— ஷைலஜா

என் பார்வையில் கண்ணதாசன்…

 

 

Kannadasan‘மாணிக்கம் கட்டி, வைரம் இடை கட்டி,
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில்..’

என்கிறார் இறைவன் கண்ணனைப்பாடும் பாசுரத்தில் ஆழ்வார் பெருமான்! எந்தக் கலப்படமும் இல்லாத, சுத்தமான 24 காரட் தங்கத்தைதான் ‘ஆணிப்பொன்’ என்று அழைக்கிறோம். ஆணிமுத்தும்  உயர்வானது.

‘ஆணிமுத்து வாங்கிவந்தேன் ஆவணி வீதியிலே’ என்று கண்ணதாசன் எழுதிய பாடலைக் கேட்டிருப்பீர்கள்!

கண்ணதாசனும் தமிழ்மாதமான ஆனியில்  பிறந்த ஆணிமுத்து! இயற்பெயரிலும் முத்தினைக்கொண்டவர்! தமிழ் அன்னையின் கழுத்தில் முத்தாரமாய் திகழ்பவர் !

திரை இசைப்பாடல்களில் தனி  முத்திரை பதித்த ஒப்பற்ற கவிஞர்! மனவாசமும் கண்டவர் வனவாசமும்  கொடுத்தவர்! இந்தியமண்ணின் உமர்கய்யாம்!  இயேசுகாவியமும் அளித்தவர் அர்த்தமுள்ள இந்துமதமும் படைத்தவர்!

கண்ணதாசனே!கங்கைவெள்ளம் நீங்கள்!  தங்களைப்பற்றி ஆயிரம்வரிகளுக்கு மிகாமல் எழுதுவதும் சாத்தியமா என்ன! கங்கைவெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது!

உங்களைப்பற்றி எழுதும் பொழுதிலும் உங்களது பாடல்வரிகளைத்தான்  உதாரணம் காட்டவேண்டி இருக்கிறது பார்த்தீர்களா!  உங்கள்  பாடல்களில் அப்படி ஒரு ஆக்கிரமிப்பு ! அவை யாவும்  மனதில் அசைபோடுகிறது! சீர்மிகு செந்தமிழை  சிகரத்திற்குக்கொண்டு சென்றவரல்லவா இந்த செட்டிநாட்டுக்கவிஞர்!

எளிமை என்பது எவரையும் வசீகரிக்கும்  மாயம்! அவரது பாடல்களில் எளிமை தான் மிகுதி. அதனால்தான்  பாமரனையும் போய் பற்றிக்கொண்டன! என்னையும் மிகக்கவர்ந்து இன்று எழுதவைக்கிறது!

தொட்டில் முதல் சுடுகாடு வரையிலான  வாழ்வியல் தத்துவங்களை, வாழ்வின்வளைவுகளை நெளிவுகளை சுழிவுகளை வார்த்தைகளில் வள்ளலாய் வடித்துக்கொடுத்தவரை வெறும் சிறுகட்டுரைக்குள் சிறைப்படுத்தவும் முடியாதுதான். ஆயினும் கதம்பமாலையின் மலர்க்கூட்டமிடையில், தன்பச்சை இலை மேனிவாசனையை வீசும் மரிக்கொழுந்தாய் கவிஞர்புகழ்பாடும் இந்தக்கட்டுரை, இங்கும் மணக்கும்எனும் நம்பிக்கை!

கலை என்பதே  ஆழ்மனம் சார்ந்ததுதான் அதற்கு படிப்பறிவு அவசியமில்லை படித்தபலருக்கு கலையை  ரசிக்கத்தெரிவதில்லை. எங்கள் கவிஞர் எந்தப்பள்ளிச்சாலையிலும் சென்று பட்டம்  வாங்கியதில்லை ஆனாலும் அறிவு  அவர்  மூளையில்  சாலை போட்டுக்கொண்டது.

நூல்களை அல்ல நூலகங்களையே  படித்துமுடித்தவர்..அவரது வாழ்க்கை அனுபவம்  வாகான  வார்த்தைகளில் கவிதையாய் வடிவெடுத்தன.

ஐந்தாயிரம்  பாடல்களுக்கு மேல் எழுதிய   கரங்கள், அரத்தமுள்ள இந்துமதம் என்ற நூலை எழுதியதும்  நாத்திகக்கறை நீங்கப்பெற்று நானிலமெங்கும் அவரது புகழை இன்னமும் உயர்த்தின!

வீணையின் சுபாவம்  அதனை  மீட்டி முடித்தபின்னும் அதிர்வுகளை சிலக்கணம் பரப்பிக்கொண்டிருக்கும்.

காலவீணையை உந்தன் கவிதைவரிகளில்மீட்டிவிட்டுப் போய்விட்டாய்  காவியக்கவிஞனே! இனியகானத்தின் அதிர்வு இன்னமும்  ஒலித்துக்கொண்டே இருக்கிறது!

தாய் பாடும் தாலாட்டில் தமிழ் மணம் கமழ்ந்து வருகின்றது. தாய்க்குக் குழந்தை எப்படித் தெரிகிறதா? கவிஞர் பாடலில் காண்போம் அதை!

“நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே வளர்
பொதிகை மலைதோன்றி
மதுரை நகர்கண்டு பொலிந்த தமிழ் மன்றமே”

தமிழ் மன்றத்தைப் போன்று தெரிகின்றதாம்! தமிழுடன் குழந்தையை ஒப்பிட்டுப்பாடும் தாயின் மனம் கவிஞரின் வார்த்தைகளில் பெருமையுடன் வெளிப்படுகிறது.

சிறுகூடற்பட்டியிலே பிறந்து,  சிகாகோ நகரில் தம் வாழ்வை முடித்த  மகா கவிஞனுக்கு கம்பன்மீதான காதல் அலாதியானது!

கம்பன்  தன் காவியத்தின் ஒருபாடலில்,
“மழைவண்ணத்து அண்ணலே உன்
கைவண்ணம் அங்கு கண்டேன்
 கால்வண்ணம் இங்கு கண்டேன்”
என்பதாக இராமனைப்புகழ்ந்தபடிஅப்பாடலில் எட்டு வண்ணம் வைத்தான் என்றால் கண்ணதாசனோ “பால் வண்ணம் பருவம் கண்டு” என்று தொடங்கும் பாட்டில் முப்பத்திரண்டு வண்ணம் வைத்துள்ளார்!

“கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்” என்பது கண்ணதாசன் வாக்கு!

தனது பாடலின் நடுவே, அவளது  திருப்பாவையின் ஒருபாசுரமான,

குத்துவிளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்றபஞ்சசயனத்தின் மேலேறி…”என்றவரிகளின் தாக்கமாய்,

“குத்துவிளக்கெரிய கூடமெங்கும் பூ மணக்க
மெத்தைவிரித்திருந்து மெல்லியலாள் காத்திருக்க..”
என்கிறார் தான் இயற்றிய திரைப்பாடலொன்றில்.

திருப்பாவை மற்றும் திருவெம்பாவையை  மனதில்கொண்டு  வடித்த “தைப்பாவை” நூல் இலக்கிய உலகின் அணையாவிளக்கு.

“என்னைக்கவலைகள்   தின்னத்தகாதென்று நின்னைச்சரணடைந்தேன்” என்றான் பாரதி.

 “பின்னிவரும் இன்னலைச் சன்னல்வழிவீசியே பிணமாய்புதைக்கவேண்டும்” என்றார் கண்ணதாசன்.

பாரதியைப்போலவே கவிஞருக்கும்   உண்டு  ஒரு கனவு ..ஆம்,அந்த முண்டாசுக்கவிஞன்,

“பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு பத்தினிப் பெண்வேணும்
எங்கள் கூட்டுக் களியினிலே கவிதைகள் கொண்டு தரவேணும்
அந்தக் காட்டு வெளியினிலே அம்மா நின்றன் காவலுறவேணும்
என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித் திடவேணும்”
(–காணி நிலம்வேண்டும்)
என்றான்.

“அழகான சிறிய வீடு அடுக்காகப் புத்த கங்கள்
பழங்கால ஓவியங்கள் பஞ்சணை குளிர்ந்த காற்று
தொழத்தக்க இளைய கன்னி தொண்டுக்கோர் சிறியபையன்
எழிலான காகி தங்கள் எழுதுகோல் பழுதில் லாமல்!”
என்கிறார் நம் கவிஞர்!
“தொழத்தக்க இளைய கன்னி” என்பதில் வெறும் காமத்தைத் தாண்டிப் பெண்மையின் மீதான பெருமதிப்பையும் காட்டுவதை உணரமுடிகிறது.

“எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு – அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று
நமக்காக நம் கையால் செய்வது நன்று”
(–ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்)

நமக்கான  கடமைகளை   நம்கைகளால் செய்யவேண்டியது  நல்லதென்பதை  எளிமையாய் அருமையாய்  சொல்லியவிதம்  அதன்படி நடக்கத்தூண்டிவிடுகிறது.

“அத்திக்காய்காய் காய் ஆலங்காய்வெண்ணிலவே” என்ற பாடலில் இரண்டு அர்த்தங்கள் வரும்படி எழுதி இருப்பார். அத்திக்காய் என்பது ஒரு காய் என்று ஒரு பொருள். அடுத்து, அத்திக்காய் எனில் அந்த திக்காய் (திசையில்) காய் என்றால் நிலா காய்கிறது என்பதுபோல பொருள். பாடல்முழுவதும் காய்களோடு விளையாடி இருப்பார். ஆமாம்! அத்திக்காயை ஏன் முதல் வார்த்தையாய் கொண்டுவந்தார் தெரியுமா?அத்தி மரம்  சுக்கிரனின் ஆகர்ஷண சக்தி கொண்ட மரம். சுக்கிரன்  காதல்தேவதை!

காதலை நிறைவேற்றுவதில் சுக்கிரனின் பங்கு  மகத்தானது. காதலுக்குரிய கிரகம் இவரே. ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருப்பது மிக மிக அவசியம். மகிழ்ச்சிக்கும், இனிமையான திருப்திகரமான திருமண உறவுக்கும் சுக்கிரனின் அருள் அவசியம்.

அத்தி மரத்திலிருந்து வெளிப்படும்  ஒரு வகையான ஆற்றல்  தம்பதிகளின் பிணக்கைத் தீர்த்துவைக்கும்  என்பது ஜோதிடர்களின்  நம்பிக்கை. திரைப்படத்தில் தம்பதிகள் சிறு ஊடலில் பாடும் பாடல் இது. எத்தனை விஷய ஞானம் இருந்திருந்தால் கவியரசர் இந்தப்பாடலுக்கு அத்தியை முதல் வார்த்தையாக அமைத்திருப்பார்!’ Amazing’என்பார்கள் ஆங்கிலத்தில்! வியப்பில் வாய் அடைத்துத்தான் போகிறது!

“மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழைபோல்” சொல்லாமல் கொள்ளாமல் வந்தது! என்று எதிர்பாராமல்வரும் காதலுணர்வைக்குறிப்பிடுகிறார்! காதலைக்காமமின்றி பலப்பலகவிதைகளில்கொடுத்த கவிஞரின் கைவண்ணம் பற்றி எழுத நீள்வானம் தான்  தாள் ஆக  வரவேண்டும்!

அடுத்து  வாழ்க்கை எங்கும் வாசல்கள் இருப்பதை  இந்தப்பாடலின் வரிகள் உணர்த்துகின்றன.

“பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை திறந்தால் வாழலாம்!!!”
(– வாழ நினைத்தால் வாழலாம்)

வாழ நினைக்கவேண்டுமாம்  நினைத்துவிட்டால் வாழலாம் என்கிறார். “எண்ணியமுடிதல்வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்” என்றான் பாரதி! கவிஞரின் இந்த வரிகள் எளிமைதான் ஆனால் அர்த்தம் கடல் அளவு ஆழமானது. நிறைய சிந்தித்தாலே ஒழிய இந்தவரிகளை நாம் உணர இயலாது.

“மழைகூட ஒருநாளில் தேனாகலாம்,
மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா,
அம்மா என்று அழைக்கின்ற சேய் ஆகுமா? “

இப்படி, தாய்மையை போற்றும் வரிகளிலேதான் எத்தனை நீர்மை !

இன்னும் மனித மன இயல்பை பட்டவர்த்தனமாய் காட்டும் வரிகளாய்…….
“ஆடை இன்றி பிறந்தோமே –
ஆசை இன்றி பிறந்தோமா?
ஆடி முடிக்கையிலே
அள்ளி சென்றோர் யாருமுண்டோ?”
என  நம் கன்னத்தில் அறைவதுபோல கேள்விகள் வருகின்றன.

சாக்ரடீஸின் தத்துவத்தை மூலமந்திரமாக்கிக் கவிஞரின் கவிதைக் கருவில் தோன்றிய உயர் பாடலான,
“உன்னையறிந்தால் – நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்!
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் – தலை
வணங்காமல் நீ வாழலாம்!”

என்று ஆரம்பமாகும்  பாடலை அறியாதார் யார்!

இன்று எந்த தன்னம்பிக்கை நூல்களை எடுத்துக்கொண்டாலும் “தன்னை அறிவது” அதாவது “SELF-REALISATION” தான் அடிப்படை. அதாவது “KNOW YOURSELF” இதை உன்னை அறிந்தால்  என்னும் பாடலில் எளிமையாக சொல்லிவிட்டார்.

புராண, இதிகாச, இலக்கியங்களில் கவிஞர் கண்ணதாசனுக்கு ஆழ்ந்து அறிவு! ஆம்  ஒருசில பாடல்களில், அதிலும் ஓரிரு வரிகளில் மட்டும் அந்தப் பாதிப்பு தெரியும்.

“காலங்களில் அவள் வசந்தம், மாதங்களில் அவள் மார்கழி..”
(– பகவத்கீதை)

“மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா.”

“பருவம் வருதலாற் பற்றல் விழைந்தனள்;
அருகுள து  எட்டியே யாயினும் முல்லைப்
படர்கொடி படரும்”
(– மனோன்மணியம் )

“தோள் கண்டேன் தோளே கண்டேன்” (கம்பர்)

“நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றம் இல்லை” (கம்பர்)”

“அன்றொரு நாள் இதே நிலவில்”  (பாரி மகளிர்)

“வீடு வரை உறவு வீதி வரை மனைவி” (பட்டினத்தார்)

இப்படிப்பல!

“நாளைப் பொழுதை இறைவனுக் களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!!”

சோர்வில் துவளும் மனத்திற்கு இதைவிட ஆறுதலான  வார்த்தைகளை கண்ணதாசனைத்தவிர வேறு யாராலும் தர இயலாது..

இன்னமும்  சொல்லிக்கொண்டேபோகலாம்  ஆனால் கங்கைவெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடுமா என்ன?! சர்க்கரை சமுத்திரமாக தமிழ்நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் அற்புதக்கவிஞனுக்கு  இறுதியாக  அவரது வார்த்தைகளினாலேயே  முடிப்பதே சிறப்பு.

“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை”என்றார்! ஆம், தமிழைப்போல், கவியரசர் கண்ணதாசனும் நிரந்தரமாக அனைத்துத்தமிழ் நெஞ்சங்களிலும்  வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்!

 
 
 
 
 
 
 
 
—  ஷைலஜா,பெங்களூர்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “என் பார்வையில் கண்ணதாசன்…

  1. கண்ணதாசன் என்ற கவிப்பேரரசரின் எழுத்து பேராற்றல் வாய்ந்தது.. .இநத நூற்றாண்டில் வாழ்ந்த மாமனிதர் அவர்.. அவரைப்பற்றி ஷைலஜா அவர்கள்
    மிக அழகாக எழுதி இருக்கிறார்..அவருக்கு என் பாராட்டுதல்கள்..!

  2. உள்ளம் கனிந்து அதில் கவிஞரை முழுவதுமாய் நிறுத்தி.. என்னென்ன சொன்னாலும் தகுகின்ற ஒரு மகாகவிக்கு அவர்தந்த பாடல் வரிகளையே மேற்கோள்காட்டி.. அச்சரம்பிசகாமல்.. அக்மார்க் நெய்போல.. அடுத்தடுத்து நீங்கள் தொடுத்திருக்கும் மாலை.. பாமாலை போல பளிச்சிடுகிறது!   

    சரியான கலவையில் மனம் லயித்து சங்கதிகளை புராணம் முதல் இலக்கியம் வரை தொட்டுக்காட்டி.. அடடா.. பாருங்கள் கண்ணதாசனை என்று பாசுரம் பாடியிருக்கிறீர்! இது உங்களின் தனிச்சிறப்பு!  தொடக்கமே ஆணிப்பொன் கட்டிலன்றோ? முத்தாகப்பாடல்கள் எழுதிய முத்தையாவை.. காலம் இன்று கண்ணதாசன் என்று கொண்டாடி மகிழ்கிறது!  நாத்திகமெனும் தீயின்நதியிலிருந்து மீண்டு இவன்தான் ஆஸ்திகத்துக்கும் ஆஸ்தி சேர்த்துவைத்தான்!

    உங்கள் கட்டுரையில் ஒரு நிறைவு கிட்டியது! எண்ணியதையெல்லாம் எடுத்தியம்பாமல், எதைச் சொல்லவேண்டுமோ.. எவ்வளவு சொல்லவேண்டுமோ.. அதை சரியாகக் கையாண்டிருக்கிறீர்கள்.

    அவரின் பாதிப்பு அல்லது சாயல் இல்லாமல் இனிவரும் எவரும் தமிழைக் கையாளமுடியாது என்கிற நிலை நிதர்சனமான உண்மை!

    சீரோடும் சிறப்போடும் உங்கள் எழுத்துப்பணி மேம்படட்டும்.. அதற்கு கவியரசர் ஆத்மா ஆசி வழங்கட்டும்! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *