என் பார்வையில் கண்ணதாசன்
— கீதா மதிவாணன்
என் பார்வையில் கண்ணதாசன்
திரையிசைப்பாடல்கள் வழியாகவே நம்மில் பெரும்பான்மையோருக்கு அறிமுகமானவர் கவிஞர் கண்ணதாசன் என்றாலும் திரைப்பாடலாசிரியர் என்பதைத் தவிரவும் எண்ணற்ற பன்முகங்களைக் கொண்ட அவர் என் பார்வையில் ஆகச்சிறந்த ஒரு இலக்கியவாதியாகத்தான் புலப்படுகிறார். இலக்கியங்களிலிருந்து வரிகளையும் கருத்துக்களையும் தான் எடுத்தாள்வதைக் கவிஞரே நேர்மையாக ஒப்புக்கொண்டபடியால், இலக்கியங்களைக் களவாடி கவிதைகளில் புகுத்துகிறார் என்பவர்களின் குற்றச்சாட்டை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. பந்தியில் பரிமாறப்படும் உணவுக்கான பாராட்டு பரிசாரகரிடம்தான் வழங்கப்படுகிறது. ஆனால் அது தனக்கானதில்லை என்பதை அவரும் அறிவார்; நாமும் அறிவோம்.
தமிழிலக்கியம் என்பது பாமர மக்களில் சிலருக்கு எட்டிக்காய், சிலருக்கோ எட்டாக்கனி. புலவர்களும் தமிழறிஞர்களும் ஆய்வறிஞர்களுமே இலக்கியங்களின் நயத்தையும் இன்பத்தையும் மாந்தி மகிழும் பேறு பெற்றவர்களாய் இருக்கிறார்கள். ஆர்வமிருக்கும் பலருக்கு அதற்கான வாய்ப்பு அமைவதில்லை. வாய்ப்பு அமைந்த பலரும் பிறருக்கு அவற்றை அறியத்தரும் முயற்சியில் இறங்குவதில்லை. அதனால் நம்மில் பலர் வாழ்நாளில் தமிழின் இலக்கிய இன்பங்களை நுகரும் வாய்ப்பு கிட்டாமலேயே வாழ்ந்து மறைந்துபோகிறோம்.
இலக்கியப் பாற்கடலைக் கடைய கதியற்ற பாமரர்களுக்காக கவிஞர், தானே கடைந்தெடுத்துக் கொண்டுவந்த கவி வெண்ணெயை நம் நாவிலும் தடவி ருசிக்கச்செய்கிறார். அத்தன்மையதான அமரத்துவம் வாய்ந்தவையன்றோ இலக்கியஞ்சார்ந்த அவரது அமுதகானங்கள்?
நம்மில் எத்தனை பேர் கம்பராமாயணத்தையும் கலித்தொகையையும் கலிங்கத்துப்பரணியையும் நளவெண்பாவையும் படித்திருக்கிறோம்? அந்தப் பெயர்களையாவது கேள்விப்பட்டிருப்பவர்கள் எத்தனை பேர்? எத்தனை பேர் திருக்குறளின் அத்தனை அதிகாரங்களையும் வாசித்து அர்த்தம் புரிந்து பரவசப்பட்டிருக்கிறோம்? பள்ளியில் படித்திருக்கும் ஒரு சில குறள்கள் தவிர பிறவற்றை நாம் அறிய முனைந்ததே இல்லை. பள்ளியிலும் கூட முப்பாலில் மூன்றாம் பாலான இன்பத்தை ஒதுக்கிவிட்டு அறமும் பொருளும்தான் போதிக்கப்படும். காமத்துப்பாலில் காதலின் அத்தனைப் பரிமாணத்தையும் அழகாக அலசியிருக்கும் வள்ளுவரின் திறனை நாம் அறியாமலேயே போய்விடுகிறோம். திருக்குறள் மட்டுமல்ல, கடலென விரிந்துகிடக்கும் சங்க இலக்கியம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் பலவற்றுள் இருக்கும் இலக்கியச்சுவை இன்னதென அறியாமலிருக்கிறோம்.
நம்மைப் போன்ற இலக்கியம் அறியாதோருக்காக, பல கவிஞர்களும் தங்கள் பாடல்களில் இலக்கியங்களை நயமாகப் புகுத்தி இலக்கிய நயத்தை நாம் அனுபவிக்கத் தந்திருக்கிறார்கள். ஆனால் அனைவரிடத்தும் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பங்கு அலாதியானது. சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள் வரை, பாரதியார் முதல் பட்டினத்தார் வரை யாதொரு தெளிவுரை, பதவுரையின் தேவைகளின்றி எளிதில் எவரும் விளங்கிக்கொள்ளும் வண்ணம் இனிய தமிழ் வார்த்தைகளால் திரைப்பாடல்களின் வழியே இலக்கியத்தைப் பகிர்கிறார் இந்த இன்சுவைக் கவிஞர்.
யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்,
செம் புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
என்ற குறுந்தொகைப் பாடலை அறியாதோர் அநேகருண்டு. ஆனால் கண்ணதாசனின் இப்பாடலை அறியாதோர் யாவர்?
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே
இதே பாடலில் காமத்துப்பாலில் குறிப்பறிதல் அதிகாரத்திலிருந்து ஒரு குறளையும் நமக்குச் சுட்டியுள்ளார்.
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
நம் கவிஞர் என்ன சொல்கிறார்?
உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே
இதோ இன்னொரு குறள் அதே குறிப்பறிதலில் இருந்து…
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
‘கலையே உன் எழில் மேனி கனியாவதேன்’ பாடலில் கவி சமைத்த எளிய வரிகள்…
இரு வேறு பொருள் கூறும் கண்பார்வை ஏன்
ஒன்று நோய் தந்ததேன் ஒன்று மருந்தானதேன்
பருவத்தின் ஒரு பார்வை நோயாகுமே
எழில் உருவத்தின் துணை சேர மருந்தாகுமே
தமிழிலக்கியம் கற்க எனக்கு ஆர்வமிருந்தும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை என்பதை தமிழறிஞரான என் மாமனாரிடம் ஆதங்கத்தோடு வெளியிடுவதுண்டு. அவர்களும் அவ்வப்போது இலக்கியங்களிலிருந்து சில பாடல்களை எடுத்து நான் அறியத் தருவார்கள்.
ஒருநாள் கலித்தொகையில் புலவர் பெருங்கடுங்கோ பாடிய ஒரு பாடலை சிலாகித்து விளக்கினார்கள். தனக்குப் பிடித்தவனுடன் பெண் ஊரைவிட்டுப் போகும் பழக்கத்தை அன்று ‘உடன்போக்கு’ என்பார்களாம். இன்றைய வழக்கத்தில் ‘ஓடிப்போதல்’ என்போம். அப்படி உடன்போக்கு போன பெண்ணை அவளுடைய வளர்ப்புத்தாய் தேடிக்கொண்டு போகிறாள். வழியில் எதிர்ப்படுபவர்களைப் பார்த்து ‘இந்த வழியே என் மகள் ஒரு ஆடவனோடு போனதைப் பார்த்தீர்களா?’ என்று அழுதுகொண்டே கேட்கிறாள். அவ்வழியே வந்த பெரியவர்கள் அவளைத் தடுத்து நிறுத்தி அவளுக்கு அறிவுரை சொல்கிறார்கள்.
பலஉறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என்செய்யும்?
நினையுங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
“மலையிலுள்ள காட்டிலிருந்து பெறப்படும் சந்தனத்தால் அதைப் பூசுவாருக்கு அல்லாமல் மலைக்கு என்ன பயன்? கடலிலிருந்து கிடைக்கும் முத்தால் அதை அணிபவர்க்கு அல்லாமல் கடலுக்கு என்ன பயன்? யாழிலிருந்து கிடைக்கும் இனிய இசை, அதைக் காதால் கேட்பவர்க்கு அல்லாமல் அந்தக் கருவிக்கு என்ன பயனைத் தரும்? அதுபோல் உன் மகளும் உரிய காலத்தில் தலைவனைச் சேர்தலே முறை. அவ்வாறின்றி அவளை உன்னோடு தக்கவைப்பதால் உனக்கென்ன பயன்?” என்று கூறி அவளை சமாதானப்படுத்தித் திருப்பி அனுப்பினர்.
ஆஹா.. என்னவொரு அற்புதமான வாழ்வியல் தத்துவம். என் மாமனார் சொல்லிக்கொண்டிருக்கும்போதே எனக்குள் ஏதோ குறுகுறுத்தது. இதை.. எங்கோ கேட்டிருக்கிறேன்.. எங்கே..? ஆங்…. அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னும் பாடலில் இந்த வரிகளைக் கவியரசர் இப்படிக் குறிப்பிடுகிறார்.
மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
காலம் மாறினால் காதலும் மாறுமோ…
இப்படித் தொடர்கிறது அப்பாடல். கலித்தொகைப் பாடலைப் புரிந்துகொள்ள எனக்கொரு தமிழறிஞரின் உதவி தேவைப்பட்டது. ஆனால் கண்ணதாசனின் பாடலை எவர் உதவியுமின்றி அழகாக ரசித்து மகிழமுடிகிறதே..
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் – செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தளைக் காணென்றான் வேந்து.
புகழேந்திப் புலவர் பாடிய இந்த நளவெண்பா பாடலை நம்மில் எத்தனைப் பேர் அறிவோம்? இந்த உவமையின் ஒரு பாதி கையாளப்பட்டத் திரைப்பாடல் இந்நேரம் நினைவுக்கு வந்திருக்கவேண்டுமே… ஆம், அதேதான்.
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற…
கவியரசரின் இந்தப் பாடல் மூலம் நளவெண்பாவின் அறிமுகம் கிடைத்தது எனக்கு.
புலவர் செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணியில் ஒரு பாடல். போர் முடிந்து நெடுநாள் கழித்து வீடு திரும்பிய கணவர்களிடம் ஊடல் கொண்டு வாயிற்கதவைத் திறக்க மறுக்கும் மனைவியரின் ஊடல் தீர்க்க புலவர் பாடுவது….
வாயின் சிவப்பை விழிவாங்க
மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
தோயக் கலவி அமுதளிப்பீர்
துங்கக் கபாடம் திறமினோ.
இந்த வரிகளின் நயத்தைக் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் வெளிப்படுத்திய திரைப்பாடல் வரிகள்…
வாயின் சிவப்பு விழியிலே
மலர்க்கண் வெளுப்பு இதழிலே
கவிஞரை ஈர்த்த கலிங்கத்துப்பரணியின் மற்றுமொரு பாடல்,
கலவிக் களியின் மயக்கத்தால்
கலைபோய் அகலக் கலைமதியின்
நிலவைத் துகிலென் றெடுத்துடுப்பீர்
நீள்பொற் கபாடம் திறமினோ
கவிஞர் நமக்கு வழங்கும் எளிய வரிகள்….
ஆடையிதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது வழக்கம்
இலக்கியச் சான்றுகளை ஆங்காங்கே தொட்டுக்காட்டி “உள்ளே வாருங்கள், இன்னும் இன்னும் அனுபவிக்கலாம்” என்று ஈர்க்கிறார் தமிழின் சுவையறியத் துடிக்கும் உள்ளங்களை.
நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று
நனந்தலை யுலகமுந் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.
ஊர் உறங்கிவிட்டது, உலகம் உறங்கிவிட்டது. உரியவன் அருகில் இன்மையால் நான் மட்டும் உறங்காமல் விழித்துக்கிடக்கிறேனே என்ற பொருள்படும் குறுந்தொகைப்பாடலின் சாரத்தை எடுத்துக்கொண்டார் கவிஞர். தலைவியின் கூடவே நிலவும் உறங்காமல் விழித்திருப்பதாக கற்பனை கூட்டி எளிய வரிகளால் நமக்களிக்கிறார்.
பூ உறங்குது பொழுதும் உறங்குது
நீ உறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது
நான் உறங்கவில்லை….
கண்ணதாசன் அவர்களின் மகன் காந்தி கண்ணதாசன் ஒருமுறை தந்தையாரிடம் சென்று, “நானும் பாட்டு, எழுதலாம் என்றிருக்கிறேன் அப்பா” என்றாராம். “பாட்டெழுதுவதில் கஷ்டம் இல்லை. ஆனால், சில விஷயங்கள் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும். கம்பராமாயணம் தொடங்கி தமிழிலக்கியம் எல்லாவற்றையும் படிக்கவேண்டும். பிறகு அனுபவங்களுடன் கற்பனையைக் கலந்தால் பாட்டு தானாக வருகிறது” என்று தந்தை பதிலளித்தாராம். பாட்டு எழுதுவது வெகுசுலபம் என்பது போல் சொன்னாலும் தமிழிலக்கியத்தை நன்கு கற்றுணர்ந்திருக்கவேண்டும் என்ற அவரது வார்த்தையில் எவ்வளவு அழுத்தம்! கவியரசரின் பாடல்களில் பலவற்றுள் கம்பராமாயணத்தின் ஈர்ப்பிருப்பதைக் காணமுடியும்.
நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே
பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான்.
இந்த வரிகள் கண்ணதாசனின் எண்ணத்தில்
நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றமில்லை
விதி செய்த குற்றமின்றி வேறு யாரம்மா?
என்று அழகிய பாடலாய் விரியும்.
கண்ணில் தெரியும் பொருளினைக்
கைகள் கவர்ந்திட மாட்டாவோ?-அட
மண்ணில் தெரியுது வானம்,
அதுநம் வசப்பட லாகாதோ?
என்னும் பாரதியின் வரிகள் கவிஞரின் கவிவண்ணத்தில் மிளிர்கிறது இப்படி!
கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ?
என் சொந்தக் கருத்துக்களோடு இணையத்திலிருந்து பெறப்பட்ட பல தகவல்கள் இக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தாலும் இலக்கியத்தின்பால் என்னை வழிநடத்தி அழைத்துச்சென்றவை கண்ணதாசன் பாடல்களில் காணப்பட்ட இலக்கியச்சுவடுகளே. சங்கப்பாடல்களின் பொருளுணர்ந்து அவற்றுள் என்னால் சங்கமிக்க இயல்வதற்கும், நளவெண்பாவையும் கலிங்கத்துப்பரணியையும் கம்பராமாயணத்தையும் வாசித்து வாசித்து இன்புற்றுக் களிப்பதற்கும் பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநல்வாடையை எளிய தமிழில் புதுக்கவிதை பாணியில் எழுதும் துணிவைப் பெற்றமைக்கும் முக்கியக் காரணம் இலக்கியம் சார்ந்த கவியரசரின் இனிய பாடல்களே என்றால் அது கிஞ்சித்தும் மிகையில்லை.
இலக்கியங்களில் உள்ளம்புகுந்து இனியபல செய்யுள்களை மேற்கோள்காட்டி.. அட.. இதோ பாருங்கள் நம்ம கண்ணதாசன் பாடல் என்று சொல்லியிருக்கும் நேர்த்தி வாசகரை உங்கள் ரசிகராக்கிவிடும்!
கண்ணதாசனை.. என் நெஞ்சத்துடிப்போடு வைத்து நடைபோடும் என்னால் உங்கள் தனித்திறனை பாராட்டாமல் இருக்க முடியாது! எளிமையான உங்கள் எழுத்தோட்டம்.. ம்..ம்.. அப்புறம் என்று உடனோடி வரச் சொல்கிறது.. கட்டுரையின் முகப்பிலேயே சொல்லிவிடுகிறீர்கள் இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட விஷயங்கள் என்பதற்கும் சரியான உவமையோடு!
எதார்த்தமாக.. இன்றைய காலக்கட்டத்தில் எவருமே வாசித்திருக்க வாய்ப்பில்லாத.. அல்லது தங்கள் வாழ்வில் அப்பகுதிகளை காணவோ.. கேட்கவோ.. முடியாத சராசரி உள்ளங்களுக்கு கண்ணதாசன் பாட்டுவரிகள் நிச்சயமாக இலக்கியத்தின் சாரத்தை எளிமையாக.. இனிமையாக.. இனிவரும் சந்ததிகளுக்கும் கொடுத்துக் கொண்டே இருக்கும்! உங்களின் கட்டுரை இந்த வகையில் போற்றுதலுக்குரிய சேவையைச் செய்திருக்கிறது! தடம் பார்த்த நடந்திருக்கிற பெண்போல.. இலக்கியங்களின் வழிநின்று அவற்றை எடுத்தியம்ப கண்ணதாசன் போல் இன்றைக்கு யார் இருக்கிறார்கள் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை!
சீரோடும் சிறப்போடும் உங்கள் எழுத்துப்பணி மேம்படட்டும்.. அதற்கு கவியரசர் ஆத்மா ஆசி வழங்கட்டும்!