-முனைவர்.த.பாலமுருகன்

‘திரு’என்பதற்குச் செல்வம், சிறப்பு, அழகு, ஒளி, இலக்குமி, தெய்வத்தன்மை எனப் பல பொருள்கள் உண்டு. எனினும் இதற்குத் தெய்வத் தன்மை வாய்ந்த என்னும் பொருள் பொருந்துவதாகக் கூறலாம். உரையாசிரியரான பேராசிரியர் திருக்கோவையார் உரையில் ῾திரு` என்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மையின் நோக்கம் என்று குறிப்பிடுகிறார்.1 பிறந்த நட்சத்திரங்களில் பெயர்சூட்டிக் கொள்ளும் மரபு இன்றும் இருக்கிறது. கார்த்திகேயன், ஆதிரையான், ரேவதி முதலிய பெயர்களைச் சுட்டலாம். மூலத்தில் பிறந்ததனால் மாமூலன், ஆவூர் மூலங்கிழார், ஐயூர் மூலங்கிழார், மூலங்கீரனார் போன்று திருமூலரும் இவ்வகையில் பெயர் பெற்றிருக்கலாம் என்று கூறுவர்.

திருமூலருக்குத் தாய் தந்தையார் இட்ட பெயர் சுந்தரன் என்பதாகும். இவர் அகத்தியர் நடத்திய தமிழ்ச் சங்கத்தில் உலக நூல் கற்றார். அகத்தியரின் விருப்பத்தால் வடகயிலையில் நடைபெற்ற வேதாகமங்களை நந்தி பெருமானிடம் கற்று ῾நாதர்’என்ற பட்டமும் பெற்றுச் சுந்தரநாதராய்த் தவம் செய்து வாழ்ந்திருந்தார். இவருடன் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், சிவயோக மாமுனிவர் ஆகியோர் பயின்று வந்துள்ளனர்.

அந்தணர்களின் ஆநிரைகளை மேய்த்து வந்த மூலன் இறந்து விடவே, அவன் உடலைச் சுற்றிப் பசுக்கள் கதறின. அத்துன்பத்தைப் போக்க சுந்தரநாதர் மூலனின் உடலில் தம் உயிரைச் செலுத்தினார். இது அட்டமாசித்திகளுள் ஒன்றாகியப் ‘பிராகாமியம்’ எனப்படும்.  உயிர் பெற்ற மூலன் எழுந்து விடவே பசுக்கள் மகிழ்ந்தன. மூலன் உடலில் புகுந்த சுந்தரநாதனுக்கு மீள முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால் அவனை மூலன் என்றே அழைத்து வந்துள்ளனர். இதனை,

                            “நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
                             நந்தி வழிகாட்ட நானிருந் தேனே”2 என்றும்,

                            “நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
                         நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்”3 என வரும் கூற்றுக்கள் மூலம் விளங்கும்.

நீடு வாழ்ந்தவர்

திருமூலர், காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிந்ததால் திருவருள் நலம் பெறுதற்குரிய தோய்வும் பெற்றார் எனலாம். அதனால் அவர் நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருந்தார் என்பதை,

      “நாட்ட மிரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
        வாட்டமு மில்லை மனைக்கும் அழிவில்லை”4 எனவும்,

     “காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
  கூற்றை யுதைக்கும் குறியது வாமே” 5 எனவும் திருமூலர் குறிப்பிடுவதனால் அவர் நீண்ட நாள் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை அறியலாம். இதனை,

“உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
  உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”6 எனவும்,

  “அண்டம் சுருங்கில் ஆக்கைக்கு அழிவில்லை”7

எனவும் திருமூலர் குறிப்பிடுகிறார். அவர் நீண்ட நாள் வாழ்ந்திருத்தமைக்குரிய காரணத்தைத் திருமந்திரம் என்னும் நூலினை இயற்றவே என்று அவரே தம் நூலில் குறிப்பிடுகிறார். இதனை,

                          மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்
                          நீலாங்க மேனியன் நேரிழை யாளொடு
                          மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
                          சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே” 8 எனவும்,

                       “என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
                        தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” 9 எனக் கூறுவதன் மூலமும் புலப்படுத்துகிறார். மேலும் இவர் எண் வகைச் சித்திகளையும் கைவரப் பெற்றிருந்தமையை,

              “அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி
              பெரிதருள் செய்து பிறப்பறுத்தேனே” 10 என்ற அடிகளின் மூலம் அறியமுடிகிறது.

உடலை வளர்ப்பதன் மூலமே உயிரை வளர்க்க முடியும் எனத் தான் அறிந்து இருந்ததால் உடலை வளர்க்கும் கலையான காற்றைப் பிடிக்கும் கணக்கும் அட்டமா சித்திகளையும் கைவரப் பெற்று திருமூலர் நீண்ட நாள் உயிர் வாழ்ந்து இருக்கலாம் எனக் கருத இடமுண்டு.

திருமூலரின்  காலம்

திருமூலரின் காலத்தினை அறிந்து கொள்வதற்கு அவரோடு தொடர்புடையவர்கள், சமகாலத்தவர்கள், இலக்கியம், இலக்கணம், புராணச் சான்றுகள் ஆகியவற்றை  ஆராய்ந்தால் ஒரு முடிவுக்கு வரலாம்.

திருமூலரோடு தொடர்புடைய வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகிய இருவரும் அவரோடு கயிலையில் சிவனிடம் உபதேசம் பெற்றவர்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. இவர்களுள் வியாக்ரபாதர், வசிட்டர் என்னும் ரிஷியின் மைத்துனர் என்று புராணங்கள் கூறுவதாக வே. சங்கர் கூறுகின்றார்11.  வசிட்டர் இராமாயணக் காலத்தில் வாழ்ந்தவர். இராமாயணம் கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வரலாறு என்று ‘கார்பன் தியரி’என்ற முறை மூலம் கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆனால் கார்பன் தியரி கூறும் இக்கருத்து ஏற்புடையதாக இல்லை என்று இரா.மாணிக்கவாசகம் அவர்கள் தமது திருமந்திர ஆராய்ச்சி என்னும் நூலில் பல்வேறு காரணங்களைக் கூறி விளக்கம் தந்து மறுத்துள்ளார். 12

எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் திருமூலர் சங்க காலத்தினைச் சார்ந்தவர் என்று குறிப்பிடுகிறார்.13 தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்  முதலானோர் திருமூலர் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்று கூறுகின்றனர்.14

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிம்மவர்மன், பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதரும் திருவம்பலத்தில் தங்கிச் சிவனை வணங்கி வருவதை அறிந்து, அக்கோயிலுக்குப் பொன் வேய்ந்து கொடுத்தான் என்று குறிப்பிடுவர். இக்கருத்தினைச் சதாசிவபண்டாரத்தார் தம்முடைய இலக்கிய வரலாற்றில் குறிப்பிடுகின்றார்.15 திருமூலரின் சமக்காலத்தவர்களான பதஞ்சலி, வியாக்கிர பாதரும் சிம்மவர்மனைக் குறிப்பிடுவதால் இவர்களுடைய காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு எனலாம்.

எனவே, கிடைக்கும் பல்வேறு சான்றுகளிலிருந்தும், அறிஞர்களின் கருத்துக்களைக் கொண்டும் திருமூலரின் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என முடிவுக்கு வரலாம்.

திருமூலரின் நூல்கள்

தமிழில் தொன்மையான தந்திர நூல் திருமந்திரம் ஆகும். இதன் பகுப்பு தந்திரம் என்னும் பெயருடன் அமைந்திருக்கிறது. திருமந்திரம், ஒன்பது தந்திரங்களையும் மூவாயிரம் பாடல்களையும் கொண்டது. இதனைத்,

                            “தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம்
                             சுந்தரவா கமச் சொல்மொழிந் தானே”16

என்னும் திருமந்திர அடிகளால் காணலாம். திருமந்திரம் பொதுப் பாயிரத்தில் இறைவனைப் பற்றியும், வேதச்சிறப்பு, ஆகமச்சிறப்பு, தொடங்கி அவையடக்கம் வரையிலான பல்வேறு கருத்துகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது. சிறப்பாயிரத்தில் நூலினது பெயர், நூலின் எல்லை, நூல் கூறும் செய்தி போன்ற பல்வேறு கருத்துகளைக் கூறுகின்றது.

  • முதல் தந்திரம், உபதேசம் முதல் கள்ளுண்ணாமை வரை பல்வேறு கருத்துகளைக் கூறுகின்றது.
  • இரண்டாம் தந்திரம், அகத்தியம் முதல் பெரியாரைத் துணைக்கோடல் வரை பல்வேறு உட்பிரிவுகளைப் பற்றி குறிப்பிடுகின்றது.
  • மூன்றாம் தந்திரத்தில் அட்டாங்க யோகம் முதல் சந்திரயோகம் வரையுள்ள இருபத்தோரு உட்பிரிவுகள் காணப்படுகின்றன.
  • நான்காம் தந்திரத்தில் அசபை மந்திரம் முதல் நவாக்கிரி சக்கரம் வரை பதிமூன்று உட்பிரிவுகள் காணப்படுகின்றன.
  • ஐந்தாம் தந்திரத்தில் சுத்த சைவம் முதல் உட்சமயம் வரை பல்வேறு பிரிவுகள் காணப்படுகின்றன.
  • ஆறாம் தந்திரத்தில் சிவகுரு தரிசனம் முதல் பக்குவன் வரை உட்பிரிவுகள் காணப்படுகின்றன.
  • ஏழாம் தந்திரத்தில் ஆறாதாரம் முதல் இதோபதேசம் வரையில் காணப்படுகின்றன.
  • எட்டாம் தந்திரத்தில் உடலில் பஞ்சபேதம் முதல் சோதனை இறுதியாக பலப்பிரிவுகள் காணப்படுகின்றன.
  • ஒன்பதாம் தந்திரத்தில் குருமட தரிசனம் முதல் சர்வ வியாபகம் இறுதியாக உள்ள உட்பிரிவுகள் அமைந்துள்ளன.

இந்நூல் இறை, உயிர், தளை என்னும் முப்பொருளைப் பற்றி குறிப்பிடுகிறது என்பர். இறைவனை உணர்வதற்கு உயிரும் உடலும் தேவை. உடலைப் பேணிக் காத்தால் உயிர் உடலினுள் நீண்ட காலம் தங்கும். அதனால் உயிர் உடலினை விட்டு நீங்குவதற்கு முன்பே இறையைக் காண முயல வேண்டும். உயிராகிய சீவனும் இறைவனாகிய சிவனும் இரண்டறக் கலந்து பெறும் பேரின்பமே எல்லாவற்றையும் விடச் சிறந்தது. இந்த இன்பமே நிலையானது. இதன்மூலமே பிறவித் துன்பத்திலிருந்து விடுபட இயலும். ஆகவே உடல் உயிர் அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டே திருமூலர் பல்வேறு தத்துவங்களைக் குறிப்பிடுகின்றார் என்றால் பொருத்தமாக உள்ளது.

திருமூலர் பெயரில் பல்வேறு நூல்கள் கிடைக்கின்றன. திருமூலர் கருக்கிடை அறுநூறு, திருமூலர் அருளிய மருத்துவ மந்திரம் 8000, திருமூலர் குணவாகடம், திருமூலர் தியானக் குறிப்பு, திருமூலர் கருக்கிடை தொள்ளாயிரம், திருமூலர் ஞானம், திருமூலர் ஆயிரம் என்பன போன்ற நூல்கள்  திருமூலர் எழுதியதாகக் கூறப்படுகிறன. எனினும் இது ஆராய்ச்சிக்குரியது என்று இரா. மாணிக்கவாசகம் தமது நூலில் குறிப்பிடுகின்றார். 17

 அடிக்குறிப்பு:

  1. திருக்கோவையார் உரை,ப. 6.
  2. திருமந்திரம்,ப. 83.
  3. மேலது. ப. 71.
  4. மேலது. ப. 597.
  5. மேலது. ப. 564.
  6. மேலது. பா. 717.
  7. மேலது. பா. 728.
  8. மேலது. பா. 74.
  9. மேலது. பா. 63.
  10. மேலது. பா. 634.
  11. வே. சங்கர் உயிர்ப் பயணம்,ப. 60.
  12. இரா. மாணிக்கவாசகம், திருமந்திர ஆராய்ச்சி, ப. 123.
  13. தமிழ் இலக்கிய வரலாறு, திருமூலர் காலம், ப. 243.
  14. Tamil Plutarch, 4.
  15. V.சதாசிவ பண்டாரத்தார், தமிழ் இலக்கிய வரலாறு, ப. 83.
  16. திருமந்திரம், பா. 83.
  17. இரா. மாணிக்கவாசகம், நம்நாட்டுச் சித்தர்கள், ப. 161.

*****

கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் -20

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *