-மீனாட்சி பாலகணேஷ்     

நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும்
                நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
        திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
                செம்மை மாதர் திறம்புவதில்லையாம்…

*************************************

பொழுது மிக அழகாக இனிமையாக விடிந்து கொண்டிருந்தது. நேரம் கழித்து எழுந்த சில சோம்பேறிச் சேவல்கள் தங்கள் கடமையாக ‘கொக்கரக்கோ’ என்று கூவிக் கொண்டிருந்தன.  பால்காரர்களின் பாத்திர ஒலிகளும், வாசலில் சாண நீர் தெளிக்கும் ஓசையும் ஒருவித லயத்தோடு ஒலித்தன.  திருச்சி வானொலியின் ‘தமிழ் மணத்’தில் “பல்லாண்டு பல்லாண்டு…மணிவண்ணா,” என உருகி நெகிழும் குரல் புல்லரிக்க வைத்தது.

girl-kolamசீக்கிரமே எழுந்து குளித்துவிட்டு, அலமேலுவின் சொற்படி, நீலத்தில் ‘பாலும் பழமும்’ சிவப்பு நீலம் கட்டம் போட்ட பட்டுப் பாவாடையும் நீல நிற ஜார்ஜெட் தாவணியும் உடுத்திக் கொண்டு, ‘ராக்கொடி’ வைத்துப் பின்னிய  நீண்ட பின்னலின் நுனியில் அசைந்தாடும் குஞ்சலமும், உச்சியில் பந்து நித்ய மல்லிகையுமாகக் குனிந்தபடி வாசலில் நின்று, வேலைக்காரி சாணம் தெளித்திருந்த தரையில் மும்முரமாகக் கோலம் போடுவதில் முனைந்திருந்தாள் சைலஜா.

‘நீராழி மண்டபமா’ இல்லை ‘முத்துப் பந்தலா’ அல்லது ‘அன்னாசிப்பழமா’ என்ற நிமிட நேர யோசனையின் பின்பு ‘நீராழி மண்டபத்’துக்கான புள்ளிகளைக் கணக்குப் பண்ணி வைக்கத் துவங்கினாள்.  கண்ணும் கையும் என்னவோ கோலமாவைத் துழவியபடி இருந்தாலும் காதும் கருத்தும் மட்டும் குதிரை வண்டி தெருக்கோடியில் வருகிறதா என்று தீட்டியவாறு நின்றது.

“ரயில் லேட் போல இருக்கே,” என்று பாட்டி  உள்ளுக்கும் வாசலுக்குமாக அலைந்தபடி இருந்தாள்.

கோலமும் முடிந்து விட்டது.  குதிரைவண்டி வரக் காணோம். திலகாவின் அண்ணி வாசற்பக்கம் வந்தவள், ஒரு நிமிடம் நின்று சைலஜா வரைந்த கோலத்தைப் பார்த்து ரசித்தாள்.  சைலாவின் அலங்காரத் தோற்றத்தையும் பார்த்தவள், “என்ன சைலா, அத்தை ஊருக்குப் போற வரைக்கும் உன்னை இனிமே எங்க வீட்டுப் பக்கமே பார்க்க முடியாது போல,” எனக் கேலி பண்ணி முகம் சிவக்க வைத்து விட்டு நகர்ந்தாள்.

“அரசு, என்னப்பா படிச்ச படியே இருக்கே.  வந்து இட்டிலி சாப்பிட்டுட்டுப் போய்யா.  ராத்திரி கூட சோறு சரியாகச் சாப்பிடலே,’ என்ற அவனுடைய தாயின் குரல் உள்ளிருந்து தெருவரை கேட்டது. திண்ணையை ஒட்டியிருந்த படிப்பறையிலிருந்து வெளிப்பட்டான் ஆடலரசு.  கலைந்த தலையும், படித்துப் படித்து (நிஜமாகவா?) சிவந்த கண்களுமாக…

ஒரேயொரு கணம், இரு ஜோடி விழிகள், நேர்முகமாக ஒன்றையொன்று எதிர்கொண்டு மீண்டன.  அவன் விழிகளில் கண்டதன் பொருளை உள்வாங்கிப் பொருளறிய சைலஜாவின் மனம் முனைந்த தருணம் ‘ஜல் ஜல்’ என்று குதிரை வண்டி ஓடிவந்து வாசலில் நின்றது.  சைலாவின் எண்ண ஓட்டம் தடைப்பட்டது.

அவசரமாகத் திண்ணையில் ஏறி, முகப்புத் தூணின் பின்பு மறைந்தாற்போல் நின்றாள் சைலஜா.  அக்கம்பக்கத்து வீடுகளில் வாசல், ஜன்னல்களில் எல்லாம் தலைகளும் முகங்களும் தென்பட்டன.

கால்களை வெளியில் தொங்கவிட்டபடி அமர்ந்திருந்த சீனு என்கிற ஸ்ரீனிவாசன் முதலில் இறங்கினான்.

‘அட, சைலா சொன்னாப்போலவே, என்ன உசரம் இருக்கார் அவ அத்தான்,’ என எண்ணிக் கொண்டாள் திலகா, தாயின் பின்னாலிருந்து எட்டிப் பார்த்தபடி.  அடுத்தாற் போல பட்டுப்புடைவை சரசரக்க இறங்கிய ஜானகியின் காதிலும் மூக்கிலும் வைரங்கள் ஒளிவீசின. கைகளில் தங்க, கல் வளையல்கள் கணகணத்தன. மயில்கண் வேஷ்டி தரையில் புரள, ஜரிகை அங்கவஸ்திரத்தை மஞ்சள் நிறச் சட்டைமீது விசிறிப் போட்டபடி, அத்திம்பேரும்  இறங்கினார்.  வண்டியோட்டியின் அருகில் வழி காண்பிக்க அமர்ந்திருந்த வெங்கடேசன், ஏற்கனவே கீழிறங்கி அக்காவையும் மருமானையும் உள்ளே வரவேற்றுக் கொண்டிருந்தார்.

“சீனு, பார்த்துப் போடா உள்ளே- என் மாட்டுப் பெண் மெனக்கெட்டு அழகாக் கோலம் போட்டிருக்கா- ‘ஷூ’க்காலால் அழித்து மிதித்து விடாதே, ஆமாம்,” என்ற படியே படியேறினாள் ஜானகி.

“ஜானா, வாம்மா. சீனு உசந்துண்டே போயிண்டிருக்கான் போலிருக்கே,” பாட்டியின் உபசரிப்பும் தொடர்ந்து வந்தது.

“இன்னும் ரெண்டு வருஷம் போனா அவன் டாக்டர் ஸ்ரீனிவாசன். எம். பி. பி. எஸ்.  வெங்கடேசா, எப்படி உனக்கு மாப்பிள்ளை தகைஞ்சிருக்கு பாரு,” மச்சினனின் முதுகில் பலமாக உற்சாகமாகத் தட்டினார் அத்திம்பேர்.

திண்ணையில் போட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து காலணிகளைக் கழற்றக் குனிந்த சீனு, தூணோடு தூணாக நின்ற சைலஜாவைப் பார்த்து, “ஹலோ சைலா, ஹவ் டு யு டு?” என்று கணீரெனக் கேட்கவே, ஆங்கிலத்தில் இதுவரை யாருடனும் உரையாடியே பழக்கம் இல்லாத சைலஜா, முகத்தில் கலவரமும், நாணமும், நடுக்கமும் உண்டாக, கேள்வியைப் புரிந்து கொண்டு, “நன்னா இருக்கேன்,” என்றாள். உரையாடல் தொடருமா என உள்ளம் தவிக்க, தொடர்ந்தால் தன்னால் ஆங்கிலத்தில் பேச முடியாதே என்ன செய்வது என்று இதயம் படபடக்க நின்றவளை அலமேலுவின் குரல் உள்ளே அழைத்தது.

“சைலூ, இங்கே பாரு, அத்தை அத்திம்பேர் கைகால் அலம்பிண்டு வந்ததும் போய் இந்தக் காப்பியைக் கொடுத்து விட்டு பெரியவாளை நமஸ்காரம் பண்ணிவிட்டு வா,” என்றாள்.  வீட்டுக்கு வந்த பெரியவர்களை நமஸ்காரம் பண்ணும் வழக்கம் நமது பண்பாடு; எனவே சைலஜா மறுபேச்சின்றி ஒத்துக் கொண்டாள்.

அன்றைய பொழுது இவ்வாறு விருந்தினர்களை உபசரிப்பதிலும், சைலாவுக்குப் பாட்டு தெரியும், நடனம் தெரியும், பள்ளியில் எப்போதும் முதல் ராங்க், பல போட்டிகளில் பரிசுகள் வாங்கியவள் எனப் பெற்றோரும், பாட்டியும் பெருமையாகப் பேசுவதிலும் கழிந்தது. சீனுவுக்குத் தான் பொழுதே போகவில்லை.  கையோடு கொண்டு வந்திருந்த டிரான்சிஸ்டர் ரேடியோவைத் திருகியபடியே அமர்ந்திருந்தான்.

அடுத்த நாள் சைலஜா பள்ளிக்கூடம் சென்றிருந்த நேரம் புத்தக அலமாரியைக் குடைந்து கொண்டிருந்தவன், அவள் பரிசு வாங்கியிருந்த புத்தகங்களைக் கண்டு மலைத்தான்.  கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, நாடகப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல்…

சீனு அவ்வளவு புத்திசாலியல்ல.  சுமாராகத் தான் படிப்பான். டொனேஷன் கொடுத்துத் தான் மெடிக்கல் சீட் வாங்கி இருந்தார்கள். என்ன தான் பெரிய படிப்பு படித்துக் கொண்டிருந்த போதிலும் தன் மாமா பெண்-  இருவருக்கும் திருமண முடிச்சு வேறு போடப் பார்க்கிறார்கள் பெற்றோர்-  மகா புத்திசாலியாக இருப்பது மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையைக் கிளறி விட்டிருந்தது.

போதாத குறைக்கு ஜானகி வேறு, சைலஜாவுக்கு ஒழிந்த நேரங்களில் எல்லாம் இழுத்துப் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு, “இதைப் பாடு,” “பாபநாசம் சிவனோட கிருதி ‘கபாலி’ மோஹனத்தில் தெரியுமா? அதைப் பாடேன்,’ “ஸ்யாமா சாஸ்திரியுடைய ‘காமாக்ஷி’ தெரியுமா?’ என்று கேட்பதும், உடனே உற்சாகமாக சைலா அவற்றைப் பாடுவதும் அவனை நையாண்டி செய்வது போல இருக்கும்.  ‘இந்தப் பெண் ஏதாவது எனக்குத் தெரியாது என்று சொல்ல மாட்டாளோ,’ என்று எரிச்சல் படுவான்.

பள்ளி ஆண்டுவிழா நாடகத்தில் எடுத்த புகைப்படங்களை மிகவும் பெருமையாக வெங்கடேசன் அக்காவிடமும் அத்திபேரிடமும் காட்டினார்.  முகத்தில் அசிரத்தையுடனும் மனதில் ஆச்சரியத்துடனும் இவற்றைப் பார்த்த சீனு இன்னுமே அவஸ்தைக்கு உள்ளானான்.

இப்பேர்ப்பட்ட ஒரு தேவதை தனக்காகவே பிறந்து வளர்ந்து வருகிறாள் என்பது எல்லா ஆடவர்களின் மனத்திலும் கிளர்ச்சியைத் தான் உண்டு பண்ணும்.  சீனுவோ நேர் எதிரிடையாக இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தான்.  அவளைப் பிடிக்கவில்லை என்று வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை.  அவளுடைய சாமர்த்தியம் தன்னைத் தாழ்வு மனப்பான்மையடையச் செய்கிறது என உணர்ந்தும் ஒப்புக் கொள்ள அவனுடைய வறட்டு கௌரவம் இடம் கொடுக்கவில்லை.

ஜானகி ஊருக்குக் கிளம்ப இன்னும் இரண்டு தினங்களே இருந்தன. அன்று இரவு உணவின் போது வெங்கடேசன் ஆரம்பித்தார், “அக்கா, உன்னண்டை கேட்கணும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சைலஜாவும் நன்றாகப் படிக்கிறாள்.  மேலே மெடிக்கல் காலேஜில் சேர ஆசைப் படுகிறாள்.  நீயும் அத்திம்பேரும் என்ன சொல்றேளோ…” என இழுத்தார்.

சைலா ஆவலாகக் காதைத் தீட்டிக் கொண்டாள்.  சீனுவின் முகம் ‘ஜிவு ஜிவு’ எனச் சிவந்து விட்டது.  ‘இதென்னடா கஷ்டம்.  தன்னை மணந்து கொள்ளப் போகும் பெண் படிப்பிலும் தனக்குப் போட்டியா?’ எனக் குமுறினான்.

அத்திம்பேரோ, “வெங்கடேசா, இப்போ எல்லாம் தான் பெண்கள் பெரிய படிப்பு படிக்கிறார்களே.  படிக்கட்டுமே என் மருமகளும்,” என்று கூற, இடைமறித்த ஜானகி, “புருஷன் பெண்டாட்டி இரண்டு பேருமாகத்தானே கிளினிக் வைச்சு நடத்துவார்கள்.  ஏண்டா சீனு, நீ என்ன சொல்லறே..”

கேட்ட கேள்வியின் தொனியே ‘இது ஒப்புக்கு’ என்ற பொருளில் இருந்தது.   “அவளுக்கு என்ன இஷ்டமோ செய்யட்டுமே அம்மா. என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறே,” என சிடுசிடுத்தான்.

“நீ தானேடா கட்டிக்கப் போகிறவன், கரெக்டாகச் சொல்லிக் கொடேன்.  இப்படி ஒரு பெண் கிடைக்கக் கொடுத்து வைச்சிருக்கணுமாக்கும்,” ஜானகி கூறியதும் சீனுவின் கோபம் பொங்கி வெடித்தது.  “கட்டிக் கொண்டால் பார்த்துக்கலாம்.  அதற்குள்ளே நீயும் எல்லாருமாகப் பெரிய கோட்டை கட்டாதேங்கோ.  என்னையும் தொந்தரவு செய்யாதே,” கையை உதறிக் கொண்டு தட்டை விட்டு எழுந்து விட்டான்.

அத்தைக்கும் அத்திம்பேருக்கும் முகம் விழுந்து விட்டது.  மரியாதை கருதி வெங்கடேசன், “பார்க்கலாம் அக்கா. சிறிசுகளை விட்டுப் பிடிக்கணும் தான்.  நீ வெளிப்படையாகக் கட்டிக்கப் போகிறவன் அப்படி என்றபோது அவனுக்கு வெட்கமும் கோபமும் வந்திருக்கு.  கவலைப்படாதே.  ப்ராப்தம் இருந்தால் எல்லாம் தானாக நடக்கிறது,” என சமாதானம் செய்ய முற்பட்டார்.

சைலாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.  அவளை மணந்து கொள்வதைப் பற்றி சீனு சொன்னதால் அல்ல.  அதன் பின்னே பொதிந்திருந்த ஒரு திடுக்கிடும் உண்மையை அவளுடைய அபார மூளை ஊகித்து அறிந்ததினால் தான் அந்த அதிர்ச்சி.  ஆண்வர்க்கத்தின் அதிகாரத்தால் பெண்கள் நன்கு படிக்கவோ சுதந்திரமாகச் செயலாற்றவோ  இயலாமல் இருந்தனர் என்பது தன் பாட்டி கூறிய அக்கப்போர்களில் இருந்தும் அக்கம்பக்கத்து வீடுகளின் நடைமுறைகளில் இருந்தும் அவள் அறிந்திருந்தது தான்.

தங்கள் வீட்டில் அப்பா வெங்கடேசன் அலமுவுக்கு அளித்திருந்த பொறுப்பும் சுதந்திரமும் அளவற்றது.  வீட்டுச் செலவுகள், சமையல், முக்கியமான விஷயங்களில் முடிவெடுப்பது என நீண்ட பட்டியல். எட்டாவது வரை படித்திருந்த அலமுவுக்கு இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்து ‘ஹிந்து’ பத்திரிகை படிக்கும் அளவுக்கு அவளுடைய படிப்பின் தரத்தை உயர்த்தி இருந்தார் வெங்கடேசன்.  தன் பெண் சைலஜாவைக் கூடப் பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டும், அவள் பேரும் புகழும் பெற வேண்டும் என்று கனாக் கண்டார்.

அலமேலுவும் தன் தாயாரும் கண்டு கொண்டிருந்த சைலாவின் கல்யாணக் கனவுகளுக்கு அவர் தடை சொல்லாத காரணம், தன் தமக்கை மகன் தான் என்பதலும், அவனும் பெரிய படிப்பாக டாக்டராகப் படிப்பதாலும் தான்.

சைலாவுக்குப் புரிந்து விட்டது.  சீனுவுக்குத் தான் அவனுக்கு இணையாகப் படித்து வேலை பார்ப்பதில் விருப்பம் இல்லை.  வேளா வேளைக்கு ருசியாகச் சமைத்துப் போடவும், குழந்தைகளை வளர்க்கவும், வீட்டை அழகாக வைத்துக் கொள்ளவும் அவ்வப்போது வாங்கிக் கொடுக்கும் புடைவைகளுக்காகப் பூரித்துப் போய் புன்னகைக்கவும் தான் அவனுக்கு மனைவி தேவை போல உள்ளது என உணர்ந்து கொண்டாள்.

மலரும் பருவ காலத்து இனிமைக்கனவுகள் சற்றே ஆட்டம் கண்டாலும், தன் படிப்பு பற்றித்தான் வளர்த்து தந்தை ஆதரிக்கும் கனவுகள் தான் பெரிதாகக் கண்முன் சைலாவுக்கு விரிந்தன.

‘மாட்டை அடித்து வசக்கித் தொழுவினில் மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே வீட்டினில் எம்மிடம் காட்ட வந்தார் அதை வெட்டி விட்டோமென்று கும்மியடி’- என்று பாடியபடி பாரதி நினைவு தினத்தன்று பள்ளியில் கும்மியடித்தது நினைவுக்கு வந்தது.  அவள் கனவில் கண்ட ‘அவரி’ன் வடிவம் சீனு அல்ல என்று நிதர்சனமாகத் தெரிந்தது. சீனுவுக்குத் ‘தான் ஆண்மகன்.  அதனால் பெரிய படிப்பு படிக்கத் தகுதியும் உரிமையும் தனக்குத்தான் உண்டு என்ற கர்வம்.  ‘நான் பெண் என்பதால் சளைத்தேனா.  நானும் ஒரு புதுமைப் பெண்.  புத்திசாலிப் பெண். வாழ்வில் உன்னை விட உயர்ந்து காட்டுவேன் பார்,’ என்று மனதினுள் உறுதி பூண்டாள் சைலஜா என்ற சின்னப் பெண்.

‘நான்’ எனும் அகந்தையின் விதை ஊன்றப்பட்டது ஒரு பிஞ்சு மனத்தில்.  தவறு அவளுடையதல்ல.  விந்தை மனிதர்கள் நிறைந்த ஒரு சமுதாயத்தினுடையது தான்.

அத்தை குடும்பம் ஊருக்குப் போயாகி விட்டது.  அன்று சாயந்திர வேளையில், அம்மாவும் பாட்டியும் சமையலறையில் காரியமாக இருந்த போது, ரேடியோ நியூஸ் கேட்டுக் கொண்டிருந்த அப்பாவின் முன் போய் பொறுமையோடு அமர்ந்து, தகுந்த சமயத்தை எதிர்நோக்கி, அது கிடைத்ததும் அவரிடம் கேட்டாள்.

“அப்பா, சீனுவைக் கல்யாணம் பண்ணிக்க எனக்குப் பிடிக்கல்லே. நான் நிறையப் படிச்சு பெரிய டாக்டராகவோ விஞ்ஞானியாகவோ ஆகப் போகிறேன்,” குரல் தழதழக்க, கை தாவணி நுனியை முறுக்கியது.

வெங்கடேசன் மகளைப் பாசத்துடன் பார்த்தார்.  தகப்பனார் இறந்து விட்டதால் ஆர்வம் நிறைந்த படிப்பு சம்பந்தமான தனது கனவுகள் நிறைவேறாததும், தன் அருமை மகளைப் படிக்க வைத்தே அவற்றை நிறைவேற்றிக் கொள்ளப் போவதும் அவருடைய வாழ்வில் குறிக்கோளாக இருந்தது.

“சைலாக்குட்டி, அம்மா, பாட்டி ரெண்டு பேர் மனசும் கஷ்டப்படாமல், சொல்லிப் புரிஞ்சுக்க வைச்சு, உன்னைக் கட்டாயம் நன்னாப் படிக்க வைக்கிறேனம்மா.  சீனுவும் சின்னப் பையன் தானே. ஏதோ கூச்சத்தில் கோவிச்சுக்கிறான்.  நீயும் டாக்டரானா அவனுக்கு சந்தோஷமா இருக்காதா என்ன?  அப்படி அவனை உனக்குப் பிடிக்கலை என்றால் பிராப்தம் எப்படி இருக்கோ, அது கடவுளாகப் பார்த்துச் சேர்த்து வைக்கிறதும்மா,” என்றார்.

“அப்பா….,” அடுத்து வார்த்தைகள் வராமல் தொண்டையில் அடைபட்டு, கண்கள் குளம் கட்டிக் கொள்ள, சில நொடிகள் தந்தையை ஏறிட்டாள் சைலஜா.

“சைலு, இதைப் பார்த்தாயா அம்மா.  ஓபன் ஹார்ட் சர்ஜரியிலே ஒரு புதுமை பண்ணியிருக்கா அமெரிக்க டாக்டர்கள்,” என்று விளக்க ஆரம்பித்து, அந்தக் கண்ணீருக்கு அணை போட்டார் அன்புத் தந்தை.

இந்த சின்னப் பெண்ணுக்கு விஞ்ஞான மருத்துவ உலகின் புதுமைகளை, தான் செய்தித் தாள்களிலும் புத்தகங்களிலும் படித்து அறியும் அறிவியல் செய்திகளைச் சொல்லிக் கொடுப்பதில் தான் வெங்கடேசனுக்கு எத்தனை ஆர்வம்!

தந்தையும் மகளும் பாசப் பிணைப்பில் கட்டுண்டு அறிவு பூர்வமான உரையாடலில் ஆனந்தமாக லயித்திருந்தனர்.

(தொடரும்)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *