என் பார்வையில் கண்ணதாசன்
— ஸ்வேதா மீரா கோபால்.
என் பார்வையில் கண்ணதாசன் …
அறுபடைவீடு கொண்டோன் அருளிய அருந்தமிழில்தான் அவ்வப்பொழுது அரும்பிய அவதாரப்புருஷர்கள் எத்தனை எத்தனை பேர்! ஆத்திச்சூடி ஆசி வழங்கிய ஒளவைப் பிராட்டியும், ஈரடியால் உலகளந்த வள்ளுவனையும் தொடர்ந்து, கண்ணனை குழந்தையாய், சேவகனாய், காதலனாய் மற்றும் அனைத்துமாய்க் கண்டு கவி பாடிய பாட்டுக்கொருப் புலவன் பாரதிக்குப் பின் அந்த கண்ணனுக்கு தாசனாகவேத் தன்னை அர்ப்பணித்துக் கவி புனைந்த கவியரசு நம் தமிழுலகம் கண்டெடுத்த நல் ‘முத்து ஐயா’ நல்முத்து!
யார் இந்த கண்ணதாசன்?
பொன்மனச்செம்மலின் ஆட்சிக்காலத்தில் அரசுக்கவியாய் கண்னதாசன் முடிசூட்டி கௌவுரவிக்கப்பட்டார் என்றால் அவரிடம் ஏதோ ஒரு தனித்துவம் இருக்க வேண்டும் அல்லவா?
• அவர் புகைப்படங்களை சற்றே உற்றுப் பாருங்கள் – குங்குமப்பொட்டு இட்ட முகத்தில் கைவிரல்கள் பதித்த கன்னத்தோடு,எப்பொழுதும் ஆழ்ந்து யோசித்துக்கொண்டே இருக்கும் கண்களும் கொண்ட ஒருசீரிய சிந்தனையாளர் புலப்படுவார் நம் கண்களுக்கு.
• ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி பெற்றதால் தானே இவரால் சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட நூற்கள், புதினங்கள் என பல படைப்புகள் இயற்ற முடிந்தது?
• சாகித்ய விருது (சேரமான் காதலி), சிறந்த பாடல்வரிகளுக்கான தேசிய விருது (குழந்தைக்காக ) உட்பட பல்வேறு விருதுகள் பெற்ற மிகத்திறமையான தமிழ்க்கலைஞர்.
• மாபெரும் தத்துவ முத்துக்களை பாமரருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் வாழ்வியல் நெறிகளை எடுத்துரைத்த யதார்த்தவாதி.
• சமுதாய சீர்கேடுகளைச் சாடும் சீர்திருத்தவாதி.
• திறமைமிகு பல கலைஞர்களை கண்டெடுத்து, தட்டிக்கொடுத்து முன்னுக்கு கொண்டுவந்த நல்மனம் படைத்த படைப்பாளர்.
• காலத்தால் அழிக்க முடியாத பல திரையிசைப் பாடல் வரிகள் வழங்கிய சிந்தனைச் சுரங்கம்.
• கம்பனைக் கற்றபின் ஆத்திகராய் மாறிய நாத்திகர். (கவியரசின் பல பாடல்களில் கம்பனின் தாக்கத்தைக் காணலாம்) – “அர்த்தமுள்ள இந்து மதம் “, இயேசு காவியம் ” போன்ற மாபெரும் காவியங்கள் படைத்த ஆன்மீகவாதி.
– இன்னும் சொல்லப்போனால் இவர் போன்ற ஒரு கவி இனி உதிக்கத்தான் வேண்டும். ஆதலால் தான் மக்களின் கவியரசே அன்று நீவிர் ஆட்சியாளர்களின் அரசு கவி ஆனீரோ?
கடவுளின் செல்லப்பிள்ளையோ?
இறைவன் என்பவர் யார், அவரை வழிபடுவது எப்படி, நாடுவதும் எப்படி என்ற உயர்ந்த தத்துவத்தை மிக எளிமையாக, ஏன் சமயத்தில் நகைச்சுவையும் சேர்த்து கூறுவதை பாருங்கள் –
• “பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு இராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் – அவனை புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன் …”
• “நீயே உனக்கு என்றும் நிகரானவன் ….
துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதய்யா
வெறும் தூபத்தில் உன் இதயம் மயங்காதய்யா
விதி கூட உன்வடிவை நெருங்காதய்யா ……….”
• (மனிதனே) – “காக்கைக் குருவிப்போல் கவலையற்று நீயிருந்தால் , யாக்கை கொடுத்தவனை யார் நினைப்பார் இவ்வுலகிலே “
என்று கடவுள் நமக்கு துன்பம் கொடுப்பதே அவரை நினைக்கத்தான் என்றும் கடவுள் பக்கம் பேசும் இவரே, வேறு சமயத்தில், துன்பம் நேர்கையில் கடவுளை ஒரு மகன் போல் உரிமையுடன் கேள்வி கேட்பதை பாருங்கள் ….
• “….கடவுளே உன்னையும் யாம் தேம்பி அழ வையோமோ …”
என்ற வரி நம் முன்னாள் பிரதமர் நேருவின் இரங்கல் மடலில் வரைகிறார்; ஆம், நம்மை அழச்செய்யும் கடவுளை நம்மால் அழ வைக்க முடியுமோ? என் வாழ்வில் துன்பங்கள் வந்து சேரும் பொழுது மனதில் தோன்றும் முதல் வரி இதுவாகத்தான் இருக்கும்….
மற்றும் ஒரு பாடலில் ,
• “…..மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து என்னை சேர்க்க மறந்தாய் கண்ணா
நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா… “
(கண்ணா கருமை நிற கண்ணா….. )
என்று நம்மை துன்பத்தில் ஆழ்த்திவிடும் கடவுள் நல்ல இடம் பார்த்து சுகமாய் இருப்பதும், நம் துன்பத்தை இறைவன் ஒரு முறையாவது அனுபவித்தால் தான் அதன் வலி புரியும் என்று துயரில் உழலும் மனங்களுக்கு கம்பீரமான குரல் கொடுக்கும் அழகே தனி தான்!
கற்பனையில் முளைத்த காதலோ ?
இவ்வுலகில் காதலர்கள் அனைவரும் அவசியம் கற்க வேண்டியது கவியரசின் பாடல்களே. அவை அனைத்துமே தமிழ் அறியாதவர்கள் கூட மொழிப்பெயர்த்து அறிய வேண்டிய பொக்கிஷம் அன்றோ. கவியரசரிடம் ஒருமுறை ,” ஏன் கவிஞரே,
• “ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன…”
என்ற பாடலில் ஒருவன் ஒருத்தியை நினைத்துவிட்டால் என்றாலும் பாடல் மெட்டுக்கு பொருந்துமே” என்றதற்கு, கவிஞர் சளைக்காமல் சட்டென்று – ‘ஒருத்திதான் ஒருவனையே நினைப்பாள் ….ஒருவன் என்ன ஒருத்தியை மட்டுமா நினைப்பான் ?’ என்று வினவினாராம்.
ஆஹா, கண்ணதாசனே காதல் வலையில் விழுந்து ஏமாறும் பெண்களின் நிலையை இதைவிட தெளிவாக எவர் உரைப்பர் ?…..
காதலனும் காதலியும் எவ்வாறு பரஸ்பரம் புரிந்துக்கொண்டு,ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ,ஓர் உயிர்,ஓர் மனமாய் ,கருத்து ஒருமித்து வாழ வேண்டும் என்பதை
• “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்; நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் .
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்; நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் ….”
என்ற பாடலில் கூறுகிறார்.
• “பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
உன்னைத் தேன் என நான் நினைத்தேன் ….”
என்ற வீர அபிமன்யு பட பாடலில் அடுத்த நாள் போரில் அபிமன்யு மாண்டுபோகவிருப்பதை, இறுதியில் …
“இனித் தேன் இல்லாதப்படி கதை முடித்தேன் …”
என்று சூட்சமமாக சொல்லும் அழகைக் காணுங்கள். இப்பாடலுடன் ,
• “அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே ………..”
என்ற பாடலையும் சேர்த்து நோக்கும் பொழுது கவிஞர் புகுந்து விளையாடியிருக்கும் வார்த்தை விளையாட்டு கண்டு நம் தமிழ் போல் வேறு மொழியில் எவரேனும் இப்படி எழுத முடியுமா என்ற கேள்வி எழுகிறது .
கற்பனைக்கு அப்பாற்பட்டவரோ?
கவியரசரால் எழுதப்படாத சொந்தங்கள் இல்லை, அவர் சாடாத சமுதாய சீர்கேடுகள் இல்லை, அவர் தொடாத வாழ்வியல் நெறிகள் இல்லை, தன் வார்த்தைகளின் கதிர்வீச்சால் மிக கடினமான தத்துவங்களையும் எளிமையாகப் புரியச் செய்யும் தத்துவச் சுடர் அன்றோ இவர்?
“உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
கதைக்கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு
காப்பாற்ற சிலபேர் இருந்துவிட்டால்
கள்வர்கள் வாழ்விலும் ஞாயமுண்டு “
என்று கூறும் கண்ணதாசன் என்னவோ வெறும் கற்பனையும், நல்ல தமிழும், நிறைந்த தமிழ் இலக்கிய அறிவும் மட்டும் கொண்டு கவிகள் புனைந்ததாக ஒரு சாரார் சொல்வதுண்டு; இது அவ்வாறு உரைப்பவர்களது அறியாமையையேக் குறிப்பதன்றோ? திரைப்படப் பாடல்களுக்கு மேல் இவர் படைத்த நூல்களும் கவிதைகளும் என அணைத்து படைப்புகளுமே அறிவுப்பெட்டகம் என்பது தானே நிதர்சனமான உண்மை? ஒரு முறை, மனிதனுக்கு நம்பிக்கை அவசியம் ஆனால் அகந்தை இருக்கக் கூடாது; தன்னம்பிக்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இந்த அரசுக்கவி கூறும் அழகைப் பாருங்களேன் – டென்மார்க், போலாந்து போன்ற சிறிய நாடுகளைக் கைப்பற்றிய ஹிட்லர் பேரரசு ரஷ்யாவையும் துச்சமாய் எண்ணி கைப்பற்ற துணிந்து, முயன்று தோற்றது.. – என்று நம்மால் முடியும் என்ற நம்பிக்கைவேண்டும் ஆனால் அதே சமயம் நம்மால் மட்டும்தான் முடியும் என்ற அகந்தையும், ஆழம் தெரியாது கால் நனைக்கும் அளவுக்கு மீறிய நம்பிக்கையும் இருத்தல் கூடாது என்பதை விளக்குகிறார். மற்றொருமுறை, இந்தியாவுடன் போர் தொடுக்க வந்த பாகிஸ்தானையும், சீனாவையும் சீறிப் பாய்ந்து விரட்டும் பாங்கைக் காணுங்களேன்;
• “தாகூர் வடித்து வைத்த தாய் வணக்கப் பா பாடி
லாஹூரை நோக்கி நமது படை முன்னேறும் ……”
சிந்து,சியால்கோடு என்று அணைத்து இடங்களிலிருந்தும் திரண்ட நம் பெருஞ்சேனை,
• “…வந்து விளையாடும் வஞ்சகரை நாள்முழுதும்
பந்து விளையாடுவது போல் பாய்ந்து விளையாடுதம்மா…”
என்றும்,
• “திங்களும் வானும் திரிகிற வரையில்
எங்களுக்கே உரிமை இந்நாட்டிலே
யாரது வீட்டில் யாரது பாட்டு
வேரதிகாரம் பாரத நாட்டில்
வேர் பிடிக்க விடமாட்டோம் ….”
என்று மிகவும் ஆணித்தரமாக நம் நாட்டின் உரிமை நமக்கு மட்டுமே என்றும் அதைப் பறிக்க வருபவர் மண்ணோடு நடப்படுவர் என்றும் ஊர்ஜிதப்படுத்துகிறார். இடைப்பட்ட அமைதிக்காலத்தில் பகைவனைக்கூட வாழ்த்தும் இந்த நாட்டுப்பற்று நிறைந்தஉயர்குடிமகன்,
• “எங்கள் பகைவர் எம்மை அணுகாமல்
தங்கள் பூமியில் தழைத்துயிர் வாழ்க …”
என்றும் தோழமையோடு வாழ்த்துகிறார்.
இன்றுபோல் இணையம் போன்ற வசதி இல்லாக் காலத்திலேயே வரலாறு, வாழ்வியல் ,அரசியல், அறிவியல், ஆன்மீகம் என அணைத்துத் துறைகளிலும் தனது பிரத்தியேக முத்திரை பதித்த கண்ணதாசனே, நீ மட்டும் இன்று எங்களுடன் இருந்திருந்தால் எத்தனை இணையதளங்களை இணைத்து இன்னும் எத்தனை சிந்தனைக்கதவுகள் திறந்து எத்தனை அறிவிற்கான விருந்துகள் படைதிருப்பாயோ?….ம்ம் ….
என்னதவம் செய்தேனோ ?
தமிழ் என் தாய்மொழியாய் தமிழ்நாட்டிலே பிறந்ததற்கு நான் என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை. என் தாயும் எனது சிறுவயது முதலே கண்ணதாசன் போன்ற சிறந்த தமிழ்க் கலைஞர்களின் கவிதை வரிகளை பாடிக்கொண்டே வீட்டில் அனைத்துக் காரியமும் செய்து விடுவார். இதைக்கேட்டு வளர்ந்த எனக்கும் அவ்வரிகளும் அதன் அர்த்தமும் ஆழ்நெஞ்சில் பசுமரத்தாணிப்போல் என்றும் பசுமையாக பதிந்து விட்டது. இப்படித்தான் நான் போட்டிகளில் தோற்று வருந்தினால்
இம்முறை “போனால் போகட்டும் போடா….”அடுத்தமுறை வெற்றி பெறலாம் என்றும்
• “உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்;
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம் …”
என்ற கவிஞரது புத்துயிர் ஊட்டும் பாடலைப் பாடி என்னைத் தேற்றுவார்.
சில சமயங்களில்,மிக்ஸியில் அரைக்க நேரும் பொழுது மின்சாரம் துண்டிக்கப்பட்டால்,
• “யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க …”
என்று வேடிக்கையாகக் கூறிக்கொண்டே ஆட்டுக்கல்லில் தயங்காது அரைத்து நிமிடத்தில் காரியத்தை முடித்து விடுவார்.
இவ்வாறு சூழலுக்கேற்ப ஏதேனும் சில வரிகளை பாடிக்கொண்டே வேலை செய்வதும் இன்றும் என் காதில் ஒலிக்கிறது.
என் தாய்க்குப் பிடித்த மற்றொரு பாடலின் வரிகள் –
• “..பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது –
கருடா சௌக்கியமா …”
(அதற்கு கருடன் சொன்னது – )
“யாரும் இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால்
எல்லாம் சௌக்கியமே ..”
இன்றும் வன்முறையை எதிர்க்க மறுக்கும் நாடுகள் சிலவற்றில் தீவிரவாதிகள் பலரும் மிக சௌக்கியமாக இருப்பதுடன் இவ்வரிகளை நாம் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.
இது போன்ற இன்னும் எண்ணற்ற தத்ரூபமான வரிகளில் சிறு வயதிலிருந்தே ஊறியதால்,அவை என் உயிருடன் ஒன்றெனக் கலந்து என் வாழ்வில் ஒரு ஆக்கப்பூர்வமான தாக்கத்தையும் ஏற்படுத்திவிட்டது.
வாழையடி வாழையாய் …
என் குழந்தையை தூங்கவைக்க நான் நாடுவதும் கவியரசிரின் ஈடு இனையற்ற தாலாட்டுப் பாடலே –
• “ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு
மண்டலத்தைக் காட்டியப் பின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் தாலேலோ …………..”
என்ற கவிஞரின் குளிர்ந்த வரிகளில், M.S.விஸ்வநாதன் அவர்களின் அமிர்த இசையில் அமைந்த தென்றலாய் தாலாட்டும் கிருஷ்ணகானப் பாடலே நான் பாடும் தாலாட்டுப் பாடலும் ஆகும். என் தாய் எனக்கு ஊட்டி வளர்த்த நற்றமிழ் வரிகளை எனது குழந்தைகளுக்கும் சமையம் வரும்பொழுது எடுத்துரைத்து அவர்கள் வாழ்வு தன்னம்பிக்கை நிறைந்த வாழ்வாய் அமைய முயற்சிப்பேன். இப்படியாக தலைமுறைகள் தாண்டியும் கவிஞரின் புகழ் நிலைத்து நிற்கச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமையன்றோ?
ஆம் ! ஏன் கவிஞரே,அன்றே நீவிர் முழங்கி விட்டீரே,
• ” நான் நிரந்தரமானவன்,அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை “
என்று; அக்கூற்று நினைவாக உமது பூதஉடல் அழிவினும் உமது வைர வரிகள் தமிழ் உள்ளமட்டும்,ஏன் இந்த வானும் மண்ணும் உள்ளமட்டும் உயிருடன் வாழ்ந்து கொண்டே இருக்க நிச்சயம் எங்களால் இயன்றதை நாங்கள் செய்வோம்….
கவிஞர் வாழ்க;அவர் கவிதைகள் வாழ்க
கண்ணதாசன் வாழ்க;கண்ணிமைக்காது
கற்கத் தூண்டும் அவர் படைப்புகள் வாழ்க
கண்ணே, கலைமானே நின்புகழ்
காலத்தும் நிலைத்து நிற்கட்டும் !!!!!!