அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ஷாமினி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (07.06.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி – 261

 1. நாட்டிலும்…

  பொம்மைக் குதிரை ஓடாது
  போகு மிடத்தைச் சேராது,
  இம்மி யளவும் அசையாத
  இதிலே ஏறி அமர்ந்திட்டால்
  நம்மைப் பார்த்து நகைப்பாரே,
  நகர்ந்திடு சிறுவர் விளையாட்டு,
  நம்பிடும் நாட்டு அரசியலும்
  நமக்குக் காட்டிடும் மண்குதிரையே…!

  செண்பக ஜெகதீசன்…

 2. தங்கையின் பாசம்

  அண்ணன் வாங்கி தந்த குதிரை
  அண்ணன் நினைவு சொல்லும் குதிரை
  அண்ணன் பாசம் காட்டும் குதிரை
  அண்ணன் வசம் நிறுத்தும் குதிரை

  கேட்டது எல்லாம் வாங்கி தருவான்
  கேட்க மறந்தாலும் கொண்டு வருவான்
  கேட்பதை நானும் குறைத்துக் கொண்டேன்
  கேட்பதால் ஆகும் செலவினைக் கண்டு

  விவசாய நிலத்தில் வியர்வை சிந்துகிறான்
  விவசாய விளைபொருளோ அடிமாட்டு விலை
  குதிரை விலையிலோ மற்றைய பொருட்கள்
  குண்டுமணி காசு கூட மிச்சம் ஏதுமில்லை

  வயித்த கட்டி வாய கட்டி
  விவசாயி பொழப்பு போகுது
  அறியாத வயதில் அண்ணன்
  கேட்டது எல்லாம் வாங்கித் தந்த
  விபரம் இப்பத்தான் புரியுது

  தனக்கு வேட்டியோ ஒன்னு இரண்டு
  உடுத்திக்க சட்டையோ மூணு நாலு
  வேட்டி விட சட்டை கூடுதலோ
  கெட்டியான கேள்வி வரும்
  அண்ணன் சட்டை போட்டால்தான்
  கண்ணிரன்டில் தூக்கம் வரும்

  தாயில்லாத பிள்ளை
  தகப்பனில்லாத பிள்ளை
  யார் சொன்னது?

  அண்ணன் இருக்க
  எண்ணமே இல்லாமல் போனது

  பருவப் பொண்ணு
  திருமணமே பண்ணு
  அண்ணன் சொன்னதாலே
  சம்மதம் சொன்னேன்

  பரிசம் போட்டாச்சு பத்திரிக்கையும் அடிச்சாச்சு
  பந்தக்காலும் நட்டாச்சு பந்திப்பாயும் விரிசாச்சு

  தாலி கட்டிய புதுப் பொண்ணு
  புகுந்த வீடு போகனும்மாமே
  புதுப்பட்டு புது மாப்பிள்ளை
  புதுமணப் பொண்ணு கோலம்
  பிறந்த வீட்டில் இருக்கும்போது தெரியல

  புகுந்த வீடு போகனும்னு
  பிறந்த வீட்டை விட்டு
  பிரியும் போது
  கூடவே கூட்டி வந்தது
  அண்ணன் வாங்கித் தந்த
  மரப் பொம்மை குதிரை
  மறக்க முடியுமோ
  மூச்சு இருக்கும் வரையில்

  சீ.காந்திமதிநாதன்
  கோவில்பட்டி

 3. படக்கவிதை போட்டி எண் 261

  வண்ண வண்ணக் குதிரைகள்
  கிராமத்து வாயிலில் நம்மை வரவேற்கும்
  ஐயனாரும் அதனூடே
  வாளோடே வானுயர
  குலசாமி நடுவினிலே
  பார்ப்பவர் கண்கள்
  பிரமிக்க வைக்கும்
  நம் கிராமிய மணத்தில்தானே

  பட்டினத்தில் குதிரைகள்
  பணம் வைத்து ஆடவே
  பாழாய் போன மாந்தர்கள்
  பணமிழந்ததும் அதனிலே

  சத்ரபதியின் வீரம்
  ஜான்சி ராணியின் வீரம்
  வீரத்தை எதிர்கொள்ளும் வீரம்
  அதன் அடையாளமே இந்தக் குதிரையினமே

  ஆன்மீகத் தோன்றலிலும் குதிரை
  அரச வரலாற்றிலும் குதிரை
  இயந்திர இயக்கத்தில் திறன் குதிரை
  மழலைப் பருவத்தில் ஆட்டம் குதிரை
  இடைவிடாது நம் கனவில் மனக்குதிரை

  குதிரை குதிரை
  வண்ண வண்ணக் குதிரை!!!!!

  சுதா மாதவன்

 4. மண்பரிகள்

  மண்ணில் பரியைச் செய்து
  மனங்கவர் வண்ணம் தீட்டி
  கண்ணில் கண்ட பின்பு
  கடைதனில் உடனே வாங்க
  ஆவலை ஊட்டும் வணிகன்
  ஆயிரம் பேர்கள் உண்டு

  அவனியில் அப்பரி போல்
  அரசியல் தனிலும் உண்டு
  பாய்ந்திடும் பரிகள் போல
  பாசாங்கு செய்து விட்டு
  வாக்குகள் வாங்கிப் பின்
  வந்தமர்வர் பதவி தனில்

  வாக்கிட்ட மக்கள் இடர்
  வாழ்வினில் உடனிருக்க
  வந்தமர்ந்த பரிகளெல்லாம்
  வஞ்ச மிகு நரிகளென்று
  அறிந்திடுவான் வாக்காளன்
  அடுத்த தேர்தலில் மறப்பதற்கு !

  ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன்
  கோவை

 5. மண்குதிரைச் சவாரி

  மண்குதிரை மீதேறி
  மாக்கடலைக் கடந்துவிட்டு
  மறுகரையை அடைந்திடவே
  மன்றாடும் மாந்தரைப்போல்

  கண்ணிரண்டும் விற்றுவிட்டு
  கவின்மிகு சித்திரத்தை
  கண்டுநாளும் களித்திடவே
  கனவுகாணும் மூடனைப்போல்

  இயற்கை வளங்களை அழித்து விட்டு
  இன்ப வாழ்க்கையைத் தேடுகின்றோம்
  நிலவளம் நீர்வளம் கெடுத்து
  நித்திய இன்பத்தை நாடுகின்றோம்…

  சுவற்றை அழித்துவிட்டு
  சுந்தர ஓவியந் தீட்டுவதுபோல்
  பூமியின் வளமழித்து
  புதிய சொர்க்கம் தேடுகின்றோம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *