நிலவொளியில் ஒரு குளியல் – 25

8

ஸ்ரீஜா வெங்கடேஷ்

Srija_venkateshஇந்த வாரத்திற்கான பத்தியை என்னுடைய சொந்த கிராமத்துக்குப் பக்கத்தில் இருந்து எழுதுகிறேன். கோடை விடுமுறை விட்டவுடன் கூடு தேடிச் செல்லும் பறவை போல, மனம் சொந்த ஊரைத் தேடி ஓடுகிறது. சென்னையின் மாசு நிறைந்த வெப்பத்திற்கும் கனிவென்பதே சிறிதும் இல்லாத பேச்சுகளையும் கேட்டுக் கேட்டுப் புண்ணான என் காதுகளுக்கும் எங்கள் நெல்லைத் தமிழ் அமுதமாக இருக்கிறது.

இந்த முறை, எங்கள் குல தெய்வம் கோயிலுக்குப் போயிருந்த போது, என் தந்தையார் தன் இள வயது நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொண்டார். அவர் முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த குடும்பத்தில் பிறந்தவர் ஆதலால் அவருடைய இள வயது அநுபவங்கள் என்னுடையதை விட வித்தியாசமாகவும் மகிழ்ச்சி நிரம்பியதாகவும் இருந்ததாகத் தெரிகிறது. இந்த வாரப் பத்தி முழுக்க அவரது மலரும் நினைவுகளாகவே இருக்கும்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் இன்னும் பல பொறுப்பு மிகுந்த பதவிகள் வகித்த அவருடைய எளிமைக்கு அவரது குழந்தைப் பருவ வாழ்க்கையே காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. அவரது அந்த நாட்களைக் கேட்கையில் கால வாகனத்தில் ஏறி நாமும் அந்த நாட்களுக்குச் சென்று விடலாமா என்ற ஆசை தோன்றுகிறது.

அவரது கிராமம், இந்திய வரைபடத்தை எவ்வளவு பெரிது படுத்தினாலும் ஒரு கடுகு அளவே இருக்கும் ஒரு குக்கிராமமான பாப்பாங்குளம். இன்னமும் அது வெகுவாக வளர்ச்சி அடையவில்லை என்றால், சுமார் 50 வருடங்களுக்கு முன் அது எப்படி இருந்திருக்கும் என்பதை வாசகர்களின் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.

பேருந்து வசதி, சாலை வசதி என்று எதுவும் இல்லாவிட்டாலும் இயற்கையின் ஆசி அந்த அழகிய கிராமத்துக்கு மிக அதிகமாக இருந்தது. இராம நதியும் கருணை (கடனா) நதியும் இணைந்து எந்தப் பருவத்திலும் சலசலத்து ஓடும். கடுங்கோடைகளில் ஆற்றில் மணலைத் தோண்டி ஊற்று உண்டாக்கி, அந்தத் தண்ணீரில்தான் குளியல். குழந்தைகளாக இருந்தாலும் அவரவர் உடைகளை அவரவரே துவைத்துக்கொள்ள வேண்டியது. நதியில் தண்ணீர் வெள்ளம் போலப் போகும் நாட்களில் இவர்களுக்குக் கும்மாளம்தான்.

Alwarkurichi

ஆற்றின் நடு ஆழம் வரை சென்று குதித்து, ஆடி மகிழ்ந்து, நல்ல பசியோடு வீடு சென்றால், பழைய சோறு சட்டிகளில் இவர்களுக்கெனக் காத்திருக்குமாம். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் அன்று மட்டும் பழையது கிடையாது. பதிலாக இட்லி கிடைக்கும். அந்த இட்லியும் பொடியும் அத்தனை ருசியாக இருக்குமாம் என்ன இருந்தாலும் ஆட்டுரலில் அரைத்த மாவல்லவா?

அந்தப் பழைய சோற்றுக்கு முந்தைய நாள் செய்த குழம்பு அல்லது ஊறுகாய் தொட்டுச் சாப்பிட்டுவிட்டு, பள்ளிக்குக் கிளம்புவார்களாம். பள்ளி உள்ளூரில் கிடையாது. 5 கி.மீ தூரத்திலுள்ள கடையம் என்ற ஊரில்தான் உண்டு. என் தகப்பனாரின் அப்பா மிகவும் வசதியானவர் என்பதால் என் தகப்பனரும் அவர் சகோதரர்களும் பள்ளி செல்ல மாட்டு வண்டி என்ற ஆடம்பரம் அவர்களுக்கு வாய்த்தது. மற்ற சிறுவர்கள் நடந்துதான் வருவார்களாம். அவ்வளவு தூரம் நடந்து சென்று படிக்க வேண்டியிருப்பதால் பெண்கள் அநேகமாகப் படிக்க வர மாட்டார்களாம்.

இவர்கள் வண்டியில் சென்றாலும் மதிய உணவுக்கு இட்லி அல்லது பழைய சோறு தான். அதை என் அப்பாவின் வாய் மொழியாகவே சொல்வதென்றால் “காலையில பழையது சாப்பிட்டா, கையில இட்லி. காலையில இட்லி சாப்பிட்டா கையில பழையது. நாங்க பெரும்பாலும் பழையது கையில கொண்டு போறதைத் தவிர்த்திடுவோம். ஏன்னா மதியம் அது நொசநொசன்னு ஆகிடும்”.

அதைக் கேட்டு எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. தினமும் வரிசை மாறாமல் அதே மெனு என்றால் அலுத்துப் போகாதா? இதே கேள்வியை அப்பாவிடமும் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இதோ “வேறு வகையான உணவுகள் எங்களுக்கு பழக்கமில்லாததால் அதன் குறைவு எங்களுக்குத் தெரியவேயில்லை. மேலும் பள்ளி விட்டு, சாயுங்காலம் திரும்பியதும் சுடுசோறு, குழம்பு, பொரியல் எல்லாம் வைத்துச் சாப்பிடுவோமே. அதற்கு மேல் என்ன வேண்டும்?”

இந்த ஒரு பதிலில் அவர்களது எளிய உணவு முறையே அடங்கியிருக்கிறது. இன்று நம் குழந்தைகள் சமோசா, பர்கர், பிஸ்ஸா என்று பல வகையான உணவுப் பண்டங்களைச் சாப்பிட்டும் வேறு ஏதும் புதிதாக வந்திருக்கிறதா என்று தேடும் மனப் போக்கோடு அந்தக் காலத்தவர்களின் எளிய மனத்தை ஒப்பிடவே முடியாது.

விடுமுறை நாட்களென்றால் வயலுக்கோ, தோப்புக்கோ சென்று அன்று முழுவதும் அங்கேயே கழித்துவிடுவார்களாம். மதியச் சாப்பாட்டிற்கு வீடு வந்துவிட்டு மீண்டும் ஓடி விடுவார்களாம். அங்கு வேலை செய்யும் ஆட்களோடு கூடவே இருந்ததாலோ, என்னவோ, இயற்கையைப் பற்றிய பட்டறிவு அதிகமாக இருக்கிறது.

Alwarkurichi

என் அப்பாவும் அவர் சகோதரர்களும் பள்ளிக்கு மாட்டு வண்டியில் செல்வார்கள் என்று எழுதியிருந்தேன் அல்லவா? பெரும்பாலும் பேச்சி என்பவர்தான் வண்டி ஓட்டுவாராம். அவருக்கு வேறு வேலை இருந்தாலோ அல்லது உடல் நலமில்லையென்றாலோ (அதற்கான வாய்ப்பு மிகவும் கம்மி) சுப்பையா என்பவர் வண்டி ஓட்ட வருவாராம். பேச்சி வண்டி ஓட்டினால், மாடுகள் சும்மா ஜல்ஜல் என்று மணிகள் ஒலிக்க, வேகமாக ஓடுமாம். ஆனால் அதே மாடுகள் சுப்பையா ஓட்டினால் மெதுவாகத்தான் செல்லுமாம்.

ஏன் அப்படி என்று ஒரு நாள் பேச்சியிடம் என் அப்பா கேட்டிருக்கிறார். அதற்குப் பேச்சி சொன்ன பதில் “தம்பி, மாடுங்களை வண்டியில பூட்டும் போதே அதுங்க ஆளப் பாத்துக்கும். அவன் எவ்ளோ திறமைசாலியோ, அதற்குத் தகுந்தாப்பிடிதான் அதுவும் நடந்துக்கும்” என்றாராம்.

பின்னாட்களில் பல மேனேஜ்மெண்ட் புத்தகங்களைக் கரைத்துக் குடித்த என் அப்பாவிற்கு அன்று பேச்சி சொன்ன கருத்துகள் ஒவ்வொரு புத்தகத்திலும் கண்டிப்பாக இடம் பெற்றிருப்பது வியப்பைத் தந்திருக்கிறது. வேலை வாங்குபவர்களின் திறமையைப் பொறுத்தே வேலை அமைகிறது என்பதே அது.

சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் இந்தக் கருத்தைச் சொன்ன பேச்சிக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது கூடுதல் தகவல். அவர்கள் அனைவரும் இயற்கையைப் படித்தவர்கள். வாழ்க்கையை ஆராய்ந்தவர்கள். பேச்சியைப் போல எத்த்னையோ பேர் இந்த மண்ணில் இருந்திருக்கிறார்கள்.

என் அப்பா எங்களைக் குலதெய்வம் கோவிலுக்கு அழைத்துச் செல்லும் வழியில் அக்னி தீர்த்தக் குளம் என்ற ஒரு குளத்தைக் காண்பித்தார்கள். அது இவ்வளவு நாளும் செங்கல் சூளை போட்டதால், போக வழியின்றி இருந்தது என்றும் சொன்னார்கள். இதன் சிறப்பு என்னவேன்றால் எல்லாக் குளங்களும் தரை மட்டத்தில்தான் இருக்கும் ஆனால் இந்தக் குளம் மட்டும் தரை மட்டத்திலிருந்து கீழே இருக்கிறது. தண்ணீரும் ஓரளவு சுத்தமாகவே இருக்கிறது.

அந்தக் குளத்தைச் சுற்றிலும் மாமரங்களும் வேப்ப மரங்களும் நிறைந்திருந்ததால் எங்களுக்கு வெயிலே தெரியவில்லை. நல்ல மதிய நேரத்தில் நாங்கள் சென்றதால் அங்கு வேலை செய்ய வந்திருந்த சில கூலி ஆட்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். விறகடுப்பில் சமைத்த சோறு, தொட்டுக்கொள்ள ஏதோ ஒரு கீரை, மற்றும் எங்கிருந்தோ வாங்கி வந்திருந்த ஒரு வடை அவ்வளவுதான்.

அவர்களைப் பார்த்து என் மகள் “அம்மா அவங்க சாப்பிடுறதப் பாத்தா எனக்குப் பசிக்குது” என்றாள். அதைப் பின்னாலிருந்து கேட்டுவிட்ட ஒரு பெண், “நீங்களும் வாங்கம்மா சாப்பிட! எல்லாருக்கும் சாப்பாடு இருக்கு” என்று அன்போடு அழைத்தார். அந்த எளிய மக்களின் உருவில்தான் நம் தமிழ்நாட்டு விருந்தோம்பும் பண்பு வாழ்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.

என் கிராமத்தைச் சேர்ந்த, நாகரிகம் என்ற போலித் திரை இல்லாத எளிய மக்களும், அவர்களை வாழ வைத்துக்கொண்டிருக்கும் இயற்கையும் ஒரு நாளும் மாறாமலிருக்க வேண்டிக்கொண்டு அக்னி தீர்த்தக் குளத்தில் நிலவொளியில் ஒரு குளியல்.

(மேலும் நனைவோம்………..

================================

படங்கள்: வெங்கடேஷ் செல்லப்பா

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “நிலவொளியில் ஒரு குளியல் – 25

 1. Very nice article. Though living in a village has many disadvantages, the life in a village is peaceful. Being city bred, it was a totally different experience for me. I felt as if I was in a village.

 2. நன்றாக இருந்தது.

  Management Techniques பற்றி தங்கள் கூறிய சம்பவம் superb .

 3. Good article. I recollected my village days as my native place is also situated in village only. I enjoyed very much there particularly during summer days. Till now, I used to go to my village along with my family and will spend sufficient time which will give peacefullness and freshness.

  Very good one.

  Thank you

  Trichy Sridharan

 4. I liked this article very much. Though I was brought up in city, this article took me to a village atmosphere . Now I too have a flair to visit a village atleast for a week.

  Thank you

  Srirangam Saradha Sridharan

 5. Nice article. By the way, Summer has started and thanks for mentioning abt பழையது. Nothing can cool the body as பழையது does 🙂

 6. One Tamil proverb says ” ettu suraikai kariku udavadu”. you have reminded me mami.

  superb.

  k. Ramesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *