அறிவியல் கடிதம் – 3: ஆரஞ்சுப் பழத்திலிருந்து புதிய நறுமணப் பொருள்

0

3. ஆரஞ்சுப் பழத்திலிருந்து புதிய நறுமணப் பொருள்

நேசத்திற்குரிய அறிவியல் ஆர்வலனுக்கு,

எனது இனிய காலை வணக்கம்.

நீ அனுப்பியிருந்த அணிச்சல் செய்முறை விளக்கத்திற்கு நன்றி. அதன்படி நேற்றைக்கு வீட்டிலேயே ஆரஞ்சு நறுமணச் சுவையுடன் அணிச்சல் (cake) செய்தேன். நறுமணச் சுவைக்காக ஆரஞ்சுப் பழச்சாறுடன், சிறிதளவு ஆரஞ்சுப் பழத்தோலையும் அணிச்சலில் சேர்த்திருந்தேன்.

அணிச்சலின் சுவையும் மணமும் அருமையாக இருந்தன.

தெரியுமா? உணவுப் பொருட்கள் மட்டுமின்றி, வாசனைத் திரவியம், சோப்பு, காற்று நறுமணமூட்டி போன்றவற்றிலும் ஆரஞ்சுப் பழத்தோல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கெல்லாம் காரணம் லிமோனீன் (limonene) தான். அதாவது, ஆரஞ்சுப் பழத்தோலை உரிக்கும்போது, கிச்சிலி (citrus) நறுமணமுள்ள திரவம் காற்றில் வெளிப்படும் அல்லவா? அதில் தான் லிமோனீன் இருக்கிறது.

லிமோனீன் என்பது நிறமற்ற அலிபாடிக் ஹைட்ரோகார்பன் (aliphatic hydrocarbon) திரவம் ஆகும். ஆரஞ்சுப் பழத்தைத் தவிர, எலுமிச்சை (lemon), தேசிப்பழம் (lime) உள்ளிட்ட மற்ற கிச்சிலி பழங்களின் தோல்களிலும் லிமோனீன் இருக்கிறது.

லிமோனீன் கரிமச் சேர்மத்திற்கு அழற்சி எதிர்ப்பு (anti-inflammatory), மற்றும் உயிர் வளியேற்ற எதிர்ப்புத் (antioxidant) தன்மை உள்ளிட்ட மருத்துவப் பண்புகளும் இருக்கிறது.

நேற்று அணிச்சலை உண்டு மகிழ்ந்த பின்பு, ‘சமகால ஆய்வுகளில் ஆரஞ்சுப் பழத்தோலின் பங்கு’ பற்றி ஆய்விதழ்களில் தேடினேன். அப்போது தான், தூய லிமோனீன் சேர்மத்தைத் தவிர அதன் படிநிலைச் சேர்மங்களும் (chemical derivatives) மிகுந்த நறுமணம் கொண்டவையாக இருப்பதை நான் அறிந்துகொண்டேன்.

நான் அறிந்த தகவலைத்தான் உங்களுக்கும் தெரியப்படுத்துகிறேன்.

பேராசிரியர் ஹோல்கர் சோர்ன் (Holger Zorn) மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து லிமோனீன் சேர்மத்திலிருந்து நறுமணம் கொண்ட வேதிச் சேர்மக் கலவையைத் தயாரித்துள்ளனர்.

இவர்கள் தயாரித்திருக்கும் நறுமணப் பொருளில் பதினேழு கரிமச் சேர்மங்கள் கூட்டாக இருக்கின்றனவாம். இக்கூட்டுச் சேர்மங்களின் நறுமணத்தில் கனி, மூலிகை, கிச்சிலி மற்றும் பிசினின் வாடைகள் உள்ளடங்கியிருப்பதை வளிம வண்ணப் படிவுப் பிரிகை-ஆல்ஃபாக்டோமெட்ரி (Gas chromatography–olfactometry) எனும் கருவி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

நண்பா, இந்த ஆய்வின் மற்றொரு நல்ல செய்தி என்ன தெரியுமா?

சுற்றுச்சூழலுக்குத் தீங்கற்ற ஆக்சிஜனேற்ற முறையை அவர்கள் பயன்படுத்தியிருப்பது தான். அதாவது, லிமோனீன் எத்தனால் முன்னிலையில் நேர்மின்வாய் ஆக்சிஜனேற்றம் (மின்வேதிக் கலம் மூலம்) செய்யப்பட்டு, நறுமணக் கூட்டுச் சேர்மம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், வணிகப் பொருட்களில் பயன்படுத்துவதற்கு முன்பு இந்த நறுமணப் பொருளின் பாதுகாப்பு பற்றிய மதிப்பீட்டு ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சரி நண்பா, ‘அறிவியல் தமிழ்’ தலைப்பில் உரையாடுவதற்கு, வரும் வெள்ளிக்கிழமை நீ எனது வீட்டிற்கு வர வேண்டும் என்று உன்னை மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். அன்று, உனக்கு பிடித்த ஆரஞ்சுப் பழ நறுமணச் சுவையுள்ள அணிச்சலும் பனிக்கூழும் (ice cream) நானே தயாரித்து வைத்திருப்பேன்.

இப்படிக்கு
கனிமவாசன்

நாள்: ஜூன் 21, 2022

Reference

F. Birk, H. Hausmann, M.A. Fraatz, A. Kirste, N.C. Aust, R. Pelzer, H. Zorn. Generation of flavor-active compounds by electrochemical oxidation of (R)-limonene, Journal of Agricultural and Food Chemistry 2022, 70, 23, 7220–7229.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.