பாடம்
யதார்த்தா கி.பென்னேஸ்வரன்
(Eugene Ionescoவின் The Lesson நாடகத்தைத் தழுவிய நாடகம்)
(பேராசிரியர் ஞானத்தின் வீடு. அரங்கம் ஒளி பெற்றதும் மேடையில் மரச்சட்டங்களால் ஆன symbolized வீட்டின் செட். வீடு முழுக்க புத்தகங்கள் இறைந்து கிடக்கின்றன. உட்காரும் நாற்காலிகளில் மேல், முக்காலிகளில் மேல், மேசையின் மேல் என எங்கும் புத்தகக்குவியல். தரையிலும் பல புத்தகங்கள் இறைந்து கிடக்கின்றன.
வீட்டின் உள்ளே பாத்திரங்கள் உருளும் சத்தம் வலுவாகவும் தொடர்ச்சியாகவும் கேட்கிறது. வீட்டின் இடப்பக்க வாயிலில் இளம் வயதுப் பெண் ஒருத்தி கையில் இரண்டு பெரிய சூட்கேஸ்களையும் தோளில் பெரிய பையையும் சுமந்து கொண்டு நிற்கிறாள். (இவள் பெயர் வித்யா என்று வைத்துக் கொள்வோம்) வித்யா அழைப்பு மணியை அழுத்திக் காத்திருக்கிறாள். உள்ளே இருந்து குரல் கேட்கிறது. இது அன்னம்மாவின் குரல். அன்னம்மா பேராசிரியர் ஞானத்தின் வீட்டு வேலைக்காரி. ‘இதோ வர்றேன்..’ என்று உள்ளே இருந்து குரல் கொடுத்துக் கொண்டே மேடையில் பிரவேசிக்கிறாள்.)
அன்னம்மா : வர்றேன் இல்லே ? என்ன வேணும் ?
வித்யா: (தயங்கியபடி) சார் இருக்காரா ?
அன்னம்மா : என்ன வேணும் ? ஷாம்பூ விக்க வந்திருக்கியா ? வாத்யாருக்கு அது தேவையில்லே.
வித்யா: (மறித்து) இல்லே.. ஆண்டீ…
அன்னம்மா : வேக்யூம் க்ளீனரா ? அதுக்குத்தான் வேலைக்காரி நான் இருக்கேனே. வேலைக்கு இருந்தாலும் அவருக்கு எல்லாம் நான்தான். அதுக்காக இதை நீ வேறே அர்த்தம் பண்ணிக்கக்கூடாது.
வித்யா: (மறித்து) இல்லீங்க…
அன்னம்மா : சானிடரி நாப்கின்னா ? அதுவும் தேவையில்லே.
வித்யா: (அழுத்தி) எதுவும் இல்லே. என் பேர் வித்யா. நான் அவருடைய புது ஸ்டூடண்ட். அவர்கிட்டே பாடம் சொல்லிக்க வந்திருக்கேன். அவரைக் கொஞ்சம் கூப்பிடறீங்களா?
அன்னம்மா : நீதானா அது ? இதை முன்னாடியே சொல்றதுக்கென்ன ? நான் எவ்வளவு நேரமா கேட்டுண்டு இருக்கேன். இந்த ப்ரொபசர் மாதிரியே அவரைத்தேடி வர்றவாளும் அசமஞ்சமா இருக்கா. சரி… உள்ளே வா. அவரைக் கூப்பிடறேன். (வித்யாவை உள்ளே அழைத்துச் செல்கிறாள். உட்கார முடியாதபடி நற்காலிகளின் மேல் புத்தகங்கள் இருப்பதால் வித்யா தயங்கி நிற்கிறாள். அன்னம்மா அவைகளை புறம் தள்ளி ஒதுக்கிவிட்டு அவளை உட்கார வைக்கிறாள்.)
அன்னம்மா : உட்காரு.. அவர் இப்ப வந்துடுவார். (உள்ளே அவரை அழைத்தபடி மறைகிறாள். வித்யா காத்து இருக்கிறாள். அன்னம்மா மீண்டும் வெளியே வருகிறாள். கையில் துடைப்பம். தரையில் குவிந்து கிடக்கும் புத்தகங்களை துடைப்பத்தால் பெருக்கித் தள்ளுகிறாள். வித்யாவை அடுத்த நாற்காலிக்கு மாறச்சொல்லி பெருக்குகிறாள். வித்யா அடுத்த நாற்காலிக்கு மாறியதும் மீண்டும் பழைய நாற்காலியில் உட்காரவைத்து பெருக்குவதைத் தொடர்கிறாள். வித்யா தன் பெட்டியில் இருந்து சில பெரிய புத்தகங்களை எடுத்துப் புரட்டிப் பார்க்கத் தொடங்குகிறாள்.)
அன்னம்மா : (தரையைக் கூட்டியவாறு) ஆமாம்… என்ன படிக்கப் போறே ? (வித்யா. அவளைக் கவனிக்காது படிப்பதைத் தொடர்கிறாள்.) Comparative Literatureஆ? அதுலேதான் இப்ப வதவதன்னு டாக்டரேட்கள் குப்பையா குவிஞ்சு கிடக்கே…(பதில் இல்லை) Philologyயா? அதுக்கு நிறைய homework, field study எல்லாம் பண்ண வேண்டி இருக்குமே? Aesthetics in folk idioms பண்ணலாமே.. இன்னும் சொல்லப்போனா folklore—ஆ fakelore—ஆ அதுலே ஆராய்ச்சி செஞ்சா நெறைய பவுண்டேஷன்களோட கிராண்ட்டும் கிடைக்குமே…
வித்யா: (எரிச்சலாகி) ப்ரொபசரை கொஞ்சம் கூப்பிடறீங்களா?
அன்னம்மா: (கடுமையாகி) அவர் இப்போ குளிச்சி டிரஸ் மாத்திண்டிருக்கார். உன் அவசரத்துக்காக அவர் அண்டிராயர் நாடாவை பிடிச்சி இழுத்துண்டு வர முடியாது. எது எப்படியோ..இந்த பிலாலஜி எல்லாம் ரொம்ப டென்ஷனான விஷயம். நீயும் டென்ஷனாகி அவரையும் தேவையில்லாம டென்ஷன் ஆகாம பாத்துக்கறது உன் வேலை. ஆமாம் சொல்லிட்டேன்.
(மீண்டும் ப்ரொபசரை கூப்பிட்டபடியே உள்ளே நுழைகிறாள். ப்ரொபசர் ஞானம் பிரவேசிக்கிறார். ப்ரொபசரைப் பார்த்ததும் வித்யா வணங்கியபடி எழுந்து நிற்கிறாள்.)
ப்ரொபசர் : குட்மார்னிங்..வணக்கம்..உட்காருங்க..நீங்கதான் புதுசா வந்திருக்கிற ஸ்டூடண்ட்.. Am I right?
வித்யா: Exactly, Sir! என் பேர் வித்யா. நீங்க போன்லே சொன்ன மாதிரி சரியான நேரத்துக்குத்தான் வந்திருக்கேன்னு நினைக்கிறேன்.
ப்ரொபசர் : Yes. Perfectly punctual. ஆனால் நாந்தான் கொஞ்சம் லேட் பண்ணிட்டேன். என்னை நீங்க மன்னிக்கணும்.
வித்யா: நீங்க வேறே சார்… என்கிட்டே போய்.. பெரிய பெரிய வார்த்தையெல்லாம் போட்டு. உங்க முன்னாடி நான் சின்னப்பொண்ணு…
ப்ரொபசர் : அது சரி… நீ வீட்டைக் கண்டுபிடிக்கறதுலே ஒன்னும் சிரமம் இல்லியே ?
வித்யா: இல்லே சார்.. யாரைக் கேடாலும் உங்க பேரைச் சொன்னாலே கரெக்டா கொண்டுவந்து விடறாங்க சார்…
ப்ரொபசர் : இருக்கும்… முப்பது வருஷமா இதே வீட்டுலே இருக்கேன் இல்லியா ? அது சரி.. இந்த ஊரை உனக்குப் பிடிச்சிருக்கா ?
வித்யா: பிடிக்கலேன்னு சொல்ல முடியாது சார்… பரவாயில்லே.
ப்ரொபசர் : ம்… ஆரம்பத்துலே அப்படித்தான் இருக்கும். நான் கூட முதல்லே ஏதாவது பெரிய cityயிலே செட்டில் ஆகணும்னுதான் நினைச்சேன்.
வித்யா: எங்கே ? சென்னையிலா சார் ?
ப்ரொபசர் : சென்னை…ஒரு காலத்திலே மெட்ராஸ்னு சொல்லிக்கிட்டிருந்தாங்களே அதுவா ? ம்… எனக்கு இதெல்லாம் அவ்வளவா தெரியாது.
வித்யா: அதேதான் சார். The capital of Tamil Nadu. அங்கேகூட குழந்தைங்ககிட்டேயும் நாய்கள்கிட்டேயும் இங்கிலீஷ்லேதான் பேசுவாங்க. இங்கிலீஷ்லே வழி கேட்டாத்தான் சரியா சொல்வாங்க. கேட்க ரொம்ப அழகா இருக்கும்.
ப்ரொபசர் : அப்படியா ? பிரமாதம். நிறைய தெரிஞ்சு வச்சிருக்கியே…அது சரி…நீ எந்த ஊர்லேயிருந்து வர்றே ?
வித்யா: சார்…நான் கிருஷ்ணகிரி.
ப்ரொபசர் : அது எங்கே ?
வித்யா: இப்போ தர்மபுரி மாவட்டத்துலே இருக்கு. முன்னே சேலம் மாவட்டத்துலே இருந்தது. அப்போ சேலம் மார்க்கெட்டுக்கு கிருஷ்ணகிரியிலேர்ந்துதான் மாம்பழம் போகும். ஆனால் சேலம் மாவட்டத்துலே கிருஷ்ணகிரி இருந்ததாலே இப்பவும் சேலத்து மாம்பழம்னுதான் சொல்றாங்க.
ப்ரொபசர் : Beautiful. என்ன ஒரு அற்புதமான geographical knowledge? இந்த மாதிரி எல்லா துறையிலேயும் ப்ரில்லியண்ட் ஆன ஒரு ஸ்டூடண்டைத்தான் நான் எதிர்பார்த்துகிட்டு இருந்தேன். பிரமாதம்.
வித்யா: சார். இப்படியெல்லாம் தயவு செய்து புகழாதீங்க. கூச்சமா இருக்கு. நான் கத்துக்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கு.
(இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது அன்னம்மா மேடையில் வந்து எதையோ தேடுகிறாள். ப்ரொபசரையும் வித்யாவையும் மாறி மாறி நகரச்சொல்லித் தேடுகிறாள். ப்ரொபசர் எரிச்சல் அடைகிறார்.)
ப்ரொபசர் : என்ன தேடறீங்க ?
அன்னம்மா : எதை தொலைச்சேன்னு தேடிண்டு இருக்கேன். நீங்க உங்க வேலையைப் பாருங்க.
ப்ரொபசர் : (வித்யாவிடம்) I am really sorry for this stupid interruption. ம்… நாம இப்போ எங்கே இருக்கோம் ?
வித்யா : நெ. 21, பாணக்காரத் தெரு…
ப்ரொபசர் : அது இல்லே. ஆங்… நீ ஒரு பிரகாசமான மாணவி. அப்போ பிரிலிமினரி டெஸ்ட் எல்லாம் இன்னிக்கே பண்ணலாம். நாள் நல்லா இருக்கு. மழையும் லேசாத் தூரற மாதிரி இருக்கு. ஆமாம் இப்போ ஏது மழை ?
வித்யா : ஆமாம் சார். Winter-ம் இல்லே. சம்மர்லே ஏது மழை ?
ப்ரொபசர் : அது அப்படித்தான், இப்போ எல்லாமே மாறி இருக்கு. Winterலே வெயில் அடிக்கும். சம்மர்லே மழை கொட்டும்.
வித்யா : ஆமாம் சார். மொத்தம் நாலு சீசன். Summer, Winter, Spring அப்புறம்…
ப்ரொபசர் : Yes, something starting like automobile.
வித்யா : அது வந்து…ஆங்…Autumn Sir
ப்ரொபசர் : Beautiful. பிரமாதம். Excellent answer. எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு. நீ ரொம்ப நல்ல ஸ்டூடண்டா வருவேன்னு. You are extremely intelligent, well informed and excellent memory…
வித்யா : சார்…எனக்கு நிஜமாகவே சீசன்ஸ் பத்தி கொஞ்சம் தெரிஞ்சிருக்கா ?
ப்ரொபசர் : ஆல்மோஸ்ட்… டென்ஷன் ஆகாதே. கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் தெரிய ஆரம்பிக்கும். ஒரு நாள் நீ கண்ணை மூடிக்கிட்டே நாலு பருவ காலங்களைப் பத்தியும் கூட கடகடன்னு ஒப்பிக்க முடியும். எனக்கு நம்பிக்கை இருக்கு. அது சரி. உன்னோட future plans என்ன ?
வித்யா : சார்…நான் doctorateக்கு அப்ளை பண்ணி இருக்கேன். இன்னும் மூணு மாசத்துலே இண்டர்வ்யூ இருக்கு. என்னோட பேரண்ட்ஸ் ரொம்ப help பண்றாங்க. எனக்கு அவங்க முழு சப்போர்ட்டும் இருக்கு.
ப்ரொபசர் : ப்ரமாதம். நீ எந்த சப்ஜெக்ட்லே டாக்டரேட் பண்ண்ணும்னு விரும்பறே ?
வித்யா : எங்க அப்பா அம்மா நான் உலகத்துலே இருக்கிற எல்லா சப்ஜெக்ட்லேயும் டாக்ட்ரேட் வாங்கி ஆகணும்னு ஆசைப்படறாங்க.
ப்ரொபசர் : அது ஒண்ணும் இப்போ அவ்வளவு கஷ்டம் இல்லே. அது சரி. நீ ஸ்கூல் பைனல்ஸ் பாஸ் பண்ணியாச்சா ?
வித்யா : Science and Literatureலே சார். 41 பர்செண்ட். சர்டிபிகேட் இருக்கு. பார்க்கிறீங்களா ?
ப்ரொபசர் : ப்ரில்லியண்ட்…உன் வயசுக்கு இது அதிகம்தான்.
அன்னம்மா : கிடைச்சாச்சு. நீங்க டென்ஷன் ஆகாதீங்கோ.
ப்ரொபசர் : (பொருட்படுத்தாது) வெரிகுட். உனக்கு வயசும் இருக்கு. தேவைக்கு அதிகமான புத்திசாலித்தனமும் grasping powerம் இருக்கு. அதனால் நீ நினைக்கிறதெல்லாம் சுலபமா சாதிக்கலாம்னு நினைக்கிறேன்.
வித்யா : சார்…நீங்க இவ்வளவு புகழறது எனக்கு ரொம்பக் கூச்சமாக இருக்கு.
ப்ரொபசர் : பரவாயில்லே. டென்ஷன் ஆகாதே. ஏற்கனவே சொன்ன மாதிரி preliminary questionsலேயிருந்து ஆரம்பிப்போமா? உனக்கு ஆட்சேபணையில்லேன்னா இந்த சேருக்கு மாத்திக்க முடியுமா ?
வித்யா : கண்டிப்பா சார். (இடம் மாறி உட்காருகிறார்கள்.)
ப்ரொபசர் : நீ எல்லாக் கேள்விகளுக்கும் தயார் பண்ணிக்கிட்டுத்தான் வந்து இருக்கே இல்லையா ?
வித்யா : ஆமாம் சார். எல்லா புத்தகமும் எடுத்துகிட்டு வந்திருக்கேன். (பெட்டியிலும் பையிலும் இருக்கும் புத்தகங்களை எடுத்து நடுவில் இருக்கும் டீப்பாயின் மீது அடுக்குகிறாள். இருவருக்கும் நடுவில் அவை திரையாக இருக்கின்றன. சிறிது நேரத்துக்குப் பிறகு ப்ரொபசர் அவைகளை இரு அடுக்குகளாக மாற்றுகிறார்.) இப்போது கொஞ்சம் வசதியாக இருக்கிறது.
ப்ரொபசர் : வெல்… இப்போ நான் இது வரைக்கும் உனக்கு தெரிஞ்ச விஷயங்களைப் பத்தி சில கேள்விகள் கேட்டு உனக்கு என்ன தெரியும்னு சோதிச்சுப் பார்க்கப் போறேன். நாம இன்னும் கொஞ்சம் ஆழமா போக இது உதவும்னு நினைக்கிறேன். என்ன சொல்றே ?
வித்யா : கண்டிப்பா.
ப்ரொபசர் : அப்போ நாம basic arithmeticலேருந்து ஆரம்பிப்போமா? சரி. கூட்டல் கணக்குலே that is additionலே நீ எவ்வளவு strongஆ இருக்கேன்னு பார்ப்போமா ?
வித்யா : கூட்டல்லே… வந்து…ஓரளவுக்குத் தெரியும் சார்.
ப்ரொபசர் : Fine. பார்ப்போம்…(அன்னம்மா மீண்டும் பிரவேசிக்கிறாள். எதையோ தேடுவதான பாவனை. ப்ரொபசர் எரிச்சல் அடைகிறார். மீண்டும் வித்யாவிடம்) இதோ பாரும்மா…நாம கொஞ்சம் கணக்குலே இருந்து ஆரம்பிப்போம். அதாவது உனக்கு ஆட்சேபனை இல்லேன்னா.
வித்யா : தாராளமா சார்…எனக்கும் கணக்குலே எப்பவுமே ரொம்ப ஆர்வம் உண்டு.
ப்ரொபசர் : சரி…கணிதம் என்பது ஒரு புதுவகை விஞ்ஞானம். ஒரு நவீன விஞ்ஞான வகை சார்ந்தது. அதனை சிலர் விஞ்ஞானம் என்பதைவிட, ஒரு வகையான மார்க்கம் என்றும் அழைக்கிறார்கள். இது ஒரு வகை தீர்வும் வழி முறையும் ஆகும். (அன்னம்மாவிடம்) அன்னம்மா, என்ன திரும்பவும் தொலைச்சதை தேடிக்கிட்டிருக்கீங்களா?
அன்னம்மா : இல்லே, கிடைச்சதை திரும்ப தொலைச்சிட்டு தேடிகிட்டு இருக்கேன். கிடைச்சுடும்.
ப்ரொபசர் : சீக்கிரம். தயவு செய்து தொந்தரவு பண்ணாதீங்க.
அன்னம்மா : போறேன். போறேன். ஆனா நான் சொல்றதை தப்பா எடுத்துக்காதீங்கோ. தயவு பண்ணி ஜாக்ரதையா இருங்கோ. ரொம்ப excite ஆக வேண்டாம். ஆமாம் சொல்லிட்டேன்.
ப்ரொபசர் : என்ன இது பைத்தியக்காரத்தனமா? கவலைப்பட ஒண்ணுமில்லே. நீங்க போயிட்டு வாங்க.
அன்னம்மா : ஆமாம். நீங்க எப்பவும் இப்படியே எதையாவது சொல்லித் தட்டிக் கழிங்கோ.
ப்ரொபசர் : நீங்க இல்லாததுக்கெல்லாம் பயப்பட ஆரம்பிச்சிட்டீங்க. எனக்கு என்னைப் பாத்துக்கத் தெரியும். வயசாகலையா ? நான் கொழந்தையா என்ன ?
அன்னம்மா : போறும். இந்தக் கொழந்தைக்கு தயவு செய்து கணக்குலே இருந்து ஆரம்பிக்காதீங்கோ. இந்தக் கணக்குப் பாடம் யாருக்கு என்னிக்கு நல்லது பண்ணியிருக்கு? நீங்க மெனக்கெடறதும் ஒடம்பைக் கெடுத்துக்கறதும்தான் மிச்சம்.
ப்ரொபசர் : இதைப் பாருங்க அன்னம்மா. எனக்கும் தேவைக்கு அதிகமாகவே வயசாகுது. உங்க அட்வைஸ் எல்லாம் எனக்குத் தேவையா ?
அன்னம்மா : அது சரி. ஆனா நீங்க இந்த்த் தரித்திரக் கணக்குலே இருந்து பாடம் ஆரம்பிக்கலேன்னா ரொம்பப் புண்ணியமாப் போகும்.
ப்ரொபசர் : (கோபமாக) நான் என்ன பண்ண்ணும்னு எனக்குத் தெரியும். நீங்க போகலாம்.
அன்னம்மா : அது சரி, நீங்க படிச்சவர். ப்ரொபசர். நான் வேலைக்காரிதானே ? ஆனா நான் உங்களை எச்சரிக்கை பண்ணலைன்னு அப்புறம் கொறை சொல்லப்படாது.
ப்ரொபசர் : உங்க எச்சரிக்கையோ அட்வைஸோ எனக்குத் தேவையில்லை.
அன்னம்மா : அதுதான் சொன்னேனே. உங்க இஷ்டம். (கோபமாக உள்ளே போகிறாள்.)
ப்ரொபசர் : (வித்யாவிடம்) Again sorry for this stupid interruption. Anyway, அன்னம்மாவும் பாவம். என் healthலே ரொம்பவும் அக்கறை காட்டுறாங்க. நான் exhaust ஆகக் கூடாதுன்னு நினைக்கிறாங்க.
வித்யா : நல்லதுதான் சார். உங்க மேலேயும் அக்கறை காட்டுறவங்க வேணுமில்லையா ? அவங்களைப் பாத்தா ரொம்ப devoted ஆன லேடியா தெரியறாங்க. இந்த மாதிரி servants இந்தக் காலத்திலே கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம் சார்.
ப்ரொபசர் : அதுக்குன்னு அளவு மீறிப் போறாங்க. இவ்வளவு டென்ஷன் ஆக்கிக்கறது மடத்தனமா இல்லே ? servants. நாம நம்ப கணக்குக்கு போகலாமா ?
வித்யா : நான் தயார் சார்.
ப்ரொபசர் : நான் கேக்கிற கேள்விகள் கொஞ்சம் கஷ்டமாகவும் சிக்கலாகவும் இருக்கும். பரவாயில்லையா ?
வித்யா : பரவாயில்லை. நான் தயார் சார்
ப்ரொபசர் : Very good. (மிகவும் யோசித்து) ம்…ஒண்ணும் ஒண்ணும் எவ்வளவு ?
வித்யா : ஒண்ணும் ஒண்ணும்…ரெண்டு.
ப்ரொபசர் : (வித்யாவின் ஞானத்தில் ஆச்சர்யம் மேலிட்டவராக) அட, beautiful. நீ நிஜமாகவே உன் படிப்பிலே ரொம்பவும் அட்வான்ஸ்டா இருக்கே. நீ டாக்டரேட் வாங்கறதுலே எந்த சிரமமும் இருக்கும்னு எனக்குத் தோணலே.
வித்யா : ரொம்ப நன்றி சார். இதை உங்க வாயாலே கேட்க அற்புதமா இருக்கு சார். வசிஷ்டர் வாயாலே மகரிஷின்ற மாதிரி.
ப்ரொபசர் : இன்னும் கொஞ்சம் அட்வான்ஸ்டா போகலாமா ? சரி. ரெண்டும் ஒண்ணும் எவ்வளவு ?
வித்யா : மூணு.
ப்ரொபசர் : மூணும் ஒண்ணும் ?
வித்யா : நாலு.
ப்ரொபசர் : நாலும் ஒண்ணும் ?
வித்யா : அஞ்சு
ப்ரொபசர் : அஞ்சும் ஒண்ணும் ?
வித்யா : ஆறு
ப்ரொபசர் : ஆறும் ஒண்ணும் ?
வித்யா : ஏழு
ப்ரொபசர் : ஏழும் ஒண்ணும் ?
வித்யா : எட்டு
ப்ரொபசர் : Very good. ஏழும் ஒண்ணும் ?
வித்யா : திரும்பவும் எட்டுத்தான்.
ப்ரொபசர் : Beautiful. ஏழும் ஒண்ணும் ?
வித்யா : நாலாவது முறையா எட்டு. சில சமயம் ஒன்பது கூட ஆகலாம்.
ப்ரொபசர் : பிரமாதம். Congratulations. விதயா, இனி மேலே தொடர வேண்டாம். கணக்கிலே நீ பொளந்து கட்டிட்டே. சரி. நீ tired ஆகலையா ? ஆகலைன்னா சொல்லு. நாம கழித்தல் கணக்குலே இறங்கலாம்.
(வித்யா தான் “tired” ஆகவில்லை என்பது போல் உற்சாகமாய் தலை அசைக்கிறாள்)
ப்ரொபசர் : Tired ஆகலையா ? சரி… நாலுலே மூணு போனா எவ்வளவு?
வித்யா : நாலுலே மூணு போனா… நாலுலே மூணு போனா..
ப்ரொபசர் : ஆமாம். அதேதான். Four minus three?
விதயா : Four minus three?.. வந்து…Seven…ஏழு…
ப்ரொபசர் : I am extremely sorry to contradict you. ஆனா நாலுலே மூணு போனா ஏழு ஆகாதும்மா. நீ குழப்பிக்கறே. 4-ஐயும் 3-ஐயும் கூட்டினாத்தான் ஏழு வரும். இது கூட்டல் கணக்கு இல்லே. கழித்தல். இப்ப நீ கூட்ட வேண்டாம். கழிக்கணும்.
வித்யா : (புரிய சிரமப்பட்டு) அப்படியா சார்…
ப்ரொபசர் : 4லே 3 போனா.. That is three from four that makes how many?
வித்யா : Four?
ப்ரொபசர் : இல்லேம்மா. இது சரியான விடை கிடையாது.
வித்யா : அப்ப மூணா ?
ப்ரொபசர் : அதுவும் இல்லே. தயவு செய்து என்னை மன்னிக்கணும். அது இல்லே.
வித்யா : நாலிலிருந்து மூணு. அதவது 3ஐ 4ல் இருந்து எடுக்கணும். That is four minus three… ஒரு வேளை பத்தா சார் ?
ப்ரொபசர் : ஐயோ கண்ணு கொழந்தை…Guess பண்ணப்படாது. அதுக்கான reason சொல்லணும். இப்ப நாம ரெண்டு பேரும் சேர்ந்து இந்த பிரச்னையை solve பண்ண முயற்சி பண்ணுவோம். உனக்கு சரியா ஒண்ணு ரெண்டு எண்ணத்தெரியுமா ?
வித்யா : ஓ. ஒண்ணு, ரெண்டு, மூணு. One, two, three…
ப்ரொபசர் : Very good. நல்லா எண்ணத்தெரிஞ்சு இருக்கு. இப்படி நீ எது வரைக்கும் எண்ண முடியும் ?
வித்யா : Upto infinity Sir.
ப்ரொபசர் : ஐயோ… எனக்கு பயமாயிருக்கு. கொஞ்சம் சிம்பிளா…
வித்யா : அப்போ பதினாறு வரைக்கும் எண்ணலாமா ?
ப்ரொபசர் : அது ரொம்ப அதிகம். உனக்கும் ஒரு லிமிடேஷன் இருக்கு இல்லியா ? சரி எண்ணிக்கிட்டே போ…
வித்யா : ஒண்ணு..ரெண்டு..மூணு…நாலு…
ப்ரொபசர்: Stop. இதுலே அந்த நம்பர் பெரிசு. மூணா ? நாலா ?
வித்யா : (தீவிரமாக யோசித்தபடி) மூணா ? நாலா ? எது பெரிய நம்பர் ? எந்த வகையிலே பெரிசு சார் ?
ப்ரொபசர் : சில எண்கள் மற்றவைகளை விட சிறுசாக இருக்கும். பெரிய எண்கள்லே சிறிய எண்களைவிட அதிகமான கணங்கள் இருக்கு இல்லியா ?
வித்யா : சின்ன எண்களை விடவா ?
ப்ரொபசர்: அதுலே என்ன சந்தேகம் ? சின்ன எண்கள் சின்ன யூனிட்களால் ஆக்கப்பட்டு இருக்கு. If all the units are very small, there may be more units in the small numbers than in the bigger ones. That is if they are not the same units.
வித்யா : அப்போ சின்ன எண்கள் பெரிய எண்களை விட பெரிசா இருக்கலாம் இல்லையா ?
ப்ரொபசர் : இருக்கலாம். நாம்ப இப்ப அதுலே போகல்லே. அது ரொம்ப அட்வான்ஸ்டான விஷயம். நான் என்ன சொல்ல நினைச்சேன்னா எண்களை மீறியும் சில விஷயங்கள் இருக்கு. அளவு இருக்கு. Like வாத்துக்கள், தேங்காய்கள், கழுதைகள், மந்திரிகள், இப்படி போய்கிட்டே இருக்கும். Let us just suppose, to make it more easier. நாம இப்போ பேசிக்கிட்டு இருக்கிற எண்கள் எல்லாம் ஒரே யூனிட்களை கொண்டதாக வெச்சிக்கலாம். எல்லா எண்களும் ஒரே அளவு யூனிட் கொண்ட பட்சத்தில் அதிக யூனிட்களைக் கொண்ட எண்கள் மற்ற எண்களை விட பெரியது என்று கொள்ளலாம். (மூச்சு விடுகிறார்.)
வித்யா : அப்போ எது அதிகமா இருக்கோ, அதுதான் மற்றதைவிட பெரிசு இல்லையா? சார் நீங்க quantityஐ qualityயோட equate பண்றீங்க.
ப்ரொபசர் : இது கொஞ்சம் தியரிட்டிகலா இருக்கு. நாம் இவ்வளவு டீப்பா தியரிக்கு போக வேண்டாம். சரி விடு. ஒரு குறிப்பிட்ட exampleஐ எடுத்துகிட்டு மேல போவோம். நம்மகிட்டே நாலு இருக்கு. மூணு இருக்கு. Each one is having a number of identical units. இப்போ எது பெரிசு ? பெரிய எண்ணா ? சின்னதா ?
வித்யா : என்னை மன்னிக்கணும் சார். பெரிய எண் அப்படின்னா என்ன சார் ? அடுத்த எண்ணை விட கொஞ்சம் சின்னதா உள்ள எண்ணா ?
ப்ரொபசர் : அதேதான். நீ அற்புதமா புரிஞ்சிக்கிட்டிருக்கே.
வித்யா : அப்போ நாலா இருக்கணும்.
ப்ரொபசர் : அப்போ நாலு என்ன ? மூணை விட பெரிசா சின்னதா ?
வித்யா : சின்னது..இல்லே பெரிசு…
ப்ரொபசர் : Excellent answer. 3க்கும் 4க்கும் நடுவிலே எத்தனை யூனிட் வித்தியாசப்படுது அல்லது 4க்கும் 3க்கும்- உனக்கு சௌகர்யப்பட்றதா இருந்தா…
வித்யா : சார்… 3க்கும் 4க்கும் நடுவிலே எந்த யூனிட்டும் இல்லே. நாலு, மூணுக்கு அடுத்ததா வருது. 3க்கும் 4க்கும் நடுவிலே ஒண்ணும் இல்லே.
ப்ரொபசர் : ஒரு நிமிஷம்.. இப்போ எனக்கே புரிஞ்சுதான்னு சந்தேகமா இருக்கு. ஒரு வேளை நான் உனக்கு விளங்கற மாதிரி சொல்லல்லியோ ? ஒரு வேளை என்னுடைய தப்பா கூட இருக்கலாம்.
வித்யா : ஐயையோ.. நீங்க வேற சார்..இது முழுக்க முழுக்க என்னோட தப்புத்தான்.
(அன்னம்மா வருகிறாள்)
ப்ரொபசர் : (எரிச்சலுடன்) என்ன..திரும்பவும் அதையாவது தேடனுமா ?
அன்னம்மா : ஐயையோ.. அதெல்லாம் ஒண்ணுலில்லே. மண்டை காய ஆரம்பிச்சிருக்குமே.. காபி எதாவது சாப்பிடறேளான்னு கேக்க வந்தேன்.
ப்ரொபசர் : அதெல்லாம் ஒண்னும் வேணாம். அது சரி அன்னம்மா.. இந்தப் பொண்ணுக்கும் விளங்கற மாதிரி ஒரு கேள்வி. நீங்களும் கவனிக்கணும்.
அன்னம்மா : ஐயையோ.. என்னை விடுங்கோ. ஏண்டா பிராமணா கல்யாணம் ஆகலையான்னு கேட்டா நீயே எம் பொண்டாட்டின்னு சொன்ன கதையா இல்லே இருக்கு. நான் போய் எதையாவது தேடறேன். அதுவே தேவலாம். (உள்ளே போகிறாள்.)
ப்ரொபசர் : (வித்யாவிடம்) சரி…வித்யா…இப்போ இப்படி வச்சிக்கலாம். இப்போ எங்கிட்டே 3 தீப்பெட்டி இருக்கு.
வித்யா : இல்லையே சார்.
ப்ரொபசர் : இல்லை. இருக்கிற மாதிரி வச்சுக்குவோம் என்ன ? என் கையிலே 3 தீப்பெட்டி இருக்கு.
வித்யா : இல்லையே சார்.
ப்ரொபசர் : ஒரு பேச்சுக்கு…என் கையிலே 3 தீப்பெட்டி இருக்கு. (நிறுத்தி அவளைப் பார்க்கிறார். அவள் வெறுமனே வெறிக்கிறாள்.) இப்போ இன்னொண்ணு சேர்த்துக்கறேன். இப்ப 4 ஆகுது இல்லையா ? இப்பத்தான் ஜாக்ரதையா கவனிக்கணும். இப்ப 4 இருக்கு. இந்த நாலு தீப்பெட்டிகள்லேருந்து ஒரு தீப்பெட்டியை எடுக்கறேன். இப்ப் எவ்வளவு பாக்கி இருக்கு ?
வித்யா : அஞ்சு. இப்போ மூணும் ஒண்ணும் சேர்ந்து நாலு ஆனா அப்ப நாலும் ஒண்ணும் சேர்ந்து அஞ்சு ஆகலையா ?
ப்ரொபசர் : இல்லேம்மா.. அது தப்பு. உன் மண்டையிலே கூட்டலே முழுக்க நிறைஞ்சு இருக்கு. நாம சமயத்துலே கழிக்கவும் வேணும். கூட்டுதல் – சேர்தல் மட்டுமே பத்தாது. கழித்தல் பிரிதல் எல்லாமே இருக்கணும். இதுதான் வாழ்க்கைத் த்த்துவம் – விஞ்ஞானம் – முன்னேற்றம் – நாகரிகம் எல்லாமே இதுலே அடங்கி இருக்கு.
வித்யா : ஆமாம் சார்.
ப்ரொபசர் : சரி. நாம தீப்பெட்டிக்கு திரும்பப் போவோம். என்கிட்டே நாலு தீப்பெட்டி இருக்கு. இருக்கா ? அதுலே நான் ஒண்ணை எடுத்துக்கறேன். இப்போ எங்கிட்டே…
வித்யா : தெரியாது சார்.
ப்ரொபசர் : Come on. கொஞ்சம் யோசிக்கணும். நீ தேவையான intellectual effort எடுத்துகிட்டு முயற்சி பண்ணா உன்னாலே ஜெயிக்கவும் முடியும்னு எனக்குத் தெரியும். அப்புறம் என்ன ?
வித்யா : எனக்குத் தோணலே சார். நிஜமாகவே தெரியலே சார்.
ப்ரொபசர் : சரி. டென்ஷன் ஆக்க்கூடாது. இப்போ நாம கொஞ்சம் சுலபமான உதாரணமா பார்ப்போம். இப்போ உனக்கு ரெண்டு மூக்கு இருந்து நான் ஒண்ணைல் கிள்ளி எடுத்தேன்னா என்ன இருக்கும் ?
வித்யா : ஒண்ணும் இருக்காது சார். ரத்தம் வரும்.
ப்ரொபசர் : What do you mean?
வித்யா : ஆமாம் சார். இப்போ நீங்க கிள்ளி எடுக்கல்லே. அதனாலே ஒண்ணு இருக்கு. அதையும் நீங்க கிள்ளி எடுத்தா ஒண்ணும் இருக்காது இல்லையா?
ப்ரொபசர் : உனக்கு நான் சொன்ன உதாரணம் சுத்தமா புரியல்லேன்னு நினைக்கிறேன். சரி. இன்னும் சுலபமான ஒரு உதாரணம் சொல்றேன். உனக்கு ரெண்டு…
வித்யா : ஐயோ சார்..
ப்ரொபசர் : அது இல்லேம்மா. சரி இப்படி வச்சுக்குவோம். சப்போஸ் உனக்கு ஒரு காது இருக்குன்னு வச்சிக்குவோம்.
வித்யா : சரி..அப்புறம் ?
ப்ரொபசர்: நான் இன்னொரு காதை ஒட்ட வைக்கிறேன். இப்போ உனக்கு எவ்வளவு காதுகள் இருக்கும் ?
வித்யா : ரெண்டு.
ப்ரொபசர்: குட்…நான் இப்போ இன்னொரு காது ஒட்ட வைக்கிறேன். இப்போ எவ்வளவு இருக்கும் ?
வித்யா : 3 காதுகள்
ப்ரொபசர் : சரி. நான் அதுலே ஒண்ணை தனியா எடுத்துடறேன். இப்போ எவ்வளவு இருக்கும் ?
வித்யா : ரெண்டு.
ப்ரொபசர் : Great…. இப்போ நான் இன்னொரு காதையும் எடுத்துர்றேன். இப்போ எவ்வளவு இருக்கும் ?
வித்யா : ரெண்டு.
ப்ரொபசர் : இல்லேம்மா. உன் கிட்டே பாக்கி ரெண்டு காதுகள் இருக்கும். அதுலே நான் ஒண்ணை எடுத்துர்றேன். அப்ப எவ்வளவு பாக்கி இருக்கும் ?
வித்யா : ரெண்டு.
ப்ரொபசர் : நான் அதுலே ஒண்ணை கிள்ளி எடுத்துர்றேன். அப்ப எவ்வளவு பாக்கி இருக்கும் ?
வித்யா : ரெண்டு.
ப்ரொபசர் : இல்லை. ஒண்ணு.
வித்யா : ரெண்டு.
ப்ரொபசர் : ஒண்ணு.
வித்யா : ரெண்டு.
ப்ரொபசர் : ஒண்ணு.
வித்யா : ரெண்டு.
ப்ரொபசர் : ஒண்ணு.
வித்யா : ரெண்டு.
ப்ரொபசர் : (விரக்தியடைந்தவராக) இல்லே. இல்லே. இல்லவே இல்லே. சரி. என் உதாரணம் உன்னாலே ஏத்துக்க முடியாததா இருக்குபோல இருக்கு. சரி. இப்ப வேற மாதிரி சொல்றேன்.
வித்யா : யெஸ் சார்.
ப்ரொபசர் : உன்கிட்டே…உன்கிட்டே…
வித்யா : (படு அவசரமாக மறித்து) பத்து விரல்கள் இருக்கு.
ப்ரொபசர் : Fine. உனக்குப் பிடிச்சிருந்தா அப்படியே வச்சுக்குவோம். உன் கிட்டே பத்து விரல்கள் இருக்கு. அப்புறம் ?
வித்யா : Yes சார்.
ப்ரொபசர் : அதுலே அஞ்சு விரல் எடுத்துட்டா எவ்வளவு இருக்கும் ?
வித்யா : பத்து சார்.
ப்ரொபசர் : இல்லேம்மா, அது தப்பு.
வித்யா : ஆனா என்கிட்டே இருக்கணுமே சார்.
ப்ரொபசர் : நான் சொல்றேன். தப்பு.
வித்யா : நீங்கதானே சொன்னீங்க. என்கிட்டே பத்து விரல்கள் இருக்குன்னு…
ப்ரொபசர் : நான் அப்புறம் சொன்னேன். அதுலே 5 விரல்களை எடுக்க்ச் சொல்லி…
வித்யா : ஆனா என்கிட்டே 5 விரல்கள் கிடையாது சார். பாருங்க 10 விரல்கள்தான் இருக்கு.
ப்ரொபசர் : சரி, நாம இப்போ வேற மாதிரி போகலாம். கழித்தல் கணக்குக்கான சௌகர்யத்துக்காக நாம figureகளை 5க்குள்ளே restrict பண்ணிக்கலாம். கொஞ்சம் உனக்குப் பொறுமை வேணும். உனக்கு உதவி செய்யத்தானே நான் இங்கே இருக்கேன். (ப்ரொபசர் ஒரு கற்பனையான கரும்பலகையில் எழுத ஆரம்பிக்கிறார்.) ம்… இப்ப கவனி.
(அன்னம்மா பிரவேசிக்கிறாள். கடுகடுப்பாக இருக்கிறாள்.)
அன்னம்மா : நான் அப்பவே முட்டிண்டேன். இந்தக் கணக்கெழவே வேணாம்னு. இப்போ ரெண்டு பேரும் டென்ஷனாகி ஒடம்பு கெட்டுப் போய்.. என்ன எழவுக்கு இதெல்லாம் ?
ப்ரொபசர் : அன்னம்மா… இதெல்லாம் உங்க மண்டைக்கு ஏறாத விஷயம். நீங்க உங்க வேலையைப் பாருங்க.
அன்னம்மா : எங்கிட்டே சொல்லாதீங்கோ. இதுக்கு எதுக்கு டாக்டரேட்டும் புடலங்காயும் ? குத்து மதிப்பா கண்ணை மூடிக்கிட்டு பண்டங்களைப் போட்டு சமையல் பண்றவளாக்கும். எனக்கெதுக்கு ? குருவாச்சு.. சிஷ்யை ஆச்சு.. ஏண்டிம்மா அவர்தான் கதர்றாரே.. நீயாவது ஒத்துக்கப்படாதா ?
வித்யா : இல்லை ஆண்ட்டி…
ப்ரொபசர் : (வித்யாவிடம்) நீ சும்மா இரு. குரு சிஷ்ய உறவே இப்படித்தான். குடுக்கறது வாங்கறது எல்லாம் உண்டு இல்லையா.
அன்னம்மா : அப்படித் தெரியலியே. மல்லுக்கட்டின்னா போராடியாறது ஒரு காதுக்காக.
ப்ரொபசர் : சரி சரி, உள்ளே பாருங்க. ஏதோ தீயற வசனை வருது.
அன்னம்மா : அங்கே இல்லே, இங்கேதான். கணக்கு தீயறது. எனக்கென்ன. (உள்ளே போகிறாள்.)
ப்ரொபசர் : (வித்யாவிடம்) சரி அதை விடு. (கரும்பலகையில் பாவனையில் ஒரு கோட்டினை வரைய ஆரம்பிக்கிறார்.) ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு – நாலு கோடுகள்-தெரியறதா ?
வித்யா : தெரியுது சார்.
ப்ரொபசர் : இவை எல்லாம் குச்சிகள். புரியுதா ? இது ஒரு குச்சி. இது 2 குச்சிகள். இது 3 குச்சிகள்- இப்போ நாலு குச்சிகள். இதெல்லாம் என்ன ? எண்கள் – நம்பர்ஸ் – figures. நீ ஒரு குச்சியை எண்ணும்போது அது ஒரு யூனிட். என்னது ?
வித்யா : ஒரு யூனிட்.
ப்ரொபசர்: அதுதான். ஒண்ணா figures இல்லே Numbers. One- Two – Three- Four – Five – elements of numeration .. என்ன ?
வித்யா : (தயக்கத்துடன்) ஆமாம் சார். சங்கதிகள் – அந்த்க் குச்சிகள் எல்லாம் எண்கள். யூனிட்கள்.
ப்ரொபசர் : At one and the same time, that is to say, in point of fact, the whole of arithmetic boils down to that.
வித்யா : Yes Sir, very good Sir, Thank you Sir !
ப்ரொபசர் : அப்ப நீ இந்த சங்கதிகளை வச்சு எண்ன ஆரம்பி. கூட்டணும் – கழிக்கணும்.
வித்யா : (ஞாபகப்படுத்திக் கொள்வதுபோல்) இந்தக் குச்சிகள்லாம் எண்கள் – figures – units.
ப்ரொபசர் : very good. அப்படித்தான் வெச்சிக்கோயேன், அப்புறம் ?
வித்யா : நாம 3 உருப்படிகள்லே ரெண்டு உருப்படிகளைக் கழிக்கலாம். ஆனால் ரெண்டு ரெண்டை மூணு மூணால் கழிக்க முடியுமா ? ரெண்டு உருவங்களை நாலு எண்களால் கழிக்க லுடியுமா ? அப்புறம் 3 எண்களை ஒரு உருப்படியால் கழிக்க முடியுமா ?
ப்ரொபசர் : முடியாதும்மா .. கண்டிப்பா முடியாது.
வித்யா : ஆனால் ஏன் ?
ப்ரொபசர் : ஏன்னா …
வித்யா : (மறித்து) ஏன்னா அதுவெல்லாம் ஒண்ணேத்தான்.
ப்ரொபசர் : அதெல்லாம் அப்படித்தாம்மா. அதை விரிவா விளக்க முடியாது. இது உனக்குள்ளே இருக்கற senseஐ பொறுத்து இருக்கு. உனக்குள்ளே அந்த sense இருக்கோ இல்லையோ.
வித்யா : அப்ப இதுக்கு என்னதான் வழி சார் ?
ப்ரொபசர் : இதோ பாரும்மா.. இந்த அடிப்படை கணித விதிகளைப் புரிஞ்சுக்கலைன்னா உன்னாலே இந்த சப்ஜெக்ட்லே ஒன்ணும் பண்ண முடியாது. டாக்டரேட் என்ன, உன்னாலே ஒரு நர்சரி டீச்சராக்க் கூட முடியாது. நான் ஒத்துக்கரேன். இது நாம நினைக்கற அளவுக்கு சுலபம் கிடையாது. ரொம்ப abstract ஆகத்தான் இருக்கும். ஆனா இந்த ஆரம்பப் பாட்த்தை நீ உருப்படியா கத்துக்கலேன்னா உன்னாலே எந்த மனக்கணக்கும் போட முடியாது. உதாரணத்துக்கு how much is three billion, seven hundred and fifty five million, nine hundred and ninety eight thousand, two hundred and fifty one, multiplied by five billion, one hundred and sixty two million, three hundred and three thousand, five hundred and eight – இதை நீ எப்படி மனக்கணக்குலே பெருக்குவே ?
வித்யா : (மிக வேகமாக) இதோட பெருக்கல் சார் Nineteen quintillion, three hundred and ninety quadrillion, two trillion, eight hundred and forty four billion, two hundred and nineteen million, a hundred and sixty four thousand, five hundred and eight.
ப்ரொபசர் : (எகிறி விழுந்தவராக) நோ…நோ… அப்படி இருக்காது. That must be Nineteen quintillion, three hundred and ninety quadrillion, two trillion, eight hundred and forty four billion, two hundred and nineteen million, a hundred and sixty four thousand, five haundred and nine
வித்யா : இல்லே சார். Five hundred and eight. !
ப்ரொபசர் : (கலவரம் அடைந்தவராக) ஆமாம். ஆமாம். உன் விடைதான் சரி. உன்னுது சரியான பெருக்கல் விடை. (முணுமுணுத்தவாறு) quintillion, quadrillion, trillion, billion, million, a hundred and sixty four thousand five hundred and eight (அதீத வியப்புடன்) எப்படியம்மா இது ? உன்னாலே அடிப்படை கணித விதியை புரிஞ்சிக்க முடியாதப்ப இவ்வளவு பெரிய பெருக்கல் கணக்குக்கு எப்படி விடை கண்டுபிடிக்க முடிஞ்சுது ?
வித்யா : இது சுலபம் சார். சின்னக் கணக்குகளுக்கு கடுமையா யோசிச்சி அதுக்கான ஆதாரங்களையும் logicஐயும் reasoningஐயும் எப்பவும் நம்ப முடியாதுங்கறதால நான் பெருக்கல் கணக்குலே உள்ள எல்லா combinationஐயும் மனப்பாடம் பண்ணி வச்சிருக்கேன் சார்.
ப்ரொபசர் : ஆனால் இந்தப் பெருக்கல்லே combinationக்கு முடிவே இல்லியேம்மா. They are infinite.
வித்யா : எப்படியோ கஷ்டப்படு நெட்டுருப் பண்ணி வச்சிருக்கேன் சார்.
ப்ரொபசர் : அபாரம், அமானுஷ்யமா இருக்கு. ஆனால் இதனாலே எல்லாம் நான் திருப்தி அடைஞ்சதா நீ நினைக்கக்கூடாது. என்னுடைய பாராட்டோ அல்லது தட்டிக் கொடுக்கறதோ இல்லாம தான் இதை நீ செஞ்சாகணும். இதுல எது முக்கியம்னா, கணக்குலே நீ என்ணிக்கையிலே பலமா இல்லாம வெறும் மனப்பாடத்தையோ நெட்டுருப் பண்றதையோ நம்பி இருக்க முடியாது. கணக்குக்கு அடிப்படை எண்ணிக்கை – கூட்டல், கழித்தல். ஒரு தர்க்க சிந்தனையோட சரியான வழிமுறையோட பண்றது ரொம்ப அவசியம். நீ என்ன செய்யறேன்றதை புரிஞ்சு செய்தாகணும். அப்பதான் சரியான விடை கிடைக்கும். Memory is a deadly enemy to mathematics. அதுலே சில சௌகரியங்கள் இருந்தாலும்- கணக்குன்னு வர்றப்ப நெட்டுரு போடறது ரொம்வ மோசமான விஷயம். நான் இதுலேயெல்லாம் திருப்தியாகலே. இது பத்தாது.
வித்யா : (நொறுங்கிப் போனவளாக) நோ…சார்…
ப்ரொபசர் : சரி. இந்தக் கணக்கை கொஞ்ச நேரத்துக்கு மறந்துடுவோம். நாம இப்ப வேறே ஒரு exerciseக்கு வருவோம்.
வித்யா : யெஸ் சார்
(அன்னம்மா பிரவேசிக்கிறாள். ப்ரொபசரின் பின் பக்கமாக நின்று)
அன்னம்மா : கேளுங்கோ…
ப்ரொபசர் : (கவனிக்காதபடி) இது ரொம்ப பரிதாபம்மா. நீ special mathematicsலே ரொம்ப அட்வான்ஸ்டா இருக்கே.
அன்னம்மா : இங்கே பாருங்கோ ஒரு நிமிஷம்.
ப்ரொபசர் : எனக்கென்னவோ சந்தேகம்தான். நீ எல்லா சப்ஜெக்ட்லேயும் டாக்டரேட் வாங்குவியான்னு.
வித்யா : Oh, what a shame Sir!
ப்ரொபசர் : அட்லீஸ்ட் நீ (அன்னம்மாவிடம்) கொஞ்சம் தனியா விடுங்களேன். இது என்ன இம்சை ? நீங்க சமையல் அறையிலே உங்க வேலையைப் பாருங்க. இல்லே எதையாவது தொலைச்சுட்டுத் தேடுங்க. (வித்யாவிடம்) ஆனால் உன்னை ஒரு partial ஆன Doctorateஆகவாவது தயார் செய்தாகணும்.
அன்னம்மா : ஒரு நிமிஷம்தான் கேளுங்களேன்.
ப்ரொபசர் : (நொந்தபடி) அடக்கண்றாவியே. என்னைக் கொஞ்சம் தனியாகத்தான் விடுங்களேன். என்ன எழவு வேணும் உங்களுக்கு ? (வித்யாவிடம்) உனக்கு நிஜமாகவே ஒரு partial Doctorate பண்ண்ணும்னு ஆசையிருந்தா என்னாலே உன்னை தயார் பண்ண முடியும். என்ன சொல்றே ?
வித்யா : தயவு செஞ்சு சார்…ப்ளீஸ்…
ப்ரொபசர் : The essentials of language study.. especially the comparative philology…
அன்னம்மா : என்னைக் கேட்டா எதுக்கு இந்த எழவெல்லாம்னு அப்போ புடிச்சி கத்திண்டிருக்க்கேன்.
ப்ரொபசர் : அன்னம்மா… நீங்க ரொம்பத்தான் உங்க எல்லை மீறிப் போயிகிட்டே இருக்கீங்க.
அன்னம்மா : எல்லாத்தையும் விட்டு இந்த philology சனியன் என்னத்துக்கு ? இருக்கறதிலேயே மோசமான விஷயம் அதுதாம்பேன்.
வித்யா : (ஏளனமாக சிரித்தபடி) மோசமான விஷயமா ? Philology என்ன ஒளர்றீங்க ?
ப்ரொபசர் : (அன்னம்மாவிடம்) This is too much. தயவுசெய்து உள்ளே போங்க.
அன்னம்மா : நல்லது. ரொம்ப நல்லது. நான் போறேன். ஆனால் நான் உங்களை எச்சரிக்கை பண்ணலே, ஞாபகப் படுத்தலேன்னு அப்புறம் புலம்பப்படாது. சொல்லிட்டேன்.
ப்ரொபசர் : அன்னம்மா… நான் குழந்தை இல்லே, எனக்கு 21 வயசாகி 30 வருஷம் ஆகுது.
வித்யா : சரியா சொன்னீங்க சார்.
அன்னம்மா : எனக்கென்ன, போறேன். வேலியிலே போற ஓணானை எங்கேயோ எடுத்து விட்டுக்கறேள். அப்புறம் கெடந்து கொடையறது கொடையறதுன்னு வீடெல்லாம் விழுந்து பிரளப்படாது. ஆமாம், சொல்லிட்டேன்.
(உள்ளே செல்கிறாள்)
ப்ரொபசர் : (வித்யாவிடம்) என்ன ஆரம்பிக்கலாமா ?
வித்யா : ப்ளீஸ்… சார்.
ப்ரொபசர் : நான் எழுதி தயார் பண்ணி இருக்கிற இந்தக் குறிப்புகளை நீ ரொம்ப கவனமா கேட்டு மனசுலே பதிய வைக்கணும்.
வித்யா : கண்டிப்பா சார்.
ப்ரொபசர் : இந்த வரப்போற பத்து நிமிஷத்துலே comparative and linguistic philology of Tamil language பத்தி தெரிஞ்சுக்கப் போறே.
வித்யா : வாவ்…சூப்பர் சார் (படபடவெனக் கை தட்டுகிறாள்)
ப்ரொபசர் : Silence. என்ன இது அல்பத்தனமா ?
வித்யா : I am sorry Sir.
ப்ரொபசர் : அமைதியா இரு.
(மிகவும் தீவிரமடைகிறார். புத்தகக் குவியல்களின் நடுவில் பரபரப்புடன் தேடி ஒரு மிகப்பிரம்மாண்டமான காகிதச்சுருள் ஒன்றை எடுக்கிறார். எடுத்து பரபரப்புடன் தேடி மிகைப்படுத்தப்பட்ட நாடகத் தொனியில் வாசிக்கிறார்.)
இப்போ திராவிட மொழிகள் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.
வித்யா : சார். மொழியின் தோற்றத்திலிருந்து போகலாமா ? Origin of languages…
ப்ரொபசர் : அதுக்கு இந்தச் சுருள் பத்தாது. இப்பத்துக்கு உன் டாக்டரேட்லே concentrate பண்ணுவோம். Don’t try to blow your too little knowledge. O.K.?
(ப்ரொபசர் காகிதச் சுருளை அமைதியாக கீழே விட்டுக்கொண்டே இருக்கிறார். வித்யா பொறுமை இழக்கிறாள். ப்ரொபசர் கண்டுபிடித்து விடுகிறார்)
ப்ரொபசர் : ம்… வட இந்தியாவில் பிராகிருதம், பாலி முதலிய மொழிகள் செல்வாக்குப் பெற்ற பிறகு பழந்திராவிட மொழி தென்னிந்திய அளவில் குறுகிவிட்ட்து. காலப்போக்கில் இந்தியாவிலும் ஆட்சி மாற்றம், ஆறு மலைகளின் எல்லை வரையறை முதலான காரணங்களால் ஒரு பகுதியில் வாழ்ந்த திராவிட மக்கள் பேசிய மொழிக்கும், பிற பகுதியினரின் மொழிக்கும் இடையே வேற்றுமை வளர்ந்தது. போக்குவரத்துக் குறைந்த அந்தக் காலத்தில் வேற்றுமை ஏற்படுவது எளிது. அதனால் தெற்கே இருந்தவர்கள் பேசிய மொழி தமிழ் என வேறுபட்ட்து. திருப்பதி மலைக்கு வடக்கே வாழ்ந்த மக்கள் பேசிய மொழி தெலுங்கு எனப்பட்டது.
மைசூர்ப் பகுதியில் பேசிய திராவிட மொழி கன்னடம் எனப்பட்டது. தென்மேற்கே கேரளத்தில் இருந்தவர்கள் மொழி மலையாளம் என அறியப்பட்டது. இம்மொழிகளைக் குறிக்கும் திராவிடம் என்ற சொல் பிற்காலத்தில் ஏற்பட்டது. அது தமிழ் என்ற சொல்லின் திரிபே. தமிழ், தமிள, த்ரமிள, த்ரமிட, த்ரபிட, திராவிட என்று திரிந்தமைந்த சொல்.
(வித்யா மிகப் பலமாக இருமுகிறாள். ப்ரொபசர் படிப்பது தடைப் படுகிறது. அவர் எரிச்சலுடன் நிமிர்கிறார்.)
ப்ரொபசர் : பார் இப்போதான் நீ கவனமா கேக்கணும். இருமலோ தும்மலோ அல்லது எது வந்தாலும் பலமா அடக்கிக்கணும். ஏன்னா இது உன் டாக்டரேட்டுக்கு முக்கியமான விஷயம்.
வித்யா : எஸ் சார்.
ப்ரொபசர் : சரி. நாம இப்போ பொதுவான விஷயத்துலேயே அதிகமா கவனம் செலுத்த வேண்டாம். கொஞ்சம் அட்வான்ஸ்டா முன்னேற முயற்சி எடுப்போமா ?
வித்யா : (வருத்த்த்துடன்) கண்டிப்பாக சார்.
ப்ரொபசர் : இல்லேன்னாலும் பரவாயில்லே, முன்னே சொன்ன சப்ஜெக்டுக்கு அப்புறம் வந்தாலும் வருவோம். யார் கண்டா ?
வித்யா : (கொஞ்சம் சந்தோஷத்துடன்) ஆமாம் சார்.
ப்ரொபசர் : கவனமா கேட்டுக்கோம்மா.. ஒவ்வொரு மொழியும் – இதை சாகற வரைக்கும் மறக்கக்கூடாது.
வித்யா : இல்லே சார். நீங்க செத்தாலும் உங்க கல்லறையிலே பொறிச்சு வைப்போம்.
ப்ரொபசர் : கருமம். இது ரொம்ப அடிப்படையான விஷயம். எந்த ஒரு மொழியும் பேசும் முறைகளால் வேறுபட்டது. அதாவது பல்வித ஒலிக் கலவைகளால் ஆக்கப்பட்டது.
வித்யா : Phonemes.
ப்ரொபசர் : ஆமாம். அதைத்தான் சொல்ல வந்தேன். ரொம்ப தெரியும்னு காமிச்சிக்க வேண்டாம். பொத்திக்கிட்டு நான் சொல்றதை கவனிச்சாப் போதும்.
வித்யா : சார்…
ப்ரொபசர் : குறுக்கே பேசாதே. (மீண்டும் காகிதச்சுருளில் தேடுகிறார். அன்னம்மா வருகிறாள்.)
அன்னம்மா : என்ன தேடுறேள் ..?
(ப்ரொபசர் பதில் சொல்லாமல் தேடுவதைத் தொடர்கிறார். வித்யா கிடைத்த இந்த சந்தர்ப்பத்தில் கண்ணயர ஆரம்பிக்கிறாள்.)
அன்னம்மா : கேக்கிறேன் இல்லே ? என்ன தேடறேள் ?
ப்ரொபசர் : அன்னம்மா நான் சொன்னா உங்களுக்குப் புரியாது. உங்க வேலையைப் பாருங்க.
அன்னம்மா : நான் பேஷாப் பாக்கறேன். ஒரு நிமிஷம் இங்கே பாருங்கோ. அஞ்சறைப்பொட்டியிலே பெருங்காயம் மடிச்சி வச்சிருந்த காகிதம். உங்க கையெழுத்தா இருந்தது. உங்களைக் கேட்டுட்டு கசக்கிப் போடலாம்னு பார்த்தேன்.
(ப்ரொபசர் வாங்கிப் பார்க்கிறார்.)
ப்ரொபசர் : ஆஹா…இதேதான். ரொம்ப நன்றி. நீங்க போகலாம்.
அன்னம்மா : கொழந்தே பேஷாப் பாடம் கேக்கறது. (போகிறாள். ப்ரொபசர் வித்யாவை உலுக்கி எழுப்புகிறார்)
ப்ரொபசர் : ம்…இப்ப கொஞ்சம் அட்வான்ஸ்டான விஷயம். எழுத்து எப்படி பிறக்குதுன்னு பார்ப்போம்.
நிறையுயிர் முயற்சி யினுள் வளி தரப்ப
எழுந்தணுத் திரளுங் கண்ட மூச்சி
மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின்
வெவ்வே றெழுத்தொலி யாய் வரல் பிறப்பே
அதாவது, இதை பொருள் விளங்க சுலபமா சொல்லணும்னா விகாரப்படாது தன்னியல்பினின்ற உயிர் மொழி வலென்னு முள்ளந் தோற்றி முயல உண்ணின்ற வள கடாவ ஆண்டு நின்ற ஒளியணு வீட்டம் விசைத் தெழுந்து நெஞ்சே மிடற உச்சியே மூக்கேயன்றியந் நான் கிடத்தையும் முதலடைந்து இதழே வரவே பல்லே அண்ணமே என்றிந் நாலிட்த்தையும் பின்பு அடைய இவற்று முயற்சி விகற்பத்தாற் பல்வேறு வகைப்பட்ட எழுத்தொலியாய்ப் புலப்படல் எழுத்துக்களது பிறப்பாம்…என்ன சுலபமா புரிஞ்சுதா ?
வித்யா : ரொம்ப ஈஃஸியா இருக்கு சார். இது பவணந்தி அடிகளோட நன்னூல்தானே சார் ?
ப்ரொபசர் : குறுக்கே பேசக்கூடாது. கேக்கணும். ஒலிகள் அவை பறக்கக் கிளம்பும் முன்னேயே அதன் இறகுகளைப் பிடித்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அவை செவிடன் காதில் ஊதிய சங்கின் கதியை அடைய நேரிடும். இப்போ நீயே பேச முயற்சி பண்ணா என்ன செய்வே ?
வித்யா : பேசுவேன்.
ப்ரொபசர் : நல்லாக் கவனி. கத்தை அடிவயத்துலிருந்து எழுப்பி உன் தொண்டைக்குக் கொண்டு வந்து நாக்கு வழியா காத்து பல்லை உரசி உதடு வழியா வழிய விடுறே இல்லியா ? அப்ப நாக்கு… பல்லு… உதடு…
வித்யா : (வேதனையுடன்) சார்…
ப்ரொபசர் : குறுக்கே பேசாதே
வித்யா : சார்…எனக்கு பல்லு வலி.
ப்ரொபசர் : இந்த சின்ன அல்பமான விஷயம் நீ தெரிஞ்சுக்கப் போற அதி பிரம்மாண்டமான விஷயத்துக்கு குறுக்கே வரப்படாது. கவனி.
வித்யா : இல்லே சார். பல்வலி உயிர் போகுது.
ப்ரொபசர் : உயிரே போனாலும் இதைக் கேட்டுட்டுத்தான் நீ சாகணும். இது ரொம்ப முக்கியமான விஷயம்.
வித்யா : (வேதனையுடன்) யெஸ் சார்.
ப்ரொபசர் : ம்..நான் என்ன சொல்லிக்கிட்டிருந்தேன் ? ம் … மொழி…சொல்…வார்த்தை..யெஸ். இப்ப தமிழ்லேயே பாரு. பழம் என்கிற வார்த்தை. ப… சொல்றப்ப என்ன பண்றே ?
வித்யா : சார்…எனக்கு பல் வலி.
ப்ரொபசர் : இப்ப உதடு பிரியுது. அதாவது வாய் திறக்கிற. ழ…இப்போ
வித்யா : பல்லு வலி… உயிர் போகுது.
ப்ரொபசர் : Don’t worry. ழ…ன்றப்ப உள்ளே ஏதோ இருக்கு இல்லேயா ?
வித்யா : பல்வலி…
ப்ரொபசர் : ம்…இப்போ ம் …ன்றே உதடு மூடுது. அதாவது வாய் மூடிக்குது. அப்ப ப…ழ…ம்… வாய்த்திறக்கிறே, வாய்க்குள்ளே போடுறே. வாயை மூடி முழுங்கறே. பழம் எப்படி ?
வித்யா : சார் எனக்குப் பல்வலி.
ப்ரொபசர் : நல்லா கவனி. Let us continue. அதே மாதிரி ஒலிக்கூட்டங்களால் அமைந்த சொல்- சொற்கூட்டால் அமைந்த வார்த்தைகள் மொழிக்கு மொழி மாறுபடும். இப்போ தமிழ்லே கடைக்குப் போய் வாங்கி வான்னு சொல்றோம். அதைக் கன்னட்த்துலே அங்கிடினல்லிந்த தகொண்டு பா…ன்னு சொல்றோம். தமிழ்லே வாங்கி வா. கன்னட்த்த்லே தகொண்டு பா. அப்படின்னா எடுத்துகிட்டு வா. அப்ப என்ன ஆகும் ?
வித்யா : கடைக்காரன் கட்டிப்போடு உதைப்பான் சார். எனக்குப் பல்வலி.
ப்ரொபசர் : நான் அதைச் சொல்லலே. வார்த்தைகளின் பொருள் எப்படி மாறுது பாத்தியா ?
வித்யா : எனக்குப் பல்வலி பிராணன் போகுது.
ப்ரொபசர் : பரவாயில்லே. இப்போ அதே மாதிரி என் தாய் மண் தமிழ் நாடு. இதை கன்னட்த்துலே எப்படி ட்ரான்ஸ்லேட் செய்வே ?
வித்யா : சார். தமிழ்நாடுக்கு கன்னட்த்துலே என்ன சார் ?
ப்ரொபசர் : தமிழ்நாடுக்கு கன்னடத்துலே கர்நாடகா, தெலுங்கிலே ஆந்திரா, மலையாளத்துலே கேரளா இப்படிப் போகுது புரியுதா ?
வித்யா : பல்வலி.
ப்ரொபசர் : இதப்பார்… நீ சரியா கவனிக்க மாட்டேங்குற. என்னோட ஆத்திரத்தைக் கிளப்ப முற்சி பண்றே. உனக்கு வேணும்னா I repeat உனக்கு வேணும்னா ஒரு மொழியின் வார்த்தையை இன்னொரு மொழியின் வார்த்தையோட எப்படி ஒப்பிட்டு அதோட ஒலி தொனியிலே இருக்கிற வித்யாசங்களை எப்படி அளவிடறதுன்னு நாம பார்ப்போம். ஆனா நீ சரியா கவனிக்கலே.
வித்யா : சார் எனக்கு பல்வலி.
ப்ரொபசர் : நான் சொன்ன மாதிரி ஒவ்வொரு மொழி பேசும் பிராந்தியத்துக்கும் அந்த மொழி பேசும் கலாச்சாரம் பண்பாடு இதனை சார்ந்து அந்த மொழியின் ஒலிக்கூட்டமைப்பு தனக்கான அடையாளம் கண்டு தன்னை நிறுத்திக் கொள்ளும்.
வித்யா : போதும் சார்… எனக்கு…
ப்ரொபசர் : பல்வலி. பல்லு.. பல்லு..பல்லு.. எல்லாத்தையும் கழற்றி கையிலே கொடுக்கப் போறேன். இப்ப இன்னொரு உதாரணம் – புதுவகை எழுத்துவாதிகள், பின் நவீனத்துவவாதிகள் எப்படி இதை அணுகுவாங்க. Magical realism ஆளுங்க எப்படி இந்த பிரச்னையை குழப்புவாங்க. Structuralist கோஷ்டி இதை எப்படி பார்க்கும். அதுக்கு புதுவகை எழுத்துன்னா என்ன ? பின்நவீனத்துவம்னா என்ன ? மேஜிகல் ரியாலிசம்னா என்னனு பார்க்கணும். ஒரு மொழியின் வார்த்தைகளை எப்படி கட்டுடைப்பது ? எப்படி பிளப்பது ?
வித்யா : ஐயோ என் பல்லு.
ப்ரொபசர் : மரியாதையா சும்மா இரு. இல்லே மண்டையைப் பிளந்துடுவேன்.
வித்யா : சொட்டை, செய்டா பாக்கலாம்.
(ப்ரொபசர் அவள் கையை வலுவாக முறுக்குகிறார்.)
ப்ரொபசர் : மரியாதையா கம்னு கிடக்கணும். கவனமா கேக்கணும். (தள்ளுகிறார்.)
வித்யா : (முனகுகிறாள்) பல் வலி.
ப்ரொபசர் : அப்புறம் பாஷையிலும் வர்க்க வித்யாசங்கள் அடிப்படையா இயங்கி செயல்பட ஆரம்பிச்சது என்ன ?
வித்யா : வர்க்க வித்யாசங்கள் ?
ப்ரொபசர் : ஆமாம். மேல்தட்டு வர்க்கத்துக்காரங்க சம்ஸ்கிருதத்தை தேவ பாஷையா ஏத்துகிட்டப்ப கீழ் வர்க்கத்துக்காரங்க தமிழ்லே பேசினாங்க. தேவபாஷை இங்கிலீஷா மாறினப்போ கீழ் வர்க்கத்துக்காரங்களும் தமிழை நீச பாஷையா ஒதுக்க ஆரம்பிச்சாங்க. என்ன புரியுதா ?
வித்யா : புரியுது..புரியுது..(உரக்க) நான் என்ன பண்ண்ணும் ?
ப்ரொபசர் : இவ்வளவு கூச்சல் கூடாது. (கோபமாக) இப்ப என்ன நடக்குது ? தமிழ்நாட்டு நாய்கூட இங்கிலீஷ்லே கூப்பிட்டாத்தான் வாலாட்டுது. அம்மா மம்மி ஆயாச்சு. அப்பா டாடி ஆயாச்சு. தமிழ்லே எவ்வளவு அருமையான வார்த்தைகளை இழந்துக்கிட்டு வர்றோம் தெரியுமா ? கால் ஆட்டறதை நிறுத்து. மரியாதையா நான் சொல்றதை கவனமா கேக்கணும்.
வித்யா : எனக்குப் பல்வலி.
ப்ரொபசர் : No Manners. இப்படியே நாம தொடர முடியாது….முடியாது…முடியாது…
வித்யா : சாரி சார். நான் கவனமா கேட்டுக்கிறேன்.
ப்ரொபசர் : சரி. இப்போ எல்லா பாஷைகளையும் அடையாளம் தெரிஞ்சிக்க முக்கியமா வேண்டியது அந்த பாஷைக்கான சரியான உச்சரிப்பைத் தெரிஞ்சுக்கறது. அதுக்கு நல்ல பயிற்சி வேணும். இன்னொரு முக்கியமான விஷயம். உச்சரிப்பு மாறினா அந்த வார்த்தையோட அர்த்தமே மாறிப்போகிற ஆபத்தும் உண்டு. உதாரணத்துக்கு மதுரையில் என்ன நடந்தது? பாண்டியன் நெடுஞ்செழியன் கோவலனை “கொண்டு வான்”னுதான் சொன்னான். மதுரை சிப்பாய்கள் அவங்க ஊர் உச்சரிப்பு பழக்கத்துலே கொன்னுட்டு வந்துட்டாங்க. சிலப்பதிகாரக் கதையே மாறிப்போச்சு. இத்லே இருந்த என்ன தெரியுது ? அதனாலே பாஷையின் சரியான உச்சரிப்பை சரியா தெரிஞ்சிக்கறது பல விபத்துகள்லேருந்து தப்ப உதவி பண்ணும். இப்ப சரியான உச்சரிப்பை பழக நாம பழைய methodஐயே உபயோகிப்போம். இப்ப நான் கத்தி-என்ற வார்த்தையை எல்லா மொழியிலும் உனக்கு உச்சரிக்க சொல்லித்தர்றேன் சரியா ?
வித்யா : உங்க இஷ்டம் சார்…
ப்ரொபசர் : (அன்னம்மாவைக் கூப்பிடுகிறார்) அன்னம்மா … அன்னம்மா…எங்கே போய்த் தொலைஞ்சீங்க. (உள்ளே செல்கிறார். வித்யா தனியாக அமர்ந்து பல்வலியின் வேதனையுடன் வெறித்துப் பார்க்கிறாள். வெளியில் இருந்து ப்ரொபசரின் குரல்) அன்னம்மா நான் கரடியா கத்தறேனில்லே. கூப்பிட்டா வரமாட்டேன்றீங்க. இந்தப் பொண்ணுக்கு ஒரு எழவும் புரியமாட்டேங்குது.
அன்னம்மா : இப்படியெல்லாம் டென்ஷன் ஆகாதிங்கோ. இது எதுல போய் முடியும்னு உங்களுக்கே தெரியும்லே. இவ்வளவு தூரம் போகாதீங்கோ. எதாவது ஆகப்போகுது. தயவு செய்து நிறுத்திக்கோங்கோ.
ப்ரொபசர் : எனக்கு எப்ப நிறுத்தணும்னு தெரியும்.
அன்னம்மா : எப்பவும் இப்படித்தான் சொல்வேள். ஆனா நிறுத்தினதில்லை.
வித்யா : ஐயோ என் பல்வலி.
அன்னம்மா : என்ன சொன்னேன் ? பாருங்கோ இதுதான் ஆரம்பம்.
ப்ரொபசர் : என்ன உளர்றீங்க ?
வித்யா : ஆமாம். என்ன உளர்றீங்க ? எனக்குப் பல்வலி உயிர் போகுது.
அன்னம்மா : பார்த்தேளா ? இதுதான் என்ன நடக்கப் போற்துங்கறதுக்கான மோசமான அறிகுறி. எனக்கெதுக்கு வம்பு. நான் போறேன். (உள்ளே போகிறாள்.)
ப்ரொபசர் : அறிகுறி ? What non-sense? போகாதீங்க. நான் உங்களைக் கூப்பிட்டது கத்தியைத் தேடிக் கொடுக்க, இங்கிலீஷ், தமிழ், கன்னடம், தெலுங்கு மலையாளக் கத்திகளைத் தேடி கொடுக்க.
அன்னம்மா : என்ன எழவு இது ? அதுகளை நான் எங்கே போய்த் தேடுவேன் ?
(ப்ரொபசர் கடுப்பாகிறார். உடலைக் கோபமாக விறைத்துக் கொள்கிறார். திடீரென ஞாபகம் வந்தவராக புத்தகக் குவியலுள் தேடி மானசீகமான கத்தி ஒன்றை உருவி எடுக்கிறார். அதைக் கையில் பிடித்து இடமும் வலமும் வீசிப் பார்க்கிறார்.)
ப்ரொபசர் : ஹா. கிடைச்சாச்சு. ஆனால் ஒரு கத்திதான் கிடைச்சிருக்கு. இதையே நான் எல்லா பாஷைக்கும் உபயோகப்படுத்திக்குவேன். வித்யா, நீ பண்ண வேண்டியது என்னன்னா கத்தி என்ற வார்த்தையை ஒவ்வொரு பாஷையிலும் சரியான உச்சரிப்போடு சொல்லப் பழகணும். கத்தியையே உன்னிப்பா கவனிச்சு நீ உச்சரிக்க வேண்டிய பாஷையை கற்பனை செய்துக்கணும்.
வித்யா : எனக்குப் பல்வலி.
ப்ரொபசர் : (கவனிக்காமல்) எங்கே சொல்லு…K. ஜாக்ரதையா கவனி. பார்வையை ஒரே இடத்துலே பதிச்சிக்கோ…
வித்யா : K.
ப்ரொபசர் : N.
வித்யா : N.
ப்ரொபசர் : I.
வித்யா : I.
ப்ரொபசர் : F.
வித்யா : F.
ப்ரொபசர் : E.
வித்யா : E.
ப்ரொபசர் : Knife.
(வித்யா ஒன்றும் புரியாத்து போல் விழிக்கிறாள்.)
ப்ரொபசர் : Knife.
வித்யா : (தயங்கியவாறு) Ka nife
ப்ரொபசர் : என்ன பண்றே நீ ? சரியா சொல்லு…Knife.
வித்யா : Ka nife.
ப்ரொபசர் : (பொறுமையாக) இதோ பார்…K silent அதாவது Kக்கு எந்த உச்சரிப்பும் கிடையாது. Nக்குத்தான் பிரதானம். K காத்துலே கரைந்து உன் உதடு பல்லுலே உரசி பல்லிடுக்கு வழியா காத்தை உதட்டை அழுத்தி வெளியேத்தணும். பாரு Knife.
வித்யா : ஐயோ போதும் எனக்கு. பல்லு வலிக்குது. தலை வலிக்குது. மார் வலிக்குது. Ka nife.
ப்ரொபசர் : Knife…கத்தி…
வித்யா : ஐயோ…காது உடம்பெல்லாம் வலி….த்…தி…
ப்ரொபசர் : நல்லா கவனி க…த்…தி…க…த்…தி…Knife.
வித்யா : இப்போதானே சொன்னீங்க K silentனு
ப்ரொபசர் : இங்கிலீஷ்லே K silent. தமிழ்லே க சைலண்ட் ஆகாது. கத்தி…Knife
வித்யா : Gathy
ப்ரொபசர் : அழுத்தி…கத்தி
வித்யா : ஐயோ காதே பிஞ்சு போகும்போல இருக்கே. என்ன கர்ண கடூரமான குரல்…கடவுளே !
ப்ரொபசர் : சொல்லு…கத்தி.
வித்யா : முடியாது.. எனக்குக் காது வலி.
ப்ரொபசர் : அறைஞ்சேன்னா காது பிஞ்சி போயிடும். அப்புறம் வலியே இருக்காது.
வித்யா : எங்கே அறைடா பார்க்கலாம்…
ப்ரொபசர் : இதோ பார், கவனத்தை சிதற விடாதே. எங்கே சொல்லு கத்தி.
வித்யா : (வலி கலந்த கிண்டலில்) இது என்ன துளுவா ?
ப்ரொபசர் : உன் இஷ்டப்படி..ஆமாம். துளுன்னே வச்சிக்கோ. நமக்கு நேரம் கிடையாது. சீக்கிரம் கற்றுக்கோ. (வித்யா வலியால் துடிக்கிறாள். அவள் படும் இம்சை அதிகரிக்கிறது.)
வித்யா : ஐயோ…
ப்ரொபசர் : திரும்ப சொல்லு.. கத்தி…Knife, Knife.
வித்யா : ஐயோ என் தலை. (ஒவ்வொரு அங்கமாக வலியுணர்ந்து தடவிக் கொள்கிறாள்.)
ப்ரொபசர் : (குழந்தையின் குதூகலத்துடன்) கத்தி…கத்தி…கத்தி….
(ப்ரொபசர் மானசீகமான கத்தியை குழந்தையைப்போல் ஆட்டி விளையாடுகிறார். அவர் ஆட்டம் குழந்தையின் நடன் அசைவை ஒத்துள்ளது.) கத்தி…கத்தி…(வித்யா விலகிப் பின்னால் நகர்கிறாள்.) எங்கே சொல்லு. கத்தி…க…த்…தி…கத்தி…
வித்யா : எனக்கு உடம்பெல்லாம் வலி. என் தொண்டை என் கழுத்துலே…என் மார்லே.. ஐயோ Gaத்தி
ப்ரொபசர் : கத்தி…கத்தி…கத்தி…
வித்யா : ஐயோ என் தொடை என் இடுப்பு…Gaத்தி.
ப்ரொபசர் : அழுத்திச் சொல்லு. க…த்…தி…கத்தி…கத்தி…
வித்யா : ஐயோ என் இடுப்பு..என் தொடை…கடவுளே உயிர் போகுதே. என்ன வேணும் ?
ப்ரொபசர் : கத்தி.
வித்யா : Gaத்தி.
ப்ரொபசர் : இன்னும் அழுத்தமா…கத்தி.
வித்யா : கடவுளே Gaத்தி.
ப்ரொபசர் : இன்னும் வலுவா… கத்தி.
வித்யா : ஐயோ Gaத்தி.
ப்ரொபசர் : (வித்யாவை கீழே தள்ளி) இன்னும் அழுத்தமா வலுவா ஆழமா இப்படி கத்தி (கத்தியை அவள் வயிற்றில் சொருகுகிறார். வித்யா அலறிக் கீழே சாய்கிறாள்.)
வித்யா : (அலறியவாறு) Gaத்தி.
ப்ரொபசர் : (மீண்டும் குத்தி) அழுத்தமா கத்தி.
(ப்ரொபசர் நாற்காலியில் தளர்வுடன் அமர்கிறார். பிறகு மெல்ல எழுந்து அவளருகில் செல்கிறார். மீண்டும் ஓங்கி குத்து. அவர் உடல் நடுங்குகிறது.)
ப்ரொபசர் : (பதற்றத்துடனும் நடுக்கத்துடனும்) இந்த முண்டைக்கு இப்படித்தான் வேணும். இப்பத்தான் relief ஆ இருக்கு. (தள்ளாடியபடி நாற்காலியில் அமர்கிறார். வித்யாவின் பிணத்தை வெறித்துப் பார்க்கிறார். பிறகு கையில் இருக்கும் கத்தியை வெறித்துப் பார்க்கிறார். பின் பிரமையிலிருந்து விடுபட்டவரைப் போல துக்கமாக குரலில்) ஐயையோ. என்ன பண்ணிட்டேன். இப்போ என்ன ஆகும் ? கண்ணு…பாப்பா…வித்யாக்குட்டி…எழுந்திரிம்மா.(கையில் இருக்கும் மானசீகக் கத்தியை என்ன செய்வது என்று விளங்காதவராக) பாடம் முடிஞ்சதும்மா. எழுந்திரு. Come on. Get up. எழுந்து வீட்டுக்குப் போம்மா. என் tuition fee கூட அப்புறமா நீ குடுக்கலாம். (மௌனம்) ஐயோ…செத்துப் போயிட்டியா ? ஐயையோ..அன்னம்மா…அன் னம்மா… சீக்கிரம் வாங்க…(அன்னம்மா பிரவேசிக்கிறாள்.) வேண்டாம் வராதீங்க. நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். நீங்க வரவேண்டாம். புரியுதா ? வரவேண்டாம்.
(அன்னம்மா பிணத்தையும் ப்ரொபசரையும் வெறித்துப் பார்க்கிறாள்.)
ப்ரொபசர் : வேண்டாம் அன்னம்மா வேண்டாம்.
அன்னம்மா : இப்போ உங்களுக்கு சந்தோஷம்தானே ? உங்க கிட்டேயிருந்து யதேஷ்டமா பாடம் கத்துண்டாச்சு இல்லியா ?
ப்ரொபசர் : (மானசீக்க் கத்தியை பின்னால் மறைத்தவாறு) ஆமாம். பாடம் முடிஞ்சது.
அன்னம்மா : (கடுமையாக) ரொம்ப சந்தோஷம்.
ப்ரொபசர் : அன்னம்மா, நானில்லே என்னை நம்புங்க. சத்தியமா நானில்லை.
அன்னம்மா : அப்புறம் வேரே யாரு ? நானா ?
ப்ரொபசர் ; தெரியாது. ஒருவேளை…
அன்னம்மா : பிரம்ம ராக்ஷஸ் வந்துட்டுப் போனானோ ?
ப்ரொபசர் : இருக்கலாம். ஆனா நானில்லை.
அன்னம்மா : இது நடக்கறது இன்னிக்கு நாப்பதாவது தடவை. தினம் தினம் இதே கதை. உங்களுக்கு வெக்கமாயில்லை. இப்படியே போனா ஸ்டூடண்ட்ஸே யாரும் மிஞ்சி இருக்கமாட்டா. அதுவும் ஒரு வகைக்கு நல்லதுதான்.
ப்ரொபசர் : (வெறுப்புடன்) இது என் தப்பு இல்லே. அவளாலே எந்தப் பாட்த்தையும் கிரகிச்சுக்க முடியலை. கத்துக்க முடியலை. ஒரு ஒழுக்கமே இல்லை. படுமோசமான மாணவியா இருந்தா. அவ கத்துக்க இஷ்டமும் படலை.
அன்னம்மா : (பிணத்தின் அருகில் உட்கார்ந்து சோதிக்கிறாள்) பொய். அநியாயத்துக்கு புளுகாதீங்கோ. இது அசட்டாளத்தனம்.
ப்ரொபசர் : (கத்தியைப் பின்னால் வைத்தவாறு அவளை நெருங்குகிறார்.) இதோ பார். நீ உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போகலாம்.
அன்னம்மா : (திடுக்கிட்டு எழுந்தபடி) என்ன ?
ப்ரொபசர் : எனக்கு பாடம் சொல்லித்தர வேண்டாம்.
அன்னம்மா : என்ன ?
ப்ரொபசர் : நீ எனக்கு பாடம் சொல்லித்தர வேண்டாம். (கத்தியை வேகமாக ஓங்குகிறார். அவள் விலகி அவர் கையைப் படித்து முறுக்கித் த்ள்ளி விடுகிறாள். அவர் கத்தியை நழுவவிட்டு தலைகுனிந்து நிற்கிறார்.) என்னை மன்னிச்சுக்கோங்க…
அன்னம்மா : கொலைகாரப்பாவி. சண்டாளா..என் னையே கொல்லப் பார்த்தீரே…நான் ஒண்ணும் உம்மகிட்டே பாடம் படிக்க வரம் வாங்கி வந்த ஸ்டுடண்ட் இல்லே.
(அவர் சட்டைக் காலரைக் கொத்தாகப் பிடித்து உலுக்குகிறாள். அவர் குழந்தையைப்போல தன்னை தற்காத்துக்கொள்ள முயற்சிக்கிறார்.)
அன்னம்மா : மரியாதையா அந்தக் கத்தியைக் கீழே போடுங்கோ. (வைக்கிறார்.) நான் அப்போ பிடிச்சே அடிச்சிண்டே இருக்கேன். இந்தக் கணக்கு எழவு வேண்டாம். Philology சனியன் வேண்டாம். விட்டுத்தள்ளுங்கோன்னு. கேட்டேளா ? வாய் கிழிஞ்சதே முழம் முழமா. என்ன ஆச்சு, கொலையிலேன்னா இழுத்து விட்டிருக்கு ?
ப்ரொபசர் : ஆமாம், நீங்க அப்பவே சொன்னீங்க.
அன்னம்மா : ஆமாம், இப்போ சொல்லுங்கோ. அப்போ எங்கே போச்சு இந்த ஞானம் ?
ப்ரொபசர் : எனக்கு அப்ப புரியலே. நீங்க Philology மோசம்னு சொன்னப்ப அது கத்துக் குடுக்கறதோ, கத்துக்கறதோ கஷ்டம்கிற அர்த்த்த்துலே நீங்க சொல்றீங்கன்னு நினைச்சேன்.
அன்னம்மா : பொய். அசட்டாளம். என்னை முட்டாளாக்க முடியாது. நீர் என்ன சாதாரண கிருத்திருமம் புடிச்ச ஜென்மமா ?
ப்ரொபசர் : (அழுதுகொணடே) நான் அவளை வேணும்னு கொல்லலே.
அன்னம்மா : இப்படிப் பண்ணிட்டமேன்னு வருத்தமாவது படறீரா ?
ப்ரொபசர் : சத்தியமா.. உங்க மேலே ஆணையா.
அன்னம்மா : சரி விடுங்கோ. இப்போ எண்ண பண்ணியாகணும்னு பார்ப்போம். ஆனா நீங்க திரும்பத் திரும்ப இதையே பண்ணப்படாது சொல்லிட்டேன்.
ப்ரொபசர் : ஆமாம். கண்டிப்பா..ஆனா இப்ப என்ன செய்யறது அன்னம்மா ?
அன்னம்மா : என்ன பண்றது ? இன்னும் கொஞ்சம் பிலா லஜி கத்துக் குடுங்கோ. ஏதாவது பண்ணித்தான் ஆகணும். ஆனா ஏற்கனவே இருக்கிற முப்பத்தொம்பது பொணங்களை என்ன பண்றது ? இதோட நாப்பதாச்சு. சரிசரி. எனக்கு வேண்டிய சாஸ்திரிகள் ஒர்த்தர் இருக்கார். அவருக்கு ரொம்ப வேண்டிய வெட்டியான் ஒர்த்தன் இருக்கான். அவளை வச்சு காரியத்தைக் கமுக்கமா முடிக்க வேண்டியதுதான். வெட்டியான் கிட்டே சொல்லி நாற்பது மாலைகள் ரகசியமா வாங்கி வரச்சொல்ல வேண்டியதுதான்.
ப்ரொபசர் : Thank you, அன்னம்மா, Thank you very much.
அன்னம்மா : அதெல்லாம் இருக்கட்டும். வெட்டியான் கூட வேண்டாம். சாஸ்திரிகளும் வேண்டாம். அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். ஏன் நீங்க ப்ரொபசர்தானே ? உங்களுக்கு எழவு மந்திரம் கண்டிப்பா தெரிஞ்சிருக்கணுமே ? மாலையையும் நீங்களே வாங்கி வந்துடுங்கோ.
ப்ரொபசர் : மாலையெல்லாம் வேண்டாம். இவ ட்யூஷன் ஃபீஸ் கூட கொடுக்கலே.
அன்னம்மா : அது சரி. பரவாயில்லே. பொணத்தை துணியாலே மூடுங்கோ. (Convocation gownஐ எடுத்துப் போர்த்துகிறார். தொப்பியை எடுத்து வைக்கிறார்.)
ப்ரொபசர் : அஜாக்ரதையா இருந்தா நேரா ஜெயிலுக்க்குப் போக வேண்டியதுதான். மொத்தம் நாற்பது பொணங்கள். யாராவது இதெல்லாம் என்ன்ன்னு கேட்டா என்ன பதில் சொல்றது ?
அன்னம்மா : நீங்களா வாய் கொடுத்து ஏன் மாட்டிக்கப் போறேள் ? அப்படியும் யாராவது கேட்டால் ஒண்ணுலில்லை. புஸ்தகங்களையெல்லாம் ஓலைப்பாய்லே சுருட்டி வச்சிருக்கோம்னு சொல்ல வேண்டியதுதான். இன்னொண்ணு. பக்கத்துலே இருக்கறவாளுக்கும் இதெல்லாம் பழக்கமாயிடுத்தே.
ப்ரொபசர் : அது சரி.
(அன்னம்மா உள்ளேயிருந்து ஒரு துண்டு எடுத்துக் கொண்டு வந்து ப்ரொபசரின் தோள்பட்டையில் குறுக்காகப் போர்த்துகிறாள். ஒரு பேட்ஜை குத்தி விடுகிறாள்.)
ப்ரொபசர் : ரொம்பப் பயமாயிருந்தா இதை போட்டுண்டு வெளியே போங்கோ. இது ரொம்ப பாதுகாப்பான கட்சிக் கவசம். இது இருந்தா எதுக்கும் பயப்பட்த் தேவையில்லை.
ப்ரொபசர் : ரொம்ப ரொம்ப நன்றி அன்னம்மா. உங்களுக்குத்தான் எவ்வளவு விசுவாசம் ? உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே.
அன்னம்மா : அதெல்லாம் இருக்கட்டும். ஒரு கை புடிங்கோ.
ப்ரொபசர் : பார்த்து அன்னம்மா, பாவம். வலிக்கப் போகுது.
(வித்யாவை தூக்கிக்கொண்டு உள்ளே மறைகிறார்கள். மேடையில் வெளிச்சம் குறைகிறது. வெற்று மேடை. அழைப்பு மணி ஒலிக்கிறது. அன்னம்மா வெளியே வருகிறாள். ஒரு பெண் நிற்கிறாள்.)
அன்னம்மா : வர்றேன் இல்லே. என்ன வேணும் ? ஷாம்பூ விக்க வந்தியா ?
மாணவி : இல்லை.
அன்னம்மா : வேக்யூம் க்ளீனரா ? காபி மேக்கர் விக்க வந்தியா…வேணாம். நான் இருக்கேன்.
மாணவி : இல்லை.
அன்னம்மா : சானிடரி நாப்கின்னா ? வேண்டாம்.
மாணவி : ஐயோ ஆண்ட்டி இல்லே. நான் ப்ரொபசர் ஞானத்தைப் பார்க்க வந்திருக்கேன். நான் அவருடைய புது ஸ்டூடண்ட்.
அன்னம்மா : நீதானா அது ? இதை மின்னாடியே சொல்றதுக்கென்ன ? சரி. உள்ளே வா. அவரைக் கூப்பிடுறேன்.
(அன்னம்மா உள்ளே செல்கிறாள். மாணவி உட்கார்ந்து புத்தகம் புரட்ட ஆரம்பிக்கிறாள். திரை விழுகிறது.)
நன்றி : காலச்சுவடு வெளியீடு
தட்டச்சு உதவி : தி.ந. இளங்கோவன்
புகைப்படத்துக்கு நன்றி:ஈடு