Advertisements
Featuredஇலக்கியம்கட்டுரைகள்போட்டிகளின் வெற்றியாளர்கள்

அன்பு மணிமொழிக்கு …

அன்பு மணிமொழிக்கு,

உன் அக்கா தேமொழியின் அன்புக் கடிதம். ‘அன்பு மணி’ என்றுதான் எழுத நினைத்தேன்…ஆனால் நான் உன்னை ‘மணி’ என்றழைத்தால், “மணி என்று நாய்க்குட்டிக்குத்தான் பெயர் வைப்பார்கள், நான் என்ன நாய்க்குட்டியா? மணிமொழி என்று கூப்பிடு” என்று நீ அதட்டுவதும் நினைவு வந்தது.

letter to manimozhiநமக்குள் ஒரு வயதே வித்தியாசம் (சரியாக எனக்குப் பிறகு 500 நாட்கள் கழித்துப் பிறந்தவள் நீ) என்ற காரணத்தால் நம்மிருவருக்கும் சகோதரிகள் என்பதைவிடத் தோழிகள் என்ற அளவிற்கும் உறவு இருந்தது.

எத்தனை எத்தனை இனிய நினைவுகள் நாம் வளர்ந்த காலத்தில்… என்னை நீ “ஏய்…தேமொழி” என்று அழைப்பதைக் கேட்டு நம் பாட்டிக்கு வருமே கோபம் அதையும் நான் மறப்பதற்கில்லை. அந்தக் கோபத்தில் தனது பொக்கை வாயில் இல்லாத பற்களை அவர்கள் கடிக்கும் பொழுது, அதைப் பார்த்து உனக்கு வருமே சிரிப்பு, அதையும் நான் மறப்பதற்கில்லை. அவர்களுக்கு கோபம் வரவழைக்கவே நீ மீண்டும் மீண்டும் “ஏய்.. தேமொழி” “ஏய்.. தேமொழி” என்றழைத்து அவர்களுக்கு எரிச்சலூட்டுவாய்.

அவர்கள் எதிர்ப்பை நீ பொருட்படுத்தியதே இல்லை. அவர்கள் மட்டுமா நீ அவ்வாறு அழைப்பதை மாற்ற முயன்றார்கள். அப்பாவும்தான் முயன்று பார்த்தார்கள். அதற்காக அப்பாவும் முன்னுதாரணமாக இருக்க விரும்பி என்னை “அக்கா” என்று கொஞ்ச காலம் கூப்பிட்டுப் பார்த்தார்கள். ஆனால் நீயோ அல்லது தம்பியோ அவ்வாறு என்னை “அக்கா” என்று அழைக்காமல் பெயர் சொல்லித்தான் அழைத்தீர்கள். கடைசியில் “அக்கா” என்றழைத்தது அப்பா மட்டுமே என்ற ஒரு நிலை வந்ததும் அப்பாவும் அவர்களது முயற்சியை கைவிட்டு விட்டார்கள்.

முதல்வர் ஜெயலலிதாவை எல்லோரும் ‘அம்மா’ என்றழைப்பது போல, உனது தோழிகள், நம் தம்பியின் நண்பர்கள், கல்லூரியிலும் பள்ளியிலும் பயின்ற காலத்தில் என்னைவிட இளைய மாணவர்கள் பலரும் அந்த நாட்களில் என்னை “அக்கா” என்றுதான் அழைத்தார்கள். பிறகு இப்பொழுது கூகிள் குழுமங்களிலும் என்னைப் பலர் அப்படி ‘அக்கா’ என்றுதான் அழைக்கிறார்கள்.

இப்பொழுதெல்லாம் நாம் வளர்ந்தபொழுது நிகழ்ந்த பல இளம் பருவ நினைவுகளை அசைபோடுவது எனக்கு வாடிக்கையாகிவிட்டது. அம்மாவுக்கு இருந்த ஆசையில் நமக்கு ஒரே துணியில் சீருடை போன்று அணிவித்த கவுன்கள், பாவாடை சட்டைகளில் உலாவந்தது நினைவிற்கு வருகிறது. என்னதான் ஒரே போன்ற ஆடை உடுத்தினாலும் பம்ப்ளிமாசாக இருந்த…இருக்கும் நானும், காற்றில் பறந்துவிடும் அளவிற்கு எலும்பு மேல் தோல் போர்த்திய அளவிற்கு மெல்லிய உருவமான நீயும் ஒரே போன்று என்றுமே இருந்தில்லை. விவேகானந்தர் பாறைக்கு நாம் சென்ற பொழுது பலமாக வீசிய காற்றில் நீ தள்ளாடுவதைப் பார்த்த அப்பாவின் நண்பர், “மணி, அக்கா கையப் பிடிச்சிக்கோம்மா, காத்தில பறந்திடப் போற” என நம்மிருவரையும் ஒரே சமயத்தில் கலாய்த்ததும் நினைவு வருகிறது.

உருவத்தில் மட்டுமல்ல குணத்திலும் நாம் இருவரும் என்றுமே இரு துருவமாகத்தான் இருந்திருக்கிறோம். அம்மா என்னுடைய மனம் கல் என்று என்னைத் திட்டுவார்கள், கண்ணில் சுலபமாக கண்ணீர் வரவே வராது, அப்படியே உனக்கு உன் அப்பாவின் குணம் என்று சொல்வார்கள். ஆனால் நீ அம்மா இறந்து பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் அவர்களைப் பற்றிப் பேச்சு வந்தால் பொசுகென்று அழுதுவிடுவாய், பொல பொலவென்று கண்ணீர் வரும், அம்மாவைப் போலவே மென்மையான, இளகிய மனம் உனக்கு.

எத்தனை எத்தனை சுவையான இனிய இளம் பருவ நினைவுகள் நமக்கு. இருவரும் செவன்த் கிராஸ் முக்கில் இருக்கும் பாய் கடைக்கு ஓடிப் போய் பட்டம் வாங்குவோம். எனக்கு எப்பொழுதும் வயலெட் வண்ண பட்டம்தான் வாங்குவேன். உனக்கு “என்ன பாப்பா உனக்கு ருக்குமிணி கலர் பட்டமா?” என கடைக்கார பாயே கேட்டு சிரித்துக் கொண்டே வெளிர் நீலவண்ணப் பட்டத்தை உனக்குக் கொடுப்பார். அவருக்கும் உன் விருப்பம் நன்கு தெரியும். “ருக்குமணியே பர பர” என்றப் பாட்டு பிரபலமான காலம் அது. “அடுத்தாத்து அம்புஜத்த பார்த்தேளா” என்று நாமிருவரும் சேர்ந்து நடனம் ஆடுவோம். டர்க்கி டவலை முந்தானை போல தோளில் போட்டுக் கொண்டு டீச்சர் விளையாட்டும் விளையாடுவோம்.

உனக்கு எப்பொழுதும் நீதான் கடைசி வார்த்தை சொல்ல வேண்டும். எந்த விவாதம் என்றாலும் நீ சொல்வதுதான் கடைசி வார்த்தையாகவும் இருக்கும், last word freak என்று ஆங்கிலத்தில் அழைப்பார்களே, அது போல என்று நினைத்துக் கொள்வேன். அது போலவே நீதான் முதலில் வரவேண்டும் என்று செயல்படுவதைப் பலமுறை பார்ததுண்டு. ஒருமுறை, சிறுமியாக நீ பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது எதிர் திசையில் வேலையிலிருந்து அப்பாவும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். உடனே நீதான் முதலில் வீட்டிற்குப் போக வேண்டும் என்று வீட்டை நோக்கி ஓட, அப்பாவும் பதிலுக்கு விளையாட்டாக வீட்டை நோக்கி ஓட ஆரம்பிக்க, தெருவில் போனவர்கள் அந்தப் போட்டியைப் பார்த்து சிரிக்க, அது நல்ல வேடிக்கையாக அன்று இருந்தது.

அது மட்டுமா, பள்ளி செல்லும் பொழுது வக்கீல் வீட்டுப் பெண் சித்திராவை வழியில் பார்த்தால் நீ ஓட்டமும் நடையுமாக முந்தப் பார்ப்பாய், அந்தப் பெண்ணும் சளைக்காமல் வேகமெடுக்க, பிறகு பள்ளிக்குச செல்வது உங்களிருவருக்கும் ஓட்டமும் நடையுமாகத்தான் இருக்கும். ப்ளஸ் டூ படிக்கும் பொழுது, உன் தோழி வாசுகிக்கு ஃபோன் போடுவாய். அந்தப் பக்கம் வாசுகி இந்த இந்தப் பாடம் படித்தேன் என்றால், உடனே போட்டி தொடங்கிவிடும். நீயும் முந்துவதற்ககாக விழுந்து விழுந்து படிப்பாய். அந்த ஆரோக்கியமான போட்டியினால் நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரிக்கும் சென்றாய்.

ஒருமுறை அம்மா என்னிடம், இரண்டாவதும் பெண்ணாகப் பிறந்ததே என்று நீ பிறந்த பொழுது கொஞ்சம் வருத்தமாக இருந்ததென்றும், ஆனால் நீ அப்பாவுக்கு அசிஸ்டெண்ட் போல ஸ்டெத்தஸ்கோப் அணிந்து அப்பாவுடன் ஹாஸ்பிட்டல் வார்டில் சுற்றி வருவதைப் பார்த்துப் பிற்காலத்தில் பெருமையாகவும் இருந்தது என்றும் சொல்லியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு நம்மூவரிலும் அம்மா உயிருடன் இருக்கும்பொழுது அவர்களைப் பெருமைப்பட, மனம் மகிழ வைத்தது நீதான். இவ்வாறு மருத்துவம் படிக்க உனக்கு உதவியது படிப்பில் முந்த வேண்டும் என்ற உனது மனப்பான்மை.

ஆனாலும் மணி, எல்லாவற்றிலும் முந்த வேண்டும் என்ற எண்ணம் உனது குணமாகிப் போனதில், இப்படி எங்கள் அனைவருக்கும் முன்னரே உலகை விட்டு மறையவும் முந்துவாய் என நான் நினைத்தும் பார்த்ததில்லை. மனம் ஒப்புக் கொள்ள இயலாத அதிர்ச்சிதான் இது. அயல் நாட்டில் வாழ்பவர்களின் இயலாமைகளில் ஒன்று வீட்டில் நடக்கும் பல நிகழ்வுகளில் பங்கு பெற இயலாமல் போவது. நான் உனது பட்டமளிப்பையும் பார்த்ததில்லை, திருமணத்திற்கும் வந்ததில்லை, உனது மகன் பிறந்தபொழுதும் செய்திதான் கேட்டேன், சென்ற 2013 அக்டோபரில் நீ இறந்த பொழுதும் வரமுடியாது போனது.

வல்லமையில்’சிறுகதைப் போட்டி’ முடிந்து அதைத் தொடர்ந்து ‘புத்தக மதிப்புரை’ போட்டி பற்றிய அறிவிப்பு வந்த நேரம் அது. உன் நினைவாக வல்லமை இதழில் நானும் ஒரு கவிதைப் போட்டியை அறிமுகப்படுத்தி அதற்குப் பரிசு வழங்கினால் என்ன என்று எனக்குத் தோன்றியது. புத்தக மதிப்புரை போட்டி முடிவுக்கு வந்த பிறகு (அதில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது, ஆனால் அதை உன்னிடம் பகிர்ந்து கொள்ள எனக்கு வாய்ப்பில்லாது போனது ஒரு சோகம்) வல்லமை இதழின் ஆசிரியர் பவள சங்கரியையும், நிறுவனர் அண்ணாகண்ணனையும் அணுகி என் வேண்டுகோளை வைத்தேன்.

போட்டியை எனது எண்ணப்படி கவிதைப் போட்டியாக வைக்கலாமா? அதற்கு இசைக்கவி இரமணன் நடுவராக இருக்க சம்மதிப்பாரா? போட்டியில் மணிமொழி என்ற தலைப்பு இருக்க வேண்டும் என்று நான் வைக்கும் வேண்டுகோள் கவிதை எழுதுபவர்களில் சிந்தனை சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தாதா? ஏற்கனவே கதை, கட்டுரை போன்ற போட்டிகளை அறிவித்தாகிவிட்ட நிலையில் மீண்டும் அது போன்ற போட்டிகளையே தேர்ந்தெடுக்கத் தேவையா? என்றுப் பலப்பல கேள்விகளை வல்லமையின் நிர்வாகக் குழு அலசி ஆராய்ந்து, அதற்கு பல யோசனைகளும் முன் வைக்கப்பட்டன. அதில் அண்ணாகண்ணன் முன் வைத்த ‘கடித இலக்கியப் போட்டி’ குழுவினருக்குப் பிடித்துப் போய்விட அந்த வழியிலேயே தொடர்ந்து போட்டியும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் சொன்னால் நீ நம்ப மாட்டாய் மணி, அறுபதுக்கும் மேற்பட்ட “அன்புள்ள மணிமொழிக்கு” கடிதங்கள் போட்டிக்காக அனுப்பப்பட்டன. r u ok? LOL, how r u? என்று குறுஞ்செய்திகளில் பழகிப்போன நம் மக்கள் ஆர்வத்துடன் கடிதங்கள் எழுதினார்கள். கடித இலக்கியப் போட்டி என்ற ஒன்றை அறிவித்ததற்காக எனக்குப் பல பாராட்டுகளும் கிடைத்தன. ஆனால் அத்தனைப் பாராட்டிற்கும் உரியவர் நிறுவனர் அண்ணாகண்ணன் அவர்கள்தான். அவர் முன்மொழிந்த ‘கடித இலக்கியப் போட்டி’ என்ற யோசனை ஒரு நல்ல யோசனைதான். நானும் வல்லமை நிர்வாகக் குழுவினர் போட்டியை முன்னின்று நடத்தும் பொழுது இடையில் உண்மை விளம்பியாக, இதற்காகப் பாராட்டப்பட வேண்டியவர் அண்ணாகண்ணன் என்று அறிக்கைகள் விட்டுக் குளறுபடி செய்யக் கூடாது என்று பொறுமை காத்தேன்.

போட்டியின் முடிவுகள் வெளியாகிவிட்டன. இனி இந்தத் தகவலை, பாராட்டிற்கு உரியவர் அண்ணாகண்ணன்தான் என்று நான் சொல்லிவிட்டால் எனக்கும் நிம்மதி. சிறந்த கடிதங்களை நடுவர் இசைக்கவி இரமணன் தேர்ந்தேடுத்தார். நான் நினைத்தது போலவே, அவரும் இத்தனை அருமையான கடிதங்களில் எவ்வாறு சிறந்த கடிதங்கள் என்று மூன்றையும், ஆறுதல் பரிசுகளுக்கு என்று மேலும் ஒரு மூன்றையும் மட்டும் தேர்ந்தெடுக்க முடியும், அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததாக இல்லையே என்று கருதி அவரும் மேலும் ஆறு சிறப்புப் பரிசுகளை வழங்கிவிட்டார். இதற்கும் மேல் போட்டிக்கு வந்த கடிதகளின் சிறப்பைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

ஆனால் நீ எதையும் படிக்கப் போவதில்லை மணி, அதனால் அதற்காக நான் வருந்தப் போவதுமில்லை. பள்ளி நாட்களில் உனக்கு தமிழ் இரண்டாம் தாளில் கற்பனைக் கட்டுரையாக ‘இரயில் தனது வரலாறு கூறுதல்” பற்றி எழுதச் சொன்னாலே உனக்கு கற்பனை வராமல் அழுகைதான் வரும் என்பது எனக்குத் தெரியும். இது போன்ற இலக்கியப் போட்டிகளில் என்றும் உனக்கு ஆர்வம் இருந்ததில்லை. கதை படிக்கும் பொழுது, பெரிய பெரிய பத்திகளாக இருந்தால், அவற்றைத் தவிர்த்துவிட்டு, தாவித் தாவி மேலே படிப்பாய். பின்னர் முடிவைப் படித்த பிறகு கதை உனக்குப் புரியாமல் போகும். நானும் தம்பியும்தான் உனக்குக் கதையினைச் சொல்லி விளங்க வைக்க வேண்டி வரும், எனக்கு அது மறக்குமா?

நீண்ட கட்டுரைகள், கடிதங்கள் உனக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் நான் எழுதும் மிக நீண்ட கடிதம் இது. நீதானே சொல்லுவாய், “சும்மா நீள நீளமாகப் பேசிக்கொண்டே இருக்காதே, நீ சொல்ல வேண்டியதை எல்லாம் எழுதி ஒரு புத்தகமாகப் போடு, எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது படிக்கிறேன்,” என்று அதுவே என் நினைவில் இப்பொழுதும் இருக்கிறது. அதனால் நான் நினைப்பதை நீண்ட கடிதமாகவும் எழுதிவிட்டேன், நான் ஒரு சிறுகதைப் புத்தகமும் எழுதி வெளிவந்துவிட்டது, ஆனால் உனக்குத்தான் இப்பொழுது இவற்றையெல்லாம் படிக்க நேரமில்லாது போய்விட்டதே என்ற ஆற்றாமையும் வருகிறது. என்றும் என் நினைவில் நீங்காதிருப்பாய் என் அன்பு மணிமொழி.

உன் அன்பு அக்கா,
தேமொழி

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (18)

 1. Avatar

  அன்புள்ள தேமொழி அவர்களுக்கு,
  உங்களுடைய ‘அன்புள்ள மணிமொழிக்கு’ என்னும் தலைப்பிட்ட கடிதப்போட்டிக்குப் பின்னால் இப்படியொரு இழப்பும் வேதனையும் இருக்குமென்று தெரியாமல் போனது. தங்கள் தமக்கை பற்றி அறிந்து வருத்தம் மேலிடுகிறது.  கடல்கடந்து வாழத் தலைப்பட்டப்பின், உறவுகளின்… அவர்கள் பெற்றவராயிருந்தாலும்… உடன்பிறந்தவர்களாயிருந்தாலும் அவர்களுடைய இன்ப துன்பம் எதிலுமே பங்குகொள்ளமுடியாமல் போய்விடும் கையறு நிலையை… உண்மையை… ஆற்றாமையோடு எடுத்துரைக்கிறது உங்கள் கடிதம். தாங்கள் கூறுவது போல் இன்று இணையம் வாயிலாய் புதிய பல உறவுகள்… தங்களை அக்காவாய் ஏற்றுக்கொண்ட தம்பிகள், தங்கைகள்… ஏராளமாய் உண்டு. மனந்தேற்றிக் கொள்ளுங்கள். இந்தக் கடிதப் போட்டி வாயிலாகவும் உங்களுடைய இக்கடிதம் வாயிலாகவும் தங்கள் தமக்கை மணிமொழி எங்கள் நெஞ்சிலும் நிறைந்துவிட்டார். இனி உங்களோடு நாங்களும் அவர்களை அன்புடன் நினைவுகூர்வோம். வித்தியாசமானதொரு போட்டியை அறிவித்தத் தங்களுக்கும் இப்போட்டியின் வெற்றிக்குப் பெரிதும் பாடுபட்ட திரு.அண்ணாகண்ணன் அவர்களுக்கும் அன்பான நன்றி. 

 2. Avatar

  அன்புள்ள தேமொழி அவர்களுக்கு..

  மணிமொழிக்கு நீங்கள் எழுதிய கடிதம் கண்டேன்..    நிச்சயமாக ஒரு சில வரிகள் இட வேண்டும் என்று தோன்றியது.

  ஒரு முறை உங்கள் மடலைப் படிக்கும்போதே உங்கள் கடந்த கால வாழ்க்கை .. நினைவுப் பதிவுகள் .. இவைகளையெல்லாம் தொகுத்து நீண்ட மடல் என்கிற பெயரில் நடைபெற்ற கடித இலக்கியப் போட்டி பற்றிய தகவல்களையும் தந்து அசத்தியிருக்கிறீர்கள்.

  உடன் பிறந்த உறவிற்கு ஒரு உள்ளம் தரும் உன்னத இடம் – உங்கள் பார்வையில்.. செயலில்.. உயர்வு தெரிகிறது.  அண்மையில் இழந்த அந்த உறவின் நினைவுகள் உங்களில் பதிந்து கிடக்க… இன்னும் அந்த நினைவுத் தோட்டத்தில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக்குலுங்க .. எங்களை எல்லாம் எழுத வைத்தீர்கள்.  எப்படிப் பாராட்ட?

  கண்ணதாசன் அவர்களின் சுய சோகம் கூட நமக்கு சுகமான பாடலாக அமையும் என்பார்கள்…  அதுவே தற்போது நினைவைத் தொடுகிறது.

  காலம் மாறிவிட்டது.  பாசம் அற்றுவிட்டது என்கிற புலம்பல்கள் ஒரு பக்கம் கேட்டுக்கொண்டிருக்கும்போதே..  அடடா..  தன் தங்கையின் நினைவுகளை.. தாங்கி வாழ்கின்ற தமக்கையாய் நீங்கள் தெரிகின்றீர்.

  நன்றிகளுடன்…
  காவிரிமைந்தன் 

 3. Avatar

  ஆறுதல் வார்த்தைகள் கூறிய உங்கள் அன்பு உள்ளத்திற்கு மிக்க நன்றி கீதா. 

 4. Avatar

  இன்னுமொரு போட்டிக்கு அறிவிப்போ என படிக்கத் துவங்கினேன்.

  உடன் பிறப்பு பாசம் – மலரும் நினைவுகளாய் போகிறது என மனம் சொல்லிக்கொண்டு இருக்கும் போது “….நீ இறந்த பொழுதும்…… என படிக்கையில் ஒரு திடுக்.

  தாங்கள் கட்டுரையில் சொன்னது போல் வல்லமையில் உங்களுக்கு நிறைய உடன் பிறப்புக்கள் இருக்கிறோம் . எங்களால் உங்கள் ஆற்றாமையை போக்கமுடியும்.

  கடல் கடந்து வாழ்வோருக்கு உடல் மட்டுமே அங்கு வாழும் .

  தங்கை மணிமொழியின் நினைவை எங்களோடு பகிர்ந்து கொண்டு எங்களுக்கும் அவரின் நினைவை அகலாமல் செய்த தேமொழி அவர்களுக்குப் பாராட்டுகள்.

 5. Avatar

  உங்கள் அன்பு தங்கையின் நினைவாக ஒரு போட்டி நடத்தி, முடிவுகளை அவருக்கே தெரிவிக்க ஒரு கடிதமும் எழுதி, உங்கள் சோகத்தை எங்களுடன் மென்மையான உணர்வுகளுடன் பகிர்ந்துகொண்ட விதம் மனதை நெகிழ வைத்தது, தேமொழி. 
  மீட்க முடியாத ஒரு இழப்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மூலம் மட்டுமே தாங்கிக் கொள்ள முடியும். 
  உங்களைப் போலத்தான் நானும் என் அக்காவும். எப்போதும் போட்டிதான். உங்கள் மலரும் நினைவுகள் எனக்கும் என் அக்காவின் நினைவுகளை கொண்டு வந்தது. 
  இதைபோல ஒரு போட்டி வைத்து எங்கள் எழுத்தார்வத்திற்கு ஒரு வடிகால் செய்து கொடுத்ததற்கு மனமார்ந்த நன்றி, தேமொழி.

 6. Avatar

  கடிதப் போட்டி வைக்கலாம் என்பது என் யோசனை ஆயினும் அதனை ஏற்றுச் செயல்படுத்திய தேமொழி, பவளசங்கரி ஆகிய இருவருக்கும் இந்த வெற்றியில் சமப் பங்கு உண்டு.

  மணிமொழியின் ஆன்மா, சக்தியின் திருவடி நிழலில் இளைப்பாறுமாக.

 7. Avatar

  உங்கள் அன்பு நிறைந்த கடிதத்திற்கு நன்றி கவிஞர் காவிரிமைந்தன்

 8. Avatar

  அன்புள்ள தேமொழி, Don’t know what to say! My mind stood still for a while…   ‘அன்புள்ள மணிமொழிக்கு…’ கடித இலக்கியப் போட்டியின் பின்னணியில் இப்படி ஒரு பேரிழப்பின் பெருவலி இருக்கும் என்று நினைத்துப்  பார்க்க முடியவில்லை.   

  இந்த கடிதத்தை எழுதியதை என்னால் மறக்க முடியாது. அது வெறும் கடிதம் இல்லை. மணிமொழி என்கிற கதாபாத்திரத்துடனான ஒரு பயணம்! 

  உங்கள் கடிதத்தைப் படித்தவுடன் இப்போது என் மனநிலை:  ‘DECEASED. RETURN TO SENDER’ என்கிற முத்திரையுடன் நான் எழுதிய கடிதம் ஒரு மாதம் கழித்து என்னிடமே திரும்பிவிட்டது போன்ற மனநிலை…

  Don’t know what else to say.. 

  My deepest condolences to you and your family!!!

 9. Avatar

  ///தாங்கள் கட்டுரையில் சொன்னது போல் வல்லமையில் உங்களுக்கு நிறைய உடன் பிறப்புக்கள் இருக்கிறோம் . எங்களால் உங்கள் ஆற்றாமையை போக்கமுடியும்.///

  உங்கள் அன்பிற்கு நன்றி தனுசு.

 10. Avatar

  ///உங்கள் மலரும் நினைவுகள் எனக்கும் என் அக்காவின் நினைவுகளை கொண்டு வந்தது. ///

  கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது ரஞ்சனி

 11. Avatar

  போட்டியை வெற்றிகரமாக நடத்திய திறமைமிகு வல்லமை இதழின் நிர்வாகக் குழுவினருக்கு, குறிப்பாக அன்பு அண்ணாகண்ணனுக்கும், தோழி பவளாவிற்கும் எனது நன்றியும் பாராட்டுக்களும்.

 12. Avatar

  “எல்லாவற்றிலும் முந்த வேண்டும் என்ற எண்ணம் உனது குணமாகிப் போனதில், இப்படி எங்கள் அனைவருக்கும் முன்னரே உலகை விட்டு மறையவும் முந்துவாய் என நான் நினைத்தும் பார்த்ததில்லை.”

  உங்கள் அன்புத் தங்கையின் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்று நினைத்து வாசிக்கத் துவங்கிய எனக்கு, உங்களது இந்த வரிகள் சொல்லொணா வேதனையைக் கொடுத்தன.  தங்கையின் மரணத்துக்குக் கூட வரமுடியாத சோகத்தை வார்த்தைகளில் வடிக்க முடியாது தேமொழி!

  உங்கள் அன்புத் தங்கையின் நினைவாக கடிதப்போட்டியை அறிவித்து எங்கள் எல்லாரையும் அவருக்குக் கடிதம் எழுத வைத்து விட்டீர்கள்.  அம்மாவாக, தோழியாக, சகோதரியாக, மகளாக, தமிழன்னையாக, ரசிகையாக எல்லாரது நினைவிலும் அவரை நடமாட வைத்து விட்டீர்கள்.  
  இனிமேல் எங்களது கடிதத்தை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் உங்களது அன்புத் தங்கையே எங்கள் நினைவிற்கு வருவார்!  அந்தளவுக்கு உங்களது இக்கடிதம் மனதை மிகவும் நெகிழ வைத்து விட்டது.

  அவர் நினைவாக ஒரு போட்டி வைக்க வேண்டும் என்ற உங்களது கோரிக்கையைச் செயல்படுத்திய வல்லமையின் நிறுவனர் அண்ணாகண்ணன்,& ஆசிர்யர் பவளசங்கரி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி.     .  

 13. Avatar

  அன்பு தேமொழி  இந்தக்கடிதப் போட்டியின்   பின் இத்தனை சோகம் மறைந்துள்ளது என நினைக்க மனம் வருந்துகிறது.ஆனாலும் அந்த நிகிழ்ச்சியை  அவர்து ஆத்மாவுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியாக ஒரு போட்டி அறிவித்து அவளரது ஞாபகமாக பரிசுகளும் கொடுத்து என் மனதில் உயர்ந்த இடத்தைப் பிடித்து விட்டீர்கள்.
  அவரது ஆன்மா சாந்தியடையட்டும். உங்கள் கடிதம் பரிசுக்கும் அப்பாற்பட்டது.  மனதைத் தொட்டது .  அன்புடன் விசாலம் 

 14. Avatar

  உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி இளங்கோ.

 15. Avatar

  ///உங்களது இக்கடிதம் மனதை மிகவும் நெகிழ வைத்து விட்டது.////

  நன்றி  கலை, இக்கடிதத்தை  எழுதும் முகமாக மீண்டும் மணியின் நினைவுகளை அசை போட முடிந்ததும் ஒரு  ஆறுதல்தான் எனக்கு.

 16. Avatar

  ///உங்கள் கடிதம் பரிசுக்கும் அப்பாற்பட்டது.  மனதைத் தொட்டது///

  உங்களின் மனம் கனிந்த  வார்த்தைகளுக்கு மிக்க  நன்றி  அம்மா. 

 17. Avatar

  இயந்திர உலகில் பாசங்களை வலை வீசித்தேடிப் பிடிக்கும் இந்நாளில் சகோதரிக்காக உள்ளம் கசிந்துருகி அளித்த மடல்,போட்டிமுடிவுகள் வெளியிட்டபின் அதனை வெளியிட்ட நேர்த்தி–நேசங்கள்,பாசங்கள் -மறைவதில்லை.

 18. Avatar

  உங்கள்   கருத்துக்களைப்  பகிர்ந்து  கொண்டமைக்கு மிக்க  நன்றி   டாக்டர்  லக்ஷ்மி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க