லக்ஷ்மி கடாக்ஷம்
தமிழ்த்தேனீ
அடுக்கடுக்காய் துன்பம் வந்தால் ஆத்திகனும் நாத்திகனாவான். நாத்திகனும் ஆத்திகனாவான்.நிரந்தரமான ஆத்திகனுகம் இல்லை நிரந்தரமான நாத்திகனும் இல்லை” என்று தீர்மானமாய்த் தோன்றியது வைத்தியநாதனுக்கு.
“இனிமே என்னாலே தாக்குப் பிடிக்க முடியாது! நான் சோர்ந்து போயிட்டேன், தெய்வம் கண்ணைத் தொறக்கலே. கேக்கறேன்னு தப்பா நெனைக்காதீங்க, நீங்களும் இவ்வளவு நாளா என் பொண்ணுக்கு பல நல்ல வரன்களை கொண்டாந்திட்டீங்க. ஆனா ஒண்ணுமே தகையலை. ஒரு வேண்டுகோள் நீங்க தப்பா நெனைக்கலேன்னா ஒண்ணு சொல்றேன். பெரிய மனசு பண்ணி என் பொண்ணை நீங்களே கல்யாணம் செஞ்சிக்கோங்களேன்” என்றார் நொந்துபோய் வைத்தியநாதன்.
எதிரே உட்கார்ந்திருந்த கல்யாணத் தரகர் பொன்னம்பலம் அதிர்ந்து போய்ப் பார்த்தார். “என்னா சொல்றீங்க ! எப்பிடிங்க உங்களுக்கு இப்பிடிக் கேக்க மனசு வந்துது? லஷ்மி கடாட்சம் நிறைஞ்சிருக்கற உங்க பொண்ணு பக்கத்திலே நிக்கக் கூட எனக்கு தகுதியில்லை. தரகன் இப்பிடி ஒவ்வொரு இடத்திலேயும் கல்யாணம் செஞ்சிக்க முடியுமா?” என்றபடி எழுந்து போனார் தரகர் பொன்னம்பலம்..
“பொண்ணை நல்ல இடத்திலே கல்யாணம் செஞ்சு குடுக்கறீங்க, பொண்ணுக்கேத்த மாப்பிள்ளை. மஹாலஷ்மியும் நாராயணனும் ஜோடியா நிக்கறா மாதிரி இருக்கு, மடிலே பொண்ணை உக்கார வெச்சுண்டு தாரவாத்துக் குடுக்கப் போறேள். இப்போ என்ன யோசனை ? இங்கே கவனமா செய்யுங்கோ” என்றார் சாஸ்திரிகள்.
திடுக்கிட்டு நனவுலகிற்கு வந்தார் வைத்தியநாதன். “கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்ற குரலும் கெட்டிமேளமும் ஒருசேர முழங்கியது. பெருங்கனம் நீங்கியதுபோல ஒரு உணர்வு அவருக்கு.
அக்ஷதை அவர் தலையிலும் விழுந்து மங்கலம் நிறைவேறியது, மனிதர்கள் புஷ்பமாரி பொழிந்தனர். கண்களில் நன்றியுடன் கைகளைக் குவித்தார் வைத்தியநாதன், தரகர் பொன்னம்பலத்தை நோக்கி.
சுபம்
புதிராக அமைந்த கதை பொதி சுமந்த வைத்தியநாதனின் மனநிலையை பிரதிபலிக்கிறதா?