நடக்கும் பல நிகழ்வுகளில் பங்கு பெற இயலாமல் போவது. நான் உனது பட்டமளிப்பையும் பார்த்ததில்லை, திருமணத்திற்கும் வந்ததில்லை, உனது மகன் பிறந்தபொழுதும் செய்திதான் கேட்டேன், சென்ற 2013 அக்டோபரில் நீ இறந்த பொழுதும் வரமுடியாது போனது.

    வல்லமையில்’சிறுகதைப் போட்டி’ முடிந்து அதைத் தொடர்ந்து ‘புத்தக மதிப்புரை’ போட்டி பற்றிய அறிவிப்பு வந்த நேரம் அது. உன் நினைவாக வல்லமை இதழில் நானும் ஒரு கவிதைப் போட்டியை அறிமுகப்படுத்தி அதற்குப் பரிசு வழங்கினால் என்ன என்று எனக்குத் தோன்றியது. புத்தக மதிப்புரை போட்டி முடிவுக்கு வந்த பிறகு (அதில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது, ஆனால் அதை உன்னிடம் பகிர்ந்து கொள்ள எனக்கு வாய்ப்பில்லாது போனது ஒரு சோகம்) வல்லமை இதழின் ஆசிரியர் பவள சங்கரியையும், நிறுவனர் அண்ணாகண்ணனையும் அணுகி என் வேண்டுகோளை வைத்தேன்.

    போட்டியை எனது எண்ணப்படி கவிதைப் போட்டியாக வைக்கலாமா? அதற்கு இசைக்கவி இரமணன் நடுவராக இருக்க சம்மதிப்பாரா? போட்டியில் மணிமொழி என்ற தலைப்பு இருக்க வேண்டும் என்று நான் வைக்கும் வேண்டுகோள் கவிதை எழுதுபவர்களில் சிந்தனை சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தாதா? ஏற்கனவே கதை, கட்டுரை போன்ற போட்டிகளை அறிவித்தாகிவிட்ட நிலையில் மீண்டும் அது போன்ற போட்டிகளையே தேர்ந்தெடுக்கத் தேவையா? என்றுப் பலப்பல கேள்விகளை வல்லமையின் நிர்வாகக் குழு அலசி ஆராய்ந்து, அதற்கு பல யோசனைகளும் முன் வைக்கப்பட்டன. அதில் அண்ணாகண்ணன் முன் வைத்த ‘கடித இலக்கியப் போட்டி’ குழுவினருக்குப் பிடித்துப் போய்விட அந்த வழியிலேயே தொடர்ந்து போட்டியும் அறிவிக்கப்பட்டது.

    ஆனால் சொன்னால் நீ நம்ப மாட்டாய் மணி, அறுபதுக்கும் மேற்பட்ட “அன்புள்ள மணிமொழிக்கு” கடிதங்கள் போட்டிக்காக அனுப்பப்பட்டன. r u ok? LOL, how r u? என்று குறுஞ்செய்திகளில் பழகிப்போன நம் மக்கள் ஆர்வத்துடன் கடிதங்கள் எழுதினார்கள். கடித இலக்கியப் போட்டி என்ற ஒன்றை அறிவித்ததற்காக எனக்குப் பல பாராட்டுகளும் கிடைத்தன. ஆனால் அத்தனைப் பாராட்டிற்கும் உரியவர் நிறுவனர் அண்ணாகண்ணன் அவர்கள்தான். அவர் முன்மொழிந்த ‘கடித இலக்கியப் போட்டி’ என்ற யோசனை ஒரு நல்ல யோசனைதான். நானும் வல்லமை நிர்வாகக் குழுவினர் போட்டியை முன்னின்று நடத்தும் பொழுது இடையில் உண்மை விளம்பியாக, இதற்காகப் பாராட்டப்பட வேண்டியவர் அண்ணாகண்ணன் என்று அறிக்கைகள் விட்டுக் குளறுபடி செய்யக் கூடாது என்று பொறுமை காத்தேன்.

    போட்டியின் முடிவுகள் வெளியாகிவிட்டன. இனி இந்தத் தகவலை, பாராட்டிற்கு உரியவர் அண்ணாகண்ணன்தான் என்று நான் சொல்லிவிட்டால் எனக்கும் நிம்மதி. சிறந்த கடிதங்களை நடுவர் இசைக்கவி இரமணன் தேர்ந்தேடுத்தார். நான் நினைத்தது போலவே, அவரும் இத்தனை அருமையான கடிதங்களில் எவ்வாறு சிறந்த கடிதங்கள் என்று மூன்றையும், ஆறுதல் பரிசுகளுக்கு என்று மேலும் ஒரு மூன்றையும் மட்டும் தேர்ந்தெடுக்க முடியும், அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததாக இல்லையே என்று கருதி அவரும் மேலும் ஆறு சிறப்புப் பரிசுகளை வழங்கிவிட்டார். இதற்கும் மேல் போட்டிக்கு வந்த கடிதகளின் சிறப்பைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

    ஆனால் நீ எதையும் படிக்கப் போவதில்லை மணி, அதனால் அதற்காக நான் வருந்தப் போவதுமில்லை. பள்ளி நாட்களில் உனக்கு தமிழ் இரண்டாம் தாளில் கற்பனைக் கட்டுரையாக ‘இரயில் தனது வரலாறு கூறுதல்” பற்றி எழுதச் சொன்னாலே உனக்கு கற்பனை வராமல் அழுகைதான் வரும் என்பது எனக்குத் தெரியும். இது போன்ற இலக்கியப் போட்டிகளில் என்றும் உனக்கு ஆர்வம் இருந்ததில்லை. கதை படிக்கும் பொழுது, பெரிய பெரிய பத்திகளாக இருந்தால், அவற்றைத் தவிர்த்துவிட்டு, தாவித் தாவி மேலே படிப்பாய். பின்னர் முடிவைப் படித்த பிறகு கதை உனக்குப் புரியாமல் போகும். நானும் தம்பியும்தான் உனக்குக் கதையினைச் சொல்லி விளங்க வைக்க வேண்டி வரும், எனக்கு அது மறக்குமா?

    நீண்ட கட்டுரைகள், கடிதங்கள் உனக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் நான் எழுதும் மிக நீண்ட கடிதம் இது. நீதானே சொல்லுவாய், “சும்மா நீள நீளமாகப் பேசிக்கொண்டே இருக்காதே, நீ சொல்ல வேண்டியதை எல்லாம் எழுதி ஒரு புத்தகமாகப் போடு, எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது படிக்கிறேன்,” என்று அதுவே என் நினைவில் இப்பொழுதும் இருக்கிறது. அதனால் நான் நினைப்பதை நீண்ட கடிதமாகவும் எழுதிவிட்டேன், நான் ஒரு சிறுகதைப் புத்தகமும் எழுதி வெளிவந்துவிட்டது, ஆனால் உனக்குத்தான் இப்பொழுது இவற்றையெல்லாம் படிக்க நேரமில்லாது போய்விட்டதே என்ற ஆற்றாமையும் வருகிறது. என்றும் என் நினைவில் நீங்காதிருப்பாய் என் அன்பு மணிமொழி.

    உன் அன்பு அக்கா,
    தேமொழி

    Share
  • கடித இலக்கியப் பரிசுப் போட்டி

    பவள சங்கரி

    ​

    அன்பு நண்பர்களே,வணக்கம். ‘கடித இலக்கியப் பரிசுப் போட்டி’ க்கான இறுதி நாள் நேற்றுடன் முடிந்துவிட்ட இத்தருணத்தில் இப்போட்டியின் மாபெரும் வெற்றியாக 61 இடுகைகள், இப்போட்டிக்காக வந்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. படைப்புகள் அனைத்தும் வெளியிட்டிருக்கிறோம். நாம் எதிர்பார்த்ததைக்காட்டிலும் அதிகப்படியான படைப்புகள் வந்து குவிந்துள்ளதால், முதல், இரண்டு, மூன்றாம் பரிசுகளுக்கு மேல், மூன்றுபேருக்குத் தலா ரூ.250 ஆறுதல் பரிசாக அறிவிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். திருமதி தேமொழி அதற்கான தொகையையும் மனமுவந்து வழங்கியுள்ளார்கள். படைப்புகள் அனைத்தும் நம்முடைய வல்லமை இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடுப்பையும் கீழே இணைத்திருக்கிறோம். இதில் யாருடைய படைப்பாவது பிரசுரம் ஆகாமல் விடுபட்டிருந்தால் தெரிவிக்கலாம். படைப்பு அனுப்பிய தேதி, தலைப்பு, பெயர், முகவரி முதலிய விவரங்களுடன், vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்.

    1. மணி மொழிக்கொரு மடல் – நடராஜன் கல்பட்டு

     
     
     
     
     

    6.மணிமொழியாம் தமிழுக்கொரு மடல் – கீதா மதிவாணன்

     

    7. மணிமொழியே ஒரு மடல் – சத்தியமணி

     

    9. அன்புள்ள மணிமொழி – எஸ். பாலசுப்பிரமணியன்

     
     
    13.

    அன்புள்ள மணிமொழிக்கு –  எஸ். பழனிச்சாமி

    14. 

    அன்புள்ள மணிமொழி!… பாண்டியன். ஜி

    15.

    யாரினுமினிய மணிமொழிக்கோர் ஆசை மடல்! – மேகலா இராமமூர்த்தி

    16.

    அன்புள்ள மணிமொழி – பி. தமிழ்முகில்

    17.

    அன்புள்ள மணிமொழிக்கு – சங்கர் சுப்ரமணியன்

    18.

    அன்புள்ள மணிமொழிக்கு – சங்கர் சுப்ரமணியன்

    19.

    அன்புள்ள மணிமொழிக்கு – நேசமித்ரன்

    20.

    மணிமொழிக் கொரு மடல் – நடராஜன் கல்பட்டு

    21.

    மணிமொழிக்கு ஒரு மடல்! – சுப. திருப்பதி

    22.

    அன்புள்ள (மணிமொழி) அம்மாவுக்கு! – சச்சிதானந்தம்

    23.

    அன்பு மிக்க மணிமொழிக்கு – நந்திதா

    24.

    அன்புக்குரிய மணிமொழி – நிர்மலா ராகவன்

    25.

    அன்புள்ள தோழி மணிமொழி – சித்திரை சிங்கர்

    26.

    பிரியமான மணிமொழிக்கு – சுபாஷிணி திருமலை

    27.

    அன்புள்ள தோழி மணிமொழி – அமீர்

    28.

    பொன் மாறனின் திருமுகம்! – நந்திதா

    29.

    ரசிகை மணிமொழிக்கு ஒரு மடல்.. – மாதவன் இளங்கோ

    30.

    மணிமொழிக்கு அம்மா எழுதும் கடிதம் – விசாலம்

     

    31.

    மணிமொழியாகிற என் அன்பு அம்மாவே! – ரஞ்சனி நாராயணன்

    32.

    அன்புள்ள மணிமொழிக்கு!… மு. கோபி சரபோஜி

    33.

    அன்பு மணிமொழிக்கு!… ஞா. கலையரசி

    34.

    அன்புள்ள மணிமொழிக்கு – ஜெயராமன்

    35.

    அன்புள்ள மணிமொழிக்கு – நந்திதா

    36.

    அன்புள்ள மணிமொழிக்கு – டி. விப்ரநாராயணன்

    37.

    அன்புள்ள மணி மொழிக்கு – டி. விப்ரநாராயணன்

    38.

    அன்புள்ள மணிமொழி!.. – வி. பாலகுமார்

    39.

    ‘அன்புள்ள மணிமொழிக்கு’ … செண்பக ஜெகதீசன்

    40.

    அன்புள்ள பேத்தி மணிமொழிக்கு – டி. விப்ரநாராயணன்

    41.

    அன்புள்ள தோழி மணிமொழிக்கு – ராஜலஷ்மி பரமசிவம்

    42.

    அன்புள்ள தோழி மணிமொழிக்கு – டி. விப்ரநாராயணன்

    43.

    அன்புள்ள மணிமொழிக்கு – தினேஷ்

    44.

    அன்புள்ள மணிமொழி!… – கீதா மதிவாணன்

    45.

    கண்ணின் கருமணியாம் மணிமொழிக்கு! – சேஷா சீனிவாசன்

    46.

    அன்பு நண்பி மணிமொழிக்கு! – ஞா. கலையரசி

    47.

    அன்புள்ள மணிமொழிக்கு – கவா கம்ஸ்

    48.

    அன்புள்ள மணிமொழிக்கு, – பாரதி

    49.

    அன்பே மணிமொழி.. எந்தன் இன்னுயிரே.. – கவிஞர் காவிரி மைந்தன்

    50.

    அன்பே மணிமொழி.. எந்தன் இன்னுயிரே.. – கவிஞர் காவிரி மைந்தன்

    51.

    அன்பே மணிமொழி! – கவிஞர் காவிரி மைந்தன்

    52.

    அன்பே மணிமொழி.. ஆருயிர்க் காதலியே! – கவிஞர் காவிரி மைந்தன்

    53.

    அன்பே மணிமொழி! என் ஆனந்தக் காதலி! – கவிஞர் காவிரி மைந்தன்

    54.

    மதிப்பிற்குரிய மணிமொழிக்கு! – ச. பொன்முத்து

    55.

    அன்புள்ள மணிமொழிக்கு – சரஸ்வதி ராஜேந்திரன்

    56.

    அன்புத் தோழி மணிமொழி – வைரமணி நடராஜன்

    57.

    அன்புள்ள மணிமொழிக்கு – புதுவை பிரபா

    58.அன்பு மகள் மணிமொழிக்கு – பஃக்ருத்தீன்

    59.அன்புள்ள மணிமொழி – பாரதி

    60. அன்பு மகள் மணிமொழிக்கு – தமிழ் செல்வி​

    61. அன்புத் தோழி மணிமொழிக்கு – சுலோச்சனா

    நன்றி.
    அன்புடன்
    பவள சங்கரி
    Share