–ஞா.கலையரசி

Kannadasanகவிஞர், திரைப்படப்பாடலாசிரியர், அரசியல்வாதி, இலக்கியவாதி, சிந்தனாவாதி என்ற பன்முகத்திறமைகளைப் பெற்றவர் கண்ணதாசன் என்றாலும், என்னைப் பெருமளவு பாதித்தவர் திரைப்படப்பாடலாசிரியர் கண்ணதாசனே.

சிறுவயதில் எனக்கு மிகவும் பிடித்தது, ‘குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று,’ என்ற பாடல்.

உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது – என்
உள்ளம் எனும் சூரியனைக் கோபம் மூடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது
பேசிக் கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது

என்று தகிக்கும் உச்சி வெயில் சூரியனை, கடுங்கோபத்தால் டென்ஷன் அதிகமாகி சிடுசிடுக்கும் உள்ளத்துக்கு ஒப்பிட்டு எழுதிய இவ்வரிகள் அப்போதே என்னை ஈர்த்துச் சிந்திக்க வைத்தன.

ஒருவித லயிப்புடன் இப்பாடலை நான் பாடியதாலோ என்னவோ, பள்ளித் தோழிகள் அடிக்கடி இதனைப் பாடச்சொல்லிக் கேட்பது வழக்கம். ஐந்தாம் வகுப்பின் முடிவில் என் தந்தையின் பணி மாற்றம் காரணமாக வேறு ஊருக்குச் சென்று விட்டோம். ஆறாம் வகுப்பிலிருந்து பள்ளியிறுதியாண்டு வரை வேறு ஒரு பள்ளியில் படித்தேன். பழைய பள்ளித் தோழிகளின் பெயர்கள் ஒன்றிரண்டு நினைவில் இருந்ததே தவிர, அவர்களின் முகங்கள் நினைவில் இல்லை.

கல்லூரியில் சேரத் திரும்பவும் பழைய ஊருக்கு வர வேண்டியதாயிற்று. கல்லூரியில் அடியெடுத்து வைத்த முதல் நாள், ஒருத்தி என்னைப் பார்த்து “ஏய், குழந்தையும் தெய்வமும் பாட்டு பாடுவியே, அந்தக் கலையரசி தானே நீ?” என்றாள்.

அப்போது தான் லேசாக அவள் முகம் நினைவுக்கு வந்தது. அவள் என் ஐந்தாம் வகுப்புத் தோழி அனுசுயா. என் அடையாளத்தை மீட்டெடுத்துப் என் நட்பைப் புதுப்பிக்க உதவிய இப்பாடலை எழுதியவர், கவிஞர் கண்ணதாசன்!

ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகவும் இனிமையானது என்று போற்றப்படும் கல்லூரி வாழ்வின் இறுதி நாளில், பாட வேண்டும் என நாங்கள் தேர்ந்தெடுத்த பாடல், கண்ணதாசனின், ‘பசுமை நிறைந்த நினைவுகளே!’ அன்றிலிருந்து இன்று வரை, அத்தினத்தில் அனைவராலும் பாடப்படும் பாடல் இது தானே?

பசுமை நிறைந்த நினைவுகளே
பாடிப் பறந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்

என்பதில் ‘பறந்து’ என்பதற்குப் பதிலாகப் ‘பிரிந்து’ என்று பாடுவதாக ஏற்பாடு.

அந்த நாளும் வந்தது. கல்லூரி முதல்வர் உட்பட பேராசிரியைகள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். விருந்து முடிந்து இறுதியில் தோழிகள் அனைவருடனும் இப்பாடலைப் பாடத் துவங்கினேன்.

குரங்குகள் போல, மரங்களின் மீதே தாவித் திரிந்தோமே
குயில்களைப் போலே, இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
வரவில்லாமல், செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வாழ்க்கைத் துன்பம், அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே

என்று பாடுவதற்குள்ளாகவே, பெரும்பாலோர் பாடமுடியாமல் தேம்பித் தேம்பி அழத் துவங்க, கஷ்டப்பட்டுத் தொடர்ந்து பாடி முடித்தவர்கள் ஓரிருவர் மட்டுமே.

இப்பாடலைக் கேட்ட எங்கள் முதல்வர், “நீங்களே சொந்தமாக எழுதிப்பாடியதா?” என வினவினார். திரைப்படப்பாடல்களைப் பற்றி மிக மோசமான எண்ணம் கொண்டிருந்த அவர், இப்பாடலைக் கேட்ட பிறகு தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டார் என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்!

ஏற்கெனவே இதே வரிகளைப் பலமுறை பாடிப் பார்த்திருந்தும் கூட அச்சமயத்தில் முழுவதும் பாடமுடியாத அளவுக்கு, தொண்டையை அடைக்க வைத்த அவ்வளவு பொருத்தமான வரிகளைக் கொண்ட பாடல்! கல்லூரியில் காலடி வைக்காத கவிஞர், மாணவப் பருவத்தின் அனைத்து அம்சங்களையும் அழகாகச் சொல்லிப் பிரிவின் வேதனையைத் துல்லியமாக உணர்த்தி எங்களை அழ வைத்த நிகழ்வு, என்றுமே மறக்க முடியாதது. தொலைக்காட்சியில் இன்று இப்பாடலைக் கேட்டால் கூட, அந்த நாள் நினைவுகள், நேற்று நடந்தது போல, நெஞ்சிலே வலம் வருகின்றன! அந்தளவுக்கு என் மலரும் நினைவுகளில், முக்கிய இடம் பெற்ற சாகா வரம் பெற்ற பாடல் இது!

என் கல்லூரி வாழ்வின் முதல் நாள், பழைய தோழியை அடையாளம் காணவும், இறுதி நாளை வாழ்நாள் முழுக்க நினைவில் நிறுத்தவும் உதவியவை கண்ணதாசனின் இந்த அருமையான திரையிசைப்பாடல்களே!

பள்ளி நாட்களில் தினமும் இரவில் தந்தை, தங்கை, தம்பிகளுடன் ஒன்றாக வட்டமாக அமர்ந்து, அன்றைய தின நிகழ்வுகளையும் செய்திகளையும் அனைவருடனும் பகிர்ந்து கொண்டே சாப்பிடுவது வழக்கம். அச்சமயத்தில் என் தந்தை, அரசியல், இலக்கியம், சினிமா, நாட்டு நடப்பு பற்றிய பலசெய்திகளை எங்களுக்குச் சொல்வார்.

ஒருநாள் தமிழலக்கியத்தை ஆழமாகக் கற்ற கவிஞர் கண்ணதாசன் திரைப்படப்பாடல்களில் இலக்கிய நயத்தை எடுத்தாண்டிருப்பது பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

“அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் இருந்தார்,” என்ற பாரி மகளிரின் பாட்டின் கருத்தை மையமாக வைத்து, அன்றொரு நாள் இதே நிலவில் அவர் இருந்தார் என் அருகே” என்ற பாடலைக் கவிஞர் இயற்றியிருப்பது பற்றிச் சொன்னார்.

தொடர்ந்து ‘அத்திக்காய்,’….என்ற பாடல் பற்றிப் பேச்சு வந்தது. அதுவரை அத்திக்காய் என்றால் அத்திமரத்தின் காய் என்று தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு வரியாக தந்தை விளக்கம் சொன்னபோது, எங்களுக்கு வியப்புத் தாங்கவில்லை.

ஆர்வக்கோளாறு அதிகமாகி “உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?” என்றால் என்ன அர்த்தம் அப்பா?” என்று அவர் சொல்லாமல் விட்ட வரிக்குத் தம்பிகளுக்கு முன்னால் அசட்டுத்தனமாய் நான் கேட்டதும், அது காதில் விழாதது போல் அவர் எழுந்து கையலம்பச் சென்றதும், இதைப்போய்க் கேட்கிறாயே என்று என் தங்கை, யாருக்கும் தெரியாமல் என் காலைக் கிள்ளியதும் என் நினைவுக்கு வந்து, இப்போதும் என்னை நாணச் செய்கின்றது.

பள்ளிப்பருவத்தில், நோட்டுகளின் கடைசிப் பக்கங்களில் திரைப்படப் பாடல்களை எழுதிவைக்கும் பழக்கம் எங்களிடமிருந்தது. தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட தப்பில்லாமல் சொல்லுமளவிற்கு அவை மனப்பாடமாயிருந்தன. மனப்பாடச்செய்யுள் பகுதியில் கண்ணதாசன் பாடல்களிலிருந்திருந்தால், வகுப்பில் எல்லோருமே முழுமதிப்பெண் பெற்றிருந்திருப்போம்! அக்காலத்தில் இரவு பத்து மணியிலிருந்து பதினொரு மணிவரை வானொலியில், ‘நெஞ்சில் நிறைந்தவை,’ என்ற தலைப்பில் திரைப்படப்பாடல்கள் ஒலிபரப்பாகும். அவற்றில் பெரும்பாலானவை கவிஞர் கண்ணதாசனுடையவை தாம். விளக்கை அணைத்து விட்டுப் படுத்துக்கொண்டே அவற்றைக் கேட்பது மனதுக்கு இதமான தாலாட்டாக இருக்கும்.

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

உள்ளத்தின் கதவுகள் கண்களடா – இங்கே
உறவுக்குக் காரணம் பெண்களடா

போன்ற பாடல்களைக் கேட்டுவிட்டு நிகழ்ச்சி முடிவதற்கு முன்பே தூங்கிவிடுவது வழக்கம். வானொலியை நிறுத்தாமல் தூங்கிவிட்டமைக்கு அடுத்த நாள் காலையில், அம்மாவிடம் திட்டு வாங்குவது சகஜமாய் நடக்கும் நிகழ்வு.

கவலைகளால் மனம் சோர்ந்து போயிருக்கும் சமயங்களில், கவிஞரின்
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக,
மலர்கள் மலர்ந்தது எனக்காக, அன்னை மடியை விரித்தாள் எனக்காக

அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்,
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்?
ஆழக்கடலும் சோலையாகும் ஆசை இருந்தால் நீந்திவா

போன்ற பாடல்களைக் கேட்கும் போது சோர்வு நீங்கி, மனதில் உற்சாகம் கரை புரண்டு ஓடும்.

நெருங்கிய உறவுகளை இழந்து விரக்தியின் எல்லையில் நின்ற போது
போனால் போகட்டும் போடா, இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?” என்ற பாடலை நமக்காகவே கவிஞர் எழுதியிருக்கிறாரோ என்று தோன்றும்.

என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே

நிம்மதியிழந்து தூக்கத்தைத் தொலைத்த காலத்தில், இவ்வரிகள் சொல்லும் நிதர்சனம் உறைத்தது!

முதன்முதலில் தாய்மைப்பேறை எதிர்நோக்கியிருந்த காலத்தில்,
பூப்போல பூப்போல பிறக்கும்
பால் போல பால் போல சிரிக்கும்
மான் போல மான் போல துள்ளும்
தேன் போல இதயத்தை அள்ளும்

என்ற வரிகள் மனதை மயிலிறகால் வருடி பேருவகை அளித்தன!

“உள்ளாடும் உயிரொன்று கண்டேன், அதன்
உருவத்தை நான் என்று காண்பேன்?,”
என்று முதல் குழந்தையை எதிர்நோக்கியிருக்கும் தாயொருத்தியின் கனவையும் ஏக்கத்தையும் அத்துணை நுணுக்கமாக தாம் அனுபவித்தது போல் சொல்லில் வடித்த கவிஞரை, என்ன சொல்லிப் புகழ?

அமைதியான நதியினிலே ஓடும்- ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் நதியினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும்
பெரும் பணிவு என்பது பண்பாகும்

கருணை பொங்கும் உள்ளம்- அது
கடவுள் வாழும் இல்லம்
கருணை மறந்தே வாழ்கின்றான்
கடவுளைத் தேடி அலைகின்றான்

போன்ற வாழ்வியலுக்குத் தேவையான உயரிய தத்துவங்களை எளிய மொழியில் பாமரருக்கும் புரிகின்ற மாதிரி, பொட்டில் அடித்தாற் போல் படைத்துச் சென்ற மக்கள் கவிஞரின் கவிதைகள் காலத்தை வென்று நிற்கும் சக்தி படைத்தவை!

என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் கவிஞரின் பல்வேறு பாடல்கள் பொழுதுபோக்கு என்ற அம்சத்தைத் தாண்டி என் ஊனோடும் உணர்வோடும் கலந்து விட்ட காரணத்தினால், ‘அந்த நாள் முதல், இந்த நாள் வரை’ அவை என் மீது தாக்கத்தைச் செலுத்தி என்னை உயிர்ப்புடன் இயங்க வைப்பது, முழுக்க முழுக்க உண்மை!

‘காலங்களில் அவள் வசந்தம்,’ பாடல் எழுதிய கவிஞர் கண்ணதாசன் வாழ்ந்த காலம், தமிழ்த்திரையிசைப் பாடல்களின் வசந்த காலம் என்றால் அது மிகையில்லை!

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “என் பார்வையில் கண்ணதாசன்

  1. மதிப்பிற்குரிய வல்லமை ஆசிரியருக்கு,  இக்கட்டுரையில் நான் குறிப்பிட்டுள்ள குழந்தையும் தெய்வமும் என்ற பாடல் பற்றி இணையத்தில் தேடினால் கவிஞர் கண்ணதாசன் எழுதியதாகச் சில இடங்களிலும் கவிஞர் வாலி எழுதியதாகப் பல இடங்களிலும் வருகின்றது.   எனவே அது யார் எழுதியது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.  அது கண்ணதாசனுடைய பாடல் தான் என்று நிச்சயமாக்த் தெரியாமல் இக்கட்டுரையில் அதனைச் சேர்த்ததற்கு வருந்துகிறேன்.                                                                                                 நன்றி, வணக்கம்,                                                                                                   ஞா.கலையரசி.                                             

  2. கவலையற்க கலை.  என்னிடம் கவிஞர் கண்ணதாசனின் திரையிசைப் பாடல்கள் நூலின் (முதல் தொகுதி) ஒரு பிரதியுள்ளது. இது மூன்றாம் பதிப்பாக  1984 இல் வெளியிடப்பட்டது, வானதி பதிப்பகம் வெளியீடு.  இப்புத்தகத்தில், தாலாட்டு பகுதியின் முதல் பாடலாகவும், 321 வரிசை எண் பாடலாக, பக்க எண் 281 இல் குழந்தையும் தெய்வமும் என்ற பாடல் இருக்கிறது.  

    உங்கள் கட்டுரை சிறப்பாக இருக்கிறது பாராட்டுகள், பரிசு பெற வாழ்த்துகள்.

    ….. தேமொழி

  3.  அன்புள்ள தேமொழி!                                                                                               இது கவியரசு பாடல் தான் என்று சான்று காட்டி நிறுவி என் குழப்பத்தைத் தீர்த்து வைத்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி.  பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தேமொழி!                                                                                                                   ஞா.கலையரசி               

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.