சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்- 4

1

சு.கோதண்டராமன்

இந்திய மண்ணில் பிரெஞ்சு ஆட்சியை இரு காலகட்டமாகப் பிரிக்கலாம். பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் ஆண்டவர்கள் தங்கள் கலாசாரத்தை இந்திய மண்ணில் திணிக்க முயன்றனர். புதுச்சேரியும் காரைக்காலும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு நேரான தெருக்களைக் கொண்டதாகத் திட்டமிடப்பட்டு அமைக்கப் பட்டன. இரண்டு பகுதிகளிலும் சிவன் கோவில்கள் இடிக்கப் பட்டு அங்கு மாதா கோவில்கள் எழுப்பப் பட்டன. பாதிரிமார்கள் அக்கிரகார மக்களைக் கூட்டமாகக் கொன்று மதமாற்றத்துக்கு வற்புறுத்திய போது ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் புரட்சிக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவக் கொள்கைகளைப் பின்பற்றியதால் இந்திய மக்களுக்கு கலாச்சார விஷயங்களில் சுதந்திரம் அளித்தனர்.

குடியேற்ற நாட்டு மக்களையும் தாய்நாட்டு மக்களைப் போலவே நடத்தினர். பிரான்சில் நடைபெறும் தேர்தல்களில் பிரெஞ்சு இந்தியப் பகுதி வாழ் மக்களுக்கு ஓட்டுரிமை இருந்தது. பிரெஞ்சுக் குடியுரிமை பெற்று புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாழ்பவர்களுக்கு இன்றும் அந்த உரிமை உள்ளது.

பிரெஞ்சுக்காரர் நாட்டை விட்டுப் போகும்போது விரும்பியவர்கள் எல்லாம் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தார்கள். இந்திய தேசீய உணர்ச்சியால் ஆட் கொள்ளப்பட்டவர்கள் அதை ஏற்க மறுத்தார்கள். பிற்காலத்தில், அதை ஏற்றுக் கொண்டவர்களுக்குக் கிடைத்த நன்மைகளைப் பார்த்துப் பெருமூச்செறிந்தார்கள்.

ஒப்சான் செய்தவர்களுக்கு (பிரெஞ்சுக் குடியுரிமையை ஏற்றுக் கொண்டவர்களுக்கு) இங்கு என்ன வேலை பார்த்தாலும், அந்த வேலைக்கு பிரான்சில் என்ன சம்பளமோ அதைப் பிரெஞ்சு அரசாங்கம் கொடுத்தது. அவர்கள் பரம்பரைக்கும் அந்தக் குடியுரிமை தொடர்கிறது. இளைஞர்களாக இருந்தால் பிரான்சுக்குச் சென்று ஒரு ஆண்டு கட்டாய ராணுவ சேவை செய்ய வேண்டும். அதன்பின் அவர்களுக்கு அங்கு வேலை நிச்சயம். வேலை கிடைக்கும் வரை உதவித் தொகை உண்டு. பத்து ஆண்டுகள் வேலை பார்த்தால் போதும், முழுச் சம்பளத்துக்குச் சமமான தொகை பென்ஷனாகக் கொடுக்கப்படுகிறது.

ஆங்கிலேயரைப் போலவே பிரெஞ்சு ஆட்சியாளர்களும் தங்கள் அலுவலக எழுத்தர் தேவையை நிறைவு செய்து கொள்ளவே மக்களுக்குக் கல்வி அளித்தனர். கல்விக் கூடங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. காரை நகரில் மட்டும் ஒரு அரசாங்க உயர் நிலைப் பள்ளி இருந்தது. கொம்யூன் எனப்பட்ட பெரிய கிராமங்களில் எகோல் சாந்த்ரால் என்ற (எட்டாம் வகுப்பு வரை உள்ள) நடுநிலைப்பள்ளிகள் இருந்தன. சிறு கிராமங்களில் எகோல் எலயமாந்தர் என்ற துவக்கப் பள்ளிகள் இருந்தன. பள்ளியே இல்லாத கிராமங்களும் உண்டு. காரை நகரில் கிருத்துவ மடாலயங்கள் ஆண்களுக்கு ஒன்றும் பெண்களுக்கு ஒன்றும் உயர்நிலைப் பள்ளிகள் நடத்தினார்கள்.

அரசாங்க உயர்நிலைப் பள்ளியில் 11 வது வகுப்பு ப்ரேவே எனப்பட்டது. அதில் தமிழ் வழி, பிரெஞ்சு வழி என இரு வகை உண்டு. பிரெஞ்சு வழி மாணவர்கள் ஆங்கிலமும் கற்றார்கள். தமிழ் வழி மாணவர்களுக்கு பிரெஞ்சும் தமிழும் கட்டாயம்.

தேர்வுகளுக்கு வினாத்தாள் அச்சடித்துக் கொடுப்பதெல்லாம் இல்லை. புதுச்சேரியிலிருந்து ஒரு வினாத்தாள் சீல் செய்த கவரில் வரும். மாணவர்களைத் தேர்வுக் கூடத்தில் உட்கார வைத்து விட்டு அந்தக் கவரைப் பிரித்து போர்டில் கேள்வியை எழுதிப் போடுவார் ஆசிரியர். சில வினாக்களே இருக்கும். மொழிப் பாடங்களில் ஒரே ஒரு வினா தான் இருக்கும். ஏதேனும் பழமொழியைக் கொடுப்பார்கள். அதை விளக்கி மூன்று மணி நேரத்திற்குள் ஒரு கட்டுரை எழுத வேண்டும். விடைகள் மிகக் கண்டிப்பாக மதிப்பிடப்படும். நாற்பது பேர் உள்ள வகுப்பில் எவருமே தேறவில்லை என்ற அறிவிப்பு சகஜம்.

பள்ளிகளுக்கு ஞாயிறும் வியாழன் பிற்பகலும் விடுமுறை. வியாழன் அன்று காலை அந்த வாரம் நடந்த பாடங்களில் தேர்வு மட்டும் நடைபெறும். ஒவ்வொரு பாட வேளையும் என்ன பாடம் நடந்தது என்பதை அதற்கென உள்ள கை எ தேஸ்த் என்ற ரிஜிஸ்டரில் மாணவர் தலைவன்  எழுத, ஆசிரியர் மேலொப்பம் இடும் முறை இருந்தது.

பரிட்சையில் தேர்ச்சி அடைந்து விட்டால் மறுநாள் போலீஸ்காரர் வீடு தேடி வந்து அரசாங்க வேலைக்கான நியமன உத்தரவைக் கொடுப்பார், விண்ணப்பம் எதுவும் போடாமலேயே.

ஆசிரியராக நியமனம் பெற்றவர்கள் ஒவ்வொரு வியாழனும் பிற்பகலில் ஆசிரியத் தொழிலுக்கான பயிற்சி வகுப்புக்குச் செல்வார்கள். ஒரு ஆண்டில் பயிற்சி முடிந்து விடும். ப்ரேவேக்கு மேல் பக்குளோரியா (பட்டப்படிப்பு) படிக்கும் வசதி புதுச்சேரியில் மட்டும் தான் உண்டு.

 

படத்திற்கு நன்றி

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்- 4

  1. வணக்கம் ,

    நானும் புதுவையின்,புதல்வன் தான்,பிரெஞ்சு கலாசாரத்தின் பசுமை தோட்டத்தில் பூத்த ஆனந்த காலங்களின் மகிழ்ச்சி

    பூக்கள் அவை ,உங்கள் வரிகள் என் வசந்தகாலத்தின் சுவடுகள் தான் ,மீண்டும் ஒருபகுதியை நான் திரும்பி பார்க்கும் சந்தர்பம் உங்கள் எழுத்தில் தந்தற்கு உங்களுடன் வல்லமைக்கும் என் மனமார்ந்த நன்றி! *****தேவா******

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *