படக்கவிதைப் போட்டி 260இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
தொடரியையும் அதன் அருகில் நின்றுகொண்டு சிந்தனையை வேறெங்கோ படரவிட்டிருக்கும் இளைஞரையும் சேர்த்தே தம் படப்பதிவுக் கருவிக்குள் ஏற்றிவந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இப்படம் வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுப் படக்கவிதைப் போட்டி 260க்கு வழங்கப்பட்டுள்ளது. படப்பதிவாளர் திருமிகு. ராமலக்ஷ்மிக்கு என் நன்றி!
இவ்வொளிப் படத்திற்கு மேலும் ஒளிகூட்டும் சிந்தனைகளைத் தம் கவிதைகளில் ஏற்றுவர் கவிஞர் என்று நம்புகின்றேன். வாருங்கள் கவிதைகளைச் சுவைத்து வருவோம்!
*****
”தொடர்வண்டி ஓட்டம் தொடங்கினால் அல்லவா எம் இடர்வண்டி ஓட்டம் தடைப்படும்? இறையிடம் முறையிடுகின்றேன் இதுகுறித்து!” என்கிறார் திரு. ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன்.
எமையாளும் இறையிடம்
சுமையாளன் கேட்கும் வரம்.
தொடர் வண்டி ஓட்டம் துவங்கிட்டால் எம்
இடர் வண்டி ஓட்டம் தடைப்படும் விரைவாகப்
படர் தீ நுண்மி தொற்றினி எமைத் தொடராது
சுடர்மிகு இறையே சூழ்ந்தெம்மைக் கா.
*****
சர்வாதிகார நாடான சீனா வளர்ச்சியின் உச்சம் தொடுகின்றது. ஆனால் பெரும் ஜனநாயக நாடாக இருந்தும் இந்தியா முன்னேற்றத்தில் நாயகமாகத் திகழாமல் முடங்கிவிட்டதற்குக் காரணம் அரசியல் சுரண்டலோ என்று தம்முடைய முதல் கவிதையில் ஐயுறும் திரு. சீ. காந்திமதிநாதன், நாட்டில் பொறுப்பில்லா மக்கள், பொறுப்பில்லா அமைப்புகள் இதனால் பொய்யும் புரட்டும் எல்லாத் துறைகளிலும், நீதி நேர்மையோ நொண்டிக் குதிரையில் என்று வருந்துகின்றார் தம் இரண்டாவது கவிதையில். தம்முடைய மூன்றாவது கவிதையில், தொழிற்சங்கங்களின் அவலநிலையால் அல்லலுறும் இளைஞராகப் புகைவண்டி அருகில் நிற்கும் இளைஞரைச் சித்திரித்திருக்கின்றார்.
ஐயம்
உலக மக்கள் தொகையில்
இலகுவாக இரண்டாவது
தொடர் வண்டித் துறையில்
இடர்களுக்கிடையில் நான்காவது…
இருப்புப் பாதை நீளம்
பொறுப்பில் தடம் புரள
நீண்டது ஆண்டுகளே
கண்டது துண்டுகளே
ஆண்டொன்றுக்கு ஐந்நூறு கோடிப் பயணிகள்
அன்றாடம் பயணிக்க வளர்ச்சி
நன்றாகப் பயணிக்காது போனால்
நன்றாகச் சுரண்டல்கள் எங்கோ??
ஆண்டுகள் நூற்று அறுபத்து ஏழு
தண்டவாளம் தேய்ந்து இந்திய விவசாயியாய்
வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்றினால்
தண்டவாளங்கள் புத்துயிர் பெறுதலே நலம்
கடமை தவறாத ஊழியர்கள்
கடமை தவறாத நிர்வாகம்
நாணயம் தவறாத பயணிகள்
நானிலத்தில் ஏன் பின்தங்கல்???
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்
பசி பட்டினியால் தவித்த சீனா
தன்னிறைவில் அபரிமித வளர்ச்சி
சாதாரண விசயம் தானா?
மக்கள் நலனில் அக்கறை இருந்தால்
சர்வாதிகார ஆட்சி உத்தமம்
உலகிற்குச் சீனா புதுப் பாதை
இலகுவாகக் காட்டுகிறதோ???
உலகின் மிகப் பெரிய ஜன நாயக நாடு
பெருமை மக்கள் நலத்தில் வளத்தில்
அதிகச் சுதந்திரம் தனிமனித உயர்வுக்கும்
தேச வளர்ச்சிக்கும் என்றானால் நலம்
பசிக்கும் பிணிக்கும் மூலமே
ஜனநாயகம் நாயகம் எனில்
தாயகம் தாங்குமா???
*****
கண்துடைப்பு
மாறு வேடக் காவலன் நான்
தாறு மாறாய் ஒரு தறுதலை
ஆறு மாதமாய்த் தப்பித்தலில்
வேறு விதமாய்ப் பிடிக்கவே
ஆளுங்கட்சி செல்வாக்கு
உள்ளூர்வாசி சொல்வாக்கு
கண்டுக்காத காவல்துறை
கண்துடைப்பாக அக்கறை
வயித்துப் பொழப்பு இப்படி ஓர் கூத்து
அங்குத் தேடினேன் இங்குத் தேடினேன்
எங்குத் தேடியும் கிடைக்கலை என்று
பங்கிற்குக் கோப்பில் சேர்க்கணும் நன்று
பல லட்சியக் கனவுகளில் சேர்ந்தவன்
பல லட்சம் காண்பவர்களின் அலட்சியம்
பலமாகப் பாலமாக உள்ள துறை
பாவமாகப் பரிதாபமாக ஆள்பவர்களால்
பொய்யும் புரட்டும் எல்லாத் துறைகளில்
நீதி நேர்மை நொண்டிக் குதிரையில்
ஊரோடு ஒத்துவாழ் கட்டியவள் கட்டளை
சீரோடு வாழ உயிரோடு வாழ என்றாள்
ஒருகாலத்தில் சத்தியத்தின் செல்லப்பிள்ளை
இலாகாவிலோ எடுப்பார் கைப்பிள்ளை
இரத்தம் சிந்தியதால் எடுத்த முடிவு
இரத்த பந்தம் காண வேண்டும் விடிவு
பொறுப்பில்லாத மக்கள்
பொறுப்பில்லாத அமைப்பு
பொறுப்பின்மை
பொறுப்பின்மைக்கே
பொறுப்பினைத் தந்தால்
வெறுப்பும் விரக்தியும்
அழையாத விருந்தாளிகள்!
*****
தொழிற்சங்கங்களின் அவல நிலை
தொழிலாளர் களுக்குள் ஒருவரே தலைவர்
தொழில் வளம் செழிக்கும் நலம் பயக்கும்
தொழிலே தெரியாதவன் தலைவர் எனில்
தொழிலும் பாழ் தொழிலாளியும் பாழ்
சங்கத்தின் ஆண்டு விழா
சங்க வளர்வோ தேய் நிலா
தலைமை தாங்க வரும் பாலா
வராது தவிக்கிறேன் குணபாலா
இரவெல்லாம் தந்த போதை
இருக்கலாமோ இன்னும் மீதை
இறங்கி வந்தால் தரலாம் தலைமை
கிறங்கி வந்தாலும் தரும் நிலைமை
*****
தாம் இணையாமல் இருந்து மக்களை இணைத்த தண்டவாளங்கள் இப்போது இரயில்கள் ஓடாததால் ஓய்வெடுக்கின்றன. என்று தீரும் இந்தக் கொரோனாத் தொற்று? எப்போது செல்வர் எம்மக்கள் மீண்டும் இரயில்களில் பயணப்பட்டு? என்று வினாவெழுப்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
எப்போது…
இணையாமலே இருந்து
மக்களையும் மாநகரங்களையும்
இணைத்த தண்டவாளங்கள்
இப்போது
ஓய்வெடுக்கின்றன,
ஓடாததால் ரயில்..
கொரோனாவால் வந்த
கோளாறு தீர்வதெப்போது
என்ற
கேள்விதான் இப்போது..
தொற்றுப் பயத்துடன்
கெடுபிடிகள்
சற்றுத் தளரந்த நிலையில்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன்
புறப்படுகின்றன சில ரயில்கள்..
எல்லோரும்
செல்லும் நாள்
என்று வருமோ…!
*****
”இளைஞனே! நீ உழைத்துச் சிந்திய குருதியின் நிறம் உன் மேலங்கியின் நிறம்! வண்டிகள் ஓட ஆரம்பித்துவிட்டன; உன் கடமையைச் செய்! உறுதியோடு உழை! உயர்வு காண்பாய்!” என்று நம்பிக்கையளிக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.
பயணம் முடித்து வருவோரின்
சுமைகளை இறக்கியேற்றி
பயணம் ஆரம்பித்துச் செல்வோரின் சுமைகளை ஏற்றியிறக்கி
சிந்திய உன் வியர்வையின் குருதியின்
வர்ணம் உன் மேலங்கியின் நிறம்!
நீ புலம்பெயர்ந்தவனா?
இல்லை இங்கேயே பிறந்து வாழ்பவனா?
எனக்கது தேவையில்லை
நீ மண்ணின் மைந்தன்
உழைப்பின் அடையாளம்
உன்னைக் காக்க மாட்டோமா நாங்கள்?
கவலையை விடு
நோய்த் தொற்றில் சிக்காதே!
வண்டிகள் ஓட ஆரம்பித்து விட்டன
தயாராக இரு
அடுத்து பயணிகள் சுமையைக் கையாள்வதற்குச் சகோதரா!!
உன் உடலினைப் பலப்படுத்து
உறுதியை மனதிலேற்று!!
உழைப்பே உயர்வு!!
*****
”பிறர்பாரம் தான் ஏற்று வயிறு நிரப்பும் இந்தச் சுமைதாங்கி மனிதர்கள், தொடருந்துபோல் துயர் தொடர்ந்து துரத்தினாலும் தப்பியோடவியலா இடிதாங்கி மனிதர்கள்” என்று இவர்களுக்காக வருந்துகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.
இடிதாங்கி மனிதர்கள்
நிற்க நேரமின்றி
பிறர் பாரம் தானேற்று
வயிறு நிரப்பும்
சுமைதாங்கி மனிதர்கள்!
கொடும் நுண்ணயிரியால்
தடைக்காலம் கண்டமையால்
தடம் பார்த்து நின்றுகொண்டு
விடைதேடும் வீரர்கள்!
தொடருந்து போலத்
துயரங்கள் தொடர்ந்தாலும்
தப்பியோடும் மார்க்கமில்லா
இடிதாங்கி மனிதர்கள்….
*****
தொடர்வண்டி ஓரம் நின்றிருக்கும் இளைஞரைக் குறித்த தம் சிந்தனையோட்டங்களையெல்லாம் செம்மையாகவும் காலத்துக்குப் பொருந்தும் வகையில் சுவையாகவும் தம் கவிதைகளில் படைத்தளித்திருக்கின்றார்கள் நம் கவிஞர்பெருமக்கள்! அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!
*****
அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தெரிவுசெய்திருப்பது…
காத்திருப்போம் காலம் வரும்!
காலை முதல் இரவு வரை கலகலப்பாய்ப் பயணிகளுடன்
காட்சியளித்த எம் இரயில் வண்டியே என்ன ஆயிற்று இன்று?
காத்துக்கிடந்தோம் கவலையுடன் உன் ஆரவாரம் கேட்க
கடைசியில் வாயடைத்த தொழிலாளர்களின் வயிற்றலிடித்து
கூட்டிச் சென்றாயாமே குடிநீரும் இல்லாது நெடுந்தொலைவு!
கடுகளவும் நம்பவில்லை நான் அச்செய்திகளை!
காலம்காலமாய்ப் பயணிகளை உமிழ்ந்தும் விழுங்கியும்
கொடும் வயிற்றுப்பசி போக்கும் உனக்குப் பசிவருத்தம் தெரியாதா?
காரணமின்றி உன்னுள் பயணிகளை
இடைவெளிவிட்டு அமர்த்தியதாகக் கவலைப்படாதே
இணையாத இடைவெளியாம் உன் பாதைபோல்
கிடக்காது விரைவில் தீரும் இப்பிரச்சினை!
உன்னோடிணைந்து கூட்டத்தோடு கலந்து
பயணிகளின் சுமை தாங்கிய எம்காலமும்
இவ்வளவு நாளும் காலனுக்கு இரையாகிப் போனது
கொரோனா எனும் கொடும் தொற்றின் வரவால்!
காலங்காலமாய்ப் பலரை வாழவைத்த நீ
வருந்தாது குதூகலத்துடன் கிளம்பிச்செல்
நான் சென்று காபி விற்கும் அண்ணனிடமும்
கைமுறுக்கு விற்கும் அக்காளிடமும் சொல்லிவருகிறேன்…
கொரோனாவை விரட்டிய பின்
ஒருங்கே தொடர்வோம் நம் பயணத்தையென!
”கலகலப்பாய்ப் பயணிகளுடன் காட்சியளித்த எம் இரயில்வண்டியே! உன்னோடு இணைந்து கூட்டத்தோடு கலந்து பயணிகளின் சுமைதாங்கிய எம் காலம் கொரோனாவால் காலனுக்கு இரையானதே! நம்பிக்கையிருக்கின்றது விரைவில் நாம் மீண்டும் இணைந்து பயணிப்போம் என!” என்று இரயிலிடம் தம் மனக்குமுறல்களைக் கொட்டி ஆறுதல்தேடும் இளைஞரைக் நம் கண்முன் நிறுத்தி நம்மைக் கவர்ந்திருக்கும் நாங்குநேரி திருமிகு. வாசஸ்ரீயை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவித்துப் பாராட்டுகின்றேன்.
அருமையான பதிவுகள் , வாழ்க தமிழ் வளர்க தமிழ் . .
என்னை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தெரிவு செய்த நடுவர் மேகலா இராமமூர்த்தி அம்மையார் அவர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பளித்து அனைவரையும் ஊக்குவித்து வரும் வல்லமை மின்னிதழுக்கும் எம் மனமார்ந்த நன்றிகள்.