கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 30

-மேகலா இராமமூர்த்தி

அமளிமிசை கிடந்த வாலி வெளியில் எழுந்த அமளியையும் ஆரவாரத்தையும் கேட்டான். ஊழி முடிவில் பொங்கியெழும் ஆழிப்பேரலைபோல் விரைந்தெழுந்தான். அவன் எழுந்த வேகத்தில் கிட்கிந்தை மலை நிலத்தினுள் அழுந்திற்று.

வாலியின் வாயிலிருந்து புகைவருமாறு அவன் கண்களிலிருந்து கிளம்பிய சினத் தீயினால், அமுதம் நிகர்த்தவளும் மூங்கில்போன்ற தோள்களை உடையவளுமான வாலியின் மனைவி தாரை, தன் நீண்டகூந்தல் எரியப் பெற்றவளாய், அவனுக்கு இடையில் வந்துநின்று வெளியில் செல்ல எத்தனித்த அவனைத் தடுத்தாள்.

ஆயிடை தாரை என்று அமிழ்தின் தோன்றிய
வேயிடைத் தோளினாள் இடை விலக்கினாள்
வாயிடைப் புகை வர வாலி கண் வரும்
தீயிடைத் தன் நெடுங் கூந்தல் தீகின்றாள்
. (கம்ப: வாலிவதைப் படலம்: 4059)  

வாலியின் சினத் தீயினால் தாரையின் கூந்தல் எரிவதாய்ச் சொல்லி அவளுக்கு நிகழவிருக்கும் அமங்கலத்தைக் குறிப்பால் ஈண்டு உணர்த்துகின்றார் கம்பர். பெண்களின் கூந்தலைத் தொடும் உரிமை பெற்றவராய் – கூந்தற் கிழவராய் அவர்தம் கணவன்மாரைக் குறிப்பது தமிழர் மரபு.

பாரி இறந்தபின்பு அவனுடைய மகளிரை அழைத்துக் கொண்டு அவர்களுக்கேற்ற கணவரை நாடிச்செல்லும் கபிலர், தம்மை வாழ்வித்த பறம்பு மலையைப் பார்த்து உளம்சோர,

”…பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று
நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சிச்
சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே
கோல்திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறுஇருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே.”
(புறம்: 113) என்றுரைக்கும் பாடலில் பாரி மகளிர்க்கேற்ற மணாளரைக் குறிக்க, ’கூந்தல் கிழவர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பதைக் காண்க.

தாரை தடுத்ததால் கோபமுற்ற வாலி, ”என்னைத் தடுக்காதே! வழிவிட்டு விலகு!” என்றுரைக்க, ”மன்னவா! உம்மைக் கண்டு இற்று ஓடிய உம் தம்பி, நற்றுணை ஒன்றைப்பெற்று உம்மை எதிர்க்க வந்திருக்கின்றான்; எனவே அவனோடு சமர்செய்யச் செல்லவேண்டாம்” என்றாள் தாரை.

அதைக்கேட்ட வாலி நகைத்து, ”மயிலே! மந்தர மலையைத் தயிர் கடைவதுபோல் கடைந்து தேவாசுரர்களுக்கு அமுதத்தைப் பெற்றுத்தந்த ஆற்றலாளன் நான்! என்னை எதிர்க்கும் திறனுடையோர் ஆருளர் இங்கே? எமனும் எனைக்கண்டு அஞ்சுவான்; அதையும்மீறி அறிவற்றவர் எவராயினும் எனை எதிர்த்துவந்தாலும் அவர்தம் ஆற்றலிலும் வரபலத்திலும் பாதியை நான் பெற்றுவிடுவேன்; எனவே என்னைப் போரில்வெல்வார் எவருமில்லை!” என்றான் தாரையிடம்.

அதனை ஏற்காத தாரை, ”அரசே! உம் உயிரைக் கொள்(ல்)வதற்காகச் சுக்கிரீவனுக்குத் துணையாகியிருக்கின்றான் இராமன் என்பவன் என நமக்கு வேண்டியவர்கள் அறிந்துவந்து சொன்னார்கள்” என்றாள்.

அதனைக் கேட்டதும் வாலியின் சினம் மேலும் கூடிற்று. ”தீயவளே! வல்வினைகளிலிருந்து மீளும் வழியறியாது இறைவனின் அருள்வேண்டி வருந்தும் உலக உயிர்கட்கு, அறநெறியில் தான் வாழ்ந்து வழிகாட்டும் தூயவன் அந்த இராமன்; அவனைப் போயா சுக்கிரீவனுக்குத் துணைசெய்ய வந்தவன் என்கிறாய்! நீ பெண்ணல்லவா…அதனால்தான் பேதைமையோடு அவனைப் பிழைபட எண்ணிவிட்டாய்!” என்றான்.

உழைத்த வல் இரு
      வினைக்கு ஊறு காண்கிலாது
அழைத்து அயர் உலகினுக்கு
      அறத்தின் ஆறு எலாம்
இழைத்தவற்கு இயல்பு அல
      இயம்பி என் செய்தாய்
பிழைத்தனை பாவி உன்
      பெண்மையால் என்றான். (கம்ப: வாலிவதைப் படலம் – 4068)

”பிழைத்தனை பாவி உன் பெண்மையால்” என்ற தொடருக்கு ”நீ பெண்ணாக இருப்பதனால் உயிர்தப்பினாய்” என்று வாலி உரைத்ததாகவும் பொருளும் கூறுவர். அவள் இராமனைப் பற்றித் தவறாகக் கூறியதாகக் கருதியமையால் அவளைப் ‘பாவி’ என விளித்தான் வாலி.

தொடர்ந்து பேசியவன்…”உலகினை வெல்லும் கோதண்டம் இராமன் கையில் இருக்க, மாவீரனான அவனுக்குப் புன்தொழில் புரியும் குரங்கின் நட்பெதற்கு? ஆதலால், நீ கவலைப்படாமல் இங்கேயே சிறுபொழுது இரு! கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தச் சுக்கிரீவனையும் அவனுக்குத் துணை வந்தோரையும் அழித்தொழித்துவிட்டுத் திரும்பி வருகின்றேன்!” என்று கூறிப் புறப்பட்டான். அதன்பின்னர் என்ன சொல்வது என்றறியாது திகைத்துநின்றாள் தாரை.

நல்லதுணை கிடைத்திருப்பதனால்தான் வாலியினும் வலிகுறைந்த சுக்கிரீவன் துணிச்சலாய் வாலியை எதிர்க்க வருகின்றான் என்று கணித்த தாரையின் மதிநுட்பம் போற்றற்பாலது. வாலி அதனைப் பொருட்படுத்தாது அலட்சியப்படுத்தியமைக்குக் காரணம், தன் வல்லமை மீதும் இராமனின் நெறிதிறம்பா நல்ல குணங்களின்மீதும் அவன் கொண்டிருந்த அதீத நம்பிக்கையே எனலாம்.

தன் அரண்மனைவிட்டு வெளியேறிய வாலி, கம்பீரமாகச் சுக்கிரீவனுக்கு எதிரே வந்துநின்றான். சுக்கிரீவன் போர்முழக்கம் செய்ய, பதிலுக்கு வாலியும் கர்ச்சித்தான். வாலியும் சுக்கிரீவனும் எதிரெதிர் நின்ற அந்தப் போர்க்கோலத்தைக் கண்டுவியந்து அவர்களின் வீரம் பற்றித் தன் இளவலிடம் இராமன் விதந்துகூற, இலக்குவன் அதை ஏற்கவில்லை.

”இந்தச் சுக்கிரீவன் தனக்கு முன்பிறந்த அண்ணனைக் கொல்லக் காலனை அழைத்து வந்துள்ளான். எள்ளுதற்குரிய இவனுடைய இழிபோர் கண்டு நான் எதனையும் உணரும் ஆற்றலற்றுள்ளேன்” என்று வேதனையோடு விளம்பிய இலக்குவன்,

”வீரனே! அறநெறி வழுவி தீச் செயல்களைச் செய்கின்றவர்களை நாம் நம்புதல் கூடாது! தன் தமையனையே பகைவனாகக் கருதிக் கொல்லும்பொருட்டு வந்துநிற்கின்ற சுக்கிரீவன், உறவல்லாத மற்றோருக்கு உற்ற துணையாதல் எங்ஙனம்?” என்று ஐயுற்றுக் கேட்டான்.

”சொந்தத் தமையனையே அழிக்கத் துடிக்கும் சுக்கிரீவன் நம்பற்கு உரியவன் அல்லன்” என்பதே இலக்குவன் கருத்தின் உட்பொருள்.

இதேபொருளில் தெய்வப் புலமை வள்ளுவனார்,

”துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.”
(குறள்: 188) என்று உரைத்திருப்பதை இங்கே பொருத்திக் காணலாம்.

அதற்கு பதிலிறுத்த இராமன், ”ஐயனே! பித்துற்றதுபோல் விவேகமற்ற விலங்குகளிடத்து நாம் நல்லொழுக்கத்தை எதிர்பார்க்க முடியுமா? சுக்கிரீவனை விடு! மானிடத் தாயர் வயிற்றிலே பிறந்தவர்களே ஆயினும் தமையனிடம் அன்புகொள்வதில் உத்தமன் பரதனை ஒத்தவர் யாருளர்?” என்று கேட்டான்.

அத்தா இது கேள் என
      ஆரியன் கூறுவான் இப்
பித்து ஆய விலங்கின்
      ஒழுக்கினைப் பேசல் ஆமோ
எத் தாயர் வயிற்றினும்
      பின் பிறந்தார்கள் எல்லாம்
ஒத்தால் பரதன் பெரிது
      உத்தமன் ஆதல் உண்டோ. (கம்ப: வாலிவதைப் படலம் – 4080)

தன்னிழல்போல் தன்னையே தொடர்ந்துவரும் இலக்குவனிடமே இராமன் பரதனைப் புகழ்ந்துபேசுவது சிந்தனைக்குரியது. இராமன்பால் அளவற்ற அன்பும் மதிப்பும் கொண்டவன்தான் இலக்குவன். எனினும், இராமனைக் காணவந்த பரதனை ஐயுற்று அவன் தவறாகப் பேசிய இடங்கள் உண்டு. ஆனால் பரதனோ உடன்பிறந்தாரை இழித்துப் பேசியதாகச் செய்திகள் இல்லை. இராமன் திரும்பிவரும் வரையில் அவனுடைய காலணிகளையே இராமனாகக் கருதி அரியணையேற்றி, அயோத்திக்கு வெளியே நந்திகிராமம் எனுமிடத்தில் விரத வடிவினனாக அரசாண்டுவந்த உத்தமன் அவன். பரதனின் நிகரில்லா உயர்ந்த குணங்களை உணர்ந்துகொண்ட கங்கை வேடன் குகன், ”ஆயிரம் இராமன் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா” என்று அவனைக் கண்பனிக்கப் புகழ்ந்ததை ஈண்டுநாம் நினைவுகூரலாம்.

எனினும், இலக்குவனின் அன்பை இராமன் குறைத்து மதிப்பிட்டதாக நாம் கொள்ளத் தேவையில்லை. தன்னுடைய தாயாகவும், தந்தையாகவும், தவமாகவும், செல்வமாகவும் இலக்குவனை இராமன் பாராட்டிய இடமும் உண்டு.  சுக்கிரீவனைப் போன்ற தன்னலமிகு தம்பியைப் பற்றிப் பேசும்போது, அவனுக்கு நேரெதிரான நற்குணங்களை உடைய உயர்ந்த தம்பி பரதனைப் பற்றிப்பேசுதல் பொருத்தமுடையதாயிருக்கும் என்று கருதியே இராமன் அவனை இங்கே ஏத்துகின்றான் எனக் கருதலாம்.

தொடர்ந்து தன் கருத்தை இலக்குவனிடம் வெளிப்படுத்திய இராமன், “அப்பா! நம்மை நண்பராகப் பெற்றவரிடத்தில் நமக்குத் தேவையான உதவியைப் பெற்றுக்கொள்வதோடு நாம் நிறுத்திக்கொள்வது நல்லது; அதனைத் தாண்டி அவர் குற்றமற்றவரா? உத்தமரா? என்றெல்லாம் ஆராய்வது பயனற்றது” என்றான்.

”குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.”
(குறள்: 504) என்பதுதானே வள்ளுவனாரின் வாய்மொழியும்?

இவ் உரையாடலைத் தொடர்ந்து அண்ணலும் இளவலும் போரில் ஈடுபட்டிருந்த வாலி மற்றும் சுக்கிரீவன்மீது தம் பார்வையைப் பதித்தனர்.

அவ்விருவரும் ஒருவரையொருவர் உரத்தோடு தாக்கினர்; கால்களால் உதைத்தனர்; கைகளால் ஒருவரையொருவர் புடைத்தனர்; வாயினால் கடித்தனர்; எதிரெதிரே நின்று இடித்தனர்; மரங்களைப் பிடுங்கியெடுத்து அடித்துக்கொண்டு உறுமினர்; மலைக்கூட்டங்களைப் பெயர்த்தெடுத்துத் அடுத்தவர் தலைமீது வீசித் தண்டித்தனர்; ஆர்த்தெழுந்து போர்முழக்கம் இட்டனர்; ஒருவரையொருவர் தீப்பொறி பறக்க நோக்கி விழிகளால் சுட்டனர்.

உரத்தினால் மடுத்த உந்துவர்
      பாதம் இட்டு உதைப்பர்
கரத்தினால் விசைத்து எற்றுவர்
      கடிப்பர் நின்று இடிப்பர்
மரத்தினால் அடித்து உரப்புவர்
      பொருப்புஇனம் வாங்கிச்
சிரத்தின்மேல் எறிந்து ஒறுக்குவர்
      தெழிப்பர் தீ விழிப்பர். (கம்ப: வாலிவதைப் படலம் – 4096)

இவ்வாறு வாலியும் சுக்கிரீவனும் ஒருவருக்கொருவர் சளைக்காமலும் – சற்றும் களைக்காமலும் புரிந்த கடும்போரைக் கண்டு விண்ணவர் அனைவரும் அஞ்சி மருண்டனர்.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
  2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
  3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
  4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

 

About மேகலா இராமமூர்த்தி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க