குருநாதன் ரமணி

இளம் இந்திய ஆடவரும் பெண்டிரும் திரைகடலோடித் திரவியம் தேடி வாழ்வில் எல்லாவித சுதந்திரங்களையும் அனுபவித்துப் பார்க்க முற்படும் தற்காலத்தின் சமூகப் பரிணாம வளர்ச்சியில் இனிவரும் நாட்களில் பெண்ணியமும் ஆணியமும் ஒன்றுடன் ஒன்று மோதிப் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்ததில் விளைந்த குட்டிக்கதை இது.

று வயதுச் சிறுவன் அகிலேஷ்: அக்கா, நீ மட்டும் அப்பாவை ஏன் டாடின்னு கூப்பிடறே? நாமட்டும் ஏன் அப்பான்னு கூப்பிடனும்? அப்பா வேற டாடி வேறயாக்கா? ரெண்டும் ஒரே மீனிங்தான்னு என் ஃப்ரெண்ட் அரவிந்த் சொல்றானே?

எட்டு வயதுச் சிறுமி மதுமிதா: ஆமாம் அகில் கண்ணா! ஒவ்வொரு ஸன்டேயும் என்னை வந்து கூட்டிட்டுப் போவாரே, ப்ரகாஷ் அங்கிள், அவர்தான் எனக்கு அப்பா. உங்கப்பா சூர்யா வந்து உனக்கு அப்பா, எனக்கு டாடி, ஸிம்பிள்!

அகிலேஷ்: அப்போ உங்கப்பாவை நான் டாடின்னு கூப்பிடலாமா? நம்ம ரெண்டு பேர்க்கும் ஒரே அம்மா, ஆனா அப்பா டாடி வேற வேறயாக்கா?

மதுமிதா: எனக்கும் உனக்கும் ஒரே அம்மாதான். ஆனா எனக்கு இன்னொரு மம்மி இருக்கா. அவளுக்கு ஒரு குட்டிப் பாப்பாவும் இருக்கு, தீபக்ங்கற பேர்ல, தெரியுமா? ஸோ, எனக்கு ரெண்டு தம்பிங்க இருக்காங்க.

அகிலேஷ்: ஏன்க்கா எனக்கு மட்டும் மம்மி இல்லை? அம்மா வந்ததும் கேக்கப் போறேன், எனக்கும் ஒரு மம்மி வேணும்.

மதுமிதா: ஷ்..ஷ்! சத்தம் போட்டுப் பேசாதே, பாட்டி எழுந்திடப் போறா! உனக்கு ஒரு ரகசியம் சொல்றேன், ஆனா நீ அதைப் பத்தி யார்ட்டயும், மெய்ன்னா அம்மா டாடிட்ட வாய்தவறிக் கூடக் கேட்டுறக் கூடாது, ப்ராமிஸ்?

அகிலேஷ்: ப்ராமிஸ்க்கா! என்ன ரகசியம் சொல்லேன்.

மதுமிதா: கூடிய சீக்கிரம் உனக்கும் ஒரு மம்மி வரப் போறா!

அகிலேஷ்: ஹை, எப்படிக்கா?

மதுமிதா: அம்மாவும் உங்கப்பாவும் இப்பல்லாம் அடிக்கடி சண்டை போட்டுக்கறா பத்தியா? அதனாலா, டாடி வேற கல்யாணம் பண்ணிக்கப் போறார். ஸோ, உனக்கு ஒரு மம்மி கிடைப்பா. ஆனால், நீ இதுபத்தி மூச்சு விடக்கூடாது.

அகிலேஷ் (கொஞ்சம் யோசித்து): ஏன்க்கா நம்ப அம்மா அப்பா டாடிலாம் அடிக்கடி சண்டை போட்டுக்கறா? நம்ப அம்மாவும் உங்க அப்பாவும் பிரிஞ்சதனாலதானே நீ இங்கேயும் அங்கேயுமா இருக்க வேண்டியிருக்கு. எனக்கும் ஸன்டேஸ்ல போர் அடிக்கிது. அட்லீஸ்ட் நாம சில்ட்ரன்லாம் ஒண்ணா ஒரு இடத்தில இருந்தா எவ்ளோ லவ்லியா இருக்கும்!

மதுமிதா: கவலைப் படாதே அகில் கண்ணா. நான் அதுக்கு ஒரு ப்ளான் வெச்சிருக்கேன். அது சரியா வரலேன்னா ப்ளான்-B-யும் யோசிச்சு வெச்சிருக்கேன். கூடிய சீக்கிரம் பாரேன், நான் பெரியவங்க எல்லோரையும் ஃபோர்ஸ் பண்ணி நாம எல்லாரும் சேர்ந்து ஒரு வீக்-என்ட் பிக்னிக் போகப்போறோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா முதல்ல நாம சில்ட்ரென் லெவல்ல ஒண்ணுசேரப் போறோம்.

தொலைபேசி மணி அடிக்க, பாட்டி விழித்துக்கொள்கிறாள். குழந்தைகள் வாயை மூடிக்கொண்டு தங்கள் ஹோம்-வர்க்கைத் தொடர்கின்றனர்.

★★★★★

மேலுள்ள குட்டிக்கதையானது மேற்கத்திய கலாசாரத்தில் எப்படி பூதாகாரமாகப் பரிமாணம் எடுக்கக்கூடும் என்று கோடிட்டுக் காட்டி ஆங்கிலத்தில் வந்த ஒரு நகைச்சுவைத் துணுக்கின் தமிழாக்கம்:

ஏற்பட்ட திருமணமும் காதல் திருமணமும்:
ஒரு கலாசார அதிர்ச்சி

ரண்டு மனிதர்கள், ஒருவர் இந்தியர், மற்றொருவர் அமெரிக்கர் ஒரு பாரில் பக்கத்தில் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தார்கள்.

இந்தியர் அமெரிக்கரிடம் சொன்னார்: “என் பெற்றோர்கள் என்னைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி கட்டாயப் படுத்துகிறார்கள். குடும்பப் பாங்கான ஒரு கிராமப் பெண்ணாம். நான் அவளை ஒரு முறை கூடப் பார்த்ததில்லை!

“நாங்கள் இதை ’அரேஞ்ட் மேரேஜ்’ என்று சொல்வோம். நான் காதலிக்காத ஒரு பெண்ணை மணந்துகொள்ள எனக்கு விருப்பம் இல்லை. இதை நான் அவர்களிடம் வெளிப்படியாகச் சொல்லிவிட்டதால் குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பம்…”

அமெரிக்கர் சொன்னார்: “’லவ் மேரேஜ்’ பற்றியா நீங்கள் பேசுகிறீர்கள்? என் கதையைக் கேளுங்கள்…

“மூன்று வருடங்கள் டேட்டிங் பண்ணி நான் ஒரு விதவையைக் கல்யாணம் செய்துகொண்டேன். அவளுக்குக் கல்யாண வயதில் ஒரு மகள் இருந்தாள்… இரண்டு வருடம் கழித்து என் அப்பா என் வளர்ப்பு மகளான அவளைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டார். இதனால் என் தந்தை எனக்கு மருமகன் ஆகிவிட, நான் என் தந்தையின் மாமனார் ஆனேன்! என் மகள் இப்போது என் அன்னையாகி, என் மனைவியே எனக்குப் பாட்டியானாள்!

“எனக்கு ஒரு மகன் பிறந்தபோது உறவின் குழப்பங்கள் விசுவரூபம் எடுத்தன. என் மகன் என் தந்தையின் சகோதரன், எனவே எனக்கு அவன் அங்க்கிள் ஆனான்! என் தந்தைக்கும் ஒரு மகன் பிறந்தபோது இன்னும் மோசமானது. இப்போது என் தந்தையின் மகன், அதாவது என் சகோதரன் எனக்குப் பேரன்! இப்படியெல்லாம் எங்கள் குடும்பத்தில் இருக்கும்போது நீ உன் குடும்பத்தில் குழப்பம் என்று சொல்வது வேடிக்கை!”

★★★★★

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *